Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஏப்ரல் 2nd, 2007

The modalities of an Official Bandh, Strike – Organized Laziness by the Government

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

செய்தி வெளியீடு எண்.187 நாள் 30.3.2007
செய்தி வெளியீடு

31.3.2007(சனிக்கிழமை) அன்று பொது வேலை நிறுத்த நாளாக தமிழகத்தில் அனுசரிப்பதையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு கீடிநடிநடிநடிநக்கண்ட உத்தரவுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

• பொது வேலை நிறுத்த நாளான 31.3.2007 (சனிக்கிழமை) அன்று, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

• மாநில போக்குவரத்துக் கழகங்கள், நாட்டில் செயல்பட்டுவரும் இதர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாளன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

• பொது வேலை நிறுத்தத்திலிருந்து,

  1. தொலைபேசி,
  2. தொலைத் தொடர்பு,
  3. குடிநீர் விநியோகம்,
  4. பால் விநியோகம்,
  5. மின் விநியோகம்,
  6. தீயணைப்பு சேவை,
  7. செய்தித் தாள்கள்,
  8. மருத்துவமனைகள்,
  9. கருவூலங்கள்,
  10. பட்டியல் இன வங்கிகள் ஆகிய அத்தியவசியப் பணிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது,

• 31.3.2007 அன்று காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை , பேருந்துகளும், இரயில்களும், தமிழகத்தில் ஓடாது. 30.3.2007-அன்று புறப்படும் பேருந்துகள் அனைத்தும், 31.3.2007 அன்று அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக பாதுகாப்பான இடத்தை சென்றடைந்து நிறுத்தப்பட வேண்டும்.

• 31.3.2007 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விமானம் மற்றும் இரயில்களின் இயக்கம் இல்லாதவாறு நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

• மதுபானக் கடைகளும், வெடிமருந்து கிடங்குகளும், திரையரங்கங்களும், 31..3.2007 அன்று மூடப்பட்டிருக்கும்.

• பொது வேலை நிறுத்தம் முடிவுற்றதும், 31.3.2007-அன்று மாலை 6.00 மணிக்கு மேல் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

+++++
வெளியீடு இயக்குநர், செய்ய்ய்ய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை – 9

Posted in Alcohol, Bandh, Bus, Cinema, Communications, Electricity, Essential, Fire, Flights, Government, Govt, Hospital, job, Lazy, Media, milk, Movies, Newspapers, Official, Police, Politics, Railways, Services, Strike, Telecom, Telephone, Theater, TN, Trains, Transportation, Water Supply, Wine, Work, Worker | 2 Comments »

Unity in Diversity – Regional affinity vs Naturalized out-of-state Indians

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

இவர்களும் இந்தியர்கள்தான்!

பி. சக்திவேல்

சமீபகாலமாக இந்தியாவில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தாக்கப்படுவதும், அவர்களுடைய உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சம்பவங்களால் “பிராந்திய உணர்வுகள்’ முக்கியத்துவம் அடைந்து “தேசிய உணர்வுகள்’ முக்கியத்துவம் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் சமூகக் கட்டமைப்புக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.

“பிராந்திய உணர்வுகளை’ காட்டிலும் “இந்தியா’ என்ற தேச உணர்வுக்கு முன்னுரிமை அளித்துதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. உதாரணமாக, அரசியலமைப்புச் சட்ட விதி 1-ல் இந்தியா என்பது “”மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஐக்கியம்” என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசு மிகவும் வலிமையானதாகவும் அதிக அதிகாரம் படைத்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அந்நாட்டுக் குடிமக்களுக்கு “இரட்டைக் குடியுரிமை’ வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்தியாவில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், இந்தியா என்கிற உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவும் ஒரே ஒரு குடியுரிமையைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

மேலும் அடிப்படை உரிமைகளில் இந்திய குடிமக்களுக்குச் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதற்கும், ஓர் இடத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிப்பதற்கும், விரும்பிய தொழில் செய்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக, பல மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மற்ற மாநிலத்திலிருந்து வந்தவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகப் பாவித்து நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது. மகாராஷ்டிரத்தில் வசித்து வரும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சார்ந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்; அதேபோல், வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மகாராஷ்டிரத்தில் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும்; இது சிவசேனையின் பிரதான கோஷம். இதை வலியுறுத்தித்தான் சமீபத்தில் நடைபெற்ற மும்பை உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது. “வாக்கு வங்கியை’ கவர்வதற்காக இனிவரும் காலத்தில் இந்தக் கோஷம் மேலும் வலுப்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

சென்ற ஆண்டு ரயில்வே பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதச் சென்ற வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அசாமில் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஹிந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்த அனைவரும் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என “உல்பா’ தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். ஹிந்தி பேசும் மக்கள் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அசாம் மாநில அரசும் மத்திய அரசும் உறுதி அளித்தபோதிலும் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஹிந்தி பேசும் மக்கள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு குடும்பத்தோடு அகதிகளாக வெளியேறும் அவலமும் நீடித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள், குடிமக்கள் அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அசாம் மாநில அரசும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் சரிவர செயல்படாதது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையிலும் தேசிய உணர்வுகள் முக்கியத்துவம் இழந்து பிராந்திய உணர்வுகள் மேலோங்கி விட்டன. இதையடுத்து நாள்தோறும் உருவாகிவரும் சச்சரவுகளும் முரண்பாடுகளும் நமது ஜனநாயகத்திற்கு கேடுகளை விளைவித்து வருகின்றன. இந்நிலை நீடிக்குமானால், மக்கள் படிப்படியாக அரசின் மீது நம்பிக்கை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும்.

குஜராத்தில் நடப்பது வேறுவிதமான நிகழ்வுகள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் “கோத்ரா’ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் எவ்வாறு தங்களை தேசிய நீரோட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்?

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு இனம் மற்றும் மொழி பேசக்கூடிய மக்களைப்பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு நாம் அனைவரும் கவனிக்கப்படக்கூடியதாக அமைந்துள்ளது. அதாவது, மற்ற எல்லா நாட்டினரைக்காட்டிலும் இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களிடம் மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு வேற்றுமைகள் குறைந்து காணப்படுகிறது.

தெளிவாகக் கூற வேண்டுமென்றால், மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் ஒற்றுமையோடு, தங்கள் மொழி மற்றும் கலாசார அடையாளத்தை மறந்து, வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒற்றுமையோடு செயல்படும்போது ஏன் இந்தியாவில் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை. இது கண்டிப்பாக நாம் கவனம் செலுத்தப்பட வேண்டிய கேள்வி.

அடிப்படையில் நம்மிடம் “இந்தியா’ மற்றும் “இந்தியன்’ என்கிற உணர்வு உள்ளது. இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதனால்தான் சுனாமி வந்தபோதும், குஜராத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோதும், வடமாநிலங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோதும் கார்கில் போர் நடைபெற்ற தருணத்திலும் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், நம்மால் முடிந்த உதவிகளை அளித்தோம்.

தங்களுடைய அரசியல் செயல்பாட்டிற்காகவும் மற்றும் லாபத்திற்காகவும் பிராந்தியத்தில் செயல்படும் ஒரு சில அமைப்புகள்தான் இந்த வேற்றுமை விதையை விதைத்துத் தங்களுடைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த அமைப்புகளுக்கு நாம் துணைபோகக் கூடாது. உடனடியாக இத்தகைய அமைப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக்களாகிய நாம் தேசிய உணர்வுகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகே மாநில அல்லது பிராந்திய உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பல்வேறு காரணங்களால் மாநிலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதியைப் பாதித்துவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அன்னிய நேரடி முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றடையக்கூடிய நிலையும் ஏற்பட்டுவிடும்.

எனவே அண்டை மாநிலங்களையும் பிற மாநிலங்களையும் சார்ந்தவர்களை சமமாக நடத்தக்கூடிய மனோபாவத்தையும் பண்பையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களும் இந்தியர்கள்தான்!

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

Posted in Affinity, Citizen, Citizenship, Conflicts, Cooperation, Diversity, Duality, Foreign, Hindi, Identity, Independence, India, Language, Nationalism, Naturalization, Region, Regional, Republic, State, Tamil, Unity, Zone | Leave a Comment »

Irama Srinivasan – Refinancing, Retirement Planning, Pension Income

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

மறுதலை அடமானம்

இராம சீனிவாசன்

ஒவ்வொருவருக்கும் பணி ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் பணத் தேவைக்காக 30 வயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதற்காகவே பிரத்தியேக சேமிப்புக் கணக்குகள் அரசாலும், வங்கிகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்களில் பலர் ஏழ்மையில் வாடும்போது அவர்களின் பொருளாதாரத் தேவைக்காக அரசு பல திட்டங்களை தீட்டியிருந்தும், அத்திட்டங்களால் பயன் பெற முடியாத சூழலில் பலர் உள்ளனர்.

இந்திய சமூகச் சூழலில், வீடு என்ற சொத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போதுமான வருமானம் இல்லாத முதியோர் பலர் உள்ளனர். உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களால் இவர்கள் பொருளாதார ஆதரவு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களால் வீட்டை விற்று / அடமானம் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனெனில் வாழ்ந்து வந்த வீட்டின் மீது உள்ள பற்று, பிள்ளைகளுக்குத் தன் சொத்தின் ஒரு பகுதியையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக பல முதியோர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் “மறுதலை அடமானம்’ மிகப் பெரிய கொடையாக வந்துள்ளது.

வீடு போன்ற நிலையான சொத்துரிமை உள்ளவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் வீட்டை “மறுதலை அடமானம்’ என்ற முறையில் அடமானம் வைத்து 15 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசின் “பட்ஜெட் 2007 – 08’ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தை “தேசிய வீட்டு வங்கி’ செயல்படுத்தப் போவதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வழங்கும் பல வங்கிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனையலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாதாரண அடமானத்தில் கடன் பெறுபவர், கடன் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை சிறுகச் சிறுக மாதம்தோறும் செலுத்துகிறார். மறுதலை அடமானத்தில் கடன் பெறுபவர் கடன் தொகையைச் சிறுகச் சிறுக மாதம்தோறும் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் கடைசியில் திரும்பச் செலுத்துகிறார்.

தற்போது உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 40 லட்சம். உங்களுக்கு வயது 60. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் வீட்டை மறுதலை அடமானமாக வங்கியில் வைக்கிறீர்கள்.

வங்கி உங்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் தருவது எனவும், இதற்கான வட்டி 10 சதவீதம் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. 10 ஆண்டுகளின் முடிவில் நீங்கள் ரூ. 12 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். இதற்கான வட்டி ரூ. 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். எனவே 10 ஆண்டு முடிவில் ரூ. 27 லட்சம் வங்கிக்குச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று உயர்ந்திருந்தால், வீட்டை விற்று, ரூ. 27 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 33 லட்சத்தை உங்களுக்குக் கொடுக்கும். மாறாக, நீங்கள் மீண்டும் ரூ. 33 லட்சத்திற்கு உங்கள் வீட்டை மறுதலை அடமானத்திற்கு வைக்கலாம் அல்லது எனக்குப் பணம் வேண்டாம், நான் இருக்கிறவரை, இவ்வீட்டில் இருக்கிறேன், நான் இறந்த பிறகு இவ்வீட்டை விற்றுக் கடனையும், வட்டியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் வங்கியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்.

அடமான காலம் முடியும் முன்பே, வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால், அதுவரை வழங்கப்பட்ட முதல் மற்றும் அதற்கான வட்டியை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதம் உள்ள தொகை அவரின் வாரிசுகளுக்குக் கொடுக்கப்படும்.

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை “மறுதலை அடமானம்’ வைத்தால், இதில் ஒருவர் இறந்தால், மற்றவர் அடமானம் காலம் வரை தொடர்ந்து பணம் பெறலாம். அதற்குப் பிறகும் அவர் அவ்வீட்டில் வசிக்கலாம். இவ்விருவரின் இறப்புக்குப் பிறகே வீட்டை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, மீதியை அவர்களின் வாரிசுகளுக்கு அளிக்கும்.

ஏற்கெனவே வீட்டின் மீது கடன் வாங்கியவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற முடியுமா? முடியும். ஏற்கெனவே பெற்ற கடன் மற்றும் வட்டிக்கான தொகையை முதல் தவணையாகப் பெற்று, அதனை அடைக்க வேண்டும். அதன் பின்னர் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். ஆனால், முதல் தவணைக்கான வட்டியும், மாதம்தோறும் கணக்கிடப்பட்டு கடைசியில் பெறப்படும். மறுதலை அடமானத்தில் ஒருவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அவர் சொத்தின் மதிப்பு, வயது, வட்டிவீதம் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். ஒருவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பின், அவரின் வயது அதிகமாக இருப்பின், (ஏனெனில், அவருக்கு மிகக் குறைந்த ஆண்டுகள் மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருக்கும்), வட்டிவீதம் குறைவாக இருப்பின் அவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் வாழ்நாள் நீட்டிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பணி ஓய்வுக்குப் பிறகு பலர் நீண்ட நாள்கள் வாழ்கின்றனர். இன்றைய சூழலில் வீடு மட்டுமே ஒருவரின் வாழ்நாள் சேமிப்பாக உள்ளது. பணி ஓய்வூதியம் கூட போதுமானதாக இல்லை.

எனவே, “மறுதலை அடமானம்’ முறையை மிக முக்கியத் திட்டமாக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தில் கடன் பெறும் முதியவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தால் மட்டுமே அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

(கட்டுரையாளர்: மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்).

Posted in 401(k), Aging, Annuity, Banking, Bonds, Economy, Elderly, Expenses, Finances, Funds, Health, House, Income, Interest, IRA, Loan, MF, Mortgage, Mutual Funds, NCC, NSS, Nursing, pension, Planning, Poor, Rent, Retirement, Rich, Savings, Shares, Stocks | Leave a Comment »

UPA crisis meet: PDP threat – Mufti Mohd Sayeed & Gulam Nabi Azad

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

சய்யீத் பின்வாங்கினால்…

காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து அகன்றுவிட்டதாகக் கூறலாம். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சி அமைச்சர்கள் இனி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸýம் முப்தி முகம்மது சய்யீத் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அரசு அமைத்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ள நிலையில் முப்தி முகம்மது சய்யீத் மத்திய அரசைக் குறி வைத்து ஏற்க முடியாத சில கோரிக்கைகளை எழுப்பி நெருக்குதலை ஏற்படுத்த முற்பட்டார். காஷ்மீரில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அங்கு ராணுவத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்பன அவற்றில் முக்கியமானவை.

காஷ்மீரில் எல்லைக்கு அப்பாலிருந்து எப்போதும் ஆக்கிரமிப்பு ஆபத்து உள்ளது. தவிர கடந்த பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகள் எந்த நேரத்தில், எங்கு தாக்குவர் என்பது தெரியாத நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கு துருப்புகளை நிறுத்தி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. முன்னர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சய்யீதுக்கு இதெல்லாம் தெரியும். தவிர துருப்புகளை எவ்விதம் ஈடுபடுத்துவது என்பது ராணுவத் தலைமை முடிவு செய்கிற விஷயம் என்பதையும் சய்யீத் அறிவார். ஆனாலும் சய்யீத் இதை அரசியலாக்க முற்பட்டார். இந்த விஷயத்தில் அவரது பிரசாரம் கிட்டத்தட்ட “படைகள் வெளியேற வேண்டும்’ என்று கூறுகிற தொணியில் இருந்தது. தங்களது கொள்கைத் திட்டத்தை சய்யீத் அபகரித்துக் கொண்டுவிட்டார் என்று ஹுரியத் மாநாட்டுக் கட்சி கூறுகிற அளவுக்கு சய்யீதின் பிரசாரம் அமைந்திருந்தது. அவரது இப் பிரசாரத்தின் பின்னணியில்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கடந்த ஒருமாதமாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கினர்.

சய்யீதின் பிரசாரத்துக்கு அரசியல் நோக்கம் உண்டு. 2002-ல் நடந்த தேர்தலைத் தொடர்ந்து சய்யீத் முதல் மூன்று ஆண்டுகள் காஷ்மீர் முதல்வராக இருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகள் காங்கிரûஸ சேர்ந்தவர் முதல்வராக இருக்க வேண்டும் என்பது உடன்பாடு. இதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குலாம் நபி ஆசாத் முதல்வரானார். அப்போதே சய்யீத் மீதி மூன்று ஆண்டுகளும் தாமே முதல்வராக நீடிக்க விரும்பி பல வாதங்களை முன்வைத்தார். ஆனால் அவை ஏற்கப்படவில்லை. ஆசாத்தின் ஆட்சியில் காங்கிரஸýக்கு நல்ல பெயர் ஏற்பட்டுவிட்டால் தமது கட்சி பின்னுக்குத் தள்ளப்படலாம் என்பது சய்யீதின் அச்சமாகும். தங்கள் கட்சிதான் காஷ்மீர் மக்களின் நலன்களைப் பற்றி அதிக அக்கறை காட்டுகிறது என்று பிரசாரப்படுத்தும் நோக்கில்தான் அவர் படைக் குறைப்பு விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.

கடந்த பல வாரங்களாக சய்யீத் எவ்வளவோ நிர்பந்தித்தும் படைக் குறைப்பு விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக நின்றது. கடைசியில் ஒரு கமிட்டியை நிர்ணயித்து அக் கமிட்டியிடம் இந்த விவகாரத்தை விடுவது என்று சமரச உடன்பாடு உருவாக்கப்பட்டது. இக் கமிட்டியில் தங்களது கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்று சய்யீத் வற்புறுத்தினார். இது முற்றிலும் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று மத்திய அரசு எடுத்துக் கூறியபோது சய்யீத் மேலும் இறங்கி வந்து வேறு வழியின்றி இதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

சய்யீத் இப்போதைக்கு திருப்தி அடைந்துவிட்டதுபோல காட்டிக் கொள்ளலாம். எப்போதுமே ஆளும் கூட்டணியில் அடங்கிய கட்சிகள் தங்களது தனித்தன்மையைக் காட்டிக்கொள்ள தேர்தல் சமயத்தில் விலகிக் கொள்வது உண்டு. கூட்டணி அரசிலிருந்து விலகிக் கொள்வதை சய்யீத் இப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாகவே கூறலாம்.

Posted in Army, Azad, Border, Congress, defence, Defense, Extremism, Ghulam, Ghulam Nabi Azad, Govt, Gulam, Gulam Hussain Mir, Gulam Nabi Azad, J&K, Jammu, Kashmir, Manmohan Singh, Military, Mufti, PDP, People's Democratic Party, Sayeed, Sayid, Security, Sonia Gandhi, Srinagar, Terrorism, troops | Leave a Comment »