கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே மகாராஷ்டிரம் பாப்லி அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
புதுதில்லி, ஏப். 27: கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே பாப்லி அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த அணை கட்டுமானத் திட்டத்துக்கு ஆந்திர மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.
கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் வறட்சியால் வாடும் தெலங்கானா பகுதியில் குறைந்தது 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணை கட்டும் பணியை மகாராஷ்டிரம் தொடரலாம் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை அணையின் மதகை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆந்திர மாநில அரசு தவிர, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல எம்.பி.கள் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
————————————————————————————–
சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நீர்மட்டம் பாதியாக குறைந்த நர்மதா நதி
ஓம்காரேஷ்வர், (ம.பி) ஜூன் 8: சுற்றுச் சூழல் சீர்கேட்டினாலும், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினாலும் நர்மதா நதியின் நீர்மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது.
“”நர்மதா நதியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என மத்திய நிலத்தடி நீர் அமைப்பு எச்சரித்துள்ளதாக மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அனில் தாவே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
மலைகள் மற்றும் காடுகளினால் ஆண்டு தோறும் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால் மழையளவு மட்டுமின்றி நதியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
1213கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில் 41 உபநதிகள் கலந்தாலும் வளர்ந்து வரும் சுற்றுச் சூழல் சீர்கேடானது, உயிரினங்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி விடக்கூடும்.
புண்ணிய நதியாக நர்மதா நதியை மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால், தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட தேவைகளான குளியல், துவைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நதியைப் பயன்படுத்துகின்றனர்.
நதியை அசுத்தமாக்காமலும், அதே சமயம் சுற்றுச் சூழல் சீர்கேடு அடையாமலும் நீரைப் பயன்படுத்தும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.