மதுரை மேற்கு தொகுதிக்கு மே மாத இறுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் ஏற்பாடு
சென்னை, ஏப். 3- மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.).
கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா 2 முறை மதுரை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை முழுவதுமாக வழங்கி இந்த தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மதுரை மேற்கு தொகுதியில் கடந்த தேர்தலின்போது 1 லட்சத்து 81 ஆயிரத்து 710 பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது.
இதை ஆய்வு செய்து 35 ஆயிரம் போலி பெயர்களை நீக்கி புதிதாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 26-ந்தேதி வெளியிடப்பட்டது. போட்டோவுடன் கூடிய இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், ஆட்சேபனை இருந்தால் தெரி விக்க தற்போது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத கடைசியில் இறுதி வாக் காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதன் பிறகு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த உள்ளனர்.
தேர்தல்எப்போது நடை பெறும் என்று உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
சட்டசபை கூட்டத்தொடர் வருகிற மே 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு தான் தேர்தல் நடத்தப்படும். ஆகஸ்டு மாதம் வரை தேர்தலை நடத்த கால அவகாசம் இருந் தாலும் மே மாதம் தான் தேர்தல் நடத்த உகந்ததாக கருதுகிறோம்.
விடுமுறை காலமாக மே மாதம் இருப்பதால் தேர்தல் நடத்த வசதியாக இருக்கும். அனேகமாக மே மாதம் கடைசி வாரம் ஏதாவதுஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். எந்த தேதி என்பது டெல்லியில் இருந்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மதுரை மேற்கு தொகுதி முழுக்க முழுக்க நகர் பகுதியில் 20 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் `பூத்’ கமிட்டிகளை அமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளன. காலமான எஸ்.வி. சண்முகம் அ.தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்றாலும் எம்.எல்.ஏ. ஆன பிறகு தி.மு.க. ஆதரவாளராக மாறினார். இதனால் அவருடன் அ.தி.மு.க. வினர் யாரும் தொடர்பு வைக் காமல் இருந்தனர்.
இந்த முறை இந்த தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைக்க கடுமை யாக தேர்தல் வேலையில் ஈடுபடும் என தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்டது. இந்த முறை யும் காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிட உள்ளது. இது தவிர தே.மு.தி.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளும் களத்தில் மோதும் என தெரிகிறது.
ஓட்டு விவரம்:-
கடந்த தேர்தலில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-
- எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) – 57,208
- பெருமாள் (காங்கிரஸ்) – 53,741
- மணிமாறன் (தே.மு.தி.க.) – 14,527
- பகவதி (பா.ஜனதா) -1,851