Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

May 9 – Sri Lanka Updates: Eezham, LTTE

Posted by Snapjudge மேல் மே 10, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 மே, 2008

கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்?

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆகக்கூடுதலான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில், எந்தக் கட்சி ஆகக்கூடுதலான இடங்களை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சிக்கே முதலமைச்சர் பதவியை வழங்குவது என்று தேர்தலுக்கு முன்னதாக உடன்பாடு காணப்பட்டதாக அந்தக் கூட்டமைப்பின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் யார் என்று தமிழோசையின் சார்பில் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் அவர்கள், இந்த உடன்பாட்டின் அடிப்படையில், தமது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பில் முதலமைச்சர் யார்?, என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கூறுகையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக இடங்களைப் பெறுகிறார்களோ, அவர்களில் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று முன்னமே உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும், ஆகவே முஸ்லிம்களே இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதிகம் வெற்றிபெற்றதால், தானே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவர்கள் இருவரும் தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தல் மோசடியானது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

வாக்கு மோசடியின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் குறித்து தமிழோசையிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் அபிலாசைகள் மறுக்கப்பட்ட நிலையில், மக்கள் விரும்பாத நிலையிலுமே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்து மாகாண சபையில் உள்ள 37 இடங்களுக்கு (போனஸ் இடங்கள் 2 உள்ளடங்க) நடந்த இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 20 இடங்களும், முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு 15 இடங்களும், தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி ஒரு இடமும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு இடமும் பெற்றுள்ளன.

மாவட்ட அளவில் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

மட்டக்களப்பு

  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 6
  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 4
  • தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி – 1

அம்பாறை

  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 8
  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 6

திருகோணமலை

  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 5
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 4
  • மக்கள் விடுதலை முன்னணி – 1

மாகாண அளவில் முக்கியக் கட்சிகளின் வாக்கு வீதம்

  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 52.21%
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 42.38%
  • மக்கள் விடுதலை முன்னணி – 1.59%
  • தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி – 1.30%

இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு தற்போது தேர்தல்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தி அதிகாரத்தை அளிப்பதன் மூலம் கிழக்கு மற்றும் வடக்கில் தனி நாடு கோரி வரும் விடுதலைப் புலிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியும் என அரசாங்கம் எண்ணுகிறது.

இந்தத் தேர்தலில் கடந்த 2004 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த வேட்பாளர்களும் பங்ககேற்றுள்ளனர். இவர்கள் அதிபர் மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் ஆளும் கட்சியின் கூட்டணியில் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இன்றைய தேர்தலின் போது ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றதாகவும், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு தங்களுடைய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் நஜீப் ஏ மஜீத் மறுக்கிறார்.


திருகோணமலையில் கடற்படை கப்பல் மூழ்கடிப்பு

இச்சம்பவம் திருகோணமலையில் நடந்துள்ளது
இச்சம்பவம் திருகோணமலையில் நடந்துள்ளது

இலங்கையின் கிழக்கே துறைமுக நகரான திருகோணமலையில் கடற்படைக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் வெடிவைத்து மூழ்கடித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை கடற்படை சார்பாகப் பேசவல்ல தளபதி தஸ்ஸநாயக இச்சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் நீருக்குள் மூழ்கி கப்பலுக்கடியில் வெடிவைத்துள்ளார் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆனால் இந்தச் சம்பவத்தில் ஆட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வட இலங்கையில் மோதலில் ஈடுபட்டுவரும் அரச படையினருக்கான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அந்தக் கப்பலில் இருந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த செய்திகளை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணிக்கு வடக்கே விமானப்படை விமானங்கள் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சு பீரங்கி நிலையொன்று அழிக்கப்பட்டுள்ளதாகத் இலங்கை அரசின்தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் மணலாறு பிரதேசத்தில் உள்ள சிங்ளக் கிராமங்கள் மீது எறிகணை தாக்குதல்களை நடத்தி வருவதனாலேயே இந்த நிலைமீது படையினர் தாக்குதல் நடத்தியதாக அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் உடனடியாகத் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

இதனிடையில் மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் வெள்ளிகிழமை இடம்பெற்ற உக்கிர சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தின் 5 சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மன்னார் கறுக்காய்க்குளத்திற்கு அடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஆலங்குளம் பகுதியில் நேற்று விடுதலைப் புலிகளுடன் பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற கடும் சண்டைகளில் 33 விடுதலைப் புலிகளும் 8 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் வசமிருக்கும் இந்தப் பிரதேசத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பகுதியை வெள்ளிகிழமை இடம்பெற்ற இந்தச் சண்டைகளின்போது படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மே, 2008 – பிரசுர நேரம் 16:59 ஜிஎம்டி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருணா மீது வழக்கு தொடர போதிய ஆதாரம் இல்லை என பிரித்தானிய அரசு தரப்பு கூறியுள்ளது

கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று பிரித்தானிய அரச வழக்கு தொடுப்பு சேவை கூறியுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன், பிரிட்டனில் அடையாள ஆவணங்கள் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதிக் காலத்தை கழித்த நிலையில், கடந்த வியாழனன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை குடிபுகல் துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர் இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைத்தார் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பிய மனித உரிமை அமைப்புகள் அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தன.

ஆனால் பிரிட்டனின் அரசு வழக்கு தொடுப்பு துறையான கிரவுன் பிராசிக்யூஷன் சர்வீஸ், கருணா மீது மேலும் எந்த ஒரு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தருமளவுக்கு யதார்த்த ரீதியான வாய்ப்புகளைத் தரும் ஆதாரம் போதிய அளவில் இல்லை என்று லண்டன் பெருநகர காவல் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பிபிசி தமிழோசைக்குக் கூறியிருக்கிறது.

எனவே இந்த நிலையில், கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் சாத்தியக்கூறு அதிகமாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவு குறித்து மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஏமாற்றம் தெரிவித்திருக்கிறது. இன்று அது வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், சித்ரவதை செய்தது, பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தது, சிறார்களை படையில் சேர்த்தது, சிறார்களை போரில் பயன்படுத்தியது உள்ளிட்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு உடனடியான, முழுமையான, பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான விசாரணையை சர்வதேச சட்டப்படி பிரிட்டன் நடத்தவேண்டும் என்று கூறியிருக்கிறது.


அம்பாறையில் குண்டுவெடிப்பு; 11 பேர் பலி

குண்டு வெடித்த சமயத்தில் விடுதியில் கூட்டம் அதிகம் இருந்தது

இலங்கையில் சனிக்கிழமையன்று தேர்தல் நடக்கவுள்ள கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றான அம்பாறையில், வெள்ளியன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் 11 பேர் கொல்லப்பட்டும் 24 பேர் காயமடைந்தும் இருப்பதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை நகரத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள சிட்டி கபே என்னும் உணவு விடுதியிலேயே இந்த குண்டு வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியுள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் அந்த விடுதியில் அமர்ந்திருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இது பார்சல் குண்டாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மன்னார் மாவட்டத்தில் உக்கிர சண்டை

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் கட்டுக்கரைக் குளத்திற்கு வடக்கே உள்ள ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சண்டைகளில் குறைந்தது 33 விடுதலைப்புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 5 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

வெள்ளியன்று விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய முன்னரங்கு பகுதிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்காக இராணுவத்தினர் பல முனைகளில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது இரு தரப்பினருக்கும் மோதல்கள் மூண்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

படையினருக்கு உதவியாக எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்தியும் தாக்குதல் விமானங்களும் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தி அவர்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியதாகக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் வெள்ளியன்று இராணுவத்தினருடன் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், இராணுவத் தரப்பில் 30க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினரின் சடலங்களையும், இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டம் அடம்பன் நகரப்பகுதியை இன்று காலை 9 மணியளவில் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

பல மணித்தியாலங்கள் விடுதலைப் புலிகளுடன் இப்பகுதியி;ல் நடைபெற்ற சண்டைகளில் குறைந்தது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், இராணுவ தரப்பில் 2 படையினர் கொல்லப்பட்டு, மேலும் 7 பேர் காயமடைந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே அடுத்தடுத்து அமைந்துள்ள ஊர்களான ஆலங்குளம் மற்றும் கறுக்காய்க்குளம் பகுதியில் இருதரப்பினருக்கும் இடம்பெற்ற இந்தச் சண்டைகள் பற்றிய தகவலை விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.

அவர் தெரிவித்த மற்ற விபரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையின் கிழக்கே துறைமுக நகரான திருகோணமலையில் கடற்படைக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் வெடிவைத்து ழூழ்கடித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை கடற்படை சார்பாகப் பேசவல்ல தளபதி தஸ்ஸநாயக இச்சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் நீருக்குள் மூழ்கி கப்பலுக்கடியில் வெடிவைத்துள்ளார் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆனால் இந்தச் சம்பவத்தில் ஆட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வட இலங்கையில் மோதலில் ஈடுபட்டுவரும் அரச படையினருக்கான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அந்தக் கப்பலில் இருந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த செய்திகளை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக