Sujatha – Kalki :: Vaaram oru Pasuram
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 22, 2007
தஞ்சைப் பகுதியில் நிலச் சொந்தக் காரர்களையும் குத்தகைக்காரர்களையும் மேல்வாரம் குடிவாரம் என்று இன்றும் சொல்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் இந்தப் பாடலில் ‘வாரம்’ வருகிறது. விளக்கம் நான் கேட்டதில்லை. முழுசாக இரண்டரை மணி நேரம் ஒரே ஒரு பாசுரம்!
உத்யோகக் கட்டாயங்களினால் நான் என் பெற்றோரைப் பிரிந்து பல ஊர்களுக்குச் சென்று அலைந்து திரிந்து ஸ்ரீரங்கம் வந்து அவசரத்தில் திரும்பும்போது ‘ஸாரிப்பா! உன்னோட அதிகம் பேச முடியல’ என்று மன்னிப்புக் கேட்பேன். அதற்கு அவர் ‘பரவாயில்லை, உனக்கும் எனக்கும் உள்ள உறவு ‘ஒழிக்க ஒழியாது’ என்பார். இந்தச் சொற்றொடர் திருப்பாவை 28ஆம் பாசுரத்தில் வருகிறது.
‘‘கறவைகள் பின்சென்று கானம்
சேர்ந்து (உ)ண்போம்
அறிவொன்றும் இல்லாத
ஆய்க்குலத்து (உ)ன்தன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம்
உடையோம்
குறையொன்றும் இல்லாத கோவிந்தா!
உன் தன்னோ(டு)
உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம்
அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏலோர்
எம்பாவாய். (திருப்பாவை, 28)
(கறவை – பசு, சிறுபேர் – செல்லப்பெயர்)
பசுக்களின் பின்னால் போய்க் காட்டை அடைந்து கட்டுச்சோறு தின்பவர்கள் நாங்கள். அதிக அறிவில்லாத எங்கள் இடைக் குலத்தில் நீ வந்து பிறக்கும் புண்ணியம் எங்களுக்குக் கிடைத்தது. குறையற்றவனே! கோவிந்தனே! உன்னோடு எங்கள் உறவு ஒழித்தாலும் ஒழியாதது. அறியாத சிறுமிகள் உன்னை அன்பினால் ‘நீ’, ‘வா’ என்றெல்லாம் அழைக்கிறோம். கோபிக்காதே! எங்களுக்கு வேண்டியதைத் தருவாய்.
கல்வியற்றவர்களும் பக்தியால் அவனுடைய அருளைப் பெறலாம். பகவானுக்கும் ஆத்மாக்களுக்கும் உள்ள தொடர்பு ஆரம்பமற்றது; எப்போதும் இருப்பது. அதை பகவானாலும் ஆத்மாக்களாலும் தனியாகவோ சேர்ந்தோ ஒழிக்க முடியாது. ‘என்று நீ அன்று நான்’ என்று தாயுமானவர் சொல்வதுபோல… உண்மையான உறவுகள் அனைத்துமே ஒழிக்க ஒழியாதவை. கணவன்-மனைவி, அப்பா-பிள்ளை, தாய்-மகள், நண்பர்கள்-காதலர்கள் – ஏன், எதிரிகளேகூட ஒழிக்க முடியாது உறவுகள்தாம்!
பாரமாய பழவினை பற்றறுத்து
என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி
யென்னுள்புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்
கொலறியேனரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை
யாட்கொண்டதே
‘சுமையாக நின்ற பழைய பாவங்களின் சம்பந்தத்தைத் தொலைத்து என்னைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணி வைத்தான். அதுமட்டுமல்லாமல் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டான். உக்ரமான தவம் ஏதாவது நான் முற்பிறவியில் செய்திருக்க வேண்டும், தெரியவில்லை. திருவரங்கனின் மார்பன்றோ என்னை ஆட்கொண்டது.’
திருப்பாணாழ்வார் திவ்யப் பிரபந்தத்தில் பத்துப் பாடல்களைத்தாம் பாடியுள்ளார். பத்தும் முத்துக்கள்.
இந்த உருக்கமான பாடலில் உள்ள ‘வாரம்’ என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. ‘என்னைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டான். பகவான் என் எஜமானன்; நான் அவரிடம் வாடகைக்கு இருக்கிறேன்’ என்கிற அர்த்தம், கவிதை நயமும் ஆழமும் மிக்கது. ‘பங்காகப் பற்றும் படி செய்தான்’ என்கிற பொருளும் வாரம் என்பதற்கு உண்டு. ‘வாரமாக ஓதுவார்கள்’ என்றால் நிஷ்டையாக நியமமாக ஓதுகிறவர்கள். ‘வாரம் நடப்பது’ என்பது கோயிலுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டு போவது. ‘வாரமோதல்’ என்பது உருச் சொல்வது. Litany. நியமமாகச் சொல்லுதல். இப்படிப் பல படிமங்கள் கொண்ட சொல்லில் திருப்பாணாழ்வார் சொல்வது எந்த வாரம் என்று நீங்களே தீர்மானிக்கலாம்.
‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற ஒரே ஒரு பிரயோகத்தில் மட்டும் இன்று இந்தச் சொல் முடங்கிக் கிடக்கிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்