Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Pon Vizha – Indra Parthasarathy: Kalki Short Story

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 22, 2007

நந்திதா மணியைப் பார்த்தாள். பன்னிரண்டு! விமான நிலையத்திலிருந்து அவசர அவசரமாய் வெளியே வந்து, அங்கு பார்க் செய்திருந்த தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

ஷிகாகோவில் அவள் பிடித்திருக்க வேண்டிய எட்டு மணி ·ப்ளைட் ரத்தாகி விடவே, அடுத்த விமானத்தைத்தான் பிடிக்க வேண்டியதாயிற்று. ரமேஷ¤க்கு ·போன் செய்து விமானம் ரத்தாகிவிட்ட செய்தியைச் சொன்னாள். மௌனம்தான் அவன் பதில். கோபமாக இருக்கிறான் என்று அர்த்தம். அவளும் ·போனில் வழக்காட விரும்பவில்லை.

கல்யாணத்துக்கு முன் நடந்த சந்திப்பில், அவள் அமெரிக்காவிலும், தொடர்ந்து பத்திரிகைத் தொழிலிலும் இருக்கலாம் என்று சொன்னவனுக்கு, இப்பொழுது அவள் அந்த வேலையில் இருப்பது பிடிக்கவில்லை. ஆனால், நிருபர் வேலை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சமூகத்திலும், அரசியலிலும் புரையோடிக் கிடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்த ஒரு வாய்ப்பு. தனக்கென்று ஓர் அடையாளம் இருக்கின்றது என்பதை அவள் தனக்குத் தானே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அவள் அப்பாவும் அம்மாவும் அவளுக்குச் சிறு வயதிலிருந்தே பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். இருவருமே பேராசிரியர்கள். அப்பா அடிக்கடிச் சொல்வார்: ‘உனக்கு எது சரியென்று படுகின்றதோ அதைச் செய்யத் தயங்காதே. அதனால் உனக்குத் தொல்லைகள் வந்தால், அவற்றை எதிர்நோக்கக்கூடிய துணிவு உனக்கு வேண்டும்.’

தில்லியில் அவள் ‘டைம்ஸி’ல் வேலை செய்யும் போதுதான் ரமேஷைச் சந்தித்தாள்.

ஒரு சர்வதேச விஞ்ஞான ‘செமினாரு’க்கு அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இளம் விஞ்ஞானி. ஒரு பிரபல அமெரிக்க விஞ்ஞானியை அவள் நேர்முகம் காண்பதற்கும் அவன், அவளுக்கு உதவி செய்தான். அவன் அவளை மிகவும் விரும்பியதாக அவளுக்குத் தோன்றியது. இதையே காரணமாகக் கொண்டு அவள் அவனைத் திருமணம் செய்துகொள்ள இசைந்தது, ஓர் உணர்ச்சிகரமான முடிவோ என்று அவளுக்கு இப்பொழுது நினைக்கத் தோன்றுகிறது.

அவன் தன்னைச் சுற்றி ஒரு குறுகிய வட்டத்தை அமைத்துக் கொண்டு அதுவே சொர்க்கமென்று இருப்பவன். சமூக, அரசியல் அக்கறை எதுவும் அவனுக்குக் கிடையாது. தன் மனைவியும் அப்படி இருக்க வேண்டுமென்று அவன் விரும்பியதால் தான் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்னைகள்.

கேரேஜில் ரமேஷ் காரைச் சரியாக நிறுத்தி வைத்திருக்கவில்லை. தன் காரை அங்கே நிறுத்த முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. வெளியே நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் சென்றாள். சமையல் கூடத்தில், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சாப்பாட்டு மேஜையில் அவளுக்கு உணவு மூடி வைக்கப்பட்டிருந்தது; சைனீஸ் உணவு; கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான்.

அவளுக்குப் பசியில்லை. மேஜையிலிருந்த உணவை ·ப்ரிஜ்ஜில் வைத்தாள்.‘ஓவர்கோட்டை’க் கழற்றி நாற்காலியின் மீது போட்டாள். அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்து.

மாடி ஏறிச் சென்றாள். படுக்கை அறையில் ரமேஷ் படுத்திருந்தான்.

அவனுடைய கண்கள் மூடியிருந்தனவே தவிர, அவன் தூங்கி விட்டானா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை.

அவள் உடை மாற்றிக்கொண்டு வந்தபோது, ரமேஷ் படுக்கையில் இல்லை. நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். சண்டைக்கு ஆயத்தம்போல் அவளுக்குப் பட்டது. அவள் ஒன்றும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.

‘‘சாப்பிடலியா?’’ என்றான் ரமேஷ் நிதானமான குரலில். அவளைப் பார்க்காமலேயே அவன் இந்தக் கேள்வியைக் கேட்டான்.

‘‘பசிக்கலே.’’

‘‘உனக்கு ‘சைனீஸ் ·புட்’ பிடிக்குமேன்னு வாங்கிண்டு வந்தேன்; இதுதான் நீ என் மேலே வச்சிருக்கற மதிப்பா?’’

‘‘சாப்பிடறதுக்கும், மதிப்புக்கும் என்ன சம்பந்தம் ரமேஷ்? ·ப்ரிஜ்லே வச்சிருக்கேன்; நாளைக்குச் சாப்பிடறேன்.’’

சிறிது நேரம் மௌனம். நந்திதா திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

‘‘என்ன, ஷிகாகோவிலே பெரிய ‘பார்ட்டி’யா?’’ என்று கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை.

‘‘என்ன பேசாம இருக்கே?’’

அவள் எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள்.

‘‘உனக்குத் தெரியும், அந்த செனட்டர் விஷயமா விசாரிக்கறதுக்கு நான் ஷிகாகோ போனேன்னு. ‘பார்ட்டியா’ன்னு கேட்டா என்ன அர்த்தம்?’’

‘‘அப்போ இந்த வருஷம் ‘புலிட்சர் ப்ரைஸ்’ உனக்குத் தான்னு சொல்லு. எந்த செனட்டர் யாரோட போறான்னு உலகத்துக்கு உபயோகமான விஷயத்தைப் பத்தியெல்லாம் ஆராய்ச்சி பண்றே இல்லையா?’’ என்று கூறிவிட்டு அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

‘‘என்னோட சண்டை போடறதுன்னு பிடிவாதமாயிருக்கே. எனக்குக் களைப்பா இருக்கு, குட் நைட்’’ என்று கூறிவிட்டு, மறுபடியும் படுத்துக்கொண்டாள். ரமேஷ் எழுந்து, அவளருகில் வந்து உட்கார்ந்தான்.

‘‘லுக் நந்து, உலகத்திலேயே பாதுகாப்பு மிகக் குறைவான நகரம் எது தெரியுமா? நியூயார்க்! நீ இப்படி நேரம் கழிச்சு வரும்போதெல்லாம், நான் வயத்திலே நெருப்பைக் கட்டிண்டிருக்கேன். டோன்ட் யூ அண்டர் ஸ்டாண்ட்?’’

‘‘நாம் பயப்படறதுன்னு ஆரம்பிச்சா எல்லாத்துக்குந்தான் பயப்படணும், வேலைக்கே போக முடியாது…’’

‘‘குட்…நீ எதுக்காக வேலைக்குப் போகணும்? நாம ரெண்டு பேருக்கும் சேர்த்து நான் சம்பாதிக்கிறேன்… கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சு, நீயோ குழந்தை வேண்டாம்னு பிடிவாதமா இருக்கே!’’

‘‘வேலைக்குப் போகாம வீட்டிலே உட்கார்ந்துண்டு, குழந்தையைப் பெத்துண்டு, எனக்குன்னு ஒரு அடையாளம் இல்லாம, சும்மா இருக்கணும்; அப்படித்தானே?’’என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் நந்திதா.

‘‘ ‘இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம்’னு அங்கெ இங்கென்னு இப்படி அலையறது எவ்வளவு பெரிய ‘ரிஸ்க்’னு தெரியுமா உனக்கு? வீணா செத்துப் போறதா உன் அடையாளம்?’’ என்றான் ரமேஷ்.

‘‘ ‘ரிஸ்க்’னு எல்லாரும் சும்மா இருந்துட்டா, அயோக்கியர்கள்தான் நாட்டை ஆளுவாங்க….’’

‘‘அவங்கதான் ஆள்றாங்க, சந்தேகம் என்ன? ஸ்தாபனத்தை எதிர்த்துப் போராடறதுங்கிறது வீண் வேலை…’’ என்று கூறிக்கொண்டே அவளுடைய தோளைப் பரிவுடன் தடவினான் ரமேஷ்.

அவள், அவனுடைய கையைத் தன் தோளிலிருந்து விலக்கினாள்.

‘‘நீ என்ன சொன்னாலும் இந்த மாதிரி ‘ஜர்னலிஸம்’தான் எனக்குப் பிடிச்சிருக்கு’’ என்றாள்.

ரமேஷ் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

‘‘உனக்குப் பிடிச்சிருக்கிறதுக்கெல்லாம் நான் ‘சரி’ன்னு சொல்றேன், இல்லியா? எனக்குப் பிடிச்சதுக்கு மட்டும் நீ பிடிவாதமா முடியாதுன்னு சொல்றியே?’’ என்றான் சில நிமிஷங்களுக்குப் பிறகு.

‘‘உனக்குப் பிடிச்சது என்ன? நான் வேலைக்குப் போகக் கூடாது, அதானே?’’

‘‘அது இல்லே.’’

‘‘பின்னே என்ன?’’

‘‘ஐ வான்ட் அவர் சைல்ட்.’’

நந்திதா ‘சடக்’கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

‘‘உனக்கு இன்னிக்கு என்ன ஆச்சு?’’ என்றாள் அதிர்ச்சியுடன்.

‘‘ஆகறதுக்கு என்ன இருக்கு இதிலே? நான் உன்னோட புருஷன், நீ என்னோட பொண்டாட்டி. நமக்குக் குழந்தை பொறக்கிறது ‘நார்மல்’தானே? ‘ஷாக்’ ஆனவ மாதிரி எதுக்குப் பேசறே?’’

அவள் அவனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள்.

‘‘என்ன பாக்கறே?’’ என்றான்.

‘‘ஓ.கே. உனக்குக் குழந்தை வேணும்கிறது ரொம்ப அவசியம்னா, ஒரு குழந்தையை நாம தத்து எடுத்துண்டா என்ன?’’

ரமேஷ் அதிர்ச்சி அடைந்தான். ‘‘ஆர் யூ க்ரேஸி?’’ என்று கத்தினான்.

‘‘வொய் ஷ¤ட் ஐ பி க்ரேஸி? இப்போ ரொம்ப பேர் தத்துதான் எடுத்துக்கிறா. உலகத்திலே எத்தனை அனாதைக் குழந்தைகள் இருக்கு, தெரியுமா? அந்தக் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா வேண்டாமா? டோன்ட் தே டிஸர்வ்?’’ என்றாள் நந்திதா. ரமேஷ் கோபமாக எழுந்தான்.

போய் நாற்காலியில் உட்கார்ந்தான். அப்பொழுது நிலவிய மௌனச்சுமை இறுக்கமாக இருந்தது.

‘‘நீ கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாம்’’ என்றான் ரமேஷ்.

‘‘என்னன்னு?’’ என்று கேட்டாள் நந்திதா.

‘‘உனக்குக் குழந்தைப் பெத்துக்க இஷ்டமில்லேன்னு…’’

‘‘அப்போ என்ன பண்ணியிருப்பே?’’

‘‘நாம இப்போ இந்த மாதிரி சண்டை போட அவசியமே இருந்திருக்காது, இல்லையா?’’

‘‘நீயும் சொல்லியிருக்கலாமில்லையா ‘எனக்கு வேலைக்குப் போற பொண்டாட்டி வேண்டாம். வீட்டிலே இருந்திண்டு, எனக்குச் சமைச்சுப் போட்டுண்டு, சமத்தா பதினாறு குழந்தைகளைப் பெத்துத் தரத் தயாரா இருக்கிற பொண்டாட்டிதான் வேணும்’னு! ஏன் சொல்லலே?’’

‘‘குழந்தையே பெத்துக்க மாட்டேங்கிறது ஒரு ‘மேஜர் டிஸிஷன்’. டெல் மீ, நந்து, எனக்கு என் குழந்தைதான் வேணும்னு இருக்கிற மாதிரி, உனக்கு உன் குழந்தைதான் வேணும்னு இல்லையா? இதுதான் இயற்கையான மனித சுபாவம். குழந்தையைப் பெத்துக்க முடியாதவங்க தத்து எடுத்துக்கலாம். வொய் ஷ¥ட் வீ?’’ என்று கேட்டான் ரமேஷ்.

‘‘ரமேஷினுடைய ‘ஜீன்ஸ¤க்குத் தொடர்ச்சி இல்லாட்டா மனித வரலாறே ஸ்தம்பித்துப் போயிடுமா?’’ என்றாள் அவள்.

திடீரென்று அவனுக்கு அசாத்திய கோபம் ஏற்பட்டது. அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாள் என்ற ஆத்திரம். அவன், அவள் அருகில் சென்று அவளுடைய தோள்களைப் பற்றி அவளை உலுக்கினான்.

‘‘என்ன சொன்னே, என்ன சொன்னே? என்னைத் தூக்கி எறிஞ்சா பேசறே?’’ என்று உரத்த குரலில் கத்தினான்.

நந்திதா பயந்து போய்விட்டாள். அவன் இப்படி நடந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கட்டிலிலிருந்து இறங்கி அறையைவிட்டு வெளியே போகத் தொடங்கினாள்.

‘‘எங்கே போறே?’’ என்றான் அவன்.

அவள் பதில் சொல்லவில்லை.

‘‘உனக்கு அவ்வளவு திமிரா?’’

அவள் ஒன்றும் கூறாமல் இன்னொரு அறைக்குள் சென்றாள்.

அவள் செல்வதைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்துவிட்டு அவன் நாற்காலியில் உட்கார்ந்து குனிந்து தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.

அந்த இன்னொரு அறையிலிருந்த கட்டிலில் அவள் படுத்துக் கொண்டாள்.

அவனுக்குள் ஏதாவது பூதம் புகுந்து கொண்டு விட்டதா, ஏன் இப்படி ஆவேசத்துடன் கத்துகிறான் என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் ‘ஜீன்ஸை’ப் பற்றிச் சொன்னது, அவன் ஆண்மைக்குச் சவால் என்று நினைக்கிறானோ என்று அவளுக்குப் பட் டது. அவள் எப்பொழுது, எவ்வளவு நேரம் தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. திடீரென்று விழிப்பு வந்தது.

கட்டிலில் யாரோ உட்கார்ந்திருப்பது போல் தோன்றியது.

எழுந்து உட்கார்ந்தாள்.

‘‘பயந்து போயிட்டியா?’’ என்றான் ரமேஷ்.

‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றாள் நந்திதா.

‘‘நீ’’ என்றான் அவன்.

‘‘கெட் அவுட்’’ என்று அவள் கோபத்தில் கத்தினாள். மிகவும் களைப்படைந்திருந்த அவளால் அதற்கு மேல் அவனுடன் போராட முடியவில்லை. அவன் எழுந்து போன பிறகு அவளால் அழத்தான் முடிந்தது.

அவள் குளித்துவிட்டுக் கீழே வந்தாள்.

ரமேஷ் ‘ப்ரேக் ·பஸ்ட்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

‘‘ஹலோ நந்து, குட் மார்னிங். உனக்கும் டோஸ்ட் பண்ணியிருக்கேன். டோஸ்டர் லேந்து எடுத்துக்கோ, ‘லேட்’ ஆயிடுத்துல்லே?’’ என்றான்.

அவள் பதில் கூறவில்லை.

மௌனமாகக் காபியை மட்டும் எடுத்துக் கொண்டு அவன் எதிரே உட்கார்ந்தாள்.

‘‘நேத்து ராத்திரி அப்படி நடந்ததுக்கு, ஐ ஆம் ஸாரி’’ என்றான்.

‘‘தொடர்ந்து நாம புருஷன் – பொண்டாட்டி விளையாட்டு விளையாட வேண்டாம்னு எனக்குத் தோண்றது. நீ இப்படி ஒரு மிருகம் மாதிரி நடந்துப்பேன்னு நான் எதிர்பாக்கலே. நாம விலகிக்கிறதுதான் நல்லது’’ என்றாள் நந்திதா.

‘‘என்ன மிருகம் மாதிரி! நமக்குக் கல்யாணம் ஆயிடுத்து, நந்து.’’

‘‘நான் அதைப் பத்திப் பேச விரும்பலே. விலகிக்கிறதுதான் ரெண்டு பேருக்குமே நல்லது. நன்னா யோசிச்சுத்தான் இந்தத் தீர்மானத்துக்கு வந்திருக்கேன்’’ என்றாள் நந்திதா.

திடீரென்று ரமேஷ் அவளுடைய தோள்களை இறுகப் பற்றி, ‘‘ப்ளீஸ், நந்து, ஐ ஆம் ஸாரி ·பர் வாட் ஹாப்பென்ட் லாஸ்ட் நைட். ஐ லவ் யூ. ஐ லவ் யூ. இதை நீ புரிஞ்சுக்கவே மாட்டியா?’’ என்று அழ மாட்டாத குரலில் இறைஞ்சினான்.

டெலி·போன் ஒலித்தது. சில விநாடிகள் அதை உற்றுப் பார்த்துவிட்டு, பிறகு அதை எடுக்கப் போனான் ரமேஷ்.

‘‘ஓ, நீங்களா? எப்படி இருக்கீங்க? ஓ! அப்படியா? ‘எ குட் டிஸிஷன்’! நான் எல்லா ஏற்பாடும் செய்யறேன். நந்து நிச்சயமா சந்தோஷப்படுவா உங்க முடிவுக்கு. நந்து பாத்ரூம்லே இருக்கா… வந்தவுடனே ·போன் பண்ணச் சொல்றேன்’’ என்றான் ரமேஷ்.

‘‘எதுக்குப் பொய் சொன்னே? யாரு, என்னோட அப்பாதானே ·போன் பண்ணது?’’ என்றாள் நந்திதா கோபத்துடன்.

‘‘கோபப்படாதே, உன்னோட அப்பா தான்! நான் சொல்றத முழுசாக் கேளு… உன்னோட அப்பா – அம்மாவோட கல்யாணப் பொன்விழாவை இங்கே வந்து நம்மளோட கொண்டாடலாம்னுருக்காளாம்… புரியறதா, ஐம்பதாவது வருஷக் கல்யாண நாள்! நாம இங்கே கல்யாணமாகி அஞ்சு வருஷத்திலே பிரியப் போறோம்னு சொல்லச் சொல்றியா! மை காட்! என்ன ‘ஐர்னி’!’’ என்றான் ரமேஷ்.

நந்திதா இந்தச் செய்தியைக் கேட்டுச் சற்றுத் திடுக்கிட்டாள்.

அவர்களை இப்பொழுது ‘வர வேண்டாம்’ என்று சொல்ல முடியுமா? ஐம்பது வருஷங்கள் அவர்கள் ஒன்றாக இருந்திருக்கிறார்கள்! பல சமயங்களில் பல விஷயங்களில் அவர்களுக்கிடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று அவளுக்குத் தெரியாமலில்லை. அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்?

‘‘நந்து, ப்ளீஸ், அவர்கள் வந்துட்டுப் போகிற வரைக்கும் நமக்குள்ளே இருக்கிற பிரச்னையை ஆறப் போடுவோம். அப்புறம் இதைப் பத்தி யோசிப்போம்… ஓ.கே?’’ என்றான் ரமேஷ்.

நந்திதா பதில் கூறாமல் காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: