உலகெங்கும் உணவுப் பொருட்களின் விநியோகப் பிரச்சினைகள் குறித்த கவலைகள் அதிகரிக்கும் நிலையில், சீன ஆட்சியாளர்கள், வெளி நாடுகளில் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுப்பது பற்றி பரிசீலித்து வருகிறார்கள்.
விவசாயம் செய்ய, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகள் ஆகியவற்றில் சீன அரசு நிலங்களை வாங்கக்கூடும் என்று சீன ஆட்சியாளர்கள் பீஜிங்கில் உள்ள ஊடகங்களிடம் கூறியுள்ளார்கள்.
வெளிநாடுகளில் சீனா தொழில் முதலீடுகளை அதிகப்படுத்தி வரும் நிலையில் அதை அடுத்துவரும், இந்த நடவடிக்கை சீன பொருளாதார நலன்களை பெருமளவில் விஸ்தரிப்பதாக இருக்கும்.
சீனா இன்னும் அதன் மக்களுக்கு உணவு வழங்கக்கூடிய நிலையில் தற்போது இருந்தாலும், உணவுப்பொருட்கள் விலையில் ஏற்படக்கூடிய பெருமளவு உயர்வுகள், அங்கு சமூக அமைதியின்மையைத் தோற்றுவிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக பிபிசியின் சீனாவுக்கான பகுப்பாய்வாளர் கூறுகிறார்.