இலங்கையின் கிழக்கே வன்முறை: ஐந்து பேர் கொலை
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் வியாழன் நண்பகல் இடம்பெற்ற வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 2 பேரும் 3 முஸ்லிம்களும் என 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரையம்பதி பிரதேச பொறுப்பாளர் சாந்தன் என்பவரும் அவரது உதவியாளரும் அடையாளம்தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளிலேயே குறிப்பிட்ட 3 முஸ்லிம்களும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களின்போது மேலும் 10 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.
இந்தச் சம்பவங்களையடுத்து தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையயடுத்து அந்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸ் ஊரடங்கு சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வியாழன் நண்பகலுக்கு பின்னர் வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சவுணர்வு காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறை தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா ஆகியோரின் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கிழக்கு மாகாண அமைச்சராகப் பதவியேற்றார் ஹிஸ்புல்லா
![]() |
![]() |
இலங்கையின் கிழக்கு மாகாண அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வியாழனன்று பதவியேற்றார்.
கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த வைபவத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹிஸ்புல்லாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
சுகாதாரம், சமூக நலம், சிறார் பராமரிப்பு, பெண்கள் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி முதலிய துறைகள் ஹிஸ்புல்லாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அவருடன் அவரது ஆதரவு உறுப்பினர்கள் இருவரும் மாகாணசபை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.
ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் தோல்வி இலங்கைக்கு பின்னடைவல்ல: அமைச்சர் சமரசிங்க
![]() |
![]() |
ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் (வலது பக்கம்) அமைச்சர் சமரசிங்க – பழைய படம் |
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது துரதிருஷ்டம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
ஆனாலும் இத்தோல்வி ஒரு இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகளில் பின்னடைவை ஏற்படுத்தாது என்று இலங்கை மனித உரிமை மற்றும் அழிவுகால நிர்வாக அமைச்சர் மஹிந்த சமரங்சிங்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
சில முக்கியப் பிரமுகர்களும், அரசு சாரா சர்வதேச அமைப்புகளும் தங்களுடைய சொந்தக் கருத்தை முன்னிறுத்தி இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்ததே இத்தோல்வியின் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு பார்வையாளர் நாடாக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் தொடர்ந்தும் செயற்துடிப்புடன் இலங்கை பங்காற்றும் என்று அவர் அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.
அதேநேரம், மனித உரிமைப் பாதுகாப்பு விஷயத்தில் இலங்கை மென்மேலுமாக மோசமடைந்துவந்துள்ளது என்பதையே இந்தத் தேர்தல் தோல்வி காட்டுகிறது என்றும் இலங்கை அரசு இந்தச் சந்தர்ப்பத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் காணவேண்டும் என்றும் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான மனோகணேசன் கூறுகிறார்.
சாதி மோதலால் மூடப்பட்ட எறையூர் மாதா தேவாலயம் மீண்டும் திறப்பு
![]() |
![]() |
எறையூர் மாதா தேவாலயம் |
தலித் மற்றும் வன்னிய கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக மூடப்பட்ட தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் எறையூர் மாதா தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று அந்த தேவாலயத்தின் கொடியேற்ற நிகழ்வு அமைதியாக நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.
இந்த செபமாலை மாதா கோயில் வழிபாட்டில் தலித் மக்கள் பல்வேறு வகைகளில் அவமானப்படுத்தப்பப்டுகின்றனர் என்று புகார்கள் எழ, அதன் பின்னர் ஏற்பட்ட மோதல்களில் இருவர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
அதனையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் தேவாலயமே மூடப்பட்டது.
அதனையடுத்து புதுச்சேரி மறைமாவட்ட நிர்வாகம் இருதரப்பினருடனும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியினரே நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெறுகின்ற இத்தகைய தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென இராணுவ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறிகண்டி – அக்கராயன் வீதி 4ஆம் கட்டை பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்த வான் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப வைபவம் ஒன்றிற்குச் சென்றவர்களுக்கே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதி கல்விளான் பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய, அம்புலன்ஸ் வண்டியொன்றில் பயணம் செய்த, மன்னார் மாவட்ட கடற்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகிய 47 வயதுடைய ஜோசப் போல் ஜுலரியன் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் சிற்றூழியராகிய வசந்தகுமாரன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து, முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் சுண்டிக்குளம் பகுதியில் இன்று பிற்பகல் நடந்த விமானத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 பேர் காயமடைந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கிறன.
இந்தத் தாக்குதலில் 10 வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
வடாராட்சி கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இந்தப் பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களின் குடியிருப்புகளே இந்தத் தாக்குதலில் சேதமடைந்தவையாகும்.