திரைப்பட வரலாறு :(921)
டான்ஸ் மாஸ்டராக இருந்த கமலஹாசன் ஹீரோ ஆனது எப்படி?
ஆர்.சி.சக்தி வெளியிடும் ருசிகர தகவல்கள்
சினிமாவில் தடம் பதிக்க ஆர்.சி.சக்தி போராடிக் கொண்டிருந்த நேரத்தில் இளைஞர் கமலஹாசன் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். அதன் மூலம் இருவர் வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டன.
அந்தக் காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி, ஆர்.சி.சக்தி கூறியதாவது:-
“கவிஞர் சுப்பு ஆறுமுகத்திடம் பல படங்களில் வேலை பார்த்தேன். என்றாலும் என் பெயர் `டைட்டில் கார்டில்’ இடம் பெற்றதில்லை. இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.
பொற்சிலை
அப்போது `அகத்தியம் புரொடக்ஷன்ஸ்’ சார்பாக ஈரோடு குமரேசன், பொறையார் கோவிந்தராஜன், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து ஒரு படம் ஆரம்பித்தார்கள். சிவம் என்பவர் பொறுப்பாளர். படத்தின் பெயர் `பொற்சிலை’. பிரான்சிஸ் என்பவர் இயக்குனர். இவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
இந்தப் படத்துக்கு திரைக்கதை – வசனத்தை சுப்பு ஆறுமுகம் எழுதினார். அதன் மூலம் அந்தப் படப்பிடிப்புக் குழுவினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என் சுறுசுறுப்பும், துறுதுறுப்பும் எல்லாருக்கும் பிடித்துவிட்டது.
உதவி இயக்குனர்
ஒருநாள் சிவம் என்னிடம், “நீ அண்ணனிடம் வேலை பார்க்கிறதைவிட, இங்கே தயாரிப்பு பணிகளையும் செய்து கொண்டு உதவி இயக்குனராகவும் இருந்து கொள். இரண்டு வேலைகளையும் பார்” என்று கூறினார்.
அவர் கூறியபடி, “பொற்சிலை”யில் பணிபுரியத் தொடங்கினேன். அங்கு நடன இயக்குனர் கே.தங்கப்பன் அவர்களின் நட்பு கிடைத்தது. அந்தப் படத்தில்தான், ராணி சந்திரா (விமான விபத்தில் இறந்தவர்) அறிமுகமானார். புதுமுகம் என்பதால் நடனம் சரியாக வரவில்லை. படக்கம்பெனியில் தினசரி நடனப் பயிற்சியும், ஒத்திகையும் நடக்கும். தங்கப்பன் மாஸ்டருடன் உதவியாளர் தாராவும் வருவார்.
தங்கப்பன் மாஸ்டர் காலை வந்துவிட்டு இரவுதான் போவார். நிறைய நேரம் உடன் இருந்ததால் பலவற்றையும் பேசிப் பகிர்ந்து கொள்வோம்.
எங்களுக்குள் நெருக்கமான நேசமும், இறுக்கமான நட்பும் வளர்ந்தது. மனம் விட்டு நீண்ட நேரம் பேசுவது வழக்கமாக இருந்தது.
ஒருநாள் மாஸ்டர் பேசும்போது, “நான் `அன்னை வேளாங்கண்ணி’ என்றொரு படம் எடுக்கப்போகிறேன். அதில் நீ கண்டிப்பாக வேலை செய்யவேண்டும்” என்று கூறினார்.
`அன்னை வேளாங்கண்ணி’ கதையை ஒரு நாடக நிகழ்ச்சியில் பார்த்துவிட்டு, அதை எப்படியாவது படமாக்குவது என்று ஆர்வமாக இருந்தார். அந்தக் கதையைப் பற்றியும், காட்சிகள் பற்றியும் விவரிக்க ஆரம்பித்தால் மாஸ்டர் முகத்தில் அவ்வளவு பரவசம் தெரியும்.
`பொற்சிலை’ படம் முடிந்த பிறகு தங்கப்பன் மாஸ்டர் `அன்னை வேளாங்கண்ணி’ ஆரம்பித்த சமயம், அவரிடம் உதவி இயக்குனரானேன்.
அப்போது மாஸ்டர் வேலை பார்க்கிற வேறு சில படங்களின் டான்ஸ் ஒத்திகையும் அங்கு நடக்கும். நான், சில நேரங்களில் வேடிக்கை பார்ப்பதுண்டு. அங்கே தாராவும் கமலும் நடனம் ஆடிக்காட்டுவார்கள்.
யார் தெரியுமா?
மாஸ்டர் ஒருநாள் என்னிடம் “சக்தி! இந்தப் பையன் யார் தெரியுமா?” என்றார். பின் அவரே, “களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலஹாசன். இப்போது என்னிடம் அசிஸ்டென்டாக இருக்கிறான்” என்றார்.
உடனே நான், “எனக்குத் தெரியும் மாஸ்டர்! இது எங்க ஊர் பையன். ஆனா அவருக்கு என்னைத் தெரியாது” என்றேன்.
உடனே கமல், “நீங்க யாரு? என்ன சொல்றீங்க?” என்று கேட்டதும், “நான் பரமக்குடி பக்கம் புழுதிக்குளம்” என்றேன். பிறகு பேச ஆரம்பித்து விட்டோம்.
ஊர்ப்பாசமோ என்னவோ, அந்த நிமிடம் முதல் எங்கள் உள்ளங்கள் ஒன்று சேர்ந்துவிட்டன. கமலும் நானும் பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். சினிமா, சமூகம், நாட்டு நடப்பு இப்படி எதுபற்றி வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவோம்.
எங்கள் பேச்சு, வயது வித்தியாசத்தை மறந்து, சிந்தனைகளை ஒன்று சேர்க்கிற இடமாக இருந்தது. எங்கள் நட்பு நாளொரு சந்திப்பு, பொழுதொரு விவாதம் என்று வளர்ந்து கொண்டே போனது.
அதுவரை நடன இயக்குனராக இருந்த கமலை “அன்னை வேளாங்கண்ணி”யில் உதவி இயக்குனராகவும் சேர்த்துக் கொண்டோம். பல போராட்டங்களுக்குப் பிறகு படமும் வெளியானது. படம் வெளியான பிறகும், கமலுக்கும் எனக்குமான நட்பு தொடர்ந்தது.
அப்போது நான் ரங்கராஜபுரத்தில் ரூம் எடுத்து தங்கியிருந்தேன். அங்கு நானும் கமலும் சந்தித்துக் கொள்வோம். அல்லது எல்டாம்ஸ் சாலையில் கமலின் வீட்டில் நான் இருப்பேன். எங்கள் விவாதங்களில் நல்ல சினிமா பற்றிய சிந்தனை, எதிர்கால சினிமா பற்றிய கருத்துகள், கனவுகள் இடம் பெறும்.
விடிய விடிய பேச்சு
எங்கள் பேச்சுக்கு அளவே இருக்காது. எல்லையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும். அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம்.
அப்போது ரங்கராஜபுரத்தில் பஸ் வசதி கிடையாது. ஒருநாள் என்னிடம் கமல் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தபோது மிகவும் நேரமாகிவிட்டது. “வாங்க, பனகல்பார்க் வரை பேசிக்கிட்டே போகலாம். நான் அங்கிருந்து பஸ்சில் போய்விடுகிறேன். நீங்கள் திரும்பி வந்திருங்க” என்று கமல் சொல்ல, நாங்கள் பேசிக்கொண்டே போனோம். பனகல் பார்க்கை அடைந்தபோது இரவு 10.30 மணி ஆகிவிட்டது.
கமல் வீட்டுக்குப் போக அங்கிருந்து பஸ் இல்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. மழைக்காக ஒரு கடை வாசலில் ஒதுங்கினோம். மழை விட்டதும் போகலாம் என்று பேச ஆரம்பித்தோம். மழையும் விடவில்லை. பேச்சும் முடியவில்லை. சொன்னால் நம்ப முடியாது. விடிய விடிய பேசினோம். காலை 4 மணிக்கு மேல் மழை ஓய்ந்தது.
“இதுக்கு மேல் ரூமுக்குப் போய் என்ன செய்யப்போறீங்க? வாங்க, நடந்தே எல்டாம்ஸ் ரோடு போகலாம்” என்று கமல் சொன்னதும், கமல் வீட்டுக்கு சென்றோம்.
எங்களைப் பார்த்த கமலின் அம்மா, “எங்கப்பா போனீங்க?” என்று கேட்டுத் திட்டினார்கள். எப்படியோ சமாளித்து, குளித்துவிட்டுச் சாப்பிட்டோம். அம்மாவுக்கு என் மேல் மிகுந்த அன்பும் பாசமும் உண்டு. என்னையும் தன் பிள்ளையைப் போலவே பார்த்துக் கொள்வார்கள்.
ரூ.50 ஆயிரம் முதலீட்டில் ஒரு படம்
எனக்கு ஒரு பைனான்ஸ்சியர் அறிமுகமானார். `அன்னை வேளாங்கண்ணி’ படப்பிடிப்பு நடந்த போதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவர் ஒருநாள் என்னிடம், “சக்தி! உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் படம் ஆரம்பிக்கிறதாக இருந்தால் சொல்லுங்க. படம் முடியும் வரைக்கும் நான் பைனான்ஸ் பண்றேன்” என்றார்.
படத்தயாரிப்பு குறித்து அப்போது எனக்கு எந்த எண்ணமும் இல்லை. ஒருநாள் `அன்னை வேளாங்கண்ணி’ “பி.ஆர்.ஓ”வாக இருந்த ராமலிங்கம், என்னிடம் ராஜேந்திரன், கல்யாணசுந்தரம் என்கிற இரண்டு பேரை அழைத்து வந்தார்.
“கல்யாணசுந்தரம் பி.ஏ. படித்தவர். படம் எடுக்க விரும்புகிறார், ஆபீஸ் கூட போட்டாகி விட்டது” என்று கூறி அறிமுகம் செய்தார்.
கல்யாணசுந்தரம் தன்னிடம் ரூ.50 ஆயிரம் இருப்பதாகக் கூறினார். இந்தத் தொகை இருந்தால், படம் முடியும் வரை பணம் தருவதாக முன்பு பைனான்சியர் கூறியது நினைவுக்கு வந்தது. படம் பண்ணித்தர சம்மதித்தேன்.
புதியவர் ஒருவரை இயக்குனராகப் போட்டு, இணை இயக்குனராக நானும், உதவி இயக்குனர்களாக மணி, கமல் ஆகியோரும் பணியாற்றுவது என்று முடிவாயிற்று.
ஆனால், புதுமுக இயக்குனர் பின்வாங்கி விட்டார்.
என்ன செய்வது என்று விழித்தபோது, போட்டோகிராபர் ராஜேந்திரன், “நாம் ஏன் வெளியே டைரக்டரைத் தேடவேண்டும்? நம்ம சக்தி அண்ணன் டைரக்ட் பண்ணமாட்டாரா? அவருக்கு அந்த தகுதி இல்லையா?” என்று சொல்ல, உடன் இருந்த நண்பர்கள் மணிபாரதி, ராமலிங்கம், மணி, கமல், ஷியாம், ஸ்ரீஹரி உள்பட எல்லாருமே ஆமோதித்து கை தட்டினார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
எதிர்பாராத வகையில் நான் இயக்குனர் ஆனேன். பட வேலைகள், கதை விவாதம், பட பூஜை என்று நான் அல்லாடிக் கொண்டிருந்தாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு கவலை உறுத்திக் கொண்டே இருந்தது. முதல் படம் சரியாக வரவேண்டுமே என்கிற பயம் எனக்குள் இருந்தது.
மீண்டும் பிரச்சினை
சில நாட்கள் சென்றன. திடீரென்று ஒருநாள் கல்யாண சுந்தரம், “என்னிடம் ரூ.5 ஆயிரம்தான் இருக்கிறது” என்று கூறி அழுதார். அவரைப் பார்க்க எனக்கு கோபமாகவும் இருந்தது. பாவமாக இருந்தது. மொத்தத்தில் பயமாகவும் இருந்தது.
“படம் எடுப்பதாக, எனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். படம் எடுக்கவில்லை என்று தெரிந்தால், என்னை கிண்டல் செய்வார்கள். அதைவிட, ரெயில்முன் விழுந்து தற்கொலை செய்து கொள்வேன்!” என்று கேவிக்கேவி அழுதார்!
கமல் கதாநாயகன்
எங்கிருந்தோ எனக்கு ஒரு முரட்டு தைரியம் வந்தது. விதியின் விளையாட்டா, காலத்தின் நிர்ப்பந்தமா தெரியாது.
“நாம் படம் எடுக்கிறோம். நம் படத்தில் அத்தனை பேரும் புதுமுகங்கள். யாருக்கும் சம்பளமில்லை. படத்தை ஆரம்பிப்போம். அப்புறம் கடவுள் விட்ட வழி” என்று கூறினேன்.
அருகிலிருந்த கமலைக் கூப்பிட்டு, “நீதான் ஹீரோ. கதையை அப்புறம் பேசிக்கொள்ளலாம்” என்று கூறி அட்வான்சாக ரூ.11 கொடுத்தேன். இசையமைப்பாளர் ஷியாமுக்கு ரூ.11-ம், நண்பரும், நடிகருமான மணிபாரதிக்கு ரூ.11-ம் அட்வான்ஸ் கொடுத்தேன். அந்தப்படம்தான் “உணர்ச்சிகள்.”
திரைப்பட வரலாறு :(922)
கமல் ஹீரோவாக நடித்த “உணர்ச்சிகள்”
சோதனைகளைத் தாண்டி வெளிவந்தது
பாராட்டுகள் குவிந்தன
கமலஹாசன் ஹீரோவாக நடித்த முதல் படமான “உணர்ச்சிகள்”, பல தடைகளைக் கடந்து வெளிவந்தது.
படத்தின் டைரக்டரான ஆர்.சி.சக்தி, அதுபற்றிக் கூறியதாவது:-
“பழைய திட்டங்கள் அனைத்தையும் மறந்து விட்டு, அன்றைய கமலின் வயதையும் எங்கள் கையிலிருந்த பணத்தையும் மனதில் வைத்து எழுதப்பட்டதுதான் “உணர்ச்சிகள்” படத்தின் கதை.
கதாநாயகனாக கமல். கதாநாயகியாக காஞ்சனா. மற்றவர்கள் புதுமுகங்கள்.
படப்பிடிப்பு நடத்த ஸ்டூடியோக்களை அணுகியபோது, எங்களை ஏளனமாகப் பார்த்தார்கள்; கேலியாகப் பேசினார்கள். அலைந்து பார்த்தோம். எந்த ஸ்டூடியோவும் கிடைக்கவில்லை.
கமல் வீட்டில் படப்பிடிப்பு
`இனி ஸ்டூடியோவே வேண்டாம். வீடுகளில் எடுப்போம்’ என்று தீர்மானித்தோம். பல வீடுகளைத் தேடி அலைந்தோம். கடைசியில் கமல் வீட்டிலேயே படப்பிடிப்பு நடத்துவது என்று முடிவு செய்தோம்! இதுபற்றிப் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். கமல் அம்மாவுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. “இங்கே எப்படிய்யா ஷூட்டிங் பண்ணுவீங்க?” என்று கேட்டார்கள்.
எப்படியோ படப்பிடிப்பைத் தொடங்கி விட்டோம். பலவித சோதனைகளுக்கு இடையே படம் வளர்ந்து, 6,000 அடியைத் தொட்டது. அதற்கு மேல் நகர முடியவில்லை. பணப்பிரச்சினையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பணம் தேடி நாங்கள் அலைந்தது கொஞ்ச நஞ்சமல்ல.
திருமணம்
இந்த நேரத்தில் எனக்கு இன்னொரு `விபத்து’ ஏற்பட்டது! ஆமாம்; எனக்கு திருமணமாகிவிட்டது!
இயக்குனரானது, திருமணமானது என்று இருவித விபத்துகளைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தேன்.
முதல் பட முயற்சியில் எப்படியாவது வெற்றி பெற்று, படத்தை முடித்து வெளியேக் கொண்டுவந்து விடவேண்டும் என்று இரவு – பகல் பாராமல் அலைந்து கொண்டிருந்தேன். இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்புவேன். மனைவி சிறிதும் முகம் சுழித்தது இல்லை. என் முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தார்.
வினியோகஸ்தர்கள் யாராவது கிடைக்கமாட்டார்களா, நிதி உதவி எதுவும் கிடைக்காதா என்று தடுமாறிக் கொண்டிருந்தேன்.
ஒரு நண்பரின் உதவியால் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் கே.எல்.போஸ், சர்தார் என்கிற இரண்டு நண்பர்கள் அறிமுகமானார்கள். எடுத்தவரை படத்தை அவர்களுக்குப் போட்டுக்காட்டினோம். சட்டசபையின் துணை சபாநாயகராக இருந்த சீனிவாசன் அவர்களின் நண்பர்களும் படத்தைப் பார்த்தார்கள். படம் அவர்களுக்குப் பிடித்துவிட்டது.
நடிகர்கள் மாற்றம்
பழைய தயாரிப்பாளர் கல்யாணசுந்தரத்துக்கு ஒரு ஏரியாவைக் கொடுத்துவிட்டு, படத்தை தொடரும் பொறுப்பை புதிய நண்பர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு, நடிகர் பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. வி.கோபாலகிருஷ்ணன், சந்திரகாந்தா, ஸ்ரீவித்யா, எஸ்.வி.ராமதாஸ் ஆகியோர் படத்தில் இடம் பெற்றனர். வேறு சில மாற்றங்களும் செய்யப்பட்டன.
முதலில் ஆரம்பிக்கப்பட்ட “உணர்ச்சிகள்” பொருளாதாரப் பற்றாக்குறையால் தேங்கி நின்று போராடிக் கொண்டிருந்த வேளையில் கமல் நடித்த “அரங்கேற்றம்” போன்ற பல படங்கள் வெளியாகிவிட்டன. கமல், நாடறிந்த நடிகராகி விட்டார். இங்கு மட்டுமல்ல, மலையாளத் திரையுலகிலும் கமலின் புகழ் பரவத்தொடங்கியது.
ஒருநாள் கமல் என்னிடம் வந்து “உணர்ச்சிகள்” கதையைக் கேள்விப்பட்டு, மலையாளத்தில் அதை எடுக்க இயக்குனர் சங்கரன் நாயர் விரும்புவதாகக் கூறினார்.
இதில் எனக்கு விருப்பமில்லை. “வேண்டாம், கமல். அவர்கள் சீக்கிரம் படத்தை முடித்து தமிழ்நாட்டிலும் வெளியிட்டு விடுவார்கள். அதனால் நம் படம் பாதிக்கப்படும்” என்றேன்.
கமலோ, “நம் படம் முடிகிற நிலைக்கு வந்துவிட்டது. அவர்கள் இனிமேல்தான் படப்பிடிப்பே ஆரம்பிக்கப்போகிறார்கள். அவ்வளவு காலமா நம் படம் வெளிவராமல் இருக்கப்போகிறது? அது மட்டுமல்ல; இந்த நேரத்தில் உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால் ஆறுதலாக இருக்கும் அல்லவா?” என்றார்.
கமல் சொன்னது எனக்குச் சரியாகப் பட்டது. மலையாளத்தில் மட்டும் படமாக்கிக் கொள்ளும் உரிமையை விற்றோம்.
முந்திக்கொண்ட மலையாளப்படம்
நான் பயந்தது மாதிரியே ஆகிவிட்டது! எங்கள் படம் வெளிவரும் முன்பே, மலையாளப்படம் வெளியாகி விட்டது. மலையாளத்தில் கமலும், ஜெயசுதாவும் நடித்திருந்தார்கள். தமிழில் “உணர்ச்சிகள்” தாமதமாகிக்கொண்டே போக, மலையாளத்தில் படம் முடிந்து கேரளாவில் வெற்றியும் பெற்றது. தமிழ்நாட்டிலும் வெளியானது. அதுதான் “ராசலீலா.” சலீல் சவுத்ரியின் இசையில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆயின.
“ராசலீலா” கேரளாவில் ஓடியதுடன் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களிலும் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. சென்னையில் நிïஎல்பின்ஸ்டன் திரையரங்கில் 100-வது நாள் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் `உணர்ச்சிகள்’ ஒடியன் திரையரங்கில் வெளியானது.
“உணர்ச்சிகள்” படம் பற்றி, “இந்து” பத்திரிகையில் வந்த விமர்சனத்தில், “ராசலீலா” மலையாளப்படத்தின் அடிப்படையில் “உணர்ச்சிகள்” எடுக்கப்பட்டிருப்பதாக எழுதியிருந்தார்கள். இதுதான் காலத்தின் கோலம் என்பதா? அதற்கு மாற்று மருந்தாக “குமுதம்” விமர்சனம் அமைந்திருந்தது. என் படத்தில் சில குறைகளை சுட்டிக்காட்டிவிட்டு, “நெஞ்சை விட்டு நீங்காத படம்” என்று குறிப்பிட்டிருந்தது, மகிழ்ச்சியாக இருந்தது.
“உணர்ச்சிகள்” வணிக ரீதியாக பெரிய வெற்றிபெறவில்லை என்றாலும் பாராட்டுகள் பெற்று, பேசப்பட்ட படமாக அமைந்தது.
திரைப்பட வரலாறு :(923)
ஆர்.சி.சக்தி டைரக்ஷனில்
கமல்-ஸ்ரீதேவி நடித்த `மனிதரில் இத்தனை நிறங்களா?’
கமலஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்த “மனிதரில் இத்தனை நிறங்களா?” படத்தை, ஆர்.சி.சக்தி டைரக்ட் செய்தார்.
இதுகுறித்து ஆர்.சி.சக்தி கூறியதாவது:-
“உணர்ச்சிகள்” வெளியான பிறகு அடுத்து என்ன செய்வது என்கிற திட்டமில்லாமல் இருந்தேன்.
ஒருநாள் என் நண்பர் வி.எஸ்.டி.சுந்தரம் என்னிடம் ஒரு கதைப் புத்தகத்தைக் கொடுத்தார். “படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் படமாக எடுக்கலாம்” என்றார்.
படித்துப் பார்த்தபோது, சில மாறுதல்கள் செய்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. சொன்னேன் ஏற்றுக்கொண்டார்.
மனிதரில் இத்தனை நிறங்களா?
கதை விவாதம் தொடங்கியது. அப்போது என் உதவியாளர்களாக இருந்த ஜாவுதீன், சத்தியமூர்த்தி, எழுத்தாள நண்பர் டாயல் ஆகியோருடன் பேசி கதைக்கு ஒரு வடிவம் கொடுத்தோம். அதுதான் “மனிதரில் இத்தனை நிறங்களா?”
கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த திரைக்கதையில், கமல், ஸ்ரீதேவி இருவரும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தனர். என் இரண்டாவது படத்தில் நடிக்கும்போது, வியாபார வெற்றி நாயகன் என்கிற அளவுக்கு கமல் உயர்ந்திருந்தார். வெற்றி ஜோடியாக கமல் – ஸ்ரீதேவி வலம் வந்து கொண்டிருந்த நேரம்.
அதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சத்யப்பிரியா கமலின் மனைவியாக குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்தார். மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் ஆகியோருடன் தெலுங்கு கதாநாயகன் முரளி மோகன் ஸ்ரீதேவியின் ஜோடியாக நடித்திருந்தார்.
ஷ்யாமின் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. பாதிப்படம் முடிந்தது. எடுத்தவரை போட்டுப் பார்த்தபோது கமல் உள்பட பலருக்கும் படம் பிடித்திருந்தது. இதேபோல மீதிப்படத்தையும் எடுத்து விட்டால் படம் சிறப்பாக அமையும் என்று எல்லோருமே நம்பினோம்.
சோதனை ஆரம்பம்
ஆனால், அதற்குப் பிறகுதான் சோதனை ஆரம்பித்தது. படத்தை அந்த ஆண்டு தீபாவளிக்குக் கொண்டுவரவேண்டும் என்று தயாரிப்பாளரும், வினியோகஸ்தர்களும் விரும்பினார்கள். ஆனால் அதே தீபாவளிக்கு கமல் நடிக்கும் வேறு 3 படங்கள் வெளிவருவதாக இருந்தது. என் படமும் சேர்ந்தால் 4 ஆகிவிடும்.
கமல் என்னிடம் இதுபற்றி பேசும்போது, “எந்த ஒரு நடிகனுக்கும் ஒரே நாளில் 4 படங்கள் வெளிவருவது நல்லதல்ல. இந்த 4 படங்களில் எது தோல்வியடைந்தாலும் அது என்னையும் சேர்த்துதான் பாதிக்கும். எனவே ஒரு மாதம் கழித்து இந்தப் படத்தை வெளியிடலாம். அதற்கான கால்ஷீட் நான் தருகிறேன்” என்று சொன்னார்.
கமல் சொன்னதன் நியாயம் எனக்கு புரிந்தது.
பண நிறைவும்… மன நிறைவும்
தயாரிப்பாளர், படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் பிடிவாதமாக இருந்தார். “நட்பா? பொறுப்பா?” என்று எனக்குள் குழப்பம்.
வேறு வழியில்லாமல் எடுக்க வேண்டிய பல காட்சிகளை எடுக்க முடியாமல், முடிக்க வேண்டிய சில வேலைகளை முடிக்க முடியாமல் படத்தை முடித்துக் கொடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு முடிவடையாத படம். தயாரிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு பணம் சேர்ந்தது. அவருக்கு லாபம்தான். அவருக்கு பண நிறைவு. ஆனால் எனக்கு மன நிறைவு இல்லை.
இத்தனை குழப்பங்களுக்கு இடையிலும் படத்திற்கு மக்கள் மத்தியில் மரியாதை கிடைத்தது!”
இவ்வாறு ஆர்.சி.சக்தி கூறினார்.
தேடிவந்த வாய்ப்புகள்
கமலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய நிலையில் ஆர்.சி.சக்தி, பல படங்களை கையில் வைத்திருக்கும் அளவுக்கு பரபரப்பாகி விட்டார்.
“மனிதரில் இத்தனை நிறங்களா?” படத்துக்குப்பின் சக்தி கையில் இத்தனை படங்களா என்று பலரும் வியக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டார்.
அந்த அனுபவம் பற்றி ஆர்.சி.சக்தி கூறியதாவது:-
“என் முதல் படம் “உணர்ச்சிகள்” பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் ஒரு வெற்றிப்படம் கொடுத்த பிறகும், 1 1/2 ஆண்டு வாய்ப்பே இல்லாமல் வீட்டில் இருந்தேன்!
“மனிதரில் இத்தனை நிறங்களா?” படத்துக்குப்பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வந்தன.
மாம்பழத்து வண்டு
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, பல வாய்ப்புகள் வந்தன. குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிலவற்றை மட்டுமே ஏற்றுக்கொண்டேன்.
சேது சுந்தரம், ஆர்.எம்.எஸ்.சுப்பையா ஆகியோர் தயாரிப்பில் “மாம்பழத்து வண்டு” என்று ஒரு படம் இயக்கினேன்.
வித்தியாசமான கதை அது. “துப்பறியும் கதை வெற்றி பெறும்” என்று நம்பி எடுத்தேன். படத்தில் கதாநாயகன் என்று யாருமில்லை. சத்யப்பிரியாதான் கதாநாயகி. வி.கோபாலகிருஷ்ணன், சரத்பாபு, ஜெய்கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மனோரமா, வீராசாமி, வசந்தா மணிபாரதி நடித்தனர். இவர்களோடு சதிஸ்ரீ என்கிற புதுமுகமும் அறிமுகமானார்.
நான் எதிர்பார்த்த அளவில் படம் வெற்றி பெறவில்லை. தோல்விப்படமாகி விட்டது.”