Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

May Day – Labour Holiday – Workers, Socialism

Posted by Snapjudge மேல் மே 1, 2007

உலகம் போற்றும் உழைப்பின் திருநாள்

உதயை மு. வீரையன்

அமைதியான உலகம், அன்பான உறவுகள், ஆனந்தமான வாழ்க்கை – இதுதான் பெரியோர்களின் கனவு; ஞானிகளின் ஆசை; முனிவர்களின் தவம். இது ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தில்தான் சாத்தியம்.

“எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வம் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை மாதோ’ என்றார் கம்பர். ஏழை, செல்வர் என்ற வேறுபாடு இல்லாத நாட்டை அவர் அப்படி கற்பனை செய்து பார்க்கிறார்; பாடுகிறார். அதைவிடவும் பெரிதாக வளர்ந்து நிற்கும் சாதி, சமய வேறுபாடுகளை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்து போவதால் புரட்சி வெடிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி இப்படி ஏற்பட்டதுதான். “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் தாரக மந்திரங்கள் பிறந்ததும் அப்போதுதான்.

ஆமைகளாய் – ஊமைகளாய் அடங்கிக் கிடக்கும் மக்கள் எத்தனை காலம்தான் இப்படி இருக்க முடியும்? எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு. “சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது பழமொழி. பொங்கி எழும் மக்களின் எழுச்சியே புதிய சமுதாயத்தின் வளர்ச்சி; புதிய உலகத்தின் முன்னேற்றம்; புதிய மனிதனின் பிறப்பு.

தனிமனிதனாக இருந்தாலும் சரி, ஊராக தேசமாக – உலகமாக இருந்தாலும் சரி, உழைக்காமல் உயர்வு கிடையாது. “உழைத்தால் உயர்வடையலாம்; சரி, யார் உழைத்தால் யார் உயர்வடையலாம்?’ இப்படி ஒரு கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. அறிவு உழைப்பாயினும் சரி, உடல் உழைப்பாயினும் சரி, அவை சுரண்டப்படுகின்றன. அதனால் போராட்டம், கலகம், வன்முறை என இது தொடர்கிறது.

1820}30களில் அமெரிக்க முதலாளிகள் தொழிலாளர்களை வாட்டி வதைத்து ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வேலை வாங்கினர். துயர் தாங்கொணாத சிகாகோ நகரின் ரொட்டித் தொழிலாளர்கள், 1834}ம் ஆண்டு ஒன்றுகூடி, ஒரு நாளைக்குப் பத்து மணி நேர வேலைக்குக் குரல் கொடுத்தனர். போராட்டத்தின் கடுமை தாளாமல், 1837}ல் பத்து மணி நேர வேலையென்பதை அப்போதைய அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

இதுவும் தொழிலாளர்களைத் திருப்தி செய்யப் போதுமானதாக இல்லாததால் 1886 மே முதல் நாளன்று அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் பெரும் எழுச்சியோடு தொடங்கின.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, லூயிஸ்வேலி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில் 1200-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்டன.

சிகாகோ நகரில் “ஹேமார்க்கெட்’ சதுக்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் எவ்வளவுபேர் கொல்லப்பட்டனர் என்பது இதுவரை வெளிவராத ரகசியக் கணக்கு. தொழிலாளர் ரத்தத்தால் “ஹேமார்க்கெட்’ சதுக்கமே குருதிக் குளமானது.

1887 நவம்பர் 11 அன்று தொழிலாளர் சங்கத் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிஸ்ஸர் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் தூக்கிலிடுவதற்கு ஒருநாள் முன்னதாக 21 வயதேயான இளைஞர் லூயிஸ் லிங் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சி உலகத்தையே குலுக்கியது.

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமுமே இன்றைக்கு மேதினமாக – உழைப்பாளர் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்ததாக தொழிலாளர் போராட்டங்கள் அமைந்தன.

கப்பலோட்டிய தமிழன் வ.உ . சிதம்பரனார் இதில் பெரும் பங்கு கொண்டார். 1908 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற “கோரல் மில்’ தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தது.

1918 ஏப்ரல் 27 அன்று “மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும்.

இதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர் ஆகியோர் செயல்பட்டனர்.

1923 மே முதல்நாள் – இந்தியாவிலேயே முதன்முதலில் மேதினத்தைக் கொண்டாடிய பெருமை சிங்காரவேலரையே சேரும். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதுவே உழைப்பாளர் வெற்றி பெற்ற உழைப்பின் வரலாறு. “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்பதே எக்காலத்தும் விடையாகும்.

(இன்று மேதினம்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: