கடற்படைத் தளம் தாக்கியழிப்பு – புலிகள்
இலங்கையின் வடக்கே யாழ் குடாகடலில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் இருதரப்பு எறிகணை வீச்சுத் தாக்குதல்களில், 5 பொதுமக்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வடக்கே யாழ் குடாக்கடலின் சிறுத்தீவில் அமைந்துள்ள கடற்படைத்தளம் ஒன்றினை இன்று அதிகாலை 1.25 மணியளவில் விடுதலைப் புலிகளின் கடற்புலி கமாண்டோ அணியினர் தாக்கி அழித்ததுடன், அங்கிருந்த ராடார் கருவி உட்பட பல இராணுவ தளபாடங்களையும் கைப்பற்றியிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்ட படையினரின் 3 உடல்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சிறுத்தீவு முகாம் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை உறுதிசெய்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், விடுதலைப் புலிகளின் தாக்குதலை, கடற்படையினரும், இராணுவத்தினரும் இணைந்து முறியடித்துள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது.
சிறுத்தீவு கடற்படைத்தளத்தினுள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் மீது படையினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த மோதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் கூறியிருக்கின்றது.
அத்துடன் இந்தச் சண்டைகளின்போது இரண்டு கடற்படையினரும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது,
இந்த அதிகாலை நேர மோதல்களின் போது இரு தரப்பினரும் சரமாரியாக எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதாகவும், இதனால் யாழ் நகரப்பகுதி, குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்ததாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எறிகணை தாக்குதல்களின்போது கொழும்புத்துறை, பாஷையூர், குருநகர் பகுதிகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.
எறிகணை குண்டுச்சத்தங்களினால் இந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் பாதுகாப்பு தேடி ஆலயங்களுக்குச் சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.