தேவகுமாரன் கொலை: யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் இடையே அச்சம் பரவியுள்ளது
![]() |
![]() |
யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்பு தேவகுமாரன் என்ற செய்தியாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நகரில் ஊடகவியலாளர்களிடையே அச்சமும் பதற்றமும் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் பத்திரிகையாளர்களின் தற்போதைய மனோநிலை குறித்தும் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வட இலங்கை பத்திரிகையாளர் சங்க செயலாளர் பரமேஸ்வரன், யார் அடுத்து இலக்குவைக்கப்படுவார் என்ற ஒரு அச்சவுணர்வு யாழ் பத்திரிகையாளர்களிடையே காணப்படுவதாக தெரிவித்தார்.
யாழ்ப்பாண பிரதேசம் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் நிறைந்த ஒரு இடம் என்பதை ‘எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்’ என்ற ஊடகச் சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்பு ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது என்பதையும அவர் குறிப்பிட்டார்.
தமிழோசையில் அவர் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு அழைப்பு வரவில்லை: தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தகவல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதல் முறையாக சனிக்கிழமை நடக்க இருக்கும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு, அந்தக் குழுவின் உறுப்பினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்களின் செவ்வியையும், அவரது புகாருக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க செயலர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களின் பதில்களையும் நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
ஏறாவூரில் முஸ்லிம்கள் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்
![]() |
![]() |
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி வெள்ளியன்று ஏறாவூரில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
ஜாமி-உல்-அக்பர் பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையை முடித்த பின்பு பள்ளிவாசல் முன்றலில் கூடிய நூற்றிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குறிப்பிட்ட தூரம் வரை பேரணியொன்றையும் நடத்தினார்கள்.
இப்பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டவர்கள் குறிப்பாக ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் விமர்ச்சிக்கும் வகையில் வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்ட முடிவில் காட்டுப்பள்ளி சந்தியில் குறிப்பிட்ட 4 முஸ்லிம் அரசியல்வாதிகளின் கொடும்பாவிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மூதூர் மீனவர்களைச் சந்தித்தார் ரவூஃப் ஹக்கீம்
![]() |
![]() |
ரவூஃப் ஹக்கீம் |
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூஃப் ஹக்கீம் இன்று மூதூருக்கான விஜயத்தினை மேற்கொண்டு அங்கு கடல் வலயத் தடையால் பாதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்தித்தப் பேசியுள்ளார்.
இந்த நிலையில் மீன்பிடித் தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கட்சியின் சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணத் தொகையினையும் அவர் மீனவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பிரதேச செயலக மட்டத்திலும் கடற்படை அதிகாரிகள் மற்றும்ஆளுநர் மட்டத்திலும் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கான அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள விருப்பதாகவும் அவர் கூறினார்.