Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 14th, 2008

Issues within the Tamilnadu Information and Public Relations Department

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

செய்தித் துறையில் “பனிப்போர்’

கே.வி. ஐயப்பன்

கோவை, பிப்.14: தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்குள் பணியாளர்களிடையே தற்போது ஒரு “பனிப்போர்’ துவங்கியுள்ளது.

நேரடியாக நியமனம் பெறுவோர், துறை மூலமாக பதவி உயர்வுக்கு வருவோர் ஆகியோரிடையே பதவி உயர்வு தொடர்பாக தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆட்சியில் இருக்கும் அரசின் திட்டங்களை பறைசாற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டன்க்ஷப்ண்ஸ்ரீண்ற்ஹ் ஞச்ச்ண்ஸ்ரீங் என இருந்த இத்துறை கருணாநிதி முதல்வரான பின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையாக மாறியது.

பிற மாநிலங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் இத் துறைக்கான அலுவலர்கள் பதவிக்கு வருகின்றனர். பதவி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வும் பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இந்நிலை இல்லை என்பது இத் துறையில் பணியாற்றுவோரின் மனக்குறை.

இத் துறையில் கணக்கர், மேல்நிலைக் கணக்கர், வரவேற்பாளர், காப்பாளர், திரைப்படக் கருவி இயக்குபவர் ஆகிய பதவிகளில் இருந்து பதவி உயர்வு மூலம் செய்தி, மற்றும் விளம்பரப் பிரிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

அரசாணை (நிலை) எண் 2778 பொதுத் துறை நாள் 18-12-1950-ன்படி பதவி உயர்வு மூலம் இப் பணிகள் நிரப்பப்படுகின்றன. இப் பணியிடத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது, அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு ஆகியவற்றில் சிலவற்றை தளர்த்தி பணி நியமனம் செய்வதால் வரவேற்பாளர், கணக்கர், திரைப்படக் கருவி இயக்குநர் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், நிர்வாகத் தீர்ப்பாயத்தை ஒரு சிலர் அணுகினர். இத் தீர்ப்பாயம் 2:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்க தனது தீர்ப்பில் தெரிவித்தது. ஆனால், 1:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்கியது துறை. இதனால், பதவி உயர்வு மூலமாகவும், நேரடி நியமனம் மூலமாகவும் 1:1 என்ற விகிதத்தில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பொது விதிகளின்படி விகிதாசாரம் பின்பற்றப்படுவதில்லை என்பது பதவி உயர்வு கிடைக்காதோரின் புலம்பல். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பதவி உயர்வின்போது உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஆக தற்போது பணிபுரிவோரை நுழைவுப் பதவியின் (உய்ற்ழ்ஹ் கங்ஸ்ங்ப்) அடிப்படையில் இரண்டாகப் பிரித்து 5:1 என்ற விகிதத்தில் தற்போதுள்ள விதிகளுக்கு திருத்தம் செய்ய கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நேரடி நியமனம் மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டோருக்கு சாதகமாக இத் திருத்தம் செய்யப்பட்டால் அது தீர்ப்பாணையத்தில் உத்தரவுக்கு முரணாக அமையும். துறையின் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று கூறி தமிழ் வளர்ச்சி, அறநிலைய மற்றும் செய்தித்துறைக்கு ஊழியர்கள் மனு செய்துள்ளனர். நடைமுறையில் உள்ள விதிகளில் திருத்தம் செய்யும்போது தற்போது பணியில் இருப்போர் அதனால் பாதிக்கப்படாதவாறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது அரசின் கொள்கை.

விதிகளுக்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் முரணாக திருத்தம் மேற்கொள்ள ஒரு பிரிவு வரிந்துகட்டுவதால் பணியாளர்களிடையே வலுத்துள்ளது பனிப்போர். பணியாளர் சீர்திருத்தத் துறை இக் கோரிக்கைக்கு எதிராக குறிப்பு எழுதியுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது இக் கோப்பு சட்டத்துறையின் ஆய்வில் உள்ளது. பணியாளர்கள் மனம் புண்படாதவாறு அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல முடிவை ஆளும் அரசுதான் எடுக்கவேண்டும்.

Posted in Department, Departments, Dept, Govt, Information, Issues, Jobs, News, PR, Problems, seniority | Leave a Comment »

Tamil Nadu State Library: Procuring new books – Fund Allocation

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள்: விரயமாகும் அரசு நிதி

ப. இசக்கி

திருநெல்வேலி, பிப். 11: தமிழ்நாட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படும் நூலகங்களால் அரசின் நிதி பெருமளவு விரயமாகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

பொது நூலகத் துறையின் நூலகங்கள் உள்ள ஊராட்சிகளிலும் இந்த நூலகங்கள் கட்டப்படுவதால் ஒரே ஊராட்சியில் இரண்டு நூலகங்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12,618 கிராம ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவு செய்யும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,525 கிராமங்களை தேர்வு செய்து தலா ரூ. 20 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கான்கிரீட் சாலை, தெரு விளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள் என பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.

அதில் நூலகம் அமைக்கும் பணியும் ஒன்று.

ஒவ்வொரு ஊராட்சியிலும் நூலகக் கட்டடம், இருக்கைகள், புத்தகங்கள் என்ற வகைக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 2.3 லட்சம் செலவு செய்யப்பட்டது. நிகழ் நிதியாண்டில் இந்தத் தொகை ரூ. 3.33 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நூலகக் கட்டடம் கட்ட ரூ. 2.68 லட்சமும், இருக்கைகள், அலமாரிகள் வாங்க ரூ. 30 ஆயிரமும், புத்தகங்கள் வாங்க ரூ. 35 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஊரக நூலகங்கள்:

இந்தத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 425 ஊராட்சிகளில் கடந்த நிதியாண்டில் 82 ஊராட்சிகளும், நிகழ் நிதியாண்டில் 82 ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 164 ஊராட்சிகளிலும் நூலகக் கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 25 ஊராட்சிகளில் ஏற்கெனவே பொது நூலகத் துறையின் கீழ் கிராமப்புற நூலகம் அல்லது பகுதிநேர நூலகம் செயல்பட்டு வருகிறது.

எனவே, அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முடிவடையும் போது மொத்தமுள்ள 425 ஊராட்சிகளில் கிராமப்புற நூலகம் மற்றும் பகுதிநேர நூலகம் உள்ள 78 ஊராட்சிகளில் இரண்டு நூலகங்கள் இருக்கும்.

இதேபோல, தமிழ்நாட்டில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது நூலகத் துறையின் நூலகமும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகமும் அமையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே ஊராட்சியில் இரண்டு நூலகங்கள் அமைவதைத் தவிர்க்கும் வகையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகங்களை அமைக்கும் பணியை பொது நூலகத் துறையிடம் ஒப்படைக்க அத்துறையிடம் அரசு கருத்து கேட்டது. ஏற்கெனவே பொருளாதார ரீதியாக நலிவடைந்து வரும் நூலகத் துறையானது, ஒவ்வொரு நூலகத்தையும் பராமரிக்க ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகும் என்பதால் அந்த சுமையை தாங்க இயலாது எனக் கருதி மறுத்துவிட்டது.

எனினும், ஓரளவு நல்ல அடிப்படை வசதிகளுடன் இயங்கி வரும் பொது நூலகத் துறையின் நூலகங்கள் உள்ள இடங்களில் மட்டுமாவது அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்திற்கான நிதியை அளித்து அவற்றை வலுப்படுத்தலாம் என நூலகத் துறையினர் வலியுறுத்தினர்.

அதன்படி, கடந்த நிதியாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக நிதியானது பொது நூலகத் துறை நூலகத்திற்கு கட்டடமாகவோ அல்லது இதர மேம்பாட்டு பணிகளுக்காகவோ பயன்படுத்தப்பட்டது. நிகழ் நிதியாண்டில் அது நிறுத்தப்பட்டுவிட்டது.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சித் தலைவரின் 29 கடமைகளில் ஒன்று நூலகம் பராமரிக்க வேண்டும் என்பதும் அடங்கும். ஆதலால், அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தை தனியே அமைத்து விடுவது என ஊரக வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது. இதனால் ஒரே ஊராட்சியில் 2 நூலகங்கள் அமைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் பெரிய பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதோடு அரசு நிதி விரயமாவதுதான் மிச்சம் என்கின்றனர் பொது நூலகத் துறையினர்.

புத்தகங்கள் இல்லை:

இவ்வாறு அரசு நிதியில் ஒரு பகுதியை விரயமாக்கி கட்டப்படும் இந்த புதிய நூலகங்களுக்கு இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

கட்டடம், இருக்கைகள் மட்டும் உள்ள நிலையில் மாதம் ரூ. 750 ஊதியத்தில் பணியாளரும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த முறை திமுக ஆட்சியில் அனைத்து ஊராட்சிகளிலும் தலா ரூ. 5 ஆயிரம் செலவில் புத்தகம் வாங்கப்பட்டு “அய்யன் திருவள்ளுவர் படிப்பகம்’ தொடங்கப்பட்டது. தற்போது பெரும்பாலான கிராமங்களில் அந்த படிப்பகத்தின் அடையாளமே இல்லை. அவற்றின் புத்தகங்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களுக்கு மாற்றப்படுகிறது. எனவே, அய்யன் திருவள்ளுவர் படிப்பகங்களும் விரைவில் அடியோடு மூடப்படும்.

இவ்வாறு ஒன்றை அழித்து மற்றொன்றை உருவாக்கி பொதுமக்கள் வரிப்பணத்தை விரயமாக்குவதைவிட ஏற்கெனவே இருக்கும் பொது நூலகத்தை வலுப்படுத்தினால் நூலகத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்பதே சமூக ஆர்வலர்களின் பொதுவான கருத்து.

——————————————————————————————————

சிறுவர் இலக்கியம் புறக்கணிப்பா?

சென்னை, பிப். 18: தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் சிறுவர் இலக்கிய நூல்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுத்தாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நூல்கள் வாங்குவது தொடர்பான நடைமுறையில் தெளிவு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மாநிலம், மாவட்டம் என பல்வேறு நிலைகளில் 3 ஆயிரத்து 700-க்கும் அதிகமான நூலகங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் பொது நூலகத்துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

இந்த நூலகங்களுக்கு தேவையான நூல்களை தேர்வு செய்து வாங்கும் பொறுப்பும் பொது நூலகத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை ஆண்டுக்கு ரூ. 2 கோடி வரை நிதி உதவி அளிக்கிறது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நூலக வரியாக வசூலிக்கப்படும் நிதியும் மாநில அரசு மூலம் பொது நூலகத்துறைக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு கிடைக்கும் நிதி ஆதாரங்களை பயன்படுத்தி பொது நூலகத்துறை, நூலகங்களின் கட்டமைப்பு வசதி மற்றும் புதிய நூல்களை வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.

நூல்கள் வாங்குதல்: தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறுவர் இலக்கியம் முதல் ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு வரை பல்வேறு பிரிவுகளில் ஏராளமான நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன.

இந்த நூல்களை அந்தந்த நிதி ஆண்டின் இறுதியில் பதிப்பாளர்கள் பொது நூலகத்துறைக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேசிய நூலகங்களுக்கும் நூல்களின் படிகள் அனுப்பப்பட வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 64 பக்கங்களில், 300 படிகள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு நூலகத்திற்கென நூல்களை வாங்குவதால்தான் பல சிறிய பதிப்பகங்கள் தொடர்ந்து நூல்களைப் பதிப்பிக்கவும், உயிர்வாழவும் முடிகிறது.

எழுத்தாளர்கள் புகார்: அரசு சார்பில் பொது நூலகத்துறை நூல்கள் வாங்கும் நடைமுறைகள், தெளிவில்லாமல் இருப்பதாக எழுத்தாளர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

கடந்த 2006-ம் ஆண்டில் வெளியான நூல்கள் 2007 பிப்ரவரியில் பதிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட அளவு நூல்கள் தேர்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டன.

பல்வேறு துறை நூல்களை வாங்கிய நூலகத்துறை சிறுவர் நூல்களை வாங்கவில்லை என அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சுடர் முருகையா கூறியது:

“”அப்துல் கலாம் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாட்டின் எதிர்காலம் குறித்த தங்களது எண்ணங்களில் சிறுவர்களையே மையப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட வருங்கால தலைமுறையினரின் எண்ணங்களை வலுவாக்க உருவாக்கப்படும் சிறுவர் நூல்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமானது.

ஆனால், பொது நூலகத்துறை கடந்த ஆண்டு சிறுவர் நூல்களை வாங்குவதை தவிர்த்துவிட்டது. சிறுவர் நூல்கள் பொது நூலகங்களுக்கு வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

இது எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூல்களை கோரும் போது இன்ன இன்ன விதிகளின்படி நூல்களை அனுப்ப வேண்டும் என பொது நூலகத்துறை அதற்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓர் ஆண்டில் எந்தெந்த துறைகள் தொடர்பான நூல்களை வாங்கப்போகிறோம் என்பதைத் தெளிவாக அறிவித்தால் அந்தந்த துறைகள் தொடர்பான நூல்களை மட்டும் பதிப்பகத்தினர் அனுப்புவார்கள். இவ்வாறு இல்லாமல், அனைத்து துறை சார்ந்த நூல்களையும் பெற்றுக் கொண்டு துறைகள் தொடர்பான எந்தவித வரையறையும் இல்லாமல் நூல்களை தேர்வு செய்வது இது போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.

பொது நூலகத்துறைக்கு அனுப்பும் நூல்களில் சில நூல்கள் தேர்வு செய்யப்படாததுக்கான காரணங்களைத் தெரிவிக்க முடியாது என்றும் அதுபற்றி கேட்கவும் கூடாது என்றும் பொது நூலகத்துறை தெரிவிப்பது பிரச்னையை மேலும் வளர்ப்பதாக உள்ளது.

பொது நூலகத்துறையின் இத்தகைய நடவடிக்கை சிறுவர் இலக்கியம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுத்தாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது” என்றார் சுடர் முருகையா.

அதிகாரிகள் பதில்: மக்கள் படிப்பதற்கு ஏற்ற தரமான நூல்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நூலகங்களுக்கு வாங்குவதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என பொது நூலகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

துறைவாரியாக பிரித்து நூல்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்றாலும், அனைத்து தரப்பு மக்களின் தேவைக்கு ஏற்ற நூல்களே தேர்வு செய்யப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட எந்த துறையையும் பிரித்துப் பார்ப்பது இல்லை. என்றாலும் நாங்கள் நூலகங்களுக்காக வாங்குவதற்குத் தேர்ந்தெடுத்த நூல்களில் சிறுவர் நூல்களும் இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in Allocation, Anna, Books, Citizen, Civil body, Corporation, Economy, Education, Fund, Funds, Library, Maintenance, Municipality, Panchayat, Panchayath, Read, State, Students, Tamil Nadu, TamilNadu, Teachers, TN, Upgrades | Leave a Comment »

ADMK Party general council Conference: Jayalalithaa announces formation of youth brigades

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

பொதுக் குழுவா..?மாநாடா..?

அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. உடன், (வலமிருந்து) கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் இ.மதுசூதனன், அரசியல் ஆலோசகர் பொன்னையன், எம்ஜிஆர் மன்றச் செயலாளர் டி.ஜெயக்குமார்.

சென்னை, பிப். 13: சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – செயற்குழுக் கூட்டம், பிரம்மாண்ட மாநாட்டைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது பேச்சிலேயே இதைக் குறிப்பிட்டுப் பேசினார். “கூட்டத்துக்கு வரும் வழியெங்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த போது இது மாநாடா? அல்லது பொதுக் குழுவா? என்ற வியப்பை ஏற்படுத்தியது’ என்றார்.

உண்மை தான். கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் செல்லும் வழியெங்கும் வாழைமரத் தோரணங்கள், டிஜிட்டல் போர்டுகள், கட்சிக் கொடி என பூந்தமல்லி நெடுஞ்சாலையே விழாக் கோலம் பூண்டிருந்தது.

மாநாடு நடைபெற்ற திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காலை 10.10 மணிக்கு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ஜெயலலிதா வந்தார். அங்கு அவருக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கேரளப் பெண்கள் போல இளமஞ்சள் நிற சேலை அணிந்த இளம் பெண்கள் வரிசையாக நின்று வரவேற்றனர்.

தாரை, தப்பட்டைகள் முழங்க, ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற பலூன்கள் வானில் ஏராளமாக பறக்க விடப்பட்டன.

ADMKசென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் பொதுக் குழு-செயற்குழுக் கூட்டத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர்  ஜெயலலிதாவை வரவேற்கத் தயாராக நிற்கும் குதிரைப் படையினர்.

50-க்கும் மேற்பட்ட குதிரைகள் அணிவகுத்து நின்று ஒருபுறம் வரவேற்பு கொடுக்க, மறுபுறம் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற்றன. இதுதவிர, மிக்கி மவுஸ், டொனால்ட் டக் கார்ட்டூன் சித்திரங்கள் போன்ற உடைகளை அணிந்த கலைஞர்களும் அரங்கத்தின் முன்பகுதியில் நின்று வரவேற்றனர்.

கொண்டாட்டத்தின் முன்னோட்டமோ? வரும் பிப். 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. ஆனால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வைத்த பேனர்களும், கட் – அவுட்களும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன. JJ Jayalalithaகொக்கிலி கட்டை ஆட்டம் ஆடி, ஜெயலலிதாவை வரவேற்ற அதிமுக தொண்டர்கள்.

கூட்டத்துக்குப் பின், கட்சியினரின் பசியைப் போக்க உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சைவம், அசைவ உணவுகள் பரிமாற தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

மதுரவாயல் செல்லும் சாலை ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலால் திணறும். இதில், புதன்கிழமை மாநாடு போல நடைபெற்ற அதிமுக செயற்குழு – பொதுக் குழுக் கூட்டத்துக்கு அதிகம் பேர் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலை நெடுங்கிலும் கட்சியின் தொண்டர்கள் வலம் வந்தபடி இருந்தனர். கூட்டம் முடிந்த பின்பு, பஸ், ஆட்டோ கிடைக்காதவர்கள் பல கிலோ மீட்டர் நடந்து சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தை அடைந்தனர். Elephants Conference
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.

போக்குவரத்து நெரிசல்:

கோயம்பேடு- மதுரவாயல்- வானகரம் செல்லும் சாலையில் காலை 8.45 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், இச் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்தப் போக்குவரத்து நெரிசலால் நீண்ட தூரத்துக்குச் சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

இதே போல பொதுக்குழுக் கூட்டம் முடிந்தபின் ஜெயலலிதா புறப்பட்டுச் சென்ற பின்னரும் நீண்ட நேரம் வாகன நெரிசல் நீடித்தது.

சசிகலா வருகை:

ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் இக் கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக் குழுக் கூட்டம் செல்லும் வழியில் போலீஸôரின் கெடுபிடி ஏதும் இல்லை.

செயற்குழு-பொதுக்குழு கூட்டத்துக்கு வராமல் பரபரப்பை  ஏற்படுத்திய சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி.சேகர்,  திடீரென கூட்டத்துக்கு வந்து பந்தியில் அமர்ந்து உணவருந்தினார்.

வந்தார், எஸ்.வி. சேகர்!

சென்னை வானகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டத்துக்கு எஸ்.வி. சேகர் தாமதமாக வந்து சேர்ந்தார்.

முன்னதாக இக் கூட்டத்துக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று கூறி, மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியை எஸ்.வி. சேகர் ராஜிநாமா செய்ய உள்ளதாக அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இதுகுறித்து எஸ்.வி. சேகர் பின்னர் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று ஜெயலலிதா புறப்படுவதற்கு சற்று முன்பு, அவரை எஸ்வி சேகர் சந்தித்துப் பேசினார்.

இதன்பின் கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து, அமர்ந்து எஸ்வி சேகர் மதிய உணவு சாப்பிட்டார்.

Posted in ADMK, AIADMK, brigades, Conference, Council, DMK, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, Jeyalalithaa, Jeyam, Opposition, Party, Sekar, Women, Youth | Leave a Comment »

Ramanathapuram Government Hospital Ambulance: Not useful for emergency medical services

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

அவசரத் தேவைக்கு பயன்படாத ஆம்புலன்ஸ் வாகனங்கள்: எஸ்.வி.எஸ். ஜெகஜோதி

ராமநாதபுரம், பிப். 13: ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும் சில சமயங்களில் அவற்றை பயன்படுத்த அவ்வாகன ஓட்டுநர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் அவசரத் தேவைக்கு அவற்றை பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றிலும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்துகள் நிகழ்ந்தால் தகவல் தெரிவிப்பதற்கென்றே ஆம்புலன்ஸ் வாகன கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதன் தொலைபேசி எண் 1056. இவ்வாகனத்தில் ஓட்டுநர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.

விபத்துகள் எங்கு நேரிட்டாலும் தகவல் வந்தவுடன் அங்கு உடனடியாகச் சென்று அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்கு கட்டணம் இல்லை. தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்காக வெளியூர்களுக்குச் செல்ல ஒரு கி.மீ.க்கு ரூ. 5 வீதம் கட்டணம் செலுத்தி நோயாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இம்மாதம் 9 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே டிராக்டர் மீது ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு மீன் ஏற்றிச்சென்ற மினிலாரி நேருக்கு நேராக மோதியது. இச்சம்பவத்தில் டிராக்டர் டிரைவர் சக்தி (26) பலத்த காயமடைந்தார். சக்தியை காயம் அடைந்த இடத்திலிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவர காவல்துறையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வற்புறுத்தி அழைத்தும் ஓட்டுநர் வரமறுத்து விட்டார்.

பின்னர் டிராக்டரில் பயணம் செய்த பிறர் சக்தியை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது அவரது நிலைமை மேலும் கவலைக்கிடமானது.

பெட்ரோல் செலவு அதிகமாகிறது என்றும் விபத்து வழக்கில் காவல்துறையினர் எங்களையும் சாட்சியாக சேர்ப்பதால் வரமுடியாது எனவும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி கூறியதாவது:

விபத்து நடந்த இடத்திலிருந்து காயம் அடைந்தோரை தூக்கி வர கட்டணம் இல்லை. ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திற்கு வரவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1056-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கும் கட்டணம் இல்லை என்றார்.

பொதுமக்கள் கண்களில் படாதவாறு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வாகனங்களை மறைத்து வைப்பது, மேல் சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு அழைத்து செல்லும் போது கூடுதல் கட்டணம் கேட்பது, பெட்ரோல் செலவை காரணம் காட்டி விபத்து நடந்த இடங்களுக்கு வராமல் மறுப்பது, வேறு ஏதேனும் ஒரு சாதாரண பணிக்குச் செல்லும் போது கூட வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டே போவது போன்றவற்றை ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இத்தவறுகள் திருத்தப்பட்டால் மேலும் பல உயிர்களை காப்பாற்றவும் பேருதவியாக இருக்கும்.

Posted in 100, 9/11, Accidents, Ambulance, Citizen, Docs, doctors, Emergency, EMS, GH, Government, Health, Healthcare, Highways, Hospital, infrastructure, medical, patients, Ramanadapuram, Ramanadhapuram, Ramnad, Roads, Services | Leave a Comment »