Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Read’ Category

Book reading habits for Kids – Children, Literature, Knowledge, Entertainment

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்

தஞ்சாவூர்க்கவிராயர்

புத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்லுகிறோம்.

புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்கிறார் ஒரு புதுக்கவிஞர்.

குழந்தைகள் படிக்கிற புத்தகங்களைப் பார்க்கும்போது அவை எங்கே குழந்தைகளைக் கிழித்து விடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது.

மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்கு மேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம். இது தவறு. குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள்.

குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. இன்னும் களங்கப்படாத மனசு அல்லவா குழந்தைகள் மனசு?

குழந்தைகள் பார்வையில் தென்படும் உலகம் குற்றமற்றது. அழகு நிரம்பியது. அதனால்தான் குழந்தை எதைப் பார்த்தாலும் சிரிக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும். “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…’ அப்படியே ஒரு குழந்தை எழுதிய மாதிரியே அல்லவா இருக்கிறது.

குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழதாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.

நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள் மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!

சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விட வேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றும் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மேசைமீது ஒரு காமிக்ஸ் புத்தகம் இருந்தது. “பையனுக்கா?’ என்றேன்.

“எனக்குத்தான்’ என்றார் சிரித்தபடி.

“அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட நான் காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிப்பேன்’ என்றார்.

குழந்தை வளர வளர குழந்தமை தொலைந்து போகிறது. “இன்னும் என்ன குழந்தையா நீ?’ என்று கேட்டு கொஞ்சநஞ்சம் பாக்கியிருக்கும் குழந்தை மனத்தையும் கருகச் செய்து விடுகிறோம்.

குழந்தையின் கேள்விகள் அற்புதமானவை. அவற்றுக்குப் பதில் சொல்லும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம்.

புகைவண்டிப் பயணத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் குழந்தையை “சும்மா இரு, சும்மா இரு’ என்று அதட்டிக் கொண்டே வந்தார்.

“குழந்தை பாவம். என்ன வேண்டுமாம்?’ என்று கேட்டேன்.

“என்னவோ அசட்டுத்தனமாக தொணதொணக்கிறான். எரிச்சலாக வருகிறது’ என்றார்.

அவனை என் அருகே அழைத்து, “சொல்லு, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.

“மாமா, ரயில் என்ன சாப்பிடும்?’ என்று கேட்டான்.

இதுவா அசட்டுத்தனமான கேள்வி? அழகான கவிதை அல்லவா இது? ரயிலுக்கு உயிர் உண்டு. அதுவும் மனிதர்களைப் போலவே நகர்கிறது. மூச்சு விடுகிறது. கத்துகிறது என்பதால்தானே இந்தக் கேள்வியை குழந்தை கேட்கிறது?

நாம்தான் குழந்தைகளை உதாசீனப்படுத்துகிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பெரிய மனிதர்களாகவே நடத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:

லண்டனில் ஒரு குழந்தைகள் பூங்கா. அங்கே வாத்துகளோடு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் விரலை ஒரு வாத்து கடித்துவிட்டது. காயம் ஒன்றும் பலமில்லை. பூங்கா நிர்வாகமே குழந்தையின் விரலுக்கு மருந்து போட்டுவிட்டது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே இருந்த வாத்துகள் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மகாராணியாரின் பெயரில் உள்ள கருணை நிதியிலிருந்து பராமரிக்கப்படுவதாக ஒரு குறிப்பு இருந்தது.

குழந்தை உடனே இங்கிலாந்து மகாராணியாருக்கு ஒரு கடிதம் எழுதியது: “நீங்கள் வளர்க்கிற வாத்து என்னைக் கடித்துவிட்டது. விரலில் காயம்’ என்று எழுதியது.

கடிதம் மகாராணியாரின் பார்வைக்குப் போயிற்று. அவர் உடனே பதில் எழுதினார்:

“குழந்தாய்! உன் கடிதம் கிடைத்தது!

நான் வளர்க்கும் வாத்து உன்னை விரலில் கடித்து விட்டதற்காக வருந்துகிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். காயம் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன்.

உன் பிரிமுள்ள,

விக்டோரியா.

நம் நாட்டில் இப்படிப்பட்ட கடிதம் எங்கே போயிருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை அல்லவா?

குழந்தைகளை மதிக்கிற, குழந்தைகளைப் புரிந்துகொள்கிற, குழந்தமையைப் பாதுகாக்கிற பொறுப்புணர்ச்சி சமுதாயம் முழுவதும் உண்டாக வேண்டும். அப்போதுதான் அசலான குழந்தை இலக்கியம் இங்கே சாத்தியப்படும். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட குழந்தை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டுவதில்லை.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாத சமூகம் என்பது தண்ணீரில்லாத நாற்றங்காலுக்குச் சமம்.

பள்ளிக்கூடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்றும் வேலை அங்கே மும்முரமாக நடக்கிறது. குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன.

குழந்தைகளை நூலகங்களில் பார்க்கவே முடிவதில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சியும் கணினி விளையாட்டும் குழந்தைகளை கூடத்தை விட்டு வெளியேறாதபடி கட்டிப் போட்டுவிட்டன.

அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தக அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. புத்தக வாசிப்புக்காக குழந்தைகள் ஏங்குவதையும், தொலைக்காட்சி தோற்றுப் போய்விட்டதையும் காண முடிந்தது.

தஞ்சாவூரில் அனன்யா பதிப்பக அதிபர் அருள் என்பவரும் இரா. சேதுராமனும் சேர்ந்து ஓசைப்படாமல் ஒரு மாபெரும் குழந்தைகள் கதைக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறார்கள்~விழுதுகள் என்ற பெயரில்.

குழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இக் களஞ்சியம் என்பது தான் இதன் சிறப்பு. பாட்டி வடை சுட்ட கதையை ஒரு குழந்தை எப்படிச் சொல்கிறது பாருங்கள்.

“ஒரு ஊரில் காக்கா இருந்தது. அப்போது காக்கா வடை சுட்டது. அந்தக் காக்கா வடை சுட்டு முடித்ததும் காக்காக்கள் பறவைகள் காக்காகிட்ட வந்தது. காக்காவும் பறவையும் சேர்ந்து சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் சேர்ந்து விளையாடின. பிறகு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்தனர். முகம் கழுவினர். எல்லோரும் சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் வீட்டுக்குச் சென்றார்கள்.’

இது மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி எழுதிய கதை. மற்றொரு கதையில் கரடியும் யானையும் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அங்கு விருந்தாளியாக சிங்கம் வருகிறது. ஒரு கதையில் பால் வேண்டும் என்று பூனையிடம் எலி கெஞ்சுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து புறப்பட்டு வரும் புதிய காற்று அப்பப்பா என்ன ஒரு வாசம். எப்பேர்ப்பட்ட கற்பனை.

உலகம் பூராவும் ஹாரிபாட்டரின் கதைப் புத்தகங்கள் பரபரப்பாக விற்கப்பட்டதன் காரணம் என்ன? குழந்தைகளின் மனசைப் புரிந்துகொண்டு எழுதியதுதான் காரணம்!

தமிழ்நாட்டில் வசதி படைத்த குழந்தைகள் மட்டும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிப் படித்து மகிழ்ந்தார்கள். “ஏழைக் குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்?’

இப்போதுதானே அவர்களை ஓட்டல்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் கல்குவாரிகளிடமிருந்தும் மீட்டிருக்கிறோம்? அவர்களின் கைகளிலிருந்து மேசை துடைக்கும் துணியையும், ஸ்பானரையும், பெட்ரோல் பிடிக்கும் குழாய்களையும் அப்புறப்படுத்தி நல்ல புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.

அழகான ஆச்சரியமான புத்தகங்கள்.

குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்!

(இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்)

Posted in Books, Children, Comics, Entertainment, family, Fiction, Habits, Intelligence, Kids, Knowledge, Library, Listen, Literature, publications, Publishers, Read, Story | 1 Comment »

Tamil Nadu State Library: Procuring new books – Fund Allocation

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள்: விரயமாகும் அரசு நிதி

ப. இசக்கி

திருநெல்வேலி, பிப். 11: தமிழ்நாட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படும் நூலகங்களால் அரசின் நிதி பெருமளவு விரயமாகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

பொது நூலகத் துறையின் நூலகங்கள் உள்ள ஊராட்சிகளிலும் இந்த நூலகங்கள் கட்டப்படுவதால் ஒரே ஊராட்சியில் இரண்டு நூலகங்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12,618 கிராம ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவு செய்யும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,525 கிராமங்களை தேர்வு செய்து தலா ரூ. 20 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கான்கிரீட் சாலை, தெரு விளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள் என பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.

அதில் நூலகம் அமைக்கும் பணியும் ஒன்று.

ஒவ்வொரு ஊராட்சியிலும் நூலகக் கட்டடம், இருக்கைகள், புத்தகங்கள் என்ற வகைக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 2.3 லட்சம் செலவு செய்யப்பட்டது. நிகழ் நிதியாண்டில் இந்தத் தொகை ரூ. 3.33 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நூலகக் கட்டடம் கட்ட ரூ. 2.68 லட்சமும், இருக்கைகள், அலமாரிகள் வாங்க ரூ. 30 ஆயிரமும், புத்தகங்கள் வாங்க ரூ. 35 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஊரக நூலகங்கள்:

இந்தத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 425 ஊராட்சிகளில் கடந்த நிதியாண்டில் 82 ஊராட்சிகளும், நிகழ் நிதியாண்டில் 82 ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 164 ஊராட்சிகளிலும் நூலகக் கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 25 ஊராட்சிகளில் ஏற்கெனவே பொது நூலகத் துறையின் கீழ் கிராமப்புற நூலகம் அல்லது பகுதிநேர நூலகம் செயல்பட்டு வருகிறது.

எனவே, அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முடிவடையும் போது மொத்தமுள்ள 425 ஊராட்சிகளில் கிராமப்புற நூலகம் மற்றும் பகுதிநேர நூலகம் உள்ள 78 ஊராட்சிகளில் இரண்டு நூலகங்கள் இருக்கும்.

இதேபோல, தமிழ்நாட்டில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது நூலகத் துறையின் நூலகமும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகமும் அமையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே ஊராட்சியில் இரண்டு நூலகங்கள் அமைவதைத் தவிர்க்கும் வகையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகங்களை அமைக்கும் பணியை பொது நூலகத் துறையிடம் ஒப்படைக்க அத்துறையிடம் அரசு கருத்து கேட்டது. ஏற்கெனவே பொருளாதார ரீதியாக நலிவடைந்து வரும் நூலகத் துறையானது, ஒவ்வொரு நூலகத்தையும் பராமரிக்க ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகும் என்பதால் அந்த சுமையை தாங்க இயலாது எனக் கருதி மறுத்துவிட்டது.

எனினும், ஓரளவு நல்ல அடிப்படை வசதிகளுடன் இயங்கி வரும் பொது நூலகத் துறையின் நூலகங்கள் உள்ள இடங்களில் மட்டுமாவது அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்திற்கான நிதியை அளித்து அவற்றை வலுப்படுத்தலாம் என நூலகத் துறையினர் வலியுறுத்தினர்.

அதன்படி, கடந்த நிதியாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக நிதியானது பொது நூலகத் துறை நூலகத்திற்கு கட்டடமாகவோ அல்லது இதர மேம்பாட்டு பணிகளுக்காகவோ பயன்படுத்தப்பட்டது. நிகழ் நிதியாண்டில் அது நிறுத்தப்பட்டுவிட்டது.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சித் தலைவரின் 29 கடமைகளில் ஒன்று நூலகம் பராமரிக்க வேண்டும் என்பதும் அடங்கும். ஆதலால், அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தை தனியே அமைத்து விடுவது என ஊரக வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது. இதனால் ஒரே ஊராட்சியில் 2 நூலகங்கள் அமைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் பெரிய பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதோடு அரசு நிதி விரயமாவதுதான் மிச்சம் என்கின்றனர் பொது நூலகத் துறையினர்.

புத்தகங்கள் இல்லை:

இவ்வாறு அரசு நிதியில் ஒரு பகுதியை விரயமாக்கி கட்டப்படும் இந்த புதிய நூலகங்களுக்கு இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

கட்டடம், இருக்கைகள் மட்டும் உள்ள நிலையில் மாதம் ரூ. 750 ஊதியத்தில் பணியாளரும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த முறை திமுக ஆட்சியில் அனைத்து ஊராட்சிகளிலும் தலா ரூ. 5 ஆயிரம் செலவில் புத்தகம் வாங்கப்பட்டு “அய்யன் திருவள்ளுவர் படிப்பகம்’ தொடங்கப்பட்டது. தற்போது பெரும்பாலான கிராமங்களில் அந்த படிப்பகத்தின் அடையாளமே இல்லை. அவற்றின் புத்தகங்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களுக்கு மாற்றப்படுகிறது. எனவே, அய்யன் திருவள்ளுவர் படிப்பகங்களும் விரைவில் அடியோடு மூடப்படும்.

இவ்வாறு ஒன்றை அழித்து மற்றொன்றை உருவாக்கி பொதுமக்கள் வரிப்பணத்தை விரயமாக்குவதைவிட ஏற்கெனவே இருக்கும் பொது நூலகத்தை வலுப்படுத்தினால் நூலகத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்பதே சமூக ஆர்வலர்களின் பொதுவான கருத்து.

——————————————————————————————————

சிறுவர் இலக்கியம் புறக்கணிப்பா?

சென்னை, பிப். 18: தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் சிறுவர் இலக்கிய நூல்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுத்தாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நூல்கள் வாங்குவது தொடர்பான நடைமுறையில் தெளிவு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மாநிலம், மாவட்டம் என பல்வேறு நிலைகளில் 3 ஆயிரத்து 700-க்கும் அதிகமான நூலகங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் பொது நூலகத்துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

இந்த நூலகங்களுக்கு தேவையான நூல்களை தேர்வு செய்து வாங்கும் பொறுப்பும் பொது நூலகத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை ஆண்டுக்கு ரூ. 2 கோடி வரை நிதி உதவி அளிக்கிறது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நூலக வரியாக வசூலிக்கப்படும் நிதியும் மாநில அரசு மூலம் பொது நூலகத்துறைக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு கிடைக்கும் நிதி ஆதாரங்களை பயன்படுத்தி பொது நூலகத்துறை, நூலகங்களின் கட்டமைப்பு வசதி மற்றும் புதிய நூல்களை வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.

நூல்கள் வாங்குதல்: தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறுவர் இலக்கியம் முதல் ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு வரை பல்வேறு பிரிவுகளில் ஏராளமான நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன.

இந்த நூல்களை அந்தந்த நிதி ஆண்டின் இறுதியில் பதிப்பாளர்கள் பொது நூலகத்துறைக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேசிய நூலகங்களுக்கும் நூல்களின் படிகள் அனுப்பப்பட வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 64 பக்கங்களில், 300 படிகள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு நூலகத்திற்கென நூல்களை வாங்குவதால்தான் பல சிறிய பதிப்பகங்கள் தொடர்ந்து நூல்களைப் பதிப்பிக்கவும், உயிர்வாழவும் முடிகிறது.

எழுத்தாளர்கள் புகார்: அரசு சார்பில் பொது நூலகத்துறை நூல்கள் வாங்கும் நடைமுறைகள், தெளிவில்லாமல் இருப்பதாக எழுத்தாளர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

கடந்த 2006-ம் ஆண்டில் வெளியான நூல்கள் 2007 பிப்ரவரியில் பதிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட அளவு நூல்கள் தேர்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டன.

பல்வேறு துறை நூல்களை வாங்கிய நூலகத்துறை சிறுவர் நூல்களை வாங்கவில்லை என அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சுடர் முருகையா கூறியது:

“”அப்துல் கலாம் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாட்டின் எதிர்காலம் குறித்த தங்களது எண்ணங்களில் சிறுவர்களையே மையப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட வருங்கால தலைமுறையினரின் எண்ணங்களை வலுவாக்க உருவாக்கப்படும் சிறுவர் நூல்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமானது.

ஆனால், பொது நூலகத்துறை கடந்த ஆண்டு சிறுவர் நூல்களை வாங்குவதை தவிர்த்துவிட்டது. சிறுவர் நூல்கள் பொது நூலகங்களுக்கு வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

இது எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூல்களை கோரும் போது இன்ன இன்ன விதிகளின்படி நூல்களை அனுப்ப வேண்டும் என பொது நூலகத்துறை அதற்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓர் ஆண்டில் எந்தெந்த துறைகள் தொடர்பான நூல்களை வாங்கப்போகிறோம் என்பதைத் தெளிவாக அறிவித்தால் அந்தந்த துறைகள் தொடர்பான நூல்களை மட்டும் பதிப்பகத்தினர் அனுப்புவார்கள். இவ்வாறு இல்லாமல், அனைத்து துறை சார்ந்த நூல்களையும் பெற்றுக் கொண்டு துறைகள் தொடர்பான எந்தவித வரையறையும் இல்லாமல் நூல்களை தேர்வு செய்வது இது போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.

பொது நூலகத்துறைக்கு அனுப்பும் நூல்களில் சில நூல்கள் தேர்வு செய்யப்படாததுக்கான காரணங்களைத் தெரிவிக்க முடியாது என்றும் அதுபற்றி கேட்கவும் கூடாது என்றும் பொது நூலகத்துறை தெரிவிப்பது பிரச்னையை மேலும் வளர்ப்பதாக உள்ளது.

பொது நூலகத்துறையின் இத்தகைய நடவடிக்கை சிறுவர் இலக்கியம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுத்தாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது” என்றார் சுடர் முருகையா.

அதிகாரிகள் பதில்: மக்கள் படிப்பதற்கு ஏற்ற தரமான நூல்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நூலகங்களுக்கு வாங்குவதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என பொது நூலகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

துறைவாரியாக பிரித்து நூல்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்றாலும், அனைத்து தரப்பு மக்களின் தேவைக்கு ஏற்ற நூல்களே தேர்வு செய்யப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட எந்த துறையையும் பிரித்துப் பார்ப்பது இல்லை. என்றாலும் நாங்கள் நூலகங்களுக்காக வாங்குவதற்குத் தேர்ந்தெடுத்த நூல்களில் சிறுவர் நூல்களும் இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in Allocation, Anna, Books, Citizen, Civil body, Corporation, Economy, Education, Fund, Funds, Library, Maintenance, Municipality, Panchayat, Panchayath, Read, State, Students, Tamil Nadu, TamilNadu, Teachers, TN, Upgrades | Leave a Comment »

‘Vidhyarambam’ V Renganathan: Volunteering for the rural poor with Educational toys

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

சேவை: வந்தாச்சு…பொம்மை வேன்!

அந்த கிராமத்தின் பள்ளம் மேடான சாலையில் புழுதி பறக்க ஒரு வேன் விரைகிறது. அங்குள்ள ஆரம்பப் பள்ளியின் முன் பிரேக் அடித்து நிற்கிறது.

“”வந்தாச்சு, பொம்மை வேன் வந்தாச்சு” படிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கூச்சலிடுகின்றனர். ஆசிரியராலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொம்மை வேன் வருவதை நேற்றே கேள்விப்பட்டதால் நேற்று இரவு முழுக்க பொம்மை வேன் வருவதாகக் கனவு கண்டு தூக்கம் கெட்ட குழந்தைகள், கண்முன் அது வருவதைப் பார்த்ததும் உற்சாகத்துடன் கத்துகிறார்கள். அவர்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியைப் பார்த்து ஆசிரியர்கள் மெüனமாகிவிடுகிறார்கள்.

“வித்யாரம்பம்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நடமாடும் பொம்மை நூலக வாகனம்தான் அது. இரண்டாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியறிவூட்டும் பொம்மைகளை விளையாடக் கொடுத்து அறிவூட்டும் பணியைச் செய்து வருகிறது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் வி.ரங்கநாதனைச் சந்தித்துப் பேசினோம்.

குழந்தைகளுக்குப் பொம்மைகளை விளையாடக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சுனாமியின் போது நாகப்பட்டினம் பகுதியில் பல குழந்தைகள் தங்கள் தாய், தந்தையை, அன்புக்குரியவர்களை இழந்துவிட்டார்கள். அந்தத் துயரம் அவர்கள் மனதைவிட்டு அகலவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு வருவது மிகவும் குறைந்துவிட்டது. எல்லாவற்றையும் பறிகொடுத்த அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் படிக்க வைப்பதே மிகுந்த சிரமமாகிவிட்டது. ஸ்கூலுக்குப் போவதற்கே பயந்தார்கள். அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவைப்பதற்காக, அவர்களுடைய மனநிலையை மாற்ற பொம்மைகளை அந்தப் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த வெற்றி, பிற பள்ளிகளுக்கும் பொம்மைகளைக் கொண்டு செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

பொம்மைகள் என்றால் விளையாட்டுப் பொம்மைகளா?

விளையாட்டுப் பொம்மைகள்தாம். ஆனால் அதேசமயம் அவற்றின் மூலம் குழந்தைகளின் அறிவை வளர்க்க முடியும். பொம்மைகளை வைத்து கணக்குப் போடக் கற்றுக் கொடுப்பது, அறிவியல் அறிவை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.

இப்போது கல்வி கற்பிக்கும் முறைகள் மாறிவிட்டன. “விளையாட்டுப் போல கல்வி’ என்பது நகர்ப்புறத்தில் உள்ள வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதைக் குக்கிராமங்களில் உள்ள குழந்தைகள் பெறுவது எப்படி? நாளை இந்தக் குழந்தைகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு என்று வரும்போது நகர்ப்புறக் குழந்தைகள்தானே வேலைவாய்ப்பைப் பெற முடியும்? நகர்ப்புறக் குழந்தைகளுக்குச் சமமாக கிராமத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பதுதான் எங்கள் நோக்கம்.

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கிராமத்துப் பள்ளிக்குப் போய் சில மணி நேரங்கள் பொம்மைகளைக் காட்டுவதால் அவர்கள் அறிவு வளர்ந்துவிடுமா?

எங்களுக்கும் ஆசைதான், எல்லா ஊர்ப் பள்ளிகளிலும் நிரந்தரமாக இப்படிப் பொம்மைகளை வைத்துக் குழந்தைகளின் கல்வியறிவை வளர்க்க வேண்டும் என்று. சுமார் 250 பொம்மைகளை வைத்துக் கல்வி கற்றுக் கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு எப்படி எங்களால் நிரந்தரமாகப் பொம்மைகளை வழங்க முடியும்?

இப்போது எங்களிடம் மூன்று பொம்மை வேன்கள் உள்ளன. ஒரு வேனில் நான்கு பேர் போவார்கள். குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து விளையாட்டும் அதேநேரத்தில் கல்வியும் கற்றுத் தருகிறோம். பாட்டு, நடனம் போன்றவற்றையும் அரை மணி நேரம் சொல்லிக் கொடுக்கிறோம்.

நாங்கள் ஒரு பள்ளிக்குப் போய் பொம்மைகளைக் காட்டிவந்தபின்னால் அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர் போன்றவர்கள் பொம்மைகள் எங்கே கிடைக்கும்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். அவர்கள் தங்கள் பள்ளிக்கென்று பொம்மைகளை வாங்குகிறார்கள்.

எங்களுக்குப் பொம்மை வாங்க உதவுவது ரேயுகாய் – Reiyukai என்ற ஜப்பானிய நிறுவனம். அவர்களின் பிரதிநிதிகள் இங்கே நேரில் வந்து எங்களின் செயல்பாடுகளைப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, எங்களின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்ட பிற வெளிநாட்டவரும் எங்களை வந்து பார்க்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்ட்ரியா என்பவர் கூட அதுபோல இங்கே வந்து பார்த்தார்.

பொம்மைகளைக் குழந்தைகள் உடைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

குழந்தைகள் விளையாடுவதால் பொம்மைகள் உடையும் என்று முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை அதற்கென ஒதுக்கித் திட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே சேதம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் என்றால் விளையாடுவார்கள். விளையாடினால் உடைந்து போகும். இதெல்லாம் சகஜம்தானே?

உங்கள் நிறுவனத்தை சுனாமியின் போதுதான் ஆரம்பித்தீர்களா?

இல்லை. நாங்கள் வித்யாரம்பத்தை ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகின்றன. நான் பல தனியார் நிறுவனங்களில் பல பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்றவன். நான் எனது சொந்தக் கிராமத்துக்கு என் குழந்தைகளுடன் போகும்போதெல்லாம் அங்குள்ள குழந்தைகளுக்கும் என் குழந்தைகளுக்கும் அறிவுத்தரத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது. கிராமத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதே தோன்றியது. என் குழந்தைகள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். என்றாலும் என் எண்ணம் அப்படியேதான் இருக்கிறது.

பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நான் செய்த முதல் காரியம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டக் கோட்டை என்ற கிராமத்துக்குப் போனதுதான்.

அங்குள்ள சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காகப் பள்ளிக்குச் செல்வதில்லை. அங்குள்ள சத்துணவுக் கூடத்திற்கு உணவு உண்பதற்காகச் செல்கிறார்கள் என்பதையறிந்து மனம் வேதனைப்பட்டேன். அவர்களுக்கு கல்வி கற்றுத் தர நான் தனிப்பட்ட முறையில் சிறு உதவிகள் செய்தேன். பின்னர் சென்னைக்கு வந்து நண்பர்களுடன் இதைப் பற்றிக் கலந்தாலோசித்ததின் விளைவாக 2002 இல் உருவானதுதான் வித்யாரம்பம் அறக்கட்டளை. எங்களுக்கு முதன் முதலில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான செக் நன்கொடையாகக் கொடுத்து உதவினார் ஏஇக நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார். இதை எங்களால் மறக்கவே முடியாது.

வித்யாரம்பம் அறக்கட்டளையின் மூலமாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு “உறுதுணைக் கல்வி’ என்ற பெயரில் கற்றுத் தருகிறோம். 2 – 3 வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி. 4 – 5 வது வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி என்று எடுக்கிறோம். குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், சிலேட்டு போன்றவற்றையும் வழங்குகிறோம். எங்களிடம் பயிற்சி பெறும் குழந்தைகள் அவர்கள் படிக்கும் பள்ளியில் மிகத் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.

என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?

முதலில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். காலணியைக் கழற்றிச் சரியாக வைக்கிறார்களா? புத்தகப் பைகளை ஒரு பக்கமாக அடுக்கி வைக்கிறார்களா? என்பதையெல்லாம் கண்காணித்துக் கற்றுக் கொடுப்போம். வணக்கம், குட்மார்னிங், தேங்க்யூ சொல்லுதல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்போம். பிறகு பொம்மைகளை வைத்து விளையாட்டுக் கற்றுக் கொடுப்போம். மணிகளைக் கோர்க்கச் சொல்லிக் கற்றுக் கொடுப்போம். மணிகளை வைத்து கணக்குப் போடச் சொல்லித் தருவோம். கணிதம் சொல்லித் தரும் எங்கள் முறையே விளையாட்டுடன் தொடர்புடையதாகத்தான் இருக்கும். மிக எளிய கூட்டல், கழித்தலில் ஆரம்பிக்கும் எங்கள் குழந்தைகள், கோடி மதிப்புள்ள எண்களைக் கூடக் கொஞ்சமும் பயமில்லாமல் கூட்டிக் கழித்துவிடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஒரு வித்யாரம்ப மையத்தில் 20 குழந்தைகள் இருப்பார்கள். ஓர் ஊரில் 30 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் இரண்டு மையங்களை ஏற்படுத்திவிடுவோம். தமிழ்நாட்டில் இப்போது 600 மையங்கள் செயல்படுகின்றன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் குழந்தைகள் எங்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

இதுதவிர குழந்தைகளுக்கான நூலகங்களையும் நடத்தி வருகிறோம்.

Posted in Child, Children, Education, Faces, Games, Instructors, Interview, Japan, Kids, Library, Metro, NGO, people, Play, Poor, Professors, Read, Reiyukai, School, service, Students, Teachers, Tots, Toys, Tsunami, Vidhyaarambam, Vidhyarambam, Village, Vithyarambam, Volunteer | Leave a Comment »

Theodore Bhaskaran, Thamizharuvi Manian, Vasanthidevi, Ra Nallakkannu, Judge Chandru & Kunrakkudi Ponnambala Adigalaar

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

என்று சொன்னார்!

ஆர். நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
ஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன் னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர் களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. “செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்து கிறது’ என்றார் வெள்ளைக்காரக் கவிஞர்.
“வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப்போன ஒரு கறுப்ப னைப் போல இருக்கிறது அந்த மச்சம்’ எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர்.
————————————————————————————————————————————-

தமிழருவி மணியன்.

பூனை குட்டி போட்டால், தாய்க்கு அதிகக் கவலை, பொறுப்பு! பத்திரமாக, வலிக்காமல் நம் மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி! ஆனால் குரங்கினம் அப்படியில்லை. “தன்னைப் பெற்றவள் எந்த நேரத்திலும் எந்த மரத்துக்கும், எந்தக் கிளைக்கும் தாவிவிடுவாள்; உஷாராக இருக்க வேண்டியது நம் பொறுப்பு’ என்று தாய் மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் குரங்குக்குட்டி. குரங்கிலிருந்து வந்த மனிதன், பூனை மனோபாவத்துக்கு வந்துவிட்டான். எல் லாவற்றையும் அடுத்தவர்கள் பார்த்துக் கொள் வார்கள் என்கிற பொறுப்பின்மையை வளர்த்துக் கொண்டுவிட்டான்.
————————————————————————————————————————————-

வசந்திதேவி, கல்வியாளர்.

தேவையற்ற அநாகரிகங்களை மேலைநாடுகளி லிருந்து காப்பியடிக்கிற நாம், அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்பதில்லை.

முதலாளித்துவ நாடுகளின் சிறப்பே, எல்லோ ருக்கும் சமமான கல்வி முறை என்பதுதான். மந் திரியின் மகனுக்கும், மாடு மேய்ப்பவரின் மக னுக்கும் ஒரே வகுப்பறைதான். அனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்க அரசுதான் செலவு செய் யும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தனி யார் பள்ளிகள் என்று சொன்னாலே சிரிக்கிறார் கள். “கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், பிறகு எதற்காக அரசாங்கம்” என்று கேட்கிறார் கள்.

————————————————————————————————————————————-

தியோடர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் ஆர்வலர்.

இன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் “ஆம்லெட்’ என்று சிரிக்கி றது. முட்டை ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்கு மதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை “ஓங் கில்’ என்று நம் முன்னோர்கள் அழைத்த விவரம் தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும்போது “கொடிய விலங்கு புலி’ என்று அறிமுகப்படுத்தபட்டால் எப்படிக் குழந்தைக ளுக்கு விலங்குகள் மேல் நேசம் வரும்? “கொடூரக் காடு’ என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதா சிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந் துபோனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.
————————————————————————————————————————————-

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

தொலைக்காட்சி பெட்டியை நாக்கூசா மல் “இடியட் பாக்ஸ்’ என்று அழைக்கி றோம். புத்திசாலித்தனமான அந்த அறி வியல் கண்டுபிடிப்பைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல், ராசிக்கல் பலன் பார்ப்பது நாம்தானே தவிர, அந் தக் கண்டுபிடிப்பு அல்லவே! இப்படி நாம் செய்யும் தவறுகளுக்குக்கெல்லாம் மற்றவர்களின் மீது பழிபோட்டு, நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே நம் வழக்கமாக இருக்கிறது. ஆன்மிகத் தைப் புரிந்துகொள்ளாமல் சடங்குக ளின் பின்னால் சென்று சடங்குகளையே ஆன்மிகமாக்கி விட்டோம்.
————————————————————————————————————————————-

நீதிபதி சந்துரு. 

பொது இடங்களில் கழிப்பிடங்களில் செல்லும்போது “ஆண்கள்-பெண்கள்’ என்று தமிழில் எழுதியிருப்பதையே படிக்கத் தெரியாமல் வரைந்திருக்கும் ஆண், பெண் படங்களைப் பார்த்து தெரிந்துகொள்கிற மக்கள் இருக்கிற நாட்டில், மக்களின் மொழியை நீதிமன் றமே புறக்கணிக்கிறது. தன் வழக்கு பற்றி என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைப் பாமரன் புரிந்துகொண்டால் வாய்தா வாங்குவதும், இழுத்தடிப்பதும் பெருமளவு குறையும்.

Posted in Authors, Comparisons, Courts, Education, Environment, Evolution, Famous, Fun, Impress, Incidents, Interesting, Judge, Justice, Law, Life, Metaphors, Observations, Order, Quotes, Read, Religion, Rituals, Society, Speech, Study, Wow, Writers | Leave a Comment »

Frankfurt Book Fair: Interview with Kizhakku Pathippagam’s Badri

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!

ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.

உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.

“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.

இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.

“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?” என்றோம்.

“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழ்மகன்.

Posted in Agents, Annual, audiobooks, Authors, Books, Business, Catalan, Catalonia, Channels, classics, Deals, Deutsch, Deutschland, Distribution, English, EU, Events, Exhibition, exhibitors, Faces, Fair, Fiction, forum, Frankfurt, German, Germany, India, Industry, Interview, Kilakku, Kizakku, Kizhakku, Language, Literary, Literature, Marketing, Media, Meet, Multilingual, NBT, network, Networking, New Horizon, Novels, Outlets, people, publications, Publishers, Reach, Read, Reader, Readers, Reports, sales, Sell, Spain, Story, Sura, Tamil, Trade, Translations, Translator, wholesalers, Works, World | Leave a Comment »

Lightening the load of 10th Standard Tamil Textbook: State of Tamil Nadu Education

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

தமிழுக்கு அநீதி!

ச. செந்தில்நாதன்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.

அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.

10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து

  1. “புகழ்’,
  2. “வெகுளாமை’,
  3. “இடனறிதல்’,
  4. “ஊக்கமுடைமை’

என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா? திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே? குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்? இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!

கவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?

உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.

பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.

அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.

இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.

தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)

Posted in 10th, Ami, Answers, Asokamithiran, Asokamithran, Asokamitran, Avoid, Books, Conservative, Couplets, Decrease, Delete, Education, Exams, Fiction, Kural, Kurunthogai, Kurunthokai, Language, Learn, Lessons, Liberal, Life, Lighten, Literature, Load, Main, Non-detail, Obsolete, PAK, papers, Planning, Poems, Poet, Questions, Read, Reduce, Sample, Sangam, Schools, Second, Songs, standard, State, Students, Tamil, Tamil Nadu, TamilNadu, Teach, Teachers, Tenth, Textbook, Textbooks, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TV, Valluvar | Leave a Comment »

Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

இது நியாயமா?

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.

இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?

Posted in Center, Centre, Child, Children, City, Dharmapuri, Education, Employment, Exploit, Exploitation, Females, Food, girls, Govt, Hotels, Hunger, Hungry, Illiteracy, Income, juvenile, Kids, Labor, Labour, Literacy, Metro, Needy, Policy, Poor, Read, Restaurants, Rich, Rural, She, State, Student, Suburban, Tharmapuri, Village, Wealthy, Women, Work, Worker | Leave a Comment »

British novelist Doris Lessing wins Nobel Literature Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

பிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் கூறியுள்ளது.

1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.

தி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் அவரது படைப்புகளில் இருக்கும்.

டோரிஸ் லெஸ்ஸிங்

ஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.

பண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.

சாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.

1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.

“தி கிராஸ் இஸ் சிங்கிங்’

1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.

“தி கோல்டன் நோட்புக்’

1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்

காட்டியது. இந்த நாவல் ஒரு பெண்

எழுத்தாளரின் கதை. பணி, காதல்,

அரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.

“தி ஃபிப்த் சைல்ட்’

1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.

Posted in africa, Award, Bio, Biography, Biosketch, Books, Britain, British, Commonwealth, Doris, England, Female, Feminism, Icon, Label, Lady, laureate, Lessing, Literature, London, manuscript, names, Nobel, Novel, novelist, people, Politics, Prize, Read, Reviews, Rhodesia, She, Synopsis, UK, Woman, Women, Zimbabwe | Leave a Comment »

Ve Saaminatha Sharma – Biosketch by Vikraman

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மறக்கமுடியா அரசியல் அறிஞர்!

விக்கிரமன்

பேரறிஞர், மூதறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் பெயர் சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது “பிளாட்டோவின் அரசியல்’ என்ற அவரது நூலாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த நூலை இன்று படிப்பவர்களும் அவரது தெளிந்த தமிழ் நடையைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

தமிழில் அரசியல் நூல்களை எழுதி வெளியிட்ட முன்னோடி சர்மா. “கார்ல் மார்க்ûஸ’ அறிமுகப்படுத்தினார். “புதிய சீனாவைப்’ புரிய வைத்தார். லெனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கினார். ரஷியப் புரட்சியை எடுத்துக் கூறினார். கிரீஸ் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டினார்.

வெ. சாமிநாத சர்மா அப்போதைய “வட ஆர்க்காடு’ மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895-ல் செப்டம்பர் 17-ல் பிறந்தார். தந்தை முனுசாமி அய்யர். தாயார் பார்வதி அம்மாள். செங்கல்பட்டிலுள்ள நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சர்மா ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். இளம் வயதிலேயே தேசபக்தி, எழுத்தார்வம் மிகுந்த சர்மா தமது பதினேழாம் வயதில் – 1914 ஜூலையில் “கௌரிமணி’ எனும் சமூக நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது விலை மூன்றணா!

தேசிய இயக்கம் கொழுந்துவிடத் தொடங்கிய காலம். சர்மா “பாணபுரத்து வீரன்’ எனும் நாடகத்தை எழுதினார். டி.கே.எஸ். சகோதரர்கள் “தேசபக்தி’ எனும் பெயரில் அதை நாடகமாக நடத்தினார்கள். அந்த நாடகம் அக்கால மாணவரிடையே தேசபக்தியை எவ்வாறு வளர்த்தது என்பதை டி.கே. சண்முகம் நமது “நாடக வாழ்க்கை’ நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

ம.பொ. சிவஞானம் தமது “விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ எனும் நூலில் பாராட்டியுள்ளார். தமிழக அரசு முன்னாள் செயலர் க. திரவியம் தமது “தேசியம் வளர்த்த தமிழ்’ என்று நூலில் “தேசிய இலக்கியம்’ என்று அதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகாலத்தில் “இந்து நேசன்’ “சுல்பதரு’ போன்ற பத்திரிகைகளில் சர்மா பணியாற்றினார். ஆனால், 1917-ல் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தொடங்கிய “தேசபக்தனில்’ தொண்டாற்றத் தொடங்கியது அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது பெரிய தேசபக்தர்களான சுப்ரமணிய சிவா. வ.வே.சு. அய்யர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. “கல்கி’ சர்மாவுடன் பணியாற்றினார். பின்னர் திரு.வி.க.வின் “நவசக்தி’யில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. சுவைமிகுந்த இலக்கியத் தொடர்களை, கட்டுரைகளைப் படைத்தார். செய்தித் தலைப்புகளை அமைப்பதில் சர்மா திறமை மிக்கவர்.

சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டினின்று பர்மா சென்றுவிட்ட சர்மா, 1937 – 42-ல் ரங்கூனில் “ஜோதி’ என்ற மாத இதழைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். பிற்காலத்தில் “சக்தி’ போன்ற சிறந்த மாத இதழ் தோன்றக் காரணமாயிருந்தது ஜோதியே. 1942-ல் ஜப்பானியர் பர்மாவில் குண்டு வீசத் தொடங்கியபோது சர்மாவும், அவரது துணைவியாரும் தமிழகம் திரும்பினர். பர்மாவினின்று நடந்தும், காரிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த அனுபவத்தை “பர்மா நடைப்பயணம்’ எனும் நூலில் எழுதி வைத்தார்.

சர்மா சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டுமல்ல; அவர் முற்போக்குக் கருத்தும் கொண்டவர். வரதட்சிணை எதிர்ப்பு சங்கத்தை நிறுவினார். 1914-ல் நண்பர்கள் உதவியுடன் சென்னை செந்தமிழ்ச் சங்க சங்கத்தை ஆரம்பித்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வைத் தலைவராக இருக்குமாறு அணுகினாராம்! 1958-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தார்.

1914-ஆம் ஆண்டில் மங்களம் என்ற பெண்மணியை மணம் புரிந்துகொண்டார். தம் துணைவியாரையும் இலக்கிய, தேசியத் தொண்டில் சமமாக ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கிறார். சர்மாவின் இலக்கியத் தொண்டுக்கு அம்மையார் 1956-ல் மறையும் வரை உறுதுணையாக இருந்திருக்கிறார். சர்மாவும் மங்களம் அம்மாளும் பெற்றெடுத்தவை அருமையான நூல்களே. மனைவியை இழந்த துக்கத்தில் அவர் எழுதிய “அவள்பிரிவு’ என்ற கடித நூல் கடிதக் கலையில் சிறந்ததாகும்.

திட்டமிட்ட வாழ்க்கையை உடையவர் சர்மா. ஆனால் கருணை உள்ளம் நிறைந்தவர். ஒழுக்கம், தமிழ்ப்பற்று இரண்டும் கலந்த உருவமே வெ. சாமிநாத சர்மா.

“உலகம் சுற்றும் தமிழர்’ என்ற புகழ்ப் பெயர் கொண்ட காந்தி திரைப்படச் சிற்பி ஏ.கே. செட்டியார் தொடங்கிய “குமரி மலர்’ எனும் மாத இதழின் ஆசிரியராக 1945-46ல் பணியாற்றினார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். தியாகராய நகரில் அவர் நடத்திய இலக்கியச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டேன். உஸ்மான் சாலையிலுள்ள பர்ணசாலை போன்ற குடிலில் நான் ஆசிரியராக இருந்த இதழுக்குக் கட்டுரை கேட்டுப் பெறச் சந்தித்தேன். 1978 ஆம் ஆண்டு நண்பர் பெ.சு. மணியுடன், கலாúக்ஷத்ரா விடுதியில் சந்தித்தேன். முதுமையும் நோயும் வாட்டிய நிலையிலும் தமிழ் வளர்ச்சியைப் பற்றியே அவர் பேசினார்.

பர்மா நடைப்பயணக் கையெழுத்துப் பிரதியை பெ.சு. மணி தேடி எடுத்து என்னிடம் தந்தார். தன் நூல்களை வெளியிடும் உரிமையை, சர்மாஜி அவரிடம் அளித்திருந்தார். நான் அப்போது ஆசிரியராக இருந்த “அமுதசுரபி’ மாத இதழில் வெளியிடச் சம்மதித்தேன். கட்டுரை தொடங்கப் போகும் அறிவிப்பைப் பார்த்து அந்த மூதறிஞர் மகிழ்ச்சியடைந்தார். முதல் இதழ் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு இரு நாள்களுக்கு முன்பே அவர் மறைந்தார்.

“பர்மா வழி நடைப்பயணத்தை’ தமிழ் மக்களுக்கு வெளியிட்டுப் படிக்கச் செய்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறு.

பர்மா வழி நடைப்பயணத்தைப் படிக்கும்போது நாம் சர்மாவுடன் அந்தப் பகுதியில் அவருடன் சேர்ந்து பயணம் செய்த உணர்வை அடைந்திருக்கிறோம். அறிஞர் சர்மா பயணக் கட்டுரையாக எழுதியிருந்தாலும் இந்த நூல் ஒரு வரலாற்று நூலாகும்.

தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பேரிலக்கியம் அந்தப் பயணக் கட்டுரை. மறைந்த பேரெழுத்தாளர் கு. அழகிரிசாமி, சர்மாவைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டி எழுதினார்.

“”தமிழகத்தில் ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் அரிஸ்டாட்டிûஸப் பற்றித் தெரிந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பிளேட்டோவையும் ரூúஸôவையும் அரிஸ்டாட்டிலையும் அறிமுகப்படுத்தியவர் சர்மாதான். தமிழ்ச் சமுதாயத்திற்கு எப்பேர்ப்பட்ட பேருபகாரம் இது!

வெ. சாமிநாத சர்மா சிறிது குள்ளமாக இருப்பார். ராஜகோபாலச்சாரியாரைப் போல் மொட்டைத் தலை. சிவந்த மேனி, கதர்வேட்டியும் கதர்ஜிப்பாவும் இவருடைய உடை. சிலசமயங்களில் நேருஜியைப் போல் அரை கோட் அணிந்திருப்பார். தொலைவில் பார்த்தால், திரு.வி.க.வின் தோற்றத்தில் இருப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாவின் எளிய வாழ்க்கையைத்தான் உவமையாகக் கூற முடியும்.

அன்பென்ற மலர், இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்வீகச் சிரிப்பு. சாந்தி பொலியும் முகம். அன்பு சுரக்கும் இனிய சொற்கள். அவர்தான் சர்மாஜி.

செப்டம்பர் 17 ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். ஒழுக்க சீலரான, பண்பாட்டுக் காவலரான, எழுத்துக்காக வாழ்ந்தவரான சர்மாஜி 1978 ஜனவரி 7ஆம் தேதி, கலாúக்ஷத்ராவில் தன் இறுதி மூச்சு நிற்கும்வரை, தமிழ் மொழியின் உயர்வைப் பற்றி மட்டுமே நினைத்தவரை, தமிழ் உள்ள வரை மறக்க முடியாது.

(இன்று அரசியல் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் 112ஆவது பிறந்த நாள்)

(கட்டுரையாளர்: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்).

Posted in Alagirisami, Alakirisami, Amudhasurabhi, Amudhasurabi, Amuthasurabhi, Amuthasurabi, Arcot, Author, Azhagirisami, Azhakirisami, Biosketch, Books, Burma, China, Cinema, Congress, Drama, Faces, Films, Gandhi, Greece, History, Integration, journalism, journalist, Kadhar, Kalashethra, Kalashetra, Lenin, Literature, Ma Po Sivanjaanam, Mag, magazine, MaPoSi, Marx, Media, Movies, MSM, Nation, National, people, Person, Plato, Rajaji, Read, Russia, Saaminadha, Saaminatha, Saaminatha Sharma, Saminatha, Saminatha Sharma, Sharma, Sivajaanam, Sivanjaanam, Tamil, Theater, Theatre, TKS, Tour, Travel, Ve Saaminatha Sharma, Vigraman, Vikraman, VSS, Writer | Leave a Comment »

MP3 Audio Books by Kizhakku pathippagam – Introduction for Avid Readers

Posted by Snapjudge மேல் மே 30, 2007

புதிய வாசகர்களை உருவாக்கும் “ஒலிப் புத்தகம்’: படிக்க வேண்டியதில்லை; கேட்டாலே போதும்

கே. வாசுதேவன்

திருநெல்வேலி, மே 30: தமிழகத்தில் தற்போது புதிதாக விற்றுவரும் ஒலிப் புத்தகம் (ஆடியோ புக்) புதிய புத்தக வாசகர்களை உருவாக்கி வருகிறது.

கேட்டாலே போதும், புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைப்பதாக அதன் வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது மட்டுமே இளைய சந்ததியினர் பாடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்கின்றனர்.

இவற்றைத் தவிர்த்துப் பிற புத்தகங்களை அவர்கள் படிப்பது மிகவும் அரிதாகிவிட்டதால், வரலாறு, கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, கலைகள் போன்றவை பற்றிய அறிவு இன்றைய இளைஞர்களிடம் எதிர்பார்க்க முடியாதாகிவிட்டது.

10 ஆண்களுக்கு முன்வரை புத்தக வாசிப்பு, விளையாட்டு ஆகியவை மட்டுமே பொழுதுபோக்கு. இன்று அப்படியில்லை டி.வி., இன்டர்நெட், இ மெயில், திரைப்படம் எனப் பல.

படிக்கும் ஆர்வம் குறைவு: அனைத்தும் வணிக நோக்கில் செயல்படும் சூழ்நிலையில், புத்தகம் படிக்கும் ஆவல் குறைகிறது.

மேலும், தேவையான தகவல்களை உடனுக்குடன் இன்டர்நெட், இ மெயில் போன்றவற்றின் மூலம் பெற்றுவிடுவதால் புத்தக வாசிப்பும் விற்பனையும் குறைந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் வாசகர்களைக் கவர புதிய யுக்திகளைப் புத்தகப் பதிப்பாளர்கள் புகுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் புதிய யுக்தியில், ஒரு புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ஒலிப் புத்தகமாக -“எம்பி3′ குறுந்தகடுகளாக இந்தப் பதிப்பகங்கள் வெளியிடுகின்றன.

இந்த ஒலிப் புத்தகத்தில் மெல்லிய பின்னணி இசையுடன், வசீகரமான குரலுடனும் புத்தகம் சிறிது தணிக்கை செய்யப்பட்டு வாசிக்கப்படுகிறது.

அதாவது நாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே, அந்த புத்தகத்தில் உள்ளது பற்றி முழுமையாகக் கேட்க முடிகிறது.

மேலும், புத்தகத்தின் விலையை ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.

புத்தகத்தில் நாள்கணக்கில் வாசித்து தெரிந்துகொள்ளும் விஷயத்தை, சில மணி நேரங்களிலேயே ஒலிப் புத்தகங்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

புத்தகத்தை வாசிப்பதற்கு என்று சில சூழ்நிலைகள் நமக்கு கிடைத்தால் மட்டுமே, அதை முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த ஒலிப் புத்தகத்தை கேட்கும் வசதிகள் மட்டும் நம்மிடம் இருந்தால் போதும், எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், ஆன்மிக உரைகள் ஆகியவற்றை மட்டுமே ஒலியின் வடிவில் கேட்டு வந்த மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.

Posted in Audio, Biography, Books, Chokkan, Commerce, Digital, Disabled, Download, Hear, Internet, Introduction, Kilakku, Kizakku, Kizhakku, Media, MP3, padhippagam, padhippakam, pathippagam, pathippakam, Publishers, Read, Readers, Tamil Book, Venture, Voice | 5 Comments »

Panikkudam – Tamil Magazine Details

Posted by Snapjudge மேல் மே 3, 2007

Thozhi.com

பெண்ணியச் சிந்தனைகளையும் பெண் எழுத்தையும் கலந்து தருகிறது பனிக்குடம் இதழ்

– இளமதி

எண்ணற்ற நாளிதழ்களும் வார, மாத இதழ்களும் வாசிப்புத் தளத்திற்கும் அறிவுத் தளத்திற்கும் வளம் சேர்க்கும் விதமாய்த் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. கலைச் சேவை செய்யப் பிறந்த பத்திரிகைகள்கூட வியாபார ரீதியாக வெற்றி பெறப் பரபரப்பைத் தேடித் தேடி எழுதிக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய வியாபாரமும் பரபரப்பும் ஒரு புறம். மறுபுறம் உலக இலக்கியத்தைத் தமிழ் மக்களின் இலக்கிய அறிவுக்கு எட்டச் செய்வதற்காகவே தொடங்கப்பட்டு இரண்டு, மூன்று இதழ்களோடு நின்றுபோகும் சிறுபத்திரிகைகள். இவற்றில் சில பத்திரிகைகள் மட்டுமே வியாபாரமயமாகிப்போன இந்தப் பத்திரிகை உலகில் தமது இருப்பை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் படைப்புலகில் நிலைபெறத் தமது நோக்கங்களையும் லட்சியங்களையும் சமரசம் செய்துகொண்டு தொடர்ந்து வெளிவருகின்றன

சிறுபத்திரிகைத் தளத்தில் புதிதாகச் செயல்படும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனென்றால், தனக்கு முன்பாக வந்து நின்றுபோன இதழ்களின் வெற்றியும் தோல்வியும் எந்தத் தயக்கத்தையும் இந்தப் பத்திரிகைக்கு ஏற்படுத்தவில்லை.

இன்றைய சிற்றிதழ்களின் வரிசையில் பனிக்குடம் என்ற காலாண்டிதழ் குறிப்பிடப்பட வேண்டியது. பனிக்குடத்தின் ஆசிரியர், கவிஞர் குட்டி ரேவதி. இது வரை ஆறு இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.

“பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வதாகக் கூறுகிறது இந்த இதழின் ஆசிரியர் குறிப்பு.

பெண் வெளி, பெண்ணியம், பண்போவியம், நேர்காணல், உரையாடல், நூல் அறிமுகம், மதிப்புரை, கவிதை, சிறுகதை, இதழியல் பார்வை, புகைப்படம், ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் என்று பல்வேறு பகுதிகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கின்றன.

புகைப்படம், ஓவியம் என்ற இரண்டு துறைகளிலும் உள்ள பெண் கலைஞர்களைப் பற்றிய அறிமுகப் பக்கம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. இது மேலைநாட்டுக் கலைஞர்களைப் பற்றிய அறிமுகமாக இருக்கிறது. அம்பை, மகாஸ்வேதாதேவி போன்றவர்களுடைய நேர்காணல்களும் குறிப்பிடத்தக்கவை.

இது வரை வந்த இதழ்களில்

  • அம்பை,
  • கமலா தாஸ்,
  • வ. கீதா,
  • க்ருஷாங்கினி,
  • பூரணி,
  • பாமா,
  • சிவகாமி,
  • பிரசன்னா ராமசாமி,
  • கனிமொழி,
  • வெண்ணிலா,
  • சல்மா,
  • உமா மகேஸ்வரி,
  • சுகிர்தராணி,
  • தமிழச்சி,
  • தமிழ்ச் செல்வி,
  • புதிய மாதவி,
  • காயத்திரி காமஸ்,
  • சி.பி. கிருஷ்ணப்பிரியா,
  • குட்டி ரேவதி போன்ற குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் பங்களித்திருக்கிறார்கள்.

நல்ல நவீன கவிதைகளின் பொருட்செறிவைக் கொண்ட நவீன ஓவியங்களைத் தாங்கிய பனிக்குடத்தின் முன் அட்டைகள் மீண்டும் கவனிக்க வைப்பவை.

பெண் எழுத்தைத் தனது இயக்கக் களமாகக் கொண்டு வெளிவரும் பனிக்குடம் இதழில், ‘இதழியல் பார்வை’ என்னும் பகுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதழியல் துறையில் (குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிக்கைகளில்) பங்களித்த பெண் ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. நேர்காணல்கள் இடம்பெறும் ‘பண்பாளுமை’ பகுதியில் பெண் படைப்பாளிகள் மற்றும் ஆளுமைகளின் விரிவான வெளிப்பாட்டைக் காண முடிகிறது.

‘பெண்வெளி’ என்ற பகுதியில் சிறப்பான விவாதங்கள், ஆரோக்கியமான உரையாடல்கள் தரப்பட்டிருக்கின்றன. பனிக்குடத்தில் இடம்பெறும் மொழிபெயர்ப்புகளைக் கொண்டு, இந்தப் பத்திரிகை தமிழ்ப் பெண் எழுத்துக்கான வெளியைக் கடந்து பிற மொழி எழுத்துக்குமான வெளியாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பெண் இலக்கிய உலகிற்குப் பனிக்குடம் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது.

பனிக்குடம்
பனிக்குடம் பதிப்பகம்,
பெண்ணிலக்கிய வெளியீட்டாளர்,
137 (54), இரண்டாம் தளம்,
ஜானி ஜான் கான் சாலை,
சென்னை – 14.
விலை: ரூ. 10

Posted in Female, Feminism, Feminist, Journal, Lady, magazine, male, Panikkudam, Panikudam, Read, Tamil, Women, Zine | Leave a Comment »

30th Madras Book Fair: Chennai Book Exhibition – Kalainjar Visit & Hotsellers

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

புத்தகக் காட்சியில் முதல்வர்: பழைய நினைவுகளில் மூழ்கினார்

சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள “”கலைஞர் கருவூலத்தின்” புகைப்படக் கண்காட்சியினை சனிக்கிழமை பார்வையிடுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன், பொதுப்பணித்துறை அமைச்சர் துரை.முருகன்.

சென்னை, ஜன. 21: 30-வது சென்னை புத்தகக் காட்சிக்கு, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வந்தார். காட்சி அரங்குகளை 1 மணி நேரத்துக்கும் மேலாக பார்வையிட்டார்.

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் கருணாநிதி கடந்த 10-ம் தேதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரால் புத்தக் காட்சி அரங்குகளை முழுமையாகப் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், புத்தக் காட்சியை சனிக்கிழமை பார்வையிட்டார். காலை 11.15 மணிக்கு மேல் வந்த முதல்வர் பேட்டரி கார் மூலம் புத்தக காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

முன்னதாக, “கலைஞர் அறிவுக் கூடத்தில்’ வைக்கப்பட்டு இருந்த பழைமையான புகைப்படங்களைப் பார்த்து ரசித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த, முதல்வர் அதுகுறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

அவசரநிலைக் காலத்தின் போது, அண்ணாசாலையில் தான் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததை நினைவு கூரும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் பார்த்தார்.

“சூரியனைப் பற்றி சொல்வதென்றால்’ என்கிற தன்னைப் பற்றிய குறும்படத்தையும் அவர் பார்த்தார்.

புத்தகத் தோட்டத்தில் குறையும் நாவல் சுவை: கண்காட்சி இன்று நிறைவு

சென்னை, ஜன. 21: ஒளவையார் முருகப் பெருமானிடம் நாவல் பழத்தை விரும்பிக் கேட்டதாக கதை உண்டு.

புத்தகக் கடை என்றால் வாசகர்கள் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகளைத் தேடிச் செல்வது வரலாறாகி வருகிறது.

புத்தகக் காட்சி மீது படையெடுக்கும் வாசகர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பது நிஜம்தான். ஆனால், புத்தகம் என்றாலே நாவல்தான் என்ற காலம்தான் மலையேறிவிட்டது.

“”இப்போதெல்லாம் பாட நூல்களைத் தவிர்த்து, வாசகர்களிடம் அதிக வாக்குகள் பெறுவது சுயமுன்னேற்ற நூல்கள்தான்” என்கிறார் ஒரு பதிப்பாளர்.

இந்த ஆண்டு அநேகமாக எல்லா கடைகளிலுமே சுயமுன்னேற்றப் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

“”புனைகதைகளை எழுதி வந்த எழுத்தாளர்களில் பலர் இப்போது சுய முன்னேற்றம் குறித்த நூல்களை எழுதுகிறார்கள்” என்றார் அவர்.

புத்தகங்களை அடுத்து, நல்ல விற்பனை ஆவது, மேற்படிப்புக்காக மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் வெளியிடப்படும் வழிகாட்டி புத்தகங்கள்தான். பாடப் புத்தகங்களுக்கு மாற்றாக “நோட்ஸ்’ எனப்படும் வழிகாட்டி நூல்களைப் படித்தே ஒரு காலத்தில் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று வந்தனர்.

நோட்ஸ் மட்டும் படித்தால் பெருமை அல்ல என்று அக்காலத்தில் கருதப்பட்டது. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு உதவும் கையேடுகள், வழிகாட்டி நூல்கள் அதிகம் விற்பனை ஆகின்றன என்கிறார்கள்.

“”9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பது இத்தகைய நூல்களைத்தான். இது தவிர, டோஃபில், கேட், மாட், ஜி.ஆர்.இ. போன்ற உலக அளவிலான மேற்படிப்புக்குத் தேவையான தேர்வுகளுக்கு வழிகாட்டும் நூல்களையும் மாணவர்கள் அள்ளிக் கொண்டு போகிறார்கள்” என்கிறார் கல்வியாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான ராஜகோபாலன்.

பொதுவான நூல்களைப் பொருத்தவரையில் சுயமுன்னேற்றத்தை அடுத்து, பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை நூல்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆன்மிக நூல்கள் அதிகம் விற்பனை ஆகும் என்று பல பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த முறை புத்தகக் காட்சியில் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது வியப்புக்குரிய விஷயம்.

வாஸ்து சாஸ்திரம், சமையல் கலை, மீன்வளர்ப்பது, மாடி வீட்டுத் தோட்டம் வளர்ப்பது, நாய் வளர்ப்பது போன்ற நூல்களையும் பலர் தேடி வருகிறார்கள் என்று புத்தகக் கடைகளை நடத்தும் சிலர் தெரிவித்தனர்.

சென்னை சேத்துப்பட்டு செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு அடைகிறது.

8 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்: புத்தக கண்காட்சியில் ரூ.8 கோடிக்கு விற்பனை

சென்னை, ஜன. 22- ென்னை பூந்தமல்லி ரோட்டில் புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் புத்தக கண்காட்சி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

11 நாட்கள் நடத்தப்பட்ட கண்காட்சி நேற்று முடிந்தது. தினமும் கண்காட்சியை பார்க்கவும், புத்தகங்கள் வாங்கவும் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம் அலை மோதியது.

தென்னிந்திய புத்தக விற் பனையாளர்கள் மற்றும் பதிப் பாளர்கள் சங்க செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

வழக்கமாக அண்ணா சாலை யில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். ஆண்டு தோறும் புத்தக பதிப்பகத்தார் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தக கண்காட்சியில் இடம் பெற பலர் விருப்பம் தெரிவித்தனர். எனவே இந்த ஆண்டு கண் காட்சி நடத்தும் இடத்தை மாற்றினோம். இந்த இடம் வசதியாக இருந்ததால் கூடுதல் ஸ்டால்கள் அமைக்கப்பட் டது. பொதுமக்களும் அதிக அளவில் வந்தனர்.

இந்த அண்டு 8 லட்சம் பேர் கண்காட்சியை கண்டு களித் துள்ளனர். ரூ. 8 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த அண்டு 4 லட்சம் பேர் மட்டுமே வந்த னர். இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. டி.வி. சானல்கள் மோகத்திற் கிடையே புத்தகம் படிக்கும் ஆர்வம் மக்களிடையே அதி கரித்துள்ளதே இதற்கு கார ணம்.

மாவட்ட வாரியாகவும் புத்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். நெல்லை யில் நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

  • ஆன்மீகம்,
  • இலக்கியம்,
  • கம்ப் ïட்டர்,
  • நாவல்கள்,
  • சித்தர் பாடல்கள்,
  • சோதிடம்,
  • தொழில் வளர்ச்சி உள்பட பல வகையான புத்தகங்களை மக்கள் விரும்பி வாங்கி உள் ளார்கள்.

கல்கி எழுதிய பொன்னி யின் செல்வன் வரலாற்று நாவல் 2 ஆயிரத்து 500 பிரதி கள் விற்று தீர்ந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறி னார்.

வாழ்க்கையின் அங்கம் வாசிப்பு

ருத்ரன்

“ஆடை இல்லாதவர் அரை மனிதர்’ என்பது பழமொழி. புதுமொழியாக, நூல் இல்லாதவர் “கால் மனிதர்’ எனலாம்.

எனவே, ஒரு மனிதர், முழுமையடைவதற்கு ஆடை அரை விழுக்காடு உதவுகிறது எனில், நூல் முக்கால் விழுக்காட்டை நிறைவு செய்கிறது.

மனிதனுக்கு மூளை இயல்பாகவே வளரும். ஆனால் அறிவு வளர வேண்டுமெனில், புத்தகங்களின் வாசிப்பும், புதிய அனுபவங்களின் சந்திப்பும் அவசியமாகும். நடைமுறை வாழ்க்கையின் சொந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதைப்போலவே, புத்தகங்களின் மூலம், பிறரது அனுபவங்களிலிருந்து சிறந்த ஆலோசனைகளைப் பெற முடியும்.

தன்னை அறிவதற்கும், தன்னைச் சுற்றி இருப்பவர்களை உணர்வதற்கும், உலகைப் புரிந்துகொள்வதற்கும் மனிதனுக்கு வாய்த்த எளிமையான மற்றும் எங்கும் கிடைக்கக்கூடிய சாதனம், புத்தகம்! மேலும், விலையை வைத்து தரத்தை மதிப்பிட முடியாத ஒரே பொருள், புத்தகமேயாகும்.

இரண்டு ரூபாய்க்கான குறுநூல், இருபது ரூபாய்க்கான சிறு நூலைவிடவும், இருநூறு ரூபாய் விலையுள்ள பெருநூலை விடவும் பயன் மிகுந்ததாக இருக்கக்கூடும்.

ஆகவே, விலையிலோ பக்கங்களின் எண்ணிக்கையிலோ மற்றும் அட்டையின் ரகத்திலோ புத்தகங்களின் முக்கியத்துவம் அடங்கியிருப்பதில்லை. மாறாக, புத்தகங்களின் கருத்துகளையும் அவைகள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு மற்றும் மாற்றங்களையும் பொருத்து, புத்தகங்களின் தரம் மதிப்பிடப்படுகின்றன; வாசிக்கப்படுகின்றன; பரவலாக்கப்படுகின்றன; பாதுகாக்கப்படுகின்றன.

ஒரு புத்தகத்தில் உள்ள பல மடங்கு அறிவுச் செல்வத்தைப் பெறக்கூடிய வாசகரே அந்நூலின் உண்மையான மற்றும் தகுதியான வாசகராவார். அவ்வாறன்றி, போகிற போக்கிலும், பொழுதுபோக்கிற்காகவும் வாசிக்கப்படும்போது, நல்ல நூல், அதன் நோக்கத்தை இழந்து விடுகிறது. அத்தகைய வாசகர், காலத்தையும் கருத்தையும் மட்டும் இழப்பதில்லை; நல்ல வாசகர் என்னும் கௌரவத்தையும் இழக்கிறார்.

இந்நிலையில், வெளியாகும் அனைத்து நூல்களையும் படித்துவிட வேண்டுமா? என்னும் கேள்வி எழுகிறது. இயலுமெனில், “படிப்பது நன்று’ என்பதே பதிலாகும். ஆனால், அனைத்தையும் படிக்க இயலாது என்பதே உண்மையாகும். அதனால், நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். தேர்ந்தெடுத்தல் என்பது குறிப்பிட்ட காலத்தின் குறிப்பிட்ட சூழலின் தேவையைப் பொறுத்து அமைவது கூடுதல் பயன் அளிப்பதாகும். அப்போதுதான், நிகழ்கால நிலைமைகள் குறித்த பிறரது பேச்சு, எழுத்து ஆகியவைகளின் நம்பகத்தன்மையையும் போலித்தன்மையையும் புரிந்துகொள்ள முடியும்.

காலத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்படும் நூல்கள், அவைகளின் உள்ளடக்க வீரியத்தைப் பொறுத்து, எதிர்காலத்திலும் ஏற்கப்படுபவைகளாக விளங்குவதுண்டு. அந்தவகையில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, வரலாறு குறித்த நூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, அத்தகைய நூல்கள், சாகாவரம் பெற்ற ஆவணங்களாக வர்ணிக்கப்படுகின்றன.

ஆகவே வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கும், வாழ்வதற்குக் கற்றுக் கொள்வதற்கும் மட்டுமன்றி, பயனுள்ளதாக்குவதற்கும் வழிகாட்டும் நூல்களை, மனிதனின் அத்தியாவசியப் பொருள்களுள் முதன்மையானதாக்கும் பண்பாட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதன்பொருட்டு, சமூக அக்கறையாளர்களும் சமூக இயக்கங்களும் வாசிப்பு இயக்கத்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும்; ஊர்கள்தோறும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி, புதிய வாசகர்களை உருவாக்க வேண்டும்.

மேலும் நாட்டின் வளத்தையும் மக்கள் நலனையும் முன்மொழியும் படைப்புகளை வெளியிடுவதற்கு, மக்கள் பங்களிப்பைப் பெறுவதன் மூலம், வாசிப்புக் கலாசாரத்தை வளர்க்க வேண்டும். சமூகச் சீரழிவு நூல்கள் மற்றும் இதழ்களின் மாய வலையிலிருந்து மக்கள், குறிப்பாக இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

மேற்சொன்ன கூட்டு செயலைப் போன்று, தனிமனிதக் கடமை ஒன்றும் உண்டு. அது நல்ல வாசகராக இருப்பவர், தனது பிள்ளைகளுக்காக நல்ல நூல்களைச் சேர்த்து வைத்தும், வாசிக்க வைத்தும், நல்ல தாய் அல்லது நல்ல தந்தை என்னும் போற்றுதலுக்கு உரியவராவார்.
7.5 லட்சம் பார்வையாளர்கள் – 1 கோடி புத்தகங்கள் விற்பனை 30-வது சென்னை புத்தகக் காட்சி நிறைவு: கடைசி நாளில் மக்கள் வெள்ளம்

சென்னை, ஜன. 22: சென்னையில் 30-வது புத்தகக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 12 நாள்கள் நடைபெற்ற இப் புத்தகத் திருவிழாவுக்கு 7.5 லட்சம் பேர் வரை வந்தனர்.

ரூ.7 கோடி மதிப்புள்ள 1 கோடி புத்தகங்கள் விற்பனை ஆனதாக புத்தகக் காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, அண்ணாசாலை காயிதேமில்லத் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சி, இந்த ஆண்டு சேத்துப்பட்டு செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்றது.

புத்தகக் காட்சியை கடந்த 10-ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார். சுயமுன்னேற்றம், நாவல்கள், ஆன்மிகம், குழந்தைகளுக்கானவை என 435 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

எந்தப் புத்தகங்களுக்கு மவுசு:

  • சாப்ட்வேர்,
  • ஜோதிடம்,
  • வாஸ்து உள்ளிட்ட புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தங்களுக்கு உரிய புத்தகங்களை வாங்குவதற்கு பெற்றோருடன் குழந்தைகள் வந்திருந்தனர்.

புதிய இடத்தில் குவிந்த பார்வையாளர்கள்:””விசாலமான இடம் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். அதன்படி, 7.5 லட்சம் வரை பார்வையாளர்கள் வந்தனர்” என்றார் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கச் செயலர் ஆர்.எஸ்.சண்முகம்.

விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையால் புத்தகப் பூங்காவில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வார நாள்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மடங்காக அதிகரித்தது. புத்தகக் காட்சிக்கு சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் வாசகர்கள் வந்தனர்.

இந்த ஆண்டு அதிகரிப்பு:கடந்த ஆண்டு காயிதேமில்லத் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு 5 லட்சம் வரை பார்வையாளர்கள் வந்தனர். ரூ.3 முதல் 4 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகின. ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். மேலும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது என்றார் சண்முகம்.

இளம் படைப்பாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு:இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் களமாகவும் புத்தகக் காட்சி விளங்கியது. இளம் படைப்பாளிகள் உருவாக்கிய நாவல் மற்றும் சிறு கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக பதிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கன்னி முயற்சியாக, தான் படைத்துள்ள “எனது அப்பாவின் நண்பர் உயரமானவர்‘ என்ற சிறுகதை தொகுப்புக்கு புத்தகக் காட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார் பா.சரவணக்குமரன்.

கடைசி நாளில் மக்கள் வெள்ளம்:கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்பே பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். கூட்ட நெரிசலால், ஒவ்வொரு அரங்கத்துக்கு உள்ளேயும் சென்று வர நேரம் பிடித்தது. “”சென்னை புத்தகக் காட்சி வாசகர்கள் இடையே ஒரு இயக்கமாக உருவாகி இருக்கிறது. இதற்கு சரியான இடத்தில் விதை போட ஆலோசித்து வருகிறோம் என்றார் சண்முகம்.

திடீரென முளைத்த நடைபாதைக் கடைகள்

சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் இடத்துக்கு வெளியே பழைய புத்தகங்களின் சங்கமமான நடைபாதை புத்தகக் கடைகள் இடம்பெறுவது வழக்கம். புத்தகக் காட்சிக்கு ஈடாக ஆண்டுதோறும் இந்தக் கடைகளும் களை கட்டி இருக்கும்.

ஆனால், புத்தகக் காட்சி இடமாற்றம் காரணமாக இந்த ஆண்டு நடைபாதை புத்தகக் கடைகள் முளைக்காமல் இருந்தன. ஆனால், திடீரென புத்தகக் காட்சியின் கடைசி நாளில் நடைபாதை புத்தகக் கடைகள் தோன்றின. புத்தகக் காட்சி நடைபெற்ற இடத்துக்கு எதிர்புறம் இருந்த நடைபாதையில் பழைய புத்தகங்கள் கடைவிரிக்கப்பட்டு இருந்தன.

Posted in 3 Rs, 30, Bestsellers, Book Exhibition, Book Fair, Book Sales, Books, Chennai, Hotsellers, Kalainjar, Karunanidhi, Literature, Madras, Pa Saravanakkumaran, Pa Saravanakumaran, Publish, Read, RS Shanumgam, RS Shanumgham, Students, Thamizh, XXX | Leave a Comment »

Two rupees as Fees – 60 year Doctor practice & service by VS Jayaraman in Vellore

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

60 ஆண்டு மருத்துவ சேவையில் “2 ரூபாய் டாக்டர்’

வேலூர், டிச.21: வேலூர் அடுத்த காந்தி நகரில் வசிக்கும் டாக்டர் வி.எஸ். ஜெயராமன் (85) ரூ.2 என்ற குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

காந்தி நகரில் 2 ரூபாய் டாக்டர் என்றால் ஜெயராமனை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு இவர் பிரபலம்.

1946-ல் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து தனது சேவையைத் தொடங்கிய இவர் இன்று வரை மாலை நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதித்து மருந்துகளை வழங்குகிறார்.

சாதாரண ஜுரம், சளி, இருமல் உள்ளிட்ட வியாதிகளுக்கு இவரே மாத்திரை, மருந்துகளை வழங்குகிறார். இதற்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கும் அவர் பரிசோதனைக்கு பணம் பெறுவதில்லை. மஞ்சள் காமாலை, டைஃபாய்டு உள்ளிட்ட தொடர் சிகிச்சைக்கு மருந்தளித்து ரூ.3 கட்டணம் பெறுகிறார்.

தவிர்க்க இயலாத நிலையில் மட்டுமே மருந்துக் கடைகளில் சற்று கூடுதலான விலையில் கிடைக்கும் மருந்துகளை எழுதித் தருகிறார். அவையும் ரூ.10-க்கு மிகாமல் கிடைத்து விடும். இவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சில மருந்துக் கடைக்காரர்கள் தனியாக வரவழைத்து விற்பனை செய்வதும் உண்டு.

“மருந்துக் கடைகளில் மிகக் குறைந்த விலையில் பல வீரியமாக செயல்படக்கூடிய மருந்துகள் கிடைக்கின்றன. அதனால் நான் குறிப்பிட்டு எழுதிக் கொடுக்கும் மருந்துகளுக்கு பதில் மாற்று மருந்துகளை தருவதற்கு மருந்துக் கடைக்காரர்கள் தயங்குவதுண்டு’ என்கிறார் ஜெயராமன்.

மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருந்துகளை மருந்து நிறுவனங்கள் அளிப்பதுண்டு. அந்த முறையில் அவற்றை வாங்கி நோயாளிகளுக்கு தருவதால் ரூ.2 கட்டணம் எனக்கு கட்டுப்படியாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in +2, 60+, Aashish Vithiyaarthi, Aashish Vithyarthi, Cool, Doctor, E, Good, Health, medical, Medicine, Noble, PCP, people, profile, Quote, Read, service, Tamil, Theomen, Unknown, Vellore, VS Jayaraman | Leave a Comment »