Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 13th, 2008

Feb 12: Eezham, Sri Lanka, LTTE, Wanni, Food Shortages, Murders – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2008

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு

இலங்கையின் வடக்கே மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக நேரடி வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருப்பதனாலும், வவுனியா வரையில் நடைபெற்று வந்த வடபகுதிக்கான ரயில் சேவை மதவாச்சியுடன் நிறுத்தப்பட்டிருப்பதனாலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்களைக் அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான நிவாரண உணவு விநியோகம் தடைபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தமிழோசைக்குத் தெரிவித்த விபரங்களையும், பாதுகாப்பு தரப்பில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நாணயக்கார கூறியுள்ள கருத்துக்களையும் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


இலங்கை உயிரிழப்புகள் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் கவலை

 

இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்படும் மற்றும் காயமடையும் பொதுமக்களின் எண்ணிக்கையானது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 6 வாரங்களில் 180 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட புதிய எண்ணிக்கை கூறுகிறது.

மேலும் சுமார் 270 பேர் காயமடைந்துள்ளார்கள்.

ஒரு தற்கொலைத் தாக்குதலில் மாத்திரம் ஒரு உயர் பள்ளிக்கூடத்தின் பேஸ் போல் குழுவின் அரைவாசிப்பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் முறையாக வெளியேறியதை அடுத்து அங்கு வன்செயல்கள் அதிகரித்தன.


தமிழர் கைதின் போதான முறைகேடுகளை ஆராய குழு நியமிக்க உத்தரவு

 

கொழும்பில் தமிழர்கள் கைது செய்யப்படும் போது ஏற்படுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆராய குழுவொன்றை நியமிக்ககுமாறு இன்று உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல்செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிப்பிக்கப்பட்டது.

இக் குழுவில் நீதி அமைச்சின் செயலாளர், சட்ட மாஅதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.

தமிழர்களிடம் வங்கிக் கணக்கு எண் மற்றும் அதில் உள்ள பணம் போன்றவற்றின் விபரங்களைக் கேட்பது, கொழும்பில் அவர்கள் தங்கும் நாட்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கேட்கப்பட்ட விவரங்களும் மனித உரிமையை மீறும் செயலாகும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளதாக, இந்த வழக்கில் இ.தொ.கா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் தமிழோசையிடம் தெரிவிததார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 பிப்ரவரி, 2008


வவுனியா மருத்துவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

போராட்டத்தில் மருத்துவர்களுக்கு துணையாக தாதிமாரும் ஈடுபட்டனர்
போராட்டத்தில் மருத்துவர்களுக்கு துணையாக தாதிமாரும் ஈடுபட்டனர்

இலங்கையின் வடக்கே மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனங்களில் பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக இராணுவத் தரப்பிலிருந்து கிடைத்த சாதகமான பதிலையடுத்து, அந்த வைத்தியர்கள் இன்று மேற்கொண்டிருந்த ஒருநாள் அடையாள கவன ஈர்ப்புப் போராட்டம் மதியத்துடன் கைவிடப்பட்டது.

மதவாச்சி சோதனைச்சாவடியின் ஊடாக பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் எதுவும் பிரயாணம் செய்ய முடியாது என்ற தடை கடந்த இரண்டு வாரங்களாக நடைமுறைப் படுத்தப்பட்டுவருகின்றது.

இந்தத் தடையினால் பல்வேறு தரப்பினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடபகுதி மாவட்டங்களில் இதனால் சுகாதார சேவைகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் பல பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்குவதற்காக, திணைக்கள வாகனங்கள் மற்றும் வைத்தியர்களின் தனியார் வாகனங்கள் என்பவற்றை மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வவுனியா, மன்னார் வைத்தியாசாலை வைத்தியர்கள் கோரி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து இரு தினங்களில் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தரப்பில் இன்று உறுதியளிக்கப்பட்டதையடுத்தே இன்றைய அடையாள கவன ஈர்ப்புப் போராட்டம் மதியத்துடன் கைவிடப்பட்டதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் பேச்சாளார் டாக்டர் சிவராஜசிங்கம் சிவப்பிரியன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் தொடர்பூடக அடக்கு முறைக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலம்

 

இலங்கையில் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்ற தொடர்பூடக அடக்கு முறைக்கு எதிராக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊடக அடக்கு முறைக்கு எதிரான அமைப்பினால், இன்று கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமும், கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

பல நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களும், ஏனைய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டார்கள்.

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள டி மெல் பூங்காவில் ஆரம்பமான இந்த ஊர்வலம் ஜெயவர்த்தன நிலையம் வரை தொடர்ந்தது. அதன் பின்னர் அங்கு ஒரு கூட்டமும் நடைபெற்றது.

இலங்கையைச் சேர்ந்த 5 ஊடக அமைப்புக்களுடன், வேறு பல தொழிற்சங்கங்களும், பொது அமைப்புக்களும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஊர்வலத்துக்கான ஏற்பாடு மற்றும் நோக்கம் குறித்து இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரான ஆர். பாரதி மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் சிவகுமார் ஆகியோரது கருத்துக்களடங்கிய மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 பிப்ரவரி, 2008


மன்னார் கடற்பரப்பில் மீட்கப்பட்ட மீனவர்கள் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

இந்திய மீனவர்கள்
இந்திய மீனவர்கள்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் இயந்திரக்கோளாறு காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த மீன்பிடி இழுவைப்படகில் இருந்து தலைமன்னார் கடற்படையினரால் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட 3 தமிழக மீனவர்களையும் கொழும்பு மீரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்த இந்த மீன்பிடி இழுவைப் படகை, இன்னுமொரு இந்திய மீன்பிடி இழுவைப்படகு கட்டி இழுக்க முற்பட்டபோது கயிறு அறுந்து இரு படகுகளும் மோதிக்கொண்டதன் காரணமாகவே தாங்கள் காயமடைந்ததாக 3 தமிழக மீனவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஏனைய இருவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 பிப்ரவரி, 2008

போக்குவரத்து தடையினால் கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு மருந்துப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது

வவுனியா இரயில் நிலையம்
வவுனியா இரயில் நிலையம்

இலங்கையின் வடக்கே மதவாச்சி சோதனைச்சாவடியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீவிரமான வாகனப் போக்குவரத்துத் தடையினாலும், வவுனியா வரையில் நடைபெற்று வந்த ரயில் சேவை மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனாலும், கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்திற்கான எரிபொருளை அங்கு எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குரிய ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் தமது நடவடிக்கையையடுத்து மதவாச்சி வரையில் ரயிலில் கொண்டு வரப்பட்டு, பின்னர் லொறிகள் மூலமாக வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அந்த மருந்துப் பொருட்களை ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகக் கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்வதற்குரிய பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி கூறுகின்றார்.

கிளிநொச்சி வைத்தியசாலைகளில் குழந்தைகளுக்கான முக்கிய மருந்துப் பொருட்கள், அன்ரி பயட்டிகள் எனப்படும் நுண்ணியிர் கொல்லிகள், கிளினிக் மருந்துகள் என்வற்றிற்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், புதிய கையிருப்புகள் உடனடியாக அங்கு போய்ச் சேராவிட்டால் நிலைமை மோசமடையலாம் என்றும் அவர் கூறுகின்றார்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 பிப்ரவரி, 2008

மட்டக்களப்பில் வேட்பாளர்களுக்கு மிரட்டல்

மட்டுநகர்
மட்டுநகர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமது வேட்பாளர்கள் பலருக்கு விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட எச்சரிக்கை கடிதங்கள் கிடைத்துள்ளதாக இந்த தேர்தலில் கூட்டாக சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் ஈ.பி.டி.பி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் கூறுகின்றன.

இருப்பினும் தமது வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள இந்த எச்சரிக்கையானது விடுதலைப்புலிகளால்தான் மேற்கொள்ளப்பட்டது என்று தம்மால் உறுதியாகக் கூறமுடியாது இருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் அணியின் சார்பிலான துரைரட்ணம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் குறிப்பாக களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுவைச் சார்ந்தவர்கள் ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் இந்தக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்தத் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு தங்களால் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறையில் கிறிஸ்தவ மதபோதகர் கொலை

இதற்கிடையே அம்பாறையில் கிறிஸ்தவ மதப்பிரிவொன்றைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இந்த மதபோதகர், குருநாகலைச் சேர்ந்த நீல் சம்சன் எதிரிமன்ன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் அவரது மனைவியும், அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஒன்றரை வயதுக் குழந்தையும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளிகளோ, அல்லது சம்பவத்தின் பின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 பிப்ரவரி, 2008


வவுனியா மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

மகஜரில் கையெழுத்திடும் மக்கள்
மகஜரில் கையெழுத்திடும் மக்கள்

இலங்கையின் வடக்கே மதவாச்சி சோதனைச்சாவடியில் வாகனப் போக்குவரத்துக்கு விதிக்க்பபட்டுள்ள தடையை நீக்கி, மதவாச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவையை வவுனியா வரையில் நீடிக்கக் கோரி வவுனியா பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

இதற்காக இன்று காலை வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் மதத்தலைவர்கள், வர்த்தகர்கள், அரச ஊழியர்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பட்டவர்களும் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களில் இருந்து கலந்து கொண்டார்கள்.

சுதந்திரமாக பிரயாணம் செய்ய முடியாதவாறு தடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பலரும் இந்தத் தடை நீக்கப்பட்டு சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றார்கள்.

இந்தக் கையெழுத்து வேட்டையை ஒழுங்கு செய்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமாகிய பி.எச்.சாந்தகுமார வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இருந்து மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக மோட்டார் சைக்கிளில் கூட செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இப்பிரதேசங்களின் விவசாய உற்பத்திப் பொருட்களைத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லமுடியவில்லை. சோதனை கெடுபிடிகள் காரணமாக வவுனியாவில் பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

சோதனை நடவடிக்கைகள் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்ற அவர், அந்தச் சோதனை நடவடிக்கைகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாக இருப்பதை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்களின் கையெழுத்துக்களுடன் கூடிய மகஜரில் கோருவதாகக் கூறுகின்றார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும், எமது வவுனியா செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 பிப்ரவரி, 2008


இலங்கையின் கதிர்காமம் புத்தல பிரதேசத்தில் புலிகளின் தாக்குதலில் மூன்று படையினர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் மொனறாகலை மாவட்டத்தின் கதிர்காமம் புத்தல பிரதேசத்தில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து கருத்துவெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று காலை சுமார் பதினொரு மணியளவில் கதிர்காமம்-புத்தல பிரதான வீதியில் தம்பகோட்டே என்னுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதிச் சோதனைச் சாவடிமீது புலிகளின் சிறிய அணியொன்று தாக்குதல் நடாத்தியதாகவும், இதன்போது இங்கு காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதன்போது படையினர் திருப்பித் தாக்கியதில் புலிகளிற்கும் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு இந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்காகவும், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் மேலதிக படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.


மன்னாரில் கடும் மோதல்

விடுதலைப்புலிகள்

இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மன்னார் முன்னரங்கப் பகுதிகளில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாக மன்னார் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் நிலைகொண்டுள்ள இலங்கை அரச படையினர், விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதல் காரணமாக புதன்கிழமை காலை மன்னாருக்கும், வவுனியாவுக்கும் இடையேயான போக்குவரத்து ஒரு மணிநேரம் தடைபட்டிருந்தது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனிடைய வவுனியா செம்பந்தோட்டம் பகுதியில் 2 விடுதலைப் புலிகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

இவர்களது உடல்கள் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன

புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 பிப்ரவரி, 2008


கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் 8 பேர் பலி என்கிறார்கள் விடுதலைப் புலிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சி மாவட்டத்தின் புனகரி, கிராஞ்சி பகுதியில் உளள் கடற்கரைக் குடியிருப்பின் மீது இன்று காலை 9 மணியளவில் அரச விமானப்படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 8 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் லிகள் கூறியிருக்கின்றனர்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் பாரிய முகாம் ஒன்றை விமானப்படையினர் தாக்கியழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இந்தக் கரையோரத்தில் உள்ள பேய்முனையில் இருந்து மேற்குப் பகுதியில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராஞ்சி என்ற பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் 5 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், 3 பேர் வைத்தியசாலையில் மரணமாகியதாகவும் விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார்கள்.

காயமடைந்தவர்கள் முதலில் முழங்காவில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து 9 பேர் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாக கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து வைத்தியசாலை அதிகாரி ஒருவரும் குடும்பத்தினரை இழந்த மீனவர் ஒருவரும் இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்காரவும் தமிழோசைக்கு வழங்கிய கருத்துகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பங்குதந்தை பொன்னையா ஜோசப் ஆயராக நியமனம்

ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பங்குதந்தை பொன்னையா ஜோசப்

இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1980ஆம் ஆண்டு குருத்துவ பட்டம் பெற்ற இவர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல தேவாலயங்களில் பங்கு தந்தையாக பணியாற்றியதோடு 2006ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு – திருகோணமலை மறை மாவட்டத்தின் குருமுதல்வராகப் பணியாற்றினார்.

பரிசுத்த பாப்பரசரினால் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்தை இலங்கைக்கான வத்திக்கான் பிரதிநிதி பேராயர் மரியோ செனாரி நேரடியாக கையளித்துள்ளார்.

புதிய ஆயராக நியமனம் பெற்றுள்ள பொன்னையா ஜோசப் தமது மறை மாவட்டத்தில் துணை ஆயராக திருநிலைப் படுத்தப்படவிருப்பதாக மட்டக்களப்பு – திருகோணமலை ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆயராக வரவேண்டும் என்ற கத்தோலிக மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியிருப்பதாக ஆயர் பொன்னையா
ஜோசப் தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

Posted in Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka, Tamil | Leave a Comment »