Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Ramanathapuram Government Hospital Ambulance: Not useful for emergency medical services

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

அவசரத் தேவைக்கு பயன்படாத ஆம்புலன்ஸ் வாகனங்கள்: எஸ்.வி.எஸ். ஜெகஜோதி

ராமநாதபுரம், பிப். 13: ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும் சில சமயங்களில் அவற்றை பயன்படுத்த அவ்வாகன ஓட்டுநர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் அவசரத் தேவைக்கு அவற்றை பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றிலும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்துகள் நிகழ்ந்தால் தகவல் தெரிவிப்பதற்கென்றே ஆம்புலன்ஸ் வாகன கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதன் தொலைபேசி எண் 1056. இவ்வாகனத்தில் ஓட்டுநர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.

விபத்துகள் எங்கு நேரிட்டாலும் தகவல் வந்தவுடன் அங்கு உடனடியாகச் சென்று அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்கு கட்டணம் இல்லை. தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்காக வெளியூர்களுக்குச் செல்ல ஒரு கி.மீ.க்கு ரூ. 5 வீதம் கட்டணம் செலுத்தி நோயாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இம்மாதம் 9 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே டிராக்டர் மீது ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு மீன் ஏற்றிச்சென்ற மினிலாரி நேருக்கு நேராக மோதியது. இச்சம்பவத்தில் டிராக்டர் டிரைவர் சக்தி (26) பலத்த காயமடைந்தார். சக்தியை காயம் அடைந்த இடத்திலிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவர காவல்துறையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வற்புறுத்தி அழைத்தும் ஓட்டுநர் வரமறுத்து விட்டார்.

பின்னர் டிராக்டரில் பயணம் செய்த பிறர் சக்தியை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது அவரது நிலைமை மேலும் கவலைக்கிடமானது.

பெட்ரோல் செலவு அதிகமாகிறது என்றும் விபத்து வழக்கில் காவல்துறையினர் எங்களையும் சாட்சியாக சேர்ப்பதால் வரமுடியாது எனவும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி கூறியதாவது:

விபத்து நடந்த இடத்திலிருந்து காயம் அடைந்தோரை தூக்கி வர கட்டணம் இல்லை. ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திற்கு வரவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1056-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கும் கட்டணம் இல்லை என்றார்.

பொதுமக்கள் கண்களில் படாதவாறு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வாகனங்களை மறைத்து வைப்பது, மேல் சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு அழைத்து செல்லும் போது கூடுதல் கட்டணம் கேட்பது, பெட்ரோல் செலவை காரணம் காட்டி விபத்து நடந்த இடங்களுக்கு வராமல் மறுப்பது, வேறு ஏதேனும் ஒரு சாதாரண பணிக்குச் செல்லும் போது கூட வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டே போவது போன்றவற்றை ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இத்தவறுகள் திருத்தப்பட்டால் மேலும் பல உயிர்களை காப்பாற்றவும் பேருதவியாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: