பொதுக் குழுவா..?மாநாடா..?
அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. உடன், (வலமிருந்து) கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் இ.மதுசூதனன், அரசியல் ஆலோசகர் பொன்னையன், எம்ஜிஆர் மன்றச் செயலாளர் டி.ஜெயக்குமார்.
சென்னை, பிப். 13: சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – செயற்குழுக் கூட்டம், பிரம்மாண்ட மாநாட்டைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது பேச்சிலேயே இதைக் குறிப்பிட்டுப் பேசினார். “கூட்டத்துக்கு வரும் வழியெங்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த போது இது மாநாடா? அல்லது பொதுக் குழுவா? என்ற வியப்பை ஏற்படுத்தியது’ என்றார்.
உண்மை தான். கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் செல்லும் வழியெங்கும் வாழைமரத் தோரணங்கள், டிஜிட்டல் போர்டுகள், கட்சிக் கொடி என பூந்தமல்லி நெடுஞ்சாலையே விழாக் கோலம் பூண்டிருந்தது.
மாநாடு நடைபெற்ற திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காலை 10.10 மணிக்கு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ஜெயலலிதா வந்தார். அங்கு அவருக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கேரளப் பெண்கள் போல இளமஞ்சள் நிற சேலை அணிந்த இளம் பெண்கள் வரிசையாக நின்று வரவேற்றனர்.
தாரை, தப்பட்டைகள் முழங்க, ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற பலூன்கள் வானில் ஏராளமாக பறக்க விடப்பட்டன.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் பொதுக் குழு-செயற்குழுக் கூட்டத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்கத் தயாராக நிற்கும் குதிரைப் படையினர்.
50-க்கும் மேற்பட்ட குதிரைகள் அணிவகுத்து நின்று ஒருபுறம் வரவேற்பு கொடுக்க, மறுபுறம் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற்றன. இதுதவிர, மிக்கி மவுஸ், டொனால்ட் டக் கார்ட்டூன் சித்திரங்கள் போன்ற உடைகளை அணிந்த கலைஞர்களும் அரங்கத்தின் முன்பகுதியில் நின்று வரவேற்றனர்.
கொண்டாட்டத்தின் முன்னோட்டமோ? வரும் பிப். 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. ஆனால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வைத்த பேனர்களும், கட் – அவுட்களும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன. கொக்கிலி கட்டை ஆட்டம் ஆடி, ஜெயலலிதாவை வரவேற்ற அதிமுக தொண்டர்கள்.
கூட்டத்துக்குப் பின், கட்சியினரின் பசியைப் போக்க உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சைவம், அசைவ உணவுகள் பரிமாற தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
மதுரவாயல் செல்லும் சாலை ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலால் திணறும். இதில், புதன்கிழமை மாநாடு போல நடைபெற்ற அதிமுக செயற்குழு – பொதுக் குழுக் கூட்டத்துக்கு அதிகம் பேர் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலை நெடுங்கிலும் கட்சியின் தொண்டர்கள் வலம் வந்தபடி இருந்தனர். கூட்டம் முடிந்த பின்பு, பஸ், ஆட்டோ கிடைக்காதவர்கள் பல கிலோ மீட்டர் நடந்து சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தை அடைந்தனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.
போக்குவரத்து நெரிசல்:
கோயம்பேடு- மதுரவாயல்- வானகரம் செல்லும் சாலையில் காலை 8.45 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், இச் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்தப் போக்குவரத்து நெரிசலால் நீண்ட தூரத்துக்குச் சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
இதே போல பொதுக்குழுக் கூட்டம் முடிந்தபின் ஜெயலலிதா புறப்பட்டுச் சென்ற பின்னரும் நீண்ட நேரம் வாகன நெரிசல் நீடித்தது.
சசிகலா வருகை:
ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் இக் கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக் குழுக் கூட்டம் செல்லும் வழியில் போலீஸôரின் கெடுபிடி ஏதும் இல்லை.
செயற்குழு-பொதுக்குழு கூட்டத்துக்கு வராமல் பரபரப்பை ஏற்படுத்திய சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி.சேகர், திடீரென கூட்டத்துக்கு வந்து பந்தியில் அமர்ந்து உணவருந்தினார்.
வந்தார், எஸ்.வி. சேகர்!
சென்னை வானகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டத்துக்கு எஸ்.வி. சேகர் தாமதமாக வந்து சேர்ந்தார்.
முன்னதாக இக் கூட்டத்துக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று கூறி, மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியை எஸ்.வி. சேகர் ராஜிநாமா செய்ய உள்ளதாக அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், இதுகுறித்து எஸ்.வி. சேகர் பின்னர் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று ஜெயலலிதா புறப்படுவதற்கு சற்று முன்பு, அவரை எஸ்வி சேகர் சந்தித்துப் பேசினார்.
இதன்பின் கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து, அமர்ந்து எஸ்வி சேகர் மதிய உணவு சாப்பிட்டார்.