Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 12th, 2008

60pc marks for Grants – Restrictions on SC/ST Scholarships: A Flawed Government Policy?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

நிபந்தனைகளும் நியாயங்களும்

இரா.சோமசுந்தரம்

ஒரு சட்டம் அல்லது புதிய நிபந்தனை புகுத்தப்படும்போது அதற்கான காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதில்லை.

அத்தகைய நிபந்தனை அல்லது சட்டத்தை எதிர்க்கும்போது ‘இதை இப்போது அமல்படுத்துவதன் அவசியம் என்ன?’ என்று கேள்வி கேட்பதும், அதற்கு அரசு சொல்லும் காரணத்தை விவாதத்துக்கு உட்படுத்துவதும், பெருந்திரளானோரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அது அமலாகும்படி பார்த்துக் கொள்வதும் நியாயமான அணுகுமுறைதான்.

இப்போது பட்டியல் வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே உதவித்தொகை தரப்படும் அல்லது தொடரும் என்ற நிபந்தனைக்கு பட்டியல் வகுப்பு மாணவர்கள் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

திடீரென இப்படியொரு நிபந்தனையை மத்திய அரசு கொண்டுவரக் காரணம் என்ன? என்பது பற்றி மாணவர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, யாருமே பேசவில்லை.

இந்த நிபந்தனையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளாவிட்டாலும், மாநில அரசு தனது நிதியில் இந்த மாணவர்களுக்கு உதவித்தொகையை நிபந்தனையின்றி வழங்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரும்கூட, இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கவோ, அல்லது மாணவர்களுக்கு அறிவுறுத்தவோ முயலவில்லை.

ஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது?

மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி சில தனியார் அறக்கட்டளைகளும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டுஉறைவிட வசதியும் அளிக்கின்றன. அல்லது அதற்கான செலவை ஏற்கின்றன.

இந்தத் தனியார் அறக்கட்டளைகளின் கருணை நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவர்களிடம் சலுகையைப் பெறும் மாணவர், ஒரு பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர் உதவித்தொகை அல்லது இலவச விடுதி சலுகையை இழந்துவிடுவார். மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே (எந்தப் பாடத்திலும் ‘அரியர்ஸ்’ இல்லாத போதுதான்) அவருக்கு இலவச சலுகை மறுபடியும் தொடரும். அதுவரை, ஒன்று அவர் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது பொது மாணவர்களுக்கு இணையாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை, அந்த மாணவர்கள் தங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கவனம் சிதறினால், கல்விக் கட்டணம் கையைக் கடிக்கும்.!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கும் அவர்களது இலவச உண்டுஉறைவிடத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடுகின்றன.

இந்த மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காத மத்திய அரசு, இப்போது அதை நடைமுறைப்படுத்துவது ஏன்? உயர்கல்வியில் இந்த மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதுதான் காரணம். இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும். ஆனால் அவர்களும் அரசியல்வாதிகள் போலவே மெüனம் சாதிக்கிறார்கள்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் (அரியர்ஸ் இருக்கக்கூடாது) என்று எதிர்பார்க்கும் உரிமைகூட அரசுக்கு இல்லாமல் போகுமா?

நகரங்களில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்து, இலவச உண்டுஉறைவிடத்தில் தங்குவதற்கும் இடம் கிடைத்துவிட்டால், பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கும்வரை (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு) கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை.

இந்த உண்மையை அறிந்துகொள்ள ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துப் பார்க்கலாம். அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் உணவு உறைவிட சலுகை பெறும் மாணவர்களில் எத்தனை பேர் அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் (அரியர்ஸ் இல்லாதவர்கள்) என்பதை கல்வித் துறை மிக எளிதில் கணினி உதவியுடன் பட்டியலிட முடியும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண் நிபந்தனையை வைத்தால், பெரும்பாலான மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அத்துடன், பொது ஒதுக்கீட்டிலும் இடம்பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

அரசின் நிபந்தனையை எதிர்ப்பவர்கள் யார்? கல்லூரியிலும் மாணவர் விடுதியிலும் இடம் கிடைக்கப்பெற்று, கல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்கள் கவனத்தை நகர வாழ்வின் மோகத்தில் சிதறவிடும் மாணவர்கள்தான்.

அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெறுவது கடினம் என்று கருதினால், பருவத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையை மட்டுமாவது ஏற்க முன்வர வேண்டும்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

Posted in Caste, Castes, Government, Govt, Grants, Marks, Policy, Reservations, restrictions, SC, Scholarships, ST | 1 Comment »

Star Vijay TV’s ‘Neeya? Naana??’: Interview with Moderator Gopinath

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

சண்டே சினிமா

எத்தனை மனிதர்கள்… எத்தனை எண்ணங்கள்?

வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் மட்டுமல்ல… சமூகப் பிரச்னைகளை முன் வைத்து உருவாக்கப்படும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளாலும் நேயர்களைப் பெரிதளவில் ஈர்க்க முடியும் என உணர்த்தி வரும் சில அரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது விஜய் டி.வி.யின் ‘நீயா? நானா? இதில் சமூகப் பிரச்னைகளோடு மக்கள் எதிர்கொள்ளும் தனிநபர் பிரச்னைகளுக்கும் உரியவர்களைக் கொண்டு உளவியல் ரீதியாகத் தீர்வு காணுவது சிறப்பு. ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி, மெúஸஜ் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் சரியான அளவில் இடம்பெற்றிருப்பதும் இந்த நிகழ்ச்சியை நேயர்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பதற்கு ஒரு காரணம். நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகவும் நடுநிலைமையோடும் வழங்கி வரும் கோபிநாத்திடம் அவர் பாணியிலேயே ‘சரி உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…’ என்று தொடங்கினோம்…

பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில். திருச்சியில் படிப்பு. பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. தற்போது சென்னையில் அப்பா, அம்மா, அண்ணனுடன் வசித்து வருகிறேன். அப்பா பிஸினஸ்மேன். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். அண்ணன் விளம்பரப் பட ஒளிப்பதிவாளராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இந்தத் துறைக்கு வந்தது எப்படி?

பி.பி.ஏ. முடித்தவுடனேயே சென்னைக்கு வந்துவிட்டேன். 1996-ல் இருந்து மீடியாவுடன் எனக்குத் தொடர்பு. ‘யு’ டி.வி.யில் ஆரம்பித்து ராஜ் டி.வி., ஜெயா டி.வி., இந்தியா டி.வி., ஸ்டார் விஜய் டி.வி. என என்னுடைய கேரியர் தொடருகிறது. தற்போது ‘ரேடியோ சிட்டி’ எஃப்.எம்.மிலும் ரேடியோ ஜாக்கியாக இருக்கிறேன்.

‘ரேடியோ சிட்டி’ எஃப்.எம்.மில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குகிறீர்கள்?

ரேடியோ சிட்டி ‘ட்ரைவ் டைம்’-இல் (டி.வி.யில் ப்ரைம் என்றால் ரேடியோவில் ட்ரைவ் டைம்’) ‘ஜாய் ரைடு’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இது ஒரு நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி. இதில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏடிஎம் (வினாடி வினா நிகழ்ச்சி), சிட்டி கிரிக்கெட் (ஓர் இடத்தின் பெயரைச் சொன்னால் அதற்கு மிகப் பொருத்தமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்), பிரமிடு (வார்த்தை கட்டமைப்பு), எஸ் கார்னர் (இதில் நேயர்கள் ‘நோ’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் பதிலளிக்க வேண்டும்) போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளையும் சனிக்கிழமை பிரபலங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் ஞாயிற்றுக்கிழமை ‘சினிமா சினிமா’ என்ற விமர்சன நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறேன். இவை அனைத்தும் ‘நீயா? நானா?’ போல விறுவிறுப்பாகவே இருக்கும்.

ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் டி.வி.யில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் உள்ள வித்தியாசம்..?

டி.வி.யை ஒப்பிடும்போது ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துவது கொஞ்சம் சிரமம்தான். டி.வி.யில் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட சம்பவங்களையோ இடங்களையோ காட்சி வடிவில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் ரேடியோ நேயர்களுடன் நாம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அதைப் பற்றிய காட்சி வடிவம் அவர்களுடைய மனதில் அப்படியே பதியுமாறு பேச வேண்டும். அப்போதுதான் தொகுப்பாளருக்கும் நேயருக்கும் இடையே ஒரு நெருக்கம் ஏற்படும். குரலில் ஏற்ற இறக்கமும் அவசியம்.

‘நீயா? நானா?’ நிகழ்ச்சி பற்றி..?

தொலைக்காட்சி நேயர்கள் விரும்பிப் பார்ப்பது விவாத மேடை நிகழ்ச்சி. இதில் இதுவரை சுமார் 70 தலைப்புகளுக்கு மேல் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறோம். விரைவில் 100 வது எபிúஸôடைத் தொடவுள்ளோம்.

நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் உங்களுக்குச் சிரமமாக அமைந்து ‘இதை ஏன்தான் தேர்ந்தெடுத்தோம்?’ என வருத்தப்பட்ட தலைப்பு இருக்கிறதா?

அப்படிக் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. எல்லாத் தலைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே. மிகுந்த கவனத்தோடும் அவற்றின் பின்புலத்தை அறிந்தும்தான் தேர்ந்தெடுக்கிறோம். சிரமம் என்று சொன்னால் எல்லாத் தலைப்புகளுமே சிரமத்தை ஏற்படுத்தியவைதான். அதனால்தான் ஒரு நிகழ்ச்சி சூப்பர்; இன்னொன்று சுமார் என்ற பேச்சு வரவில்லை.

இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றது? இழந்தது?

இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. கற்றதுதான் அதிகம். எத்தனையோ மனிதர்கள்; எத்தனையோ எண்ணங்கள்; விதவிதமான பிரச்னைகள்; வித்தியாசமான சம்பவங்கள் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள முடிகிறது. நாம் தவறு என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் சரியாகவும் சரி என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் தவறாகவும் தோன்றுகின்றன. மக்கள் மனதில் இருந்து பிரவாகமாக சில விஷயங்கள் வெளிப்படும்போது அதற்கு உண்டாகும் வலிமையே தனி. பலதரப்பட்ட மக்களுடைய வாழ்க்கையின் பின்புலங்களை என்னோடு விஜய் டி.வி. நேயர்களும் அறிந்துகொள்ள முடிவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் என நீங்கள் நினைப்பது?

மக்களின் குரலை மக்களே பிரதிபலிப்பதுதான்!

உங்களுக்குப் பிடித்த இதர விஷயங்கள்?

புத்தக வாசிப்பு மிகவும் பிடிக்கும். அதிலும் உலக வரலாறு தொடர்பான புத்தகங்கள் என்னுடைய ஃபேவரைட். கவிதைகளில் அதிக ஈடுபாடு உண்டு. சமகாலக் கவிஞர்கள் அனைவரின் கவிதைகளையும் விரும்பிப் படித்து வருகிறேன். நான் கூட கவிதைகள் எழுதுவேன். சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் கல்லூரி நாட்களில் நண்பர்களுக்காக நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளேன்.

ரோல் மாடல் என நீங்கள் கருதுவது?

ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. சிறு வயதில் இருந்து என்னைப் பாதித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளையே எனது ரோல் மாடல்களாகக் கருதுகிறேன்.

டி.வி., ரேடியோ, புத்தகமும் எழுதியாகிவிட்டது… அடுத்த இலக்கு?

இப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி இயன்றவரை மக்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான். மற்றபடி நாளைய பெரிய திட்டம் என குறிப்பாக எதுவும் இல்லை. இந்த எண்ணம் கூட நாளையே மாறலாம். ஒரு புதிய விஷயத்தைச் செய்துபார்க்கலாம் என்று தோன்றும்போது அதில் முழு கவனத்துடன் ஈடுபடுவேன்.

Posted in Faces, FM, Gobinath, Gopinath, Interview, Media, Moderator, MSM, people, Radio, Radio city, Radiocity, Star, Star Vijay, TV, Vijai, Vijay, Visual | 19 Comments »

Interview with Dravidar Kazhagam Ki Veeramani: EVR Periyar’s Legacy

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

“வீரமணி அவர்களே, இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறீர்கள்?”
கோடை பண்பலை வானொலி நிலையத்தார் கேள்வி

தமிழர் தலைவர் அளித்த பதில் என்ன?

வீரமணியார் அவர்கள் இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறார் என்று கோடை பண்பலை வானொலி நிலையத்தார் எழுப்பிய கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பதில் அளித்தார்.

21-1-2008 அன்று கோடை பண்பலை வானொலிக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் அய்யாவால் பார்க்கமுடியவில்லையே

அய்யா அவர்கள் விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற நிறைவேற்றத்தை அய்யா அவர்கள் பார்க்காமலே கண் மூடினார்.

அய்யா அவர்களுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு எங்களை மாதிரி இருக்கின்ற எளியோர்கள் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

அய்ந்தாம் முறை முதல்வராக கலைஞர்

அய்ந்தாம் முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். முதல் திட்டமாக கலைஞர் அவர்களுடைய அமைச்சரவையைக் கூட்டி முதல் திட்டமாக அதை அவர் நிறைவேற்றியிருப்பது பாருங்கள். அது மிகப்பெரிய சாதனை வெற்றி. இது ஏதோ நான்கு பேருக்கு அர்ச்சகர் வேலை என்பது அல்ல. அதில்தான் சமுத்துவ சமுதாயம் அமைந்திருக்கின்றது.

மீதி இடங்களில் எல்லாம் ஜாதியினுடைய சின்னங்கள் இருக்கும். இன்னும் ஜாதித் திருமணங்கள் அதன் அடை யாளங்கள் குறியீடுகள் எல்லாம் இருக்கும். ஆனால் அதன் ஆதிக்கம் பச்சையாக சட்டப்பூர்வமாக இருக்கிறது. இன்னமும் சமுதாய அனுபவப்பூர்வமாக இருக்கிறது.

ஜாதியை ஒழிக்க

இரட்டைக் குவளை முறைகள் இருக்கின்றன. அதை எதிர்த்துப் போராடக் கூடிய நிலைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. ஆனால், அதிகாரப் பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட, அரசியல் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட முறை அங்குதான் இருந்தது.

அதனால்தான் பெரியார் அவர்கள் முழு வெற்றி அடைய வேண்டும் என்றால் ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றும் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்கள் அன்றைக்கு வைத்த கோரிக்கையில், நாங்கள் வெற்றி அடைந்திருக்கின்றோம்.

பெரியார் அவர்களால் முதல் சட்டத் திருத்தம்

பெரியார் காலத்தில் பல போராட்டங்களில் அவர் வெற்றி அடைந்தார். மத்திய அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு பெரியார் காலத்தில் இல்லை. அது அவ்வளவு சீக்கிரமாக வருமா? என்று பலபேர் நினைத்தார்கள். அரசியல் சட்ட முதல் திருத்தமே தந்தை பெரியார் அவர்களால்தான் உருவாக்கப்பட்டது – 1951-ஆம் ஆண்டு. கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று சொன்னவுடனே தந்தை பெரியார் அவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினார். இன்றைக்கு அவருக்குப் பிறகு அவருடைய 76-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

69 சதவிகித இட ஒதுக்கீடு

69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வந்தது. தந்தை பெரியார் அவர்கள் 50 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறினார். அவர் அரசியலை விட்டே வெளியேறி ஒரு சமுதாய இயக்கத்தை நிலை நிறுத்தி அவர் போராடியதே 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்காகத்தான். இன்றைக்கு 69 சதவிகித இடஒதுக்கீட்டை நீங்கள் பார்க்கலாம்.

50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு

50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வரவேண்டும் என்று பெரியார் சொன்னார். இன்றைக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு பெரும்பாலும் நடைமுறைக்கு வந்தாகிவிட்டது. இன்னும் 50 சதவிகிதம் வரவில்லை. பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்கள் பெரிய அளவிற்கு உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்து விட்டார்கள்.

எங்களுடைய காலத்தில் மத்திய அரசு மண்டல் குழு பரிந்துரையை எங்களது தொடர் பிரச்சாரத்தின் விளைவாக அமல்படுத்தியது. மத்திய அரசில் இட ஒதுக்கீடு பெற எங்களுடைய காலத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம்.

76-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வெற்றி

அதேபோல அரசியல் சட்ட திருத்தத்தில் 76-ஆவது திருத்தத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம். அதேபோல பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் இன்றைக்கு வந்திருக் கிறது. தந்தை பெரியாருடைய கொள்கைத் திட்டங்கள் எல்லாம் ஒரு தொடர் வெற்றிகளாக இன்றைக்கு வந்து கொண்டி ருக்கின்றன.
பெரியாருடைய காலத்திலும் வெற்றிகள் வந்திருக்கின்றன. பெரியாருடைய தொண்டர்கள் காலத்திலும் வெற்றிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் – மணியம்மையார் காலத்தில் வெற்றி

கேள்வி: தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களுடைய காலத்தில் தொடர்ந்து வெற்றிகள் வந்திருக் கின்றன. இதற்கு அடுத்து தலைவராக அய்யா நீங்கள் வந்திருக்கின் றீர்கள்.
வீரமணியார் அவர்களுடைய பணி இனி எப்படி?

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களைத் தாண்டி வீரமணியார் அவர்கள் என்ன செய்யலாம்? அவர்களுடைய பெயரும், புகழுக்கும் இன்னொரு மகுடம் சூட்டுவது போல் அல்லது மகுடத்தில் ஒளி முத்துக்களை, வைரங்களை வைப்பதுபோல வீரமணியார் அவர்கள் தனித்து நின்று இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று நினைக்கின்றார்?

தமிழர் தலைவர்: வீரமணி தனித்துச் சாதித்தார் என்ற சரித்திரம் வரவேண்டும் என்பது வீரமணிக்கு முக்கியமல்ல. பெரியாருடைய பணி முற்றுப்பெறவில்லை. அந்தப் பணி பெரியாரோடு முடிந்துவிட வில்லை. பெரியார் என்பது ஒரு சகாப்தம். ஒரு காலகட்டம். ஒரு திருப்பம் என்பதை ஒவ்வொரு நேரத்திலும் வருகிற தலைமுறைக்கு நினைவூட்டி, அவ்வப்பொழுது தேவைப்படுகிற செய்திகளை, செயல்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற பணியை நாங்கள் செய்துகொண்டிருக் கின்றோம். அவர்களுடைய கொள்கைகள் பரவுவதற்கு என் னென்ன திட்டங்களைச் செய்யவேண்டுமோ? அதைச் செய்கி றோம்.

தனி மனிதர் சாதித்தார் என்று சொல்லமாட்டேன்

அதில் ஒன்றுதான் நான் சற்று நேரத்திற்கு முன்னால் சொன்னதுபோல் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரையிலே, கல்விக் கூடங்களாகவும், கருத்து அறிவிப்புக்குரிய நிகழ்வுகளாகவும், ஏடுகளாகவும் பிரச்சாரம், செயல்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன.

பெரியாருக்குப் பின் இத்தகைய செயல்பாடுகளை தனி மனிதர் ஒருவர் சாதித்தார் என்று நான் சொல்லமாட்டேன். பெரியாருடைய அந்தத் தாக்கம், பெரியாருடைய கொள்கைகள், அதனுடைய விளைவுகள்தான் இப்பொழுது வந்திருக்கின்றன.

இப்பொழுது மார்க்சியம் என்று சொன்னால் மார்க்சிய சிந்தனைக் கருத்துகள் பல ரூபங்களில் பல நாடுகளில் பல பேரால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

`பெரியாரியம் மனித நேயம்

`பெரியாரியம் என்ற கொள்கை இருக்கிறது பாருங்கள், அது மானிடப்பற்று, மனித நேயம், மூடநம்பிக்கைக்கு எதிரானது, பேதத்திற்கு எதிரான.து, பெண்ணடிமைக்கு எதிரானது. இந்தக் கருத்துக்களை எல்லாம் எங்கெங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ, அங்கங்கு சேர்க்கப்படக்கூடிய தூதுவர்களாக தொழிலாளர்களாக நாங்கள் எங்களை ஆக்கிக் கொள்வோம்.

அதுதான் எங்களுடைய குறிக்கோள்.
கோடை பண்பலை நேயர்கள் சார்பில்
வானொலி: உங்களுடைய மனித தூதுப்பணி சிறக்க கோடை பண்பலை நேயர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்..

தமிழர் தலைவர்: ரொம்ப மகிழ்ச்சி. நல்ல ஆழமான கேள்விகளைக் கேட்டீர்கள். சிறப்பான அளவுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தீர்கள். அதற்காக உங்களுக்கு உங்களுடைய பணிகளுக்கு நன்றி, எங்களுடைய நல் வாழ்த்துகள்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Posted in Brahminism, Castes, DK, Dravidar, Dravidian, EVR, Legacy, Periyaar, Periyar, Veeramani, Viramani | Leave a Comment »

DMDK Vijayaganth vs DMK Kalainjar Karunanidhi: War of words

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

அடக்கம் தேவை; ஆணவமல்ல! புதிய தலைவர்களுக்கு கலைஞர் அறிவுரை

சென்னை, பிப். 12- தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டில் அலங்கோல ஆட்சி நடை பெறுவதாகப் பேசியதைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நேற்று விடுத்துள்ள அறிக்கையின் பகுதிகள்:

தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டிக்குச் சென்ற அந்தக் கட்சியின் தலைவர், தான் திருமண விழாவில் அரசியல் பேசக்கூடாது என்று இருந்ததாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி அலங் கோலத்தைப் பார்க்கும்போது பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். தமிழ் நாட்டு ஆட்சியிலே அப்படி என்ன அலங்கோலம்?

எது அலங்கோல ஆட்சி?

தமிழகத்திலே அப்படி என்ன அலங்கோல ஆட்சி நடக்கிறது? ஏழை எளிய மக்களுக்கு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறதே? அதை அலங்கோலம் என்கிறாரா? விவசாயி களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்குக் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதை அலங்கோலம் என்று கூறு கிறாரா? மகளிருக்கு எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் இலவச மாக வழங்கப்படும் திட்டம் அலங்கோலமாக இருக்கிறதா? இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது அவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா? நிலமற்ற ஏழையெளிய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டு வருகிறதே, பல ஆண்டுக் காலமாக வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறதே. வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ப தற்காக தமிழகத்திலே புதிய புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறேதே. வேலையில் லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் அரசே நிதி உதவி அளித்து வருகிறதே. இவைகள் எல்லாம் தே.மு.தி.க. தலைவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறது என்றால் அவர் கருத்தில் கோளாறு இருக்கிறது என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு மனிதனிடம் வளரவேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல

ஆனால் கட்சி ஆரம்பித்து தலைவராக வருபவர்கள் உண்மை நிலையைப் பேசி, நியாயம், நேர்மையோடு பேசினால் அது நாட்டிற்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது, ஏன் அவர்களுக்கும் நல்லது! இல்லையேல் சிரிப்புக்கு ஆளாக நேரிடும். உயர்ந்திட நினைக்கும் ஒரு மனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர, ஆணவமல்ல!

சந்துமுனையில் சிந்து பாடலாமா?

விருத்தாசலம் தொகுதி மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது எதற்காக? ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தபோது, பேரவையிலே வந்து ஆட்சியின் அலங்கோலத்தை அங்கே வந்து பட்டியலிட்டிருந் தால், அதற்குப் பதில் கிடைத்திருக்குமல்லவா? ஆறு பேர்களைக் கொண்ட ம.தி.மு.க. சார்பில் ஆளுநர் உரையிலே பேசுகிறார்கள். ஏன் சுயேச்சை உறுப்பினர் கூட ஒருவர் அங்கே பேசுகிறார். ஒரு கட்சியை நடத்தும் தலைவர், நான்தான் ஆட்சிக்கே வரப் போகிறேன் என்று சொல்லுபவர் பேரவையிலே வந்தல்லவா அவர் காணும் அலங்கோலங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு எங்கேயோ சந்து முனையிலே போய் நின்று கொண்டு சிந்து பாடினால் என்ன செய்வது?

மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயல் எது?

தி.மு.க.வுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்கிறார் தே.மு.தி.க. தலைவர். இந்தப் பணிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாமலா செய்யப்பட்டுள்ளது? பொய் சொல்வ தற்கும் ஒரு எல்லை இல்லையா? திருமணம் ஆகாமல் ஆண்டுக் கணக்கிலே காத்திருக்கும் பெண்களுக்கெல்லாம் வாழ்வளிக்க வேண்டுமென்பதற்காக திருமண நிதி உதவித் திட்டம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் பதினைந்தாயிரம் ரூபாய் வீதம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட் டுள்ளதே, மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசா இது? அது போலவே கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அரசின் சார்பில் அளிக்கப்படுகிறதே. அது மக்கள் நலனில் அக்கறையில்லாத செயலா?

நான்தான் புத்தர்; மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசலாமா?

தேசியக் கட்சியும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மத்திய அரசை ஆளும் கட்சியின் மீதும் குறை கூறியிருக் கிறார். தேசிய கட்சி தமிழ் மக்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை? தமிழை செம்மொழியாக அறிவித்திருப்பது தற்போதுள்ள மத்திய அரசுதானே? சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் கொடுத்தது எந்த ஆட்சியிலே? தற்போதைய ஆட்சியில்தானே! கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் தர ஒப்புதல் கொடுத்திருப்பதும் இன்றைய மத்திய ஆட்சிதானே? எல்லாவற்றையும் ஒரேயடியாக மறைத்துவிட்டு, நான்தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசுவது நல்லதா?

ரசிகர்களின் கூட்டத்தையெல்லாம் கட்சிக்காரர்கள் கூட்டம் என்று நினைத்துக் கொள்வதா?

நடிகரைப் பார்ப்பதற்காக கூடுகின்ற ரசிர்கள் கூட்டத்தை யெல்லாம் தனது கட்சிக்காரர்கள் கூட்டம் என்று எண்ணிக் கொண்டு எல்லோரையும் இழிவாகப் பேச நினைப்பது தவறு. கச்சத் தீவைப் பற்றியெல்லாம் கோவில்பட்டி கூட்டத்தில் பேசி இருக்கிறார். அந்த வகையில் கச்சத்தீவு பற்றிய உண்மை விவ காரங்கள் அவருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்தவர்களிடம் கேட்டுப் பேசியிருக்கலாமே?

யார் ஊழல்வாதி?

ஊழல் பற்றியெல்லாம் அவர் கூட்டத்திலே பேசியிருக்கிறார். எந்தத் திட்டத்திலே ஊழல்? ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதிலே கூட திறந்த வெளி ஒப்பந்தப் புள்ளிகள் என்று குறிப்பிட்டு, எல்லா வற்றிலும் வெளிப்படையாக ஆட்சி நடை பெறுகிறது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கான சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவிலே இடம் பெறவே மறுத்து விட்டு, இப்போது ஊழல் என்று உரைக்கலாமா? பேசுகிறவர்கள்; அவர்களே ஒரு முறை தம்முடைய முகத்தைக் கண்ணாடிக்கு முன் நின்று பார்த்துக் கொண்டால் நல்லது – யார் ஊழல்வாதி என்பது அப்போது தெளிவாக அவருக்குப் புரியும். அதை விடுத்து, பிறர் மீது புழுதியை வாரி இறைக்க நினைப்பது சரியல்ல.

ஆட்சிக்கு வர நினைப்பவர் பொறுப்பு இல்லாமல் பேசக்கூடாது

ஆட்சிக்கு வரவேண்டும், முதலமைச்சராக வர வேண்டு மென்றெல்லாம் நினைக்கும் அவர் ஏதோ ஒரு சாதாரணப் பேச்சாளரைப் போல் குற்றச் சாட்டுகளை பொறுப்பில்லாமல் கூறக்கூடாது. மக்களைச் சுரண்டுகிறோம் என்றால் எந்த மக்களை, எப்படி என்று விளக்கம் தரவேண்டாமா? எழுப்பப் படும் குற்றச் சாட்டுகளை புள்ளி விவரங்களோடு மறுத்துப் பதில் கூறினால் அவருக்கு வேடிக்கையாக இருக்கிறதாம்! அவரிடம் ஆதாரம் இருந்தால், புள்ளி விவரங்கள் தெரிந்தால், தான் கூறு கின்ற குற்றச் சாட்டுகளோடு அவற்றையும் இணைத்துச் சொல் வதுதானே? எந்த விவரமும் இல்லாமல் வாயில் வந்ததையெல் லாம் பேசுவேன் என்ற பாணியில் பேசினால் என்ன செய்வது?

செய்தித்தாள்களைப் படிக்க மாட்டாரா?

மின் பற்றாக்குறையைப் போக்க அரசு அன்றாடம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை யெல்லாம் படிக்காமல் தமிழக அரசு மீது அவர் குறை கூறி இருக் கிறார். அரசியல் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திடவும், ஆட்சி நடத்திடவும் விரும்புகிறவர், அன்றாடம் நாளேடுகளைப் பார்ப்பதும் அதிலே அரசு சார்பில் எடுக்கப்படுகின்ற முயற்சி களைப் படித்து தெரிந்து கொள்வதும் முக்கியமல்லவா?

டன்னுக்கும், மூட்டைக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது?

20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்துவிட்டு 1500 டன் சிமெண்ட் தான் விற்பனையாகி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலையில் விற்கப்படும் என்று அரசு சார்பில் எப் போதும் கூறவில்லை. ஒரு லட்சம் டன் அதாவது 20 லட்சம் மூட் டைகள் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்றுதான் அரசு சார் பில் கூறப்பட்டது. 20 லட்சம் டன்னுக்கும் 20 லட்சம் மூட் டைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதா? தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு அதைக் குறித்து வைத்துக் கொண்டு பேசக் கூடாதா? -இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Posted in DMDK, DMK, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MK, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Words | Leave a Comment »

42 SLA killed in Mannaar clashes – LTTE; Mahindra & Mahindra to develop US$ 100m IT park

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ஜேவிபி இடையே கருத்து முரண்பாடு

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஜேவிபி கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துள்ள இந்தியாவின் முக்கிய இடதுசாரிக் கட்சியான இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதனைக் காரணம் காட்டி, தமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஜேவியின் பிரதிநிதிகளை, சகோதர பிரதிநிதிகளாக அழைப்பதை தவிர்த்துள்ளது.

ஒரு இடதுசாரிக் கட்சியாக தன்னை விபரிக்கும் ஜேவிபி, இலங்கை தமிழர் விவகாரத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை எதிர்ப்பதுடன், ஒற்றை ஆட்சியின் கீழ்தான் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கூறிவருகிறது.

இதனைக் கண்டித்துள்ள இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் அவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரங்களுடனான சுயாட்சி முறையை வழங்குவதை எதிர்க்கும் ஜேவிபின் நிலைப்பாட்டுடன் தாம் முரண்படுவதாக கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரத்தில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டையும் ஜேவிபி எதிர்த்தது என்று கூறுகின்ற வரதராஜன் அவர்கள், இது தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது என்றும் கூறுகிறார்.

அகில உலக மட்டத்தில் சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஜேவிபியின் நிலைப்பாட்டுடன் தாம் உடன்படுகின்ற போதிலும், இந்தியாவையும், அதனை அண்டிய பிராந்தியத்தையும் பொறுத்த வரை தற்போதைய நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினையே முன்னிலையில் இருப்பதாகவும், ஆகவே அந்த விவகாரத்தில் தமக்கு ஜேவிபியுடனான முரண்பாட்டை அடுத்தே, தாம் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை, தமது கட்சி மாநாட்டுக்கு இந்தத் தடவை அழைக்கவில்லை என்றும் வரதராஜன் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு, ஏகதிபத்தியத்துக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ள வரதராஜன் அவர்கள், தமிழர் பிரச்சினையில், பேச்சுவார்த்தை மூலமான, வடக்குக் கிழக்குக்கு கூடிய அதிகாரங்களுடனான தீர்வு ஒன்றே அனைவருக்கும் பலன் தரும் என்றும் கூறினார்.

 


மன்னார் தள்ளாடியில் முகாம் மீதான தாக்குதலில் 6 இராணுவத்தினர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள இலங்கை அரசாங்க இராணுவத்தின் முக்கிய முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதில் 6 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் இலங்ககை இராணுவம் கூறுகிறது.

இந்தத் தாக்குதலில் தேவாலயம் ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த படையினரே கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பீரங்கித் தாக்குதல் காரணமாக மன்னார் நகரில் பெரும் பதற்றநிலை காணப்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான பீரங்கி மோதல்களை அடுத்து மன்னாருக்கான போக்குவரத்து சில மணிநேரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை வட இலங்கையில் நடந்த மோதல்களில் 40 விடுதலைப்புலிகளும், 10 அரசாங்க சிப்பாய்களும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறுகிறது.

விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வரவில்லை.

தமது தரப்பில் கடுமையான இழப்புகளை இலங்கை இராணுவம் ஒப்புக்கொள்வது குறைவு என்று கொழும்புக்கான எமது செய்தியாளர் கூறுகிறார்.


இலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

ஒப்பந்தம் கைச்சாத்தான போது
ஒப்பந்தம் கைச்சாத்தான போது

இலங்கையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இன்று இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது.

இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜமொன்றினை மேற்கொண்டிருக்கும் இந்திய இணை வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகமவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இன்று காலை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஆருண் நந்தா, இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியிருப்பதாகவும், இதன் நோக்கமெல்லாம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை இந்தப் பிரமாண்டமான பூங்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.

Posted in Army, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Eelam, Eezham, investments, IT, JVP, Left, Lifespace, LTTE, M&M, Mahindra, Mannaar, Mannar, SEZ, Sri lanka, Srilanka | Leave a Comment »