செய்தித் துறையில் “பனிப்போர்’
கே.வி. ஐயப்பன்
கோவை, பிப்.14: தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்குள் பணியாளர்களிடையே தற்போது ஒரு “பனிப்போர்’ துவங்கியுள்ளது.
நேரடியாக நியமனம் பெறுவோர், துறை மூலமாக பதவி உயர்வுக்கு வருவோர் ஆகியோரிடையே பதவி உயர்வு தொடர்பாக தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆட்சியில் இருக்கும் அரசின் திட்டங்களை பறைசாற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டன்க்ஷப்ண்ஸ்ரீண்ற்ஹ் ஞச்ச்ண்ஸ்ரீங் என இருந்த இத்துறை கருணாநிதி முதல்வரான பின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையாக மாறியது.
பிற மாநிலங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் இத் துறைக்கான அலுவலர்கள் பதவிக்கு வருகின்றனர். பதவி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வும் பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இந்நிலை இல்லை என்பது இத் துறையில் பணியாற்றுவோரின் மனக்குறை.
இத் துறையில் கணக்கர், மேல்நிலைக் கணக்கர், வரவேற்பாளர், காப்பாளர், திரைப்படக் கருவி இயக்குபவர் ஆகிய பதவிகளில் இருந்து பதவி உயர்வு மூலம் செய்தி, மற்றும் விளம்பரப் பிரிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
அரசாணை (நிலை) எண் 2778 பொதுத் துறை நாள் 18-12-1950-ன்படி பதவி உயர்வு மூலம் இப் பணிகள் நிரப்பப்படுகின்றன. இப் பணியிடத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது, அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு ஆகியவற்றில் சிலவற்றை தளர்த்தி பணி நியமனம் செய்வதால் வரவேற்பாளர், கணக்கர், திரைப்படக் கருவி இயக்குநர் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், நிர்வாகத் தீர்ப்பாயத்தை ஒரு சிலர் அணுகினர். இத் தீர்ப்பாயம் 2:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்க தனது தீர்ப்பில் தெரிவித்தது. ஆனால், 1:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்கியது துறை. இதனால், பதவி உயர்வு மூலமாகவும், நேரடி நியமனம் மூலமாகவும் 1:1 என்ற விகிதத்தில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பொது விதிகளின்படி விகிதாசாரம் பின்பற்றப்படுவதில்லை என்பது பதவி உயர்வு கிடைக்காதோரின் புலம்பல். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பதவி உயர்வின்போது உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஆக தற்போது பணிபுரிவோரை நுழைவுப் பதவியின் (உய்ற்ழ்ஹ் கங்ஸ்ங்ப்) அடிப்படையில் இரண்டாகப் பிரித்து 5:1 என்ற விகிதத்தில் தற்போதுள்ள விதிகளுக்கு திருத்தம் செய்ய கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேரடி நியமனம் மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டோருக்கு சாதகமாக இத் திருத்தம் செய்யப்பட்டால் அது தீர்ப்பாணையத்தில் உத்தரவுக்கு முரணாக அமையும். துறையின் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று கூறி தமிழ் வளர்ச்சி, அறநிலைய மற்றும் செய்தித்துறைக்கு ஊழியர்கள் மனு செய்துள்ளனர். நடைமுறையில் உள்ள விதிகளில் திருத்தம் செய்யும்போது தற்போது பணியில் இருப்போர் அதனால் பாதிக்கப்படாதவாறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது அரசின் கொள்கை.
விதிகளுக்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் முரணாக திருத்தம் மேற்கொள்ள ஒரு பிரிவு வரிந்துகட்டுவதால் பணியாளர்களிடையே வலுத்துள்ளது பனிப்போர். பணியாளர் சீர்திருத்தத் துறை இக் கோரிக்கைக்கு எதிராக குறிப்பு எழுதியுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது இக் கோப்பு சட்டத்துறையின் ஆய்வில் உள்ளது. பணியாளர்கள் மனம் புண்படாதவாறு அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல முடிவை ஆளும் அரசுதான் எடுக்கவேண்டும்.