Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Ooty – Smoking Earth

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

நிலத்தில் வெளியேறும் புகை: பீதி வேண்டாம் புவியியல் துறை அதிகாரி தகவல்

உதகை, ஜூன் 5: தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியிலிருந்து வெளிவரும் புகை 2 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தலைக்குந்தா வனப்பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து நிலத்திற்கடியிலிருந்து தொடர்ந்து புகைவெளிவருகிறது. இதில் கடந்த 2 நாட்களாக புகையுடன் தீக்கனல்களும் வெளிவந்ததால், அருகிலிருந்த செடி, கொடிகளும் அவ்வப்போது திடீரென தீப் பிடித்து எரிந்தன. இதனால், உதகை பகுதி மக்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.

இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியில் படிந்த ஒரு வனப்பகுதி நாளடைவில் மட்கி ஒரு படிமம்போல உருவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீயின் வெப்பத்தால் இப்பகுதி தூண்டப்பட்டு அதிலிருந்து தற்போது புகை வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய படிமங்கள் நிலத்திற்கடியில் சுமார் 300 மீட்டர் நீளம் வரை உள்ளது.

தற்போது நடத்தப்பட்ட சோதனையில் 2 மீட்டர் ஆழத்திற்கு கீழே நெருப்பு, சுட்ட மண் எதுவும் வராததால் அதற்கு கீழே புகை வர வாய்ப்பில்லை. எனவே, மொத்தமுள்ள 300 மீட்டர் நீள பரப்பளவிலிருந்தும் நிலத்திற்கடியிலேயே எரிந்து புகை வரும். அதன்பின்னரே இது முழுமையாக அணையும் என்றார் அவர்.

——————————————————————–

நெருப்புகிரியானதா நீலகிரி?
எரிமலை பீதியால் ஏற்பட்ட பரபரப்பு
குமுதம் ரிப்போர்ட்டர்
03.06.07

மூடுபனி முக்காடு போட்டிருக்கும் இடம் நீலகிரி. குளுகுளுவென குளிர் கூடாரம் போட்டுத் தங்கியிருக்கும் அங்கே நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விபரீதம் நிகழ்ந்து வருகிறது. அங்கே பூமிப்பிளவு ஒன்று திடீரென கரியையும், புகையையும், சாம்பலையும் கக்கத் தொடங்கியிருப்பதால் எரிமலை பீதியில் உள்ளனர் நீலகிரி மக்கள். இது நீலகிரியா? நெருப்பு கிரியா? என்ற சந்தேகம் அவர்களிடம் உழன்று வருகிறது.

நீலிகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தலைகுந்தா. இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் மீப்பி வனப்பகுதி. இதற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் முத்தநாடு மந்து, அத்திக்கல் நீபி ஆகிய மலைவாழ் மக்களின் கிராமங்கள் உள்ளன.

மீப்பி வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அப்போது இந்தப் பகுதியில் அடர்ந்த கரும்புகை வருவதை மலைவாழ் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ‘கோடைக்காலம் இல்லையா? ஏதாவது காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும்!’ என்று, அவர்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.

வழக்கமாக மழைக்குப் பிறகு காட்டுத்தீ அணைந்து விடும். ஆனால், இந்த மர்மப்புகை விடாமல் தொடர்ந்திருக்கிறது. கூடவே கடந்த 24_ம் தேதி பெய்த மழையின் போது காதைப் பிளக்கும் இடிச்சத்தம் கேட்டதோடு தீப்பிழம்பும் தெரிந்து, புகைமூட்டம் அதிகமாகியிருக்கிறது.

இதனால் பயந்துபோன முத்தநாடு மந்துவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அடுத்த நாள் அந்தப் பகுதிக்குப் போய் பார்த்திருக்கிறார்கள். அங்கு நடந்திருந்த பயங்கரத்தை அவர்களது கண்களே நம்ப மறுத்துவிட்டன. அங்கே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள் வேரோடு சரிந்து பூமிப்பிளவுக்குள் சிக்கியிருக்க, அதிலிருந்து அக்னி குண்டம் போல புகையும், நெருப்பும் வந்து கொண்டிருந்தது. அரண்டு போன இளைஞர்கள், அதுபற்றி பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரும் இதை நேரில் பார்த்து விட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

‘‘இது நிச்சயம் எரிமலைதான்!’’ என்று முடிவு கட்டிய அவர், ஊட்டியில் உள்ள தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் ஓட்டமாய் ஓடி வந்திருக்கிறார்கள். பூமிப்பிளவுகளில் இருந்து வெளிவரும் புகையை ஒருவித மிரட்சியுடன் பார்த்த அவர்கள், அது கக்கிய கரி, மண் ஆகியவற்றை எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர். அந்த மண் சுண்ணாம்புப் பவுடர் போலவும், கரிக்கட்டைகள் நிலக்கரி போலவும் இருப்பதைப் பார்த்து நிலைகுலைந்த அவர்கள், மாவட்ட கலெக்டருக்கும், புவியியல்துறை நிபுணர்களுக்கும் தகவல் அனுப்பினார்கள்.

அதையடுத்து, குன்னூரில் உள்ள புவியியல்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் நடத்திய முதல் கட்ட ஆய்வில் தெளிவாக எதையும் அறிவிக்க முடியவில்லை. அந்தப் பாறை இடுக்குகளிலிருந்து கந்தகம் போன்ற ஒருவித துர்நாற்றம் வீசியதால், ஒரு தீக்குச்சியை நீட்டி பாலசுப்ரமணியம் ஆராய்ந்திருக்கிறார். அது ‘பக்’கென பற்றிக் கொண்டு ஜூவாலை விட்டு எரிந்திருக்கிறது. ஆகவே, அங்கு மீத்தேன் வாயு கசிந்து கொண்டிருக்கலாம்’ என்றார் பாலசுப்பிரமணியம்.

அதுமட்டுமல்ல! ஒருவேளை உயரழுத்த மின்கம்பிகள் மண்ணில் புதைந்திருந்து அதன் காரணமாகக்கூட பூமி இப்படி புகை கக்கலாம் என்று இரண்டு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். இதனால், அங்கு நின்ற இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் குழம்பிப் போனார்கள். ‘‘இது நிச்சயம் எரிமலைதான். மக்கள் பீதியடையக் கூடாது என்பதற்காகத்தான், இந்தத் தகவலை மறைக்கிறார்கள்’’ என அடித்துப் பேசினார்கள் அவர்கள்.

‘‘இங்குள்ள முத்தநாடு மந்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உசில்மேடு என்ற குன்று உள்ளது. அது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எரிமலையாக இருந்து அணைந்து போனது. அது நிச்சயம் ஒருநாள் மீண்டும் வெடித்து தீக்குழம்பைக் கக்கும். அதன் ஆரம்ப அறிகுறிதான் இது’’ என்றார் இயற்கை ஆர்வலர் ஒருவர். இதுபற்றி நிலவியல் நிபுணர்கள் உரிய விளக்கம் எதையும் சொல்லாததால், ‘இது எரிமலைதான்’ என்று மீடியாக்கள் எழுத, இந்தப் பகுதியில் பதற்றம் பந்தி போடத் தொடங்கி விட்டது.

இந்தச் செய்திகள் வெளியானதையடுத்து வெளிமாநில விஞ்ஞானிகள், சுற்றுலா வாசிகளின் படையெடுப்பு அங்கே தொடங்கி விட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் களை கட்ட ஆரம்பித்து அவர்கள் மண் மாதிரிகளையும், கரிக்கட்டிகளையும் ஓடி ஓடிச் சேகரிப்பதும், ஆராய்வதுமாக இருந்தனர். நில வெடிப்புகளில் இருந்து வெளிவந்து விழும் கரிக்கட்டிகளும் சாம்பலும் படுபயங்கர சூடாக இருந்தன. அவற்றைத் தொடக்கூட முடியவில்லை. அத்துடன் அந்தப் பகுதி நிலம் வெப்பத்தால் தகதகத்தது. பலர் புகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைந்து விழுந்து விட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு அந்நியர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் ‘‘நீலகிரியில் எரிமலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. பூமியில் ஏற்பட்ட இந்த மாறுதல் குறித்து புவியியில் ஆய்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

‘‘சரி! நீலகிரியில் தோன்றியிருப்பது எரிமலையின் அறிகுறியா?’’ இப்படியரு கேள்வி நம் கழுத்தைப் பிடித்து உந்த, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் பேராசிரியர் மணிமாறனிடம் இதுபற்றிப் பேசினோம். அவர் அழுத்தம் திருத்தமாக சில விவரங்களைத் தந்தார்.

‘‘நீலகிரியில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. பூமியில் அடித்தட்டுகள் இரண்டு ஒன்றையன்று முட்டக்கூடிய இடத்தில்தான் எரிமலை ஏற்படும். ஆனால் நீலகிரி ஒரு மலைப்பகுதி என்பதுடன், அது நிலத்தட்டுகளுக்கு வெகு தூரத்தில் உள்ளது. ஆகவே அங்கு எரிமலை ஏற்பட நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை.

ஆனால், நீலகிரியில் இப்போது புகை வெளியாகிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலக்கரி, லிக்னைட் போன்றவற்றுக்கு முந்தைய கரிப்படிவம் இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் புதையும் மரங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் வெப்பத்தால் இறுகி நமக்கு நிலக்கரியாகக் கிடைக்கிறது. நிலக்கரிக்கு முந்தைய லிக்னைட் படிவமாகவும் நமக்குக் கிடைக்கிறது.

இப்படி பலகோடி ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் நிலக்கரி, லிக்னைட் போன்றவை எளிதில் தீப்பற்றக் கூடிய பாஸ்பரஸ், ஸல்ஃபர் போன்ற வேதியியல் பொருட்களை உருவாக்குகிறது. பூமிக்குள் கிடைக்கும் வெப்பத்தால் சிலவேளைகளில் இவை எரியவும் ஆரம்பிக்கின்றன. கோடை மழையின் போது பூமி நன்றாகச் சுருங்கி விரியும். அந்தத் தருணத்தில் எங்கே இடைவெளி கிடைக்கிறதோ அங்கே இவை பொத்துக் கொண்டு புகையாகவும், நெருப்பாகவும் தலைகாட்டுகின்றன.

இதை வைத்து, இந்தப் புகை வரும் இடத்துக்கு நேர் கீழே நிலக்கரி இருப்பதாகக் கருதிவிட முடியாது. நிலக்கரி, லிக்னைட் படிவங்கள் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பீறிட்டால் கூட புகையும் நெருப்பும் அந்தப் பகுதியில் தரைக்கு மேலே தலை நீட்ட முடியாமல் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஓரிடத்தில் தலைகாட்ட வாய்ப்புள்ளது.

நிலத்துக்கு வெளியே இந்த மாதிரி வெளியாகும் புகையும், நெருப்பும் இரண்டு மாதங்கள் வரை கூட நீடிக்கும். அதன் பிறகு தானே அடங்கி விடும். பூமிக்குள் இப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை, வெளிநாடுகளில் செயற்கைக் கோள் மூலம் படம்பிடித்துத் தெரிந்து கொள்கிறார்கள்!’’ என்றார் அவர். ஸீ

– கா.சு. வேலாயுதன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: