அரசியல் பேரமா, அதிகார துஷ்பிரயோகமா?
மத்தியில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை என்கிற நிலைமை 1989-ல் எழுந்தது முதல் அரசியல் என்பது தினசரிப் பேரங்களுக்கு உட்பட்ட வியாபாரமாகிவிட்டது என்பதுதான் யதார்த்த நிலைமை. அமைச்சர் பதவியைப் பெறுவது முதல் எந்தவொரு விஷயத்திலும் எனக்கு இவ்வளவு, உனக்கு இவ்வளவு என்கிற வகையில்தான் ஆட்சியில் அமரும் கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றன என்பது ஊரறிந்த உண்மை.
உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி இருப்பது இந்த வியாபார நாடகத்தில் மற்றுமொரு காட்சி. முதல்வர் மாயாவதியின் மீது வழக்குத் தொடர மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாநில ஆளுநர் ராஜேஸ்வர் அனுமதி மறுத்திருப்பது வேடிக்கையாக இருந்தாலும், அது ஒரு வாடிக்கையான விஷயம்தான் என்றுதான் கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தரப்பட்டிருக்கும் விலைதான் இது என்பது பள்ளிக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.
இந்தியாவின் புராதன சரித்திரச் சின்னங்களாகக் கருதப்படும் இடங்களைப் பாதுகாக்க 1958-ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம், புராதனச் சின்னங்களாகக் கருதப்படும் கட்டடங்களைச் சுற்றிலுமுள்ள நூறு மீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. அந்த சரித்திரச் சின்னங்கள் சிதைந்து விடாமல் இருக்கவும், அதன் அழகு கெட்டுவிடாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இந்தச் சட்டத்தை முறையாக அமல் நடத்தும் பொறுப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திடமும் (Archeaological Survey of India), மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி, தாஜ் கலாசார வணிகவளாகம் (Taj Heritage Corridor்) என்கிற பெயரில் தாஜ்மஹாலைச் சுற்றியும் ஆக்ரா கோட்டையைச் சுற்றியும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வணிக வளாகம் அமைத்து மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டினார். சுமார் 175 கோடி ரூபாய் முதலீட்டில் நிறைவேற்றப்பட இருந்த இந்த வணிக வளாகத்துக்கு, அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியும் வழங்கினார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.
மத்திய அரசு தனது பங்குக்கு முதல் தவணையாக சுமார் 17 கோடி ரூபாயை இந்த வணிக வளாகத் திட்டத்திற்கு வழங்கியது. அதுவும் எப்படி? முறையாக எந்தவிதத் திட்ட வரைமுறைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல், சுற்றுச்சூழல் அமைச்சரகமும் எந்தவொரு சோதனைகளையும் நடத்தாமல், மாயாவதியின் நிர்பந்தத்தின் பேரில் பணம் தரப்பட்டு, வேலையும் தொடங்கியது. தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் எச்சரிக்கைகள் சட்டை செய்யப்படவில்லை.
இந்த நிலையில் விஷயம் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. தாஜ்மஹாலின் அழகைக் கெடுக்கும் வண்ணம் அந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றி வணிக வளாகம் எழுப்பப்படுகிறது என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட, இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் ஏதாவது நடந்திருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய ஊழல் தடுப்புக் கமிஷனை விசாரிக்க, அதன் விளைவாகத்தான் இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கை மூடி மறைக்க மத்தியப் புலனாய்வுத் துறை 2005-ல் முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. இப்போது, மாயாவதியின் மீதும், அவரது அன்றைய அமைச்சரவை சகா நஜீமுதீன் சித்திக் மீதும் எத்தகைய குற்றமும் தனக்குத் தென்படவில்லை என்று கூறி, இந்த விசாரணையை மேலும் தொடரவோ, வழக்குப் போடவோ மத்தியப் புலனாய்வுத் துறைக்கு அனுமதி வழங்க ஆளுநர் ராஜேஸ்வர் மறுத்திருக்கிறார்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சிக்கு ஆளுநர் துணை போயிருக்கிறார். ஆளுங்கட்சியின் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளரை ஆதரிக்க சோனியா காந்திக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கும் இடையே நடைபெற்றிருக்கும் இந்தப் பேரத்தில் களங்கப்பட்டிருப்பது ஆளுநரின் மரியாதை.
அதிகார துஷ்பிரயோகம் என்று வரும்போது அது ஆளுநராக இருந்தால் என்ன ஆட்சியாளர்களாக இருந்தால் என்ன? அரசியல் பேரத்தில் இதுவும் ஒரு பரிணாமம் என்று கருதி நம்மை நாமே தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!
———————————————————————————————-
கட்சித் தொண்டர்கள் வழங்கிய பணத்தில் சேர்ந்தது எனது ரூ. 52 கோடி சொத்து: உ.பி. முதல்வர் மாயாவதி
லக்னெü, ஜூன் 28: தன்பேரில் உள்ள ரூ. 52 கோடி சொத்து பகுஜன் சமாஜ் கட்சித்தொண்டர்கள் நன்கொடையாக அனுப்பிய பணத்தில் சேர்க்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.
தனக்கு ரூ. 52 கோடி சொத்து இருப்பதாக மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவில் அளித்த தகவலில் முதல்வர் மாயாவதி கூறியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த விளக்கத்தை தந்துள்ளார் மாயாவதி.
நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: இதற்கு முன்னர் தொண்டர்கள் நன்கொடையை கட்சிக்கு அனுப்பினார்கள். இப்போது என்னிடம் பணம் இல்லை என்று கருதி எனக்கு நேரடியாக அனுப்புகிறார்கள். அந்த பணத்தை முதலீடு செய்யலாம். அல்லது தில்லியில் பங்களா கூட கட்டலாம். அந்த அளவுக்கு எனக்கு அவர்கள் சுதந்திரம் தந்துள்ளனர்.
நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. வரி அனைத்தையும் கட்டி வருகிறேன். எல்லா விவரமும் வருமான வரிக்கணக்கில் உள்ளன. வருமான வரி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள நான் அப்பீல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஆதாரம் இல்லாதது.
முலாயம் அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை: முலாயம் சிங் தலைமையிலான முந்தைய அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 28 மாவட்டங்களில் இந்த ஊழல் நடந்துள்ளது. இதை சிறப்பு விசாரணைக் குழு ஆராயும். இந்த முறைகேடு பற்றி 3 மாதங்களில் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும்.
ஊழலில் போக்குவரத்து காண்ட்ராக்டர்களுக்கு தொடர்பு இருந்ததா? வேறு மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் திருப்பிவிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைக் குழு ஆராயும்.
அமைச்சர் மிஸ்ரா விலகுகிறார்: மாநில அமைச்சரும் கட்சியின் பொதுச்செயலருமான எஸ்.சி.மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். 2009-ல் மக்களவைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள உயர் சாதியினரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஈர்க்கும் பணியில் மிஸ்ரா ஈடுபடுவார்.
அமைச்சர் பதவியில் அவருக்கு நாட்டம் இல்லவே இல்லை. நான் அவரை கட்டாயப்படுத்தி அமைச்சர் பதவி வழங்கினேன். இன்னும் சில மாதங்கள் மட்டுமே அவர் அமைச்சர் பதவியில் இருப்பார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்து சட்ட ஆலோசனைகள் உள்பட பலதரப்பட்ட ஆலோசனைகள் எனக்கு தேவைப்படுகிறது.
மிஸ்ரா குடும்பத்தாருக்கு நான் எந்த சலுகையும் காட்டவில்லை. இது பற்றி பத்திரிகைகள் தவறான தகவல்களை வெளியிடுகின்றன.
கஷ்டமான கால கட்டத்தில் எனக்கு உதவியுள்ளார் மிஸ்ரா. அவரது சகோதரிக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் பதவியும், மைத்துனருக்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் அளித்ததில் தவறில்லை. அவர்களின் தியாகத்துக்கு நான் தந்த வெகுமதி அது.
மிஸ்ரா எனக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானபோது, அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்து இருவரும் அவரை கவனித்துக் கொண்டதால் எனக்கு எதிரான வழக்கில் மிஸ்ரா ஆஜராக முடிந்தது. அதற்கு வெகுமதியாக அந்த இருவருக்கும் பதவி அளித்தேன். இதில் தவறு இல்லை.
மேலும் பதவி நியமனம் என்பது எனக்கு உள்ள சிறப்புரிமை. இதில் எனக்கு ஆணையிட பத்திரிகைகளுக்கு என்ன உரிமை உள்ளது என்றார் மாயாவதி.