முதலாளிகளைக் கெஞ்சுவதா? மார்க்சிஸ்ட் கோபம்!
புது தில்லி, ஜூன் 3: “விலைவாசியைக் குறைக்க உதவுங்கள், கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்காதீர்கள், அரசுடன் சேர்ந்து ஏழ்மையை ஒழிக்க சமூகக் கடமையை நிறைவேற்றுங்கள்’ என்று தொழில் அதிபர்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுப்பது அர்த்தமற்றது, பலன் தராதது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி‘யில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் இந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
“சுரண்டுவதை நிறுத்திவிடும்படி முதலாளிகளைக் கேட்பது என்பது சைவமாக மாறிவிடு என்று புலியை வேண்டிக் கொள்வதற்குச் சமம்.
ஏழைகள் மீது பிரதமருக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் அரசின் கொள்கைகளைத்தான் மாற்ற வேண்டும். தாராளமயம், உலகமயம் ஆகியவற்றைக் கைவிட்டு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்.
வறுமை, கல்லாமை, ஊட்டச்சத்து குறைவு, சுகாதாரமின்மை ஆகியவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மையமாக வேலையில்லாத் திண்டாட்டம் காணப்படுகிறது. எனவே மத்திய அரசு கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி நேரடியாகச் செலவு செய்ய வேண்டும்.
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்றால் அது வறிய பிரிவினருக்கு பொருளாதார ரீதியான அதிகாரமளித்தலாக இருக்க வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூகநலத்துறைக்கு அதிகம் செலவிடுவோம், வறுமையை ஒழிப்போம், அரசுத்துறைகளில் முதலீட்டை அதிகப்படுத்துவோம், அரசுத்துறைகளுக்கு முக்கியத்துவம் தருவோம், அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க மாட்டோம், விலைவாசியைக் குறைப்போம், வேலைவாய்ப்பைப் பெருக்குவோம் என்றெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் இவற்றில் எத்தனை அமல் செய்யப்பட்டன?
இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு இந்தியாவின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நாலில் ஒரு பங்கு, அதாவது 8 லட்சத்து 54 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்று கூறி, இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்று பெருமைப்படுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.
ஏழை, பணக்காரர் வேற்றுமை அதிகரித்து வருகிறது. ஏழைகள் படிப்புக்கும் வாழ்க்கைச் செலவுக்கும், மருத்துவத்துக்கும் செலவழிக்க முடியாமல் ஊட்டச் சத்து குறைந்தும், நோயில் வீழ்ந்தும், படிப்பைப் பாதியில் நிறுத்தியும் சிரமப்படுகின்றனர். கல்லூரிக் கல்வி, உயர் கல்வி என்பதெல்லாம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது.
2001-02 பட்ஜெட்டில் சமூகநலத் துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 28.26% செலவிடப்பட்டது. 2006-07-ல் இது 27.19% ஆகக்குறைந்துவிட்டது’ என்று தலையங்கம் சாடுகிறது.