குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
‘பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள்
திருவேங்கிமலை சரவணன்
இந்த வாரம் நாம் சந்திக்கப் போகும் மறக்க முடியாத மங்கை ‘பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள். எல்லோரும் அவரை அம்புஜம்மாள் என்றழைத்தாலும் மகாத்மா காந்திஜி மட்டும் ‘அம்புஜம்’ என்று அன்பாய் அழைப்பார்.
காந்திஜியின் அன்புக்கே பாத்திரமாய் இருந்த அம்புஜம்-மாளுக்கு இளமைப் பருவத்தில் அத்தனை அன்பு கிடைக்கவில்லை. பிறந்ததுமே உற்றார், உறவினர்களால் தூற்றப்பட்ட பெண்தான் அம்புஜம்மாள். காரணம் பெண்ணாகப் பிறந்தது.
1899_ம் வருடம், சென்னை சீனிவாச அய்யங்கார், ரங்கநாயகி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் அம்புஜம்மாள், மூன்றாவது பெண் குழந்தையாக. இதில் குடும்பத்தாருக்கு வெறுப்பு. மூன்றும் பெண் குழந்தையாகிவிட்டதே. அதிகம் வளர்ச்சியுறாத காலகட்டம் அது என்றாலும், அம்புஜம்மாள் பிறந்தது சாதாரண குடும்பமல்ல. தாய்வழி தாத்தா சர்.வி.பாஷ்யம் அய்யங்கார் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். சென்னையில் முதல் பெண்களுக்கான பள்ளியை நிறுவியவர். இன்று அந்தப் பள்ளி லேடி சிவஸ்வாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி என்ற பெயரில் புகழ் பெற்று விளங்குகிறது. அதேபோல், திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு அவரது முயற்சியில் உருவானதுதான்.
தாத்தா அப்படியென்றால், தந்தை சீனிவாச அய்யங்காரும் லேசுப்பட்டவர் அல்ல. புகழ் பெற்ற வழக்கறிஞர். சென்னை மாநில அட்வகேட் ஜெனரலாகப் பணி புரிந்தவர். இத்தனை பாரம்பர்யம், பின்னணி இருந்தும் இளமையில் அம்புஜம்மாளுக்குப் பிரச்னை. அவர் பிறந்த சில மாதங்களிலேயே அவருக்கு தோல்வியாதி வந்து பார்க்கவே படுபயங்கரமாகி விட்டார். மற்ற குழந்தைகளைப் பாசத்துடன் கொஞ்சுபவர்கள்கூட குழந்தை அம்புஜம்மாளை நெருங்கத் தயங்கினார்கள். இதற்கிடையே, அம்புஜம்மாளின் அக்கா இறந்துவிட அதற்கும் அம்புஜம்மாள்தான் காரணமாக சொல்லப்பட்டார்! ‘பிறந்த ராசி அக்காவை சாப்பிட்டுட்டா’ என்று ஒதுக்கினார்கள்.
சென்னை வெயில் ஒத்துக்கொள்ளாததால்தான் தோல் வியாதி என்று கண்டறிந்து அம்புஜம்மாளை பெங்களூரில் உள்ள உறவினர் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அங்குதான் அம்புஜம்மாள் வளர்ந்தார். தோல் நோய் குணமாகியதும் சென்னை கூட்டி வரப்பட்டார். இதற்கிடையே, ரங்கநாயகிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தில் எல்லோருக்கும் சந்தோஷம். அம்புஜம்மாளுக்கும் தம்பி வந்ததில் மகிழ்ச்சிதான். ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. குடும்பத்தின் ஆண் குழந்தையை எல்லோரும் கொண்டாட மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார் அம்புஜம்மாள்.
தம்பி பார்த்தசாரதிக்கு ஏழு வயதாகும்போது, அவனை பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால், மூத்தவள் அம்புஜம்மாளை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். அது அவரை மிகவும் பாதித்து விட்டது. படித்தவர்கள், உயர் வகுப்பினர் என்று சொல்லப்பட்டவர்கள்_ ஆனால் அவர்கள் குடும்பத்திலும் ஆண் பெண் பேதமிருந்தது. மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை மறந்து விடுவார்கள்.
ஆனாலும் அம்புஜம்மாளுக்குப் படிக்க வேண்டும் என்று ஆர்வம். அம்மா_அப்பாவைக் கெஞ்சினார். தாத்தாவிடம் கேட்டார். மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு அனுமதி கிடைத்தது. பள்ளிக்கூடம் போக அல்ல, வீட்டிலேயே படிக்க. அம்புஜம்மாளுக்கு வீட்டிலேயே பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்-மணியை வேலைக்கு அமர்த்-தினார்கள்.
இப்படியே போய்க் கொண்டி-ருந்த அம்புஜம்மாளின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை சம்பவம் நிகழ்ந்தது.
அம்புஜம்மாளின் தந்தை சீனிவாச அய்யங்கார் காங்கிரஸ் தலைவர்-களிடம் நெருங்கிப் பழகுபவர். ஒருமுறை ராஜாஜி இங்கிலாந்து சென்று திரும்பினார். அவருக்கு ஒரு விருந்துக் கொடுத்தார் சீனிவாச அய்யங்கார். இதையறிந்ததும் அம்புஜம்மாளின் பாட்டிக்குக் கோபம். ‘கடல் கடந்து போய் வந்தவருக்கு விருந்தா? நம் ஆச்சாரமே போச்சு. இனி நான் இந்த வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்’ என்று கிளம்பிப்போய்விட்டார். இது அம்புஜம்மாளின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வீணான மூட நம்பிக்கைகள் மீதும் பழக்க வழக்கங்கள் மீதும் கோபம் ஏற்பட்டது. தன் வாழ்க்கை இவர்களைப் போல் அமைந்து விடக் கூடாது என்று எண்ணினார்.
ஆனால் அத்தனை சுலபமல்ல. அதுவும் அந்த வயதில் பழக்க வழக்கங்களை மாற்றுவது எளிதாக இல்லை. அந்தக் கால வழக்கப்படிதான் அம்புஜம்மாளுக்குத் திருமணம் நடந்தது. பால்ய விவாகம். அப்போது அவருக்கு பன்னிரண்டு வயதுதான். மணமகன் தேசிகாச்சாரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். திருமணத்துக்குப் பிறகு, சில ஆண்டுகளில் அவரது வாழ்க்கை மாறியது. சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. வீட்டருகே இருந்த பெண்கள் சங்கத்தில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் முதல் உலகப் போர் வந்தது. சென்னையிலும் குண்டுகள் விழுந்தன. அந்தச் சமயத்தில் உலகப் போரில் போரிட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவத்தினருக்கு உதவ பெண்கள் சங்கத்தினர் விரும்பினார்கள். துணிகள், மருந்துகள், போன்ற-வற்றைச் சேகரித்து போர் முனையிலிருக்கும் ராணுவத்-தினருக்கு அனுப்பினர். நிதியும் திரட்டிக் கொடுத்தார்கள். அப்போது அம்புஜம்மாளுக்கு பதினைந்து வயதுதான். இந்தச் சமயத்தில் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
சரி, வாழ்க்கை இனிய பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற நேரத்தில் அவருக்குத் திடீர் சோதனைகள் தோன்றின, அம்புஜம்மா¬ காசநோய் தாக்கி-யது. ஒன்பதாம் வகுப்பு படித்துக்-கொண்டிருந்த தம்பி பார்த்தசாரதிக்கு இடுப்பில் அடிப்பட்டு ஒரு பக்கம் சாய்ந்து நடப்பது போல் ஆகிவிட்டது. ஏற்கெனவே, அவனுக்கு லேசான இளம்பிள்ளை-வாதம் உண்டு. தாய் ரங்கநாயகிக்கு இதய நோய் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார். தாய் வழி தாத்தா திடீரென மறைந்தார்.
இந்தக் கவலைகள் எல்லாம் அம்புஜம்மாளைத் தாக்கின.
ஒரே ஒரு, சந்தோஷமான விஷயமும் நடந்தது. தந்தை சீனிவாச அய்யங்காருக்கு அட்வகேட் ஜெனரல் பதவி கிடைத்தது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்த காந்திஜி, விடுதலைப் போராட்டத்தை துவக்கியிருந்தார். சென்னைக்கும் வந்து அம்புஜம்மாளின் இல்லத்தில்தான் தங்கியிருந்தார். காந்திஜியின் எளிமையான பழக்க வழக்கங்களை நேரில் பார்த்த அம்புஜம்மாளுக்கு ஆச்சர்யமாயிருந்தது. காந்திஜியின் கொள்கைகள் மீதும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவருக்கு ஈடுபாடு வரத் துவங்கியது.
இந்தச் சூழலில் சென்னையில் ‘இந்தியர்களுக்கு சுயாட்சி’ என்ற இயக்கத்தை துவக்கினார் அன்னிபெசன்ட் அம்மையார். அந்தக் கூட்டங்களுக்கு தந்தைக்குத் தெரியாமல் அம்புஜம்மாளும் சித்தி ஜானம்மாளும் சென்று வந்தார்கள். தந்தை சீனிவாச அய்யங்காருக்கு அன்னிபெசன்ட் அம்மையாரைப் பிடிக்காது. இங்கிலாந்து அரசுக்கு விரோதமாக செயல்படுவதால் அவரைக் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. ‘கைது வேண்டாம். ஊட்டியில் வீட்டுக் காவலில் வைக்கலாம்’ என்று அரசுக்கு யோசனை சொன்னார் அட்வகேட் ஜெனரலாக இருந்த சீனிவாச அய்யங்கார். இது அம்புஜம்மாளுக்குப் பிடிக்காமல் மன வேதனையுற்றார். இதே போல் தந்தை மேல் கோபமுற்ற இன்னொரு சம்பவமும் உண்டு.
ஆங்கில அரசு சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குத் தடையுத்தரவு போட்டிருந்த காலம், அம்புஜம்மாளும் அவரது பெண்கள் சங்கமும் மார்கழி மாத பக்தி பாடல்கள் என்று சொல்லி, நாட்டுப்பற்று பாடல்களையும், உரிமை கீதங்களையும் பாடி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சுற்றிவருவார்கள். முதலில் கண்டுபிடிக்காத காவல்துறை பிறகு கண்டுபிடித்துப் பெண்கள் சங்கத்தினரைக் கைது செய்தார்கள். , அம்புஜம்மாளை கைது செய்யவில்லை. காரணம், அவர் தந்தையின் செல்வாக்கு. தன்னை போலீஸ் கைது செய்யாததற்குக் காரணம் தன் அப்பா என்று தெரிந்து விட்டு வீட்டுக்குச் செல்லாமல் சித்தி வீட்டில் தங்கிவிட்டார்.
1932. கள்ளுக் கடை மறியல், அந்நிய துணிக் கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு பலர் சிறைக்குச் சென்றனர். இதில் அம்புஜம்மாளும், ஜானம்மாளும் ஆறுமாத சிறைவாசம் வேலூர் சிறையில் இருந்தனர். சிறையிலிருந்து விடுதலையான பின் மீண்டும் கதர் விற்பனை, காங்கிரஸ் கூட்டங்களை நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டார் அம்புஜவல்லி. பம்பாய் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று காந்திஜியைக் கண்டு மகிழ்ந்த அம்புஜவல்லி அவருக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அந்த சமயத்தில் அம்புஜவல்லி என்ற பெயர் நீளமாக இருப்பதாகக் கூறி அம்புஜம் என்று காந்திஜி அழைக்கத் துவங்கினார். காந்திஜியின் அருகில் அமர்ந்து கொண்டு அவருக்கு விசிறிக் கொண்டிருப்பதும், அவர் பேசுவதை கவனிப்பதிலும், அம்புஜம்மாளுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. காங்கிரஸ் மாநாடு முடிந்து சென்னை திரும்பும் போது, நவம்பர் 1_ஆம் தேதி ‘வார்தா’ ஆசிரமத்திற்கு வர முடியுமா? என்று காந்திஜி கேட்டார்.
கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘ஓ கட்டாயம் வருகிறேன்’ என்று கூறிவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தவுடன் தந்தையிடம் அனுமதி கேட்டபோது, தந்தையார் மறுத்து விட்டார். இதனால் மூன்று நாட்கள் வீட்டிற்குள்ளே உண்ணாவிரதம் இருந்தார். பிறகு பெற்றோர் சம்மதித்து ஆசிரமம் சென்றார். தந்தையார் மறைந்த போது சென்னை திரும்பினார்.
அம்புஜம்மாள் பள்ளியில் சேர்ந்து நன்கு படித்து முறையாகத் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், தமது முயற்சியாலும், ஆர்வத்தினா-லும் புலமை பெற்று விளங்கினார். பல இந்தி கதைகளை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, துளசி ராமாயணத்தை இசையுடன் பாடினார். வடநாட்டு கிராம மக்களிடையே பிரபலமாகியிருந்த துளசி ராமாயணப் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி அம்புஜம்மாளைக் கூறியிருந்தார் காந்திஜி அவர் சொன்னபடி துளசி ராமாயணத்தின் முதல் இரண்டு காண்டங்களை வசன நடையில் மொழி பெயர்த்தார் அம்புஜம்மாள்.
காந்திஜி விரும்பியபடி சென்னையில் பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக ஏற்கெனவே தமது சொந்த செலவில் தமது சகோதரனின் மனையில் ரூ.15,000 செலவில் கட்டி முடித்தார். சீனிவாச காந்தி நிலையம் அதில் அமைந்தது.
சுமார் 7 ஆண்டு காலம் தமிழ் நாட்டின் சமூக நல வாரியத் தலைவியாக பொறுப்பேற்றிருந்த அம்புஜம்மாள்.
அவரது சாதனைகளுக்காக மத்திய அரசு 1964_ம் வருடம் பத்மஸ்ரீ பட்டத்தை வழங்கியது. அதன் பிறகும் தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்புஜம்மாள், தனது எண்பத்திரண்டாவது வயதில் காலமானார். இந்தியா தனது இனிய புதல்விகளில் ஒருவரை இழந்தது.