“அட்லாண்டிஸ்’ ஓடம்: பிரச்னை என்ன?
என். ராமதுரை
அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் (ஷட்டில்) வெளிப் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்னை கவலைப்படக்கூடிய ஒன்று அல்ல என்று அமெரிக்க “நாஸô’ விண்வெளி அமைப்பின் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் 2003-ல் கொலம்பியா விண்வெளி ஓடம் பூமிக்குத் திரும்புகையில் தீப்பற்றி வெடித்ததில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர் என்பதால் அட்லாண்டிஸில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னை இயல்பாகக் கவலையை உண்டாக்குவதாக உள்ளது.
அட்லாண்டிஸில் ஏற்பட்டுள்ள பிரச்னை என்ன என்பதை ஆராயும் முன்னர் விண்வெளிப் பயணத்தில் உள்ளடங்கிய சில பிரச்னைகளைக் கவனிப்பது உசிதம்.
பார்வைக்கு விண்வெளி ஓடம் விமானம் போலவே இருக்கிறது. விமானத்துக்கும் விண்வெளி ஓடத்துக்கும் உள்ள ஒற்றுமை அத்தோடு சரி. மற்றபடி விமானம் வேறு. விண்வெளி ஓடம் வேறு. பொதுவில் விமானங்கள் சுமார் 13 கி.மீ. உயரத்துக்கு மேல் செல்வதில்லை. விண்வெளி ஓடங்கள் சுமார் 300 முதல் 400 கி.மீ. உயரம் செல்பவை. விமானங்களுக்கு காற்று மண்டலம் நண்பன். விண்வெளி ஓடத்துக்கு காற்று மண்டலம் எதிரி.
எந்த வகை விமானமாக இருந்தாலும் சரி, அது காற்று மண்டலத்துக்குள்ளாகத் தான் இயங்க முடியும். ஆனால் விண்வெளி ஓடமானது காற்று இல்லாத இடத்தில் – பூமியிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் உயரத்தில் இயங்குவது. விண்வெளி ஓடம் என்பது ஒரு வகையில் செயற்கைக்கோள் போன்றதே.
ஆளில்லாத இதர செயற்கைக்கோள்களுக்கும் விண்வெளி ஓடத்துக்கும் இடையே முக்கிய வித்தியாசம் உண்டு. செயற்கைக்கோள்களின் ஆயுள்காலம் – சுமார் 7 ஆண்டுகள்தான். அது முடிந்ததும் சில காலம் விண்வெளியில் இருக்கும். பின்னர் மெதுவாக அவை பூமியை நோக்கி இறங்க ஆரம்பிக்கும். பிறகு ஒரு கட்டத்தில் அவை வேகமாக இறங்கும். அக் கட்டத்தில் அவை காற்று மண்டலத்தில் நுழையும்.
காற்று மண்டலம் வழியே அதி வேகத்தில் – மணிக்கு சுமார் 27 ஆயிரம் கி.மீ. வேகத்தில் கீழ் நோக்கிப் பாயும் போது காற்று மண்டல உராய்வு காரணமாக மிகுந்த அளவுக்கு சூடேறித் தீப்பற்றி எரியும். சில சிறிய செயற்கைக்கோள்கள் முற்றிலுமாக எரிந்து இறுதியில் பொடியாகிக் கீழே நிலப்பகுதியில் அல்லது கடலில் விழும்.
விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்து விழுகின்ற எந்தப் பொருளும் காற்று மண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றும். நீங்கள் இரவு வானைக் கவனித்தால் ஏதோ நட்சத்திரம் விழுவதுபோல ஒளிக்கீற்று தென்படும். அனேகமாக அது மிளகு அல்லது சுண்டைக்காய் அளவில் இருக்கிற சிறிய கல்லாக இருக்கலாம். விண்வெளியிலிருந்து இவ்விதம் நிறைய கற்களும் அபூர்வமாகப் பெரிய கற்களும் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.
செயலிழந்த செயற்கைக்கோள்கள் காற்று மண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றி அழிவதில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு உயரே செல்கின்ற விண்வெளி ஓடம் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியாக வேண்டும்.
ஆகவே அது பூமிக்குத் திரும்புகையில் காற்று மண்டலத்தில் நுழைந்ததும் தீப்பிடித்து அழிந்துவிடாமல் தடுக்க விண்வெளி ஓடத்தின் வெளிப்புறத்தில் தகுந்த வெப்பத் தடுப்பு ஏற்பாடுகள் உள்ளன.
விண்வெளி ஓடம் பூமியை நோக்கி வேகமாக இறங்கும்போது அதன் வெளிப்புறத்தில் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறான அளவில் சூடாகின்றன. அதன் முகப்புப் பகுதி, இறக்கைகளின் முன்புறப் பகுதிகள் ஆகியவை சுமார் 2900 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சூடேறும்.
அக் கட்டத்தில் விண்வெளி ஓடம் தீப் பிழம்பாகக் காட்சி அளிக்கும். விண்வெளி ஓடம் உயரே சென்றுவிட்டு பூமிக்குத் திரும்புகிற ஒவ்வொரு தடவையும் அது தீக்குளிப்பதாகக் கூறலாம்.
இவ்வளவு வெப்பத்திலும் உருகி விடாமல் அதே நேரத்தில் அந்த வெப்பம் உள்ளே சென்று தாக்காத வகையில் தடுக்க விண்வெளி ஓடத்தின் வெளிப்புறப் பகுதிகளில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அதிக வெப்பம் தாக்கும் பகுதிகளில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த ஓடுகள் சுமார் இரண்டரை சென்டிமீட்டர் முதல் 25 சென்டிமீட்டர் வரை தடிமன் கொண்டவை. இவை பயங்கரமாக சூடேறினாலும் அழிந்துவிடாதவை. வெப்பத்தை நன்கு தாங்கி நிற்கக்கூடியவை.
விண்வெளி ஓடத்தின் வெளிப்புறத்தில் மொத்தம் சுமார் 32 ஆயிரம் ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி நம்பர் கொண்டவை. விண்வெளி ஓடம் ஒரு தடவை உயரே சென்று விட்டு பூமிக்குத் திரும்பியதும் சில ஓடுகள் இழக்கப்பட்டிருக்கும். வெப்பம் அதிகம் தாக்காத பகுதிகளில் சிறு துண்டுகள் வடிவிலான கனத்த போர்வைகள் விசேஷ பிசின் கொண்டு ஒட்டப்படுகின்றன. விசேஷ பொருள்களால் ஆன இந்தப் போர்வைகளும் வெப்பம் உள்ளே செல்லாதபடி தடுக்கக்கூடியவை.
அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் இப்போது ஏற்பட்ட பிரச்னை இதுதான். அந்த விண்வெளி ஓடத்தின் பின்பகுதியில் சுமார் 1000 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தாக்கக்கூடிய பகுதி ஒன்றில் பதிக்கப்பட்ட ஒரு போர்வையின் ஓரம் தனியே பிரிந்து புடைத்துக்கொண்டு நின்றது. அதாவது 10 சென்டிமீட்டர் கொண்ட போர்வைப் பகுதி இவ்விதம் ஒட்டிக்கொள்ளாமல் இருந்தது.
விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை விண்வெளி ஓடத்திலிருந்து வெளியே வந்து அந்தரத்தில் மிதந்தபடி செயல்பட்டு அப் போர்வையின் ஓரப் பகுதியை விண்வெளி ஓடத்தின் வெளிப்புறம் மீது மீண்டும் ஒட்டினர். இதன் மூலம் உள்ளே வெப்பம் தாக்கும் வாய்ப்பு தடுக்கப்பட்டு விட்டதாகக் கூறலாம்.
டிஸ்கவரி விண்வெளி ஓடம் 2005லும் 2006லும் பூமிக்குத் திரும்பியபோது இவ்விதம் வெப்பக் காப்பு போர்வையின் சிறு பகுதிகள் சரியாக ஒட்டிக் கொள்ளாத நிலையில் பூமிக்கு வந்து சேர்ந்தது.
செயற்கைக்கோள்களை உயரே எடுத்துச் சென்று செலுத்தவும். பழுதுபட்ட செயற்கைக்கோள்களைக் கைப்பற்றி கீழே கொண்டு வரவும் மற்றும் விண்வெளியில் சில ஆய்வுகளை நடத்தவும் விண்வெளி ஓடங்களை அமெரிக்கா உருவாக்கியது.
எனினும் இப்போது விண்வெளியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பொருள்களையும் விண்வெளி வீரர்களையும் கொண்டு செல்ல கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1981-ல் தொடங்கி அமெரிக்க விண்வெளி ஓடங்கள் 100-க்கும் மேற்பட்ட தடவை உயரே சென்று பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளன. அபூர்வமாகவே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.)