Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன் 4th, 2007

How to improve the Quality of output from Educational Instituitions

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

தரமென்னும் தாரக மந்திரம்!

இரா. வெங்கடேஷ்

ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் புதிய சிந்தனைகளும் புதிய வெளிப்பாடுகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

இதை அறிவுசார் சமூகம் உணர்ந்து ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படை ஆதாரம் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மதிப்புற்று இருப்பதுதான்.

நாட்டின் எதிர்காலம் உயர்கல்வி கற்றவர் கையில்தான் உள்ளது என்ற நிலைமாறிவிட்டது. உயர்கல்வியின் எதிர்காலம் உயர்கல்வி நிறுவனங்களின் கையில்தான் உள்ளது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெருகிவரும் கல்வி நிறுவனங்கள் தரமான உயர் கல்வியை வழங்குகின்றனவா? அக் கல்வி சமூகப் பயன்பாட்டைச் சார்ந்துள்ளதா போன்ற வினாக்கள் எழுகின்றன.

லட்சியத்தை அடைவதற்கு வழிகாட்டியாகத் திகழும் உயர்கல்விக்கும், அக் கல்வியை வழங்கும் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

2005 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி

  • 357 பல்கலைக்கழகங்கள்,
  • 17,625 கல்லூரிகள்,
  • 4.72 லட்சம் ஆசிரியர்கள்,
  • சுமார் 67 லட்சம் மாணவர்கள்

என்று இந்தியாவில் உயர்கல்விச் சேவை பல துறைகளில் தொடர்ந்தாலும்

  • உயர்கல்வி பெறுவோர் வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே.

இதற்குக் காரணம் உயர்கல்வியின் தரமின்மை குறைபாடா? அல்லது உயர்கல்வியின் மீது நாம் உரிய கவனம் செலுத்தவில்லையா?
இன்று அறிவு வளர்ச்சிக்குத்தான் உயர்கல்வி நிறுவனங்கள் என்ற நிலை மாறி அதிக வருவாய் ஈட்டத்தான் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றன. தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற சமூக உணர்வு குன்றிய நிலையில்தான் பெரும்பாலும் உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு ஒதுக்கிவரும் நிதியைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்ததா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு தமிழக அரசு உயர்கல்விக்கு ஒதுக்கிய தொகை ரூ. 892 கோடி. இந்த ஆண்டு ரூ. 1,052 கோடி. ஏறத்தாழ ரூ. 160 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் மாணவர்களின் கல்வியறிவை சர்வதேசத் தரத்தில் உயர்த்துவது, குறைந்த செலவில் தரமான உயர்கல்வியை அளிப்பது, வேலைவாய்ப்பு சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கல்வியை வழங்குவது, மாணவர்களை சுயசார்புடையவர்களாக உருவாக்குவது போன்ற அம்சங்களை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால் இன்றைய கல்வி நிறுவனங்கள் மதிப்பெண்களை அளவுகோலாகக் கொண்ட மனப்பாடக் கல்வியை வழங்குகின்றனவே தவிர எதிர்காலச் சமுதாயத்தினரின் சுயசிந்தனை வளர்ச்சிக்கும் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கும் வழிவகை செய்யாமல் தரம் குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

தரமான கல்வி வழங்குவது என்பது குழப்பம் நிறைந்ததாக உள்ளது. காரணம், நம் நாட்டில் பாடத்திட்டம் – நடைமுறை வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றிற்கிடையே பெரும் இடைவெளி உள்ளது. மாணவர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்த வாய்ப்பில்லை.

கல்வி என்பது வெறுமனே பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் உதவும் காரணி அல்ல. வருங்காலச் சமுதாயத்தை வார்த்தெடுக்கும் ஒரு பண்பாட்டு மூலதனம் என்ற அளவில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரசின் தேவையற்ற குறுக்கீடும் அரசியல்வாதிகளின் தலையீடும் குறைக்கப்பட வேண்டும். உயர்கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நிகழும் மாற்றங்களுக்கேற்ப பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கும் – பாடத்திட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அறவே நீக்கப்பட வேண்டும்.

திறமையான, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்விக் கட்டண விகிதம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

உயர்கல்வியில் முறையான, தெளிவான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். கல்வித் தரம் தொடர்பான சுய மதிப்பீட்டு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதும், அதனைச் சோதனைக்குட்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தரமான உயர்கல்வி மட்டுமே நம்மைச் சிந்திக்கவும், திறமையான வகையில் செயல்பட வைக்கவும் முடியும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தரத்தை தாரக மந்திரமாகக் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும்.

உயர்கல்வித் துறையில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பக் கல்வியில் இந்திய இளைஞர்களின் திறமை உலக நாடுகளை வழிநடத்துகிறது. ஆனால் உயர்கல்வி தரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, நீடித்துவரும் குழப்பங்கள் இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும் என அஞ்சப்படுகிறது.

எதிர்காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். அச்சூழலில் கல்வி நிறுவனங்களை நிறுவுவதும், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுப்பதும் மட்டுமே தங்கள் தலையாய கடமை என்ற நிலையில் செயல்படக் கூடாது.

உயர்கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இந்தியாவில் உயர்கல்வி உண்மையான பயன்பாட்டுக் கல்வியாக விளங்க முடியும்.

உயர்கல்வித்தரமும், மாணவர்களின் திறனும், செயலூக்கமும் பன்னாட்டு அளவில் ஒரு சவாலாக இருக்க வேண்டுமெனில் உயர்கல்வி நிறுவனங்கள் தரமென்னும் விதையை தகுதியான நிலத்தில் விதைத்தாக வேண்டுமே தவிர களர்நிலத்தில் அல்ல!

Posted in Admissions, Analysis, Backgrounder, College, Divide, Education, Expensive, Impact, Instituition, Instructor, Needy, Op-Ed, Opinion, Poor, Professor, Rich, School, solutions, Student, Teacher, University, Wealthy | Leave a Comment »

Nilakkottai Local Body President & Muthalamman Temple Hundi Collections

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

வாண வேடிக்கைக்குப் பதில் துப்பாக்கிச்சூடு!, கற்பூரப் புகைக்குப் பதில் கண்ணீர்ப்புகை, கோலாட்டம், கும்மியாட்டத்துக்குப் பதிலாக தடியடி! இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா.

சுத்துப்பட்டியில் உள்ள

  • சித்தர்கள் நத்தம்,
  • நல்லி செட்டிபட்டி,
  • மட்டப்பாறை,
  • ராமராஜபுரம்,
  • எத்திலோடு,
  • பிள்ளையார் நத்தம்,
  • அணைப்பட்டி போன்ற பல ஊர்களுக்கு முக்கியக் கோயிலாக விளங்குவது விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில்தான்.

கடந்த ஏப்ரல் மாதம் கோயில் திருவிழா தொடங்கும் முன்பே அறங்காவலர்கள் நியமன பிரச்னை அங்கே ஆரம்பித்து விட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க. அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி

  • ஆவுடையம்மாள்,
  • திரிபுரசுந்தரி

என்ற இரண்டு அறங்காவலர்களை அதிரடியாக அறிவிக்க, மாணிக்கம் என்பவரது தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது ‘திருவிழா முடிஞ்சதும் பேசித் தீர்த்துக்கலாம். இப்ப பிரச்னை பண்ண வேண்டாம்’ என பெரியவர்கள் சொல்ல, பிரச்னை தாற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
ஊர்கூடி ஒன்றாக நோன்பு காப்பு கழற்றப்பட்டதும் முத்தாலம்மன் கோயில் இருதரப்பினர் முன்னிலையில் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது. ‘‘இனி பேச்சுவார்த்தை முடிந்த பின்னால்தான் கோயில் திறப்பு’’ என முடிவு செய்து விளாம்பட்டி காவல்நிலையத்தில் கோயில் சாவி ஒப்படைக்கப்பட்டது.

மே 16_ம் தேதி!

முருகன் _ மணிமாலா தம்பதியரின் பத்து வயது மகள் அபிநிஷாவுக்கு திடீரென அம்மன் அருள் வந்து விட்டதாக விளாம்பட்டியே பரபரப்பானது. அம்மன்போல் அலங்கரித்துக் கொண்டு வெறும் மஞ்சள் நீரை மட்டும் ‘மடக் மடக்’ என்று குடித்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடியபடி குறிசொன்னாள் அபிநிஷா. ‘‘வைகாசி பொறந்தாச்சு. கோயிலைத் திறந்து எனக்கு பூசை பண்ணுங்கடா!’’ என்று அம்மன் வாய்ஸில் அபிநிஷா பேச, ஆத்தா உத்தரவால் அரண்டு போனது விளாம்பட்டி.

சிறுமி அபிநிஷாவை யாரும் போட்டோ கூட எடுத்துவிடாமல் பொத்திப் பொத்தி பாதுகாத்தனர் ஊர்க்காரர்கள். அதோடு, பேச்சுவார்த்தையை உடனே ஆரம்பித்து கோயிலைத் திறக்க வேண்டும் என்று பரபரத்தார்கள். ஆனால், விளாம்பட்டிக்காரர்களின் கூக்குரல் எதுவும் தி.மு.க. வினர் மற்றும் போலீஸார் காதில் விழவேயில்லை.

இந்த நிலையில் 29.05.07 அன்று அம்பாசிடர் கார்களில் ஆவுடையம்மாள், திரிபுர சுந்தரி ஆகியோருடன் சோழவந்தானைச் சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளாம்பட்டிக்கு வந்தனர். ‘‘கோயில் உண்டியல் இரண்டு வருடமாகவே எண்ணப்படாமல் இருக்கிறது. பணத்தை எண்ணி பேங்க்கில் போட வேண்டும்’’ என்று கூறி, கோயில் சாவியை போலீஸாரிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் கோயிலைத் திறக்க முயன்றபோது கொதித்துப் போனார்கள் விளாம்பட்டி மக்கள். ‘‘பிரச்னை இன்னும் இருக்கும்போது ஏன் கோயிலைத் திறக்கிறீங்க? சாவி யார் தந்தது?’’ என்று சண்டைக்கு வந்த அவர்கள், இதன் பின்னணியில் நிலக்கோட்டை யூனியன் சேர்மன் (தி.மு.க.) கோட்டைசாமி இருப்பதாக ஊகித்துக் கொண்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதுமட்டுமல்ல, அறங்காவலர்களையும், அதிகாரிகளையும் அள்ளிப்போய் விளாம்பட்டி காவல் நிலையத்தில் போட்டு போலீஸாரிடம் விளக்கம் அளித்தனர்.

போலீஸார் விளாம்பட்டி மக்களின் விளக்கம் எதையும் காதில் வாங்கவில்லை. அறங்காவலர்கள், அதிகாரிகள் மீண்டும் கோயிலைத் திறக்க வழியேற்படுத்தித் தந்தனர். கோயில் திறக்கப்பட்டது மட்டுமல்ல, ஊர் மக்கள் யாருமில்லாமல் உண்டியலும் திறக்கப்பட்டதால் கொதித்தெழுந்தனர் விளாம்பட்டியினர். அறங்காவலர்கள் வந்த அம்பாசிடர் கார்களை அப்பளம் போல் அடித்து நொறுக்கினர். கண்ணாடிகள் பறந்தன. காவல் நிலையம் மீதும் கல்வீச்சு நடந்தது.

திண்டுக்கல் எஸ்.பி. பாரிக்கு இந்தத் தகவல் தெரியவர அவர் ஆர்.டி.ஓ. பேச்சியம்மாள், நிலக்கோட்டை தாசில்தார் கந்தசாமி ஆகியோருடன் வந்து பேச்சு நடத்தினார். அப்போதும் மக்கள் அடங்கவில்லை. எட்டு போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களின் ஆவேசத்தைத் தாங்க முடியாமல் போலீஸ் திணற ஆரம்பித்தது. இந்த சந்தடியில் கோயில் உண்டியல் கொள்ளை போனது. தி.மு.க.வினர் மீதும் தாக்குதல் நடந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்து வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் ஆரம்பத்தில் தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு நடத்திவிட்டு, கடைசியில் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள். அதில் காயமடைந்த குணசுந்தரி, சிவபிரகாஷ் போன்றவர்கள் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு விடியட்டும் என்று காத்திருந்த போலீஸார் விடியும் தறுவாயில் விறுவிறுவென செயலில் இறங்கினார்கள். விளாம்பட்டியில் அங்கங்கே மின்சாரத்தை அணைத்து விட்டு வீடு புகுந்து ஆண்கள், பெண்கள் என்று பார்க்காமல் அனைவரையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள். வீடுகளில் இருந்த டி.வி. பீரோ, ஃபிரிட்ஜ்களை உடைத்துப் பந்தாடினார்கள். விளாம்பட்டி கிராமம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் போல ஆகியது.

இந்தத் தாக்குதலின் போது போலீஸாருக்கு ‘எதிர்சேவை’யும் நடந்தது. அதில் டி.எஸ்.பி.க்கள் ருத்ரசேகர், போஸ் மற்றும் மூன்று பெண் போலீஸார் காயமடைந்தனர். அதனால் ஆவேசமடைந்த போலீஸார் 30_ம் தேதி முடிவதற்குள் விளாம்பட்டி கிராமத்தை போட்டுப் புரட்டி ஆண்கள் அத்தனை பேரையும் அமுக்கிப் பிடித்தனர், அவர்களை நிலக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களுக்குக் கொண்டு சென்றனர். இப்படிப் பிடிபட்ட ஆண்களில் பெரும்பாலானோர் பிளஸ் டூ, பத்தாவது முடித்த மாணவர்கள் என்பதுதான் பரிதாபம். பிடிபட்டவர்களில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் அடங்குவார்கள். வேறு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக இவர்கள் உடனே விடுவிக்கப்பட்டனர்.

போலீஸாரின் ‘நள்ளிரவு வேட்டை முடிந்த பின்னர் புலம்பலுடன் விளாம்பட்டி கிராமத்தில் பொழுது விடிந்தது. தாசில்தார் கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகளாகக் கணக்குக் காட்டி அதில் எழுபது பேரை போÊலீஸார் 30_ம் தேதி ரிமாண்ட் செய்தனர்.

ஆண்கள் நடமாட்டமே இல்லாமல் ஏற்கெனவே வெறிச்சோடிக் கிடந்த விளாம்பட்டியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. நாம் விளாம்பட்டிக்குச் சென்று அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘எப்பவுமே முத்தாலம்மன் கோயில் உண்டியலை தண்டோரா போட்ட பிறகுதான் திறந்து எண்ணுவாக. ஆனால் இப்ப நிலக்கோட்டை யூனியன் சேர்மன் கோட்டைசாமி சொன்னார்னு ஆட்கள் வந்து திறந்ததால் பிரச்னை வந்திருச்சு. போலீஸில் புகார் சொன்னோம். அவுக காதிலேயே வாங்கலை. அப்புறம்தான் கலவரம் முத்திப் போச்சு. காரை அடிச்சாங்க. போலீஸ் ஸ்டேஷன் மீது கல் வீசினாங்க.

எங்க வீட்டிலேயிருந்த நாலு ஆம்பிளைகளை போலீஸ் அள்ளிட்டுப் போயிட்டாக. இங்கே இப்ப ஆம்பிளையே இல்லைன்னு சொன்னால், அப்புறம் உனக்கு எதுக்கு சேலைதுணின்னு அசிங்கம் பண்ணினாங்கனு வீட்டு சாமான், டி.வி. பொட்டி எல்லாத்தையும் போலீஸ் போட்டு உடைச்சுது. இவங்க பண்ணின தப்பை மறைக்க இப்படி வெறியாட்டம் போடுறாக’’ என்றார்.

முத்தாலம்மன் கோயில் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக கருதப்படும் நிலக்கோட்டை சேர்மன் கோட்டை சாமியிடம் பேசினோம்.

‘‘என் மேல் எந்தத் தப்பும் இல்லை. இருந்தும் என்னை கல்லால் அடித்து காயப்படுத்தி விட்டாங்க. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஊர்க்காரர்கள்தான். அவர்கள் எப்படியாவது அறங்காவலர் ஆகணும் என்கிற வெறியில் ஊரைத் தூண்டி விட்டு வன்முறையில் இறங்க வைத்துவிட்டாங்க.

கோயில் உண்டியலை, இப்போ திறக்க வேண்டாம் என்றுதான் நான் சொன்னேன். மீறித் திறந்ததால் இந்த விபரீதம் நடந்து போச்சு. இப்போது இந்த கலவரத்துக்கே நான்தான் காரணம் என்று கதை கட்டி விடுறாங்க!’’ என்றார் அவர்.

விளாம்பட்டியில் போலீஸ் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் எஸ்.பி. பாரியிடம் நாம் கேட்டோம்.

‘‘இப்போது விளாம்பட்டியில் முழு அமைதி ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம். எழுபது பேரை கைது செய்திருக்கிறோம். விரைவில் மாமூல் நிலை திரும்பி விடும்’’ என்றார்.

30_ம் தேதி திண்டுக்கல் கலெக்டர் வாசுகியும் விளாம்பட்டிக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அவரிடம் போலீஸார் செய்த அட்டூழியங்களை பொதுமுக்கள் புகாராகக் கூறியிருக்கிறார்கள்.

கோட்டையில் ராஜாங்கம் செய்தால் மட்டும் போதாது. கோயில்களிலும் ராஜாங்கம் செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பதால் விளாம்பட்டி போன்ற விபரீதங்கள் மேலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். விளாம்பட்டி இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது மயான அமைதி.

– மருது


Author – Unknown

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள விளாம்பட்டி கிராமம் கள்ளர் பிரிவைச் சேர்ந்த முக்குலத்தோர் அதிகம் உள்ள ஒரு கிராமம். கிராமத்தின் முக்கிய தெய்வமான முத்தாலம்மன் கோயில் திருவிழா வருடாவருடம் அமர்க்களமாய் நடக்கும் ஒன்று.

இந்த வருடம் நிலக்கோட்டை கவுன்ஸிலராக (?) இருக்கும் கோட்டைச்சாமி என்பவர் கோயில் உண்டியலை உடைத்து அனைத்து வசூலையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதை தடுத்தவர்களையெல்லாம் அடித்து விரட்டிவிட்டு இந்தச் செயலை செய்துள்ளார். போராட்டம் நடத்திய மக்கள்மேல் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து சிலர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சினையை தடுக்க விளாம்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து ஆண்களையும் பிடித்து சிறையில் அடைத்துவருகிறார்கள். விளாம்பட்டியிலுள்ள ஆண்கள் தப்பிப்பதற்கு வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள்.

கிராமத்திற்கு மின்சாரம், தண்ணீர் முதலானவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்களும் வேறு வழியின்றி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

அதாவது ஒரு ஊரே, ஒரு கொள்ளையை தடுக்க இயலாமல் எதிர்த்ததால் ஊரைவிட்டு விரட்டப்படுகின்றனர்.

இந்த விஷயத்தைப் பற்றி ஜெயா டிவி மட்டுமே செய்திகள் வெளியிட்டு
வருகின்றது.

ஹிந்து சமுதாயத்திற்கும், ஆன்மீக விடுதலைக்கும் போராடுவதாகச்
சொல்லிக்கொள்ளும் எந்த ஹிந்து அமைப்பும் இந்த பிரச்சினையில்
தலையிட்டதாகத் தெரியவில்லை.

கோட்டைச்சாமி அவர்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவராக உள்ளார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Avadi Amman, AvadiAmman, Charitable, Charity, Corruption, Council, Councillor, DMK, Hindu, HR&CE, Hundi, Jaya TV, Jeya TV, Law, Local Body, Muthalamman, Nilakkottai, Nilakottai, Order, Police, President, Religion, Religious, Temple, Velasundur, Vilaampatti, Vilampatti, Vilampatty, Village, Violence | Leave a Comment »

Orhan Pamuk – Nobel Prize winner: Turkish novelist – Lecture

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

07.06.07 
குமுதம் தீராநதி

ஓரான் பாமுக் – அப்பாவின் சூட்கேஸ்
தமிழில்: ஜி குப்புசாமி

அவர் காலமாவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு, என் அப்பா அவரது எழுத்துக்கள், கைப்பிரதிகள், குறிப்பேடுகள் அடங்கிய ஒரு சிறிய சூட்கேஸை என்னிடம் கொடுத்தார். அவரது வழக்கமான கேலியும் கிண்டலும் கலந்த தொனியில், அவர் போய்ச் சேர்ந்த பிறகு, அவற்றை நான் படிக்க வேண்டும் என்றார். அதாவது அவர் இந்த உலகை விட்டுப் போய்ச் சேர்ந்த பிறகு.

லேசான சங்கடத்தோடு, ‘‘சும்மா எடுத்துப்பார்’’ என்றார். ‘‘உள்ளே இருப்பதில் ஏதாவது பிரயோஜனப்படுமா என்று பார். நான் போன பிறகு வேண்டுமானால், அவற்றில் தேர்ந்தெடுத்து வெளியிட்டுக் கொள்.

நாங்களிருவரும் புத்தகங்கள் சூழ்ந்திருக்கும் எனது வாசிப்பறையில் இருந்தோம். வலி மிகுந்த சுமையன்றை இறக்கி வைக்க விரும்பும் ஒரு மனிதனைப்போல அப்பா முன்னும் பின்னும் நடந்து, அந்த சூட்கேஸை வைப்பதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். கடைசியில் அதைக் கண்ணுக்கு உறுத்தாத ஒரு மூளையில் மெதுவாக வைத்தார். நாங்கள் இருவரும் எப்போதும் மறந்திராத ஒரு பாசாங்குத் தருணம் அது. அது கடந்ததும், வாழ்க்கையை லேசாக எடுத்துக் கொள்கிற, கேலியும் கிண்டலுமான எங்கள் ஆளுமைகள் தலையெடுக்க, எங்களது வழக்கமான வேடங்களுக்குத் திரும்பினோம். தினசரி வாழ்க்கையின் அற்பமான விஷயங்களைப் பற்றி, துருக்கியின் முடியவே முடியாத அரசியல் சிக்கல்களைப் பற்றி, பெரும்பாலும் நஷ்டத்தில் முடிகிற என் அப்பாவின் வியாபார முயற்சிகளைப் பற்றி அதிகம் விசனப்படாமல் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தோம்.

அப்பா அங்கிருந்து சென்ற பின், அந்த சூட்கேஸைக் கடந்து அப்படியும் இப்படியுமாக பல நாட்கள் சென்று வந்தும், ஒருமுறை கூட அதைத் தொட்டுப் பார்க்கவில்லையென்பதும் என் நினைவுக்கு வருகிறது. இந்தச் சிறிய, கருப்புநிற, தோல் சூட்கேஸ§ம் அதன் பூட்டும், அதன் மழுங்கல் முனைகளும் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானதுதான். குறைந்த தூரப் பயணங்களுக்கும், வேலைக்குச் செல்லும்போது பதிவேடுகளை எடுத்துச் செல்வதற்கும் அப்பா அதனை எடுத்துச் செல்வார். என் சிறு வயதில் அப்பா வெளியூர் சென்று திரும்பினால், இந்தச் சின்ன சூட்கேஸைத் திறந்து உள்ளேயிருப்பவற்றை நான் குடாய்ந்ததும், கொலோன் வாசனையில் வெளிநாட்டுச் சரக்குகளை நோண்டியதும் ஞாபகத்தில் வந்தன. இந்த சூட்கேஸ் ஒரு பரிச்சயமான சிநேகிதன். என் பிள்ளைப் பிராயத்தின், என் கடந்த காலத்தின் ஒரு வலுவான நினைவூட்டி. ஆனால், இப்போது என்னால் அதைத் தொடக் கூட முடியாது. ஏன்? அதனுள்ளே பொதிந்திருக்கும் மர்மங்களில்தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த கனத்தின் அர்த்தத்தை இப்போது நான் பேசப் போகிறேன். ஒருவன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தன் சுயத்தை வெளிப்படுத்தும் ஒரு சிருஷ்டி மூலையை அடைந்து தன்னைப் பதிந்து கொண்டானென்றால், அதுதான் அவன் படைப்பதும் _ இலக்கியத்தின் அர்த்தமும்.

என் அப்பாவின் சூட்கேஸை இறுதியில் நான் தீண்டியபோதுகூட, அதைத் திறந்து பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனால் அந்த நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த இந்தக் கத்தை கத்தையான விஷயங்களைப் பற்றி நான் கேள்விப்படுவது இதுதான் முதல் முறையுமல்ல. என் அப்பாவிற்கு ஒரு மிகப் பெரிய நூலகம் இருந்தது; அவரது இளமையில், 1940_களின் இறுதியில் அவர் ஒரு இஸ்தான்புல் கவிஞனாக ஆக விரும்பி வாலெரியை துருக்கிய மொழியில் மொழிபெயர்த்திருந்தார். ஆனால், சொற்ப வாசகர்களேயிருக்கும் ஓர் ஏழை தேசத்தில் கவிதை எழுதி வாழ்க்கை நடத்துவதை அவர் விரும்பியிருக்கவில்லை. என் அப்பாவின் அப்பா, என் தாத்தா ஒரு செல்வந்தரான வணிகராக இருந்தவர். என் அப்பா ஒரு வசதியான சௌகரியமான வாழ்க்கையைச் சிறுவயதிலும், இளம் பருவத்திலும் அனுபவித்திருக்கிறார். இலக்கியத்தின் பொருட்டும், எழுதுவதற்காகவும் சிரமஜீவனம் நடத்த அவருக்கு விருப்பமில்லை. வாழ்க்கையை அதன் எல்லா அழகுகளோடும் விரும்பியவர் அவர் _ இதுவரைக்கும் எனக்குப் புரிகிறது.

என் அப்பாவின் சூட்கேஸிற்குள் இருப்பவற்றிலிருந்து என்னை தூர விலக்கி வைத்திருக்கும் முதல் விஷயம், வாசிக்கக் கிடைப்பது எனக்கு விருப்பமில்லாமற் போகலாம் என்ற பயம் தான். ஏனென்றால், இது என் அப்பாவிற்குத் தெரியும் என்பதால்தான் முன்னெச்சரிக்கையாக அவற்றை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்போல நடித்தார். இருபத்தைந்து வருடங்கள் எழுத்தாளனாகப் பணியாற்றியபின் இதைப் பார்ப்பதற்கு எனக்கு வலியெடுத்தது. ஆனால், என் அப்பா இலக்கியத்தைப் போதியளவுக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது கோபித்துக் கொள்ளக் கூட நான் விரும்பவில்லை… என் நிஜமான பயம், நான் தெரிந்து கொள்ளவோ, கண்டறிந்து கொள்ளவோ விரும்பாத நெருக்கடியான விஷயம், ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராக என் அப்பா இருக்கக் கூடிய சாத்தியம் தான். இந்த பயத்தினால்தான் என் அப்பாவின் சூட்கேஸை என்னால் திறக்க இயலவில்லை. அதைவிட மோசம் என்னவென்றால், இதை என்னால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாதது. என் அப்பாவின் சூட்கேஸிலிருந்து உண்மையானதும், மகத்தானதுமான இலக்கியம் வெளிவருமானால், என் அப்பாவிற்குள் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதர் வாழ்ந்திருப்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டி வரும். இது பீதியேற்படுத்தும் ஒரு சாத்திய கூறு. ஏனெனில் என் இந்த முதிர்ந்த வயதில் கூட என் அப்பாவை என் அப்பாவாக மட்டுமே நினைக்க விரும்பினேன். ஓர் எழுத்தாளனாக அல்ல.

ஓர் எழுத்தாளன் என்பவன் தனக்குள்ளிருக்கும் இரண்டாவது சுயத்தையும், அவனை அவனாக ஆக்கும் உலகையும் கண்டறிய வருடக் கணக்காக பொறுமையோடு தேடிவருபவன்: எழுதுவது என்பதைப் பற்றி நான் பேசும்போது என் மனதிற்கு முதலில் வருவது ஒரு நாவலோ, ஒரு கவிதையோ அல்லது இலக்கியப் பாரம்பரியமோ அல்ல, ஓர் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தனியாக, தனக்குள்ளாகத் திரும்பி, வார்த்தைகளால் ஒரு புதிய உலகை அதன் நிழல்களுக்கு மத்தியில் கட்டமைக்கும் ஒரு மனிதன்தான். இவன் அல்லது இவள் ஒரு தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம், கம்ப்யூட்டரின் சௌகரியத்தால் ஆதாயம் பெறலாம், அல்லது நான் முப்பது வருடங்களாகச் செய்து வருவதைப்போல தாளின் மீது பேனாவைப் பதித்து எழுதலாம். எழுதும்போது அவன் தேனீரோ, காபியோ அருந்தலாம், அல்லது சிகரெட் புகைக்கலாம். அவ்வப்போது மேஜையிலிருந்து எழுந்து சன்னலுக்கு வெளியே, தெருவில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்க்கலாம், அவனுக்கு அதிருஷ்டமிருந்தால் மரங்களும் காட்சிகளும் கூட தெரியலாம், அல்லது ஒரு கருப்புச் சுவரை அவன் வெறிக்கலாம். அவன் கவிதைகள், நாடகங்கள் அல்லது என்னைப் போல நாவல்கள் எழுதலாம். இந்த எல்லா வேறுபாடுகளும் அவன் மேஜையில் அமர்ந்து தனக்குள் பொறுமையாக திரும்பிக் கொள்வதற்குப் பிறகு வருபவை. எழுதுவது என்பது இந்த உள்நோக்கிய பார்வையை வார்த்தைகளாக மாற்றுவது, தனக்குள் அவன் அடங்கும் போது அவன் கடந்து வருகிற உலகைக் கவனித்து ஆய்வது, இதனைப் பொறுமையோடும், பிடிவாதத்தோடும், உவகையோடும் செய்வது.

என் மேஜையில் நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக அமர்ந்து வெற்றுத்தாளில் புதிய வார்த்தைகளை மெதுவாகச் சேர்த்துக் கொண்டு வரும்போது, ஒரு புதிய உலகை நான் படைப்பது போல, ஒரு பாலத்தை அல்லது ஒரு கோபுரத்தை ஒவ்வொரு கல்லாகக் கட்டுவதைப் போல எனக்குள்ளிருக்கும் அந்த மற்றொருவனைக் கட்டமைக்கிற மாதிரி உணர்கிறேன். எழுத்தாளர்களான நாங்கள் பயன்படுத்தும் கற்கள், வார்த்தைகள். அவற்றை எங்கள் கைகளில் ஏந்தி ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்திருக்கும் வழி வகைகளை உணர்ந்து சில நேரங்களில் அவற்றைத் தூர வைத்துப் பார்த்து, சில வேளைகளில் எங்கள் விரல்களாலும் பேனாக்களின் முனைகளாலும் ஏறக்குறைய தட்டிக் கொடுத்து, சீராட்டி அவற்றை எடைபோட்டு, அங்குமிங்கும் நகர்த்தியமைத்து, வருடவருடமாகப் பொறுமையோடும், நம்பிக்கையோடும் புதிய உலகங்களை உருவாக்குகிறோம்.

எழுத்தாளனின் ரகசியம் அகத்தூண்டுதல் அல்ல. அது எங்கிருந்து வருகிறதென்பது எப்போதுமே தெளிவாகத் தெரிவதில்லை. அது அவனது மனவுறுதி, அவனது பொறுமை. ‘ஊசியை வைத்துக் கொண்டு கிணறு வெட்டுவதைப் போல’ என்ற அழகான துருக்கியப் பழமொழி எழுத்தாளர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கூறப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. பழங்கதைகளில் எனக்கு ஃபெர்ஹாத்தின் பொறுமை எனக்குப் பிடித்தமானது. காதலுக்காக அவன் மலைகளைக் குடைந்து செல்கிறான், அதை நான் புரிந்து கொள்ளவும் செய்கிறேன். எனது My Name is Red நாவலில் பண்டைக்கால பாரசீக நுண்ணோவியர்கள் பற்பல வருடங்களாக அதே குதிரை ஓவியத்தை, அதே ஆர்வத்தோடு, ஒவ்வொரு தூரிகைக் கீற்றையும் மனப்பாடமாக வரைந்து கொண்டிருப்பதை, அவர்கள் கண்களைக் கட்டிவிட்டால் கூட அந்த அழகிய குதிரையை அதே நுணுக்கத்தோடு அவர்களால் வரைய முடியுமென்பதை நான் எழுதியபோது, நான் கூறிக்கொண்டிருப்பது எழுத்து வேலையை, என் சொந்த வாழ்க்கையைப் பற்றி என்று அறிந்தேன்.

ஓர் எழுத்தாளன் தன் சொந்தக் கதையை கூற வேண்டுமென்றால் _ அதை மெதுவாக, நிதானமாகக் கூற வேண்டும், அது மற்றவர்களைப் பற்றிய ஒரு கதை என்பதைப்போல, தனக்குள் உருவான கதையின் சக்தி மேலெழும்பி வருவதை உணர வேண்டுமென்றால், ஒரு மேஜையில் அமர்ந்து தன்னை இந்தக் கலைக்கு, இந்தக் கை வினைக்குப் பொறுமையாக ஒப்புவிக்க வேண்டுமென்றால், முதலில் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தரப்பட்டிருக்க வேண்டும். அகத்தூண்டல் தேவதை (இது சிலரிடம் அடிக்கடி வந்து ஆசீர்வதிக்கிறது, சிலரிடம் அரிதாகவே செல்கிறது) ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்களையே ஆதரிக்கிறது. ஓர் எழுத்தாளன் பெரும்பாலும் தனிமையாக உணரும்போது, அவனது முயற்சிகள் அவனது கனவுகள் அவனது எழுத்தின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றி பெரிதும் ஐயுற்றிருக்கும் போது, அவனது கதையை அவனது கதையென்றே அவன் நினைக்கும் போது, அத்தகைய தருணங்களில் அவனுக்குக் கதைகளையும், பிம்பங்களையும், கனவுகளையும் காட்டி, அவன் கட்டியெழுப்ப விரும்பும் உலகத்தை, அந்தத் தேவதை வரைந்தெடுக்கும். என் வாழ்க்கை முழுக்க அர்ப்பணித்து எழுதி வந்திருக்கும் புத்தகங்களை நான் திரும்ப யோசிக்கும் போது, என்னை மிக உன்னதமான மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வாக்கியங்கள், கனவுகள், பக்கங்கள் எல்லாமே என் சொந்தக் கற்பனையிலிருந்து வந்தவையல்ல என்றும், வேறேதோ ஒரு சக்தி அவற்றைக் கண்டெடுத்து எனக்குத் தாராளமாக வழங்கியிருக்கிறதென்றும் நான் உணர்ந்த தருணங்களால் பெரிதும் ஆச்சரியமுற்றிருக்கிறேன்.

என் அப்பாவின் சூட்கேஸைத் திறந்து அவரது நோட்டுப்புத்தகங்களை நான் வாசிக்க பயந்ததற்குக் காரணம் நான் பொறுத்துக்கொண்ட சிரமங்களை அவரால் தாங்கமுடியாது என்று நான் அறிந்திருந்தேன். தனிமையையல்ல அவர் நேசித்தது, நண்பர்களோடு கூட்டங்கள், ஓவியக் கண்காட்சிகள், வேடிக்கை, கம்பெனி என்று வாழும் வாழ்க்கையைத்தான். ஆனால் பிற்பாடு என் எண்ணங்கள் வேறு திக்கில் திரும்பின. இத்தகைய எண்ணங்கள், துறவறமும் பொறுமையுமான இத்தகைய கனவுகள் எல்லாமே என் சொந்த வாழ்க்கையிலிருந்தும், எழுத்தாளனாக என் சொந்த அனுபவத்திலிருந்தும் நான் பெற்றிருந்த முன் முடிவுகளே. கூட்டத்திற்கு மத்தியிலும், வீட்டில் குடும்பத்தினரின் சலசலப்பிற்கிடையிலும் எழுதுகிற அற்புதமான எழுத்தாளர்கள் பலர் உண்டு. அது மட்டுமின்றி, நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, என் அப்பா குடும்ப வாழ்க்கையின் சுவாரஸ்யத்தில் சலிப்புற்று, எங்களையெல்லாம் விட்டுவிட்டு பாரீசுக்குப் போய்விடுவார். பல எழுத்தாளர்களைப் போல அங்கே ஓட்டல் அறையில் அமர்ந்து நோட்டுப் புத்தகங்களை நிரப்பித் தள்ளுவார். அந்த நோட்டுப் புத்தகங்களில் சில இந்த சூட்கேஸில் இருக்கின்றன என்று தெரியும். ஏனென்றால், அதை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு சில வருடங்கள் முந்தி என் அப்பாவே தன் வாழ்க்கையின் அந்தக் காலகட்டத்தைப் பற்றி என்னிடம் பேசத் தொடங்கியிருக்கிறார். அந்த வருடங்களைப் பற்றி நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே அவர் கூறியிருந்தாலும், தனது வடுப்பாடுகளை, எழுத்தாளனாக ஆகவேண்டுமென்ற அவரது கனவுகளை அல்லது அவரது ஓட்டல் அறையில் அவரைப் பீடித்த தன்னடையாளம் குறித்த கேள்விகளை அவர் குறிப்பிட்டதில்லை. பதிலாக, பாரீஸ் நகர நடைபாதைகளில் சார்த்தரை அவர் எப்போதும் பார்ப்பதைப் பற்றி, அவர் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி, மிக முக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொள்பவரைப்போல மனமார்ந்த பெருமிதத்தோடு விவரிப்பார்.

நான் ஒரு எழுத்தாளனாக ஆனதற்கு என் அப்பா பாஷாக்களையும் மாபெரும் மதத்தலைவர்களையும் பற்றிப் பேசுவதைவிட, எழுத்தாளர்களின் உலகைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்ததும் ஓரளவுக்கு காரணம் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. எனவே, என் அப்பாவின் நோட்டுப் புத்தகங்களைப் படிக்கும் போது, இதை மனதில் வைத்துக் கொண்டு அவரது மிகப்பெரிய நூலகத்திற்கு நான் எந்தளவுக்குக் கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்பா எங்களோடு வசிக்கும்போது, அவர் என்னைப் போலவே புத்தகங்களோடும் சிந்தனைகளோடும் தனியாக இருப்பதையே விரும்பினார் என்பதையும், அவரது எழுத்தின் இலக்கியத்தரத்தைப் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் நான் மனதில் கொள்ள வேண்டும்.

ஆனால், அப்பா எனக்கு ஆஸ்தியாக விட்டுச் சென்ற சூட்கேஸைப் பார்க்கும்போது, இந்த விஷயத்தை என்னால் செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றியது. அவரது புத்தகங்களுக்கு முன்னால் போடப்பட்டிருக்கும் திவானில் அப்பா சாய்ந்துகொண்டு கையிலிருக்கும் புத்தகமோ, பத்திரிகையோ நழுவியது தெரியாமல் கனவில் மூழ்கி, தன் எண்ணங்களில் நெடுநேரம் தொலைந்து போயிருப்பார். அவர் ஜோக் அடிக்கும்போதும், கிண்டல் செய்யும் போதும், வீட்டுச் சச்சரவுகளின் போதும் இருக்கும் முகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாவத்தில் அவர் முகம் இருப்பதை நான் பார்த்தபோது உள்நோக்கிப் பார்க்கும் பார்வையை நான் முதன் முதலாகத் தரிசித்தது அப்போதுதான். குறிப்பாக, என் பிள்ளைப்பருவத்தில், என் முன் இளம்பருவத்தில், பயத்தோடு கூடிய புரிதலாக அவர் மனநிறைவின்றி இருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. இப்போது பற்பல வருடங்கள் கழித்து, இந்த மனநிறைவின்மைதான் ஒரு மனிதனை எழுத்தாளனாக்கும் ஆதாரக்கூறு என்று புரிகிறது. எழுத்தாளனாவதற்குப் பொறுமையும், கடும் உழைப்பும் மட்டும் போதாது; கூட்டம், நண்பர்கள், சாதாரண விஷயங்கள், தினசரி வாழ்வு போன்றவற்றிலிருந்து பிய்த்துக் கொண்டு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை அவன் முதலில் உணர வேண்டும். பின் ஓர் அறைக்குள் புகுந்து தன்னை தாழிட்டுக் கொள்ளவேண்டும். நம் எழுத்துக்களில் ஓர் ஆழமான உலகத்தை உருவாக்குவதற்காக பொறுமையையும் நம்பிக்கையையும் வேண்டி நிற்கிறோம். ஆனால் தன்னை ஓர் அறையில் அடைத்துக் கொள்ளும் இச்சை மட்டுமே நம்மைச் செயலாற்ற செலுத்துகிறது. தன் இதயத்திற்குள் புத்தகங்களைக் கொண்டு சென்று வாசிக்கிற, தன் சுயபிரக்ஞையின் குரலுக்கு மட்டும் செவிசாய்க்கிற, மற்றவர்களின் வார்த்தைகளோடு பூசலிடுகிற, தன் புத்தகங்களுடன் விவாதத்தில் இறங்குவதால் தன் சொந்தச் சிந்தனைகளையும் தன் சொந்த உலகத்தையும் வளர்த்தெடுக்கிற இத்தகைய சுதந்திரமான எழுத்தாளனுக்கு முன்னோடி மிக நிச்சயமாக நவீன இலக்கியத்தின்ஆரம்ப நாட்களில் மான்டெய்ன்தான். என் அப்பா அடிக்கடி எடுத்து வாசித்துக் கொண்டிருந்ததும், எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் மான்டெய்னைத்தான். கிழக்கிலோ அல்லது மேற்கிலோ உலகில் எங்கேயிருந்தாலும் சமூகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, தமது அறையில் அவர்களது புத்தகங்களோடு அடைபட்டுக் கொள்ளும் எழுத்தாளர்களின் மரபில் வருபவன்தான் நானும் என்று கூறிக்கொள்வேன். உண்மையான இலக்கியத்தின் துவக்கப்புள்ளி என்பது, அவன் தனது புத்தகங்களோடு அறைக்குள் சென்று அடைத்துக் கொள்வதாகத்தான் இருக்க முடியும்.

நம்மை அறைக்குள் அடைத்துக்கொண்ட பிறகு, நாம் நினைத்தளவுக்கு நாம் தனியாக இல்லையென்பதை சீக்கிரமே கண்டுகொள்வோம். நமக்கு முன் வந்தவர்களின் வார்த்தைகளோடு, மற்ற மனிதர்களின் கதைகளோடு, மற்றவர்களின் புத்தகங்களோடு, மற்றவர்களின் வார்த்தைகளோடு, பாரம்பரியம் என்று நாம் அழைக்கிறோமே, அதனோடு நாம் சேர்ந்திருக்கிறோம். தன்னை அறிந்து கொள்ளும் தேடலில் மனிதகுலம் சேமித்து வைத்த மதிப்புமிக்க களஞ்சியம் இலக்கியம் என நம்புகிறேன். சமுதாயங்களும், குலமரபினரும், மனிதர்களும் தம்முடைய கதாசிரியர்களின் மனசாட்சியை உறுத்தும் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கும்போது அவர்கள் கூடுதல் அறிவும், செல்வமும் பெற்றவர்களாக, மேலும் முன்னேறியவர்களாக வளர்கின்றனர். நூல்களை எரிப்பதும், எழுத்தாளர்களுக்கு கரிபூசி அவமானப்படுத்துவதும், இருண்ட, அக்கறையோ பொறுப்போ அற்ற காலகட்டம் நம்மீது கவிந்திருக்கிறதென்பதற்கு அறிகுறிகள். ஆனால் இலக்கியம் வெறும் தேசிய அக்கறையாக மட்டுமே எப்போதும் இருந்ததில்லை. அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு தனக்குள்ளாகவே முதன்முதலாகப் பயணம் செய்யத் தொடங்கும் எழுத்தாளன் வருடங்கள் செல்லச்செல்ல இலக்கியத்தின் சாசுவதமான விதியைக் கண்டுகொள்வான்; அவனது சொந்தக்கதைகளை, அவை மற்றவர்களுடைய கதைகள் போலவும், மற்றவர்களின் கதைகளைத் தன் சொந்தக் கதைகளைப் போலவும் சொல்வதற்கு அவனிடம் கலைநயம் இருக்க வேண்டும். அதுதான் இலக்கியம் எனப்படுவதும். ஆனால் முதலில் நாம் மற்றவர்களின் கதைகளுக்கும், புத்தகங்களுக்கும் ஊடாகப் பயணம் செய்தாக வேண்டும்.

அப்பாவிடம் ஒரு நல்ல நூலகம் இருந்தது. மொத்தம் 1500 புத்தகங்கள் இருந்தன. ஒரு எழுத்தாளனுக்குத் தேவைப்படுவதைவிட அதிகம். என் இருபத்திரண்டாவது வயதில் அவை அனைத்தையும் நான் படித்திருக்காவிட்டாலும்கூட, ஒவ்வொரு புத்தகத்தோடும் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. எந்தெந்த புத்தகங்கள் முக்கியமானவை, எவையெல்லாம் மேலோட்டமாகவும் வாசிக்க எளிதாகவும் இருப்பவை, எவையெல்லாம் கிளாஸிக்குகள், எந்த இலக்கியப் பாடத்திலும் இன்றியமையாத பகுதிகளாக விளங்குபவை எவை, மறந்துபோகக்கூடிய ஆனால் படிக்க சுவாரஸியமான உள்ளூர் சரித்திரங்கள், அப்பா உயர்வாக மதிக்கும் பிரெஞ்சு எழுத்தாளர்கள் யார் யார் என்றெல்லாம் எனக்குத் தெரிந்திருந்தது. சில நேரங்களில் இந்த நூலகத்தை, இதைவிடச் சிறந்த நூலகத்தை, வேறொரு வீட்டில் எனக்கான ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துக் கொள்வேன் என்று கற்பனை செய்து கொள்வேன். என் அப்பாவின் நூலகத்தைத் தூரத்திலிருந்து பார்க்கையில், அது நிஜ உலகத்தின் ஒரு சிறிய சித்திரமாகத் தோன்றும். ஆனால் இது இஸ்தான்புல் என்கிற எங்கள் சொந்த மூலையிலிருந்து பார்க்கப்பட்ட உலகம். நூலகம் இதற்குச் சாட்சியாக இருந்தது. இந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் அப்பா பெரும்பாலும் பாரீசுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றிருந்தபோது வாங்கியவை. அவை மட்டுமின்றி, இஸ்தான்புல்லில் 40_களிலும் 50_களிலும் வெளிநாட்டுப் புத்தகங்களை விற்றுவந்த, பின் எனக்கு பரிச்சயமாகிவிட்ட பழைய மற்றும் புதிய புத்தகக் கடைகளிலிருந்து வாங்கியவைகளும் இருந்தன.

என் உலகம் உள்ளூரும் தேசியமும் மேற்குலகும் கலந்த ஒரு கலவை, 70_களில் நானும் ஏதோ ஒருவித லட்சியத்துடன் என் சொந்த நூலகத்தை உருவாக்கத் தொடங்கினேன். எனது இஸ்தான்புல் நூலில் குறிப்பிட்டதைப் போல நான் எழுத்தாளனாக ஆகப்போவதாக அப்போது தீர்மானித்திருக்கவில்லை. நிச்சயமாக ஓர் ஓவியனாக ஆகப் போவதில்லை என்ற நிதர்சனம் வந்திருந்தது. ஆனால் என் வாழ்க்கை எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற நிச்சயம் ஏதும் உண்டாகியிருக்கவில்லை. வாசிக்கவும் கற்றறிந்து கொள்ளவும் ஒரு தணியாத ஆர்வம், நம்பிக்கை சேர்ந்த அவா எனக்குள் நிறைந்திருந்த அதே நேரத்தில், என் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டிருப்பதாக மற்றவர்களைப் போல என்னால் வாழ முடியாது என்பதாகத் தோன்றிக் கொண்டிருந்தது.

இந்த உணர்ச்சியின் ஒரு பகுதி, என் அப்பாவின் நூலகத்தை நான் வெறித்துக் கொண்டிருந்தபோது உணர்ந்ததோடு சம்மந்தப்பட்டிருந்தது. அது இஸ்தான்புல்லில் அந்நாட்களில் வசித்திருந்த எங்கள் எல்லோருக்குமே தோன்றிக்கொண்டிருந்த விஷயம்தான். மையப்பகுதியிலிருந்து விலகி வாழ்ந்து வருவதாக, விலக்கப்பட்ட பிரதேசத்தில் வாழ வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்ற வைக்கும் ஓர் உணர்வு. நான் கவலையுணர்வும் ஏதோ பற்றாக்குறையாகவும் உணர்ந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. கலைஞர்களிடம் அவர்கள் ஓவியர்களோ எழுத்தாளர்களோ_சிறிதளவும் ஆர்வம் காட்டாத, அவர்களுக்குக் கொஞ்சமும் நம்பிக்கையளிக்காத ஒரு தேசத்தில் வாழ்கிறேன் என்று மிக நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தது. 70_களில் அப்பா எனக்குத் தந்த பணத்தை எடுத்துக் கொண்டு மங்கலான, தூசுபடிந்த, அட்டை கிழிந்த புத்தகங்களை இஸ்தான்புல்லின் பழைய புத்தகக் கடைகளில் அடங்காத பேராசையோடு வாங்கும்போது, தெருவோரங்களிலும், மசூதி வெளி முற்றங்களிலும், சிதிலமுற்ற சுவர்களின் மீது கடைபரப்பி வைத்திருக்கும் அந்தப் பழைய புத்தக வியாபாரிகளின் பரிதாபத்திற்குரிய நிலையைக் கண்டு மனம் கலங்கும்.

இலக்கியத்தில் போலவே வாழ்க்கையிலும் எனது இடம் இவ்வுலகின் மத்தியில் இடம் பெற்றிருக்கவில்லை யென்பதே என் ஆதார உணர்வாக இருந்தது. பிரதானமாக விளங்கும் மத்திய உலகில் வாழ்க்கை எங்கள் சொந்த வாழ்க்கையைவிட ஒட்டுமொத்த இஸ்தான்புல், துருக்கியைவிட, செழிப்பானதாகவும், அதிக சுவாரஸியமிக்கதாகவும் இருக்க, நான் அதற்கு வெளியே இருந்தேன். உலகின் பெரும்பாலான மக்களோடு இந்த உணர்வை நான் பகிர்ந்து கொள்வதாக இன்று நினைக்கிறேன். இதே வகையில் உலக இலக்கியம் ஒன்றும் இருந்தது. அதன் மையம் கூட என்னிடமிருந்து வெகு தூரத்திலேயே அமைந்திருந்தது. உண்மையில் என் மனதில் இருந்தது உலக இலக்கியம் அல்ல, மேலை இலக்கியம். துருக்கியர்களாகிய நாங்கள் இதற்கு வெளியே இருந்தோம். இதற்கு என் அப்பாவின் நூலகம் ஆதாரமாக இருந்தது. இஸ்தான்புல்லின் நூல்கள் எங்கள் இலக்கியம், எங்கள் உள்ளூர் உலகம், அதன்நுட்பமான விவரங்களோடு ஒரு மூலையில் இருந்தன. மறுமுனையில் இந்த மற்ற உலகத்தின், மேற்குலகின் நூல்கள் இருந்தன. இவற்றோடு எங்களுக்குச் சொந்தமானவை எந்த விதத்திலும் ஒத்திருக்காமலிருந்தன. இந்த ஒத்திராமையே எங்களுக்கு வலியையும், நம்பிக்கையையும் ஒருசேர வழங்கின. ஒருவரது உலகை விட்டு நீங்கி, மற்ற உலகின் மற்றவைகளில், விநோதங்களில், வியப்புகளில் ஆறுதல் காண்பதுதான் எழுதுவதும் வாசிப்பதும். என் அப்பா தன் வாழ்க்கையிலிருந்து தப்பிக்கவே நாவல்களை வாசித்தார், பிந்தைய காலங்களில் நான் செய்ததைப் போலவே மேலைநாடுகளுக்குத் தப்பியோடிக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன்.

அக்காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த நூல்களும் நாங்கள் பெரிதும் குறைபாடாகக் கருதும் எங்கள் கலாச்சாரத்திலிருந்து தப்பிக்கவே என்று எனக்குத் தோன்றியது. வாசிப்பால் மட்டும் எங்கள் இஸ்தான்புல்லை விட்டு மேலைநாடுகளுக்கு நாங்கள் செல்லவில்லை. எழுதுவதால் கூட. அந்த நோட்டுப்புத்தகங்களை நிரப்புவதற்காக என் அப்பா பாரீசுக்குச் சென்று, ஓர் அறைக்குள் அடைத்துக்கொண்டு எழுதிவிட்டு, பின் அவற்றை துருக்கிக்கு கடத்திவந்ததுதான். என் அப்பாவின் சூட்கேஸின் மீது என் பார்வை பதியும்போது என்னை அமைதியிழக்கச் செய்கிறது. இருபத்தைந்து வருடங்கள் ஓர் அறையில் அடைபட்டு உழைத்து, துருக்கியில் ஓர் எழுத்தாளனாக காலந்தள்ளிவிட்ட பிறகு, அவரது ஆழமான சிந்தனைகளை இப்படி ஒரு சூட்கேஸிற்குள் ஒளித்து வைத்திருப்பதையும், எழுதுவது என்பதை ஒரு ரகசியமான தொழிலாகச் செய்யவேண்டியதைப் போல, சமுதாயத்தின், அரசாங்கத்தின், மக்களின் கண்களிலிருந்து தப்பிச் சென்று செயல்பட்டதையும் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது. என் அப்பா என்னளவுக்கு இலக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது நான் கோபப்பட்டதற்கு ஒரு வேளை இதுதான் பிரதான காரணமாக இருக்கக் கூடும்.

வாஸ்தவத்தில் என் அப்பா மீது நான் கோபம் கொண்டிருந்ததற்குக் காரணம் இருக்கிறது, அவர் என்னைப்போல ஒரு வாழ்க்கையை நடத்தவில்லை, அவருக்கு வாழ்க்கையோடு எப்போதுமே சச்சரவு இருந்ததில்லை. வாழ்நாள் முழுக்க நண்பர்களோடும் அவருக்குப் பிரியமானவர்களோடும் சந்தோஷமாகச் சிரித்து காலம் கழித்துக் கொண்டிருந்ததே போதுமானதாக இருந்தது. ஆனாலும் என்னில் ஒரு பகுதிக்கு நான் ‘பொறாமை’ கொண்டிருந்த அளவுக்கு ‘கோபம்’ கொண்டிருக்கவில்லை என்பது தெரிந்திருந்தது. பொறாமை என்பது அதிகமும் துல்லியமுமான வார்த்தை. இதுவும் என்னை அமைதியிழக்கச் செய்தது. அது எனது வழக்கமான ஏளனமும் கோபமுமான குரலில் என்னையே நான் கேட்டுக்கொள்ளும்போது இருக்கும் விஷயம்: ‘சந்தோஷம் என்பது என்ன? அந்தத் தனியான அறையில் ஒரு பொந்திற்குள் வாழ்வதைப்போல ஒரு வாழ்க்கையை நான் நடத்தியதா சந்தோஷம்? அல்லது சமூகத்தில் ஒரு சௌகரியமான வாழ்க்கையை நடத்திக் கொண்டு, எல்லோரும் நம்பும் விஷயங்களை நாமும் நம்பிக்கொண்டு, செய்து கொண்டிருப்பதா சந்தோஷம்? வெளியுலகத்தோடு முழு இசைவுடன் இருப்பதாக வெளிக்காட்டிக்கொண்டு, ஆனால் ரகசியமாக ஒளிந்து கொண்டு எழுதுகிற வாழ்க்கையை வாழ்வது சந்தோஷகரமானதா, துக்ககரமானதா?’ ஆனால் இவையனைத்துமே மிகையான கோபத்தில் எழும் கேள்விகள். ஒரு நல்ல வாழ்க்கைக்கு அளவீடு என்பது சந்தோஷம்தான் என்ற எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன்? மக்களும், செய்தித்தாள்களும், அனைவரும் வாழ்க்கையின் மிக முக்கியமான அளவீடு சந்தோஷம்தான் என்று நடந்து கொள்கின்றனர். இது மட்டுமே இதற்கு நேரெதிரானவொன்றுதான் உண்மையாவென கண்டுகொள்ள முயல்வதை நியாயப்படுத்தாதா? எங்கள் வீட்டைவிட்டு என் அப்பா பலமுறை ஓடியிருக்கிறார். அவரை எந்தளவிற்கு நான் அறிந்திருக்கிறேன், அவரது அமைதியின்மையை எந்தளவிற்கு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்?

எனவே இதுதான் என் அப்பாவின் சூட்கேஸை நான் முதலில் திறப்பதற்கு என்னைச் செலுத்தியது. நான் சற்றும் அறியாத, எழுத்தில் கொட்டி மட்டுமே ஆற்றிக்கொண்ட ஒரு ரகசியம், வாழ்க்கையின் மீதிருக்கும் ஒரு துக்கம் என் அப்பாவுக்கு இருந்ததா? சூட்கேஸைத் திறந்ததுமே அதன் பிரயாண வாசனையையும், பரிச்சயமாகியிருந்த பல நோட்டுப் புத்தகங்களையும் நினைவு கூர்ந்தேன். அந்த நோட்டுப் புத்தகங்களைப் பல வருடங்களுக்கு முன்பே, அவற்றைப் பற்றி அதிகம் விளக்காமல் காட்டியிருக்கிறார். இப்போது நான் கையில் எடுத்த நோட்டுப் புத்தகங்களில் பெரும்பாலானவை அவரது இளம் வயதில் எங்களைவிட்டு பாரீசுக்கு ஓடிப்போன காலங்களில் எழுதியவை. என் அபிமான எழுத்தாளர்கள் பலரைப் போல, அவர்களது சுயசரிதைகளில் படித்திருக்கிறேன். இப்போது நான், நான் இருக்கும் வயதில் என் அப்பா என்ன எழுதியிருப்பார், என்ன சிந்தித்திருப்பார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதைப்போல எதையும் இங்கே காணப்போவதில்லையென்பதை உணர்ந்துகொள்ள எனக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. என்னை அதிகமும் அமைதியிழக்கச்செய்தது எதுவென்றால், அவரது நோட்டுப்புத்தகங்களில் அங்குமிங்கும் எனக்குக் காணக் கிடைத்த எழுத்தாளத்தன்மை மிக்க ஒரு குரல். இது என் அப்பாவின் குரல் கிடையாது என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்; இது நம்பத்தக்கதாக இல்லை, அல்லது குறைந்த பட்சம் என் அப்பா என்று நான் அறிந்திருந்த மனிதருக்குச் சொந்தமானதில்லை இது. இவற்றை என் அப்பா எழுதியபோது என் அப்பாவாக இல்லாதிருந்திருக்கலாம் என்ற என் பயத்திற்கு அடியில் வேறொரு ஆழமான பயம் இருந்தது; என் அப்பாவின் எழுத்தில் நல்லதாக எதையும் காண எனக்குக் கிடைக்காதபடிக்கு, அடியாழத்தில் நானே நம்பத்தகுந்தவனல்ல என்ற பயம், பிற எழுத்தாளர்களால் என் அப்பா பலமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை நான் கண்டுபிடித்துவிடும் அபாயத்தையும் இது அதிகரித்து, நான் இளைஞனாக இருந்தபோது என் வாழ்க்கையையும், என் இருப்பையும், எழுதும் என் ஆர்வத்தையும், என் பணியையும் கேள்விக்குள்ளாக்கிய எனக்குப் பழகிப்போன அந்தப் பழைய விரக்தியில் என்னை மூழ்கடித்தது. எழுத்தாளனாக எனது முதல் பத்தாண்டுகளில் இத்தகைய சஞ்சலங்களை மிக ஆழமாக உணர்ந்து, எதிர்த்துப் போராடியிருக்கிறேன். ஒருநாள் நான் துறந்ததைப் போலவே, அமைதியின்மையால் துவண்டு, நாவல் எழுதுவதையும் நிறுத்திவிடுவேன் என்ற பயம்.

என் அப்பாவின் சூட்கேஸை மூடி, நான் தூரவைத்தபோது எனக்குள் எழுந்த இரண்டு ஆதாரமான உணர்ச்சிகளை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்: நாட்டுப்புறப் பகுதியில் தனித்துவிடப்பட்ட உணர்வும், நம்பகத்தன்மை என்னிடம் குறைந்திருக்கிறது என்ற பயமும். இவை உணரப்படுவது இதுதான் முதல் முறை அல்ல. பல வருடங்களாக என் வாசிப்பிலும் எழுத்திலும் இந்த உணர்வுகளை அவற்றின் எல்லா வகை மாதிரிகளையும், திட்டமிடப்படாத விளைவுகளையும், அவற்றின் நரம்பு முனைகளையும், அவற்றின் விசைகளையும், அவற்றின் பற்பல வண்ணங்களையும் ஆய்ந்து கண்டறிந்து, ஆழப்படுத்தி வந்திருக்கிறேன். வாழ்க்கையும் புத்தகங்களும் பெரும்பாலும் நான் இளைஞனாக இருந்த காலத்தில் என் மீது கொடுத்த குழப்பங்களாலும் கூருணர்வுகளாலும் மின்னலாக வெட்டும் வலிகளாலும் என் ஊக்கம் அதிர்வுற்றிருக்கிறது. ஆனால் புத்தகங்கள் எழுதுவதால் மட்டுமே நம்பகத்தன்மையின் பிரச்சனைகளையும் (My name is Red. The Black Book ஆகிய நூல்களில் போல) விளிம்பு நிலை வாழ்க்கையைப் பற்றியும் (Snow, lstanbul ஆகிய நூல்களில் போல) புரிந்து கொள்வதில் ஒரு முழுச் சுற்றுக்கு வந்தேன் எனலாம். நமக்குள் சுமக்கும் ரகசிய காயங்களை, நாமே சரிவர அறிந்திராத படிக்கான ரகசிய ரணங்களை, பொறுமையாக ஆராய்ந்து, அறிந்து, அவற்றின் மேல் ஒளியைப் பாய்ச்சி, இந்த வலிகளையும் காயங்களையும் வரித்து, நம் ஊக்கத்திற்கும் நம் எழுத்திற்கும் ஒரு பிரக்ஞை கொண்ட பகுதியாக அவற்றை ஆக்குவதும் அங்கீகரிப்பதும் தான் எழுத்தாளனாக இருப்பதன் கடமை என்று கருதுகிறேன்.

(2006 ஆம் வருடத்தின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு துருக்கியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக்கிற்கு வழங்கப்பட்டபோது, ஸ்வீடிஷ் அகாதெமியில் டிசம்பர் 10,2006 அன்று பாமுக் நிகழ்த்திய உரை)

எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் தமக்குத் தெரியும் என்று தெரிந்திருக்காத விஷயங்களைப் பற்றி எழுத்தாளன் பேசுகிறான். இந்த அறிவை ஆராய்வதும், அது வளர்வதைக் கவனிப்பதும் பரவசமூட்டும் ஒரு செயல்; ஒரே நேரத்தில் பரிச்சயமாகவும் மர்மமாகவும் இருக்கும் ஓர் உலகிற்குள் வாசகன் நுழைகிறான். எழுத்தாளன் ஓர் அறைக்குள் தன்னை வருடக்கணக்காக அடைத்துக் கொண்டு தன் பணியை_உலகம் ஒன்றை உருவாக்க_செப்பனிட்டுக் கொண்டிருக்கும் போது, அவனது ரகசிய ரணங்களை, அவனது துவக்கப்புள்ளியாகப் பயன்படுத்தினால், அவன் அறிந்தோ அல்லது அறியாமலோ, மனிதத்துவத்தின் மீது பெரும் நம்பிக்கை வைக்கிறான். எல்லா மனிதர்களும் ஒருவரையருவர் ஒத்திருக்கின்றனர் என்ற இந்த குழந்தைத்தனமான, நம்பிக்கையூட்டும் நிச்சயத்தன்மையிலிருந்தே எல்லா உண்மை இலக்கியங்களும் எழுகின்றன. முடிவேயின்றி வருடக்கணக்காக ஓர் எழுத்தாளன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டிருந்தால், அதன் மூலம் அவன் ஒரே மனிதத்துவத்தை, மையமற்ற ஓர் உலகத்தை முன் வைக்கத் தொடங்குகிறான்.

ஆனால், என் அப்பாவின் சூட்கேஸையும் எங்கள் இஸ்தான்புல் வாழ்வின் வெளிறிய நிறங்களையும் பார்க்கையில் இந்த உலகத்திற்கு ஒரு மையம் இருக்கிறது, அது எங்களிடமிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது என்று தெரிகிறது. இந்த அடிப்படை உண்மை எவ்வாறு ஒரு செகாவ்தனமான சிற்றூர்தனத்தைத் தூண்டிவிடுகிறது என்பதையும், வேறொரு மார்க்கத்தில் இது என் நம்பகத்தன்மையை கேள்விகேட்பதற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் கொஞ்சம் விளக்கமாகவே என் நூல்களில் விவரித்திருக்கிறேன். இவ்வுலகில் பெரும்பான்மையினர் இதே உணர்வுகளோடு வாழ்கின்றனர் என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன். அதேயளவு மனிதர்கள் என்னைவிட அதிகமான போதாமை உணர்வுகளாலும், பத்திரக் குறைவாலும், அவமான உணர்வாலும் அவஸ்தையுற்றிருக்கின்றனர் என்பதையும் அறிவேன். ஆம், மனிதகுலத்தை எதிர்நோக்கியிருக்கும் மகத்தான பிரச்சனைகளாக நிலமின்மையும், வாழ்விடமின்மையும், பசியும்தான் இன்றளவும் இருக்கின்றன…. ஆனால் இத்தகைய அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி இன்று நமது தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் இலக்கியத்தைவிட மிக வேகமாக, எளிமையாக நமக்குக் கூறி விடுகின்றன. இன்று இலக்கியம் சொல்லவும், ஆராயவும் வேண்டிய மனிதகுலத்தின் அடிப்படை பயங்கள்; வெளியே தனித்து விடப்படும் பயம், ஒன்றுமில்லாததற்காக தண்டிக்கப்படும் பயம். இத்தகைய பயங்களோடு சேர்ந்துவரும் மதிப்பிழக்கப்பட்ட உணர்வுகள்; கூட்டு அவமானங்கள், வடுப்பாடுகள், புறக்கணிப்புகள், மனத்துயர்கள், உணர்வினைகள், கற்பனை அவமானங்கள், தேசியவாத எக்களிப்புகள், தற்பெருமைகள்… இத்தகைய மிகு உணர்ச்சிகளும், இவை வழக்கமாக வெளிப்படுத்தும் பகுத்தறிவற்ற மிகைக்கூற்றுகளும் என்னைத் தாக்கும் போதெல்லாம் எனக்குள்ளிருக்கும் ஓர் இருண்மையை அவை தீண்டுவதாக அறிகிறேன். மேலை உலகிற்கு வெளியேயிருக்கும் மக்கள், சமுதாயங்கள், தேகங்கள் தமது அவமதிப்பு பயங்களாலும், மிகையுணர்வுகளாலும், தீவிரமாக பாதிப்புற்று, மதிகேடான காரியங்களைப் புரிவதை நாம் அவ்வப்போது பார்க்கிறோம். அவர்களை எளிதாக என்னுடன் சேர்த்து அடையாளம் கண்டுகொள்கிறேன். அதே விதமான எளிமையுடன் நான் அடையாளம் கண்டுகொள்ளும் மேற்குலகிலும் தேசங்களும் மக்களும் தமது செல்வம், மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த பெருமை, அறிவு விளக்கம், நவீனத்துவம் போன்றவை எழுப்பும் பெருமிதத்தால் சுயதிருப்திக்கு ஆளாவதும் அதே விதமான மதிகேடுதான்.

இதற்குப் பொருள், என் அப்பா மட்டுமல்ல நாமெல்லோருமே ஒரு மையம் உடைய உலகத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறோம் என்பது. அறைக்குள் நம்மைப் பூட்டிக் கொண்டு வருடக் கணக்காக முடிவின்றி எழுதுவதற்கு நம்மை வற்புறுத்துவது இதற்கெதிரான ஒரு நம்பிக்கை; உலகெங்குமுள்ள மனிதர்கள் ஒருவரையருவர் ஒத்திருப்பதால் நம் எழுத்துக்கள் ஒரு நாள் படிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்படும் என்ற நம்பிக்கை. ஆனால், என் சொந்த எழுத்திலிருந்தும் என் அப்பாவின் எழுத்திலிருந்தும் நான் அறிந்து கொண்டது என்னவென்றால், விளிம்புகளில் முடக்கப்பட்டதாலும், வெளியே தனித்து விடப்பட்டதாலும் கோபக்கறை படிந்து சிதைக்கப்பட்டிருக்கும் ஒரு நன்னம்பிக்கை இதுவென்பதே. தன் வாழ்க்கை முழுக்க தாஸ்தயேவ்ஸ்க்கிக்கு மேற்கின் மீதிருந்த அன்பும் வெறுப்பும் ஒன்று கலந்த உணர்வை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஆதாரமான உண்மை ஒன்றை நான் பற்றியிருந்தால், நன்னம்பிக்கைக்கு எனக்கு காரணமிருந்தால், அதற்கு காரணம் இந்த மாபெரும் எழுத்தாளரோடு மேற்கின் மீதிருந்த அவரது அன்பு வெறுப்பு உறவின் வழியாகப் பயணித்து, மறுபக்கத்தில் அவர் கட்டியெழுப்பியிருந்த மற்ற உலகத்தை நான் கைக்கொண்டதேயாகும்.

இப்பணியில் தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கும் எல்லா எழுத்தாளர்களும் இந்த யதார்த்தத்தை உணர்ந்திருக்கின்றனர்: நமது அசலான நோக்கம் எதுவாயிருப்பினும் வருடக் கணக்காக நம்பிக்கையோடு எழுதி, நாம் படைக்கும் உலகம் இறுதியில் பெரிதும் வேறுபட்ட மற்ற இடங்களுக்குத்தான் போகப்போகிறது. துக்கமும் கோபமுமாக நாம் பணியாற்றிய மேசையிலிருந்து நம்மை வெகு தொலைவிற்கு, வேறோர் உலகத்தின் துக்கமும் கோபமும் கொண்ட மறுபக்கத்திற்கு அது கொண்டு செல்கிறது. அத்தகைய ஓர் உலகத்தை என் அப்பாவால் தனியாகவே அடைந்திருக்க முடியாதா? ஒரு நிலப்பரப்பு மெதுவாக உருக்கொள்வதைப் போல, நீண்டதொரு கடற்பிரயாணத்திற்குப் பின் மூடுபனியிலிருந்து அதன் எல்லா வண்ணங்களோடும் மெதுவாக எழும்புகிற ஒரு தீவைப்போல இந்த மற்ற உலகம் நம்மை மயக்கி வயப்படுத்துகிறது; தெற்கிலிருந்து பயணம் செய்து இஸ்தான்புல்லிற்கு வந்த மேலைநாட்டு யாத்ரீகர்கள் அது மூடுபனியிலிருந்து எழும்பிப் புலப்பட்டதைப் பார்த்துத் திகைப்புற்றதைப் போல. நம்பிக்கையும் ஆர்வமுமாகத் தொடங்கிய ஒரு பயணத்தின் இறுதியில், இதோ அவர்களுக்கு முன்னால் மசூதிகளும், பள்ளிவாசல் ஸ்தூபிகளுமாக விதவிதமான வீடுகளும், தெருக்களும், குன்றுகளும், பாலங்களும், சரிவுகளுமாக ஒரு முழு உலகமே அவர்கள் முன் விரிகின்றது. அதைக் கண்ட பின்பு இந்த உலகிற்குள் நுழைந்து அதற்குள் நம்மைத் தொலைத்துக் கொள்வதைப் போல ஒரு புத்தகத்தையும் அணுகுகிறோம். விலக்கப்பட்டவர்களாக, விளிம்புகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களாக நம்மை உணர்ந்து கோபத்துடனும், ஆழ்ந்த மனக்கசப்புடனும் ஒரு மேசையில் அமர்ந்தபின்பு இந்த மிகையுணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு முழு உலகத்தை நாம் கண்டடைகிறோம்.

இப்போது நான் உணர்வது, சிறுவனாகவும், இளைஞனாகவும் இருந்த போது உணர்ந்ததற்கு நேரெதிரானது: என்னைப் பொறுத்தவரை உலகத்தின் மையம், இஸ்தான்புல். இது நான் பிறந்ததிலிருந்து அங்கேயே வாழ்ந்து வருவதால் சொல்வதல்ல. கடந்த 33 வருடங்களாக அதன் தெருக்கள், அதன் பாலங்கள், அதன் மனிதர்கள், அதன் நாய்கள், அதன் வீடுகள், அதன் மசூதிகள், அதன் நீரூற்றுகள், அதன் விநோதமான நாயகர்கள், அதன் சரிவுகள், அதன் பிரபலமான பாத்திரங்கள், அதன் இருட்டுப் பகுதிகள், அதன் பகல்கள், அதன் இரவுகளை வர்ணித்து அவற்றை என் பகுதியில் ஒன்றாக்கி, அனைத்தையும் அரவணைத்து வந்திருக்கிறேன். என் கைகளால் உருவாக்கிய இந்த உலகம், என் தலையில் மட்டும் வாழ்ந்து வந்த இந்த உலகம், நான் உண்மையில் வாழ்கின்ற நகரத்தை விட நிஜமானதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்த ஒரு கட்டமும் வந்தது. என் கற்பனையிலோ, அல்லது புத்தகங்களிலோ மட்டும் வாழ்பவர்களாக இல்லாமல் தமக்காகவே வாழ்வதுபோல இதன் மனிதர்களும், தெருக்களும், பொருட்களும், கட்டிடங்களும் தமக்குள் பேசிக்கொள்ளவும், நான் எதிர்பாரா வகையில் அவை ஊடாடவும் செய்தபோது நடந்தது இது. ஊசியை வைத்துக் கொண்டு ஒரு கிணற்றைத் தோண்டுவது போல நான் உருவாக்கிய உலகம் மற்றனைத்தையும் விட நிஜமாகத் தோன்றியது அப்போதுதான்.

இந்த வகையான மகிழ்ச்சியை அவர் எழுதிக் கொண்டிருந்த வருடங்களிலும் என் அப்பா கண்டிருக்க வேண்டுமென்று அவர் சூட்கேஸைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. நான் அவரை முன் தீர்ப்பிடக் கூடாது. என்ன இருந்தாலும் நான் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எப்போதுமே அதிகார தோரணையில், தடையுத்தரவளித்துக் கொண்டு, ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, தண்டித்துக் கொண்டிருந்த சாதாரண அப்பாவாக இருந்ததில்லை. எப்போதுமே என்னை சுதந்திரமாக அனுமதித்து எப்போதுமே அதிகபட்ச மதிப்பையும் காட்டுபவராக இருந்தவர். என் கற்பனையிலிருந்து சுதந்திரமாகவோ அல்லது குழந்தைத்தனமாகவோ அவ்வப்போது எதையாவது தீட்டிக்கொண்டிருந்தேனென்றால், அதற்குக் காரணம் சிறு பிராயத்திலும் இளமைப்பருவத்திலும் எனக்கிருந்த பெரும்பாலான நண்பர்களைப் போலில்லாமல், எனக்கு என் அப்பாவைப் பற்றி எந்த அச்சமும் இருந்ததில்லை என்பதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். நான் எழுத்தாளனாக ஆனதற்கே, என் அப்பா அவரது இளமையில் எழுத்தாளனாக விரும்பியதுதான் காரணம் என்றும் சில நேரங்களில் நம்புகிறேன். அவரைப் பொறுமையுடன் நான் படித்தாக வேண்டும் _ அந்த ஓட்டல் அறைகளில் அவர் எழுதியவற்றைப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.

இந்த நம்பிக்கையூட்டும் நினைவுகளோடு என் அப்பா வைத்த இடத்திலேயே இன்னமும் இருக்கிற அந்த சூட்கேஸை நெருங்கினேன். என் மன உறுதி அனைத்தையும் உபயோகித்து சில கைப்பிரதிகளையும் நோட்டுப் புத்தகங்களையும் வாசித்துப் பார்த்தேன். எதைப்பற்றி என் அப்பா எழுதியிருக்கிறார்? பாரீஸ் நகர ஓட்டல்களின் சில ஜன்னல்கள் வழி காட்சிகள், சில கவிதைகள், முரணுரைகள், அலசல்கள்… இவற்றை எழுதும்போது சாலை விபத்தில் சிக்கிய ஒருவனைப்போல, எப்படி நிகழ்ந்தது என்று ஞாபகம் வராமல் தவித்துக் கொண்டு, அதே நேரத்தில் அளவிற்கதிகமாக ஞாபகப்படுத்திக்கொள்கிற அபாயத்திலும் காலெடுத்து வைப்பதுபோல உணர்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சச்சரவு துவங்கப்போவதாக இருந்தால்_அவர்கள் அப்போது அந்தப் பயங்கரமான நிசப்தத்தில் ஆழ்ந்துவிடுவர்_என் அப்பா சட்டென்று ரேடியோவைப் போட்டுவிடுவார். சங்கீதம், சூழலை மாற்றி அதை வேகமாக மறந்துபோக எங்களுக்கு உதவிசெய்யும்.

அந்த சங்கீதத்தைப் போலவே சூழலை மாற்றுவதற்கு சில இனிய வார்த்தைகளைக் கூறலாம் என்று கருதுகிறேன். நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல எழுத்தாளர்களான எங்களிடம் அடிக்கடி கேட்கப்படும் அபிமான கேள்வி: ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள்? எழுதுவதற்கு உள்ளார்ந்த தேவை ஒன்று என்னிடம் இருப்பதால் நான் எழுதுகிறேன்! மற்றவர்களைப்போல என்னால் சாதாரண வேலைகளைச் செய்யமுடியாது என்பதால் எழுதுகிறேன். நான் எழுதுவதைப் போன்ற புத்தகங்களை நான் வாசிக்க விரும்புவதால் எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும், எல்லோரின் மீதும் நான் கோபமாக இருப்பதால் எழுதுகிறேன். ஒரு தனியறையில் அடைத்துக் கொண்டு நாளெல்லாம் எழுதுவது எனக்கு விருப்பமாக இருப்பதால் எழுதுகிறேன். நிஜவாழ்க்கையை மாற்றுவதன் மூலமே என்னால் அதில் பங்குகொள்ள இயலும் என்பதால் எழுதுகிறேன். இஸ்தான்புல்லில், துருக்கியில், எம்மாதிரியான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம், தொடர்ந்து வாழ்ந்து வருகிறோம் என்பதை மற்றவர்கள், நம்மெல்லோரும், மொத்த உலகமும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதால் எழுதுகிறேன். பேப்பர், பேனா, மையின் வாசனை எனக்குப் பிடித்தமானவை என்பதால் எழுதுகிறேன். வேறு எதனையும் விட இலக்கியத்தின் மேல், நாவல் என்ற கலைவடிவத்தின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதால் எழுதுகிறேன். அது ஒரு பழக்கம், ஒருவிதமான இச்சை என்பதால் எழுதுகிறேன். நான் மறக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தால் எழுதுகிறேன். எழுத்து அழைத்து வருகிற புகழையும் ஆர்வத்தையும் நான் விரும்புவதால் எழுதுகிறேன். தனியாக இருப்பதற்காக எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும் எதற்காக நான் மிக மிகக் கோபமாக இருக்கிறேன், எல்லோர் மீதும் ஏன் மிக மிகக் கோபமாக இருக்கிறேன் என்பதை நான் புரிந்து கொள்வதற்காகக்கூட நான் ஒருவேளை எழுதுவதாக இருக்கலாம். நான் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். ஒரு நாவலை, ஒரு கட்டுரையை ஒரு பக்கத்தை எழுதத் தொடங்கி விட்டேனென்றால், அதை முடிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எல்லோரும் நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எழுதுகிறேன். நூலகங்களின் சாஸ்வதத்தைப் பற்றியும், அலமாரிகளில் என் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருப்பதிலும் எனக்கு ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கை இருப்பதால் எழுதுகிறேன். வாழ்க்கையின் எல்லா அழகுகளையும் செல்வங்களையும் எழுத்தாக்குவதில் இருக்கும் கிளர்ச்சியினால் எழுதுகிறேன். ஒரு கதையைச் சொல்வதற்காக அல்ல, ஒரு கதையை இயற்றுவதற்காக எழுதுகிறேன். நான் போகவேண்டிய இடம் ஒன்று இருக்கிறது. ஆனால்_ ஒரு கனவில் வருவதைப்போலவே _ அங்கே என்னால் அடையவே முடியாதிருக்கிறது என்ற துர்சகுணத்திலிருந்து தப்பிக்க விரும்புவதால் எழுதுகிறேன். என்னால் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியாததற்காக எழுதுகிறேன். சந்தோஷமாக இருப்பதற்காக எழுதுகிறேன்.

அவர் என் அலுவலகத்திற்கு வந்து சூட்கேஸை வைத்துவிட்டுச் சென்ற ஒரு வாரம் கழித்து என் அப்பா மீண்டும் என்னைப் பார்க்க, எப்போதும் போல் ஒரு சாக்லேட் பொட்டலத்தோடு வந்தார். (எனக்கு 48 வயதாகிறது என்பதை மறந்துவிட்டிருக்கிறார்). எப்போதும் போல நாங்கள் வாழ்க்கை, அரசியல், குடும்ப சமாச்சாரங்கள் என்று அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருந்தோம். என் அப்பாவின் கண்கள் அவரது சூட்கேஸை வைத்திருந்த மூலைக்குச் சென்ற தருணமும் வந்தது. அதை நகர்த்தி வைத்திருக்கிறேன் என்பதைக் கவனித்து விட்டார். எங்கள் பார்வைகள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டன. ஒரு நிசப்தம் அங்கே அழுத்தமாகப் பின் தொடர்ந்தது. சூட்கேஸைத் திறந்து, அதில் உள்ளவற்றைப் படிக்க முயற்சி செய்தேன் என்பதை அவரிடம் கூறவில்லை; பதிலாக பார்வையைத் திருப்பிக் கொண்டேன். ஆனால் அவர் புரிந்து கொண்டார். அவர் புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டதைப் போல. அவர் புரிந்து கொண்டு விட்டார், என்பதை நான் புரிந்து கொண்டுவிட்டேன் என்பதை அவர் புரிந்து கொண்டதைப் போல. ஆனால், இந்தப் புரிந்து கொள்ளல் எல்லாமே பதினைந்து விநாடிகளுக்குத் தாக்குப் பிடிக்கும் வரை தான் சென்றது. என் அப்பா ஒரு குதூகலமான, எதையும் சுலபமாக எடுத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை மிக்க மனிதர். எப்போதும் போலவே என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். வீட்டை விட்டுக் கிளம்பும்போது அவர் எப்போதுமே என்னிடம் கூறுகிற இனிமையான, ஊக்கமளிக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் திரும்பக் கூறினார், ஒரு அன்பான அப்பாவைப் போலவே.

எப்போதும் போலவே அவர் கிளம்பிச் செல்வதைப் பார்க்கும் போது அவரது அக்கறையற்ற, எதற்கும் கலங்காத மனோபாவத்தை எண்ணி பொறாமையாக உணர்ந்தேன். ஆனால் அன்றைய தினம் என்னை வெட்கமுறச்செய்த ஒரு சந்தோஷக் கீற்றும் எனக்குள் இருந்தது. ஞாபகமிருக்கிறது. அவருக்கு வாய்த்த அளவுக்கு ஒரு சௌகரியமான வாழ்க்கை, அவருக்கிருந்தளவுக்கு சந்தோஷமான அல்லது சுகவாசியாக ஒரு வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கவில்லை, என் வாழ்க்கை மொத்தத்தையும் எழுதுவதற்கு மட்டுமே நான் அர்ப்பணித்திருக்கிறேன் என்ற நினைப்பு_நான் கூற வருவது உங்களுக்குப் புரிந்துவிட்டது இல்லையா… என் அப்பாவை முன் வைத்து இப்படியான விஷயங்களை யோசிப்பது எனக்கு வெட்கமாக இருந்தது. என் வலிகள் எதற்கும் என் அப்பா காரணமாக இருந்ததில்லை. என்னை சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார். இவையெல்லாமே எழுதுவதும் இலக்கியமும் நம் வாழ்க்கையின் மையத்தில் உள்ள பற்றாக்குறை ஒன்றோடும், சந்தோஷமும் குற்றவுணர்வுமான நம் உணர்வுகளோடும் ஆழமாகப் பிணைந்திருக்கிறது என்று நமக்குக் காட்டுகின்றன.

ஆனால் என் கதையிலிருந்த ஒரு சரிச்சீரமைவு அன்றைய தினம் வேறொன்றை நினைவுபடுத்தி அது இன்னமும் அதிகமான குற்றவுணர்ச்சியைக் கொண்டு வந்தது. அவரது சூட்கேஸைத் தந்துவிட்டுச் சென்றதற்கு இருபத்தி மூன்று வருடங்கள் முன்பு, என இருபத்திரெண்டாவது வயதில் மற்ற எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு ஒரு நாவலாசிரியனாக முடிவெடுத்து ஓர் அறைக்குள் என்னை அடைத்துக் கொண்டு எனது முதல் நாவலான Cevdet Bey and sons  ஐ முடித்ததற்கு நான்கு வருடங்கள் கழித்து, அப்போது இன்னமும் வெளி வந்திராத நாவலின் தட்டச்சுப் பிரதியை கைகள் நடுங்க என் அப்பாவிடம் கொடுத்து படித்துப் பார்த்து அவர் அபிப்பிராயத்தைக் கூறும்படி கேட்டிருக்கிறேன். அது, அவர் ரசனையின் மீதும், அறிவுக் கூர்மையின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கையால் மட்டுமல்ல, அவரது அபிப்பிராயம் எனக்குப் பெரிதும் முக்கியமானது. என் அம்மாவைப்போல நான் எழுத்தாளனாக விரும்பியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அந்த நேரத்தில் என் அப்பா எங்களோடு இல்லை, வெகுதூரத்தில் இருந்தார். அவர் திரும்பி வருவதற்காக பொறுமையிழந்து நான் காத்திருந்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அவர் வந்ததும் கதவைத் திறக்க ஓடினேன். என் அப்பா எதுவும் பேசவில்லை. ஆனால் உடனே கைகளை விரித்து என்னை ஆரத் தழுவிக் கொண்டது அவர் அதை வெகுவாக ரசித்திருக்கிறார் என்பதைக் காட்டியது. மகத்தான உணர்ச்சித் தருணங்களில் உடன் வருவது போன்ற ஒரு சங்கடமான மௌனம் கொஞ்ச நேரத்திற்கு எங்களை மூழ்கடித்தது. பின் அமைதியடைந்து பேசத் தொடங்கினோம். என் அப்பா பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட, மிகையான பாஷையில், அவர் என் மீதோ அல்லது எனது முதல் நாவல்மீதோ வைத்திருந்த நம்பிக்கையைக் கூறத் தொடங்கினார். இங்கே மகத்தான பெருமிதத்துடன் நான் பெறுவதற்கு வந்திருக்கும் பரிசை ஒருநாள் நான் வென்றெடுப்பேன் என்று அவர் கூறினார்.

அவரது நல்லபிப்பிராயத்தைச் சொல்லி என்னைத் திருப்திப்படுத்துவதற்காகவோ, அல்லது இந்தப் பரிசை ஒரு லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவோ அவர் இதைக் கூறவில்லை; அவர் ஒரு துருக்கிய அப்பாவைப்போல, தன் மகனுக்கு ஆதரவளித்து, ‘ஒருநாள் நீ ஒரு பாஷா ஆகப்போகிறாய்!’ என்று விளக்கமளித்து கூறினார். பின் பல வருடங்கள், எப்போது என்னைப் பார்த்தாலும் இதே வார்த்தைகளைத்தான் கூறி எனக்கு விளக்கமளிப்பார்.

என் அப்பா டிசம்பர் 2002_ல் காலமானார்.

இன்று ஸ்வீடிஷ் அகாதெமிக்கும், இந்த மாபெரும் பரிசை_ இம் மகத்தான மேன்மையை _ எனக்களித்திருக்கும் பெருமைமிக்க உறுப்பினர்களுக்கும் அவர்களின் புகழ்மிக்க விருந்தினர்களுக்கும் முன்னால் நான் நிற்கும் போது, இங்கே நம்மிடையே அவர் இருக்கக் கூடும் என்று உளப்பூர்வமாக நம்புகிறேன்.

Posted in Award, Essay, Fiction, Kumudam, Kumudham, Kumutham, Lecture, Literature, Nobel, Novel, novelist, Orhan, Orhan Pamuk, Pamuk, Prize, Talk, Tamil, Theeranadhi, Theeranadhy, Theeranathi, Theeranathy, Thiranathi, Thiranathy, Translation, Turkey, Turkish, Winner | 2 Comments »

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

07.06.07 
குமுதம் ரிப்போர்ட்டர்

வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?

தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.

‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி?

‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’

ராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா?

‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.

இந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’

ராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா?

‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’

நீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே?

‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’

இந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே?

‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’

போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா?

‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.

இந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’

நீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே?

‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’

எப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்?

‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’

நீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா?

‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’

உங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு?

‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’

– புஷ்கின் ராஜ்குமார்

Posted in Abscond, Arms, Blasts, Bombs, bootlegging, Capture, Cera, Chennai, Chera, Cocaine, Corruption, Courts, Crime, Criminal, Dacoit, Dada, Dalit, Death, Don, Drugs, Encounter, fraud, Gamble, gambler, Gambling, gang, Godfather, Heroin, Hitman, Illegal, informers, Interview, Judge, Justice, Kidnap, kidnapping, Kumudam, Law, law-enforcement, Leader, Loan-sharking, LSD, Madras, mafia, maphia, Marijuana, Murder, Narcotics, nexus, Order, organized-crime, Police, Politics, prostitution, Rajkumar, ransom, Ravi, Reporter, rival, rivalry, Robber, Robbery, Rowdy, Rowdyism, Sandal, Sandalwood, secrecy, Sera, smuggler, Sopranos, Substance, Surrender, Theft, Thief, traffickers, Trafficking, Veerappan, Vellai Ravi, Violence, Weapons | 3 Comments »

Rajasthan CM – Gujjars talks: Quota’s macabre face in Rajasthan Gujjar ire and police brutality

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்’ என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.

தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு” என்றார்.

———————————————————————————————-
07.06.07 ஹாட் டாபிக்
குமுதம் ரிப்போர்ட்டர்
நேற்று நந்திகிராம்
இன்று ராஜஸ்தான்

தொடரும் துப்பாக்கிச்சூடு கலாசாரம்

இருள் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. சரக்கு லாரிகளும், ஏர் பஸ்களும் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் _ ஜெய்ப்பூர் _ ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன. அத்தனை அதிகாலையில் அந்த நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் குழும ஆரம்பித்தனர். பேருந்தில் சென்றவர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் யோசித்தபடியே சென்று கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு வெறும் நான்காயிரம் பேர்தான் கூடியிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பொதுமக்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது.

விஷயம் கேள்விப்பட்ட காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தது. என்ன ஏது என்று விசாரித்ததில் அவர்கள் எல்லாம் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடவே குழுமியிருப்பதாகவும் தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்தில் தடியடி. கண்ணீர்ப் புகை. துப்பாக்கிச்சூடு. கலவரம். ரத்தத் தெறிப்பு. எல்லாம் வரிசைக்கிரமமாக நடந்தது. இரண்டு காவலர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதினான்கு உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

நந்திகிராமத்தில் நடந்ததற்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடந்துள்ள இந்தச் சம்பவம் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. துணை ராணுவப்படை எல்லாம் குவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. ராஜஸ்தானின் முக்கிய மாவட்டங்களான டோங்க், ஜெய்ப்பூர், தௌசா, புண்டி, சவாய் மதோபூர், கரௌலி ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? யார் இந்த குஜ்ஜார் மக்கள்? அவர்களுடைய பின்னணி என்ன?

குஜ்ஜார் என்பது கிழக்கு ராஜஸ்தானில் அதிக அளவில் வசிக்கும் மக்களின் இனப்பெயர். குர்ஜார் என்றும் சொல்வார்கள். இவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, ஒசாமா பின்லேடன் புகழ் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள். பர்வேஸ் முஷாரப் இருக்கும் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். இந்த இனத்தில் சுமார் ஐநூறு உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஆரம்பத்தில் குஜ்ஜார் இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்தனர். பின்னர், அராபிய முஸ்லிம்கள் இந்த இனத்தால் கவரப்பட்டு, அந்த இனத்தோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு, தங்கள் பெயரோடு குஜ்ஜார் என்பதையும் சிலர் இணைத்துக் கொண்டனர். உதாரணம் குஜ்ரன் வாலா, குஜார் கான். இதனால் இந்தியாவில் இந்த இனம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. இந்து குஜ்ஜார்கள், முஸ்லிம் குஜ்ஜார்கள். இவை எல்லாமே எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை நடந்த சங்கதிகள்.

இந்தியாவில் மட்டும் இந்த இன மக்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவான மொழி கோஜ்ரி. ஆனால், தாங்கள் வசிக்கும் இடத்தில் என்ன மொழி புழக்கத்தில் இருக்கிறதோ, அதைப் பழகிக் கொண்டனர். சர்தார் வல்லபபாய் படேல், இந்தர் குமார் குஜ்ரால், ஃபக்ருதீன் அலி அகமது, ராஜேஷ் பைலட் ஆகிய அரசியல் ஜாம்பவான்கள், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் போன்றோர் இந்த இனத்தவர்கள்தாம். இந்த இன மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், மாடு வளர்ப்பு, பால் விற்பனை.

கிழக்கு ராஜஸ்தானில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள். கண்ணை மூடிக் கொண்டு கை சின்னத்துக்கு வாக்களிப்பவர்கள். ராஜஸ்தானில் குஜ்ஜாரைப் போலவே மேலும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. ஜாட் மற்றும் மீனா. இவர்களில் ஜாட் இனத்தை 1999_ல் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர்.

ஏற்கெனவே தங்கள் இனம் அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறது, ஜாட் இன மக்களே உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்று மனம்புழுங்கிக் கொண்டிருந்த குஜ்ஜார் மக்களை, இந்த அறிவிப்பு சிந்திக்க வைத்தது. ‘இனிமேல் வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஜாட் இனத்தவரோடு போட்டி போட வேண்டியிருக்கும். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமம். ஆகவே, எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்’ என்று போராட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது குஜ்ஜார் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தான் உதவுவதாக வசுந்தரா வாக்குறுதி அளிக்கவே, அதுநாள்வரை காங்கிரஸை ஆதரித்த அவர்கள் தாமரைக்குக் கை நீட்டினர். ஆட்சிக்கு வந்தார் வசுந்தரா ராஜே. அவ்வளவுதான். அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனது பணிகளில் பிஸியாகிவிட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குஜ்ஜார்கள் போராட்டத்தில் குதித்தனர். விளைவு.. இப்போது பன்னிரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து குஜ்ஜார் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் பைய்ஸ்லா, “எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என்று கொதித்துள்ளார்.

“சாலை மறியலில் ஈடுபடுவது நமது போராட்ட முறைகளுள் ஒன்று. இதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை கொடுத்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்குத் தகுந்த பதிலை அவர்கள் சொல்லியாக வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் பைலட். இவரும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்தான்.

“நான் எந்த வாக்குறுதியையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்து, சரிசெய்யவேண்டிய விஷயம். இருந்தாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். இதுகுறித்து ஒரு முடிவெடுக்க குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் தேவை. அதுவரை பொறுமை காப்பது அவசியம்’’ என்று கூறியுள்ளார் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

ஆனால், இதுகுறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பாதவரை போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறியிருக்கின்றனர் குஜ்ஜார் அமைப்பினர்.

‘இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக குஜ்ஜார் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று திடீரென போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர் ராஜஸ்தானின் மீனா இன மக்கள். இவர்கள்தாம் ராஜஸ்தானில் இருக்கும் ஒரே பழங்குடியின மக்கள். ஆக, ஒரு பிரச்னையின் தீர்வு அடுத்த பிரச்னைக்கான ஆரம்பமாக இருக்கக்கூடாது. ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அரசு! ஸீ

– ஆர். முத்துக்குமார்

—————————————————————————-

அன்னியப்பட்ட ஆட்சியாளர்கள்!

நீரஜா சௌத்ரி – தமிழில்: சாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் என்ற சமூகத்தவர் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, வன்செயல்களுடன் மேற்கொண்ட கிளர்ச்சி உச்ச கட்டத்தை அடைந்திருப்பதைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம்.

ஆண்டுக்கு 9.5% பொருளாதார வளர்ச்சியை எட்டிவரும் நாட்டில், 21-வது நூற்றாண்டில் கால்பதித்துள்ள நிலையில் நடைபெறக்கூடிய சம்பவங்கள் அல்ல இவை. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

அரசு வேலை வாய்ப்புக்காகத்தான் குஜ்ஜர்கள் திடீரென்று இப்படியொரு வன்முறைக் கிளர்ச்சியில் இறங்கினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அரசுப் பணியிலும் அரசுத் துறைகளிலும் மட்டும் அல்லாது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்திவரும் நேரம் இது.

இட ஒதுக்கீட்டுக்காக இப்படி வன்முறையில் இறங்க வேண்டிய அவசியம் குஜ்ஜர்களுக்குக் கிடையாது. அப்படியானால் வன்செயல்கள் ஏன் நிகழ்ந்தன, அவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன?

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது என்று வி.பி. சிங் தலைமையிலான அரசு எடுத்த முடிவையடுத்து காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் பின்னாலிருந்து தூண்டிவிட்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன.

ஆனால் பிறகு தேர்தலில் வெற்றிபெற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் அவசியம் என்பதால் காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இட ஒதுக்கீட்டு கொள்கையை ஏற்று, அமல்படுத்த ஆரம்பித்தன.

ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தவருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்தை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அளித்தது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் தீர்மானித்த வி.பி. சிங்கால் கூட அமல்படுத்த முடியாத காரியம் அது. ஜாட் சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை அளித்திருந்தால் தேவிலாலின் ஆதரவு வி.பி. சிங்குக்குத் தொடர்ந்திருக்கும், மத்திய ஆட்சியும் பிழைத்திருக்கும். வட இந்திய அரசியல் வரலாறுகூட மாறியிருக்கும்.

வாக்கு வங்கிகள் மூலமே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால், இட ஒதுக்கீடு என்பதை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று புரிகிறது. நேற்று ஜாட் சமூகத்தவர் போராடிப் பெற்றனர். இன்று குஜ்ஜர்கள் போராடுகின்றனர். நாளை மற்றொரு சமூகம் போராடத் தொடங்கலாம்.

குஜ்ஜர்கள் சமீபகாலமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பது உண்மையே. ராஜஸ்தான் மாநில மக்கள் தொகையில் 5% ஆக இருக்கும் குஜ்ஜர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.

ஜாதீய அடுக்கில் மேலே உள்ள ஜாட்டுகளுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்து தரப்பட்டதும், இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் பதவிகளையும் இடங்களையும் அவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் குஜ்ஜர்கள் இப்போது பழங்குடி அந்தஸ்து கேட்டுப் போராடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இமாசலத்திலும் குஜ்ஜர்கள் பழங்குடி சமூகத்தவராகவே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மக்கள் தொகையில் 10% ஆக இருக்கும் “”மீனா” வகுப்பினர், குஜ்ஜர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தரப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அப்படித் தந்தால் தங்களுக்குரிய இடம் குறைந்துவிடும் என்பதுதான் அவர்களுடைய அச்சம்.

தெüசா மாவட்டத்தில் மீனா-குஜ்ஜர் இடையிலான மோதலில் 8 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இவ்விரு சமூகத்தவரும் அருகருகில் வசிக்கின்றனர். இருவரும் க்ஷத்திரியர்கள். எனவே மோதல் தீவிரமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னால், குஜ்ஜர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தவர் வசுந்தரா ராஜ சிந்தியா என்பது உண்மை. ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விஷயம் குறித்துப் பரிசீலிக்க 18 மாதங்களுக்கு முன்னால் ஒரு கமிட்டியை நியமித்தார். அதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. அந்தக் கமிட்டியில் இருக்கிறோம் என்பதே சில உறுப்பினர்களுக்குத் தெரியாது!

வாக்குறுதிகளைத் தருவதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதை மறப்பதும் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. ஆனால் சில அரசியல்வாதிகள், இப்படிப்பட்ட நிலைமை தோன்றியவுடனேயே சுதாரித்துக் கொண்டு, நிலைமை முற்றாமல் ஏதாவது செய்துவிடுவார்கள். ஆனால் வசுந்தராவோ அகந்தையின் உச்சத்தில் இருக்கிறார். அவரை கட்சித் தொண்டர்கள்கூட எளிதில் பார்க்க முடிவதில்லை.

தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகத்தில் அனுமதித்துள்ளபடி கிளர்ச்சி செய்தனர் குஜ்ஜர்கள். ஆட்சியாளர்கள் சொல்லாமல் போலீஸôர் அடித்து நொறுக்கமாட்டார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிலருடைய மார்பிலே குண்டுகள் பாய்ந்துள்ளன. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால்கூட காலில்தான் சுட்டிருக்க வேண்டும்.

இச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குப் பிறகுகூட, “”கிளர்ச்சிக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று முதல்வர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல இருந்தது. பிறகு பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் தில்லியிலிருந்து அளித்த நெருக்குதல் காரணமாக, குஜ்ஜர் சமூகத் தலைவர்களுடன் பேச குழுவை நியமித்தார். பிறகு வழக்கமாக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.

இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கிய இடங்கள் முழுவதையும் ஜாட் சமூகத்தவரே கைப்பற்றிவிடாமல் தடுக்க, பிகார் பாணியில் “”இணைப்பு 1”, “”இணைப்பு 2” என்று ஜாட்டுகளுக்கும் குஜ்ஜர்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அளித்திருக்கலாம். ஆனால் குஜ்ஜர்களும் இந்த இட ஒதுக்கீட்டை வேலைக்காக மட்டும் கேட்கவில்லை.

இப்போது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பழங்குடிகளுக்கென்று 31 தனித் தொகுதிகள் உள்ளன. அவற்றை மீனாக்கள் பெற முடிகிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலுமே சேர்த்து மொத்தம் 7 குஜ்ஜர்கள்தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் அரசியல்ரீதியாக அதிகாரம் செலுத்தும் இடத்தில் குஜ்ஜர்கள் இல்லை. இதற்காகத்தான் அவர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்திய சமுதாயத்திலே புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி வாரியாக மக்கள் இப்போது அணி திரள்வதில்லை. அவரவர் சமூகத்தின் பின்னணியில்தான் அணியாக உருவெடுத்து வருகின்றனர்.

கலிங்க நகர், சிங்கூர், நந்திகிராமம், தெüசா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி உணர்த்துவது இதுதான். புதிய பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

சமுதாயரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரே சமூகமான மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராட ஆரம்பித்துள்ளனர்.

இதை உணரமுடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்னியப்பட்டு நிற்கின்றனர். இது நம்நாட்டு ஜனநாயக முறைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Posted in AA, abuse, Agitation, Ashok Gehlot, Assembly, Attack, Banjaras, BC, BJP, brutality, Caste, Community, Conflict, Congress, Crisis, Dausa, dead, Devi lal, Devilal, Education, EEO, Elections, Employment, FC, Gadia Lohars, Gujar, Gujjar, Gujjar Sangharsh Samiti, Gujjars, Himachal Pradesh, HP, institution, J&K, Jaipur, Jammu, Jammu & Kashmir, Jammu and Kashmir, Jobs, Karauli, Kashmir, Kirori Lal Meena, Law, Lohars, Mandal, Mathur, MBC, Meena, Meena-Gujjar, Meenas, Nadhigram, Nandhigram, Nandigram, OBC, OC, Order, Police, Polls, Power, Protest, Quota, Rajasthan, Raje, Rajnath, Rajnath Singh, Reservation, SC, scheduled tribes, Shiv Charan Mathur, ST, State, Talks, Tribes, UPA, Vasundhra, Vasundhra Raje, Violence, VP Singh | 3 Comments »