Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Earthquake’ Category

Compact Fluorescent lamp (cfl) & Incandescent Bulb – Global Warming

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

குறு ஒளிர் விளக்குகள் } நல்ல தீர்வா?

என். ரமேஷ்

தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருள்களால் உருவாகும் கரியமில வாயு காரணமாக புவி வெப்பம் அதிகரித்து வருகிறது; இதனால் கடல் நீர்மட்டம் உயர்வு, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, உணவு உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை உலக சமுதாயம் உணரத் தொடங்கியுள்ளது.

புவி வெப்பத்தால் ஏற்படக் கூடிய பேரழிவிலிருந்து தப்பிக்க, வளர்ச்சியடைந்த நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அளவைக் குறைக்க வகை செய்யும் கியோட்டோ ஒப்பந்தம் உள்ளிட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப் பிரச்னையின் தீர்வுக்கு, உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை நேரடியாக வழங்க வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள டங்ஸ்டன் இழை கொண்ட “குண்டு பல்பு’களை குறு ஒளிர் விளக்குகளாக (compact fluorescent lamp-cfl) மாற்ற வேண்டும் எனப் பெரும் இயக்கமே நடைபெற்று வருகிறது.

பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகள் “குண்டு பல்பு’களை சிஎஃப்எல்-ஆக மாற்றும் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன. ஆஸ்திரேலியா 2010-க்குள்ளும், கனடா 2012-க்குள் முழுமையாக சிஎஃப்எல்-லுக்கு மாற முடிவு செய்துள்ளன.

இந்தியாவில் கிரீன் பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், தில்லி மாநில அரசு – அங்கு செயல்படும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் இந்த இயக்கத்தில் முனைப்புடன் செயல்படுகின்றன.

சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள பெரும்பாலான மேல்தட்டு, நடுத்தரக் குடும்பங்கள் தற்போது சிஎஃப்எல்-லுக்கு மாறி வருகின்றன. சிஎஃப்எல் எனப்படும் இந்த குறு ஒளிர் விளக்குகள், குண்டு பல்புகளைவிட ஏறத்தாழ ஐந்து மடங்கு குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. 100 வாட் குண்டு பல்பு வழங்கும் ஒளியை 20 வாட் சிஎஃப்எல் விளக்கு வழங்குகிறது. இதன்மூலம் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரச் செலவையும், அதற்குரிய கட்டணத்தையும் குறைக்க முடியும்.

மேலும், ஒரு குண்டு பல்பு செயலிழக்கும் வரை, சராசரியாக 1,000 மணி நேரம் எரியும் என்றால், சிஎஃப்எல் விளக்குகள் அதைவிடப் பலமடங்கு நேரம் எரியக் கூடியவை. இதனால் ஆண்டுக்கு ஒரு சிஎஃப்எல் பயன்பாடு மூலம், அதற்குக் கொடுக்கும் கூடுதல் விலை உள்ளிட்ட அனைத்துச் செலவும் போக, ரூ. 300-க்கும் அதிகமாகச் சேமிக்க முடியும்.

நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைக்கும் இந்த லாபம் தவிர்த்து, மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றின் பயன்பாட்டு அளவும் குறைகிறது. 1,000 மணி நேரம் ஒரு குண்டு பல்பு மின்சாரம் வழங்க 71 கிலோ நிலக்கரி தேவையென்றால், சிஎஃப்எல்லுக்கு 14.2 கிலோ மட்டும் போதுமானது. இதேபோன்று, குண்டு பல்புக்கு 535 லிட்டர், சிஎஃப்எல்லுக்கு 107 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு குண்டு பல்பு 1,000 மணி நேரம் எரிவதற்கான மின் சக்தி உற்பத்தியில் 99.7 கிலோ கரியமில வாயு வெளியிடப்படும். ஆனால், சிஎஃப்எல் எரிவதால் 19.94 கிலோ மட்டும் வெளியிடப்படும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் சல்பர்-டை-ஆக்சைடு, நுண் துகள்கள், எரி சாம்பல் போன்றவையும் சிஎஃப்எல் பயன்பாட்டால் குறையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் பலர் கூறுகின்றனர்.

ஆனால், “டாக்சிக்ஸ் லிங்’ (Toxics Link) என்ற தன்னார்வ அமைப்பு, சிஎஃப்எல்-லுக்கு மாறுவதற்கு முன் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது என எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இதற்குக் காரணம், சிஎஃப்எல், நாம் வழக்கமாக பயன்படுத்தும் குழல் விளக்குகள் போன்ற ஒளிர் விளக்குகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது என்பதுதான்.

நமது சூழலில் மிகச் சிறு அளவில் இருந்தாலும் நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் கைகால் அசைவு, நினைவாற்றல் ஆகியவற்றையும் பாதிக்கக் கூடியது பாதரசம்.

ஒரு சராசரி சிஎஃப்எல் விளக்கில் 0.5 மில்லி கிராம் பாதரசம் உள்ளது. இந்த விளக்குகள் உடைந்தால் பாதரச ஆவி வெளிப்பட்டு வீட்டில் உள்ளோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். உடையாமல் செயலிழந்து (ப்யூஸ்) போன பின்னரும் வழக்கமாக இவை மாநகராட்சி, நகராட்சி குப்பைக் கிடங்குகளுக்கே செல்கின்றன. அங்கு இவை உடைக்கப்பட்டாலும் அந்த பாதரச ஆவி நமது சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை உருவாக்கும்.

தற்போது இந்தியாவில் எரியும் விளக்குகளில் 10 சதம் சிஎஃப்எல் விளக்குகள். ஆண்டுதோறும் சிஎஃப்எல் விளக்குகள் தயாரிப்பில் 56 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. முழுவதும் சிஎஃப்எல் விளக்குக்கு மாறினால் இந்த அளவு ஆண்டுக்கு 560 டன்னாக உயரும். எனவே, பசுமைக் குடில் வாயுக்களைக் குறைப்பதற்காக மற்றொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை என பாதரசத்தை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

சிஎஃப்எல்-லுக்கு மாற்றாக ஒளி உமிழும் டையோடுகளைப் ( Light Emitting Diodes-எல் ஈ டி) பயன்படுத்த முடியும் என இவர்கள் வாதிடுகின்றனர். பாதரசத்தைப் பயன்படுத்தாத இவை சிஎஃப்எல்களைவிடக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதுடன் பல்லாயிரம் மணி நேரத்துக்கு மேல் எரியக் கூடியவை.

ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போதும் பாதரசம் வெளியாகிறது. சிஎஃப்எல்லைப் பயன்படுத்தும் போது இந்த பாதரசம் வெளியாகும் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மட்டும் பாதரசம் வெளியாவதைக் கட்டுப்படுத்துவது எளிதானது. கோடிக்கணக்கான வீடுகளில், குப்பை மேடுகளில் வெளியாகும் போது கட்டுப்படுத்துவது கடினம்.

எனவே, எல்ஈடி போன்ற மாற்றுகள் பரவலான பயன்பாட்டுக்கு வரும் வரை, இடைக்கால ஏற்பாடாக கனடா போன்ற நாடுகளில் சிஎஃப்எல்-களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதரசத்தை மீட்டு எடுக்கலாம். செயலிழந்த சிஎஃப்எல்களைத் திரும்பப் பெறுவது, மறுசுழற்சி செய்வது போன்றவற்றுக்கு ஆகும் செலவை சிஎஃப்எல்லைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஏற்கச் செய்யலாம்.

———————————————————————————————————–
நதியோரம் தேயும் நாகரிகம்!

இரா. சோமசுந்தரம்

வாழ்வின் எல்லா நேரங்களிலும் நாம் ஒருவகையில் அன்றாடம் காய்ச்சிகளின் மனநிலையில்தான் இருக்கின்றோம். அன்றைய தேவை நிறைவடைந்தால் சரி.

அது தேர்தல் என்றாலும், ஊழல் என்றாலும் அல்லது , கொலை, கொள்ளை, விபத்து, மரணங்கள், குண்டுவெடிப்பு – எதுவென்றாலும் சரி, அன்றைய நாளுடன் மறக்கப்படும்.

இந்தப் பட்டியலில் தண்ணீரும் ஒன்று. வீட்டு இணைப்பில் குடிநீர் வந்தது என்றால் அத்துடன் அதை மறந்துவிடுகிறோம். ஆனால் அந்த குடிநீரை வழங்கும் நதிக்கு எத்தகைய கேடுகளைச் செய்து வருகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

இந்திய நதிகள் யாவும், அவை பெரியன என்றாலும் சிறியவை என்றாலும், மழைக்காலத்தில் வெள்ளமும் மற்ற நாட்களில் சாக்கடையும் ஓடும் என்ற நிலைக்கு மாறிவிட்டது. எல்லாக் கழிவுகளும் நதிகளில் கலக்கின்றன.

இது காலங்காலமாக நடந்து வருவதுதானே? இப்போது மட்டும் என்ன புதிதாகத் தீங்கு வந்துவிட்டது?

காலங்காலமாக நதியில் குளித்த மனிதர்கள் வேதிப்பொருள் கலந்த சோப்பைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு “தோல் வெளுக்க சாம்பலுண்டு. துணி வெளுக்க மண்உண்டு’. அவர்கள் ஆற்றோரம் திறந்தவெளிகளையும், வயல்வரப்புகளையும் கழிப்பிடமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தொழிற்சாலைகள் இல்லை. அன்றைய சாயத் தொழில்கூட மரம், செடி, மலர், மரப்பட்டைகள் என இயற்கைப் பொருள்களைக் கொண்டு நடந்தது. யாருக்கும் பாதிப்பில்லை.

இன்றோ நிலைமை வேறு; இவை யாவும் தலைகீழாக மாறிவிட்டன.

தற்போது நதியில் கலக்கும் மாசுகளில் 80 சதவீதம் மனிதக் கழிவுகள்! ஏனையக் கழிவுகள் தொழில்துறையைச் சேர்ந்தவை.

எல்லா வீடுகளிலும் “ஃபிளஷ் அவுட்’ நவீன கழிப்பறை உள்ளது; இன்று இது தவிர்க்கமுடியாத ஒன்று.

ஒரு குடும்பத்துக்கு சுமார் 1.5 கிலோ மலஜலத்தை “”சாக்கடையில் தள்ளிவிட” குறைந்தது 300 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்தத் தண்ணீரும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. பெரும்பாலும், மாநகராட்சி அல்லது நகராட்சி சுத்திகரித்து, வீட்டு இணைப்பில் வழக்கும் குடிநீர்தான்.

சில வெளிநாடுகளில் இத்தகைய ஃபிளஷ் அவுட்களில் பயன்படுத்த மறுசுழற்சி-நீர் விநியோகம் உண்டு. இந்தியாவில் அதற்கு வாய்ப்பே கிடையாது.

உள்ளாட்சி அமைப்புகள், இந்தக் கழிவுகளை ஊருக்கு வெளியே ஒன்றுதிரட்டி, அவற்றை ஓரளவு சுத்திகரித்து பின்னரே நதியில் கலக்கவேண்டும் என்பதற்கு முயற்சிகள் பல எடுக்கப்பட்டன.

அதன் விளைவுதான் நதிகள் பாதுகாப்புத் திட்டம். பல ஆயிரம் கோடி ரூபாயை, இத்திட்டத்திற்காக “ஒதுக்கினார்கள்’.

நகரத்தின் சாக்கடையைச் சுத்திகரித்து இயற்கை உரங்கள் தயாரிப்பு, கீரை காய்கறி வளர்ப்பு – என்றெல்லாம் செய்திகள் வந்தனவே தவிர, நடைமுறையில் எதுவுமே நடக்கவில்லை. சுத்திகரிக்கப்படாத வீட்டுச் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக நதிகளில் கலந்துகொண்டே இருக்கின்றன. இன்றளவும்!

ஒரு மனிதனின் மல, ஜலத்தில் அவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருளை விளைவிக்கப் போதுமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் அனைத்தும் உள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்த இயற்கை சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. நீரில் கரைந்து நீர்த்துப்போகிறபோதுதான் சிறுநீர் ஒரு நல்ல உரமாக மாறும். வெயில் காய்ந்து கிருமிகள் அழிந்த உலர்மலம்தான் தீங்கற்ற உரமாக மாறும். ஆனால் இதற்கு மனித நாகரிகம் இடம் இல்லாமல் செய்துவிட்டது. ஆகவே மலக்கிருமிகள் நேரடியாக நதியைச் சென்றடைகின்றன.

ஓடும் நதிக்கு தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் சக்தி உள்ளது என்பது உண்மையே. நதியில் கலக்கும் உயிர்க்கழிவுகளின் மூலக்கூறுகளைச் சிதைத்து, உருமாற்றம் செய்ய போதுமான அளவு ஆக்சிஜன் நதிநீரில் இருக்க வேண்டும்.

ஆனால் ரசாயன கழிவுகள் நீரை மாசுபடுத்தி, அதன் இயற்கையான சக்தியை ஒடுக்கிவிடுகின்றன. இயற்கையான சுத்திகரிப்புக்கு ஆற்றுமணல் அவசியம். அதுவும் இப்போது பெருமளவில் சுரண்டப்படுகிறது.

நதிநீரைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும்; இல்லையெனில், குடிநீருக்காகப் பெரும்பணத்தைச் செலவிட நேரும்.

மனிதன் பெரிய அறிவுஜீவிதான்!

அதற்கு ஒரு சின்ன உதாரணம்:

ஒரு மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை இணைத்து, அதிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை அந்த வளாகத்தில் உள்ள டீ கடைகள், ஹோட்டல்களில் பயன்படுத்தினால் எரிபொருள் செலவு மிகமிகக் குறையும் என்ற திட்டத்தை முன்வைத்தபோது, காது, கண், மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “அய்யய்யே..எப்படி வியாபாரம் நடக்கும்?’ என்று எதிர்த்தார்கள்.

அதே கழிப்பறைகளின் மலஜலம் அனைத்தையும் பக்கத்தில் உள்ள நதியில் கலந்து, அந்த தண்ணீரைத்தான் மீண்டும் விநியோக்கிறோம் என்று அதிகாரிகள் சொன்னபோது, “சுடுகாடு கூடத்தான் ஆத்தோரம் இருக்குது. எல்லாம் வெள்ளத்துல போறதுதானே’ என்றார்கள்.

Posted in Alternate, Atomic, Biogas, Brazil, Burn, Carbon, Cauvery, CFL, Coal, Conservation, Crap, dead, Degradable, Detergents, Diesel, Disposal, Drill, Drinking, Drought, Earthquake, Electricity, Emission, emissions, energy, Environment, ethanol, Flowers, Flush, Food, Fuel, Ganga, Ganges, Garbage, Gas, Gore, Incandescent, Integration, Interlink, Kyoto, Lamps, Laundry, LED, Lights, Lignite, Lumniscent, Mercury, Mineral, Motor, Nature, Nuclear, Ozone, Petrol, Plants, Pollution, Power, Pump, Purify, Rain, Recycle, Removal, Restrooms, River, Shit, Soaps, Toilets, Toxics, Trash, Trees, Tsunami, Tube, Tubelight, Underground, Urea, Urine, Warming, Waste, Water, Well | 1 Comment »

Quadripartite dialogue not against China: PM

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

சீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்

புதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.

தில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.

நான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.

பேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.

கடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.

கடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.

“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

Posted in America, Army, Asean, Australia, Beijing, Brazil, Canberra, Cooperation, Coordination, defence, Defense, Disaster, Earthquake, EU, External, Flood, Foreign, G8, Germany, International, Japan, Manmohan, Military, NATO, Navy, Nuclear, Peking, PM, Relations, SA, SAARC, South Africa, Southafrica, Tokyo, Tsunami, US, USA, Washington | Leave a Comment »

Ooty – Smoking Earth

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

நிலத்தில் வெளியேறும் புகை: பீதி வேண்டாம் புவியியல் துறை அதிகாரி தகவல்

உதகை, ஜூன் 5: தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியிலிருந்து வெளிவரும் புகை 2 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தலைக்குந்தா வனப்பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து நிலத்திற்கடியிலிருந்து தொடர்ந்து புகைவெளிவருகிறது. இதில் கடந்த 2 நாட்களாக புகையுடன் தீக்கனல்களும் வெளிவந்ததால், அருகிலிருந்த செடி, கொடிகளும் அவ்வப்போது திடீரென தீப் பிடித்து எரிந்தன. இதனால், உதகை பகுதி மக்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.

இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியில் படிந்த ஒரு வனப்பகுதி நாளடைவில் மட்கி ஒரு படிமம்போல உருவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீயின் வெப்பத்தால் இப்பகுதி தூண்டப்பட்டு அதிலிருந்து தற்போது புகை வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய படிமங்கள் நிலத்திற்கடியில் சுமார் 300 மீட்டர் நீளம் வரை உள்ளது.

தற்போது நடத்தப்பட்ட சோதனையில் 2 மீட்டர் ஆழத்திற்கு கீழே நெருப்பு, சுட்ட மண் எதுவும் வராததால் அதற்கு கீழே புகை வர வாய்ப்பில்லை. எனவே, மொத்தமுள்ள 300 மீட்டர் நீள பரப்பளவிலிருந்தும் நிலத்திற்கடியிலேயே எரிந்து புகை வரும். அதன்பின்னரே இது முழுமையாக அணையும் என்றார் அவர்.

——————————————————————–

நெருப்புகிரியானதா நீலகிரி?
எரிமலை பீதியால் ஏற்பட்ட பரபரப்பு
குமுதம் ரிப்போர்ட்டர்
03.06.07

மூடுபனி முக்காடு போட்டிருக்கும் இடம் நீலகிரி. குளுகுளுவென குளிர் கூடாரம் போட்டுத் தங்கியிருக்கும் அங்கே நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விபரீதம் நிகழ்ந்து வருகிறது. அங்கே பூமிப்பிளவு ஒன்று திடீரென கரியையும், புகையையும், சாம்பலையும் கக்கத் தொடங்கியிருப்பதால் எரிமலை பீதியில் உள்ளனர் நீலகிரி மக்கள். இது நீலகிரியா? நெருப்பு கிரியா? என்ற சந்தேகம் அவர்களிடம் உழன்று வருகிறது.

நீலிகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தலைகுந்தா. இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் மீப்பி வனப்பகுதி. இதற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் முத்தநாடு மந்து, அத்திக்கல் நீபி ஆகிய மலைவாழ் மக்களின் கிராமங்கள் உள்ளன.

மீப்பி வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அப்போது இந்தப் பகுதியில் அடர்ந்த கரும்புகை வருவதை மலைவாழ் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ‘கோடைக்காலம் இல்லையா? ஏதாவது காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும்!’ என்று, அவர்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.

வழக்கமாக மழைக்குப் பிறகு காட்டுத்தீ அணைந்து விடும். ஆனால், இந்த மர்மப்புகை விடாமல் தொடர்ந்திருக்கிறது. கூடவே கடந்த 24_ம் தேதி பெய்த மழையின் போது காதைப் பிளக்கும் இடிச்சத்தம் கேட்டதோடு தீப்பிழம்பும் தெரிந்து, புகைமூட்டம் அதிகமாகியிருக்கிறது.

இதனால் பயந்துபோன முத்தநாடு மந்துவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அடுத்த நாள் அந்தப் பகுதிக்குப் போய் பார்த்திருக்கிறார்கள். அங்கு நடந்திருந்த பயங்கரத்தை அவர்களது கண்களே நம்ப மறுத்துவிட்டன. அங்கே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள் வேரோடு சரிந்து பூமிப்பிளவுக்குள் சிக்கியிருக்க, அதிலிருந்து அக்னி குண்டம் போல புகையும், நெருப்பும் வந்து கொண்டிருந்தது. அரண்டு போன இளைஞர்கள், அதுபற்றி பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரும் இதை நேரில் பார்த்து விட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

‘‘இது நிச்சயம் எரிமலைதான்!’’ என்று முடிவு கட்டிய அவர், ஊட்டியில் உள்ள தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் ஓட்டமாய் ஓடி வந்திருக்கிறார்கள். பூமிப்பிளவுகளில் இருந்து வெளிவரும் புகையை ஒருவித மிரட்சியுடன் பார்த்த அவர்கள், அது கக்கிய கரி, மண் ஆகியவற்றை எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர். அந்த மண் சுண்ணாம்புப் பவுடர் போலவும், கரிக்கட்டைகள் நிலக்கரி போலவும் இருப்பதைப் பார்த்து நிலைகுலைந்த அவர்கள், மாவட்ட கலெக்டருக்கும், புவியியல்துறை நிபுணர்களுக்கும் தகவல் அனுப்பினார்கள்.

அதையடுத்து, குன்னூரில் உள்ள புவியியல்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் நடத்திய முதல் கட்ட ஆய்வில் தெளிவாக எதையும் அறிவிக்க முடியவில்லை. அந்தப் பாறை இடுக்குகளிலிருந்து கந்தகம் போன்ற ஒருவித துர்நாற்றம் வீசியதால், ஒரு தீக்குச்சியை நீட்டி பாலசுப்ரமணியம் ஆராய்ந்திருக்கிறார். அது ‘பக்’கென பற்றிக் கொண்டு ஜூவாலை விட்டு எரிந்திருக்கிறது. ஆகவே, அங்கு மீத்தேன் வாயு கசிந்து கொண்டிருக்கலாம்’ என்றார் பாலசுப்பிரமணியம்.

அதுமட்டுமல்ல! ஒருவேளை உயரழுத்த மின்கம்பிகள் மண்ணில் புதைந்திருந்து அதன் காரணமாகக்கூட பூமி இப்படி புகை கக்கலாம் என்று இரண்டு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். இதனால், அங்கு நின்ற இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் குழம்பிப் போனார்கள். ‘‘இது நிச்சயம் எரிமலைதான். மக்கள் பீதியடையக் கூடாது என்பதற்காகத்தான், இந்தத் தகவலை மறைக்கிறார்கள்’’ என அடித்துப் பேசினார்கள் அவர்கள்.

‘‘இங்குள்ள முத்தநாடு மந்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உசில்மேடு என்ற குன்று உள்ளது. அது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எரிமலையாக இருந்து அணைந்து போனது. அது நிச்சயம் ஒருநாள் மீண்டும் வெடித்து தீக்குழம்பைக் கக்கும். அதன் ஆரம்ப அறிகுறிதான் இது’’ என்றார் இயற்கை ஆர்வலர் ஒருவர். இதுபற்றி நிலவியல் நிபுணர்கள் உரிய விளக்கம் எதையும் சொல்லாததால், ‘இது எரிமலைதான்’ என்று மீடியாக்கள் எழுத, இந்தப் பகுதியில் பதற்றம் பந்தி போடத் தொடங்கி விட்டது.

இந்தச் செய்திகள் வெளியானதையடுத்து வெளிமாநில விஞ்ஞானிகள், சுற்றுலா வாசிகளின் படையெடுப்பு அங்கே தொடங்கி விட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் களை கட்ட ஆரம்பித்து அவர்கள் மண் மாதிரிகளையும், கரிக்கட்டிகளையும் ஓடி ஓடிச் சேகரிப்பதும், ஆராய்வதுமாக இருந்தனர். நில வெடிப்புகளில் இருந்து வெளிவந்து விழும் கரிக்கட்டிகளும் சாம்பலும் படுபயங்கர சூடாக இருந்தன. அவற்றைத் தொடக்கூட முடியவில்லை. அத்துடன் அந்தப் பகுதி நிலம் வெப்பத்தால் தகதகத்தது. பலர் புகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைந்து விழுந்து விட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு அந்நியர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் ‘‘நீலகிரியில் எரிமலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. பூமியில் ஏற்பட்ட இந்த மாறுதல் குறித்து புவியியில் ஆய்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

‘‘சரி! நீலகிரியில் தோன்றியிருப்பது எரிமலையின் அறிகுறியா?’’ இப்படியரு கேள்வி நம் கழுத்தைப் பிடித்து உந்த, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் பேராசிரியர் மணிமாறனிடம் இதுபற்றிப் பேசினோம். அவர் அழுத்தம் திருத்தமாக சில விவரங்களைத் தந்தார்.

‘‘நீலகிரியில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. பூமியில் அடித்தட்டுகள் இரண்டு ஒன்றையன்று முட்டக்கூடிய இடத்தில்தான் எரிமலை ஏற்படும். ஆனால் நீலகிரி ஒரு மலைப்பகுதி என்பதுடன், அது நிலத்தட்டுகளுக்கு வெகு தூரத்தில் உள்ளது. ஆகவே அங்கு எரிமலை ஏற்பட நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை.

ஆனால், நீலகிரியில் இப்போது புகை வெளியாகிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலக்கரி, லிக்னைட் போன்றவற்றுக்கு முந்தைய கரிப்படிவம் இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் புதையும் மரங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் வெப்பத்தால் இறுகி நமக்கு நிலக்கரியாகக் கிடைக்கிறது. நிலக்கரிக்கு முந்தைய லிக்னைட் படிவமாகவும் நமக்குக் கிடைக்கிறது.

இப்படி பலகோடி ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் நிலக்கரி, லிக்னைட் போன்றவை எளிதில் தீப்பற்றக் கூடிய பாஸ்பரஸ், ஸல்ஃபர் போன்ற வேதியியல் பொருட்களை உருவாக்குகிறது. பூமிக்குள் கிடைக்கும் வெப்பத்தால் சிலவேளைகளில் இவை எரியவும் ஆரம்பிக்கின்றன. கோடை மழையின் போது பூமி நன்றாகச் சுருங்கி விரியும். அந்தத் தருணத்தில் எங்கே இடைவெளி கிடைக்கிறதோ அங்கே இவை பொத்துக் கொண்டு புகையாகவும், நெருப்பாகவும் தலைகாட்டுகின்றன.

இதை வைத்து, இந்தப் புகை வரும் இடத்துக்கு நேர் கீழே நிலக்கரி இருப்பதாகக் கருதிவிட முடியாது. நிலக்கரி, லிக்னைட் படிவங்கள் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பீறிட்டால் கூட புகையும் நெருப்பும் அந்தப் பகுதியில் தரைக்கு மேலே தலை நீட்ட முடியாமல் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஓரிடத்தில் தலைகாட்ட வாய்ப்புள்ளது.

நிலத்துக்கு வெளியே இந்த மாதிரி வெளியாகும் புகையும், நெருப்பும் இரண்டு மாதங்கள் வரை கூட நீடிக்கும். அதன் பிறகு தானே அடங்கி விடும். பூமிக்குள் இப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை, வெளிநாடுகளில் செயற்கைக் கோள் மூலம் படம்பிடித்துத் தெரிந்து கொள்கிறார்கள்!’’ என்றார் அவர். ஸீ

– கா.சு. வேலாயுதன்

Posted in Aravenu, Blue Mountains, Coimbatore, Disaster, Disasters, Dodabetta, Earth, Earthquake, Environment, Fire, Forest, Gudalur, industrialisation, Kattabettu, Kodanadu, Kotagiri, Kunjapanai, Land, Marlimundh, Mettupalayam, Mountain, Mudumalai, Munnamachi, Nature, Nilgiris, Ootacamund, Ooty, Padanthorai, Perar, Pollution, Protection, Recovery, Smoke, Srimadurai, ST, Thalaigunda, Thalaigundha, Thalaikunda, Thalaikundha, Thalaikuntha, theppakadu, Thorapalli, Threat, tribal, Ubrrani Hada, UDHAGAMANDALAM, Volcano, Warming, Water, WetLand, Wetlands | Leave a Comment »

Six tsunami warning centres in TN

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள்

சென்னை, ஏப். 3: தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் சிறைத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

பேரவையில் திங்கள்கிழமை உறுப்பினர்கள் வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), கோவை தங்கம் (காங்.), டி.ஜெயக்குமார் (அதிமுக) ஆகியோரது கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் முகத்துவார பகுதிகளிளை ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பூகம்பம் அளவிடும் மையங்கள் வேலூர் மாவட்டம் காவலூர் மற்றும் திருப்பத்தூரிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகள் அனைத்தும் பூகம்பம் ஏற்படும் இடங்களில் 2 மற்றும் 3-ல் இடம்பெற்றுள்ளன.

இதைப் போன்ற கருவிகள் உள்ள மையங்கள் ஏற்கெனவே சென்னை, சேலம், கொடைக்கானலில் இயங்கி வருகிறது. இது தவிர, கடலோரப் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கையேடுகள் அச்சிடப்பட்டு அப்பகுதி மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார் பெரியசாமி.


சுனாமி எச்சரிக்கை கருவிகள் உலகெங்கும் தேவை என நிபுணர் கருத்து

சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்
சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்

சுனாமி அலைகளை கண்டறிந்து எச்சரிக்கை தரக்கூடிய வசதிகள் பலவற்றை பசிபிக் பெருங்கடலில் பொறுத்த வேண்டிய தேவை இருப்பதாக சுனாமி நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியை அடுத்து, பசிபிக் பிராந்தியத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் உள் நோக்கம் ஏதுமின்றி தவறுதலாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்காலம் என்று லாரா கிங் என்ற சுனாமி நிபுணர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் சுனாமி அலைகளின் பெரிய தாக்கம் ஏற்படும் என்று தான் கருதுவதாகவும் லாரா கிங் கூறியுள்ளார்.

 

——————————————————————————————————

ஆழிப்பேரலை தடுப்புத் திட்டம்

காஞ்சிபுரம், மே 28: சுனாமி போன்ற அவசர கால பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் வனத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அவசர கால ஆழிப்பேரலை தடுப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமானோர் இறந்தனர். அதிக பொருள் சேதமும் ஏற்பட்டது.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கடற்கரையில் சதுப்பு நிலக்காடுகளோ, சவுக்குத் தோப்புகளோ இருந்தால் சுனாமி பாதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கும் எனத் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை சுனாமி தடுப்புத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தது.

தமிழகம் முழுவதும் 2000 ஹெக்டேர் பரப்பில் தாவர அரண் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 ஹெக்டேர் பரப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக செங்கல்பட்டு கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை, நிருபரிடம் கூறியது:

சுனாமி தடுப்பு சீரமைப்புத் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். சாதாரணமாக சிமென்ட்டாலான தடுப்புச் சுவர் கட்ட 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.6.5 கோடியும், மண்ணாலான தடுப்புச்சுவர் கட்ட ரூ.1.25 கோடியும் ஆகிறது. ஆனால் இயற்கையாக சவுக்குத் தோப்பு அமைக்க ரூ.5.4 லட்சமே செலவாகும்.

மேலும் 5 ஆண்டுகள் கழித்து இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். சவுக்கு மரங்களை வெட்டி விட்டு மீண்டும் அதே இடத்தில் கன்றுகளை நடலாம். தற்போது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் செயல்படுத்தப்படும். சவுக்கு கன்றுகளை வனத்துறை இலவசமாக தருகிறது என்றார் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை.

Posted in Boat, Capsize, Chennai, Coast, coastal, Cuddalore, Earthquake, Fisherman, fishermen, Forests, Government, I Periasamy, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanyakumari, Kavalore, mangrove, Measure, Measurements, Nagapattinam, Periasamy, Rameswaram, Rasipuram, Revenue Minister, Richter, Scale, Sea, seacoast, Seashore, Tamil Nadu, Thenkanikottai, Tirupattur, TN, Trees, Tsunami, Tuticorin, warning | Leave a Comment »