தொடரும் மணல் கொள்ளை!
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
ஆற்று மணல் இயற்கையின் கொடை; நிலத்தடி நீர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மணல் அவசியமாகிறது. ஒரு செ.மீ. அளவுள்ள மணல் சேர பல ஆண்டுகள் ஆகும். ஆற்றுப்படுகைகளில் 30 அடி, 40 அடி மணல் படிந்துள்ளது என்றால் இதற்கு பல நூற்றாண்டுகள் பிடித்து இருக்கும். நீரில் கலக்கும் கழிவுகளை மணல்தான் வடிகட்டுகிறது. நீர்ப்பதத்தைச் சீரமைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே மணல் கொள்ளை ஆரம்பித்துவிட்டது. இயற்கையின் வரங்களான காடு, மலை, நீர் என்பவை சுயநல சக்திகளால் சூறையாடப்படுகின்றன.
ஆற்றுமணலைப் பொதுப் பணித் துறையே விற்பனை செய்கின்ற நிலையில், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் மீது லாரிகளை ஏற்றி கொல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு தொடர் கதை. மணல் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி சில நிபந்தனைகளுடன் உரிமம் வழங்க வேண்டும்:
பொதுப்பணித்துறையின் பார்வையில், அதன் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் மணல் எடுக்க வேண்டும். மணலை வாரித்தான் எடுக்க வேண்டும். இயந்திரம் எதையும் பயன்படுத்த அனுமதி கூடாது. தரைமட்டத்திலிருந்து அரை மீட்டர் ஆழத்திற்குள்ளேதான் மணல் எடுக்க வேண்டும். நீர் மட்ட அளவுக்குக் கீழ் மணல் எடுக்கக் கூடாது. குடிநீர்க் கிணறுகள் மற்றும் பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குத் தொலைவில்தான் மணல் எடுக்க வேண்டும்.
ஆனால் மணல் எடுக்கும் இடங்களில் இந்த நடைமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் இந்த நிபந்தனைகளை மீறி மணல் வியாபாரம் மும்முரமாக நடக்கிறது. ஒரு டிப்பர் லாரியில் ஏற்றப்படும் மணலின் மதிப்பு சுமார் ரூ. 1,300. எடுக்கப்படும் மணல் அருகில் உள்ள களத்தில் குவிக்கப்பட்டு பின் மணல் வியாபாரிகளின் விருப்பம்போல் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. எத்தனை தடவை என்ற அளவே கிடையாது. மணல் கொள்ளையால், நீர் மேலாண்மையும் பாதிப்புறுகிறது. ஆற்றின் வெள்ளைமணல் நிலத்தடிநீர் வளத்தைப் பாதுகாக்கிறது.
தரமான வெள்ளை மணலுடன் நிரப்பு மணலைக் கலந்து ஒரு சிலர் விற்கின்றனர். சில இடங்களில் விவசாய நிலங்களில் உள்ள துகள் மண்ணையும் எடுத்து விற்கத் தொடங்கியுள்ளனர்.
தாதுமணல் சட்டங்கள் மீறப்படுவதைக் கண்காணிக்க எந்த அமைப்பும் கிடையாது. உண்மையில் மணல் எடுக்க ஜே.சி.பி. – பொக்லைன் போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.
தாமிரபரணி ஆற்று நீர் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனமாகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் 421 கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சுமார் 50 லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது. தண்ணீர் ஓடிய ஆறுகளில் பல மாதங்கள் மணல் மட்டுமே காட்சி தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று மணலில் தோரியம் என்ற அரிய தனிமம் உள்ளது. மணல் எடுப்பதால் தோரியம் தாது அழிந்து வருகிறது.
ஆற்றுப்படுகையில் 20 அடி 30 அடி ஆழம் இயந்திரங்களால் தோண்டி மணல் எடுக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியில் உள்ள குடிநீர்க் கிணறுகளை ஒட்டியே மணல் எடுத்ததால் அத்தனை கிணறுகளும் பாதிப்படைந்துள்ளன. இந்த அத்துமீறலுக்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றால்தான் பிரச்னை தீரும்.
10 டயர்கள் கொண்ட பெரிய லாரிகளில் பெருமளவில் பொருநை ஆற்று மணல் ஏற்றப்பட்டு கேரளத்துக்குக் கடத்தப்படுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளம், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் கட்டுகின்ற புதிய அணைக்கு தேனி மாவட்டத்திலிருந்து மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இத்தனைக்கும் கேரளத்தில் நீர், மணல்வளம் குறைவில்லை. ஆனால் அங்கு மணல் எடுக்கத் தடை. வளம் குறைந்த தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு மணல் கடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ரூ. 1,300 பெறுமானமுள்ள மணல் கொச்சியில் ரூ. 32 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலம் ஏற்றுமதியாகிறதாம். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அரிய தாதுக்கள் அடங்கிய மணல் சிறிது சிறிதாகக் கடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கேரள ஆறுகளில் மணல் எடுத்தால் பொதுமக்களே விரட்டி அடிக்கிறார்கள். அதனால் பிளாச்சிமடவிலிருந்து பெப்சி தொழிற்சாலை விரட்டப்பட்டு, தமிழர்கள் ஏமாளிகள் எனக் கருதி கங்கைகொண்டானில் நமது தண்ணீரைக் கொள்ளை அடித்து நமக்கே விற்கின்ற துர்பாக்கிய நிலை உள்ளது. கேரளத்தில் உள்ள விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை என்பதை நினைக்கும்போதே வெட்கமாக உள்ளது. மணல் கொள்ளைக்காக பல கோடி ரூபாய் கப்பம் கட்டப்படுகின்றது எனப் பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.
அரியநாயகிபுரம் அருகே தாமிரபரணியில் குளிக்கச் சென்ற 3 பேர் புதை குழியில் சிக்கி மாண்டனர். மணல் எடுத்த பள்ளத்தில் ஆழம் தெரியாமல் போனதால் மூன்று உயிர்கள் பறிபோயின. இதைக் கண்டித்து, மணல் எடுப்பதைத் தடுக்கப் பொதுமக்கள் போராடியபோது அப்பாவிகள் 16 பேரின் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளியதால், வலிமை மிகுந்த பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அந்தப் பாலம் இடிந்துவிழக் காரணமாக இருந்த மணல் கொள்ளையர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு கரூர், முசிறி, தேனி, தஞ்சை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சி மற்றும் வைகை, அமராவதி கரைகள் போன்ற இடங்களிலும் மணல் கொள்ளை நடக்கிறது. ஆனால், மாட்டு வண்டியில் மணலை சொந்தத் தேவைக்கு ஏழை விவசாயிகள் எடுத்துச் சென்றால் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அரசின் நிபந்தனைகளையும் சட்டங்களையும் மீறி மணல் எடுக்கும் “பிரமுகர்கள்’ மற்றும் அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளியோரின் தேவை அறிந்து அவர்களுடைய கட்டுமானப் பணிகளுக்கு மணல் உரிய விலையில், எளிதில் கிடைக்க நடவடிக்கை அவசியம். குடிநீர்க் கிணறுகளிலிருந்து குறைந்தபட்சம் 500 மீட்டருக்கு அப்பால் மணல் எடுக்க வேண்டும் என்ற விதியைக் கடுமையாக்க வேண்டும். மணல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்டங்களும், இதய சுத்தியான விழிப்புணர்வும் அவசியம். அண்டை மாநிலங்களுக்கு மணல் எடுத்துப் போவோர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். சமூக விரோதிகளின் ஆதிக்கத்திலிருந்து மணல் தொழிலை மீட்க வேண்டும்.
இயற்கை நமக்களித்த நதிச் செல்வங்களைக் காப்பது நமது கடமை. தொடரும் கொள்ளையால் மணல் வளம் குன்றாமல் தடுப்பது காலத்தின் கட்டாயம்.
(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)