Sheikh Hasina vs Khaleda Zia – Bangladesh Politics: Iajuddin Ahmed
Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007
வங்கதேசத் தேர்தல்
வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் ஃபக்ருதீன் அகமது தலைமையில் புதிய இடைக்கால நடுநிலை அரசு பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டில் அமைதி திரும்பி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு புதிய தேதியை இந்த அரசு விரைவில் அறிவிக்கலாம். அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டியுள்ளது.
வங்கத்தேசத்தை ஆண்டு வந்த காலிதா ஜியா அரசின் பதவிக்காலம் கடந்த அக்டோபரில் முடிவடைந்தது. அப்போதிருந்தே அந்நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. வங்கதேச அரசியல் சட்டப்படி அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அந்த அரசு பதவி விலகி, நடுநிலை அரசு அமைக்கப்பட்டாக வேண்டும். இடைக்கால நடுநிலை அரசின் கீழ்தான் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், வங்கத்தேச அதிபர் இயாஜுதின் அகமது கடந்த அக்டோபரில் தம்மையே அந்த நடுநிலை அரசின் தலைவராக அறிவித்துக் கொண்டார். இயாஜுதின் அதுவரை பிரதமராக இருந்த காலிதா ஜியாவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆகவே அவர் தலைமையிலான அரசை நடுநிலை அரசாக ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான ஷேக் ஹசீனா அறிவித்தார். ஜன.22-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேர்தலில் பங்கு கொள்ள மாட்டோம் என்று ஹசீனா தலைமையிலான 15 கட்சிகள் கூட்டணி அறிவித்தது. அத்துடன் போராட்டத்தையும் துவக்கியது.
வாக்காளர் பட்டியலிலிருந்து போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிக் கூட்டணி கோரியது.
கடந்த இரண்டரை மாதங்களாக எதிர்க்கட்சிக் கூட்டணியினர் வேலை நிறுத்தம், முற்றுகைப் போராட்டம் என அடுத்தடுத்து கிளர்ச்சிகளை நடத்தினர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினரிடையே நடந்த மோதலில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
தேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன், கனடா முதலான நாடுகள் வங்கதேச அதிபர் மீது நிர்பந்தம் செலுத்தின. ஆரம்பத்தில் அசைந்து கொடுக்காமல் இருந்த அதிபர், நடுநிலை அரசின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அடுத்து, நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தேர்தல் ஒத்திப் போடப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்துதான் புதிய நடுநிலை அரசு பதவி ஏற்றுள்ளது.
ஷேக் ஹசீனாவின் கோரிக்கைகளில் பலவும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் அமைதி திரும்பி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் விவேகம் காட்டி, தேர்தல்கள் அமைதியாக நடைபெற ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய நிலைமையை ஷேக் ஹசீனா வரவேற்றுள்ளார். இதுவரை பிரதமராக இருந்த காலிதா ஜியா, மேலை நாடுகள் வீணாக வங்கதேச அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேச அரசியல் சட்டப்படி முந்தைய அரசின் பதவிக்காலம் முடிந்ததிலிருந்து அதாவது அக்டோபரிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஜன.22-ம் தேதி நடப்பதாக இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த அரசியல் சட்டவிதி எவ்விதம் சமாளிக்கப்படும் என்று தெரியவில்லை.
வங்கதேச நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வந்தது. சாதாரண நாள்களிலேயே அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் கள்ளக் குடியேற்றம் நடைபெறுவது உண்டு. ஆகவே அங்கு தோன்றிய குழப்ப நிலை காரணமாக கள்ளக் குடியேற்றம் அதிகரிக்கலாம் என்ற கருத்தில் இந்தியாவின் எல்லைகளில் ரோந்து அதிகரிக்கப்பட்டது. நல்லவேளையாக இப்போது நிலைமை மாறியுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்