ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனதில் அமைதி…சருமத்தில் மென்மை!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. எனக்கு கைமுட்டி, கால்முட்டி, கழுத்து, தொடை உரசும் பகுதி, மூக்கு மற்றும் வாயின் இரு ஓரங்களிலும் கறுப்பாக உள்ளது. உடம்பில் வெயில் படும் இடங்களும் கறுப்பாக உள்ளது. முகத்தில் பூனைமுடிகளும் உள்ளன. இவை அனைத்தும் நீங்க வழி கூறவும்.
வினோதா, திருச்சி.
தோல் இன்றைக்கு அதிக அளவில் பாதிப்படைவதைக் காண்கிறோம். உணவினால் தோல் கெடலாம். உடல் உபாதைகளால் கெடலாம். மனதில் ஏற்படும் எண்ணங்கள் சிலவற்றாலும் தோல் கெட்டுப் போகலாம். ஆபஸ்தம்பதர்மஸýத்ரம் கூறுவதாவது : வியாபாரத்திற்காக ஹோட்டல் முதலிய கடைகளில் தயாரிக்கப்படும் உணவு வகை எதையும் உண்ணாதீர். அதில் மட்டரகமான மலிவான, ஆயாத கறிகாய்களும் பண்டங்களும் உணவில் சேரலாம். மேலும் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்படுவதாலும் ஹோட்டல் உணவில் எவ்விதமான சுத்தியும் கவனிக்க முடிவதில்லை.
வீட்டிலும் முதல் நாள் சமைத்த உணவை மறுநாள் சாப்பிடக்கூடாது. எண்ணெய் நெய்யில் பொரித்தது, வெல்லப்பாகில் சேர்த்து செய்தது. அவல்பொரி சத்துமாக்கள், பிஸ்கட், சில பட்சணங்கள் ஊறுகாய்கள் இவைத் தயாரித்ததிலிருந்து சில நாட்கள் சத்துகுறையாமலும், உடலுக்குக் கெடுதல் செய்யாமலுமிருக்கும். சாதம், பருப்பு, பாயாசம், குழம்பு, ரசம், இட்லி, தோசை போன்ற மாவுப் பணியாரங்கள் -இவை எல்லாம் மறுநாள் நேரமதிகமிருந்தால் சாரம் மிகக்குறைவதுடன் ராத்திரி காலத்தினால் ஒருவித புளிப்பையும் மாறுதலையுமடைகிறது. அவை மனதின் தமோகுணத்தை வளர்க்கும். காலையில் புதிதாய் சமைக்கப்பட்டிருப்பினும் எந்த உணவு புளித்து ஊசி விட்டதோ அதை எப்பொழுதும் சாப்பிடக்கூடாது.
பதனழிந்த இந்த உணவின் சாரம் உணவுக் குழாய்களில் உட்புறச் சுவர்களில் தேங்கி அப்பிக் கொள்ளும் நிலையில் தோலில் நிறமாறுபாட்டைக் காண்பிக்கும். அவை வெளியேறாத நிலையில் தோலின் கருநிறமும் மாறாது. சுக்கு, சூரத்தாவாரை இலை, ரோஜா மொக்கு, காய்ந்த திராட்சை, பிஞ்சுக் கடுக்காய் இவற்றின் கஷாயத்தைத் தனியாகவோ, விளக்கெண்ணெய் சேர்த்தோ காலையில் பேதிக்குச் சாப்பிட உட்புறக்குழாய்களின் அழுக்கு நீங்கிவிடும்.
மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கிக்கொண்டு வேலை செய்யவேண்டிய நிர்பந்தம், வெள்ளைப்படுதல், உடல்சூடு அதிகமாக இருத்தல், பிறரின் ஏச்சும் பேச்சும் தாங்கி மனம் வேதனையடைதல், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்காதிருத்தல், உறக்கமின்மை போன்றவற்றாலும் தோல் பகுதிகளில் திட்டுத்திட்டாக கறுப்பாகலாம். இவற்றில் தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்தும் செய்யவேண்டிய செயல்களைச் செய்வதிலும் ஆர்வம் கொண்டிருத்தல் நலம்.
தோல் கெடுவதால் மனதின் செயல் ஆர்வம் குறையும். அதேபோல், மனதைத் தெளிவாக சந்தோஷமாக வைத்துக் கொள்பவர்களுக்குத் தோல் நோய் எளிதில் குணமாகிவிடும். மனதில் பரபரப்பும் கோபமும் தாபம் உள்ளவர்களுக்கு தோல் நோய் ஏற்பட்டால் குணமாவது கடினம். மனஅமைதி உள்ளவர்களுக்கு சருமம் மென்மையுடன் பளபளவென்றிருக்கும்.
பருத்தி நூல் துணிகளை அணிந்து கொள்வதால் தோல் அழற்சி, படை போன்றவை வராது.
இரவில் படுக்கப்போகும்போது பால் ஆடையை மூக்கு மற்றும் தோல் பகுதியில் ஏற்பட்டுள்ள கருப்புத்திட்டுகளில் தடவிக் கொண்டு படுக்கவும். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீர், குளிர்ந்த தண்ணீர் இரண்டையும் மாற்றி மாற்றி பாலாடை பூசியுள்ள பகுதிகளில் விட்டுக் கழுவவும். பிறகு குண்டு மஞ்சள் ஒன்றை சந்தனக் கல்லில் கொஞ்சம் இழைத்து, சொட்டு நல்லெண்ணெய் உள்ளங்கையிலே விட்டு, அதில் இழைத்த மஞ்சளைக் குழைத்து கருப்பான தோல் பகுதிகளில் தடவிவிடவும். குறைந்தது அரைமணி நேரம் நன்றாக ஊறின பிறகு பயத்த மாவு தேய்த்து அலம்பி விடவும்.
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய “ஏலாதி கேரதைலம்’ சிறிது எடுத்து ஏலாதி சூரணத்தில் குழைத்து கருப்பான பகுதிகளில் பூசி 1/2 மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறிக்குளிக்கவும். உடலுக்கு நல்ல நிறத்தைத் தரும். கரும் திட்டுக்கள் மறைந்துவிடும். கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் இம் மருந்துகள் கிடைக்கும்.
பூனை முடிகள் விலக பெண்மையைப் போற்றி வளர்க்கும் உணவு, உடை, நடைமுறைகளில் அதிக ஈடுபாடு அவசியம். மஞ்சள் பூசிக் குளித்தல், உளுந்து எண்ணெய் சேர்ந்த உணவு அதிகம் ஏற்றல், பெண்மையை வளர்க்கும் “பலசர்ப்பிஸ்’ எனும் நெய்யை காலை மாலை இருவேளை 5-10 மிலி வரை சாப்பிட்டு (வெறும் வயிற்றில்) மேல் பசுவின் பால் காய்ச்சியது சாப்பிடுதல் போன்றவை செய்யவும். திருமணத்திற்கு முன் வெண்ணெய்யில் 4-5 சுத்தமான குங்குமப்பூ இதழ்களைப் போட்டு குழப்பி பாதிக்கப்பட்டுள்ள தோலில் தேய்த்து வர இயற்கையான மென்மை வளரும்.