Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 16th, 2007

TN lorry owners strike from Jan 20 – Transporters agitate against Premium hike

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

20-ந் தேதி முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் தொடங்குமா?- நாளை தெரியும்

நாமக்கல், ஜன. 14-

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் தொகை 150 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இன்சூரன்ஸ் தொகை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் வருகிற 20-ந் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்து இருக்கிறது.

இதுபற்றி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடனிடம் இன்று கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:-

எப்போதும் இல்லாத அளவுக்கு மோட்டார் வாகன இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் லாரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள், இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாகிகள், மத்திய நிதித்துறை அதிகாரிகள் ஆகியோர் முதல்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அது தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து இன் சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இன்சூரன்ஸ் தொகை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று வற் புறுத்தப்பட்டது. இருந்தபோதி லும் அது ஏற்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து நாளை (15-ந் தேதி) மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் முன்னிலையில் இன்சூரன்ஸ் நிர்வாக அதிகாரிகள், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதில் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் ஏற்கனவே அறிவித்தபடி லாரி ஸ்டிரைக் வருகிற 20-ந் தேதி முதல் தொடங்கும்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் லாரிகள் ஓடாது. இந்த ஸ்டிரைக்கில் நாங்களும் பங்கேற்போம்.

இவ்வாறு செங்கோடன் கூறினார்.

வரும் முன் காப்போம்

கனரக வாகனங்களுக்கு உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரீமியம் 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 20-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்தாவிட்டால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக பொதுத்துறை மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூறிவந்தன. இதைப் பரிசீலித்த இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் 3-ம் நபர் இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்த சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து கனரக வாகனங்களுக்கு ரூ.3,600 என்று இருந்த பிரீமியம், ஜனவரி முதல் தேதியிலிருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மிக அதிகமானது என்று மோட்டார் போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது. இப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசுக்கும், மோட்டார் போக்குவரத்து அமைப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது.

பிரீமியத்தைக் குறைத்தால் தங்களுக்குத் தொடர்ந்து நஷ்டம் ஏற்படும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூறிவிட்டன. இந்நிலையில், தங்களது கோரிக்கை ஏற்கப்படாததால் வரும் 20-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மோட்டார் போக்குவரத்து அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இத்தகைய இன்சூரன்ஸ் அளிப்பதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி இன்சூரன்ஸ் செய்வதை நிறுவனங்கள் தவிர்ப்பதாகவும் இதன் காரணமாக லஞ்சம், இடைத் தரகர் முறை நுழைவதாகவும் 3-ம் நபர் இன்சூரன்ஸ் செய்யாமல் லாரிகளை இயக்க முடியாது என்றும் மோட்டார் போக்குவரத்து அமைப்பினர் தெரிவிக்கின்றனர். அதே சமயம் இன்சூரன்ஸ் நிறுவனத்தினரின் கூற்றையும் மறுக்கின்றனர். வாகனங்கள் மீதான பிற காப்பீடுகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள லாரி, டேங்கர், டிரெய்லர், மினி லாரி, வேன் உள்ளிட்டவையும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் என்றும் அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் தெரிவித்துள்ளார். இன்சூரன்ஸ் தொடர்பான வழிமுறைகளை எளிதாக்குமாறு கடந்த காலத்தில் விடுத்த கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வேலை நிறுத்தத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் வரத்து பாதிக்கத்தான் செய்யும். எனவே, சமையல் எரிவாயு மற்றும் உணவு தானிய விநியோகம் பாதிக்கப்படலாம். இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும். மேலும் லாரி, வேன் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி அன்றாட செலவுக்கே சிரமப்படுவர். இது மட்டுமன்றி அரசுக்கு பல்வேறு வகைகளில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படும்.

இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சமூக விரோத சக்திகள் கள்ளச் சந்தை, பதுக்கல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடும்.

எனவே, நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க, எஞ்சியிருக்கும் குறைந்த கால அவகாசத்தில் மோட்டார் போக்குவரத்து அமைப்பினருடனும், இன்சூரன்ஸ் துறையினருடனும் அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி பிரீமியம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

லாரி ஸ்டிரைக்வாபஸ்

நாமக்கல், ஜன. 19: மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சனிக்கிழமை (ஜன. 20) முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

காப்பீட்டுக் கட்டணத்தை ஜன. 1 முதல் 150 சதவீதமாக உயர்த்தியதைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில் இக்காப்பீட்டுக் கட்டணத்தை 150-ல் இருந்து 80 சதவிகிதமாக குறைத்துக் கொள்வதாக இன்சூரன்ஸ் நிறுவனங்களும், மத்திய அரசும் வியாழக்கிழமை உறுதியளித்தன.

இதைத்தொடர்ந்து லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Posted in ACOGOA, All India Confederation of Goods Vehicle Owners' Associ, All India Motor Transport Corporation, Auto Insurance, Communism, India, Insurance regulator, IRDA, Lorry Strike, Motor Insurance, premium hike, Price Raise, Sengodan, Tamil Nadu, Threat, TN, Truck Strike | Leave a Comment »

AIADMK encouraging dynasty politics by appointing personalities in the hierarchy

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

காளிமுத்து- தமிழ்குடிமகன் மகன்களுக்கு அ.தி.மு.க.வில் பதவி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜன. 14-

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  • முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை மதுரை மாநகர் மாவட்ட ஜெயலதா பேரவை செயலாளராகவும்,
  • முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன் மகன் பாரிதமிழ்க்குடி மகன் மாவட்ட இலக்கிய அணி செயலாளராகவும் நியமிக்கப் பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தலைமை கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாள ராக ராஜன் செல்லப்பா மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார். அவைத்தலை வராக கே.துரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1. பி.தனம்(சமயநல்லூர் தொகுதி), 2.ஜெ.அனிதா (திருப்பரங்குன்றம் தொகுதி), 3. பிச்சைமணி (சேடப்பட்டி தொகுதி), 4. கே.நாகராஜன் (சோழவந்தான் தொகுதி), 5. பி.ஜாபர் (மேலூர் தொகுதி), 6. வி.குணசேகரன் (உசிலம்பட்டி தொகுதி), 7. பெருமாள் (திருமங்கலம் தொகுதி) இவர்களை அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

Posted in ADMK, AIADMK, J Jayalalitha, Jeyalalitha, JJ, Kalimuthu, Madurai, Party Leaders, Selvi, Tamil Kudimagan, Thamizh kudimakan, Thamizhkudimagan | Leave a Comment »

Tamil Nadu Government’s Movie Award Committee nominated

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

திரைப்பட விருது: தேர்வுக்குழு நியமனம் 

சென்னை, ஜன.16-

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2005-ஆம் ஆண்டு மற்றும் 2006-ஆம் ஆண்டுக்குரிய தமிழ்நாடு அரசு திரைப் பட விருதுகளையும், 2004- 2005, 2005-2006 கல்வி யாண்டுகளுக்குரிய தமிழ் நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்ப பயிற்சி நிறுவன மாண வர் விருதுகளையும் தேர்வு செய்ய புதிய தேர்வுக்குழு ஒன்றை இன்று அமைத்து முதல்-அமைச்சர் அறிவித் துள்ளார்.

  • நீதியரசர் மோகன் தேர்வுக் குழுவின் தலைவராக இருப் பார்.
  • இயக்குனர் எஸ்.பி.முத்து ராமன்,
  • நடிகர்கள் சிவ குமார்,
  • சாருஹாசன்,
  • ஒய்.ஜி.மகேந்திரன்,
  • தியாகு,
  • இயக்குனர் அமிர்தம்,
  • கவிஞர் மு.மேத்தா,
  • தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் நட ராஜன்,
  • இசையமைப்பாளர் தேவா,
  • நடிகை ஸ்ரீபிரியா,
  • தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன முதல்வர் என்.ரமேஷ்,
  • செய்தித்துறை இயக்குனர் ஆகியோர் தேர்வுக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பார் கள்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Posted in Amirtham, Awards, Chaaruhaasan, Chaaruhasan, Charuhassan, Committee, Films, Government, Judge Mohan, Justice Mohan, Mu Mehta, Mu Mehtha, N Ramesh, Natarajan, Pictures, Prizes, Saruhasan, Selection Commission, Sivakumar, SP Muthuraman, srividya, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, Television, Thyagu, Thyaku, TV, YG Mahendran, YGee Mahendra | Leave a Comment »

Knowledge Commission suggests to teach English from First Standard to Manmohan Singh

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

1-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்’ பிரதமருக்கு தேசிய கமிஷன் சிபாரிசு

புதுடெல்லி, ஜன.15-

தேசிய அறிவு கமிஷன் தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேற்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க ஆங்கில மொழி அவசியமானதாக இருக்கிறது. எனவே, இந்தியா முழுவதும் 1-ம் வகுப்பில் இருந்து, மாணவர்களுக்கு ஆங்கிலமும், தாய் மொழியும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்து வெளியே வரும் போது, 2 மொழிகளை சரளமாக பேசும் தகுதியை பெற்று விடுகிறார்கள்.

தற்போது 12-ம் வகுப்பு படித்து வெளியேறும் மாணவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச முடிவது இல்லை. ஒரு சதவீத மாணவர்களே சரளமாக பேசுகிறார்கள். 1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுத்தால், இது போன்ற நிலையை மாற்றி விடலாம்.

இது பற்றி, பிரதமர் மன்மோகன்சிங், மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். சாதாரண மாணவர்களும் ஆங்கிலம் பேசும் தகுதியை பெற வேண்டும். இதற்காக தரமான ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்போது உள்ள 40 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும்.

1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை இப்போதே தொடங்கினால், இன்னும் 12 ஆண்டுகளில், அனைத்து மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசும் தகுதியை பெற்று விடுவார்கள்.

தற்போது 9 மாநிலங்களிலும், 3 ïனியன் பிரதேசங்களிலும், 1-ம் வகுப்பு முதல், மாநில மொழியுடன் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எனவே மற்ற மாநிலங்களில்தான் இந்த திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

=================================================================
சமச்சீர் கற்பித்தலும் அவசியம்

சமச்சீர் கல்வி முறையைத் தமிழகத்தில் அறிமுகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இம்மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கவுள்ளது.

அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி கூறியிருப்பது நடுத்தர வருவாய் பிரிவினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

பாடத்திட்டத்தில் மட்டும் சமச்சீர் கல்விமுறை என்று நின்றுவிடாமல், சமச்சீர் கற்பித்தல் முறை, சமச்சீர் கட்டணமுறை ஆகியவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், தனியார் பள்ளிகள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் பெயரும் புகழும் சம்பாதித்து பெற்றோர் தங்கள் பள்ளியில் இடம் கேட்டு அலைமோதும்படி செய்யவும், அதன்மூலம் அதிக கல்விக் கட்டணத்தை வசூலிக்கவும் எல்லா வகையிலும் முயல்கின்றன; ஆர்வம் காட்டுகின்றன. தங்கள் நிறுவன மாணவர்களில் சிலரேனும் மாவட்ட அளவில், மாநில அளவில் முதன்மை பெறவேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றன. அத்தகைய திறமைமிக்க மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள கட்டணங்களை ரத்து செய்து, சலுகைகள் தந்து, கூடுதல் பயிற்சிகளையும் தருகின்றன. இந்த கூடுதல் கவனமும் அக்கறையும்தான் தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் வேறுபடுத்தி, மிகப்பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டன.

எட்டாம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்பது நியாயமானதுதான். ஆனால், கிராமப்புறப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரிடம், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரின் திறனில் 50 சதவீதமாகிலும் உள்ளதா என்பதை சோதிப்பதும், திறன் குறைந்திருப்பின் தொடர்புடைய பள்ளி ஆசிரியர்களையும் பொறுப்பேற்கச் செய்வதும் அவசியம். இல்லையெனில், சமச்சீர் கல்விமுறையால் அரசு எதிர்பார்க்கும் பலன் ஏற்படாது.

தமிழ் வழிக் கல்வி அல்லது ஆங்கில வழிக் கல்வி எதுவென்றாலும் ஒரே விதமான பாடத்திட்டம் என்ற நிலையில், கட்டணங்களும் சமச்சீராக இருப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பத்தாம் வகுப்புக்கே ரூ.15 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தப் பள்ளிகள் உயர் வருவாய்ப் பிரிவினர், பணம்படைத்தோர் மட்டுமே அணுகக்கூடியவையாக உள்ளன. வசதிகள் அடிப்படையில் ஓட்டல்களுக்கு “ஸ்டார்’ அந்தஸ்து தருவதைப்போல, (கல்வியும் வியாபாரம் ஆகிவிட்டதால்) கல்வி நிறுவனங்களுக்கும் அவை பெற்றுள்ள வசதிகளுக்கேற்ப “ஸ்டார்’ அந்தஸ்து தந்து, அவர்கள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணங்களையும் அரசே நிர்ணயிக்கலாம்.

சமச்சீர் கல்வி முறையால் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரேவிதமான பாடத்திட்டம் வகுக்கப்படும்போது, இவர்களுக்கான புத்தகங்களை வாங்குவதில் பெற்றோருக்கு அதிக சிரமம் இருக்காது. தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள், நிறைய புத்தகங்களை-அவர்கள் குறிப்பிடும் நிறுவன வெளியீடுகளை-வாங்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. புத்தகத்தின் விலையும் அதிகம். ஆனால் அவற்றில் பெரும்பகுதி பாடங்கள் தேவையில்லை என்று விலக்கப்படுகின்றன. இதனால் பெற்றோருக்குத்தான் தேவையற்ற கூடுதல் செலவு.

சமச்சீர் கல்விமுறை வரும்போது, வியாபார நோக்கமுள்ள கல்வி நிறுவனங்கள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை புகழ்ந்து, அதற்கு மாறி, பெற்றோரை தங்கள்பக்கம் இழுக்கும் அபாயமும் இல்லாமல் இல்லை. ஆகவே, பாடத்திட்டத்தை வகுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

=================================================================

Posted in Analysis, Children, Education, English, Equality, First Standard, GO, Govt, human resource development, Instruction, Kid, Knowledge Commission, Manmohan Singh, Matric, Matriculation, Medium, Mother-tongue, National Institute of Vocational Education Planning and, National Knowledge Commission, NIVEPD, Op-Ed, PM, Private, Schools, Society, Student, Tamil, Tamil Nadu, TamilNadu, Teacher, TN, vocational education and training | Leave a Comment »

Abhishek Bhachan – Aiswarya Rai Marriage : Benaras Silk Saree Purchases

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

திருமணத்தின் போது கட்டுவதற்காக ஐஸ்வர்யாவுக்கு ரூ.2 லட்சத்தில் பனாரஸ் பட்டுப்புடவை

வாரணாசி, ஜன. 16-

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்ததையொட்டி திருமணத் திற்கான ஏற்பாடுகளை அமிதாப்பச்சன் குடும்பத்தினர் மும்முரமாக செய்து வருகி றார்கள்.

திருமணத்தின் போது தனது மருமகள் விலை உயர்ந்த பட்டுப்புடவையை கட்ட வேண்டும் என்பதை அமிதாப்பச்சன் விரும்புகிறார். இதற்காக அவர் வாரணாசியில் உள்ள பிரபல கடையில் ஆர்டர் கொடுத்துள்ளார்.

திருமணத்தின் போது ஐஸ்வர்யாராய் கட்டுவதற்காக பனாரஸ் பட்டுப்புடவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த மாத இறுதியில் தயா ராகி விடும் என்று கடை உரிமையாளர் ஜலான் தெரி வித்தார். பனாரஸ் லேகன்யா பட்டுப்புடவையின் விலையை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ஆனால் அதன் விலை ரூ.2 லட்சம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

21 புடவைகள்

கடந்த நவம்பர் 27-ந் தேதி அமிதாப்பச்சன் குடும்பத்தினர் வாரணாசி சென்ற போது ரூ.50 ஆயிரம் மதிப்பில் 11 சேலைகளை வாங்கி சென்றனர். அப்போது ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் 21 சேலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அந்த சேலைகள் நேற்று அமிதாப்பச்சன் வீட்டிற்கு பார்சலில் அனுப்பப்பட்டன.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh Bhachan, Benaras, Benares, Marriage, Reception, Sarees, Saris, Silk Saree, Silk Sari, Varanasi | Leave a Comment »

Cho S Ramasamy wants BJP, ADMK & Vijaykanth to form Alliance as Opposition

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

ரஜினிகாந்த் முன்னிலையில் பரபரப்பான பேச்சு; அ.தி.மு.க., பாரதீய ஜனதா, விஜயகாந்த் கூட்டணி: சோ வற்புறுத்தல்

சென்னை, ஜன. 16- சென்னையில் துக்ளக் பத் திரிகையின் 37ம் ஆண்டு விழா நடந்தது.

அத்வானி அவரது

  • மகள் பிரதிபா,
  • நடிகர் ரஜினிகாந்த்,
  • வெங்கையாநாயுடு,
  • நாகேஷ்,
  • மைத்ரேயன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் சோ பேசிய தாவது:-

தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்கள்தான் ஆகியுள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பே பலவாக் குறுதிகள் அளித்தனர். அவற்றை முழுமையாக செய்ய முடியாமல் பகுதி பகுதியாக செய்கிறார்கள்.

2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார் கருணாநிதி இப்போது உள்ளங்கை அளவேனும் தருவேன் என் கிறார்.

இலவச திட்டங்களால் பீகாரில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியவில்லை. அதே போல் இங்கும் திவால் வருமோ என்று தெரிய வில்லை.

சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த முறைகேடு களை நீதிமன்றம் வன்மை யாக கண்டித்துள்ளது. 99வாக்குசாவடிகளுக்கு மறுவாக் குப்பதிவு நடத்த சொல்லி யுள்ளது. தேர்தலின்போது எதிர் கட்சிகள் சொன்ன குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளன.

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்தம் செய்யவில்லை. இதை நான் சொன்னால் இருவரும் சேர்ந்து அணையில் குதிப்போமா என்று அழைப்பார் ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்று வது பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நளினிக்கு கருணை காட் டப்பட்டால் மகிழ்ச்சிதான் என்று கருணாநிதி கூறியுள்ளார். அந்த தண்ட னையை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று தைரியமாக கேட்ட ஒருவர் ஜெயலலிதாதான். அதுவும் வைகோ கூட்டணியில் இருக்கும் போது அவ்வாறு கேட்டு இருக்கிறார்.

தமிழக அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்த ஆட்சி போக வேண்டும் என்றும் நான் கூறவில்லை.

ஆனால் எதிர்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் தற்போ துள்ள கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்று சொல்ல முடியாது. காங்கிரசில் உள்ள த.மா.கா. பிரிவினர் அதி ருப்தியில் உள்ளனர். அது போல் பா.ம.க.வுக்கும் அதி ருப்தி உள்ளது. எனவே எதிர் காலத்தில் எதுவும் நடக் கலாம்.

எதிர் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மாந கராட்சி தேர்தல் முறைகேடு அதோடு முடிந்து விட்டதாக கருதக்கூடாது பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும் பல தொகுதிகளில் அத்தகைய முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.

எனவே தனக்குள்ள செல்வாக்கினால் தனித்து நின்று ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைக்க கூடாது. விஜயகாந்த் தனித்து நின்றால் டெபாசிட் போகும் அவர் மட்டும் ஜெயித்த மாதிரிதான் நிலைமை வரும் இதை இருகட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதா வருவது தான் நல்லது. 3-வது அணி வர வாய்ப்பு இல்லை.

எனவே பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது.

இவ்வாறு சோ பேசினார்.

Posted in ADMK, Advani, AIADMK, Alliance, Bharathiya Janatha Party, BJP, Cho, Cho S Ramasamy, Cong (I), Congress, DMDK, GK Vaasan, Indira Congress, J Jayalalitha, J Jeyalalitha, Opposition, Politics, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, TMC, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

Abishek Bachan & Aiswarya Rai Engagement – Marriage set for Feb 5; Star Gala Reception on Feb 19

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

அடுத்த மாதம் திருமணம்: அபிஷேக்-ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்தது

மும்பை, ஜன.16-

பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வந்தனர். இருவீட்டு பெற்றோ ரும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர். அமிதாப்பச்சன் குடும்பத் தினரின் பல்வேறு நிகழ்ச்சிக ளில் ஐஸ்வர்யாராய் பங்கேற்றார்.

கடந்த நவம்பர் 26-ந் தேதி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதற்கிடையே அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யாராய் திருமண நிச்சயதார்த்தம் மும்பை புறநகரான ஜ×குவில் உள்ள அமிதாப்பச்சன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. ஐஸ்வர்யாராய் கையில் அபிசேக் பச்சன் மோதிரம் அணிவித்தார். குரு பட நிகழ்ச்சிக்காக இருவரும் அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய 1 மணி நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், சமாஜ் வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங், தொழில் அதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது. அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 31 வயது பிறக்கிறது. இதனால் அன்றைய தினம் 33 வயதான ஐஸ்வர்யாராயை திருமணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என்று மற்றொரு தகவல் கூறுகிறது. பிப்ரவரி 19-ந் தேதிக்காக மும்பையில் உள்ள ஹோட்டல் ஹியாத்தில் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சனின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அபிஷேக்-ஐஸ்வர்யா திரு மண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனது குடும்பத்தினர் பலர் இங்கு வரவில்லை. அவர்களுடன் ஆலோசனை செய்யப்படும். இரு வீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்து திருமண தேதியை அறிவிப்போம். எல்லா தகவல்களையும் நிருபர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாது.

குரு படத்தில் அபிஷேக்கின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. நடிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவரை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு அபிஷேக்பச்சன் நிருபர் களிடம் கூறியதாவது:-

எனது திருமணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நானும், ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். திருமண தேதி குறித்து நான் எதுவும் கூற இயலாது.

ஐஸ்வர்யா ஒரு சிறந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அபிஷேக் பச்சனுக்கும், நடிகை கரிஷ்மா கபூருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Anil Ambani, Ash, Betrothal, Engagement, Hyatt, Jaya Bachan, Marriage, Reception | Leave a Comment »

Growing pressure on Ahmadinejad

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

இரானிய அதிபரின் கொள்கை குறித்து கேள்வியெழுப்பும் தீர்மானம்

இரானிய அதிபர் அஹமிதி நிஜாத்
இரானிய அதிபர் அஹமிதி நிஜாத்

இரானிய அதிபர் அஹமிதி நிஜாத் அவர்களை, தனது கொள்கைகள் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க கூறும் முகமாக, அவரை அழைக்க வழி செய்யும் தீர்மானத்திற்காக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் கையொப்பங்களை பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார்கள்.

அவ்வாறு அழைப்பதற்கு தேவைப்படும் 75 கையெழுத்துக்களில் 50 கையெழுத்துகளை பெற்றுள்ளதாக சீர்திருத்த மற்றும் மிதவாத அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

இது, இரானுக்குள்ளேயே அதிபருக்கு எதிராக வளர்ந்து வரும் விமர்சனத்தின் ஒரு நகர்வே என டெஹ்ரானிலுள்ள பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதிபரின் வரவு செலவு திட்டம் குறித்து கவலை வெளியிட்டு, அங்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்கள்.

இரான் அதிபர் கடந்த சில நாட்களாக மேற்கத்திய நாடுகள் மீது கடும்போக்கு கொள்களை கடைபிடித்து வருகிறார் என்றும், அவரது பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை விமர்சித்தும் பல தினசரிகள் தலையங்கங்களை எழுதி வருகின்றன.

Posted in Answer, Ayatollah Ali Khamenei, Budget, Criticism, economic forecasts, Editorials, future oil prices, holocaust, Iran, Mahmoud Ahmadinejad, moderate, Nuclear, parliament, Policy, Politics, President, Pressure, Questions, reformist | Leave a Comment »

Sheikh Hasina vs Khaleda Zia – Bangladesh Politics: Iajuddin Ahmed

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

வங்கதேசத் தேர்தல்

வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் ஃபக்ருதீன் அகமது தலைமையில் புதிய இடைக்கால நடுநிலை அரசு பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டில் அமைதி திரும்பி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு புதிய தேதியை இந்த அரசு விரைவில் அறிவிக்கலாம். அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டியுள்ளது.

வங்கத்தேசத்தை ஆண்டு வந்த காலிதா ஜியா அரசின் பதவிக்காலம் கடந்த அக்டோபரில் முடிவடைந்தது. அப்போதிருந்தே அந்நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. வங்கதேச அரசியல் சட்டப்படி அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அந்த அரசு பதவி விலகி, நடுநிலை அரசு அமைக்கப்பட்டாக வேண்டும். இடைக்கால நடுநிலை அரசின் கீழ்தான் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், வங்கத்தேச அதிபர் இயாஜுதின் அகமது கடந்த அக்டோபரில் தம்மையே அந்த நடுநிலை அரசின் தலைவராக அறிவித்துக் கொண்டார். இயாஜுதின் அதுவரை பிரதமராக இருந்த காலிதா ஜியாவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆகவே அவர் தலைமையிலான அரசை நடுநிலை அரசாக ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான ஷேக் ஹசீனா அறிவித்தார். ஜன.22-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேர்தலில் பங்கு கொள்ள மாட்டோம் என்று ஹசீனா தலைமையிலான 15 கட்சிகள் கூட்டணி அறிவித்தது. அத்துடன் போராட்டத்தையும் துவக்கியது.

வாக்காளர் பட்டியலிலிருந்து போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிக் கூட்டணி கோரியது.

கடந்த இரண்டரை மாதங்களாக எதிர்க்கட்சிக் கூட்டணியினர் வேலை நிறுத்தம், முற்றுகைப் போராட்டம் என அடுத்தடுத்து கிளர்ச்சிகளை நடத்தினர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினரிடையே நடந்த மோதலில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

தேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன், கனடா முதலான நாடுகள் வங்கதேச அதிபர் மீது நிர்பந்தம் செலுத்தின. ஆரம்பத்தில் அசைந்து கொடுக்காமல் இருந்த அதிபர், நடுநிலை அரசின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அடுத்து, நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தேர்தல் ஒத்திப் போடப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்துதான் புதிய நடுநிலை அரசு பதவி ஏற்றுள்ளது.

ஷேக் ஹசீனாவின் கோரிக்கைகளில் பலவும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் அமைதி திரும்பி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் விவேகம் காட்டி, தேர்தல்கள் அமைதியாக நடைபெற ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய நிலைமையை ஷேக் ஹசீனா வரவேற்றுள்ளார். இதுவரை பிரதமராக இருந்த காலிதா ஜியா, மேலை நாடுகள் வீணாக வங்கதேச அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கதேச அரசியல் சட்டப்படி முந்தைய அரசின் பதவிக்காலம் முடிந்ததிலிருந்து அதாவது அக்டோபரிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஜன.22-ம் தேதி நடப்பதாக இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த அரசியல் சட்டவிதி எவ்விதம் சமாளிக்கப்படும் என்று தெரியவில்லை.

வங்கதேச நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வந்தது. சாதாரண நாள்களிலேயே அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் கள்ளக் குடியேற்றம் நடைபெறுவது உண்டு. ஆகவே அங்கு தோன்றிய குழப்ப நிலை காரணமாக கள்ளக் குடியேற்றம் அதிகரிக்கலாம் என்ற கருத்தில் இந்தியாவின் எல்லைகளில் ரோந்து அதிகரிக்கப்பட்டது. நல்லவேளையாக இப்போது நிலைமை மாறியுள்ளது.

Posted in Bangladesh, Bangladesh Nationalist Party, Fakhruddin Ahmed, Fakrudhin Ahmad, Iajuddin Ahmed, Jamiruddin Sarkar, Khaleda Zia, Politics, Rezakul Haider Chowdhury, Sheikh Hasina, Tareq Rahman | Leave a Comment »

SC flays legislature for misuse of Ninth Schedule

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

முக்கிய தீர்ப்புகள்

உச்ச நீதிமன்றம் கடந்த 3 நாள்களில் அடுத்தடுத்து 2 முக்கியமான தீர்ப்புகளை அளித்துள்ளது. அவை- நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களின் அதிகாரங்கள் தொடர்புடையவை.

இவற்றில் அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணை தொடர்பான தீர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சட்டத் திருத்தங்களை நிறைவேற்றி அதை 9-வது அட்டவணையில் சேர்ப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச், அரசியல் சட்டத்தின் 9- வது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்பைத் தகர்ப்பதாக இருந்தால், அவை நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவையே என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசியல் சட்டத்தின் 14,19,20 மற்றும் 21- வது பிரிவுகளில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறும் வகையிலான சட்டங்கள் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவற்றை நீதிமன்றம் விசாரிக்க முடியும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது 1951ல் இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு முக்கியச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு 9-வது அட்டவணை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. சில சட்டங்கள், குறிப்பாக ஜமீன்தாரி முறை நீக்கப்பட்ட பிறகு நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், நீதிமன்ற பரிசீலனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும் என்று கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை இந்த அட்டவணையில் 284 சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 30 சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களின் பரிசீலனையில் உள்ளன.

1974க்குப் பிறகு 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அதைப் பரிசீலிக்க 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9-வது அட்டவணையில் இடம் பெறும் சட்டங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாக இருந்தாலும் கூட அவற்றை விசாரிக்கவோ, பரிசீலிக்கவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் அட்டவணையின் குறிப்பிடத்தக்க அம்சம். இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்ட அனைத்து சட்டங்களுக்கும் அரசியல் சட்டத்தின் 31-பி பிரிவு ஒட்டுமொத்தமாக ஆய்வுக்கு உட்படாத பாதுகாப்பு அளிக்கிறது. தற்போதைய தீர்ப்பின் மூலம் இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தமும் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அப்பாற்பட்டுத்தான் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து, 9- வது அட்டவணையில் அது சேர்க்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து முடிவு தெரிவிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழுவின் ஆய்வை பரிசீலனை செய்த பிறகு உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும்.

மற்றொன்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் எடுத்த முடிவு சரியானதுதான் என்று 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.

எத்தகைய சட்டத் திருத்தங்கள் செய்தாலும் பல்வேறு அம்சங்களையும் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என்பதையே இந்தத் தீர்ப்புகள் உணர்த்துகின்றன.

Posted in 9th Schedule, Article 31B, Constitution Bench, constitutional amendment, Fundamental Rights, IX Schedule, Jawaharlal Nehru, Kesavananda Bharati, Law, Ninth Schedule, Order, Supreme Court, Supreme Court of India, YK Sabharwal | Leave a Comment »

Right to Information Act – Backgrounders, Law details, Implementation Procedure

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

தகவல் உரிமைச் சட்டம் – மக்களின் ஆயுதம்

பி.இசக்கிமுத்து

தகவல் உரிமைச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான சட்டமாகும்.

அரசு, பொது நிறுவனங்களின் நடவடிக்கைகளில் வெளிப்படையான தன்மை வேண்டும். அனைத்து செயல்பாடுகளும் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற அடிப்படைதான் இச்சட்டத்தின் நோக்கமாகும்.

இந்த சட்டத்தின் மூலம் ஒவ்வொரு பொது நிறுவனமும் அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்களும் அதன் கட்டமைப்பு, செயல்பாடுகள், அலுவலர்கள், அவர்களுக்குரிய பணி, சம்பளம் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். தகவலை பொது மக்களுக்குத் தெரிவிக்க பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலரை நியமனம் செய்தல் வேண்டும்.

எந்த வடிவத்தில் தகவலைப் பெறுவது: தகவல் உரிமை என்பது ஆவணங்களை, கோப்புகளை, செய்யப்பட்ட வேலைகளை ஆய்வு செய்தல், ஆவணங்கள், கோப்புகளை நகல் எடுத்தல், அவற்றை டேப், கம்ப்யூட்டர் பிளாப்பி, சிடியில் பெறுவது உள்ளிட்டதாகும்.

மேலும் அலுவலர்கள், அதிகாரியின் பொறுப்புகள், சம்பளம், அலுவலக நடைமுறைகள், பணிகளை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்கள், பணிகளை செய்வதற்கான விதிகள், ஒழுங்குமுறை விதிகள், திட்டங்களை உருவாக்குவது அவற்றை அமலாக்குவது, கமிட்டிகள், விவரம், பட்ஜெட் ஒதுக்கீடுகள், திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது அதன் பயனாளிகள் யார், யார், பொது மக்களைப் பாதிக்கும் கொள்கை குறித்து அலுவலக உத்தரவு மற்றும் நிர்வாக நடவடிக்கைக்கான காரணம் கூறுதல் போன்ற தகவல்களை நாம் கோரிப் பெற உரிமை படைத்தவர்கள் ஆவோம்.

தகவலைப் பெறும் வழிமுறை: எழுத்துபூர்வமாக கடிதம் மூலமும், மின் அஞ்சல் மூலமும் கேட்கலாம். தகவல்களைப் பெற விண்ணப்பத்தில் காரணம் கூற வேண்டியதில்லை.

தகவல் கோரும் விண்ணப்பம் மீது நடவடிக்கை: பொது நிறுவன தகவல் அதிகாரி விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாள்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும்.

தனி மனிதனின் உயிர், சுதந்திரம், மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால் 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.

மேலே கூறப்பட்ட கால எல்லைக்குப் பிறகு பதில் அனுப்பினால் கட்டணம் திரும்ப வழங்கப்பட வேண்டும். பதில் அனுப்பாவிடில் பதில் மறுக்கப்பட்டதாக கருதப்படும்.

தகவல் மறுக்கப்பட்டால் அதற்கான காரணம் கூறப்பட வேண்டும்.

மேல்முறையீடு: 30 நாள்களுக்குள் பதில் அனுப்பப்படாவிட்டால், அல்லது தகவல் மறுக்கப்பட்டால், முழுமையான தகவல் அளிக்கப்படாவிட்டால், தவறான தகவல் அளிக்கப்பட்டால், அப்பொது நிறுவனத்தின் மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்தல் வேண்டும். காரணம் கூறி 30 நாள்களுக்குப் பிறகும் மேல் முறையீடு செய்யலாம்.

மேல்முறையீட்டு அலுவலர் 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

மேல்முறையீடு மீது பதில் இல்லை என்றால், முழுமையான பதில் அளிக்கப்படாவிட்டால் குறைவான, தவறான தகவல் அளிக்கப்பட்டாலும் அதன் மீது மாநில நிறுவனமாக இருப்பின் மாநில தகவல் கமிஷனுக்கும், மத்திய அரசு நிறுவனமாக இருப்பின் மத்திய தகவல் கமிஷனுக்கும் 2-வது மேல்முறையீடு செய்யலாம். மாநில, மத்திய தகவல் கமிஷன் பிறப்பிக்கும் உத்தரவு இறுதியானதாகும்.

காலதாமதமாக தகவல் கிடைத்தமையால் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு கோரலாம்.

சட்டத்தின் மேலோங்கும் தன்மை: இதர அனைத்துச் சட்டங்களைவிட தகவல் உரிமைச் சட்டம் தான் மேலோங்கி நிற்கும். அதாவது குறிப்பிட்ட எந்த சட்டத்தின் கீழும் தகவல் அளிக்க, மறுக்க வழி வகை இருந்தால் அந்தச் சட்டம் செயல் இழந்து தகவல் உரிமைச் சட்டம் மேலோங்கி நிற்கும்.

விதிவிலக்கு: இச்சட்டத்துக்கு பிற சட்டங்களை விட மேலோங்கும் தன்மை இருந்தபோதிலும் நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகள் மீது தகவல் கோர இயலாது.

இந்திய நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, வர்த்தக ரகசியம், வியாபார போட்டித் தன்மையைப் பாதிக்கும் தகவல்கள் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்கள் எந்த தனி நபர் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் தகவல்கள், கிரிமினல் வழக்கு விசாரணைக்கு இடையூறான தகவல்கள், அமைச்சரவை கூட்ட முடிவுகள், தனி நபர் தகவல்கள், 20 ஆண்டுக்கு முற்பட்ட தகவல்கள் ஆகியவற்றுக்கு அரசின் பாதுகாப்புத் துறை, ரகசிய புலனாய்வுத் துறை செயல்பாடுகளுக்கும் இந்த சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.

அதே சமயம் இத்துறையின் மனித உரிமை மீறல், ஊழல் குறித்த விவரங்களைப் பெற முடியும்.

இச்சட்டத்தைப் பயன்படுத்தி விவரம் கேட்பதன் மூலம் ரேஷன் கார்டு, பட்டா கிடைக்காதவர்கள், அவற்றைப் பெற முடியும். அரசிடம் நிலுவையில் உள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டத்தின் பலன்கள், ஆதரவற்ற விதவைப் பெண்கள், முதியோர் ஓய்வூதியத்தைப் பெற இயலும்.

முடங்கிக் கிடக்கும் பல திட்டங்களை உயிர்ப்பிக்க முடியும். சுகாதாரச் சீர்கேடுகள் மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். அரசிடம் நிலுவையில் உள்ள பல கோப்புகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவும் அதன் தற்போதைய நிலைமையை தெரிந்து கொள்ளவும் விசாரணை அறிக்கைகளைப் பெறவும் இயலும்.

அரசு அதிகாரிகள் நேர்மையாகச் செயல்பட இச் சட்டம் தூண்டுகோலாக இருக்கும். இச்சட்டத்தின் மூலம் நாட்டில் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகளை முழுமையாக ஒழிக்க இயலும் என்று கருத முடியாது. ஆனால் அதனை அம்பலப்படுத்தி சீர்திருத்த இந்த சட்டம் உதவும்.

அரசுத் துறைகளில் காலம் தாழ்த்தப்படும் மக்கள் தேவைகளை விரைவுபடுத்தி நிவாரணம் பெற இயலும்.

உண்மையில் இச்சட்டம் பயனுள்ள ஒரு சட்டமாகும். இச்சட்டம் மக்களின் ஆயுதமாக மாறவும் உரிய முறையில் பயன்படுத்தவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

(கட்டுரையாளர், தூத்துக்குடி மாவட்டக் குழு சிஐடியு இணைச் செயலர்).

Posted in CITU, Isakki Muthu, Isakkimuthu, Law, Order, Right To Information, RTI, Tuticorin | Leave a Comment »

Justice KG Balakrishnan sworn-in as Chief Justice of India

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கே.ஜி. பாலகிருஷ்ணன்

புது தில்லி, ஜன. 15: உச்ச நீதிமன்றத்தின் 37-வது தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் (61) பதவியேற்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவருக்குப் பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்துவைத்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்கும் முதல் தலித் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2010 மே 12-ம் தேதி வரை இப்பதவி வகிப்பார். சமீபத்திய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பதவியில் இருக்கப் போவது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் பிறந்து, சட்டம் பயின்று வழக்கறிஞராகத் தொழில் தொடங்கி பிறகு படிப்படியாக உயர்ந்து மாவட்ட முன்சீப், உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாடு, குஜராத் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியானவர் பாலகிருஷ்ணன். நண்பர்கள் இவரை பாலா என்றே செல்லமாக அழைப்பர்.

பதவியேற்பு விழாவைக் காண அவருடைய தாயார் கே.எம். சாரதா சக்கர நாற்காலியில் வந்திருந்தார். பாலகிருஷ்ணனின் மனைவி நிர்மலாவும் உடன் இருந்தார்.

குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், ஏ.கே. அந்தோனி, லாலு பிரசாத், ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், சுசீல்குமார் ஷிண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், மீரா குமார், கபில் சிபல், ஓய்வுபெறும் கே.என். சபர்வால் மற்றும் ஏற்கெனவே ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என். சிங், ஏ.எம். அகமதி, ஏ.எஸ். ஆனந்த், வி.என். கரே, ஆர்.சி. லஹோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கைக் குறிப்பு: கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தின் தாலயோலபரம்பு கிராமத்தில் 1945 மே 12-ம் தேதி பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜா சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கொச்சியில் 1968 மார்ச் 16-ம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பணியைத் தொடங்கினார்.

1973 ஜனவரி 10-ல் கேரள நீதித்துறையில் முன்சீஃபாக நியமிக்கப்பட்டார். 1982 ஜூலை 23-ல் உதவி செஷன்ஸ் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். பிறகு கேரள உயர் நீதிமன்றத்தின் துணை பதிவாளராகப் பணியாற்றினார். 1985 செப்டம்பர் 26-ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1986 ஜூலை 11-ல் நிரந்தரமாக்கப்பட்டார்.

குஜராத் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1998 ஜூலை 16-ல் நியமிக்கப்பட்டார்.

பிறகு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1999 செப்டம்பர் 9-ல் நியமிக்கப்பட்டார்.

நீதித்துறை- நாடாளுமன்றம் இடையே நெருங்கிய உறவு ஆபத்தானது: ஓய்வுபெறும் தலைமை நீதிபதி சபர்வால் கருத்து

புதுதில்லி, ஜன. 14: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் நீதித்துறைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். நீதிமன்றங்கள் சுதந்திரமாகத் தீர்ப்பு வழங்குவதைப் பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்கே. சபர்வால்.

சனிக்கிழமையுடன் பதவி ஓய்வு பெறும் நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் சபர்வால். நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். விவரம்:

தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், பல பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு கண்டிருக்கிறேன். திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்.

நீதி வழங்குவதில் காலதாமதம் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. அதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். கீழ் நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பத்து ஆண்டுகள் கூட தேங்கிக் கிடக்கின்றன. இருபது ஆண்டுகளைக் கடந்து, நிலுவையில் உள்ள வழக்குகளும் இருக்கின்றன. அதனால், நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோருக்கு எதிராக உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்குக் கூட கடிதம் எழுதியிருக்கிறேன்.

பிறழ் சாட்சிகளால் வழக்குகள் மேலும் காலதாமதமடைவதைத் தடுக்கும் வகையில், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தங்களது முந்தைய நிலையிலிருந்து மாறும் சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

வாக்குமூலங்களை ஒளி, ஒலிப்பதிவு செய்ய கூடுதல் மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட வேண்டும். நீதிமன்றங்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும்.

நீதித்துறைக்கு நிதி சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், நீதித்துறை முழுத்திறமையுடன் செயல்பட முடியும். வேறு துறைகளில் ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொண்டு, நீதித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள கே.ஜி. பாலகிருஷ்ணன், மிகவும் திறமையான நீதிபதி. ஏற்கெனவே துவக்கப்பட்ட திட்டங்களை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

நீதித்துறையில் கறுப்பு ஆடுகள்: நீதித்துறையில் ஊழல் இன்னொரு கவலை தரக்கூடிய விஷயம். எல்லோர் மீதும் களங்கம் இல்லாவிட்டாலும், ஒரு சில கறுப்பு ஆடுகளும் உள்ளன. அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதாகக் கருத்து நிலவுகிறது. ஒவ்வொரு துறையும் தங்கள் அதிகார வரம்புக்கு உள்பட்டு பணியாற்றினால் எந்த மோதலும் வர வாய்ப்பில்லை. தற்போதைய நிலையில் எந்த உரசலும் இருப்பதாக நான் கருதவில்லை.

நீதிபதிகள் நியமனத்தில் தற்போது வெளிப்படையான அணுகுமுறை உள்ளது.

ஊடகங்கள், ஊழலை அம்பலப்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில், அது நீதிபதிகளின் தீர்ப்பைப் பாதிக்கும் வகையில் இருந்தால், அதைவிட மோசமானது ஏதும் இருக்க முடியாது.

எந்த ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் சட்ட உதவி மறுக்கப்படக்கூடாது. வழக்கறிஞர்கள் தனிப்பட்ட கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல், யாரும் சட்ட உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தக்கூடாது என்ற உணர்வுடன் தொழிலை மட்டும் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் சபர்வால்.

Posted in APJ Abdul Kalam, Biography, Biosketch, Chief Justice of India, Corruption, Dalit, election commission, Ernakulam, Government Law College, Judge, Judiciary, Jury, Justice, K J Gopinathan, Kerala, Kerala High Court, KG Balakrishnan, KM Saradha, Konakuppakattil Gopinathan Balakrishnan, Kottayam, Law, Legislature, Lifesketch, Newsmakers, Nirmala, Order, people, Supreme Court | Leave a Comment »

AIIMS student failed due to Director Venugopal’s Vindictive action

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

“எய்ம்ஸ்’ மாணவர் அமைச்சர் அன்புமணியிடம் புகார்: தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது பாரபட்சம் என புகார் கூறியதால் தேர்வில் தோல்வி

புதுதில்லி, ஜன. 15: தில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இறுதி ஆண்டு படித்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் அஜய் குமார் சிங், இறுதித் தேர்வில் தம்மை வேண்டும் என்றே நிர்வாகத்தினர் தோல்வி அடையச் செய்துவிட்டதாக புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரும். எய்ம்ஸ் தலைவருமான அன்புமணிக்கும், யு.ஜி.சி. தலைவர் தொராட்டுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தாம் வெளிப்படையாகப் புகார் கூறியதால் தம்மை தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஆர்.கே.தேவ்ரால், அஜய் குமார் சிங்குக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தேர்வில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதுவதாக அது கருதப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அஜய் குமார் சிங், எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலுக்கும் டீன் ஆர்.சி.டேகாவுக்கும் மற்றொரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மறு தேர்வு டீன் தலைமையில் நடைபெற வேண்டும் என்றும் விடைத்தாள் பாரபட்சமற்ற குழு திருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக பிரச்சினையை எழுப்பினார் அஜய் குமார் சிங். இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை வேண்டும் என்றே தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டனர்’

என்று மருத்துவ விஞ்ஞானிகள் முற்போக்கு அமைப்பைச் சேர்ந்த ஆர்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

மறுதேர்வு நடத்த நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், தேர்வு அதிகாரிகள் பற்றி சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் பிரசாத் குறிப்பிட்டார்.

“எனினும் அஜய் குமார் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படும். இதற்கென தனி தேர்வு குழு அமைக்கப்படும். இது தொடர்பாக இயக்குநருக்கு பரிந்துரைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு வெளியிடப்படும்’ என்று டீன் டேகா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அஜய் குமார் சிங் இதற்கு முன்பு நடந்துள்ள தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். அப்படியிருக்கையில் இறுதித் தேர்வில் 3 பாடங்களில் அவர் தோல்வி அடைந்ததாக தெரிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.கே.பிரசாத்.

மறுதேர்வு நடந்தாலும் மீண்டும் என்னை தோல்வி அடையச் செய்துவிடுவார்கள். எனவே புதிதாக தேர்வு அதிகாரிகளை நியமித்து, புதிய பேராசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த அனுமதிக்க வேண்டும் என்கிறார் அஜய்குமார் சிங்.

குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மருந்துகள் ஆகிய 3 பாடங்களில் சிங் தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17-ம்தேதி சிங் உள்பட வேறு 7 பேருக்கும் சேர்த்து மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த 7 பேரில் 6 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

Posted in AIIMS, Ajay Kumar Singh, All-India Institute of Medical Sciences, Anbumani, Anbumani Ramados, anti-reservation, Dr. P. Venugopal, Education, Exam, fail, floating reservation, Progressive Medicos and Scientist Forum, Ramadas, RC Degha, Reservation, RK Devral, RK Prasad, SC/ST, Student, UGC, Venugopal | Leave a Comment »