சுயதொழில் சிந்தனை போனதெங்கே!
ஜோதி மாரியப்பன்
அண்மையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்திருந்த கிராம நிர்வாக அலுவலர் பணி தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களை வாங்க, ஏராளமானோர் அந்த படிவங்களை விற்பனை செய்த அஞ்சல் அலுவலக வாயிலில் பலமணிநேரம், நீண்ட வரிசையில், கால்கடுக்க காத்திருந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு இறுதியில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் காலியாக இருந்த 500 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. இதில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான 2,500 காலியிடங்களுக்கு தேர்வு அறிவித்த சில நாள்களிலேயே 5 லட்சம் விண்ணப்பப் படிவங்கள் விற்றுத் தீர்ந்து விட்டதாக அனைத்து நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாயின.
அத்துடன் சில நகரங்களில் விண்ணப்பப் படிவங்கள் வாங்க வந்த கூட்டத்தை காவல் துறையினர் தடியடி நடத்தி ஒழுங்குபடுத்தினர் என்ற செய்தியும் வெளியானது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது. இத்தகைய சூழ்நிலையில் விண்ணப்பப் படிவங்களின் விற்பனை 10 லட்சத்தைகூட தாண்டியிருக்கலாம்!
அரசுப் பணியில் சேர்ந்தால் ஓய்வுபெறும் வரையில் ஓரளவு நிம்மதியுடன் இருக்கலாம் என்ற எண்ணம் (குக்கிராமத்த்தைச் சேர்ந்தவர்கள் முதல் நகரங்களில் வசிப்பவர்கள் வரை) அனைவரது மனத்திலும் ஆழமாக, அழுத்தமாகப் பதிந்துவிட்டது. இத்தகைய எண்ணத் தூண்டுதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஒவ்வொரு தேர்தலின்போதும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை அளிப்போம்; வேலையில்லாத் திண்டாட்டத்தை அடியோடு ஒழிப்போம்’ என அரசியல்கட்சித் தலைவர்கள் முழக்கமிடுவது வாடிக்கையாகி விட்டது.
அத்துடன் தங்களது கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் தவறாமல் அதைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் தங்களது வாக்குறுதியை “காற்றில் கரைந்த கற்பூரம்போல மறந்து’ (மறைத்தும்) விடுகின்றனர்.
உலகில் விவசாயத்தைப்போல ஒரு மகத்தான, மகத்துவமான சுயதொழில் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது. ஏராளமான மக்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அளித்துவரும் மகத்தான தொழில் வேளாண்மையே.
ஆனால் வேளாண்மையை காலம் காலமாய் செய்து வந்த கிராம மக்களே, பல்வேறு காரணங்களால் வெறுத்து ஒதுக்கி விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை தலைவிரித்தாடும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை!
வேளாண்மையைப் போன்று பல்வேறு சுயதொழில் வாய்ப்புகள் இருந்தும் அரசு வேலை மீது மட்டும் கண்மூடித்தனமாக இன்றைய இளைய தலைமுறையினர் நாட்டம் கொள்வது ஏன்? சுயமாகத் தொழில் தொடங்க அவர்கள் ஏன் முன்வருவதில்லை? இத்தகைய கேள்வி பலருக்கு எழுவதுண்டு.
இதற்கான விடை, இன்றைய இளைஞர்களிடம் போதுமான தன்னம்பிக்கை இல்லாததுதான். தந்தை சுயதொழில் புரிந்து நன்றாகச் சம்பாதித்திருந்தாலும் தான் மகனை, மகளை அரசுப் பணியில் அமர்த்தவே அதிகமாய் விரும்புகிறார். இதற்கு அடிப்படைக் காரணம் சுயதொழில் பற்றிய உண்மையான கருத்துகள் மக்களிடம் முழுமையாக சென்றடையாததே.
சுயதொழில் பற்றிய நற்சிந்தனைகளை, பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத் திட்டங்களில் சேர்க்காததும் மற்றொரு காரணமாகும். மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் அடங்கிய பாடத்திட்டங்கள் அதிக அளவில் இடம் பெறுவதில்லை.
இன்றைக்குப் பல பட்டதாரிகள் தாங்கள் சான்றிதழை வெறும் காகிதங்களாக மட்டுமே பார்க்கின்ற, மதிக்கின்ற சூழ்நிலையில் உள்ளனர். இன்னும் சிலர் தனியார் நிறுவனங்களில் தாங்கள் பயின்ற கல்விக்கும் பார்க்கின்ற பணிக்கும் குண்டூசியளவு கூட சம்பந்தமில்லாமல் அரைகுறை மனத்தோடு வெறுப்போடு வயிற்றுப்பிழைப்பை மனத்திற்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்களது மனிப்பான்மையை மாற்றிக்கொண்டு துணிவுடன் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும். இத்தகைய இளைஞர்களுக்கு சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்த அரசும், பிற தனியார் சமூகத் தொண்டு நிறுவனங்களும் வழிவகை செய்ய வேண்டும்.
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட வேண்டும்.
மேலும் சிறு தொழில் புரிவோரை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வப்போது அரசு சலுகைகளை வழங்க வேண்டும்.
சுயதொழிலால் வேலையில்லாத் திண்டாட்டம் அகலும். நாடும் மக்களும் வளம் பெறுவது நிச்சயம்.