எரிவதை எடுத்தால் பொங்குவது நிற்கும்
சமையல் எரிவாயு, பொதுவிநியோக மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு அளித்துவரும் மானியத்தை ஏழைகளுக்கு மட்டும் தருவது பற்றி மத்திய அரசு யோசித்து வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மண்ணெண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ.15 வீதம் 118 லட்சம் கிலோ லிட்டருக்கு ரூ. 17,700 கோடி மானியம் அளிக்கப்படுகிறது. அதேபோன்று, வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.150 வீதம் 74.42 கோடி சிலிண்டர்களுக்கு ரூ.11,163 கோடி மானியம் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் ரூ.27,863 கோடி. இதைப் பெரும் சுமையாக மத்திய அரசு கருதுவதில் வியப்பில்லை.
ஆனால், இவற்றின் விநியோகத்தில் நிலவும் முறைகேடுகளைத் தடுத்தாலே மானியச் செலவு பாதியாகக் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை நிலை. வீட்டுச் சமையலுக்காக விலை குறைத்து விற்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் முறைகேடாக, வணிகப் பயன்பாட்டுக்கு திசை திருப்பப்படுகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து வணிக சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றிக்கொடுக்கும் “”சமூகவிரோத குடிசைத் தொழில்” பரவலாக நடக்கிறது. பொது விநியோக மண்ணெண்ணெயும் தொழிற்கூடங்களுக்கு கூடுதல் விலையில் விற்கப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஒரு நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 21 நாள் இடைவெளிக்குப் பிறகுதான் தர வேண்டும் என்பது எண்ணெய் நிறுவனத்தின் நிபந்தனை. ஆனால் நுகர்வோருக்கே தெரியாமல் அவரது கணக்கில் ஒவ்வொரு 21 நாளுக்கும் ஒரு சிலிண்டரை வைத்து கள்ளச் சந்தைக்கு அனுப்பப்படும் முறைகேடுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்த முறைகேடுகளைத் தடுக்க முடியாத மத்திய அரசு, தங்கள் நிதியை வீணடிக்காமல், மானியத்தை ஏழைகளுக்கு மட்டும் கொடுத்து, நிதிச் சுமையை குறைத்துக் கொள்ள முயல்கிறது.
ஏழைகள் என்பதை வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் என்று வைத்துக் கொண்டால், அனைத்துக் குடும்பங்களுமே சமையல் எரிவாயு மானியத்தை இழக்க நேரிடும். மண்ணெண்ணெய் பயன்படுத்துவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் மானியத்தை இழப்பர்.
மத்திய அரசு இத்தகைய முடிவு எடுக்கும்பட்சத்தில் பாதிக்கப்படுவோர் நடுத்தர வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள்தான். 21 நாளைக்கு ஒரு சிலிண்டர் என்பதை 30 நாளைக்கு ஒருமுறை என்று மாற்றலாம். அல்லது, நியாயவிலைக் கடைகளில் குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப சர்க்கரை அளவைத் தீர்மானிப்பது போன்று, சமையல் எரிவாயு பயன்பாட்டிலும் அங்கத்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப சிலிண்டர்கள் எண்ணிக்கையை முறைப்படுத்தலாம்.
முறைகேடுகளில் ஈடுபடும் காஸ் ஏஜென்ஸி, மண்ணெண்ணெய் நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்யும் தீவிர நடவடிக்கை நடைமுறையில் இருந்தால், வணிக வளாகங்களுக்கு சமையல் எரிவாயு செல்வது நின்றுவிடும்.
ஒரு காஸ் ஏஜென்ஸிக்கு 200 குடும்பங்களுக்கு மேல் அனுமதிப்பதை தவிர்த்து, மீதமுள்ள நுகர்வோருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகத்தை நடத்தலாம். இவற்றால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.
மக்களுக்காக தரப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, கொள்ளை லாபம் சம்பாதிக்கிற சிலரைத் தண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் வழி காணாமல், மானியத்தை நிறுத்துவது நியாயமல்ல.
வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் பொதுவிநியோக மண்ணெண்ணெய் பயன்பாட்டிலும் முறைகேடுகளைச் செய்வோர், நிச்சயமாக, மக்கள் அல்ல. ஆனால் மானியத்தை ரத்து செய்தால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமே.