SRG Sambhandham & SRG Rajanna – December Carnatic Music Season Special by Dinamani Kadhir
Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007
இசை: வாக்கு சுத்தம்! வாசிப்பு சுத்தம்!
ரவிக்குமார்
செம்பனார் கோவில் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம், எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா
“”சென்னையில் சபாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், எங்களைப் போன்ற நாகசுரம் வாசிக்கும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகின்றது. சென்னையில் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட சபாக்களில், நாகசுர இசைக்கு மட்டுமே முக்கியமளித்து, அதை வாசிக்கும் கலைஞர்களுக்கு தனிக் கச்சேரி செய்யும் அந்தஸ்த்தை அளித்து, அவர்களை மேடையேற்றி அழகு பார்க்கும் சபாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மீதி சபாக்களில் எல்லாம் “மங்கள இசை’ என்று பெருமைப்படுத்தி நாகசுர இசைக் கலைஞர்களை கெüரவமாக ஒதுக்கிவிடும் நிலைதான் தற்போது அதிகம் நடந்துகொண்டிருக்கின்றது…”
– நாகசுரக் கலைஞர்களுக்கு தற்போது உள்ள நெருக்கடி குறித்து இப்படி நம்மிடம் வேதனைப்பட்டவர்கள் யார் தெரியுமா? இசை உலகில் “செம்பனார் கோவில் சகோதரர்கள்’ என்று புகழப்படும் மிகப் பெரிய இசைப் பாரம்பரியத்தில் வந்த எஸ்.ஆர்.ஜி. சம்பந்தமும், எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணாவும்.
ராஜரத்னா போன்ற உயரிய விருதுகளை வென்றிருக்கும் இந்தச் சகோதரர்களுக்கு சமீபத்தில், “வலையப்பட்டி காஷ்யப் நாதாலயா சபா’ “மதுரை சோமு நினைவு விருதை’ வழங்கி கெüரவித்தது. மூத்த நாகசுர இசைக் கலைஞர்களான அவர்களிடம், “செம்பனார் கோவில் பாணி’யின் முக்கியத்துவத்தைப் பற்றியும், இந்தத் துறையில் சாதிக்கத் துடிக்க நினைப்பவர்கள் செய்யவேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? என்பது பற்றியும் கேட்டோம்.
“”எங்களுக்குத் தெரிந்து பல்லவி வைத்தியநாதப் பிள்ளை, செம்பனார் கோவில் ராமசாமிப் பிள்ளை, எங்கள் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளை, அவர்களுக்கு அடுத்து நாங்கள் நான்காவது தலைமுறை. எங்களுக்கு அடுத்து எங்களின் பிள்ளைகள் வசந்தகுமார், மோகன்தாஸ் ஐந்தாவது தலைமுறையாக நாகசுரம் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரே பரம்பரை எங்களுடையதுதான்.
நாகசுரத்தில் ரத்திமேளமாக முதன்முதலாக வாசித்தது, எங்களின் தாத்தா ராமசாமிப் பிள்ளைதான். இந்த முறையில் வாசிக்கும் முறை, எங்கள் செம்பனார் கோவில் பாணியின் தனிச்சிறப்பு. கொலம்பியா நிறுவனம் வெளியிட்ட இசைத் தட்டில் எங்களின் தாத்தா ராமசாமிப் பிள்ளைதான் முதன்முதலாக நாகசுர இசையை பதிவு செய்தார். நாகசுரம் வாசித்தே முதன் முதலாக வருமான வரி கட்டியவர் அவர். இந்தப் பரம்பரையில் வந்த நாங்களும் ஜெர்மன் கலாசார தூதரகத்துக்காக “சம்பிரதாயா’ என்னும் பொது தலைப்பின் கீழ், திருக்கல்யாணம், திருவீதி புறப்பாடு உட்பட திருமணங்களின் போது எந்தெந்த சடங்கு நடக்கும்போது என்ன மாதிரியான இசையை வாசிக்க வேண்டும் என்பதை பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறோம். இசையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இன்றைக்கும் அது ஓர் ஆவணமாக இருக்கின்றது.
முன்பெல்லாம் கோவில் திருவிழாக்கள் நடக்கும் எல்லா நாட்களிலும் நாகசுரக் கச்சேரிகள் விடிய விடிய களை கட்டும். இப்போது அப்படியில்லை. திருமண வரவேற்புகளுக்கு நாகசுரக் கச்சேரிகளை வைத்த காலம் ஒன்று இருந்தது. இப்போது அந்த இடத்தை மெல்லிசைக் குழுக்கள் பிடித்துக்கொண்டன. டி.வி., சினிமா உலகம் நாகசுரத்திற்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை.
பெரும்பாலான திருமண வேலைகள் இன்றைக்கு “கான்ட்ராக்ட்’டர்கள் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் நல்ல திறமையுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருமளவில் பறிபோகின்றது. அரசு விழாக்களில் “மங்கள இசை’யை வைக்கவேண்டும் என்று அரசாணையே இருக்கிறது. நிறைய அரசு விழாக்களில் இந்த ஆணை கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. இந்த நிலை மாறவேண்டும்.
நேரம் தவறாமை, தனிமனித ஒழுக்கம் இந்தத் துறையில் பிரகாசிக்க விரும்புபவர்களுக்கு அவசியம் இருக்கவேண்டிய ஒன்று. பம்பாய் சபாவில் ஒருமுறை கச்சேரி செய்துவிட்டு, அங்கிருந்து புணேயில் ஒரு கச்சேரி செய்துவிட்டு குறிப்பிட்ட ஒரு ரயிலைப் பிடித்தால்தான், மாயவரத்தில் ஏற்கனவே ஒத்துக்கொண்ட ஒரு கல்யாணக் கச்சேரிக்கு குறித்த நேரத்தில் வந்து சேரமுடியும் என்ற நிலை. அந்தநேரத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்த ஒரு முக்கியப் பிரமுகருக்கு வரவேற்பு அளிக்க வாசிக்கவேண்டும் என்று எங்களை அழைத்தனர். நாங்கள் முடியவே முடியாது என்று கூறி, குறிப்பிட்ட அந்த ரயிலைப் பிடித்து வெகு சாதாரண ஒரு கல்யாணக் கச்சேரிக்கு வாசித்தோம். இந்தத் தொழிலில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும். நாங்கள் அப்படித்தான் காப்பாற்றினோம். இந்த வாக்குச் சுத்தம்தான் எங்களை பல சமஸ்தானங்களிலும், அரண்மனைகளிலும் வாசிக்கவைத்தது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் வாசித்தது மறக்கமுடியாத அனுபவம். பம்பாய் சபா ஒன்றில் ஓர் உருப்படியை வாசித்து முடித்தவுடன், எட்டு வயதுச் சிறுமி ஒருவள் எங்களிடம் “இப்போது நீங்கள் வாசித்த சாகித்யம் என்ன?’ என்று கேட்டு, எங்களை வியக்கவைத்தாள். இந்த விஷய ஞானத்தைத்தான் இளம் தலைமுறையினர் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளாக, தமிழ்நாடு இசைக் கல்லூரியில் நாகசுரம் பயிற்சியில் சிறந்த மாணவராக தேர்ந்து எடுக்கப்படுபவருக்கு எங்களின் தந்தை “கோவிந்தசாமிப் பிள்ளை நினைவு விருதாக’ தங்கப் பதக்கம் வழங்கி கெüரவிக்கிறோம்.” என்கின்றனர் மூத்த நாகசுரக் கலைஞர்களான சம்பந்தமும், ராஜண்ணாவும், அவர்கள் வாசிக்கும் வாத்தியம் போன்றே கம்பீரமாக!
Margazhi Music Festival - December Season Kutchery: Charukesi « Tamil News said
[…] சாருகேசி சென்ற வருடத்து தினமணிக் கதிர் கட்டுரைகள்:1. SRG Sambhandham & SRG Rajanna – December Carnatic Music Season Special by Dinamani Kadhir […]