Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Bharathi scholar Seeni Viswanathan on his encounters with Subramaniya Bharathiyaar

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

இலக்கியப் பயணம்: பாரதி தேடல்கள் – அனுபவம் புதுமை!

சீனி. விசுவநாதன்

சீனி. விசுவநாதன்

பாரதியின் படைப்புகளை காலவரிசைப்படி ஆய்வுக் குறிப்புகளோடு தொகுத்துள்ளார் ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன். அவரைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இப்படி ஓர் அரிய பணியை மேற்கொள்ள அவர் எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்பதை அந்தப் பதிப்புகளே சொல்லும். பாரதியின் படைப்பு தொடர்பாக தனக்குத் தேவையான ஆவணங்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணங்களே ஒரு தனி படைப்பாகும். அதில் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.

நான் 1960 ம் ஆண்டு முதற்கொண்டே பாரதிநூல்கள் பதிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதிலும்

1979 ம் ஆண்டிலிருந்துதான் தேடல் முயற்சிகளில் முழுமையாக ஈடுபட நேர்ந்தது.

தேடல் முனைவுகளில் நான் ஈடுபட்ட தருணத்தில் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் மிக சுவாரஸ்யமானவை. புதுமையானவையுங் கூட.

வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையிலும் தேடல் அனுபவ நிகழ்ச்சிகள் நெஞ்சத்திலே பசுமையாக நிலைத்துவிட்டிருக்கின்றனவே.

பாரதி “நூற்பெயர்க்கோவை’ தொகுதிக்கான பாரதி நூல்களை நான் தேடிக் கொண்டிருந்த நேரம்.

மதுரையில் ஒரு பழைய புத்தக வியாபாரி. அவர் கடைக்கு நான் சென்றேன். அவர் எனக்கு ஓரளவு பரிச்சயமானவர். அவர் என்னைக் கண்டதும் தம்மிடம் பாரதியின் அரிய நூல் தொகுதி இருப்பதாகவும், தேவைப்பட்டால் கொண்டு வந்து தருவதாகவும் தெரிவித்து, முன் பணமாக நூறு ரூபாயைக் கேட்டார்.

எனக்கோ தாங்க முடியாத சந்தோஷம். அதனால் உடனே அவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டேன். மறுநாள் அவரே நான் தங்கி இருந்த ஓட்டலுக்குப்

புத்தகக் கட்டுடன் என்னைத் தேடி வந்து விட்டார்.

உள்ளபடியே பெரிய தொகுதிகள் கொண்ட கட்டுதான்.

அவசரம் அவசரமாக அவரிடமிருந்து கட்டைப் பெற்றுப் பிரித்துப் பார்த்தேன். உடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆவலோடு எதிர்பார்த்த பாரதி நூல்களாக அவை இல்லை. ஒரு கணம் பேச நாவெழவில்லை.

என் முகவாட்டத்தைக் கண்ட அந்தப் புத்தக வியாபாரி, “”என்ன சார், பாரதியின் அரிய நூல்களைக் கொண்டு வந்து தந்திருக்கிறேன். பேசாமல் இருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

“”இவை அரிய நூல்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாரதி நூல்கள் இல்லை. வேறொருவர் எழுதியவை” என்று நான் கூறினேன்.

ஆனால் அவரோ “”நான் கொண்டு வந்தவை பாரதி நூல்களே. விலை அதிகம் கேட்பேன் என்று நினைத்து நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களா? நான் நியாயமான விலையைத்தான் கேட்பேன். முதலில் புத்தகங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிறகு விலையை முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

நான் அவரிடம் சற்று விளக்கமாக, “”புத்தகங்களின் பெயரையும், ஆசிரியரின் பெயரையும் பாருங்கள். நூலின் ஆசிரியர் பெயர் வரகவி அ.சுப்பிரமணிய பாரதியார் என்று உள்ளது. நூல் தொகுதிகளின் பெயரோ ஜடாவல்லபர் என்பதாகும். நான் தேடும் நூல்களின் ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதியார்” என்று தெரிவித்தேன்.

அப்போது அந்த வியாபாரி, “”என்ன சார், நீங்கள் சொல்லும் பாரதியை வரகவி என்று தானே குறிப்பிடுகிறார்கள். சொல்லின் ஆரம்ப எழுத்தின் பேதத்தைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? அ.சுப்பிரமணிய பாரதியா? சி.சுப்பிரமணியபாரதியா? என்று. நீங்கள் பாரதி நூல்கள் தேவை என்று சொன்னதால், என் வசம் இருந்த இந்த நூல்களைக் கொண்டுவந்தேன். எனக்கும் இப்போதுதான் விஷயம் புரிகிறது.” என்பதாகச் சொல்லி, என்னிடம் பெற்ற முன் பணத்தொகையைத் திருப்பித் தர முன்வந்தார்.

அவர் எனக்காக எடுத்துக் கொண்ட பிரயாசைக்காக ஐம்பது ரூபாய் கொடுக்க விரும்பினேன். முதலில் மறுத்த அவர், என்னுடைய வற்புறுத்தலினால் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

மூர்மார்க்கெட்டில்தான் அதிகமான பாரதி நூல்களைத் தேடிப் பெற்றேன். ஒரு சமயம் நான் வாடிக்கையாக வாங்கும் புத்தகக் கடைக்காரரிடமிருந்து என்னை வரச் சொல்லிக் கடிதம் வந்தது. நான் உடனே வியாபாரியைச் சந்தித்தேன். அவரிடம் பரலி சு.நெல்லையப்பர் பதிப்பித்த 1917 ம் வருடத்தின் “கண்ணன் பாட்டு’ முதல் பதிப்பு நூல் இருக்கக் கண்டேன். நூலைப் பார்த்ததும் எனக்கு ஆனந்தமான ஆனந்தம்.

வியாபாரி என்னிடம், “”உங்களுக்காகவே நான் வாங்கி வைத்துள்ள புத்தகம் இது.”என்றார்.

“”நான் இதற்கு என்ன தொகை தரவேண்டும்?” என்று கேட்க, அந்த வியாபாரி சற்றும் அலட்டிக் கொள்ளாமல் “”ஐநூறு ரூபாய்” என்றார். அவர் சொன்ன தொகையைக் கேட்டதும் நான் அசந்து விட்டேன். புத்தகத்தின் விலை 4 அணா என்பதாக நினைவு. அதை மனதில் கொண்டு, “”இந்தப் புத்தகத்தின் விலை 4 அணா தானே! இதற்குப் போய் நீங்கள் ஐநூறு கேட்கலாமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “”வேறு யாராகவாவது இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கேட்டு இருப்பேன். வெளிநாட்டுக்காரர் என்றால் இதன் மதிப்பு டாலர் கணக்கில்தான். நீங்கள் என் வாடிக்கையாளர். அதனால், நியாயமாகக் கேட்டேன். உங்களுக்கு விருப்பமுண்டானால் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரே விலை; கறார் விலை; பேரத்திற்கே இடமில்லை” என்று தெரிவித்துவிட்டார். நூலின் தன்மை பற்றியறிந்த நானும் அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டுப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்.

செட்டிநாட்டுப் பகுதிகளில் மிக மிக அரிதான பழைய பழந்தமிழ்நூல்கள் பழைய புத்தக வியாபாரிகளிடம் கிடைக்கும் என்பதையறிந்த நான், ஒரு சமயம் காரைக்குடிக்குச் சென்றேன். அங்கு மணிக்கூண்டு அருகில் இருந்த பழைய புத்தகக் கடைக்குச் சென்றேன். உள்ளபடியே மிக அருமையான தமிழ்நூல்கள் இருப்பதைக் கண்டேன். எனக்குத் தேவைப்பட்ட நூல்களை எடுத்துக் கொண்டு, அவற்றிற்கான தொகையை நான் பேரம் பேசியே கொடுத்தேன்.

கடையிலிருந்து நான் வெளிவரும் சமயத்தில் ஒரு மூலையில் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேப்பர் கட்டுகளைப் பார்க்க நேர்ந்தது.

“”அவை என்ன கட்டுகள்?” என்று கேட்க, அவர் “”இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் நடைபெற்ற சினிமா, டிராமா விளம்பர நோட்டீஸ் கட்டுகள். நேற்றுத்தான் எடுத்து வந்தேன்.” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும், அப்படி என்னதான் அந்த நோட்டீஸ்களில் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். வந்ததற்கு அவற்றையும் ஒரு பார்வை சும்மா பார்த்துவிடலாமே என்ற தாகம் ஏற்பட்டது. அவரும் கட்டுகளைப் பார்வையிட எடுத்துத் தந்தார்.

எல்லாம் விளம்பர நோட்டீஸ்கள். பல வண்ணங்களில், பலவித அளவுகளில். “யாரோ மிகவும் சிரமப்பட்டுச் சேகரம் செய்ததை எடைக்குப் போட்டுவிட்டார்களே’ என்று நினைத்த சமயத்தில் அந்த நோட்டீஸ்களின் இடையில் பாரதி புதையலைக் கண்டேன். சிரமப்படாமல்தானே கிடைத்த அற்புதப் புதையல் அது. காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது பாரதி பாடிக் கொடுத்த வாழ்த்துப் பாட்டுக்களின் அச்சுப் பிரதி அதுவாகும்.

அச்சுப் பிரதியை நான் எடுத்துக் கொள்வதாகச் சொன்னவுடன் அந்த வியாபாரி, “”எடுத்துக் கொள்ளுங்களேன். இருபத்தைந்து ரூபாய் தாருங்கள்” என்றார். எனக்கோ ஒரே வியப்பு! காரணம் அருமையான பொக்கிஷம். இதன் அருமை தெரியாமல் குறைவாகக் கேட்கிறாரோ என்று நான் நினைத்தேன். என் மனது கேட்கவில்லை. நூறு ரூபாயை அவரிடம் கொடுத்தேன். பேரம் பேசி, மீதித் தொகையை நான் கேட்கக்கூடும் என்று அவர் நினைத்தார் போலும். நான் மீதித் தொகை வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துவிட்டேன். கேட்ட தொகையைவிட அதிகமாகத் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. நான் அவரிடமிருந்து பெற்ற அச்சுப் பிரதியின் மகிமையை எடுத்துச் சொன்னவுடன் அவர் விஷயத்தைப் புரிந்து கொண்டு எனக்கு நன்றி தெரிவித்தார்.

இப்படி நான் பாரதி தேடல் பணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்த கோவை நண்பர் ஒருவர் தனக்கு வேண்டப்பட்டவரிடம் இந்தியா பத்திரிகைப் பிரதிகள் இருப்பதாகத் தெரிவித்து, உடனடியாக என்னைக் கோவைக்கு வரும்படி கடிதம் எழுதினார். நானும் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டே கோவையைச் சென்றடைந்தேன்.

நண்பரும் நானும் அவர் தெரிவித்திருந்த நண்பர் வீட்டிற்கும் சென்றோம். சிறிது நேர உரையாடலுக்கும், உபசாரத்திற்கும் பின் ஓர் அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகளில் ஒன்றை என்னிடம் கொடுத்து, “”இதைப் பாருங்கள்” என்றார். கட்டை மிகுந்த ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

என்னை நான் ஒருவாறாகச் சுதாரித்துக் கொண்டு, “”நான் தேடிக் கொண்டு இருப்பது பாரதியார் ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகைப் பிரதிகளை. நீங்கள் என்னிடம் தந்திருப்பதோ நவஇந்தியா பத்திரிகைக் கட்டுகள்” என்றேன்.

அப்போதுதான் நண்பர்களுக்கு விஷயம் புரிந்தது.

நவ இந்தியா பத்திரிகை அந்தக் காலத்தில் கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த செல்வாக்கான பத்திரிகையாகும். சென்னையிலிருந்தும் சில காலம் பத்திரிகை பிரசுரம் ஆனது.

இப்படி எத்தனையோ அனுபவங்களை நான் என் பாரதி தேடல்களில் பெற்றேன்.

வெளிஉலக வட்டாரத்தில் நான் பெற்ற அனுபவங்கள் ஒருபுறமிருக்க, என் வீட்டிலேயே ரஸமான அனுபவத்தைப் பெறவும் நேர்ந்தது.

வீட்டிற்கு வேண்டிய பொருள்களை என் மனைவி வாங்கி வரும்படி லிஸ்ட் கொடுத்து அனுப்புவாள். ஆனால் வெளியில் செல்லும் நானோ எனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு மனைவி கொடுத்த சாமான் லிஸ்டை மறந்து விடுவதுண்டு. இல்லையென்றால் தேவையான அளவு சாமான்கள் வந்து சேராத நிலை ஏற்பட்டது.

என் போக்கைக் கண்ட என் மனைவி நாசுக்காக ஒருநாள், “”இனிமேல் உங்கள் தேவையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திற்கு வேண்டிய தேவையை நானே பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டாள்.

ஆக என்னுடைய பாரதி தேடலில் நான் பெற்ற இன்ப அதிர்ச்சியான அனுபவங்களைச் சொல்லி முடியாது.

அன்று நடந்த நிகழ்ச்சிகளை இன்றும் அசை போட்டுப் பார்ப்பதிலும் தனி இன்பம் இருக்கத்தானே செய்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக