Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008
சென்ற வருடம்:
Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion « Tamil News
Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely « Tamil News
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
![]() |
![]() |
லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே |
குறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.
மூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.
12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.
ஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.
![]() |
![]() |
எப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.
ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.
ஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.
ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.
![]() |
![]() |
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம் |
லாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்
ரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.
தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள்புது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.
ரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:
ஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.
புதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)
2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)
3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)
4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)
5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)
(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)
6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)
(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)
7.மதுரை-தென்காசி பாசஞ்சர் (தினசரி)
8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)
9.திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் (தினசரி)
10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)
11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)
12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)
13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)
14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)
நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை
2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை
3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்
4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)
5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)
6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை
நிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.
—————————————————————————————————————————————-
பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு
புதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.
பயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.
ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.
இதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
—————————————————————————————————————————————-
என்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’
பாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.
நஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.
ரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.
ரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.
மாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.
—————————————————————————————————————————————-
ரூ.25 ஆயிரம் கோடி லாபம்
புதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.
வரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.
அடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.
பயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.
பயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.
ரூ.2.50 லட்சம் கோடி
முதலீடு
ரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.
எனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.
11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.
ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.
இணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
—————————————————————————————————————————————-
ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!
ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!
புது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.
நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை
கர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை
பால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை
சேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”
இதுதான் அந்தக் கவிதை.
—————————————————————————————————————————————-
முக்கிய அம்சங்கள்
ரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை
சரக்கு கட்டணம் உயர்வு இல்லை
பெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்
இரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை
தாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்
முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்
எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை
குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.
வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்
காமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.
ஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு
வடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல
சதவீத கட்டண சலுகை
—————————————————————————————————————————————-
லாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்
உயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு
சரக்கு கட்டண உயர்வு இல்லை
பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்
புதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.
2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.
புறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.
புறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.
பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.
தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.
2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.
ரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.
பயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.
ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
பெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.
எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.
தாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.
“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’
இது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.
தங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.
—————————————————————————————————————————————-
“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு
புதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
ரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:
17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.
எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
—————————————————————————————————————————————-
வட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி
புது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.
மக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.
தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.
இந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.
“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.
மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.
“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.
குஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).
மக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.
மக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).
தனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.
காங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.
—————————————————————————————————————————————-
டிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்
புதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:
ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.
—————————————————————————————————————————————-
ரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா?
சென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.
காச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.
இந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.
ஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.
மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.
—————————————————————————————————————————————-
|
||||||||||||||||||||||||||||||||||
BJP terms railway budget disappointing; Left opposes role for private players: Lalu’s last lap - Dinathanthi - Part 2 « Tamil News said
[…] Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profit… […]