Feb 27: Eezham, Sri Lanka, LTTE, Dead, War, Rajapakse – Updates & News
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008
மணலாறு பகுதியில் கொல்லப்பட்ட 14 விடுதலைப் புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு
![]() |
![]() |
மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பதுங்குகுழி ஒன்று |
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணலாறு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களின் போது கொல்லப்பட்ட சுமார் 14 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலை அதிகாரிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இராணுவ வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர் அங்கிருந்த அவர்களது பாதுகாப்பு நிலைகள் சிலவற்றை அழித்திருப்பதோடு, இதன்போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் எண்மரது சடங்களையும், ஆயுதத் தளபாடங்கள் சிலைவற்றையும் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து பி.பி.சியிடம் கருத்துவெளியிட்ட அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார, வெள்ளிக்கிழமை மாலை ஆறு புலி உறுப்பினர்களது சடலங்களும், சனிக்கிழமை இரவு மேலும் எட்டு புலி உறுப்பினர்களது சடலங்களும், இராணுவத்தினரால் அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் இந்த 14 சடலங்களும் விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைவிட நேற்றைய தின மோதல்களின்போது கொல்லப்பட்ட மேலும் ஏழு விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவை பிரேதப் பரிசோதனையின் பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினமோ விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு
![]() |
![]() |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு |
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய இந்த சந்திப்பின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது கட்சி ஆதரவினை வழங்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதி கூறியதாகவும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் அக்கட்சி ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புக்கு முன்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற வளவினுள் முன்னாள் ஜானாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலையின் திரைநீக்க விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட சந்திப்பொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இன்றைய இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாகவும் தெரிவித்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்