Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

BJP terms railway budget disappointing; Left opposes role for private players: Lalu’s last lap – Dinathanthi – Part 2

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

Part – 1 (Dinamani)
Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise « Tamil News

கட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்

மத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-

* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.

* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.

* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.

* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.
———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:
இந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வெளிநடப்பு

மத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-

இந்திய கம்ïனிஸ்டு

குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-

இந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.

ரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.

சமாஜ்வாடி கட்சி

சுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.

மோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.

பா.ஜனதா

சுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

வி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.

சிவசேனா

மனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.

இவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.

காங்கிரஸ்

ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்
சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

புதிய ரெயில் பாதைகள்

தமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

இது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

அகல ரெயில் பாதை

மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.

இந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.

இரட்டை ரெயில் பாதை

தமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.

பறக்கும் ரெயில்

காரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

சென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.

———————————————————————————————————————————————————————–

ரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது
பாராளுமன்றத்தில் ருசிகர காட்சிகள்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.

* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.

சோனியாவுடன் ஆலோசனை

* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.

* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.

கனிமொழி எம்.பி.

* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.

* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.

* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.

* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.

———————————————————————————————————————————————————————–


சென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
வாரம் ஒருமுறை இயக்கப்படும்

புதுடெல்லி, பிப்.27-

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.

ஏழைகள் ரதம்

பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.

இது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.

புதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-

* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(விருத்தாசலம் வழியாக இயக்கப்படும்)

* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)

* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)

* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)

* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்

* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை

* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை

* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்

* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை

இது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

பயணிகளுக்கு புதிய சலுகைகள்
60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்
சென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
மாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்
லாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்
கட்டணம் குறைப்பு


பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

புதுடெல்லி, பிப்.27-

2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.

சலுகைகள்

கடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கட்டணம் குறைப்பு

குளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.

குளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.

50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.

கூடுதல் படுக்கை வசதி

கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.

படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.

கல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’

தற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.

முதியவர்கள்

60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.

புதிய ரெயில்கள்

53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

எய்ட்ஸ் நோயாளிகள்

தற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.

பெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு

ரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.

ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.

தேயிலை

இந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.

சாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.

ரூ.52,700 கோடி திரட்ட இலக்கு

நடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

2 மணி நேரம் வாசித்தார்

லாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை

ரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’
ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து


புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரவேற்பும் எதிர்ப்பும்

லாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதுவும் இல்லை

இந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

ரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

மேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.

பேரழிவை தரும்

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

சிதம்பரம் பட்ஜெட்

இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்?… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.

* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.

* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.

* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.

* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.

* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.

* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.

* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.

* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.

* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.

* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.

* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.

* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.

* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.

* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.

* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

———————————————————————————————————————————————————————–

கட்டண குறைப்பு எவ்வளவு?

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-

தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு

100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1

200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2

300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3

400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4

500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5

700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7

900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8

குறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.

———————————————————————————————————————————————————————–

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை
செல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.

நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-

நீண்ட வரிசை இருக்காது

இன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.

பயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எந்திரங்கள் அதிகரிப்பு

முன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

இப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.

கம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.

இவ்வாறு லாலுபிரசாத் தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ஒரு பதில் -க்கு “BJP terms railway budget disappointing; Left opposes role for private players: Lalu’s last lap – Dinathanthi – Part 2”

  1. […] தினத்தந்தி செய்தியின் படி: தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு 100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1 200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2 300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3 400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4 500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5 700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7 900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8 […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: