Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Reading e-books in Cell phone – Mobile Technology for Tamil

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

இது புதுசு: செல்போனில் கலந்த “செம்புலப் பெயல்நீர்’!

அருவி

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே’

-“குறுந்தொகை’ பாடலான இதில் வரும் “செம்புலப் பெயல்நீர்’ என்கிற உவமைநீர் தரும் ஈரம் மட்டும் இன்னும் காய்ந்தபாடில்லை. வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுத்து பலவற்றோடு கலந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

இலக்கியவாதிகளின் இதயங்களோடு கலந்து, கட்டுரை, கவிதை எனப் பலவற்றிலும் ஓடி, இப்போது கலந்திருப்பது செல்போனில்!

சங்கப் பாடல்களைப் படித்துப் புரிந்தவர்கள் பலாச்சுளையைச் சுவைத்ததுபோல மகிழ, புரியாதவர்கள் ஊமத்தங்காயைச் சாப்பிட்டதுபோல வருந்தி நிற்பதுதானே இன்றைய நிலை?

இது சற்று பெரிய அரிய விஷயம்தான். ஆனால் ஒன்றும் புரியாத விஷயமில்லை. செல்போனிலும் புத்தகங்கள் படிக்கிற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது “மொபைல்வேதா’ நிறுவனம். கோயமுத்தூர் உடுமலைபேட்டையைச் சேர்ந்த கே.ஆர்.கணேஷ்ராம்தான் இதன் நிறுவனர். முதலில் சங்கப் பாடல்களை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொடுத்து இருக்கிறார்கள். போகப் போக வாரஇதழ், மாத இதழ், நாளிதழ், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என எல்லாப் புத்தகங்களையும் வெளிக்கொண்டு வரவும் இருக்கிறார்கள்.

இதைப்பற்றி முழுவிவரத்தையும் சொல்கிறார் கணேஷ்ராம்:

“பி.காம் படித்திருக்கிறேன். முதலில் கோவை பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகளை மட்டும் தெரிவிக்கும் வெப்சைட் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் வேலைவாய்ப்பு வெப்சைட்டைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டேன். இந்தத் தருணத்தில்தான் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் புதுமை தொழில்நுட்ப ஆய்வுகளைக் கண்டறியும் முகாம் ஒன்றை நடத்தியது. இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டோம். இதில் பதினைந்து பேரின் ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெப்2.0 மற்றும் செல்போன் தொடர்பாக நான் செய்த ஆய்வும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெப்சைட்டில் வெப்1.0-தான் இப்போது இருக்கிறது. இதற்கு மாற்றாக வெப்2.0-வெர்ஷனை அமைப்பது குறித்து ஆய்வு செய்திருந்தேன்.

இதனையடுத்து வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் அடைகாப்பு மையம் சார்பில் நாலு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு லோனாகக் கொடுக்கப்பட்டது. இதைக் கொண்டு “மொபைல்வேதா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்கலைக்கழக வளாகத்திலேயே இது இயங்கி வருகிறது. மொபைல் மதிப்பு கூட்டு சேவைத் துறையில் (value added services) புதிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதுதான் இந்நிறுவனத்தின் பணி. முதல் பணியாகத்தான் செல்போன் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தச் சிந்தனை முழுக்க முழுக்க எங்களுடையது என்று சொல்ல முடியாது. செல்போன் புத்தகங்கள் ஜப்பான், சீனாவில் அமோக வரவேற்புப் பெற்று, புத்தகங்கள் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு நான் முயற்சித்தேன். முடிந்தது.

பெரியார் இயக்கத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத்தான் முதலில் செல்போனில் வெளியிட்டோம். இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனையடுத்து “பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ என்ற தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்டோம். இதற்கும் கிடைத்த வரவேற்பையடுத்துதான் சங்க இலக்கியங்களை செல்போன் புத்தகங்களாக மாற்றித் தருகிறோம்.

குறுந்தகவல் சேவை போன்றுதான் இதுவும் என இதனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. 165 வார்த்தைகள்தான் குறுந்தகவல் சேவையில் இருக்கும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் இதில் கொண்டு வரமுடியும்.

செல்போனில் புத்தகங்களை வடிப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் புத்தகமாக்குகிறோம். செல்போனில் கேம்ஸ் அமைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சாதாரணமாக நாம் படிக்கிற புத்தகங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அட்டை, அழகான படங்கள் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

சங்க இலக்கியத்தை முதலில் நாங்கள் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணம் பழந்தமிழரின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இரண்டாவது, ராயல்டி இல்லாமல் வெளியிடக்கூடிய ஒன்றாக இருப்பதும் ஒரு காரணம். தற்போது சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொழிப்புரை தருவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகங்களைப் பெறுவது சிரமமான காரியம் ஒன்றுமில்லை. இதற்காகவே www.thinnai.info ் என்ற வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் வைத்திருப்பவர்கள் அப்படியே செல்லிலேயே இன்டர்நெட் ஓப்பன் செய்து எங்கள் வலைத்தளத்திலிருந்து நேரடியாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். இன்டர்நெட் வசதி இல்லாமல் ப்ளூ டூத், இன்ஃபராரெட், டேட்டாகேபிள் வசதி உள்ளவர்கள் கணிப்பொறியில் எங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகவே இதை வழங்கி வருகிறோம். இந்தச் செல்போன் தமிழ்ப் புத்தக வெளியீட்டை கடந்த 22-ந்தேதிதான் தொடங்கினோம். அதற்குள் 250-க்கும் மேற்பட்டோர் சங்க இலக்கியப் புத்தகத்தை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இதன் அடுத்தகட்டமாக நாவல், சிறுகதை தொகுப்புகள், கட்டுரை புத்தகங்கள் என எல்லாவகையான புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இதைப்போல பரபரப்பாக விற்கும் வார இதழ், மாத இதழ், நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம். இது தொடர்பாக எல்லாப் பத்திரிகை நிறுவனங்களோடும் எழுத்தாளர்களோடும் பேச இருக்கிறோம். இதை இலவசமாக வழங்க முடியாது.

ஓர் உதாரணத்துக்கு “ஹிந்து’ ஆங்கில நாளிதழை அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறோம் என்றால், அதற்கான கட்டணத்தை செல்போன் ரீடர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள திட்டம் வைத்திருக்கிறோம். ஒரு சினிமாப் பாடலை ரிங்டோனாக வைத்துக்கொண்டால் செல்போன் ஆபரேட்டார் அதற்காகும் கட்டணத்தைப் பிடித்துக் கொள்வதுபோல நாளிதழுக்காகும் கட்டணத்தையும் ஆபரேட்டார்களையே பிடித்துக்கொள்ள சொல்லலாம். வார இதழ்கள், மாத இதழ்கள், பெரிய எழுத்தாளர்களின் நாவல் என எல்லாப் புத்தகங்களையும் இந்த முறையில் வெளியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். எழுத்தாளர்களுக்கு முழுப் பணமும் கிடைக்கும். செல்போன் வழியாக சிற்றிதழ்கள் நடத்த விரும்புகிறவர்களும் நடத்தலாம்.

கம்ப்யூட்டரிலேயே படித்தால் கண் கெட்டுப் போய்விடும் என்ற கவலையும் இல்லாதளவு செல்போனிலேயே “கூல் டெக்ஸ்ட்’ தொழில்நுட்பமெல்லாம் வந்திருக்கிறது. இதனால் கண் கெட்டுப் போகாததுடன், செல்போன் புத்தகமும் தெளிவாகத் தெரியும்” என்கிறார் கணேஷ்ராம்.

செல்போன் புத்தகம் பற்றி பேசியபோது ஒரு கல்லூரி மாணவி சொன்னாள்:

“”ஐ… பரீட்சைக்குப் புத்தகத்தையே செல்போனில் கொண்டு போயிடலாமே”

“”என்ன கொடுமை சார் இது”

ஒரு பதில் -க்கு “Reading e-books in Cell phone – Mobile Technology for Tamil”

  1. குறிஞ்சிக்கபிலன் said

    நல்ல முயற்சி தமிழ் கூறும் நல்லுழகம் உங்களை வாழ்த்தும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: