Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூலை 1st, 2007

Finance ministry against Govt nominees in Punjab & Sind Bank: Board in open war

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

வங்கிகளும் அரசியல் தலையீடும்!

அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.

“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.

முதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.

அவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்?

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.

நிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.

ஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.

Posted in abuse, Assets, Balance, Banking, Bankruptcy, Banks, Benaami, Benami, Board, Bribery, Bribes, Cabinet, Campaign, CEO, CFO, chairman, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, CMD, Commerce, Congress, COO, Corruption, Director, Finance, Financing, Gopalakrishnan, Govt, Influence, kickbacks, Loans, Management, Manmogan, Manmohan, MD, Members, Moopanaar, Moopanar, Mooppanaar, Mooppanar, Nominee, Op-Ed, Options, panel, Penami, Power, Prathiba, Prathibha, Proxy, PSB, Punjab, Punjab & Sind Bank, reconstitution, regulations, SBI, Sind, Sindh, State Bank, Statements, Trading, Trustees, VP | Leave a Comment »

USS Nimitz loaded with hi-tech weapons to dock off Chennai coast – Issues, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

எண்ணங்கள்: USS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்
—————————————————————————————————–

“யுஎஸ்எஸ் நிமிட்ஸ்’-சில சந்தேகங்கள்

டி.எம்.விஸ்வநாதன்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சிவிஎன் 68.. அணு உலைகளைக் கொண்டுள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான, போர் விமானங்களைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல். அது சென்னை துறைமுகத்துக்கு வரவிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிறிய ரக சாதாரண போர்க்கப்பல்கள் இதற்கு முன்னரும் சென்னை துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. அப்போதெல்லாம் எந்தவிதப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் இப்போது என்ன வந்தது இந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு? இதுவும் வழக்கம்போல அரசியல்தானா என்ற கேள்வி சாதாரண குடிமகனுக்கு ஏற்படுவது சகஜம்.

ஆனால் இந்த விஷயத்தில் வலுவான எதிர்ப்புக்குரல் கொடுத்து தொடங்கி வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தொடங்கி பாஜக, பாமக விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனைத்து தலைவர்களுமே பாராட்டுக்கு உரியவர்கள். காரணம் ஒரு மிகப்பெரிய அபாயத்திற்குத்தான் அவர்கள் தடை போட நினைக்கிறார்கள்.

அப்படி “நிமிட்ஸில்’ என்னதான் அபாயம் உள்ளது? இதற்கு விடைகாணும் முன் நிமிட்ஸ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

செஸ்டர் வில்லியம் நிமிட்ஸ். டெக்சாசின் பிரெடிரிக்ஸ்பர்க் நகரில் பிறந்தவர். அமெரிக்க நாவல் அகாதெமியில் தனது பணியைத் தொடங்கிய இவர் அமெரிக்க கப்பற்படைக்காக மாபெரும் சாதனைகளைப் புரிந்தவர். புகழ்பெற்ற பியேர்ல் ஹார்பர் (டங்ஹழ்ப் ஏஹழ்க்ஷர்ன்ழ்) மீதான தாக்குதல் உட்பட பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் கூட அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர் நிமிட்ஸ். சென்னைக்கு வரவிருக்கும் கப்பலுக்கு அவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

அதுதான் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலும்கூட. 1972-ம் ஆண்டு மே 13-ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட நிமிட்ஸ் கப்பல் 1975-ல் தனது முழுநேரப் பணியைத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சர்வதேச கடல் பரப்பில் பல்வேறு இடங்களில் போர்ப்பணியாற்றி வருகிறது.

விமானம் தாங்கிப் போர்க்கப்பலான நிமிட்ஸ் அணு சக்தியால் இயங்கக்கூடியது. இதற்கேற்றார்போல் அதில் இரண்டு மென்நீர் (லைட் வாட்டர்) அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நிமிட்ஸ் அணுசக்தியால் இயங்கக்கூடிய கப்பல் என்பதுதான் இப்போதைய சர்ச்சைக்கே காரணம். இதே கப்பல் இந்து மகா சமுத்திரத்தில் இதற்கு முன்னர் இரண்டு 3 முறை பயணித்துள்ளது. ஆனால் இந்தியாவின் எந்தத் துறைமுகத்திலும் இது நின்றதில்லை. இப்போது வரவேண்டிய அவசியம் என்ன?

ஹென்றி ஜெ.ஹைட் அமெரிக்க-இந்திய அமைதி அணு சக்தி ஒத்துழைப்புச் சட்டம்- 2006-க்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்து சில மாதங்கள்தான் ஆகின்றன. இந்நிலையில் நிமிட்ஸ் அணுசக்தி கப்பல் இந்தியாவுக்கு அதுவும் சென்னைக்கு வருவதுதான் சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன.

சென்னைக்கு மிக அருகில் கல்பாக்கத்தில் நமது அணுசக்தி ஆய்வு உலைகளும் மையங்களும் உள்ளன. மேலும் அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் 40 அணுஉலைகள் கூடுதலாக அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அவ்வாறு அமையும் பட்சத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் கூடுதலான அணு உலைகள் அமைய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நியூக்ளியர் பார்க் அதாவது அணுசக்தி ஆய்வுகள் சார்ந்த அமைப்புகள் ஒரே கூரையின் கீழ் அல்லது ஒரே இடத்தில் அமைவதுதான் நிர்வாகத்திற்கும் போக்குவரத்துக்கும் எளிதானது என்கிற ரீதியில் தமிழகத்தில் கூடுதல் அணு உலைகள் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதற்கேற்றார்போல் அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இந்திய அரசோ அமெரிக்க அரசோ இரு நாட்டு மக்களுக்கும் தெரியும் வகையில் இதுவரை எந்தவித வெளிப்படையான அணுகுமுறையும் கொண்டிருக்கவில்லை. நமது நாடாளுமன்றத்தில்கூட, தேசத்தின் நலன் சார்ந்த இவ்வளவு பெரிய ஒப்பந்தம் இதுரை விவாதிக்கப்படவே இல்லை.

சரி, நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட இதுபற்றி வெளிப்படையாக விவாதிக்க சில சிக்கல்கள் உள்ளன. இதற்கு நமது மத்திய அரசு சொல்லும் ஒரே காரணம் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதுதான். இந்திய அணுசக்தி சட்டம் 1962-ன் 18-வது ஷரத்தானது, “”அணுசக்தி திட்டங்கள் அல்லது திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தி மையங்கள்பற்றி கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தகவல்களை வெளியிடவோ, கேட்கவோ கூடி விவாதிக்கவோ கூடாது” என்கிறது. எனவேதான் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கியே வாசிக்கின்றன.

இத்தகைய சூழலில் நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு அருகே வர அமெரிக்க அரசும், நமது மத்திய அரசும் இத்தனை பிரம்ம பிரயத்தனங்களை எடுப்பதற்கு காரணம் ஒரு வேளை இந்த கப்பலின் “வருகை’ என்பதே இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்பதுதான் விஷயமறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இரு நாடுகளுமே பரஸ்பரம் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற மற்றொரு சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

சரி, இவையெல்லாம் ஒருபுறம் இருக்க எத்தகைய பாதிப்புகள் நிமிட்ஸôல் எழும் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. கப்பல் ஏற்படுத்தலாம் எனக்கருதப்படும் கதிர்வீச்சு அபாயம்தான் மிக முக்கியமான பிரச்னையாக தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. “”ஒருவேளை கதிர்வீச்சு ஏற்பட்டால்” என்பது அவ்வளவு வலுவான வாதமாகத் தெரியவில்லை. ஏனெனில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அக்கப்பலில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். எனவே அவ்வாறு பாதிப்பு இதுவரை ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அப்படியானால் என்னதான் பிரச்னை என்ற கேள்வி எழுகிறது.

நிமிட்ஸ் கப்பலில் உள்ள இரண்டு அணு உலைகளும் இயங்க வேண்டுமானால் இயக்கத்தின்போது அந்த அணு உலைகளைக் குளிர்விக்க தண்ணீர் வேண்டும். அது கடலில் இருந்து எடுக்கப்பட்டு அணு உலைகள் குளிர்வித்த பின் மீண்டும் கடலுக்குள்ளேயே விடப்பட்டுவிடும்.

கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பதால் அந்தப் பகுதி மட்டும்தான் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் நிமிட்ஸ் மெரீனா கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுவதால் அந்தப்பகுதி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் கப்பலில் உள்ள அணுஉலைகள் உருவாக்கும் அணுக்கழிவுகளை எங்கே கொண்டுபோய் அவர்கள் கொட்டுகிறார்கள்? தெளிவில்லை. ஒருவேளை கடலுக்குள்ளேயே அவற்றைக் கொட்டினால்? விளைவு…மிகவும் விபரீதமானது. ஏனெனில் அமெரிக்காவில் உள்ள பல அணு உலைகள் உருவாக்கிய டன் கணக்கான அணுக்கழிவுகளையே என்ன செய்வது என்று இன்னமும் அந்நாட்டு அணுசக்திக்கு எதிரான, அணுசக்தி ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு எதிரான கோஷம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் அந்நாட்டில் இதுபோன்ற விஷப்பரீட்சைகளை அமெரிக்க அரசு செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே அணுக்கழிவுகளை, கட்டாயம் ஆள் இல்லாத நடுக்கடலுக்குள் கொட்டியாக வேண்டிய நிலையில் உள்ளது. இதுதான் மிகவும் அதிர்ச்சியான உண்மை என்கின்றனர் அணுசக்தி எதிர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும்.

அப்படிப்பார்த்தால் சர்வதேச கடல்பரப்பில் எத்தனை இடங்களில் அணுக்கழிவுகளை அமெரிக்கா கடலுக்குள் கொட்டியுள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

இத்தகைய கழிவுகள் இப்போதைக்கு உடனே பிரச்னையை ஏற்படுத்தாது. இன்னும் சில ஆண்டுகளில் அல்லது கழிவுகளை கடலுக்குள் பத்திரமாக ஒரு பெட்டியில் போட்டு இறக்கியிருந்தாலும் கூட கடலில் ஏற்படும் புவி மாற்றங்கள் காரணமாக அதில் கசிவு ஏற்பட்டால் முதலில் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

குறிப்பாக மீன்கள். மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை உணவாகக் கொள்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில், கல்பாக்கத்திலேயே அங்குள்ள கடல்பரப்பில் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆனால் இதனை நமது அணுசக்தித் துறை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்).

மேலும் தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக கடற்கரை சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதியாகவும் உள்ளது. அத்தகைய தருணங்களில் சென்னைக் கடற்கரையோரம் வந்து நிற்கும் நிமிட்ஸ் தனது கழிவுகளை அந்த இடத்திலேயே கொட்டினால் அது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவோ, அல்லது பேரலைகள் வாயிலாகவோ கடற்கரைக்கு கதிர்வீச்சை ஏன் கொண்டு வராது என்பது மற்றொரு வலுவான வாதமாக உள்ளது.

எனவேதான் பல்வேறு அபாயங்களைக் கருத்தில் கொண்டு நிமிட்சை நமது கடல் எல்லைக்குள் அனுமதிக்காமல் இருப்பது நலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணியாற்றிவரும் டாக்டர் புகழேந்தி, “இராக் போரின்போது அமெரிக்காவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால்அந்த நாடே நிமிட்ஸ் கப்பலை தங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அப்படி என்றால் அந்த நாட்டு அரசுக்கும் கப்பற்படை அதிகாரிகளுக்கும் நிமிட்ஸ் கப்பலின் உண்மையான முகம் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஏன் ஆஸ்திரேலியா இக்கப்பலை அனுமதிக்கவில்லை? நாம் ஏன் அனுமதிக்கிறோம்? இதற்கு விடை கண்டாலே விஷயம் புரிந்துவிடும்” என்றார்.

மொத்தத்தில் “நிமிட்ஸ்’ நிமிடத்துக்கு நிமிடம் நமது மக்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைக்காமல் இருந்தால் சரி.

———————————————————————————————————

யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?: 3 இடங்களில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு – டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் ஏ.ஆர். ரெட்டி தகவல்
சென்னை, ஜூலை 1: சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள “யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் “நிமிட்ஸ்’ குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

“நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

“நிமிட்ஸ்’ கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

“நிமிட்ஸ்’ கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

————————————————————————————————-

அமெரிக்க கப்பலில் வந்த போர் வீரர்கள் சமூக சேவை- சென்னை பள்ளியில் குப்பையை அள்ளினார்கள்

சென்னை, ஜுலை. 2-

அமெரிக்கா போர் கப்பல் சென்னை வந்தது. அவர்கள் கடற்கரை ஓட்டல்களில் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத் துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர் கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இன்செட் வரும் உல்லாசம்

அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படு கிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்கு கின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னை யில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக “புக்” செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண் டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணி களிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என் பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரை யில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

பொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட் டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.

கப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவ அதி காரிகள் தெரிவித்தனர்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.

கப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள் ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.

உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்ஷாப் உள்ளது.

தனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத் தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.

————————————————-
அணுவிசைக் கப்பல்கள்

என். ராமதுரை

அண்மையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் “நிமிட்ஸ்’ சில நாள்கள் சென்னை துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி நின்றது. அது அணுவிசையால் இயங்குவதால் அக்கப்பலை சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கலாகாது என்று சில வட்டாரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விமானம் தாங்கிக் கப்பல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று டீசலில் இயங்குவது. இரண்டாவது வகை அணுவிசையில் இயங்குவது. உலகில் இப்போதைக்கு அமெரிக்காவிடம் மட்டுமே அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

பிரான்ஸ் இப்போதுதான் அணுசக்தியால் இயங்குகிற விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வகையான கப்பலை உருவாக்க சுமார் 7 ஆண்டுகள் பிடிக்கும். நிமிட்ஸ் கப்பலை உருவாக்க ஆன செலவு ரூ. 18,000 கோடி. அமெரிக்காவிடம் அணுவிசையில் இயங்கும் 11 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

வடிவில் மிகப் பெரியதான இவ்வகைக் கப்பல் மெதுவாகச் செல்லக்கூடியது. எதிரி நாடு ஒன்று தாக்க முற்பட்டால் இக் கப்பலினால் எளிதில் அத் தாக்குதலிலிருந்து தப்ப இயலாது. ஆகவேதான் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் அதற்குக் காவலாக போர்க்கப்பல்கள் செல்லும். மிக நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட இந்த நாள்களில் விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டிக் காப்பது எளிது அல்ல.

அமெரிக்காவிடம், வானிலிருந்து இரவு பகலாகத் தொடர்ந்து கண்காணிக்க வேவு செயற்கைக் கோள்கள் உள்ளன. எதிரி நாட்டின் கப்பல்களை மற்றும் நீர்மூழ்கிகளை அமெரிக்காவால் எளிதில் கண்காணிக்க இயலும். எதிரி விமானங்கள் விஷயத்திலும் இது பொருந்தும். எதிரி நாடு செலுத்தக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொண்டு நடுவானில் அவற்றை அழிப்பதற்கான ஏவுகணைகளும் அமெரிக்காவிடம் உள்ளன.

உலகின் எந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு அருகே அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தி, அந்த நாட்டின் மீது கடும் விமானத்தாக்குதலை நடத்துவதற்கு இக்கப்பல் நன்கு உதவும். ஆப்கன் போர், முதல் இராக் போர், இரண்டாம் இராக் போர் ஆகியவற்றின்போது அமெரிக்காவின் இவ்வகைக் கப்பல்கள் முக்கியப் பங்கு பெற்றிருந்தன.

இந்தக் கப்பலை நடமாடும் ராணுவ விமானத் தளம் என்றும் சொல்லலாம். மேல் தளத்தில் நிறைய போர் விமானங்களை நிறுத்த இடம் இருக்கும்; ஓடுபாதையும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பலில் நீண்ட ஓடுபாதை அமைக்க முடியாது. ஆகவே “கேட்டபுல்ட்’ மாதிரியில் ஓர் ஏற்பாடு உள்ளது. போர் விமானம் எடுத்த எடுப்பில் 300 கிலோ மீட்டர் வேகம் பெற இது உதவுகிறது.

எல்லாக் காலங்களிலும் விமானங்கள் மேல் தளத்தில் நிறுத்தப்பட மாட்டா. லிப்ட் மூலம் உட்புறத்தில் அமைந்த கீழ் தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்படும். தேவையான போது மேல் தளத்துக்குக் கொண்டு வரப்படும்.

சாதாரண விமானம் தாங்கிக் கப்பலில் அடிக்கடி டீசலை நிரப்பிக் கொண்டாக வேண்டும்.

அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலுக்கு எரிபொருள் பிரச்னையே கிடையாது. அக்கப்பலில் உள்ள அணு உலையானது, தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கப்பல் இயங்குவதற்கான ஆற்றலை அளித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக நிமிட்ஸ் கப்பல் 1975 ஆம் ஆண்டில் செயலுக்கு வந்தது. புதிதாக எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இன்றி அது 23 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்பட்டது. 1998 வாக்கில் புதிதாக எரிபொருள் நிரப்பப்பட்டது. இனி அது மேலும் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டு வரும்.

இவ்விதக் கப்பலின் அணு உலையில் மிகுந்த செறிவேற்றப்பட்ட யுரேனியம் பல குழல்களில் நிரப்பப்படும். பின்னர் கட்டுகட்டாகப் பல குழல்கள் அருகருகே வைக்கப்பட்டிருக்கும். (செறிவேற்றப்பட்ட யுரேனியம் என்பது குறிப்பிட்ட வகை யுரேனிய அணுக்கள் மிகுதியாக உள்ள யுரேனியமாகும்). யுரேனியம், இயல்பாக நியூட்ரான்களை வெளிப்படுத்தும். இந்த நியூட்ரான்கள் அருகில் உள்ள குழல்களில் அடங்கிய இதர யுரேனிய அணுக்களைத் தாக்கும்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு மிகுந்த வெப்பம் தோன்றும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி தோற்றுவிக்கப்படும். இந்த நீராவியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த மின்சாரம் கப்பலின் அடிப்புறத்தில் உள்ள ராட்சத சுழலிகளைச் சுழல வைக்கும்போது கப்பல் நகரும்.

ஒருவகையில் இது அந்தக் காலத்தில் நிலக்கரியைப் பயன்படுத்திய ரயில் என்ஜின் நீராவியால் இயங்கியதைப் போன்றதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல்கள் அனைத்துமே நிலக்கரி மூலம் இயங்கின. பின்னர் கப்பல்களை இயக்க ராட்சத டீசல் என்ஜின்கள் வந்தன. ஆனால் விமானம் தாங்கிக் கப்பல்களைப் பொருத்தவரையில் அவை மறுபடி நீராவிக்கே வந்துள்ளன. ஒரு முக்கிய வித்தியாசம் – நீராவியைத் தயாரிக்க செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. விமானம் தாங்கிக் கப்பலின் அணு உலைகளில் எவ்வளவு செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எந்த ஓர் அணுசக்திப் பொருளிலிருந்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிரியக்கம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்கள், அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மாலுமிகள் பாதிக்கப்படாதபடி, இவற்றில் அடங்கிய அணு உலைகளிலிருந்து கதிரியக்கம் வெளியே வராதபடி தடுக்க அணு உலையைச் சுற்றிக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.

அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் உள்ளன.

இந்தியாவிடம் உள்ள இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் வெளிநாடுகளிடமிருந்து வாங்கப்பட்டவையே. இவை டீசலில் இயங்குபவை. இந்தியா இப்போது இதே மாதிரியில் சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவதில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கு ஆயத்தங்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.)

Posted in ADMK, Aircraft, Arms, Atom, Attack, Backgrounders, Ban, Boat, carrier, Coast, Communists, defence, Defense, Details, energy, Fighter, Foreign, Fuel, Govt, Gulf, Harbor, Harbour, International, Iran, Iraq, Issues, Jets, Madras, Navy, Nimitz, Nuclear, Ocean, Pakistan, Party, Politics, Protest, Sea, Ship, Spy, Submarines, Terrorism, US, USA, USS Nimitz, Vessel, warship, Weapons, World | 1 Comment »

India’s RAW & CBI Backgrounder – Infiltrations

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

உளவுத் துறையில் ஊடுருவல்

டி.புருஷோத்தமன்

நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய இடம் வகிப்பது “ரா’ (ரிசர்ச் அண்டு அனலிசிஸ் விங்) என்னும் உளவுத் துறையாகும்.

உலகின் தலைசிறந்த அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. (சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி) அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு “ரா’ உளவு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

1968 செப்டம்பர் 18-ல் “ரா’ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ரூ. 2 கோடி முதலீட்டில் 250 ஏஜெண்டுகளுடன் இது செயல்படத் தொடங்கியது. பின்னர் 200 ஏஜெண்டுகளாக அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் ஏஜெண்டுகளுடன் ரூ.1500 கோடி பட்ஜெட்டில் விரிவான அளவில் செயல்பட்டு வருகிறது. இதை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர் ஆர்.என்.காவ்.

இதன் தலைமையகம் தில்லியிலும் அதன் பிராந்திய அமைப்புகள் நாட்டின் இதர பகுதிகளிலும் அமைந்துள்ளன. “ரா’ இயக்குநர் முக்கியத் தகவல்களை பிரதமரிடம் உடனுக்குடன் தெரிவிப்பார். நாடாளுமன்றத்துக்கு இத்தகவல்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

அண்டை நாடுகள் அனைத்திலும் நடைபெற்றுவரும் சம்பவங்கள் நமது நாட்டுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்னும் உளவுத் துறை நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிட்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடுவதற்கு ஐ.எஸ்.ஐ. முக்கிய காரணமாகும்.

மேலும் பஞ்சாபில் சீக்கியர்களிடையே தீவிரவாதத்தை விதைக்கும் பணியிலும் பாகிஸ்தான் உளவுத் துறை ஈடுபட்டது.

இவற்றையெல்லாம் முறியடிக்கும் முக்கியப் பணியை “ரா’ மேற்கொண்டது. 1983-93 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பின் ஏஜெண்டுகள் 35 ஆயிரம் பேர் பணியாற்றியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

வங்கதேசத்தில் முஜிபுர் ரகுமானின் தலைமையிலான முக்தி வாகினி அமைப்புக்கு “ரா’ உளவுத் துறை முழு ஒத்துழைப்பை அளித்து தனி வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தது என்பது உலகறிந்த உண்மை.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற “ரா’ உளவு அமைப்பில் சதிகாரர்களின் ஊடுருவல் இருந்துவருவது கவலையளிக்கும் விஷயமாகும்.

பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் “ரா’ அமைப்பின் இணை இயக்குநராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை அங்கு உயர் அதிகாரியாக அவர் பணியாற்றி வந்தார். உளவு அமைப்பின் அனைத்து ரகசியங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.

இதற்கிடையில் உளவு அமைப்பின் மிக முக்கிய ரகசியங்கள் பிற நாடுகளுக்குக் கசியத் தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சரவை செயலகம் புலனாய்வில் இறங்கியது. தேவன் சந்த் மாலிக் மீது கண்காணிப்பு தொடங்கியது. உளவு அமைப்பின் ரகசியங்களை மாலிக்தான் வெளிடுவது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியது.

எனவே மாலிக் மீது தில்லி காவல் நிலையத்தில் மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள “ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்’ இயக்குநர் அனுஜ் பரத்வாஜ் புகார் செய்தார். போலீஸ் கிடுக்கிப்பிடி இறுகியதை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார் மாலிக்.

மாலிக்கை பற்றிய விவரங்களை சேர்க்க முற்பட்ட போலீஸôர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பதிவேட்டில் அவரைப் பற்றிய விவரம் ஆய்வு செய்யப்பட்டது. மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்தப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முகவரியில் விசாரித்தபோதுதான், மாலிக் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வங்கதேசத்துக்காக ஒற்றர் வேலை பார்த்தார் என்பதும் உறுதியானது.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், குறிப்பாக உளவுப் பிரிவுகளில் உளவாளிகள் ஊடுருவது அடிக்கடி நடைபெறும் விஷயமாகிவிட்டது.

2004 ல் “ரா’ உளவுப் பிரிவின் இணைச் செயலராகப் பணியாற்றிவந்த ரவீந்தர் சிங் என்பவரும் இதேபோன்று அமெரிக்க அரசுக்கு ஒற்றராகச் செயல்பட்டார். அவரைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு முன்பாகவே அவர் அமெரிக்காவுக்கு தப்பியோடி விட்டார். அத்துடன் “ரா’ உளவுப் பிரிவின் முக்கிய ஆவணங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டார்.

நமது நாட்டின் உளவுத் துறையில் பணியாற்றுவோரை அந்நிய நாடுகள் ரகசியமாக விலைகொடுத்து வாங்கி முக்கிய ஆவணங்களைப் பெற்றுவிடத் துடிக்கின்றன.

எனவே இனியாவது இத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை நன்கு ஆய்வுசெய்து பணிப் பொறுப்புகளை அளிக்க வேண்டும். இல்லாவிடில் அரும்பாடுபட்டு சேகரிக்கப்படும் முக்கியத் தகவல்கள் எதிரி நாடுகளுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் எளிதில் கிடைத்துவிட ஏதுவாகிவிடும். இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

Posted in 007, agent, Arms, Attack, Bad, Bangladesh, Bengal, Betray, Bribery, Bribes, Budget, CBI, Cells, Cheat, China, CIA, Corruption, counterintelligence, defence, espionage, Extremism, FBI, Foreign, Govt, Infiltration, Influence, Intelligence, International, Investigation, ISI, J&K, Jammu, Kashmir, KGB, kickbacks, Military, Negative, Pakistan, RAW, secret, Spy, Srinagar, Tamil, Terrorism, Terrorists, Undercover, Weapons, World | Leave a Comment »