நம் இதயத் தலைவர்
குமரி அனந்தன்
(கட்டுரையாளர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்)
அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வேலைக்குச் சேர்ந்தால் கட்சிப் பணிகளுக்குச் செல்ல முடியாதென்பதால், மதுரையில் தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து தமிழ்த்துறை தலைவராகப் பணி புரிந்தேன்.
மதுரையிலும், சுற்றியிருக்கின்ற மாவட்டங்களிலும் சொற்பொழிவிற்குச் செல்வேன். மாலையில் வகுப்புகள் முடிந்த உடன், பேருந்தில் ராமநாதபுரம் சென்றால், கூட்டம் பேசி முடிப்பதற்குள் கடைசிப் பேருந்து போய்விடும். மதுரைக்கு லாரியில் திரும்பி காலை வகுப்புகளுக்குச் சென்று வருவேன். இதனால் மதுரை அன்பர்களிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தேன்.
அன்று மதுரை மொட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டம், கலந்து கொள்வது யாரென்றால் காமராஜ்! ஈ.வே.கி. சம்பத்தும் அவரோடு சுற்றுப் பயணத்திலிருந்தார். காமராஜ் இந்தக் கூட்டத்திலே பேசுவதாக ஏற்பாடு.
கூட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தலைவர் வரும் வரை என்னைப் பேசச் சொன்னார்கள். பேசிக் கொண்டிருந்தேன். அதோ! தலைவரின் கார் வந்துவிட்டது. மேடையருகில் காரிலிருந்து இறங்கிய தலைவரைக் கண்டதும் “”எனவே பெரியோர்களே”… என்று என்னுடைய பேச்சை நிறைவு செய்ய எண்ணி முத்தாய்ப்பு வைப்பதற்கு முனைந்தேன்.
வந்து மேடையில் அமர்ந்திருந்த தலைவர், முதுகில் ஒரு தட்டு தட்டி “”பேசுன்னேன்” என்றார். அந்த உற்சாகத்திலேயே நெஞ்சிலிருந்த சொற்கள் வேகமாக வெளிவந்தன. மற்ற தலைவர்கள் பேசிய பின் பெருந்தலைவர் பேச கூட்டம் நிறைவடைந்தது. ஓரிரு நாள்களில் என்னை சொல்லின் செல்வர் சம்பத் தொலைபேசியில் அழைத்து “”உன்னை ஐயா சென்னைக்கு வந்து அவரைப் பார்க்கச் சொன்னார்” என்றார்.
நான் சென்னைக்குச் சென்றதும் திருமலைப்பிள்ளை வீதியிலிருந்த ஐயா வீட்டிற்குச் சென்றேன்.
ஐயா “”உன்னை கட்சி வேலைக்கு எடுத்துக்கலாமின்னு நினைக்கிறேன். ஆனா உனக்கு குடும்பம் இருக்கு… இப்ப வேலை பார்த்துக்கிட்டிருக்க! சம்பளம் வரும்ல. அதனால குடும்பத்தைப் பார்த்துக்கிட்டே காங்கிரசில பணம் கிணம் எதுவும் வராதுன்னேன். உங்க மாமனார் பங்களா நுங்கம்பாக்கத்திலே இருக்கே. அத நான் தான் திறந்து வச்சேன். அவர் வசதியானவர்… அவர் வந்து உன் குடும்பத்தைப் பார்த்துக்கிடுவேன்னு சொல்லச் சொல்லுன்னேன்”…என்றார்.
இத்தகவலைச் சொன்னவுடன், உடனேயே வந்து தலைவரிடம் தன் சம்மதத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார், என் மாமனார் சங்கு கணேசன்.
அப்போதும் தலைவர் காமராஜ் கட்சியில் எனக்கு என்ன பணி என்று சொல்லவில்லை.
“”சத்தியமூர்த்தி பவன் போய் ராவன்னா கினாவை பாருன்னேன்” என்று கூறினார்.
மறுநாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ரா. கிருஷ்ணசாமி நாயுடுவைப் போய் பார்த்தேன்.
அவர் “ஐயா, உன்னைத் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நியமிக்கச் சொல்லி உள்ளார்’ என்று தெரிவித்தார்.
இந்த நியமனத்தை முறைப்படி செய்ய வேண்டியவர் தான் அதைச் சொல்ல வேண்டுமென்று நினைத்தார் பெருந்தலைவர் காமராஜ்.
அப்போது சென்னை மாநகருக்கு 100 வட்டங்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை வட்டம்தோறும் சென்று சத்திய சோதனை வகுப்பு நடத்தி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை இளைஞர்களுக்குச் சொல்லுவோம்.
இதை அறிந்த தலைவர், எனக்கென்று ங.ந.ய. 9835 என்ற எண் உடைய பியட் காரை ஒதுக்கிக் கொடுக்கச் சொன்னார். அதற்கு ஓட்டுநர் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸôல் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டார்.
ஒருநாள் வீட்டிலிருந்து சத்தியமூர்த்தி பவனுக்குக் கொண்டு இறக்கி விட்டு எதற்கோ வெளியே சென்று விட்டார் ஓட்டுநர்.
உள்ளே நிர்வாகியாக இருந்த ராமண்ணா “”அனந்தன்! உன்னை ஐயா உடனே வரச் சொன்னார்” என்றார்.
வெளியே ஓட்டுநர் இல்லை! வரட்டும் என்று காத்திருந்தேன்.
உள் அறையில் ஏதோ வேலை பார்த்துவிட்டு அப்போது வெளியே வந்த ராமண்ணா, என்ன…? நீ இன்னும் போகவில்லையா. ஐயா சீக்கிரமா வரச் சொன்னாரப்பா… என்றார்.
உடனே நான் வெளியே போனேன். அப்போதும் ஓட்டுநர் அங்கே இல்லை. நானே காரை எடுத்துக் கொண்டு ஐயா வீட்டிற்குச் சென்றேன்.
நான் முன் வாசலில் செல்கின்ற நேரம் ஐயா எதற்காகவோ அங்கே வந்தார்.
ஐயாவைக் கண்டதும் காரை நிறுத்திவிட்டு இறங்கி நான் வேகமாக ஐயாவை நோக்கிச் சென்றேன். ஐயா, வியப்புடன், “”ஏம்பா! உனக்கு கார் ஓட்டத் தெரியுமான்னேன்” என்றார்.
“”ஆமா! ஐயா!”
பிறகு எதற்காகக் கட்சி சம்பளத்திலே ஒரு டிரைவர்னேன் என்றார்.
அன்றிலிருந்து நானே ஓட்ட ஆரம்பித்தேன்!
ஒரு நாள் வழக்கம்போல் ஐயா வீட்டிற்குச் சென்றேன்.
“”ஆமா நீ நல்லா பேசறதா எல்லாரும் சொல்றாங்க, நீ தான் பேசுவியே! நல்லாத்தான் இருக்கும். கூட்டத்திலே பேசுறதுக்கு காசு தாறாங்களாமில்ல… எவ்வளவு தாறாங்க?”
“”ஐயா! நூறு ரூபாய் தருவாங்க!”
“”ஆமா அப்படின்னா கட்சியிலே பெட்ரோலுக்கு ஏன் பணம் வாங்கிறீங்கன்னே! நீயே போட்டுக்கன்னேன்” என்றார்.
கட்சிப்பணம் செலவாகக் கூடாது என்பதில் என்ன அக்கறை!
அப்போது பெட்ரோல் விலையோ காலனுக்கு (5 லிட்டர்) 3 ரூபாய் ஐம்பத்தாறு பைசா தான். 1965 ஆண்டில் அது தானே விலை.
காலம் பல கடந்தது. பல கூட்டங்கள், பல ஊர்வலங்கள், பல மாநாடுகள் என்று பல்வேறு கட்சிப் பணிகளில் உழைத்ததோடு தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரிகளுக்குச் சென்று இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தேன்.
தமிழ்நாடு காங்கிரஸிலிருந்த பல தலைவர்களில், ஒரு தலைவர்மட்டும் நான் என்ன தான் உழைத்தாலும் அதை அங்கீகாரம் செய்யவே மாட்டார்.
நானும் பொறுத்துப்பொறுத்துப் பார்த்து ஒரு நாள் ஐயாவிடம், இதனால் ஏற்பட்ட மனக்குறையைத் தயங்கித் தயங்கி வெளியிட்டேன்.
ஐயா சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
பின் என்னை உற்றுப் பார்த்தார். “”உட்காருன்னேன்” என்றார் நின்று கொண்டிருந்த நான் அமர்ந்தேன்.
“”உனக்குப் பக்கத்து ஊர்ணு வச்சுக்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்திருக்காங்க. நீ மருந்து வாங்கிட்டு போகணும். நீ நடந்து போற பாதையிலே ஒரு பாறை விழுந்து கிடக்குண்ணு வச்சுக்க… என்ன பண்ணுவ!
“”பாறையை அசைக்க முடியாது. மருந்து கொண்டு போயாகணும்…
அம்மாவுக்கல்லவா மருந்து!”
“”யாராவது பாறையை எடுத்துப் போடட்டும், போகலாம்ணு அங்கேயே நிப்பியா?…” மருந்து கொண்டு போகணுமில்ல… என்ன செய்வேன்னேன்…?
பாறையைச் சுற்றிப் போவேன் ஐயா!
“”இப்பவும் சுற்றிகிட்டு போ! தாய்க்கு மருந்து கொண்டு போறது போல கட்சி வேலைன்னேன்…”
“”பாறை கிடக்குதா?
சுற்றிப் போன்னேன்… போறத நிறுத்தாதேன்னேன்.
இந்தச் சொற்கள் அவர் இதயத்திலிருந்து வந்தவை…
என் இதயத்தைத் தொட்டன.
அவர் இமயத் தலைவர் “”நம் இதயத் தலைவர்”!