87 ஆண்டுகளாக, போலீஸ் வைத்திருக்கும் மஸ்கட் துப்பாக்கியில் மாற்றம் வருமா?- ருசிகரத் தகவல்கள்
“இத வைச்சு ஒரு தடவை கூட நான் சுட்டதில்லை சார். இருந்தாலும் 32 வருஷமா இந்த துப்பக்கியை நான் சுமந்துகிட்டுதான் இருக்கிறேன்” என்கிறார் நெல்லை போலீஸ் நிலையம் ஒன்றில் “பாரா”வாக நிற்கும் போலீஸ்காரர் ஒருவர்.
ஒட்டுமொத்த தமிழக போலீசார் வைத்திருக்கும் துப்பாக்கியின் பெயர்: 4.10 `மஸ்கட்’ துப்பாக்கி.
இதன் எடை 7 பவுண்டு. நீளம் சுமார் 4 அடி.
இந்திய போலீசாருக்கு தரப்பட்டிருக்கும் ஆயுதங்கள் இரண்டு. ஒன்று `லத்தி’ மற்றொன்று துப்பாக்கி. `லத்தி’ என்பது தமிழிலில் `யானைச்சாணம்’ போல் தெரிந்தாலும் நிஜத்தில் இது கிரேக்கச்சொல்.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை இந்த லத்தி 2 முதல் 3 அடி நீளம் கொண்ட பிரம்பு அல்லது மூங்கிலால் செய்யப்பட்டவை ஆகும். இதுவே வட மாநிலங்களில் 5 அடிநீளத்தில் மெட்டல் `ஸ்பூன்’ பொருத்திய உருட்டுக்கட்டையாகும்.
பழைய மாடல்களை `தூசு’ தட்டிவிட்டு 1920 களில் தரப்பட்ட இந்த மஸ்கட் துப்பாக்கிக்கு இப்போது வயது 87 ஆகிறது.
உலகில் எல்லாமே நவீன மயமாகிவிட்டபோதிலும் இந்த மஸ்கட் துப்பாக்கி மட்டும் மாறவேஇல்லை.
தமிழகத்தை பொறுத்த வரையில் 632 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற வகையில், 51 ஆயிரத்து 27 பேருக்கு ஒரு போலீஸ் நிலையம் என்ற கணக்கில் 84 ஆயிரத்து 328 போலீஸ்காரர்கள் பணியில் இருப்பதாக தமிழக காவல்துறை இணைய தளம் சொல்கிறது.
சென்னையில் அதிகப்படியாக 155 போலீஸ் நிலையமும், 13 ஆயிரத்து 966 போலீஸ்காரர்களும் உள்ளனர்.
இவர்களுக்காக தமிழக போலீஸ் நிலையங்களில் 90 ஆயிரம் `மஸ்கட்’ துப்பாக்கிகள் உள்ளன.
இந்த துப்பாக்கிகளை `பாரா’க்காரர் தவிர வெளியே பாதுகாப்புக்காக செல்லும் பணியின்போதும், அவசர அதிரடி சமயத்திலும் உயர் போலீஸ் அதிகாரியின் உத்தரவு பெற்று வெளியே எடுத்துச்செல்லவேண்டும்.
இதேபோல அதிகாரி `சார்ஜ்’ உத்தரவுக்கு பிறகுதான் போலீசார் சுட வேண்டும்.
இன்றைய தேதியில் இந்தியாவிலேயே போலீஸ் துறை அதி நவீனமாகி இருப்பது தமிழகத்தில்தான்!
“இருந்தாலும் இந்த துப்பாக்கிக்கு ஒரு விடிவு காலம் இல்லையே சார். அவசரத்துக்கு சுடணும்ணா ஒவ்வொரு தடவையும் துப்பாக்கிய இழுத்து, புடிச்சு திறந்து ஒரே ஒரு குண்டைத்தான் போட முடியும். அதுவும் 200 அடி தூரத்துக்குத்தான் போகும். அதுக்குள்ள `திருடன்’ தப்பிச்சு போயிடமாட்டானா? என்கிறார் மதுரை போலீஸ்காரர் ஒருவர்.
இந்தியா முழுவதும் இதே ரக துப்பாக்கிதான் என்றாலும் தமிழக காவல்துறை நினைத்தால் இதனை மாற்ற முடியும் என்கிறார் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்.
பிரபல தி.மு.க. பேச்சாளர் ஒருவர் முழங்குகிறார். `எதிர் கட்சியினருக்கு இங்கே நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். கஞ்சிப்பசை போட்டு, இருபக்கமும், நீட்டி, நிமிர்த்திக்கொண்டிருந்த தமிழக போலீசாரின் அரைக்கால் டவுசர்களை `புல் பேண்ட்’ ஆக்கியது இதே தானைத்தலைவர் கலைஞர் ஆட்சியில்தான்” என்கிறார் பலத்த கர கோஷத்திற்கிடையே!
தமிழக காவல்துறையை பொறுத்த வரையில் `கிரைம் ரேட்’ கள் ஆண்டுக்காண்டு குறைந்த வண்ணம் உள்ளன.
2002-ல் 1647 கொலைச்சம்பவங்கள் உள்பட 26 ஆயிரத்து 696 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுவே 2003-ல் 25 ஆயிரத்து 262 குற்றச் சம்பவங்களும், 2004-ல் 23 ஆயிரத்து 675 குற்றச் சம்பவங்களும், 2005-ல் 21 ஆயிரத்து 538 சம்பவங்களும், கடந்த 2006-ல் 18 ஆயிரத்து 858 குற்றச்சம்பவங்களும் நடந்துள்ளன.
தொடக்க காலத்தில் பொது மக்களுக்கு பயம் ஏற்படுவதற்காக இந்த நீள மஸ்கட் துப்பாக்கி அறிமுகப்ப டுத்தப்பட்டது என்றாலும் இப்போது அதனை கண்டு யாரும் பயப்படுவதில்லை என்கிறார் சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர்.
ஏ.கே. 47 துப்பாக்கி என்றால்தான் இப்போது பொதுமக்களுக்கு பயம் இருக்கிறது என்கிறார் மேலும் அவர்.
இந்த துப்பாக்கிகளின் விலையை பொறுத்த மட்டில் `மஸ்கட்’ துப்பாக்கியின் விலை ரூ.9 ஆயிரமாகவும், ஏ.கே. 47 ரக துப்பாக்கியின் விலை ரூ. 14 ஆயிரமாகவும் இருக்கிறது.
மேலை நாடுகளில் எல்லாம் நவீன துப்பாக்கிகளை போலீஸ் வைத்திருக்கும் பட்சத்தில் இந்தியாவில் மட்டும்தான் இந்த பழைய துப்பாக்கியை பயன்படுத்தி வருகிறோம்.
அதி நவீன ரக `பிஸ்டல்கள்’ எல்லாம் இப்போது வந்துவிட்டன. தோள்பட்டை வலிக்கும் இந்த துப்பாக்கிகளை தூக்கிகொண்டு மூச்சிறைக்க ஓட வேண்டியதில்லை. எடுத்தவுடன் `டமார்’ என்று சுட்டுவிடலாம். இதுபோல் போலீஸ்காரர்களுக்கு `ரிவால்வர்’ தரும் பட்சத்தில் பணி சுலபமாகும் என்கிறார் திருச்சியைச் சேர்ந்த போலீஸ்காரர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த மகளிர் போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது “ இந்த துப்பாக்கியை சுமந்து கொண்டு நெல்லை கோர்ட்டுக்கு சென்று திரும்புவதற்குள் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறது” என்கிறார்.
லெகுவான, நவீன ரக துப்பாக்கிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆவல் அனைத்து போலீசாரிடமும் உள்ளது. “
“துப்பாற்க்கு துப்பாய, `மஸ்கட்’ துப்பாக்கி மாறும்போது தூவுமாம் மழை”