அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்!
கே.ராமமூர்த்தி
“”அரசியல்” என்ற வார்த்தையையே ஏளனம் தொனிக்கும் வகையில்தான் நாம் பயன்படுத்துகிறோம். அதாவது, அரசியல் என்றாலே ஊழல், முறைகேடு, வேண்டியவருக்குச் சலுகை, அதிகார துஷ்பிரயோகம் என்றே முடிவு கட்டப்படுகிறது. “”சாணக்கியன்”, “”மாக்கியவல்லி” என்று ஒருவரைக் குறிப்பிடும் அடைமொழிகூட, “”அந்த ஆள், இந்த அத்துமீறல்களில் கைதேர்ந்தவர்” என்ற வஞ்சப் புகழ்ச்சியாகவே இருக்கிறது.
மனிதர்கள் முதலில் சமுதாயமாகக் கூடி வாழ ஆரம்பித்தபோது அவர்களுடைய தலைவனின் அதிகாரமும் ஆளுமையும்தான் அவர்களைக் காத்தது. வேளாண்மையும் வர்த்தகமும் சமுதாயத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தவுடன், கிரேக்க நாட்டில் போலீஸ், குடிமகன் என்ற வார்த்தைகள் சமூகத்தில் இடம்பெறலாயின. ரோமானியச் சட்டத்துக்கும் சட்டப்படியான ஆட்சிக்கும் மேற்கத்திய நாடுகளில் முக்கியத்துவம் தர ஆரம்பித்தனர். கீழை நாடுகளில் பஞ்சாயத்து, தர்மம் ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றன.
மனிதனின் அடிப்படையான வக்கிரபுத்தி, சுயநலன் சார்ந்த எண்ண முரண்பாடுகள், அதிகாரத்தைச் செலுத்தியவர்களின் சமச்சீரற்ற நோக்கு, பரம்பரை அதிகாரம் ஆகியவற்றால் இந்தச் சமுதாயத்தில் மோதல்களும் அமைதியின்மையும் நிரந்தர அம்சங்களாகிவிட்டன.
இப்போது அரசியல்வாதி என்றாலே அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாகிறான். அரசியல் கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் முழுமை பெறாது. கட்சிகளே இல்லாமல் தேர்தல் நடத்தி நல்லவர்களை, நேர்மையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்கள்கூட வலியுறுத்தினார்கள். இவையெல்லாம் வெறும் லட்சியங்களாகவே நின்றுவிட்டன.
நவீன அரசியல் பாட ஆசான் ஜே.சி. ஜோஹரி குறிப்பிடுவதைப் போல, அரசியல் கட்சிகள் பங்கு பெறாமல் இப்போதைய ஜனநாயகம் இல்லை; இந்தியா போன்ற பன்முகத்தன்மை உள்ள நாட்டில் வெவ்வேறு குழுக்கள் அரசியல் கட்சிகளுடன் நேரடியாகவோ, ரகசியமாகவோ கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலில் கூட்டணி அமைத்து தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்கின்றன. அரசியல் கட்சிகளுக்குத் தொண்டர்களும் நிதியும் அவசியம். அவற்றை இந்தக் குழுக்கள் அளிக்கின்றன. இந்தக் குழுக்களுக்கு ஒரு திசைவழியும், வழிநடத்திச் செல்ல ஒரு தலைவனும் தேவை. அதை அரசியல் கட்சிகள் தருகின்றன.
இதுவரை நடந்துள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், எந்த மாதிரியான அரசு தேவை என்று வாக்காளர்களுக்குப் பாடம் கற்றுத் தருவதும், எந்த மாதிரியான அரசுகள் தங்களுக்குத் தேவை என்று வாக்காளர்கள் அரசியல் கட்சிகளுக்குப் பாடம் கற்றுத்தருவதும் வெகு நேர்த்தியாகவே நடந்துவருவது புலனாகும்.
இந்திய வாக்காளர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல -பல்வேறு வகையான கூட்டணி அரசுகளைப் பார்த்துவிட்டார்கள். தேர்தலில் கூட்டு வைத்து, பிறகு அரசிலும் அப்படியே நீடித்த கூட்டணிகளையும், தேர்தலுக்கு முன்பு கடுமையாகப் போட்டியிட்டு எதிர்த்துவிட்டு பிறகு ஆட்சியமைக்க பெரும்பான்மை இடங்கள் தேவை என்றதும், எந்தக் கட்சியைப் பிரதானமாக எதிர்த்தார்களோ அந்தக் கட்சியையே கூட்டாளியாக்கிக்கொண்ட கூட்டணியையும், ஒரே மாதிரியான சித்தாந்தமே இல்லாமல் “”அவியலாக” உருப்பெற்ற கூட்டணிகளையும் மக்கள் பார்த்துவிட்டார்கள்.
இந்நாட்டு வாக்காளர்களில் பெரும்பான்மையினரான கிராமவாசிகள் குறித்து டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. “”இந்திய கிராமவாசிகளைப்பற்றி நன்கு அறிவேன். அவர்களுக்கு நல்ல பொதுஅறிவும், அனுபவ அறிவும் இருக்கிறது. அவர்களுக்கென்றே உறுதியான ஒரு கலாசாரம் இருக்கிறது. முறையாக விளக்கினால் அவர்கள் தங்களுக்கு எது நல்லது, நாட்டுக்கு எது நல்லது என்று ஆராய்ந்து சரியாக முடிவெடுப்பதில் வல்லவர்கள்” என்றார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகள், அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பதை நிரூபித்துவிட்டன.
அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்துக்கு மிகவும் இன்றியமையாத அம்சங்கள். ஆனால் நமது அரசியல்சட்டத்தை வகுத்த முன்னோடிகள் அரசியல் கட்சிகளுக்கென்று தனியாக எந்தவித சட்டவிதிமுறைகளையோ கோட்பாடுகளையோ அரசியல் சட்டத்தில் சேர்க்காமல் விட்டுவிட்டனர். சொல்லப்போனால் நமது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறதே தவிர, அரசியல் கட்சிகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை. எந்தவித வரைமுறைகளையும் இந்த விஷயத்தில் உருவாக்காமல் விட்டுச் சென்றது வியப்பாக இருக்கிறது. இந்தக் குறையை ஈடுகட்டும் விதத்தில் அரசியல் கட்சிகள் செயல்படுவதற்கான வரம்புகளைக் குறிப்பிட்டு தேர்தல் கமிஷன் இப்போது விளக்கம் அளிக்கிறது. கட்சி மாறுவதைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்காகவே அரசியல்சட்டத்தில் தனிப்பிரிவையே உருவாக்கலாம். அதில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிட்டுவிடலாம். 1999-ல் இந்திரஜித் குப்தா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகளை இச்சட்டப் பிரிவில் சேர்க்கலாம்.
அரசியல் ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்க, அவற்றையும் மத்திய நிர்வாக நடுவர் மன்றத்தின் விசாரணை வரம்பில் கொண்டுவரலாம். உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட தாஜ் வணிக வளாகத் திட்டத்தை உதாரணத்துக்குக் குறிப்பிடலாம்.
சமுதாய நலனில் அக்கறை கொண்டு எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், கடைசியில் ஒரு சிலருக்கு மட்டும் பயன்படுவதை அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். ஒரு பொது நன்மைக்காகக் குரல்கொடுப்பவர்கள் யார், ஒரு குழு நலனுக்காக மட்டும் செயல்படுகிறவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது எளிது. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் என்று பார்க்காமல் முடிவுகளை எடுப்பது நன்மை தராது. அப்படிப்பட்ட முடிவுகள் எடுப்பது தொடர்பாக நிர்வாகச் சட்டத்தில் விரிவாகக் குறிப்பிட வேண்டும். எனவே தவறு செய்ய வழி இல்லாமல் போகும்.
அப்படி ஒரு சட்டபூர்வ பாதுகாப்பு இல்லாவிட்டால், விவசாயிகளின் கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்வது, கல்வியில் 10-2-3 என்று அடிப்படையை மாற்றுவது போன்ற முடிவுகளை துணிச்சலாக எடுக்க முடியாது. குற்றம் செய்தவர்களைத் தப்புவிக்கும் வழியே இருக்கக் கூடாது. அதேசமயம், முடிவுகளை எடுப்பதில் தொலைநோக்குப் பார்வைக்கும் துணிச்சலுக்கும் பாதுகாப்பு தருவதுடன், ஊக்குவிப்பும் அளிக்க வேண்டும்.
அரசியல்வாதி என்பவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள்தான் அவகாசம். அதற்குள் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். தாம் செய்த தவறுகளுக்கும் செய்யாமல்விட்ட நன்மைகளுக்கும் மக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.
அரசியல்வாதிக்கு தேசபக்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த தேசபக்தி எப்படி இருக்க வேண்டும் என்று ராஜாஜி பின்வருமாறு கூறுகிறார்:
“”நம்நாட்டின் கிராமங்களிலும் நகரங்களிலும் வசிக்கும் சாமான்ய மக்களை நீங்கள் நேசிக்கிறீர்களா? அவர்களுடைய மொழியை விரும்புகிறீர்களா? அவர்களுடைய வாழ்க்கை முறையையும் போக்கையும் ரசிக்கிறீர்களா? அவர்களுக்குள்ள தெய்வநம்பிக்கை மீது உங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறதா, அதை அவர்களுடைய அறியாமை என்று கருதுகிறீர்களா? அவர்களைவிட நமக்கு பரந்த அறிவு இருக்கிறது என்று கருதுகிறீர்களா?
இப்படி அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்கள் விரும்புகிறவராக இருந்து அதையெல்லாம் தொகுத்தால், அதுதான் தேசபக்தி… அவர்களுடைய குறைகளையும் பார்க்கிறேன், அவர்களிடம் உள்ள மெச்சத்தக்க குணாதிசயங்களையும் பார்க்கிறேன். விரக்தியான அவர்களுடைய மனோபாவத்தை நான் கண்டிக்கிறேன். இப்போது செய்வதைவிட அதிக ஆற்றலுடன் காரியங்களைச் செய்யுமாறு அவர்களைத் தூண்டுவேன். மற்றவர்களிடம் அதிக சகிப்புத்தன்மையுடனும் அன்புடனும் பழகுமாறு அறிவுறுத்துவேன். பொதுநன்மைக்காக மேலும் ஒற்றுமையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்வேன்” என்கிறார் ராஜாஜி.
அரசியல்வாதி என்பவர், ராஜாஜி கூறிய சித்தாந்தப்படி வாழத்தலைப்பட்டால் அவருடைய மற்ற குறைகளையெல்லாம் நமது ஜனநாயக அமைப்பும், அரசியல் சூழலுமே திருத்திவிடும்.
(கட்டுரையாளர்: குஜராத் அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்.)