To all young short story writers & aspirants – A letter from Editor Kalki
Posted by Snapjudge மேல் மே 1, 2007
இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வார்த்தை – கல்கி
சிறுகதை எழுதும் துறையில் இளம் எழுத்தாளர்கள் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய எழுத்தாளரின் தொகை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது மகிழ்ச்சிக்குரியது.
புதிய எழுத்தாளர்கள் தாங்கள் மிகப் பிரயத்தனப்பட்டு எழுதிய சிறுகதைகளை மாதப் பத்திரிகைகளுக்கும் வாரப் பத்திரிகைகளுக்கும் அனுப்புகிறார்கள். அவற்றில் சில பிரசுரிக்கப்படுகின்றன. சில கதைகள் ஆசிரியரின் வந்தனத்துடன் திருப்பி அனுப்பப்படுகின்றன.
கதைகளைத் திரும்பப் பெற்றவர்கள் மனத்தில் அதிருப்தி ஏற்படுகிறது. அவர்கள் பத்திரிகை ஆசிரியர்களிடம் குறைபடுகிறார்கள். பத்திரிகை ஆசிரியர்கள் இளம் எழுத்தாளர்களை ஆதரிப்பதில்லை என்றும், அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதில்லை என்றும், மீண்டும் மீண்டும் ஒரு சில எழுத்தாளர்களின் கதைகளையே வெளியிடுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு சில ஆரம்ப எழுத்தாளர்கள் வேறு பத்திரிகைகளில் வெளியான கதைகளை, கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றிப் புதிதாகத் தாங்கள் எழுதியதுபோல் அனுப்பி விடுகிறார்கள். இன்னும் சிலர் முன்னம் வெளியான கதைகளில் சிற்சில நிகழ்ச்சிகளை மட்டும் மாற்றி எழுதி அனுப்பிவிடுகிறார்கள். அத்தகைய கதையைத் திருத்தம் செய்து வெளியிட்டால், கதை அந்த எழுத்தாளர் ஏற்கெனவே பார்த்து எழுதிய மூலக் கதையின் உருவத்தைப் பெற்று விடுகிறது.
பல பத்திரிகைகளைப் படிக்கும் வாசக நேயர்கள் ‘இந்தக் கதை இன்ன தேதியில், இன்ன பெயரில், இந்தப் பத்திரிகையில் வெளியானது’ என்று கடிதம் எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.
பத்திரிகைகளில் கதைகள் வெளியிடுவதற்கு உதவி ஆசிரியர்கள் கதைகளைப் பொறுக்கி எடுக்கிறார்கள். ஏற்கெனவே வெளியான கதை என்பது வாசக நேயர்களுக்குத் தெரியும்போது, உதவி ஆசிரியர்களுக்குத் தெரியாமலா போய்விடும் என்ற கேள்வி எழுகிறது.
ஆம்; உதவி ஆசிரியர்களுக்குச் சில சமயம் தெரியாமல்தான் போய் விடுகிறது. அதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. சற்றுப் பிரபலம் அடைந்த பத்திரிகைகளுக்கு நூற்றுக்கணக்கான சிறுகதைகள் புதிய இளம் எழுத்தாளர்களிடமிருந்தும் வழக்கமாக எழுதும் பழைய எழுத்தாளர்களிடமிருந்தும் வாரந்தோறும் வருகின்றன. இவ்வளவையும் உதவி ஆசிரியர்கள் படித்து, வெளியிடத் தகுதியானவற்றைப் பொறுக்கி எடுக்க வேண்டி வருகிறது.
வருஷக்கணக்கில் பார்க்கும்போது இவ்வாறு உதவி ஆசிரியர்கள் படிக்கும் கதைகள் ஆயிரக்கணக்கில் போய் விடுகின்றன.
இவற்றுடன் வேறு பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளையும் உதவி ஆசிரியர்கள் படிக்க வேண்டியிருக்கிறது.
ஆகவே, எந்தக் கதையைப் படித்தாலும், ‘‘முன்னே எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறதே!’’ என்று தோன்றுகிறது. சமூகக் கதைகள், குடும்பக் கதைகள், கிராம வாழ்க்கைக் கதைகள் எல்லாவற்றிலும் சில நிகழ்ச்சிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. சில சமயம் கதைப் போக்கும் ஒன்று போல இருக்கும். எழுதும் முறையிலேதான் வித்தியாசம் இருக்கும்.
வாசக நேயர்களுக்குக் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கும் கடமை இல்லை. பத்திரிகைகளிலே அச்சிட்டு வெளியாகும் கதைகளை மட்டும் படிக்கிறார்கள். ஆகையால், அவர்களில் சிலருக்கு இந்தக் கதை, இந்தப் பத்திரிகையில் முன்னமே வந்தது என்பதைத் திட்டமாக உடனே கண்டுபிடிக்க முடிகிறது. உதவி ஆசிரியர்களுக்கு இந்தச் சௌகரியம் கிடையாது.
ஆகையால், கதை எழுதி அனுப்புகிறவர்கள் எல்லாம் சொந்தக் கற்பனையினால் எழுதுகிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படை பேரில்தான் அவர்கள் கதைகளைப் பரிசீலனை செய்து பொறுக்க வேண்டியிருக்கிறது.
இந்த நிலைமையில், இரண்டொரு எழுத்தாளர்கள் பழைய கதைகளைப் பெயர்த்து எழுதி அனுப்பி, அவை பிரசுரிக்கப்பட்டுவிட்டால் பத்திரிகையின் நல்ல பெயர் பாதிக்கப்படுகிறது.
இம்மாதிரி நேரிடாமல் தடுக்க ஒரு வழி உண்டு. நன்றாகப் பழக்கமான பழைய எழுத்தாளர்களின் கதைகளையே பிரசுரிப்பது என்று வைத்துக்கொண்டால், வேறு பத்திரிகைகளில் வெளியான பழைய கதைகளையே மீண்டும் பிரசுரிக்கும்படியான நிலைமை ஏற்படாது. ஆகையினாலேதான் சில பத்திரிகைளில் வழக்கமாக எழுதும் எழுத்தாளர்களின் கதைகளே வெளியாகின்றன. இவ்வாறு இரண்டொருவர் செய்யும் முறையற்ற வேலைகள், புதிதாகக் கதை எழுதத் தொடங் கும் இளம் எழுத்தாளர்கள் அனைவரையும் பாதிப்பதாக இருக்கின்றன.
– ஜனவரி 31, 1954 கல்கி இதழிலிருந்து
மறுமொழியொன்றை இடுங்கள்