Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Notes’ Category

Rajaji’s predictions on Independent Indian Politics & Indo-Pak relations: Dr. HV Hande

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

நினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது!

டாக்டர் எச்.வி. ஹண்டே

வரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:

“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”

இந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

இதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:

“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”

இதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.

35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்! யாரும் கேட்கவில்லை.

அப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.

ராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.

எடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.

நீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.

அனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.

ஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”

நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது? என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

எது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

ராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.

எழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.

“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’

Posted in Anjali, Bribery, Bribes, Cong, Congress, Congress Party, Corruption, Diary, Forecasting, forecasts, Freedom, Gandhi, Hande, Handey, History, HV Hande, Independence, Independent, India, Indo-Pak, Jinna, Jinnah, kickbacks, Memoirs, MK, Notes, PAK, Pakistan, Politics, Predictions, Rajagopalachari, Rajagopalachariaar, Rajagopalachariar, Rajagopalachariyar, Rajaji, Relations, SAARC, Vision, Voices | Leave a Comment »

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan – Rukmani Arundale

Posted by Snapjudge மேல் ஜூலை 28, 2007

குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
ருக்மணி அருண்டேல்
திருவேங்கிமலை சரவணன்

25.07.07  தொடர்கள்


‘‘எங்க வீட்டுப் பெண் பரதநாட்டியம் கத்துக்கிறா’’ _ பொது நிகழ்ச்சியில் பட்டுப்புடவை சரசரக்கும் பெண் தன் செல்ல மகளை இன்னொரு பெண்மணிக்கு பெருமையுடன் அறிமுகப்படுத்துவதைப் பார்க்கலாம். இன்று பரதநாட்டியம் கற்றுக்கொள்வது என்பது மிகப்பெரிய கௌரவமாகி விட்டது. குறிப்பாக நகரங்களில் மாலை வேலைகளில் பல வீடுகளில் ‘தக திமி’ ‘தகதிமி’ என்று ஜோராக சலங்கை ஒலி கேட்க முடிகிறது. அது ஒரு இதமான அனுபவம். சொல்லப்போனால் ‘என், பெண் பரதநாட்டியம் ஆடுவாள்’ என்பது பெண் பார்க்கும் படலத்தின் போது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. இன்று பரத நாட்டியம் ஒரு தெய்வீக கலையாக தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஊடுறுவி விட்டது:

இந்தக் கலைக்கு மிகப்பெரிய அந்தஸ்தை தந்து தெய்வீக நிலைக்கு உயர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர்களில் முக்கியமானவர் ருக்மணி அருண்டேல் என்கிற அற்புதப் பெண்மணி!

‘‘பரதநாட்டியம் என்பது இந்திய பாரம்பரியத்தின் முக்கியமான அடையாளம்!’’ உலகத்தில் இருக்கிற அத்தனை கலை ஆர்வலர்களும் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் பரதநாட்டியம் என்பது மிகப்பெரிய சமூக இழுக்காக கருதப்பட்டது. அந்தச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் ருக்மணி என்கிற சாதனைப் பெண்ணின் எதிர்நீச்சல் உங்களுக்குப் புரியும்!

‘கலா«க்ஷத்ரா’ என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி பரதநாட்டியத்துக்கு மறுபிறவி கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ருக்மணி அருண்டேல்.

நீலகண்ட சாஸ்திரி_சேஷம்மாள் தம்பதியினருக்கு 1904_ம் ஆண்டு பிப்ரவரி 29_ம் நாள் மதுரையில் பிறந்தவர் ருக்மணி. நீலகண்ட சாஸ்திரிகள் வடமொழியில் ஞானம் நிரம்பப் பெற்றவர். நிறைய வேதாந்தப் புத்தகங்கள் எழுதியவர்.

அந்தக் காலகட்டத்தில் பால்ய விவாகம்தான் நடைமுறையில் இருந்தது. சிறுமி ருக்மணிக்கும் குழந்தைத் திருமணம் நடத்த பெரியவர்கள் முற்பட்டார்கள். ஆனால், ருக்மணி ஸ்திரமாய் மறுத்து விட்டார். சின்ன வயதிலேயே கர்நாடக சங்கீதம் பயின்றார். அப்போதே அவருக்கு கலைகளின் மீது நாட்டம் வந்துவிட்டது.

ருக்மணியின் தந்தைக்கு சென்னையிலுள்ள தியாஸாஃபிகல் சொஸைட்டியில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ருக்மணிக்கு வயது ஏழு. தந்தையுடன் சேர்ந்து தியாஸாஃபிகல் சொஸைட்டியில் தானும் சேர்ந்து கொண்டார் ருக்மணி.

அங்கு அவர் வாழ்க்கை கலைகளை நோக்கித் திரும்புகிறது. வாழ்க்கையில் காதலும் வருகிறது. தியாஸாஃபிகல் சொஸைட்டியில் அருண்டேல் என்ற வெளிநாட்டுக்காரரும் பணியாற்றி வந்தார். அருண்டேல் தலை சிறந்த கல்வியாளர். ருக்மணி, அருண்டேல் இருவரின் மன எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தனது பதினாறாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அருண்டேலுக்கு அப்போது வயது நாற்பது. பிறகு மும்பையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் ருக்மணி நிறைய பயணங்களை மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திலும் தென்படும் ரசனையான விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதில் ருக்மணி கெட்டிக்காரர். அப்படித்தான் ரஷ்ய ‘பாலே’ டான்ஸரான ‘அன்னாபாவ்லா’ வின் நடனம் ருக்மணியை ஈர்த்தது. 1928_ல் அன்னாபாவ்லாவின் நடனம் மும்பையில் நடந்தது. தன் கணவருடன் மும்பைக்குச் சென்று பார்த்தார். பிறகு ருக்மணியும், அருண்டேலும் மும்பையிலிருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்குப் பயணமானார்கள்.

அதிர்ஷ்டவசமாய் அருண்டேல் தம்பதிகள் சென்ற அதே கப்பலில் ‘அன்னாபாவ்லா‘வும் பயணம் செய்து கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட ருக்மணிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. ‘அன்னாபாவ்லா’ வைச் சந்தித்து நடன விஷயங்களைப் பற்றி நிறைய பேசித் தெரிந்து கொண்டார்.

அப்போதுதான் ‘அன்னாபாவ்லா’ திடீரென்று ருக்மணியைப் பார்த்து, ‘‘நீங்கள் கலாரசனை உடையவராக இருக்கிறீர்கள். நடனத்திற்கேற்ற உடற்கட்டும் இருக்கிறது. நீங்கள் ஏன் டான்ஸ் கற்றுக் கொள்ளக் கூடாது?’’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய நடன குருவான ‘கிளியோநோர்டி’யை ருக்மணிக்கு ரஷ்ய நடனம் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். ஆக, ருக்மணி முதன் முதலில் ரஷ்ய நடனத்தைத்தான் கற்றார். ‘‘ரஷ்ய பாலே நடனத்தைத் தொடர்ந்து நாட்டியமும் கற்றுக் கொள்ளுங்களேன்…’’ என்று அன்னா பாவ்லாவே ருக்மணிக்கு ஆலோசனை கொடுக்க, ருக்மணியின் ஆர்வம் பரதம் பக்கம் திரும்பியது. அந்தச் சமயத்தில் பரதநாட்டியம் இந்தியாவில் அவ்வளவு பிரபலம் கிடையாது. நாட்டியங்களை பெண்கள் ஆடுவது இழுக்கு என்கிற தவறான எண்ணம் அப்போது மக்களிடையே இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1933 மியூசிக் அகாடமியில் ‘சதிர்’ எனும் நடனக் கச்சேரியை பந்தநல்லூர் ராஜேஸ்வரி, ஜீவரத்தினம் சகோதரிகள் நிகழ்த்தினார்கள் ‘சதிர்’ நடனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ருக்மணி அந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்.

ஆனால், அவர் நினைத்த மாதிரி அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ள முடியவில்லை. பல பரதநாட்டிய ஆசிரியர்கள், ருக்மணியைப் பார்த்து. ‘‘நீங்கள் எல்லாம் புதுமை, புரட்சி என்ற பேரில் வருவீர்கள். இதெல்லாம் கலைக்கு உதவாது’’ என்று அவரை ஏளனமாக விமர்சித்தார்கள். ஆனால், ருக்மணிக்கு இந்தக் கலையை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சிஷ்யை ஆனார். சிறப்பாகக் கற்றார்.

தியாஸாஃபிகல் சொஸைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு முன்னிலையில் நடந்த பிரமாண்ட நடன நிகழ்ச்சியில் ருக்மணியின் பரதம் அரங்கேறியது. சீனிவாச சாஸ்திரி, ராமசாமி ஐயர், சிவஸாமி ஐயர் என்று ஏகப்பட்ட ஜாம்பவான்கள் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் ருக்மணியின் நடனத் திறமை பளீரென்று பளிச்சிட்டது.

ஜேம்ஸ் கஸின்ஸ் என்கிற பிரபலமான அயர்லாந்துக் கவிஞர் ருக்மணியின் அந்த நடனத்தை வெகுவாகப் பாராட்டினார். அது மட்டுமில்லாமல், ‘‘ருக்மணி தன்னுடைய இந்த அற்புதமான நடனத் திறமையை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நடன மையத்தை ருக்மணி ஏற்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இந்த வார்த்தைதான் ருக்மணிக்கு நடன மையத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.

நினைத்ததோடு மட்டுமில்லாமல் செயலிலும் சுறுசுறுப்பாக இறங்கினார் ருக்மணி. ஆரம்பத்தில் தான் ஆரம்பித்த நடனப் பள்ளிக்கு ‘இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ்’ என்று பெயர் வைத்தார். பல முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடனப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே பின்னர் கலா«க்ஷத்ராவாக உருப்பெற்றது.

ருக்மணியின் நடன குருக்களான பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், அவரது மருமகனான சொக்கலிங்கப் பிள்ளையும் தான் கலா«க்ஷத்ராவின் முதல் நடன ஆசிரியர்கள். ஆரம்பத்தில் கலா«க்ஷத்ராவில் நடனம் கற்றுக் கொள்ள வந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் நான்குதான்.

துவக்க காலத்தில் ருக்மணி தேவியின் நடனத்திற்கு டாக்டர் பத்மாஸினியும், கமலா ராணியும்தான் பாடுவார்களாம். அப்போது வீடு வீடாகச் சென்று டிக்கெட்டுகளை விற்று நடன நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். ருக்மணி தேவியின் ஒரே குறிக்கோளே ‘நடனத்தில் இருக்கிற சர்ச்சைக்குரிய சில விஷயங்களை நீக்கினாலே மக்கள் எல்லோருமே நடனத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். நடனத்துக்கென்று ஒரு புனிதத் தன்மை இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்’ என்பதுதான்.

கொஞ்சம், கொஞ்சமாக நடனமும் ஓர் அற்புதமான கலைதான் என்பதை ருக்மணி அருண்டேல் எல்லோருக்கும் புரிய வைத்தார். கலா«க்ஷத்ராவை ருக்மணி தேவி கலைகளின் பிறப்பிடமாகவே நினைத்தார். அதனால்தான் கலா«க்ஷத்ராவில் நடனத்திற்கு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளுக்கும் முக்கியத்துவம் தந்தார். பல்வேறு சமூகப் பணிகளிலும் கலா«க்ஷத்ரா ஈடுபட்டது.

ருக்மணி அருண்டேல் தமிழ் மொழி மேல் அளவு கடந்த பற்று வைத்திருந்தார். உ.வே.சா. கண்டெடுத்த ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒன்று திரட்டி ‘டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் லைப்ரரி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் தமிழ் மக்களுக்குக் கிடைத்திட வழி செய்தார்.

1939_ல் மரியா மாண்டிஸோரி வரவழைத்து குழந்தைகள் பள்ளிகளை இந்தியாவில் பல இடங்களிலும் துவக்கினார். 1945_ல் ருக்மணியின் கணவர் அருண்டேல் இறந்த பிறகும் கூட இவரது சமூகப் பணிகள் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. பரத நாட்டியக் கலைஞர்களுக்கான ஆடைகளைச் சீரமைத்த பெருமை ருக்மணி அருண்டேலுக்கு உண்டு. நடனத்துக்காகவே பாடுபட்ட ருக்மணி விலங்குகளின் நேசிப்பாளர். பெண் குலத்திற்கே ஒரு ரோல்மாடலாக விளங்கிய இவர். தனது 82வது வயதில் 1986_ல் மறைந்தார். பரதநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும், அந்த மகா மேதையை உச்சரித்துக் கொண்டே இருக்கும்!.

Posted in Arundale, Biography, Biosketch, Faces, Females, Kumudam, Kumudham, Notable, Notes, people, Rukmani, Rukmani Arundale, Sarvanan, Series, She, Thiruvengimalai, Thiruvenkimalai, Women | 1 Comment »

To all young short story writers & aspirants – A letter from Editor Kalki

Posted by Snapjudge மேல் மே 1, 2007

இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வார்த்தை – கல்கி

சிறுகதை எழுதும் துறையில் இளம் எழுத்தாளர்கள் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய எழுத்தாளரின் தொகை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது மகிழ்ச்சிக்குரியது.

புதிய எழுத்தாளர்கள் தாங்கள் மிகப் பிரயத்தனப்பட்டு எழுதிய சிறுகதைகளை மாதப் பத்திரிகைகளுக்கும் வாரப் பத்திரிகைகளுக்கும் அனுப்புகிறார்கள். அவற்றில் சில பிரசுரிக்கப்படுகின்றன. சில கதைகள் ஆசிரியரின் வந்தனத்துடன் திருப்பி அனுப்பப்படுகின்றன.

கதைகளைத் திரும்பப் பெற்றவர்கள் மனத்தில் அதிருப்தி ஏற்படுகிறது. அவர்கள் பத்திரிகை ஆசிரியர்களிடம் குறைபடுகிறார்கள். பத்திரிகை ஆசிரியர்கள் இளம் எழுத்தாளர்களை ஆதரிப்பதில்லை என்றும், அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதில்லை என்றும், மீண்டும் மீண்டும் ஒரு சில எழுத்தாளர்களின் கதைகளையே வெளியிடுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு சில ஆரம்ப எழுத்தாளர்கள் வேறு பத்திரிகைகளில் வெளியான கதைகளை, கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றிப் புதிதாகத் தாங்கள் எழுதியதுபோல் அனுப்பி விடுகிறார்கள். இன்னும் சிலர் முன்னம் வெளியான கதைகளில் சிற்சில நிகழ்ச்சிகளை மட்டும் மாற்றி எழுதி அனுப்பிவிடுகிறார்கள். அத்தகைய கதையைத் திருத்தம் செய்து வெளியிட்டால், கதை அந்த எழுத்தாளர் ஏற்கெனவே பார்த்து எழுதிய மூலக் கதையின் உருவத்தைப் பெற்று விடுகிறது.

பல பத்திரிகைகளைப் படிக்கும் வாசக நேயர்கள் ‘இந்தக் கதை இன்ன தேதியில், இன்ன பெயரில், இந்தப் பத்திரிகையில் வெளியானது’ என்று கடிதம் எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பத்திரிகைகளில் கதைகள் வெளியிடுவதற்கு உதவி ஆசிரியர்கள் கதைகளைப் பொறுக்கி எடுக்கிறார்கள். ஏற்கெனவே வெளியான கதை என்பது வாசக நேயர்களுக்குத் தெரியும்போது, உதவி ஆசிரியர்களுக்குத் தெரியாமலா போய்விடும் என்ற கேள்வி எழுகிறது.

ஆம்; உதவி ஆசிரியர்களுக்குச் சில சமயம் தெரியாமல்தான் போய் விடுகிறது. அதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. சற்றுப் பிரபலம் அடைந்த பத்திரிகைகளுக்கு நூற்றுக்கணக்கான சிறுகதைகள் புதிய இளம் எழுத்தாளர்களிடமிருந்தும் வழக்கமாக எழுதும் பழைய எழுத்தாளர்களிடமிருந்தும் வாரந்தோறும் வருகின்றன. இவ்வளவையும் உதவி ஆசிரியர்கள் படித்து, வெளியிடத் தகுதியானவற்றைப் பொறுக்கி எடுக்க வேண்டி வருகிறது.

வருஷக்கணக்கில் பார்க்கும்போது இவ்வாறு உதவி ஆசிரியர்கள் படிக்கும் கதைகள் ஆயிரக்கணக்கில் போய் விடுகின்றன.

இவற்றுடன் வேறு பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளையும் உதவி ஆசிரியர்கள் படிக்க வேண்டியிருக்கிறது.

ஆகவே, எந்தக் கதையைப் படித்தாலும், ‘‘முன்னே எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறதே!’’ என்று தோன்றுகிறது. சமூகக் கதைகள், குடும்பக் கதைகள், கிராம வாழ்க்கைக் கதைகள் எல்லாவற்றிலும் சில நிகழ்ச்சிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. சில சமயம் கதைப் போக்கும் ஒன்று போல இருக்கும். எழுதும் முறையிலேதான் வித்தியாசம் இருக்கும்.

வாசக நேயர்களுக்குக் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கும் கடமை இல்லை. பத்திரிகைகளிலே அச்சிட்டு வெளியாகும் கதைகளை மட்டும் படிக்கிறார்கள். ஆகையால், அவர்களில் சிலருக்கு இந்தக் கதை, இந்தப் பத்திரிகையில் முன்னமே வந்தது என்பதைத் திட்டமாக உடனே கண்டுபிடிக்க முடிகிறது. உதவி ஆசிரியர்களுக்கு இந்தச் சௌகரியம் கிடையாது.

ஆகையால், கதை எழுதி அனுப்புகிறவர்கள் எல்லாம் சொந்தக் கற்பனையினால் எழுதுகிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படை பேரில்தான் அவர்கள் கதைகளைப் பரிசீலனை செய்து பொறுக்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலைமையில், இரண்டொரு எழுத்தாளர்கள் பழைய கதைகளைப் பெயர்த்து எழுதி அனுப்பி, அவை பிரசுரிக்கப்பட்டுவிட்டால் பத்திரிகையின் நல்ல பெயர் பாதிக்கப்படுகிறது.

இம்மாதிரி நேரிடாமல் தடுக்க ஒரு வழி உண்டு. நன்றாகப் பழக்கமான பழைய எழுத்தாளர்களின் கதைகளையே பிரசுரிப்பது என்று வைத்துக்கொண்டால், வேறு பத்திரிகைகளில் வெளியான பழைய கதைகளையே மீண்டும் பிரசுரிக்கும்படியான நிலைமை ஏற்படாது. ஆகையினாலேதான் சில பத்திரிகைளில் வழக்கமாக எழுதும் எழுத்தாளர்களின் கதைகளே வெளியாகின்றன. இவ்வாறு இரண்டொருவர் செய்யும் முறையற்ற வேலைகள், புதிதாகக் கதை எழுதத் தொடங் கும் இளம் எழுத்தாளர்கள் அனைவரையும் பாதிப்பதாக இருக்கின்றன.

– ஜனவரி 31, 1954 கல்கி இதழிலிருந்து

Posted in blog, Contest, Editor, Fiction, Growing, Kalki, magazine, Notes, Publish, Publisher, Reader, Story, Tips, Tricks, Write, Writers, Youth | Leave a Comment »

Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

ரயில்வே பட்ஜெட் 2007: தமிழக ஒதுக்கீடு ரூ.1232 கோடி – சேலம் கோட்டத்துக்கு ரூ.3 கோடி

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவினங்களுக்கு ரூ.1232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடான

  • ரூ.457 கோடியுடன் சேர்த்து, மொத்தம்
  • தமிழகத்துக்குக் கிடைத்தது ரூ.633 கோடி.
  • இந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு மட்டும் ரூ.706 கோடி.
  • அதாவது, திட்டங்களுக்கு மட்டும் ரூ.249 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன், திட்டம் சாரா செலவினங்களுக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மொத்தத்தில் ரூ.1232.77 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.

இதில்,

  • புதிய பாதைகள் அமைக்க ரூ.40 கோடி,
  • அகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.595 கோடி,
  • இரட்டைப் பாதை அமைக்க ரூ.195 கோடி,
  • போக்குவரத்து விளக்கு, பணிமனை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.45 கோடி,
  • சாலைப் பாதுகாப்பு (லெவல் கிராஸிங்) ரூ.38 கோடி,
  • ரயில்வேயின் சாலை மேம்பாலம், சாலை கீழ்பாலம் கட்ட ரூ.40 கோடி,
  • இருப்புப் பாதை சீரமைக்க ரூ.152 கோடி,
  • புதிய மற்றும் நடைமுறையில் உள்ள பாலப் பணிகளுக்கு ரூ.5 கோடி,
  • சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.65 கோடி,
  • பயணிகள் வசதிக்கு ரூ.24 கோடி,
  • மின்மயமாக்குதல் ரூ.5 கோடி,
  • சிறப்பு ரயில்வே நிதியின் கீழ் ரூ.27 கோடி ஆகியவை இதில் அடங்கும்.
  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இக் கோட்டம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று வேலு தெரிவித்தார்.

அகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக நாடு முழுவதும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.485 கோடி.

தமிழகத்தில் 4 புதிய ரயில் தடங்களுக்கு ஆய்வு நடக்கும்

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: தமிழகத்தில் நான்கு புதிய ரயில் வழித்தடங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மொரப்பூர் -தருமபுரி,
  • மதுரை -காரைக்குடி,
  • நீடாமங்கலம் -புதுக்கோட்டை,
  • திண்டுக்கல் -குமுளி (போடிநாயக்கனூர் வழி) ஆகியவை அந்த நான்கு புதிய வழித்தடங்கள்.

இத் திட்டங்களுக்கான ஆய்வுகள் இந்த ஆண்டிலேயே, விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.
மின்மயமாக்கல் திட்டத்தில்,

  • ஈரோடு -எர்ணாகுளம் (ரூ.10 லட்சம்),
  • தாம்பரம் -செங்கல்பட்டு (ரூ.5.98 கோடி),
  • விழுப்புரம் -திருச்சி (ரூ.5 கோடி) ஆகிய மார்க்கங்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல் -பொள்ளாச்சி -பாலக்காடு மற்றும்
  • பொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் போத்தனூர் -கோவை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • விழுப்புரம் -காட்பாடி மார்க்கத்தில் வேலூர் -திருவண்ணாமலை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.84 கோடி,
  • திருச்சி -மானாமதுரை மார்க்கத்தில் காரைக்குடி -மானாமதுரை அகலப்பாதைக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது.
  • திருச்சி -நாகூர் -காரைக்கால் மார்க்கத்தில் திருவாரூர் -நாகூர் அகலப்பாதைக்கு ரூ.30 கோடி,
  • மதுரை -திண்டுக்கல் அகலப்பாதைக்கு ரூ.62 கோடி அளிக்கப்படும்.

தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்கள்

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்களும், 5 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • மதுரை வழியாக கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,
  • யஷ்வந்த்புரம் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்,
  • சென்னை எழும்பூர் -நாகூர் எக்ஸ்பிரஸ்,
  • எழும்பூர் -ராமேஸ்வரம் (வாரம் 6 முறை),
  • புவனேஸ்வரம் -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதியவை.

இதில், கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள், மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக்கும் பணி முடிந்ததும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தற்போதைக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும். கோவை -மதுரை இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதும் அறிவிக்கப்பட்ட பாதையில் இயங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.

ராமேஸ்வரம் வரையிலான மீட்டர்கேஜ் பாதை, மார்ச் 31-ம் தேதிக்குள் அகலப்பாதையாக மாற்றப்படும். நாகூர் பாதை இந்த ஆண்டு இறுதியில் அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிடும் என வேலு தெரிவித்தார்.

கோட்டயம் -திருவனந்தபுரம் இடையிலான பாசஞ்சர் ரயில், நாகர்கோவில் வரை நீடிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நான்கு புதிய திட்டங்கள் ரூ.41 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

  • கரூர் -சேலம் (ரூ.20 கோடி),
  • பெங்களூர் -சத்தியமங்கலம் (1 கோடி),
  • திண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை (10 கோடி),
  • திண்டிவனம் -நகரி (10 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.

ரயில்வே மேம்பாலங்களைப் பொருத்தவரை, நாடு முழுவதும் 93 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 38 மேம்பாலங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக தமிழகத்துக்குக் கிடைத்திருப்பதாக வேலு தெரிவித்தார்.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியில்லாத தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 4% கட்டணம் குறைப்பு

சென்னை, பிப். 27: வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி செய்யப்படாத (நான்-ஏசி), தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (அனைத்து காலங்களிலும்) 4 சதவீதம் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு (81 படுக்கை), ஏசி சேர் கார் (102 படுக்கை) ஆகிய பெட்டிகளில் மட்டும் விழாக்காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.

பாண்டியன், அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால், ரயில்களுக்கு ரயில் பண்டிகைக் காலம், சாதாரண காலத்தை நிர்ணயிப்பதில் வேறுபாடு தொடர்கிறது).

கட்டணம் குறைப்பு சலுகை யாருக்கு?: சாதாரண பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் (நான்-சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள்) 2-ம் வகுப்பு கட்டணமும் ஒரு நபருக்கு தலா ரூ. 1 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

இச் சலுகை ரயில் நிலையங்களில் தினமும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி (முன்பதிவு செய்யாமல்) பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் முக்கிய ரயில்களில் மட்டும் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும்.

இந்த ரயில்களின் பட்டியல் குறித்து பின்னர் வெளியிடப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (முறையே தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, முதல் வகுப்பு) உள்ள தற்போதைய கட்டண விவரம் (ரூபாயில்):

தில்லி: 537, 3609, 2071, 1455. (ஏழைகள் ரதம் ரயிலில் கட்டணம் மாற்றம் இல்லை).

மும்பை: 405, 2660, 1534, 1084.

கோல்கத்தா: 469, 3120, 1794, 1264.

ஐதராபாத்: 301, 1915, 1113, 792.

புனே: 377, 2459, 1421, 1005.

பெங்களூர்: 195, 1176, 684, 493.

சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டண விவரம்: கன்னியாகுமரி: 309, 1970, 1444, 910, 814.

நாகர்கோவில்: 304, 1933, 1123, 893, 899.

தூத்துக்குடி: 286, 1805, 1051, 000, 749.

நெல்லை: 286, 000, 1051, 835, 749.

திருவனந்தபுரம்: 342, 2209, 1279, 000, 907.

மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில்): 235, 1460, 844, 680, 604.

சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 479; இரண்டாம் வகுப்பு சேர் கார் ரூ. 142.

திருச்சி: 166, 1069, 617, 491, 437.

கோவை: 235, 1460, 844, 000, 604.

சேலம்: 166 (2-ம் வகுப்பு அமர்ந்து செல்லும் இருக்கை வசதி ரூ. 101 மட்டும்) 1061, 617, 491, 437. சென்னை-சேலம் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி சேர் கார் ரூ. 372, 2-ம் வகுப்பு சேர் கார் ரூ. 111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதர கட்டணம் ரூ.2 குறைப்பு: சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான இதர கட்டணங்கள் (எக்ஸ்ட்ரா) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆக குறைக்கப்படும்.

புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

Dinamani Editorial
லாலுவின் சாதனை

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொழில்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களில் பலதரப்பினரும் வரவேற்கத்தக்க ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. உயர்வகுப்பு பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்படையாகச் சொல்வதானால் லாலுவின் ரயில்வே பட்ஜெட் நாட்டில் தற்போதுள்ள பணவீக்கப் போக்கை மட்டுப்படுத்துகின்ற அளவில் உள்ளது.

லாலு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது நான்காவது தடவையாகும். கடந்த மூன்று ரயில்வே பட்ஜெட்டுகளைவிட இந்தப் பட்ஜெட்டில் சில கொள்கைத் திட்டங்கள் தென்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள மாதங்கள், பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள மாதங்கள் என வகை பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் விமான நிறுவனங்கள் இவ்விதம் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது உண்டு. ரயில்வே அமைச்சர் அத்தகைய கட்டணச் சலுகை முறையை அமல்படுத்தியுள்ளார். இது இந்திய ரயில்வேயில் இதுவரை இல்லாத புதிய ஏற்பாடாகும்.

உயர்வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் துறையில் நகரங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிடமிருந்து எழுந்துள்ள போட்டியைச் சமாளிக்க ரயில்வேயின் இக் கட்டணக் குறைப்பு உதவும்.

ரயிலில் நீண்டதூரப் பயணங்களுக்கு டிக்கெட் வாங்குவதென்றால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நிலைமை இதுவரை இருந்து வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவிஷயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறையை ரயில்வே பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இவையெல்லாம் நடுத்தர வகுப்பினருக்குப் பயனுள்ளவை.

புதிய ரயில்களில் முன்பதிவு தேவைப்படாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இது சாதாரண மக்களுக்கும் திடீர்ப் பயணம் மேற்கொள்வோருக்கும் பெரிதும் உதவும். காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச் செல்வோருக்குக் கூடுதல் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குளிர்சாதன வசதி கொண்டவையாக இருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

அமைச்சர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பை வரவழைத்துக் கொள்ளாதவகையில் படிப்படியாகத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார். இது சரியான அணுகுமுறையே. ரயில்வே இலாகா நடப்பு நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க இருக்கிறது என்றால் அதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். இதே ரயில்வே இலாகா முன்பு ஒருசமயம் மத்திய அரசுக்கு வழக்கமான ஈவுத் தொகையைக்கூட வழங்க முடியாமல் திண்டாடியது உண்டு.

கடந்த காலங்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் ஆகிறார் என்றால் அவர் தமது மாநிலம் அதிக நன்மையை அடைகின்ற வகையில் பல புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த விரும்பத்தகாத போக்குக்கு இலக்கு ஆகாத ரயில்வே அமைச்சர் என்று லாலுவைக் குறிப்பிடலாம்.

கடந்தகாலத்தில் பல்வேறு ரயில்வே அமைச்சர்களும் அறிவித்த புதிய ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 38 ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் ஒரு கமிட்டி கூறியுள்ளது. அமைச்சர் லாலு பிரசாத் இதில் கவனம் செலுத்தி இவற்றை நிறைவேற்றி முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம்.

தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இல்லாத ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், விபத்து என்றால் சுக்குநூறாக நொறுங்கிவிடாத ரயில் பெட்டிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கச் செலவு அதிகமாகும். எனினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் இதுவிஷயத்தில் லாலு கவனம் செலுத்த வேண்டும்.

மன்னார்குடி – நீடாமங்கலம்: இடையே ரயில் விட மத்திய அரசு முடிவு

சென்னை, பிப். 28 : மன்னார்குடி – நீடாமங்கலம் இடையே மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர். பாலுவுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு கடிதம் அனுப்பியுள்ளார்.

“”நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கும் அங்கிருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.

திருக்குவளை வழியாக…: “”மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது” என்று அக் கடிதத்தில் வேலு குறிப்பிட்டுள்ளார்.

ரெயில்வே பட்ஜெட்: முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது; மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை

புதுடெல்லி, பிப். 26-

2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.

பயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.

ரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட “டபுள் டெக்கர் ரெயில்” விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.

இது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.

முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.

தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.

தற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.

டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.

ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.

பயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

படுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.

வரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.

ரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.

குறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.

ரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.

அனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.

அனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.

உயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-

நெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.

ஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்

ரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.

கண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.

ரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.

ஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-

1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)

2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)

3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)

4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)

5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)

6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)

7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)

8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)

ரெயில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

மத்தியமந்திரி லல்லுபிர சாத்தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.

* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.

*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.

* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.

*23ரெயில் பாதைகள் நீட்டிக்கப்படுகிறது.

* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.

* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.

* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.

* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.

* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.

*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.

* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.

*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.

*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.

* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.

* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.

*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.

*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.

*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.

*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.

*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.

* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.

* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.

* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.

2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.

=====================================================================
பாதுகாப்புக்கு 8000 பேர் நியமனம்: ரயில்வே இணை அமைச்சர் வேலு

வேலூர், மார்ச் 19: ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் வகையில் 8 ஆயிரம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.

நடப்பாண்டில் நாடு முழுவதும் 334 ரயில் நிலையங்கள் முன்மாதிரி நிலையங்களாக மாற்றப்படும் என்றார் அவர்.

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாதை பணிகளும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை பணிகளும் நடந்து வருகின்றன.

வேலூர்-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தேறி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடையும்.

திண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை ஆய்வுப் பணிகளுக்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 71 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம்-திருச்சி இடையிலான 167 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது திருச்சி-மதுரை இடையிலான 147 கி.மீட்டர் தூரத்தை மின்மயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2006-07-ம் ஆண்டில் 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாட்டில் 93 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 38 மேம்பாலங்கள் தமிழகத்தில் வருகின்றன என்றார் வேலு.
===================================================================================================================
கலாசார மையமாகிறது வேலூர் கோட்டை!: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில்

சென்னை, மார்ச் 19: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

சிப்பாய் கலகம் நடந்த வேலூர் கோட்டையை நாட்டின் மிகப் பெரிய கலாசார மையமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காந்தியடிகளின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவில், அறப்போரில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படக் கண்காட்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படங்களை எனது துறையின் மூலம் பல்வேறு மாநில மக்களும் அறியும் வகையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு விழா விரைவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், டெக்கான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா சொகுசு ரயில் சேவை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையை ரயில்வே துறையும், சுற்றுலா துறையும் இணைந்து நடத்தும்.

நடப்பு ஆண்டில் 300 மண்டலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றார் அம்பிகா சோனி.

—————————————————————————————-

ரயில் சேவைகள் போதாது!

ரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.

ஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.

ரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது.

இப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கூட எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்படுவது அவர்களின் விழிப்புணர்வுக்குச் சான்று.

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய, இருக்கை வசதி மட்டுமே உள்ள ரயில்களைப் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குவதன் மூலம், சாலைப் போக்குவரத்து நெரிசலையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் கணிசமாகக் குறைக்க முடியும். விபத்துகளும் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. அதற்கு இந்த ஊர்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பதும் அவற்றை மின்மயமாக்குவதும் அவசியம். இது எரிபொருள் (டீசல்) செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தும். சரக்கு போக்குவரத்துக்கும் கை கொடுக்கும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதால் நமது நாட்டு அன்னியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.

முன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளும் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாததாலும், அவசரத் தேவையாலும், அறியாமையாலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே துறை உணர வேண்டும். அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தக் கூடாது.

முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், குடிகாரர்கள், பெண்களைச் சீண்டுவோர், ஏறும்வழி, நடக்கும் வழி ஆகியவற்றில் அதிக சுமைகளை வைக்கும் அடாவடி சிறு வியாபாரிகள், அரிசி கடத்துவோர், சீசன் டிக்கெட் பயணிகள், ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் (ஊழியர்களும் சேர்ந்துதான்), இளநீர், வேர்க்கடலை, முந்திரி, சப்போட்டா, மாம்பழம், மாங்காய் போன்றவற்றை விற்போர் என்று ஒரு பெரிய இம்சைப் பட்டாளமே ஏறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.

கழிப்பறை தண்ணீரின்றி, சுத்தப்படுத்தாமல் நாறினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானால்- அது எவ்வளவு தூரம் போகும் ரயிலாக இருந்தாலும் வழியில் அதற்கு கதி மோட்சமே கிடையாது. விபரீதமாக ஏதாவது நடந்து சங்கிலியைப் பிடித்து இழுத்தால் மட்டுமே அந்தப் பெட்டி இருப்பதையே அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் கண்டுகொள்கிறார்கள். இவையெல்லாம் களையப்பட்டால் ரயில் பயணங்கள் சுகமாவதுடன், அரசுக்குப் பணம் கொழிக்கும் கற்பக விருட்சமாக மேலும் வளம் பெறும்.

நாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்!

Posted in 2007, 2007-08, AC, Accidents, Ambika Soni, Analysis, Bridges, broadgauge, Budget, Capex, Capital Expenses, Cashflow, Commerce, Dinamani, Employment, Ettukkudi, Ettukudi, Expenditure, Expenses, Express, Features, Finance, First Class, Flyovers, Freight, Guides, Income, Information, Initiatives, Insights, Jobs, Karunanidhi, Keypoints, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Mannargudi, Meter gauge, Needamangalam, Notes, Opinion, passenger, Pattukkottai, Pattukottai, Planning, Profits, Railway, Railways, Rates, Revenues, Safety, Satyagraha, Schemes, Second AC, Sleeper, Statement, Takeaways, Tamil Nadu, Thirukkuvalai, Thirukuvalai, Thiruthuraipoondi, Thiruthuraippoondi, Three Tier, Tourism, Tourist, TR Balu, Train, Trains, Velaankanni, Velanganni, Velankanni, Vellore, Velu, Visit, Visitor | 7 Comments »