Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kumaraswamy’ Category

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Sinhala Govt. Atrocities against India

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 25, 2006

மன்னிப்பதும்… மறப்பதும்…அரவணைப்பதும்…

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார்.

கீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய தமிழக நகரங்கலில் இருந்து தமிழரான முஸ்லிம்களும் மும்பையிலிருந்து போராக்கள், பார்சிகள், சிந்திகளான முஸ்லிம்களும் கொழும்பு நகரிலும் சிங்களக் கிராமங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 1915-ல் முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் மூண்டது. முஸ்லிம்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, பின்பு இலங்கைப் பிரதமரான சேனநாயக்கா உள்ளிட்ட மூத்த சிங்களத் தலைவர்கள் அக்காலத்தில் திரண்டெழுந்தனர்.

1927-ல் காந்தியடிகளின் இலங்கைப் பயணத்தின்போது சிங்களத் தீவிரவாதிகள் காட்டிய எதிர்ப்புகளையும் ஈழத்தமிழரும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸýமாக அளித்த வரவேற்பையும் இந்திய விடுதலைப் போருக்காகக் காந்தியடிகளிடம் தமிழர் அளித்த நன்கொடைகளையும் மகாதேவ தேசாய் விரிவாக எழுதியுள்ளார்.

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிக்காகச் சென்ற தமிழகத் தொழிலாளர்களையும் கொழும்புத் துறைமுகத்தில் பணிக்காகச் சென்ற கேரளத்து தொழிலாளர்களையும் திருப்பி அனுப்புமாறு தொடர்ச்சியாகப் பல போராட்டங்களைச் சிங்களவர் நடத்தினர். 1920-களில் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ.குணசிங்கா தலைமையில் முளைவிட்ட இந்தப் போராட்டங்கள் 1930களில் கூர்மை அடைந்தன.

மலையாளிகளைத் திருப்பி அனுப்பக் கோரிய சிங்களவரின் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கும் நோக்குடன், கேரளப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.கோபாலன், 1939-ல் கொழும்புக்குச் சென்றார். வெள்ளவத்தையில் அவர் பங்கேற்ற மேதினக் கூட்டத்தை சிங்களத் தீவிரவாதிகள் குலைக்க முயன்றனர். அதன் பின்னர் 1940-களின் தொடக்கத்தில் மலையாளிகள் கொழும்பிலிருந்து முற்றாக வெளியேறினர்.

மலையகத் தமிழ்த் தொழிலாளருக்குச் சிங்களவர் தொடர்ச்சியாக இழைத்து வந்த கொடுமையைத் தணிக்க, மகாத்மா காந்தியின் சார்பில் ஜவாஹர்லால் நேரு இலங்கைக்குச் சென்றார். இலங்கை இந்தியக் காங்கிரûஸ நிறுவினார். 1939 ஜூலை 26 அன்று கொழும்பு, காலிமுகத் திடலில் அவர் பங்கேற்று உரையாற்றிய கூட்டத்தைச் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ. குணசிங்காவின் அடியாள்கள் குழப்பினர்.

1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தின் ஆயத்தப் பணிகளுள் ஒன்றுதான், தமிழகத்திலிருந்து சென்று மலையகத் தோட்டங்களை வளப்படுத்திய தொழிலாளரின் குடி உரிமையைப் பறித்த சட்டமாகும். மலையகத் தமிழ்த் தொழிலாளர் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டுமென இந்தியாவிடம் சிங்களவர் கூறினர்; இந்தியா மறுத்தது; அவர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு.

நேரு காலத்தில் பலமுறை முயன்று தோற்றதை, சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் இலங்கை பெற்றுக்கொண்டது. சிறீமாவோ-சாஸ்திரி மற்றும் சிறீமாவோ- இந்திரா ஒப்பந்தங்கள் சிங்களவரின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகளின் வெற்றி முகங்கள். நான்கு இலட்சம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் கச்சத் தீவை இலங்கை எல்லைக்குள் அடக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டதல்லவா?

மலையகத் தமிழர்களைத் திரும்பப் பெற இந்தியா ஒப்பியதற்கு நன்றியாக, 1977லிலும் 1983லிலும் இனக்கலவரத்தில், கொழும்பில் வணிகம் செய்த இந்திய முதலாளிகளைக் கொலை செய்து, அவர்களின் சொத்துகளைச் சிங்களக் காடையர் சூறையாடினர். நாடற்றவர்களான மலையகத் தமிழர் பலரையும் கொன்றுகுவித்தனர்.

கச்சத் தீவைக் கொடுத்ததற்கு நன்றியாகத் தமிழக மீனவரின் உயிர்களைப் பலி கேட்டுக்கொன்று குவித்து, தமிழக மீனவரின் படகுகளைச் சேதாரமாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, பிடிபட்ட மீன்களையும் இன்றுவரை இலங்கைக் கடற்படை பறித்தெடுத்துச் சென்றுவருகிறது.

1971 ஏப்ரலில் ஜேவிபியின் ஆயுதப் புரட்சியை அடக்க, இந்தியா படைகளை அனுப்பியது. நன்றிக் கடனாக, 1971 டிசம்பர் வங்கப்போரில், இந்திய வான் பகுதிமேல் பறக்க முடியாத பாகிஸ்தான் விமானங்கள், இந்தியாவுக்கு எதிராகக் கொழும்பு விமான நிலையத்தில் தங்கிப்போக, ஈழத்தமிழரின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு உதவியது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும் நூல்களையும் குப்பைகள் என இழித்து, அவற்றின் இறக்குமதியை 1971 முதல் கட்டுப்படுத்தியது.

1983– முதலாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் பலமுறை தாக்குதலுக்குள்ளாயது; தூதரக வாகனங்கள் கொளுத்தப்பட்டன.

1987-ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒப்பமிட, ராஜீவ் கொழும்பு செல்கிறார். அப்போதைய பிரதமரான பிரேமதாசா, ராஜீவை அவமதிக்கத் திட்டமிட்டு கொழும்பை விட்டு நீங்கித் தாய்லாந்தில் பயணித்தார். ராஜீவை அவமதித்த பிரேமதாசாவின் அரசியல் குரு, 1939 ஜூலை 26-ல் நேரு பேசிய கூட்டத்தைக் குலைக்க வந்த ஏ.இ.குணசிங்கா.

கொழும்பில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ராஜீவுக்குப் பிரியாவிடை… கடற்படைச் சிப்பாய் ஒருவன், ராஜீவின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் கடுமையாகத் தாக்குகிறான். குற்றவாளியான அவனை நீதிமன்றம் சிறையில் அடைக்க, அரசோ அவனை விடுதலை செய்கிறது.

1983 முதலாக, பல இலட்சம் ஈழத்தமிழர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாழ்வை ஓட்டவேண்டிய, இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைக்கும் சிங்களப் படையின் வெறியாட்டமே காரணமாகும்.

ஆசிய நாடுகளின் வாக்குகளைப் பிரித்து, இந்திய வேட்பாளர் ஐ.நா. தலைமைச் செயலராக வெற்றி பெற முடியாதவாறு தானும் ஒரு வேட்பாளரைக் களத்தில் இறக்கி, அவருக்காக உலகெங்கும் சென்று ஆதரவு திரட்டுகிறது இலங்கை அரசு.

விவேகானந்தர் காலம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, சிங்கள இனத்தவரின் அரசும், அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தனி மனிதர்களும் இந்தியாவின் முகத்தில் திட்டமிட்டே பலமுறை கரி பூசி வந்துள்ளனர். அவற்றைப் பொருளெனக் கொள்ளாது, நிகழ்வுகளை மறந்து, அவர்களின் அடாச் செயல்களை மன்னித்து, தொடர்ந்தும் சிங்களவருக்கு நன்மையையே செய்து வருகிறது இந்தியா. இந்த மாதத்தில் இலங்கைப் படைக்கு ராடார் கருவிகளை அன்பளிப்பாகவும் கொடுத்துள்ளது. மறப்பதும் மன்னிப்பதும், அவர் நாண நன்னயம் செய்தலும் இந்திய மண்ணோடு கலந்த மரபுகள். 999 மனிதத் தலைகளைக் கொய்த அங்குலிமாலாவை மன்னித்துப் பண்பட்ட மனிதனாக்கித் தன் சீடராக்கியவர் புத்தர்.

இந்தியாவே ஆயுதங்களைக் கொடுத்தது; பயிற்சியை வழங்கியது; நிதியும் வழங்கியது. அதைத் தொடர்ந்த 1987-91 காலத்திய நிகழ்வுகளால் இந்தியாவின் கடுஞ் சினத்துக்கு ஈழத்தமிழர் ஆளாகினர். 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்தேவனார் முதலாக, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள் ஊடாக, இன்றைய அறிஞர், புலவர், படைப்பாளிகள் வரை, கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கூடாக, ஈழத்தமிழரும் இந்தியாவும் எவ்வித பகைமையோ, உரசலோ, எதிர்ப்புணர்வோ இல்லாது கொண்டும் கொடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்கொண்டு, வாழ்ந்து வருகின்றனர். இடையில் ஈழத்தமிழர் உணர்ச்சிவயத்தால், பொருந்தாச் செயல் செய்திருப்பின் மன்னிப்பதும் மறப்பதும் மீண்டும் அரவணைப்பதும் இந்தியாவின் கடனல்லவா? நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உரசியும் கடுமையாக எதிர்த்தும் வரும் சிங்களவரோடு பெருந்தன்மையோடு நடப்பதுபோல், இடையில் ஒரு சில ஆண்டுகள் இணக்கமற்றிருந்ததற்காக வருந்தும் ஈழத்தமிழருடனான கசப்புகளை மன்னித்து மறந்து பெருந்தன்மையோடு நடப்பது இந்தியாவின் கடன்.

Posted in AK Gopalan, Arms, Ceylon, Dinamani, Eezham, Fights, Gunasinha, India, Jantha Vimukthi Pramuna, JVP, Katcha Theevu, Kumaraswamy, LTTE, Premadasa, Rajeev, Rajiv Gandhi, Senanayake, Sirimavo, Sri lanka, Srilanka, Tamil | 1 Comment »