Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Painters’ Category

Aadhimoolam – Anjali by Ku Pugazhendhi

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி

ஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.

ஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.

அந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.

அவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் என்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தியவர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.

நடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.

அதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.

என்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.

“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.

பணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.

அவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.

அவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.

Posted in Aadhimoolam, Aadhymoolam, Aathimoolam, Adhimoolam, Anjali, artists, Arts, Athimoolam, Faces, Icons, Lit, Literature, Memoirs, Notable, Painters, Paintings, Pugalendhi, Pugazendhi, Pugazhendhi, Pugazhenthi, Sculpture, Works | Leave a Comment »

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Hum Panch – Art Gallery: Around Chennai

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

கலை: ஐவரோவியம்!

ரவிக்குமார்

ஐந்தெழுத்து மந்திரம் (நமசிவாய), ஐந்து வகை நிலங்கள், ஐம்பெரும் பூதங்கள் என நம்முடைய இந்திய மரபில் ஐந்திற்கு இருக்கும் முக்கியத்துவங்கள் அதிகம். பாரம்பரியமான இந்தச் சாரம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது, ஐந்து பெண்கள் சமீபத்தில் சென்னை, ஸ்ரீ பார்வதி ஆர்ட் காலரியில் இணைந்து நடத்திய ஓவியம் மற்றும் சிற்பங்களின் கண்காட்சி. நாம் ஐவர் (hum panch) என்னும் தலைப்பில் அஸ்மா மேனன், பெனித்தா, பிரேமலதா சேஷாத்ரி, நுபுர், தமாரா ஆகிய ஓவியர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்த இந்தக் குழுக் கண்காட்சியில், ஒவ்வொருவரின் தனித்தன்மையும் பளிச்சென்று தெரிந்தது. அந்த ஓவியங்களிடையேயான ஒரு தூரிகைப் பயணம் இது!

பழமையும், புதுமையும் கலந்த கற்பனையில் உருவான இவர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அஸ்மா மேனனின் ஓவியங்களில் பெண்கள், பழங்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், உலகின் சிறந்த மனிதர்கள் இடம்பெற்றிருந்தார்கள். உதாரணமாக, பல நிறங்களின் கலவையில் இவர் வரைந்திருந்த “வாழ்க்கை என்னும் மரம்’, “டாரா’ போன்ற ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கையைச் சித்திரித்தன.

“இளவரசி உத்தமா’ என்ற தலைப்பிலான ஓவியத்தில் இடம்பெறும் “உத்தமா’ என்னும் பெண் கதாபாத்திரம், இலங்கையின் புராதனக் கதைகளில் இடம்பெற்றிருக்கும் பாத்திரம். இப்படி புராணங்களிலிருந்து பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் தனது புதுமைக் கற்பனையை நெய்திருக்கிறார் அஸ்மா.

“கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்று சொல்லும் தமராவின் ஓவியங்களில், கருமை நிறம்தான் பிரதானமாக இருக்கிறது. “நட்சத்திர நடை’ என்னும் தலைப்பில் இவர் வரைந்திருக்கும் ஓவியம், நம்மை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு பால்வெளியில் பயணிக்கவைக்கிறது! பொதுவாக அவுட்-லைனுக்குள் ஓவியம் அடங்கிவிடுவதுதான் மரபு. ஆனால்”கீழ்ப்படியாத’ (Insubordinate) என்னும் தலைப்பில் அமைந்த ஓர் ஓவியத்தில், நிஜங்களின் மிச்சங்கள் அவுட்-லைனுக்கும் வெளியே பரவியிருப்பது, தலைப்புக்கேற்ற மரபை மீறிய புதுக்கவிதை!

தான் கண்டு ரசித்த நிலங்களை அப்படியே நம் கண் முன் ஓவியமாக்கியிருக்கிறார் பிரேமலதா. “காவிரிப் பறவை’களையும், இயற்கை எழில் சொட்டும் நிலங்களையும் நம் கண்களுக்கு பசுமைக்காட்சியாய் படைத்துள்ளார்.

பெனித்தாவின் படைப்புகளில் பெண்களின் தனித்தன்மை வெளிப்படுகிறது. நீர் வண்ணம், சார்கோல், பேப்பர், கான்வாஸ் என பல மீடியம்களின் கலவையில் பெனித்தா வரைந்திருக்கும் ஓவியங்களில், பெண் ஆக்கத்தின் வடிவமாக, உருவாக வெளிப்படுகிறார்.

காட்டின் பிரம்மாண்ட அடர்த்தியும், வாழ்க்கையின் ஒரு துளியும் நுபுரின் கைவண்ணத்தில் பித்தளைச் சிற்பங்களாகியிருந்தன.

“நான் அசைந்தால்; அசையும் அகிலம் எல்லாமே…அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?’ டீக்கடை ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது, பழைய “திருவிளையாடல்’ படத்தின் பாடல். எவ்வளவு சத்தியமான வரிகள்!

படங்கள்: “மீனம்’ மனோ

Posted in Art Gallery, Asma Menon, Benita, Chennai, Events, Happenings, Hum Panch, Kathir, Noopur, Painters, Paintist, Premalatha Seshadri, Tamara | 1 Comment »