Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ceylon’ Category

Learning Tamil as a Foreign Language – South Travancore Hindu College, Nagercoil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!

அ. அருள்தாசன்

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’  பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.

மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,

  1. கர்நாடகம்,
  2. ஹிமாச்சலப்பிரதேசம்,
  3. மணிப்பூர்,
  4. ஒரிசா,
  5. மேற்கு வங்கம்,
  6. அசாம்,
  7. இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.

நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:

இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.

தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):

“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.

நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):

“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”

லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):

“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.

ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):

“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).

அசோதோஸ் மாலிக் (ஒரிசா):

“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.

தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.

Posted in Bengal, Ceylon, Foreign, HR, Instructors, Integration, Language, Learn, Literature, Manipur, Manipuri, Nagercoil, Orissa, Singala, Sinhala, Sinhalase, Srilanka, Students, Tamil, Teachers, Unity, University, WB, World | Leave a Comment »

Sri Lanka to ban Tamil Tigers, abrogate CFA, says Gotabhaya

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.

ஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

 


கொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.

குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து
குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து

இன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

 


மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்
படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்

இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்

மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.

அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

Posted in Agreement, Blasts, Bombs, Ceasefire, Ceylon, CFA, Colombo, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezham, EPRLF, EROS, Fight, Gotabaya, Gotabhaya, Liberation Tigers of Tamil Eelam, LTTE, Magesvaran, Mageswaran, Mahesvaran, Maheswaran, Murder, Parliamentary Tamil United Liberation Front, Peace, People's Liberation Organisation of Tamil Eelam, plot, PLOTE, Rajapaksa, Rajapakse, Sri lanka, Srilanka, Tamil, Tamil Eelam Liberation Organisation, TELO, Temple, Thimpu, Tigers, TULF, War | Leave a Comment »

Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy

Posted by Snapjudge மேல் மே 10, 2007

கச்சத்தீவைக் கை கழுவியதால்…?

தி. இராசகோபாலன்

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).

————————————————————————————————————
கடலுக்குள் செயற்கைப் பவளப் பாறை

பா. ஜெகதீசன்

சென்னை, ஆக. 8: தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக “செயற்கைப் பவளப் பாறைகள்’ உருவாக்கப்பட்டு, கடலுக்கு அடியில் நிறுவப்படுகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர்களின் பங்கேற்புடன் முதல்முறையாக இந்த செயற்கைப் பவளப் பாறைகளை நிறுவும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்குகிறது.

பருவமழை தவறிப் பெய்வது, 2004-ல் சுனாமி தாக்கியது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மிகச் சிறிய மீன்களைக் கூட பிடித்து விடும் திறன் படைத்த வலைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் உள்ள சிறிய மீன்கள், மீன் குஞ்சுகள், சிறிய இறால்கள் போன்றவை அத்தகைய வலைகளில் சிக்கி விடுகின்றன. இதனால் படிப்படியாக மீன் வளம் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சுரண்டப்பட்டு, அடியோடு குன்றி விடுகிறது. இந்த நிலையை மாற்ற கடலுக்கு அடியில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.

வழி காட்டிய முல்லம்: பவளப் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் பழங்காலத்தில் மீன்களைத் தாற்காலிகமாகக் கவர்ந்து இழுக்க “முல்லம்’ என்கிற அமைப்பை மீனவர்கள் பயன்படுத்தினர்.

பனை ஓலையால் சுற்றப்பட்ட பனை வெல்லம், புன்னை மரம், வாகை மரத் துண்டுகள், தென்னங்கீற்றுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த “முல்லம்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, பழைய முல்லம் அமைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு, புதிய முல்லம் அமைப்புகளைத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

பழங்கால முல்லம் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு, தற்போது செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட்டால் ஆன இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மூன்று வெவ்வேறு வகையான தோற்றங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.

தலா ஒரு டன் எடை: மூன்று அல்லது நான்கு பெரிய வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்ததைப் போன்ற வடிவத்திலும், முக்கோண வடிவிலான கூண்டில் 6 பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட தோற்றத்திலும், ஏராளமான துளைகள் போடப்பட்ட பெரிய செவ்வகக் கூண்டு வடிவமைப்பிலுமாக 3 வகைகளில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.

இப்படி உருவாக்கப்படும் செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் தலா ஒரு டன் எடை கொண்டவையாக இருக்கும். அந்த அளவுக்கு எடை இருந்தால் தான் கடல் நீரோட்டச் சக்தியைத் தாங்கும் திறன் இருக்கும். இந்த அமைப்புகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதவையாகவும் இருக்கும்.

இவற்றைக் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஆங்காங்கே போட்டு விடுவார்கள். முதலில் கடல் வாழ் நுண்ணுயிரிகளும், பாசிகளும் இந்த அமைப்புகளின் மீது படர்ந்து வளரும்.

இந்தப் பாசியை உண்ண இந்த அமைப்புகளை மீன்கள் நாடி வரும். இந்த மீன்கள் இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகளில் கூட்டம், கூட்டமாகத் தங்கி, இளைப்பாறி, முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்யும்.

மீன்களின் உறைவிடங்கள்: சிறிதுகாலத்தில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், மீன்களின் உறைவிடங்களாகவும் மாறி விடும்.

இவை அமைந்துள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகரிக்கும். “முல்லம்’ போன்று தாற்காலிக அமைப்பாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் நீடித்து உழைக்கும்.

இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் இடம் பெற்றுள்ள கடல் பகுதிகளில் மற்ற இடங்களில் மீன் பிடிப்பதைப் போல, வலைகளை வீசக் கூடாது. மாறாக, தூண்டில் முறையைப் பயன்படுத்தி தான் மீன்களைப் பிடிக்க வேண்டும்.

தொண்டு நிறுவனத்தின் முயற்சி: சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடல் பகுதியில் இத்தகைய செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் அடுத்த சில நாள்களில் நிறுவப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள “பிளான்ட்’ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மீனவர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு உதவும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பெரிய படகுகளின் மூலம் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குக் எடுத்துச் சென்று நிறுவப்படும். எந்தெந்தப் பகுதிகளில் இவற்றைக் கடலில் நிறுவ வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் பழவேற்காடு பகுதியில் 30 இடங்களில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குள் நிறுவப்படும். பிறகு, படிப்படியாக மேலும் 70 அல்லது 80 செயற்கைப் பவளப் பாறைகள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் கடலுக்குள் நிறுவப்படும். இதற்கு கிடைக்கும் பலனைப் பொருத்து, பிற மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் இத்தகைய அமைப்புகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு plant@plantindia.org என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Army, Artificial, Batticaloa, Border, Boundary, Ceylon, defence, Defense, DK, DMK, Eelam, Eezham, Environment, ethnic, Extremism, Extremists, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Gandhi, global, History, Indira, Indra, Industry, Jade, Jaffna, Jayalalitha, JVP, KACCHA THEEVU, Katcha Theevu, Liberation Tamil Tigers of Eelam, maritime, MDMK, Nature, Naval, Navy, Nehru, Ocean, Palk Straits, Plant, plantindia, Premadasa, Rain, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Rameswaram, Ramnad, Ramnadhapuram, Refugees, Sea, Sirimavo, Sri lanka, Srilanka, Strategy, Terrorism, Terrorists, TN, Tsunami, UN, VaiGo, VaiKo, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal, Waters | 8 Comments »

Sri Lankan gov’t, LTTE blamed for truce violations – 200 civilian deaths

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

இலங்கையில் இரு தரப்பு யுத்த நிறுத்த மீறல்கள்

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் சுமார் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள், இந்த சம்பவங்களுக்கு இரு தரப்புமே பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 22 திகதி விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனைத் தொடர்ந்து அரச படைகளிற்கும், விடுதலைப்புலிகளிற்கும் இடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக இடம்பெற்ற மோதல்களின் போது மாத்திரம் சுமார் 200 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு இன்று தெரிவித்துள்ளது.

மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனாலும், அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களினாலும் விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியிருக்கிறார்கள் என்றும் சம்பூர் பகுதிகளில் அரச படை நடவடிக்கை மேற்கொண்டதால் அவர்களும் அதனை பெரிய அளவில் மீறியிருக்கிறார்கள் என்றும் கண்கானிப்புக்குழுத் தலைவர் கூறியிருக்கிறார்.

கண்காணிப்புக்குழுவின் ஏனைய தீர்ப்புக்கள்….

மூதூர் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்
மூதூர் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்

— திருகோணமலையில் அரச கட்டுப்பாட்டுப்பாட்டிலுள்ள மூதூர் பகுதிகள் மீது வலிந்த தாக்குதலை நடத்தியது புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

— சம்பூர் பகுதிகளில் புலிகளின் கட்டுபாட்டிலிருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல் நடத்தியது அரசபடைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

—- அரச படைகளின் மீது யாழ்ப்பாணத்தில் புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்கள் புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

யாழ் மோதல்களும் பெரும் அவலங்களுக்கு வழி செய்தன
யாழ் மோதல்களும் பெரும் அவலங்களுக்கு வழி செய்தன

—– விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் அரச படைகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களும், முகமாலையின் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல்களை நடாத்தியதும் அப்பகுதிக்குள் உள்புகுந்ததும் அரச படைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

—- மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்காது, சுயாதீன விசாரணைகளிற்கு இடமளியாதது அரச படைகளும், புலிகளும் அதாவது இரு தரப்பும் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

—- விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிற்கு உட்செல்லவும், வெளியேறவும் சிவிலியன்களுக்கும், அத்தியாவசியப் பொருட்களிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது அரச படைகளும், புலிகளும் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

Posted in Ceylon, deaths, Eezham, LTTE, North East, Norway, Peace, Rajapakse, Sri lanka, Tamil, Triconamalee, Truce, Viduthalai Puligal, Violations | Leave a Comment »

Anura Bhandranayake’s Observations were not reflected by the Sri Lankan Govt.

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 8, 2006

உயர்ஸ்தானிகர்கள் குறித்த கருத்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல -இலங்கை அரசு

இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ்
உறவு பலமடைய தூதுவர் ஆற்றிய பங்களிப்பினை அரசு வரவேற்கிறது – இலங்கை அரசு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமா ராவ் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் வலி முகமட் ஆகியோரின் நடவடிக்கை குறித்து இலங்கை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க அவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் இலங்கை அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார்.

அனுரா அவர்கள் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் குறித்த செய்திகள் வெளியான 48 மணி நேரத்துக்குப் பின்னர் இந்த அறிக்கை வருகிறது.

இது தொடர்பாக வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில், இலங்கை, தனது அண்டை நாடுகளான இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும், நெருக்கமான உறவுகளைப் பேணிவருகிறது என்றும், இவ்வாறான பரஸ்பர உறவுகளை மேலும் வளர்க்க இரு நாட்டுத் தூதர்களும் அளப்பரிய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள் என்றும் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.

நிருபமா ராவ், இந்தியத் தூதுவராக பதவி ஏற்றதில் இருந்து இலங்கை-இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்த வழங்கிய பங்களிப்பினை இலங்கை அரசு மிகவும் ஆழமாக வரவேற்கிறது என்றும், மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து அவர் சந்தித்து வரும் பல்வேறு வகையிலான சவால்களுக்கும், சமாதான முயற்சிகளில் முன்னேற்றம், இலங்கையின் பாதுகாப்பு, இறைமை போன்ற விடயங்களுக்கும் இந்தியாவினால் வழங்கப்பட்ட பங்களிப்பு சரியாக சிந்திக்கும் அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்று என்றும் சமரவீர தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

Posted in Ambassador, Anura Bhandranayake, Ceylon, Eezham, India, LTTE, Mahindra Rajapakse, Mangala Samaraweera, Nirupama Rao, Pakistan, SAARC, Sri lanka, Tamil, Waali Mohammed | 1 Comment »

17 Volunteers of Action Against Hunger Killed – Responsible Party

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் அறிக்கை தவறு மற்றும் ஆதாரமற்றது – இலங்கை அரசு

இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூரில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டு ஆக்சன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற தன்னார்வத்தொண்டர் அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அரச ஆயுதப்படையினரே காரணம் என யுத்த நிறுத்தக்கண்காணிப்புக் குழு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையினை அடுத்து, இலங்கையில் ஐ.நா அமைப்பு தனது பணிகளை இடைநிறுத்தக்கூடும் என அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக் குறித்து உடனடியாகக் கருதுக்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ள இலங்கை அரசு, கண்காணிப்புக் குழுவினது அறிக்கையினை தவறு என்றும் ஆதாரமற்றது என்றும் சாடியிருக்கிறது.

இந்த விவகாரத்தினை வெளிநாட்டமைச்சும், சமாதான செயலகப் பணியகமும் கையாளவுள்ளது என்றும் ஐ.நா வின் இந்த நிலைப்பாடு குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் கருத்துக்களைப் பற்றிக் அரசின் கருத்தினைத் தெரிவிப்பதற்கு இன்னமும் காலம் தேவைப்படுகிறது. என்று அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, பிரேத பரிசோதனையை நடத்திய அனுராதபுரம் மாவட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் இந்த 17 பேரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி பிற்பகலோ அன்றி 4 ஆம் திகதி அதிகாலையோ தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இக்காலப்பகுதியின் போது மூதூர் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தது என்றும், 5ஆம் திகதி தான் இராணுவம் அப்பகுதிகளை மீளவும் கைப்பற்றியது என்றும் கூறினார்.

Posted in 17, Action Against Hunger, Anuradhapuram, August 4, Ceylon, Eelam, Eezham, France, JVP, LTTE, Moodhur, Moodoor, Moothur, Party, Prabhakaran, Responsible, Sri lanka, Srilanka, Tamil, Triconamalee, Volunteering | Leave a Comment »

Sinhala Govt. Atrocities against India

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 25, 2006

மன்னிப்பதும்… மறப்பதும்…அரவணைப்பதும்…

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார்.

கீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய தமிழக நகரங்கலில் இருந்து தமிழரான முஸ்லிம்களும் மும்பையிலிருந்து போராக்கள், பார்சிகள், சிந்திகளான முஸ்லிம்களும் கொழும்பு நகரிலும் சிங்களக் கிராமங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 1915-ல் முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் மூண்டது. முஸ்லிம்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, பின்பு இலங்கைப் பிரதமரான சேனநாயக்கா உள்ளிட்ட மூத்த சிங்களத் தலைவர்கள் அக்காலத்தில் திரண்டெழுந்தனர்.

1927-ல் காந்தியடிகளின் இலங்கைப் பயணத்தின்போது சிங்களத் தீவிரவாதிகள் காட்டிய எதிர்ப்புகளையும் ஈழத்தமிழரும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸýமாக அளித்த வரவேற்பையும் இந்திய விடுதலைப் போருக்காகக் காந்தியடிகளிடம் தமிழர் அளித்த நன்கொடைகளையும் மகாதேவ தேசாய் விரிவாக எழுதியுள்ளார்.

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிக்காகச் சென்ற தமிழகத் தொழிலாளர்களையும் கொழும்புத் துறைமுகத்தில் பணிக்காகச் சென்ற கேரளத்து தொழிலாளர்களையும் திருப்பி அனுப்புமாறு தொடர்ச்சியாகப் பல போராட்டங்களைச் சிங்களவர் நடத்தினர். 1920-களில் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ.குணசிங்கா தலைமையில் முளைவிட்ட இந்தப் போராட்டங்கள் 1930களில் கூர்மை அடைந்தன.

மலையாளிகளைத் திருப்பி அனுப்பக் கோரிய சிங்களவரின் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கும் நோக்குடன், கேரளப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.கோபாலன், 1939-ல் கொழும்புக்குச் சென்றார். வெள்ளவத்தையில் அவர் பங்கேற்ற மேதினக் கூட்டத்தை சிங்களத் தீவிரவாதிகள் குலைக்க முயன்றனர். அதன் பின்னர் 1940-களின் தொடக்கத்தில் மலையாளிகள் கொழும்பிலிருந்து முற்றாக வெளியேறினர்.

மலையகத் தமிழ்த் தொழிலாளருக்குச் சிங்களவர் தொடர்ச்சியாக இழைத்து வந்த கொடுமையைத் தணிக்க, மகாத்மா காந்தியின் சார்பில் ஜவாஹர்லால் நேரு இலங்கைக்குச் சென்றார். இலங்கை இந்தியக் காங்கிரûஸ நிறுவினார். 1939 ஜூலை 26 அன்று கொழும்பு, காலிமுகத் திடலில் அவர் பங்கேற்று உரையாற்றிய கூட்டத்தைச் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ. குணசிங்காவின் அடியாள்கள் குழப்பினர்.

1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தின் ஆயத்தப் பணிகளுள் ஒன்றுதான், தமிழகத்திலிருந்து சென்று மலையகத் தோட்டங்களை வளப்படுத்திய தொழிலாளரின் குடி உரிமையைப் பறித்த சட்டமாகும். மலையகத் தமிழ்த் தொழிலாளர் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டுமென இந்தியாவிடம் சிங்களவர் கூறினர்; இந்தியா மறுத்தது; அவர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு.

நேரு காலத்தில் பலமுறை முயன்று தோற்றதை, சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் இலங்கை பெற்றுக்கொண்டது. சிறீமாவோ-சாஸ்திரி மற்றும் சிறீமாவோ- இந்திரா ஒப்பந்தங்கள் சிங்களவரின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகளின் வெற்றி முகங்கள். நான்கு இலட்சம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் கச்சத் தீவை இலங்கை எல்லைக்குள் அடக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டதல்லவா?

மலையகத் தமிழர்களைத் திரும்பப் பெற இந்தியா ஒப்பியதற்கு நன்றியாக, 1977லிலும் 1983லிலும் இனக்கலவரத்தில், கொழும்பில் வணிகம் செய்த இந்திய முதலாளிகளைக் கொலை செய்து, அவர்களின் சொத்துகளைச் சிங்களக் காடையர் சூறையாடினர். நாடற்றவர்களான மலையகத் தமிழர் பலரையும் கொன்றுகுவித்தனர்.

கச்சத் தீவைக் கொடுத்ததற்கு நன்றியாகத் தமிழக மீனவரின் உயிர்களைப் பலி கேட்டுக்கொன்று குவித்து, தமிழக மீனவரின் படகுகளைச் சேதாரமாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, பிடிபட்ட மீன்களையும் இன்றுவரை இலங்கைக் கடற்படை பறித்தெடுத்துச் சென்றுவருகிறது.

1971 ஏப்ரலில் ஜேவிபியின் ஆயுதப் புரட்சியை அடக்க, இந்தியா படைகளை அனுப்பியது. நன்றிக் கடனாக, 1971 டிசம்பர் வங்கப்போரில், இந்திய வான் பகுதிமேல் பறக்க முடியாத பாகிஸ்தான் விமானங்கள், இந்தியாவுக்கு எதிராகக் கொழும்பு விமான நிலையத்தில் தங்கிப்போக, ஈழத்தமிழரின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு உதவியது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும் நூல்களையும் குப்பைகள் என இழித்து, அவற்றின் இறக்குமதியை 1971 முதல் கட்டுப்படுத்தியது.

1983– முதலாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் பலமுறை தாக்குதலுக்குள்ளாயது; தூதரக வாகனங்கள் கொளுத்தப்பட்டன.

1987-ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒப்பமிட, ராஜீவ் கொழும்பு செல்கிறார். அப்போதைய பிரதமரான பிரேமதாசா, ராஜீவை அவமதிக்கத் திட்டமிட்டு கொழும்பை விட்டு நீங்கித் தாய்லாந்தில் பயணித்தார். ராஜீவை அவமதித்த பிரேமதாசாவின் அரசியல் குரு, 1939 ஜூலை 26-ல் நேரு பேசிய கூட்டத்தைக் குலைக்க வந்த ஏ.இ.குணசிங்கா.

கொழும்பில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ராஜீவுக்குப் பிரியாவிடை… கடற்படைச் சிப்பாய் ஒருவன், ராஜீவின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் கடுமையாகத் தாக்குகிறான். குற்றவாளியான அவனை நீதிமன்றம் சிறையில் அடைக்க, அரசோ அவனை விடுதலை செய்கிறது.

1983 முதலாக, பல இலட்சம் ஈழத்தமிழர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாழ்வை ஓட்டவேண்டிய, இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைக்கும் சிங்களப் படையின் வெறியாட்டமே காரணமாகும்.

ஆசிய நாடுகளின் வாக்குகளைப் பிரித்து, இந்திய வேட்பாளர் ஐ.நா. தலைமைச் செயலராக வெற்றி பெற முடியாதவாறு தானும் ஒரு வேட்பாளரைக் களத்தில் இறக்கி, அவருக்காக உலகெங்கும் சென்று ஆதரவு திரட்டுகிறது இலங்கை அரசு.

விவேகானந்தர் காலம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, சிங்கள இனத்தவரின் அரசும், அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தனி மனிதர்களும் இந்தியாவின் முகத்தில் திட்டமிட்டே பலமுறை கரி பூசி வந்துள்ளனர். அவற்றைப் பொருளெனக் கொள்ளாது, நிகழ்வுகளை மறந்து, அவர்களின் அடாச் செயல்களை மன்னித்து, தொடர்ந்தும் சிங்களவருக்கு நன்மையையே செய்து வருகிறது இந்தியா. இந்த மாதத்தில் இலங்கைப் படைக்கு ராடார் கருவிகளை அன்பளிப்பாகவும் கொடுத்துள்ளது. மறப்பதும் மன்னிப்பதும், அவர் நாண நன்னயம் செய்தலும் இந்திய மண்ணோடு கலந்த மரபுகள். 999 மனிதத் தலைகளைக் கொய்த அங்குலிமாலாவை மன்னித்துப் பண்பட்ட மனிதனாக்கித் தன் சீடராக்கியவர் புத்தர்.

இந்தியாவே ஆயுதங்களைக் கொடுத்தது; பயிற்சியை வழங்கியது; நிதியும் வழங்கியது. அதைத் தொடர்ந்த 1987-91 காலத்திய நிகழ்வுகளால் இந்தியாவின் கடுஞ் சினத்துக்கு ஈழத்தமிழர் ஆளாகினர். 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்தேவனார் முதலாக, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள் ஊடாக, இன்றைய அறிஞர், புலவர், படைப்பாளிகள் வரை, கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கூடாக, ஈழத்தமிழரும் இந்தியாவும் எவ்வித பகைமையோ, உரசலோ, எதிர்ப்புணர்வோ இல்லாது கொண்டும் கொடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்கொண்டு, வாழ்ந்து வருகின்றனர். இடையில் ஈழத்தமிழர் உணர்ச்சிவயத்தால், பொருந்தாச் செயல் செய்திருப்பின் மன்னிப்பதும் மறப்பதும் மீண்டும் அரவணைப்பதும் இந்தியாவின் கடனல்லவா? நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உரசியும் கடுமையாக எதிர்த்தும் வரும் சிங்களவரோடு பெருந்தன்மையோடு நடப்பதுபோல், இடையில் ஒரு சில ஆண்டுகள் இணக்கமற்றிருந்ததற்காக வருந்தும் ஈழத்தமிழருடனான கசப்புகளை மன்னித்து மறந்து பெருந்தன்மையோடு நடப்பது இந்தியாவின் கடன்.

Posted in AK Gopalan, Arms, Ceylon, Dinamani, Eezham, Fights, Gunasinha, India, Jantha Vimukthi Pramuna, JVP, Katcha Theevu, Kumaraswamy, LTTE, Premadasa, Rajeev, Rajiv Gandhi, Senanayake, Sirimavo, Sri lanka, Srilanka, Tamil | 1 Comment »

Mullai Theevu victims are School Kids – UNICEF

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

முல்லைத்தீவு குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர்கள் பள்ளி மாணவிகள் – யுனிசெப்

ஐக்கிய நாடுகளின் சிறார் நல நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியான ஜொன் வாங்கபன் நேற்றைய குண்டுவீச்சில் இறந்துபோன பதின்மவயதுப் பெண்கள் அனைவரும் முல்லைத்தீவு மற்றும் கிளிநோச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வந்த மாணவிகள் என்று தமது விசாரணையின் போது தெரியவருகிறது என்று பி பி சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

முல்லைத் தீவில் நடந்த தாக்குதல் குறித்து யுனிசெப் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். காயமடைந்த பலரிடமும் அவர்கள் சம்பவம் குறித்துக் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுனிசெப்
கொல்லப்பட்டவர்கள் பள்ளி மாணவிகள் என யுனிசெப் கருத்து

ஆனால் அந்த மாணவிகளுக்கு யார் எதற்காக பயிற்சி ஏற்பாடு செய்துள்ளனர் என்பதை தம்மால் உறுதி செய்யமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ள இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது என்ன நடந்தது என்பதை அறியவும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்ப்பதற்காகவும் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம் கேட்டுள்ளது.

Posted in BBC, Ceylon, Children, Eezham, Kids, LTTE, Sri lanka, Srilanka, Tamil, Terrorism, UN, UNICEF | Leave a Comment »

Srilankan Army Attacks Mullai Theevu Orphanage

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

இலங்கைப் படை விமானம் குண்டுமழை: 61 அனாதை சிறுமிகள் பலி

முல்லைத்தீவில் உள்ள அனாதை இல்லம் மீது திங்கள்கிழமை இலங்கை படை விமானம் நடத்திய தாக்குதலில் பலியான சிறுமிகள்.

கொழும்பு, ஆக. 15: இலங்கையில் 24 மணி நேரத்துக்குள் 3 வெவ்வேறு சம்பவங்களில் 83 பேர் இறந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். முல்லைத் தீவில்: முல்லைத்தீவு மாவட்டத்தின் அனாதை இல்லத்தின் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் 61 மாணவிகள் அங்கேயே உடல் சிதறி இறந்தனர், 60 பேர் காயம் அடைந்தனர். திங்கள்கிழமை காலை இக் கொடூரத் தாக்குதல் நடந்தது.

கொழும்பில்: இச் சம்பவம் நடந்த 5 மணி நேரத்துக்கெல்லாம் தலைநகர் கொழும்பில், அதிபர் ராஜபட்சய இல்லத்துக்கு அருகில் கட்டுக்காவல் மிகுந்த வீதியில், ஆட்டோவில் இருந்த கண்ணிவெடி குண்டு வெடித்தது. அப்போது அந்தப் பக்கமாக காரில் சென்ற பாகிஸ்தான் தூதர் பஷீர் வாலி நூலிழையில் உயிர் தப்பினார். அவருக்குப் பின்னால் வந்த வாகனம் வெடித்துச் சிதறியது. அவருக்குக் காவலாக வந்த 4 கமாண்டோ வீரர்களும், சாலையில் அப்போது சென்றவர்களில் 3 பேரும் அங்கேயே இறந்தனர். இலங்கை ராணுவத்தின் 3 மெய்க்காவலர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கைக்கு ஆயுதம் வழங்குகிறது பாகிஸ்தான். இதனால் ஆத்திரம் அடைந்து பாகிஸ்தான் தூதரை குறிவைத்து புலிகள் இந்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் நடந்த லிபர்ட்டி பிளாசா இடத்துக்கு மிக அருகில் அதிபர் மகிந்த ராஜபட்சயவின் மாளிகை உள்ளது. இதே பகுதியில் உள்ள ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கியுள்ளனர்.

கெயிட்ஸ் தீவில்: யாழ்ப்பாண நகருக்கு அருகில் உள்ள கெயிட்ஸ் தீவில் அலப்பிட்டி என்ற இடத்தில் புனித பிலிப் மேரி தேவாலயத்தின் மீது பீரங்கியால் சுட்டனர் இலங்கை தரைப்படையினர். ஞாயிற்றுக்கிழமை நடந்த இத் தாக்குதலில் 15 பேர் இறந்தனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பத்திரம்: தலைநகர் கொழும்பில் கண்ணிவெடி வெடித்த இடத்துக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பெய்து கொண்டிருந்ததால் காலையில் விளையாட்டுப் பயிற்சிக்கு அவர்கள் வெளியில் செல்லவில்லை. குண்டு வெடித்தபோது அனைவரும் ஹோட்டல்களில்தான் இருந்தனர். பிற்பகலிலும் மழை தொடர்ந்ததால் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இதை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Posted in Arms, Attacks, Ceylon, Dinamani, Eelam, Eezham, Fights, LTTE, Mullai Theevu, News, Pakistan, School, Schools, Sri lanka, Srilanka, Tamil, Terrorism | Leave a Comment »

Pakistan Ambassador escapes in Sri Lanksn Attack

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

கொழும்பு குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் தூதர் உயிர் தப்பினார்

தாக்குதலுக்குள்ளான வாகனம்
கொழும்பு குண்டு வெடிப்பில் தாக்குதலுக்குள்ளான வாகனம்

இலங்கையின் தலைநகர் கொழும்பின் இதயப் பகுதியான கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இன்று பிற்பகல் சுமார் 1.10 மணியளவில் இடம்பெற்ற சக்திமிக்க கிளேமோர் குண்டுவெடிப்பிலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார் இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகமது.

ஆனால் அவருக்கு பாதுகாப்பாக,அவரது வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருந்த ஜீப் வண்டியொன்று கிளேமோர் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த விசேட கொமாண்டோ படை வீரர்கள் நான்கு பேர் உட்பட, சுமார் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

இந்தக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பி.பி.சி. தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கப்பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, விடுதலைப்புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்று கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தில் படையினர்
சம்பவம் நடந்த இடத்தில் படையினர்

மேலும், இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகமது அவர்களை இலக்கு வைத்தே இந்தத்தாக்குதல் நடாத்தப்பட்டது என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டினார்.

பாகிஸ்தான் அரசு ஒரு நேசமான அண்டை நாடு என்கிற முறையில் இலங்கையின் பாதுகாப்பிற்காக சில உபகரணங்களை வழங்கியது குறித்து விடுதலைப் புலிகள் விரக்தி அடைந்து இது போன்ற தாக்குதலை நடத்தியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தானிய மற்றும் இந்திய அரசுகள் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. பாகிஸ்தானின் சுதந்திரதினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Ambassador, Attacks, BBC, Ceylon, Pakistan, Sri lanka, Srilanka, Tamil, Terrorism | Leave a Comment »

Mullai Theevu Attack – 60 Children Dead

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

இலங்கை இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று
இலங்கையில் தொடர்ந்து மோதல்

முல்லைத்தீவு தாக்குதலில் 60 க்கும் அதிகமான சிறார்கள் பலி என்கின்றனர் விடுதலைப் புலிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்த 61 மாணவியர் கொல்லப்பட்டதாகவும் 129 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் சிறுவர்கள் மீது தாங்கள் தாக்குதலை நடத்தவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வவ்லிபுனம் என்னுமிடத்தில் உள்ள ஏதிலியச் சிறுவர்களுக்கான இல்லத்தின் வளவினுள்ளேயே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்த நிவாரணம் தொடர்பான முதலுதவி தொடர்பான வதிவிடப் பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவர்கள் உடனடியாக புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் முகாம் மீது தாக்கினோம் என்கிறது இலங்கை அரசு
விடுதலைப் புலிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினோம் என்கிறது இலங்கை அரசு (ஆவணப் படம்)

தலையில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் போதிய வசதிகள் இல்லாதிருப்பதாகவும், இதனால் அவ்வாறானவர்களை தென்பகுதியில் உள்ள வசதிமிக்க மருத்துவ மனைகளுக்கு அனுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரச படைகள் சிறார்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட புலிகளின் இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி தாக்குதல் நடந்த இடம் விடுதலைப்புலிகளின் ஒரு பயிற்சி முகாம் என்று இலங்கை அரசாங்கத்தின் இராணுவ விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வன்னிப்பிரதேசத்தில் உள்ள சர்வதேச அமைப்புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைக்குழு, போர்நிறுத்த கண்காணிப்பு குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன

Posted in Ban, BBC, Ceylon, Eelam, Eezham, Kids, LTTE, Mullai Theevu, Sri lanka, Srilanka, Tamil, Terrorism | Leave a Comment »

Every Indian has to adhere to the LTTE Ban – M Karunanidhi

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2006

விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு அனைவரும் அடங்கித்தான் செல்ல வேண்டும் என்கிறார் தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி
தமிழக முதல்வர் மு. கருணாநிதி

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியா இல்லையா என்பது விவாதத்திற்குரியது என்றாலும் அந்த தடை அமலில் இருக்கும் வரை, அந்த தடைக்கு அனைவரும் அடங்கித்தான் செல்ல வேண்டும் என்றும், அதை மீறிச்செல்வோம் என்று யாராவது செயல்பட்டால் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை அவர்கள் ஏற்றுத்தான் தீர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடந்த விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் பேசும்போது, வேலூர் மாவட்டம் திருப்பத்துர் நகரில் புரட்சிகர இளைஞர் முன்னணி என்கிற அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், அதில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, தடை நீக்கப்படவில்லை என்றால் இந்தியா துண்டுதுண்டாகிவிடும் என்று எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்ட அவர்கள் மீதும் அந்த கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கட்சியினர் மீதும் வழக்கு ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய கருணாநிதி, புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்தவர்கள் ஜூலை 31ம் தேதி ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து எந்த பதட்ட நிலையும் வேலூர் மாவட்டத்தில் இல்லை என்றும், நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அதிகாரிகள் தமக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

ஈழத்தமிழர்களுக்கான தமது அனுதாபத்தை ஈழத்திலே இருப்பவர்களுக்கும், சிங்கள தரப்புக்கும், இந்திய அரசுக்கும் வெளிப்படுத்துகின்ற வகையில் ஆர்ப்பாட்டங்களோ, கிளர்ச்சிகளோ அமையுமானால் அது ஏற்கத்தக்கதே என்று கூறிய கருணாநிதி, அதே சமயம் இத்தகைய பேரணி மற்றும் ஊர்வலங்களின் நிலைமைகள் வேறுமாதிரி திரும்புமேயானால் அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் எச்சரித்தார்.

கருணாநிதியின் இன்றைய எச்சரிக்கையும், அதை அவர் பீடிகையோடு சொன்ன விதமும், இலங்கை தமிழர் பிரச்சினையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் தலைவர்களுக்கு அவர் வெளிப்படுத்தியிருக்கும் மறைமுக சமிக்ஞையாகவே அரசியல் திறனாய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

அதோடு கூட, விடுதலை புலிகள் விஷயத்தில் திமுக எதிர்நோக்கும் அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான தர்மசங்கடங்களையும் அது வெளிப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
அன்றாட நடைமுறை அரசியலில் திமுக பின்வரும் பிரச்சினையை எதிர்கொள்கிறது.
அதாவது, பாமக, திக போன்ற தோழமை கட்சிகளும் மதிமுக, விடுதலைசிறுத்தைகள் ஆகிய எதிர்கட்சிகளும் தங்களின் புலிகள் ஆதரவு நிலையை சமீப காலமாக வேகப்படுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது.

இவர்களின் வலுவான எதிர்ப்பு காரணமாகவே, இந்திய நடுவணரசின் பயிற்சிக்காக தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கை காவலர்கள் 44 பேரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும்படி, கருணாநிதி நடுவணரசை வலியுறுத்தவேண்டிய நிலைமை உருவானதாக கருதப்படுகிறது. இதனால், பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு கடந்தவாரம் இலங்கை காவல்துறையினர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டார்கள்.

அதேசமயம், ராஜீவ் படுகொலை தொடர்பில் விடுதலை புலிகளை மன்னிக்க தயாராக இல்லை என்று மிகச்சமீபத்தில்கூட காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
பிரதான இடதுசாரிகட்சிகள் இரண்டும் கூட விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரிக்க தயாராக இல்லை. இந்த கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திவரும் திமுக, இவர்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய தேவை இருப்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்கட்டுகிறார்கள்.

இந்த பின்னணியில், புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அரசியல் பிரச்சாரம் குறித்த காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையே, அந்த கட்சியை சேர்ந்த ஞானசேகரன் இன்று பகிரங்கமாக சட்டமன்றத்தில் வெளிப்படுத்தியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

காங்கிரசின் இந்த எதிர்ப்பை தாம் கவனத்தில் கொண்டிருப்பதாக காட்டுவதற்காகவே, புலி ஆதரவாளர்களை கருணாநிதி இன்று பகிரங்கமாக எச்சரித்திருப்பதாகவும் சில திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இதற்கிடையே, இலங்கையில் நடைபெறும் வன்முறைகளை சர்வதேச சமூகம் இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பண்டியன் கூறியுள்ளார். மேலும், இலங்கையில் நடந்துவரும் வான்வழித்தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாண்டியன் கூறினார்.

Posted in Ban, BBC, Ceylon, DMK, Eelam, Eezham, India, Karunanidhi, LTTE, Sri lanka, Srilanka, Tamil, Tamil Nadu, TamilNadu, TN | 1 Comment »