Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘names’ Category

Burmese Human Rights Activist Daw Aung San Suu Kyi – Myanmar: Biosketch

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

புரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’!

முத்தையா வெள்ளையன்

சின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:

ஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.

1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.

தம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.

தாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.

போராட்டம்…

1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

வீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:

உலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:

அவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.

கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.

இதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

அங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா? 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்?!

Posted in Activist, Activists, AngSan, Arrest, AungSan, Biosketch, Buddhism, Burma, Democracy, Faces, Fight, Freedom, Gandhi, Independence, Liberation, Mahatma, Mandela, Myanmar, names, Oppression, people, SuKyi, SuuKyi, Violence | Leave a Comment »

List of Firsts – Tidbits, Trivia on Women achievements

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சுவடுகள்: பெண்கள் முதல் முதலாய்…

யுகன்

திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுகமான விஷயம்தான். அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வரலாற்றின் பக்கங்களாக இருந்தாலும் சரி. இன்றைக்குப் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இந்தியாவில் பல துறைகளில், பொறுப்புகளில் முதல் முதலாய் இடம்பிடித்த சிலரைப் பற்றிய ஞாபகங்கள் இங்கே…

1905

சுஸôன்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.

1916

தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? ஐந்து பேர்!

1927

அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

1951

டெக்கான் ஏர்வேஸில் பயணிகள் விமானத்தை செலுத்திய முதல் பெண் விமானி பிரேம் மாத்தூர்.

1959

அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

1966

கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய “மகசேசே’ விருதைப் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.

1970

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.

1972

இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.

1989

முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதவியேற்றார்.

1997

கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.

2005

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

2007

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.

Posted in Achievements, Faces, Females, first, History, Ladies, Lists, names, people, She, Trivia, Woman, Women | Leave a Comment »

Remembering a hero of liberty: Justice Hans Raj Khanna, former Supreme Court judge passes away – TJS George

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சுதந்திர இந்தியாவின் துணிச்சல் மிக்க நீதிபதி

டி.ஜே.எஸ். ஜார்ஜ், பத்திரிகையாளர்

சுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார்? அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.

காவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.

கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்டாலினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். “ஆள்கொணர் மனு’க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.

5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.

1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமான சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.

“”கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது” என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

தாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.

அதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் அனைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். “”ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்” என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.

எச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது மெüனம் கடைப்பிடிப்போம்.

Posted in abuse, Arrest, Attorneys, Biosketch, Conservative, Correctional, Courts, Faces, HansRaj, HR, Interrogation, Jail, Judge, Justice, Khanna, Law, Lawyers, legal, Liberal, Liberty, names, Obituary, Order, people, rights, SC, Torture | 1 Comment »

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Chief Minister’s secretary – Ko Shanmuganathan: Biosketch, Memoirs by Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

கோ.சண்முகநாதனை எனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி?
கருணாநிதி வெளியிட்ட தகவல்

All in the Family - Prodigal Sons and Daughters of DMK: Mu Karunanidhi, MK Azhagiri, MuKa Stalin, Kanimozhi Karunanidhy
சென்னை, பிப்.4-

கோ.சண்முகநாதனை தனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி? என்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கினார்.

திருமண நிகழ்ச்சி

முதல்-அமைச்சர் கருணாநிதியின் செயலாளர் கோ.சண்முகநாதனின் தம்பி கோ.ராமதாஸ்-அமுதா மகள் ரா.மலர்விழி-போரூர் மு.கலைமணி-சுப்புலட்சுமி மகன் மு.க.அருண் ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் கி.கதிரேசன்-தங்கை மகாலட்சுமி மகன் வ.க.சிவக்குமார்-சென்னை சு.குமார்-சுப்புலட்சுமி மகள் கு.கவிதா ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் டாக்டர் ம.ராசேந்திரன்-தங்கை மைதிலி மகள் ரா.எழில்-சென்னை ஜா.லெனார்டு மகன் லெ.ஜான் சாலமன் பிரேம்குமார் ஆகியோரது திருமணமும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம்- கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை ஏற்று திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோபம் வந்தால்

40 ஆண்டு காலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். சண்முகநாதன் இன்றைக்கு நீங்களெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல நான்தான் அவர், அவர்தான் நான் என்கின்ற அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகாலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். அப்படியும் சொல்லலாம். சண்முகநாதனோடு நான் இருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்வதென்பது சாதாரண காரியம் அல்ல. அனுபவபூர்வமாக நான் சொல்கின்றேன். நீங்கள் அதற்காக சண்முகநாதனை கொடுமையாகக் கருதிவிடக் கூடாது. எனக்கு கோபம் வந்தால் அவருக்குக் கோபம் அடங்கிவிடும். அவருக்கு கோபம் என்று தெரிந்தால் நான் அந்த பக்கமே திரும்ப மாட்டேன்.

இது என்னுடைய வீட்டிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு செயலாளர் 40 ஆண்டுகாலமாக அவரோடு நான் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.

எண்ணி பார்க்கவில்லை

எப்படி சண்முகநாதனை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன் என்பது ஒரு புதிர். தி.மு.க. இப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி, அதற்கு முன்பு பெரியார் தலைமையில் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் கழகத்தினுடைய பேச்சாளர்களிலே நானும் ஒருவன்.

அந்த நேரத்தில் நான் மாநிலத்திலே எங்கே சென்று பேசினாலும், மாவட்டத் தலைநகரமாக இருந்தாலும், வட்டத் தலைநகரமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒன்றிய நிலையிலே உள்ள இடமாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒருவர் உட்கார்ந்து என்னுடைய பேச்சை எழுதிக் கொண்டேயிருப்பார்.

மூன்று வழக்குகள்

என்னுடைய நண்பர் திருவாரூர் தென்னனைப் பார்த்து கேட்டேன், யார் இந்தப் பையன், நான் போகின்ற கூட்டத்திற்கெல்லாம் தவறாமல் வந்து எழுதிக் கொண்டிருக்கிறானே, இவன் யார் என்று கேட்டேன். தென்னன் சொன்னார், இவர் சொந்த ஊர் திருக்கண்ணமங்கை. நன்றாகப் படித்திருக்கிறார். இவர் போலீசினுடைய சுருக்கெழுத்தாளராக இருக்கிறார். அவரை ஸ்பெஷலாக நீங்கள் போகிற இடங்களுக்கெல்லாம் அனுப்புகிறார்கள். உங்களுடைய பேச்சை எழுதி போலீசுக்கு கொடுக்கிறார். நீங்கள் ஏதாவது சர்க்காரைப் பற்றி தவறாகப் பேசியிருந்தால் வழக்கு போடுவதற்கு அந்தப் பேச்செல்லாம் பயன்படும் என்று சொன்னார்.

நான் அதிலிருந்து சண்முகநாதனிடத்திலே ஒரு கண்ணாகவே இருந்தேன். நான் பேசிய பேச்சைப் பற்றி இரண்டு, மூன்று வழக்குகள் அப்பொழுது என்மீது வந்தன. சண்முகநாதன் அந்த பேச்சிற்கு நீதிமன்றங்களுக்கு சாட்சி சொல்ல வருவார் என்றுகூட எதிர்பார்த்தேன். அதற்குள் அரசு மாறிவிட்ட காரணத்தால் அந்த வழக்குகள் நடைபெறவில்லை. சண்முகநாதனை நான் நீதிமன்றத்திலே அப்பொழுது சந்திக்க இயலவில்லை. சட்டமன்றத்திலே சந்திக்க வேண்டும் என்றிருக்கும்போது நான் நீதிமன்றத்திலே எப்படி சந்தித்திருக்க முடியும்.

திறமையானவர்

இப்படி அவர் திறமையாக, எந்தத் தலைவருடைய பேச்சையும் எழுதக்கூடிய ஆற்றல்பெற்றவர் என்று அறிந்தபிறகு, அந்தச் சூழலிலே அண்ணா தலைமையிலே 1967-ம் ஆண்டு ஆட்சி உருவாயிற்று. அண்ணா யார் யார் எந்தெந்த துறைக்கு அமைச்சர் என்று குறித்து வெளியிட்டபிறகு, நான் என்னுடைய துறையை கவனிக்க என்னுடைய செயலாளராக யாரை நியமித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபோது, சண்முகநாதன் நினைவுக்கு வந்தார்.

ஒரு பையன் உட்கார்ந்து நான் பேசும்பொழுது எழுதுவானே அவனை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டால் என்ன என்று யோசித்து சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொண்டேன். இப்படி 40 ஆண்டுகாலமாக ஒரு போலீஸ் துறைக்கு தி.மு.க.வின் பேச்சுக்களை எழுதிக்கொடுத்து, இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்டவிடுங்கள் என்று யார் எழுதிக் கொடுத்தாரோ அவரை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன்.

அப்படி செயலாளராக வந்தவர்தான் இன்றைக்கு உங்களால் புகழப்படுகிறார்; பாராட்டப்படுகிறார் என்றால் அவ்வளவு பெருமையும் சண்முகநாதனுக்கு அல்ல, அவரை நியமித்துக் கொண்ட என்னைத்தான் அந்த பெருமை சாரும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

மாதச் சம்பளம்

ஒரு எளிய குடும்பத்தில், சாதாரண, சாமான்ய குடும்பத்திலே பிறந்து, இரண்டு மூன்று சகோதரர்களுடன் பிறந்து, சில உற்றார் உறவினர்கள், அவர்களும் மிட்டா மிராசுகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சூழ்நிலையில் என்னைப் போலவே, என்னுடைய குடும்பத்தாரைப் போலவே இருந்த தம்பி சண்முகநாதன், இன்று என்னோடு இருக்கிறார்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஆட்சி மாறிய பிறகு நான் இந்த பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு, அவரை அழைத்து நீ என்னோடு இருக்கின்றாயே, மாதச் சம்பளம் எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன்.

எவ்வளவு வேண்டும், எவ்வளவு தர என்று கேட்கவில்லை. எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். நான் உங்களிடத்தில் சம்பளம் வாங்கப் போவதில்லை. கடைசி வரையிலே என்னை உங்களிடத்திலே ஒப்படைத்து விட்டேன் என்று சொன்னார் சண்முகநாதன்.

40 ஆண்டு காலமாக

அப்படி சம்பளமே வேண்டாம் என்று தன்னையே என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிற தம்பியிடத்தில் எனக்கு இருக்கிற அன்புக்கும், பாசத்திற்கும் காரணம் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட தம்பி சண்முகநாதன் சாதாரண, சின்ன குறிப்புகளைக்கூட விடாமல் எனக்கு எழுதித்தந்து, தேடித்தந்து, அப்படிப்பட்ட தேடலுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்து, அவைகள் எனக்கு கிடைக்குமாறு செய்து நான் பேச, எழுத, செயல்பட இந்த 40 ஆண்டுகாலமாக என்னோடு இருந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் அரசியல் காரணங்களுக்காக எழுதுவது மாத்திரமல்ல, இலக்கியங்கள்எழுதச் சென்றாலும், மாமல்லபுரத்திற்குச் சென்று எழுதினாலும், கோவாவிற்குச் சென்று எழுதினாலும், வேறு எந்த ஊருக்குச் சென்று எழுதினாலும், அங்கெல்லாம் அமர்ந்து எழுதுவது திருக்குறள் உரையானாலும், குறளோவியமானாலும், தொல்காப்பியப் பூங்காவானாலும் அங்கெல்லாம் அந்தப் பன்முகப் பணிக்கு தானும் அந்தப் பன்முகப் பணியாளரைப் போல விளங்கி எனக்கு உதவி செய்து கொண்டிருப்பவர் தம்பி சண்முகநாதன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி ஆகியோர் மணவிழாவிற்கு முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், திராவிட கழக தலைவர் வீரமணி, போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலுர் பழனிச்சாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தங்கபாலு எம்.பி., நடிகர்கள் நெப்போலியன், பிரசாந்த், நடிகை மனோரமா, தலைமை செயலாளர் திரிபாதி உள்பட பலர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

முடிவில் மு.க.அழகிரி நன்றி கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சி

முன்னதாக நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-

மத்திய மந்திரி ரகுபதி, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக்கழக தலைவர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.பி.பி.சாமி, மொய்தீன் கான், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், `தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுந்தரதேவன், கால்நடை துறை செயலாளர் லீனா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆதி சேஷையா, சென்னை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன், சமூகநலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனிச்சாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி,

அதிகாரிகள்

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கடல்சார் வாரிய இயக்குனர் முத்துக்குமாரசாமி, செய்தித்துறை இயக்குனர் மோகன்தாஸ், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரமவுலி, உள்துறை செயலாளர் மாலதி, தமிழ்நாடு கனிம நிர்வாக இயக்குனர் நந்தகிஷோர், திட்டக்குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் பாரதி, ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சக்தி காந்ததாஸ், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.சேகர், உளவு துறை ஐ.ஜி. ஜாபர்சேட், போலீஸ் ஐ.ஜி. முத்துக்கருப்பன்,

செ.குப்புசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காயத்ரி தேவி, சிவபுண்ணியம், பன்னீர்செல்வம், காமராஜ், டாக்டர் ராமன், நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், சினிமா பாடகர் மலேசியா வாசுதேவன், கவிஞர் வாலி, கவிஞர் மேத்தா, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம், சிறுசேமிப்பு துறை துணை தலைவர் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைசெயலாளர் பூச்சி முருகன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

Posted in aide, Anna, Anna Arivalayam, Arivalayam, Assistant, associate, Biosketch, Chief Minister, CM, Compatriot, Compensation, DMK, Faces, family, Government, Influence, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Marriages, Memoirs, Minister, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, names, partner, people, Power, Receptions, Salary, Sanmuganadhan, Sanmuganathan, Sanmukanadhan, Secretary, Shanmuganadhan, Shanmuganathan, Shanmukanadhan, Shanmukanathan, Sidekick, Stalin, Wedding | 1 Comment »

Chennai Gana specialist Viji – A Docufilm by V Ramu: Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

சமூகம்: விதி வரைந்த பாதை!

வானுயர்ந்த கட்டிடங்கள். பளபளக்கும் தார்ச்சாலை. நுனி நாக்கில் ஆங்கிலம் என்று பார்த்துப் பழகின நமக்குச் சென்னையின் மறுபக்கத்தை அறிமுகப்படுத்துகிறது, “மாநகர் ஜித்தன் மரண கானா விஜி‘ என்ற ஆவணப்படம். வி. இராமு படமாக்கியிருக்கிறார். சாலையோரங்களில், குப்பங்களில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களின் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் பல விதங்களில் உள்ளன. இந்த மக்களின் மகிழ்ச்சியை, சோகத்தைப் பாடல்களாக அந்த மக்களே பாடுகின்றனர். இந்த விளிம்புநிலை மக்களின் தவிர்க்க முடியாத இசை, கானா பாடல்கள். நம் கிராமங்களின் இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது போல் சென்னை மாநகரங்களில் மரண கானா பாடப்படுகிறது.

இந்த ஆவணப் படத்தின் நாயகன் விஜி சுமார் மூவாயிரம் சாவுகளுக்குப் பாடல் பாடி உள்ளார். “”அப்பா, அம்மா யாருன்னே தெரியாது. பேப்பர் பொறுக்கும் சிறுவர்களே என் சிறுவயது நண்பர்கள். எந்த வேலையும் தெரியாது. பீச்சுக்கு வர்றவங்ககிட்டே திருடறது. விபச்சாரத் தொழிலுக்குத் தூது வேலை பார்க்கறதுனு பொழப்பு ஓடுச்சு. அப்பவே ஏங்கூட இருந்தவங்க நானூறு, ஐநூறு சம்பாரிப்பாங்க. ஆனா எல்லா ரூபாயையும் போதைக்குதான் செலவு பண்ணுவாங்க. இப்படி போய்கிட்டிருந்த என் வாழ்க்கையில கானா நுழைஞ்சது” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் விஜி.

“”தண்டையார் பேட்டை பக்கம் ஒரு அம்மா தீபாவளி, கார்த்திகை நேரத்தில எங்களை மாதிரி ஆளுகளுக்குச் சாப்பாடு போடுவாங்க. செவப்புனா செவப்பு அப்படி ஒரு செவப்பு. அந்தம்மாவுக்கு முதுகில அழகா ஒரு மச்சம் இருக்கும். ஒரு தடவ நான் அதைத் தொட்டேன். “அப்படிலாம் தொடக்கூடாது ராசா. நீ எனக்கு புள்ள மாதிரி’னு சொன்னாங்க. மனசு உருகிப் போச்சு. அப்புறம் அந்தம்மாவப் பார்க்கல. கொஞ்ச நாள்ல அந்தம்மா, உடம்பு சீரியஸôகி ஹாஸ்பிடல்ல சேர்ந்திருக்கிறதா சொன்னாங்க. ஓடிப் போய் பார்த்தேன். நான் போனபோது அவங்க இறந்து போயிட்டாங்க. அந்தம்மாவுக்கு யாருமில்ல. ஒரே ஒரு பொண்ணு மட்டும் பக்கத்தில அழுதுகிட்டிருந்தது. அந்தம்மாவோட மக’னு சொன்னாங்க. ஏதோ சேட்டோட தயவுல இருந்தாங்கனு தெரிஞ்சது. பொண்ணு கையில அம்பது, அறுபது ரூபாதான் இருந்துச்சு. பேப்பர் பொறுக்கிறவங்க போட்டு வைச்சிருந்த பழைய டயர், பிளாஸ்டிக் வாளி எல்லாம் கிடந்துச்சு. அதை விலைக்குப் போட்டதுல 300 ரூபா கிடச்சுது. நானும் அந்தப் பொண்ணும் கண்ணம்மா சுடுகாட்டுல அந்தம்மாவுக்கு ஈமச் சடங்கு பண்ணினோம். மரண கானா ஆரம்பிச்சது அங்கதான்.

அந்தப் பொண்ணுக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லாததால ஹாஸ்டல்ல விடலாம்னு பார்த்தா வேண்டாம்னு சொல்லிடுச்சு. எனக்குத் தெரிஞ்சவங்க வீட்ல விட்டுட்டு ஜெயிலுக்குப் போயிட்டேன். கஞ்சா வித்த கேசுல அரெஸ்ட் பண்ணுவாங்க. நாங்க வித்ததில்ல. யாரோ விப்பாங்க. நாங்க ஜெயிலுக்குப் போவோம். சும்மா கணக்குக்காக அரெஸ்ட் பண்ணுவாங்க. அப்படி போனதுல பதினைஞ்சாயிரம் கிடைச்சது. ஜெயில்ல மாமுல் போக பனிரெண்டாயிரம் கிடைச்சது. அத வெச்சுகிட்டு நானும் அந்தப் பொண்ணும் வாழறோம். ரெண்டு குழந்தைங்க இருக்கு” என்கிறார் விஜி.

இந்த ஆவணப் படம் சென்னையின் பூர்வகுடி மக்களை, அவர்களுடைய வாழ்க்கையை- பண்பாட்டை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மனிதர்கள் வாழ்க்கை குப்பைகளிலும், சேரிகளிலும், சாலை ஓரங்களிலும் சுடுகாட்டிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மாதிரி இடங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தாமல் ஓவியக் கல்லூரியில் படத்தை எடுத்திருப்பது நெருடுகிறது.

“பம்பரக் கண்ணாலே’ என்ற சந்திரபாபு பாட்டு கானா வகையைச் சேர்ந்தது. இந்த மாதிரி கலைஞர்களுக்குச் சமூகத்தில் அங்கீகாரம் வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வது இன்னமும் எட்டா கனியாகவே இருக்கிறது. இந்த விளிம்புநிலை கலைஞர்களை ஆவணப்படுத்திய வி. இராமு இந்தச் சமூகம் அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை உணர வைக்கிறார்.

விதிக்கும் விஜிக்கும் ஓரெழுத்து வித்தியாசம்தான். எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து மரணங்களை நம்பி வாழும் இந்த மனிதர்களின் வாழ்க்கையும் மனித சமுத்திரத்தின் ஒரு துளிதானே?

முத்தையா வெள்ளையன்

Posted in Arrest, Audio, burial, Chennai, dead, Documentary, Faces, Films, Funeral, Gana, Jail, Kana, Madras, Movies, music, names, people, Poor, Raamu, Ramu, Rites, Slum, Songs, Viji | Leave a Comment »

Tamil Actor Sathyaraj – Biosketch in Dhinathanthi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(811)
சத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்

நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!

இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“கோமல் சுவாமிநாதன் இயக்கிய “ஆட்சி மாற்றம்”, “சுல்தான் ஏகாதசி”, “கோடுகள் இல்லாத கோலங்கள்” என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.

இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.

நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.

சூர்யா, கார்த்தி

நான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள்! கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்’ வாங்கிக்கொண்டு வந்தார்! அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்’வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.

விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த “சின்னத்தம்பி” படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.

வாடகை அறை

அப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.

ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.

அவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.

என் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். “கோவைக்கு வா! உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, “நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டேன்.

ஓவியப்போட்டி

நாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.

சரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்திருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.

வெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.

தயாரிப்பு நிர்வாகி

திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் – மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.

இந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், “நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டேன். `சரி’ என்றவர், “எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்” என்றார்.

பிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா? உடனே “ஸ்டில்ஸ்” ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!

சட்டம் என் கையில்

டைரக்டர் டி.என்.பாலு அப்போது “சட்டம் என் கையில்” என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.

அப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் “சட்டம் என் கையில்” படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் – ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.

பாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். “இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே!” என்று எனக்குத் தோன்றியது.

என்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், “கார் ஓட்டத்தெரியுமா?” என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் “தெரியும் சார்” என்றேன்.

அப்போதே மனசுக்குள் ஒரு பயம். “நடிக்கத் தெரியுமா?” என்று கேட்காமல், “கார் ஓட்டத் தெரியுமா?” என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்? ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.

ஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக “பைட் (சண்டை) தெரியுமா?” என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் “நான் `கராத்தே’யில் பிளாக் பெல்ட் சார்” என்றேன்.

உண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த “எண்டர் தி டிராகன்” படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே’ ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்’ எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.

“டயலாக் பேசுவியா?” டைரக்டரின் அடுத்த கேள்வி.

“பேசுவேன் சார்!”

“சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு” என்றார், டைரக்டர்.

நாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

—————————————————————————————————–

திரைப்பட வரலாறு 812
கமல் நடித்த “சட்டம் என் கையில்”:
வில்லனாக சத்யராஜ் அறிமுகம்

டி.என்.பாலு டைரக்ட் செய்த “சட்டம் என் கையில்” படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.

முதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ”விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்” என்றார்.

நானும் நடிக்கும் நேரத்துக்காக காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.

முதல் வசனம்

இந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் “எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.”

வில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், “இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்” என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.

ஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், “பைட் தெரியுமா?” என்று கேட்டபோது, “தெரியும்” என்று சொல்லிவிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்’ தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்’ தெரியாதே!

அதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்டை என்னுடன் மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்’ கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடிவாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்! அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

கமலுடன் சண்டைக்காட்சி

மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.

பொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்’ போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப் பார்த்ததும் `அடடா! உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே” என்றார்.

இப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்’ வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.

100-வது நாள்

முதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.

இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்’ என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.

பெயர் மாற்றம்

பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய’னில் இருந்து `சத்ய’வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை’யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்!

நடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.

இப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும்.

“சட்டம் என் கையில்” படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் “முதல் இரவு”, “ஏணிப்படிகள்” போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது “காதலித்துப்பார்” என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

“முதல் இரவு” படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.

டைரக்டர் பி.மாதவன் அப்போது “தங்கப்பதக்கம்”, “வியட்நாம் வீடு” என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் – ஷோபா நடித்த “ஏணிப்படிகள்” படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்’சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.

என்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் “பைக்” சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்’ ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்’ சேஸிங் சிறப்பாக அமைந்தது.

போராட்டம்

நான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர’ வில்லன்தான் அதிகம்.

`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா!’ என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களின் `அப்செட்’டுக்கு மத்தியிலும், தொடர்ந்து சினிமாவில் நான் நீடிக்கக் காரணம், அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான். என் வளர்ச்சியில் என் அளவுக்கு அவருக்கும் நம்பிக்கை இருந்தது.

திருமண ஏற்பாடு

சினிமாவில் சின்னதாய் ஒரு வளர்ச்சி நிலையில் நான் இருந்த சமயத்தில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். பெண் பார்க்க அவசியமில்லை. மாதம்பட்டி சிவகுமார் அண்ணனின் அக்கா மகள்தான் எனக்கு மணப்பெண் என்று, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

பெண்ணும் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டிருந்தபோது, நான் போய் எட்டிப் பார்த்தேன். அப்போது பெண்ணின் அப்பா (என் மாமா சண்முகசுந்தரம்) என்னிடம், “மாப்பிள்ளை இப்போதே பெண்ணைப் பார்க்க வந்துவிட்டார்” என்று கிண்டல் செய்திருக்கிறார்.

இப்படி உறவு முறையில் பெண் இருந்தாலும், சினிமாவில் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் திருமணம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

திரைப்பட வரலாறு 814
மொட்டைத் தலையுடன் சத்யராஜ் நடித்த
“நூறாவது நாள்” மகத்தான வெற்றி
ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்

டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய “நூறாவது நாள்” படத்தில் மொட்டைத் தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.

தனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.

சுந்தர்ராஜன் அறிமுகம்

இப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.

ஆர்.சுந்தர்ராஜன் அப்போது “பயணங்கள் முடிவதில்லை” என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன். அப்போது அவர், `உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே’ என்று சொல்லி வியந்தார். அதோடு, `நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது’ என்றும் கேட்டார்.

கதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

சினிமா கதை

இந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் – ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.

அவர் என்னிடம் `நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்’ என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.

ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க “சரணாலயம்” என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.

இப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே! இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.

நூறாவது நாள்

நண்பர் மணிவண்ணன் சொன்ன கிரைம் சப்ஜெக்ட்தான் “நூறாவது நாள்” என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார். படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

நான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே! அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் “சரணாலயம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.

இந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது.

நான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். “ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா!” என்றார்.

இதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது.

படம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், “நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது” என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் `பப்ளிசிட்டி’ ஆகிவிட்டது! இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்!

24 மணி நேரம்

இந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, “24 மணி நேரம்” என்று ஒரு படம் பண்ணினார். இதிலும் மோகன் – நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது.

இந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. நான் மணிவண்ணன் சாரிடம், “படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். `வீணை’ பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்” என்றேன்.

மணி சார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், “வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்” என்றேன்.

அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, `நீங்களே நடிச்சிருங்க தலைவா’ என்றார்.

அந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன். அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும்விதமாக, `தயாரிப்பாளர் திருமால் சார் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்’என்றேன்.

அப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், `படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்’ என்று சொன்னார். தயாரிப்பாளரும், `தாராளமாக நடிக்கட்டும்’ என்று பச்சைக்கொடி காட்டினார்.

வில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது.

ஒரே ஆண்டில் 27 படங்கள்

இந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன். காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின.

இப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை `அம்போ’ என்று விட்டுவிட முடியவில்லை. டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். `தர்ஜா தொங்கா’ என்ற பெயரில் (தமிழில் `கவுரவத் திருடன்’) உருவான அந்தப் படத்தில் சுமன் – விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.

இந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு.

இந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் `மர்ம மனிதன்’ என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டு வெளியானது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 819
பாலாஜி தயாரித்த “காவல்”
சிறிய வேடத்தில் விரும்பி நடித்தார், சத்யராஜ்

சத்யராஜ் பிசியாக இருந்த நேரத்திலும், பாலாஜி தயாரித்த ஒரு படத்தில், சிறிய வேடத்தை கேட்டு வாங்கி நடித்தார். படத்தில் ஐந்து நிமிடமே வந்து போகிற வேடம் அது.

வெற்றிகரமான ஹீரோ என்ற நிலைக்கு வந்து விட்ட சத்யராஜ், நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் படங்களிலும் நடித்தார். பாலாஜி தயாரித்த “மங்கம்மா சபதம்”, “அண்ணி” ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், “விடுதலை” படத்தில் மட்டும் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார்.

அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“ஹீரோவாக வளர்ந்து விட்டேன். என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இனி `வில்லன்’ வேடத்தையும் செய்தால், என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பாலாஜி சாரின் மங்கம்மா சபதம், அண்ணி படங்களில் வில்லனாக நடித்த நான், அடுத்து அவர் தயாரித்த `விடுதலை’ படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது, அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு

இத்தனைக்கும் அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் எடுத்தார்கள். நான் அதுவரை லண்டனை பார்த்ததில்லை. “எந்த வேடமாக இருந்தால் என்ன! லண்டன் பயணத்தை அனுபவித்து விடுவோம்” என்று எண்ணியிருந்தால் ஒருவேளை அந்த வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் நான் பாலாஜி சாரிடம், “நான் ஹீரோவாக நடித்த படங்கள் வரத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் சரியாக இருக்காது” என்று சொன்னேன்.

பாலாஜி சார் என்னை கூர்மையாகப் பார்த்தார். “இனி வில்லனாக நடிப்பதில்லை என்பதில் அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டதா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்! அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றேன்.

“உங்கள் தன்னம்பிக்கை வெற்றி பெறட்டும்” என்று வாழ்த்தியவர், என் தன்னம்பிக்கைக்கு அவரும் கைகொடுக்கும் விதமாய் எனக்குத் தந்த படம்தான் “மக்கள் என் பக்கம்.” மலையாளத்தில் பாலாஜி சாரின் மருமகன் மோகன்லால் நடித்த “ராஜா வின்டெ மகன்” படத்தைத்தான் இந்தப் பெயரில் தமிழில் `ரீமேக்’ செய்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அந்தப்படம், தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது.

பாலாஜி சார், மற்ற எந்த நிறுவனத்திலும் செய்திராத ஒரு ஏற்பாட்டை தனது நிறுவனத்தில் கலைஞர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் செய்தார். நடிகர் – நடிகைகள், டைரக்டர் ஆகியோர், படப்பிடிப்பின்போது உட்காரும் நாற்காலியில், அவர்களின் பெயரை குறிப்பிட ஏற்பாடுசெய்தார். இதனால், ஒருவர் நாற்காலியில் பிறர் உட்கார்ந்து கொள்ள முடியாது.

கூடுதல் சம்பளம்

“மங்கம்மா சபதம்” படத்தில் நடித்தபோது என் வில்லன் நடிப்புக்கு பேசிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஆனால் எனக்கு வந்து சேர்ந்ததோ 40 ஆயிரம் ரூபாய்! கணக்கில் ஏதோ தவறு நடந்து விட்டது என்று நினைத்த நான், பாலாஜி சாரை பார்த்து மீதி 15 ஆயிரத்தை கொடுக்கப்போனேன். அவரோ, “நன்றாக நடித்திருந்தீர்கள். அதனால், பேசினதைவிட அதிகமாகக் கொடுக்கத் தோன்றியது. கொடுத்தேன்” என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்.

படத்தின் தரத்துக்காக செலவை பொருட்படுத்தாதவர் இவர். “மக்கள் என்பக்கம்” படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோக்கள் தேவை என்று டைரக்டர் கேட்டபோது, 100 ஆட்டோக்களை உடனடியாக ஏற்பாடு செய்து விட்டார். நான்கூட அவரிடம், “சார்! 20 ஆட்டோ போதுமே” என்றேன். “கதைக்கு தேவையான பிரமாண்டத்துக்கு 100 ஆட்டோக்கள் இருக்கட்டுமே” என்று சொல்லிவிட்டார். 28 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

பாலாஜி சாரின் “திராவிடன்” படத்திலும் ஹீரோவாக நடித்தேன்.

ஐந்து நிமிட வேடம்

நடிக்க வந்த பிறகு, இந்தக் கேரக்டரில் நடிக்கிறேன் என்று நானாக கேட்டு வாங்கி நடித்தது “காவல்” படம் மட்டும்தான். பாலாஜி சாரின் தயாரிப்பான இந்தப்படம், ஒரு இந்திப்படத்தின் ரீமேக். அந்த இந்திப்படத்தில் ஹீரோவாக ஓம்புரியும், ஐந்து நிமிடமே வந்து போகிற போலீஸ்காரர் கேரக்டரில் நசுருதீன்ஷாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை நான் பார்த்தபோது, நசுருதீன்ஷா நடித்த அந்த கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. அதே படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும், பாலாஜி சாரை நானே போய் சந்தித்தேன். “சார்! எனக்கு சம்பளம் வேண்டாம். இந்தியில் நசுருதீன் ஷா நடித்த அந்த கவுரவ கேரக்டரை தமிழில் எனக்கு கொடுத்து விடுங்கள்” என்றேன். அவரும், “தாராளமாய் நடியுங்கள்” என்றார்.

படத்தில் என் போர்ஷனை இரண்டே நாளில் எடுத்து முடித்தார்கள். நான் பாலாஜி சாரை சந்தித்து, என் `நடிப்பு விருப்பம்’ நிறைவேற்றியதற்காக நன்றி சொல்லி புறப்பட்டபோது, தடுத்து நிறுத்தி, என் கையில் 3 பவுன்களைத் திணித்தார். நான், “சார்! எனக்கு சம்பளமே வேண்டாம்” என்று கூற, அவரோ, “இது என் அன்பளிப்பு. சம்பளம் அல்ல. நீங்கள் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டார். எனது 2 நாள் நடிப்புக்கு கிடைத்த 3 பவுனை கணக்கில் கொண்டால் அப்போது நான் படங்களுக்கு வாங்கிய சம்பள அடிப்படையில் அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்துக்குத்தான்!

டைரக்டர் பாசில்

தமிழ் சினிமாவில் அப்போது மலையாளத் திரையுலகில் இருந்து வந்து புரட்சி ஏற்படுத்தியவர் டைரக்டர் பாசில். தமிழில், ஜெய்சங்கர், பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர் நடித்த “பூவே பூச்சூடவா” படம் மூலம் ரொம்பவே பாப்புலராகி விட்டார். வித்தியாசமான கதைப் பின்னணிக்காக அந்தப்படம் பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றது.

நான் அப்போது படங்களில் இரவு, பகலாக ஓய்வின்றி நடித்த நேரம். தனது அடுத்த படத்தில் நடிக்கும்படி பாசில் என்னிடம் கேட்டுக்கொண்டார். பாம்குரோவ் ஓட்டலில், ஒரு இரவில் கதையைச் சொன்னார். ஓய்வே இல்லாததால், களைப்பு அடைந்திருந்த நான், கதையுடன் ஒன்ற முடியவில்லை. கதை சொல்லி முடித்த பாசில், “கதை எப்படி இருக்கிறது” என்று கேட்டபோது கூட, உடனே நான் பதில் சொல்லவில்லை. பாசில் புறப்பட்டுப்போனதும் எனது மானேஜர் ராமநாதனிடம் “அவர் கதை சொன்னார். நான் களைப்பாக இருந்ததால், கதையுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இந்தக் கதையில் நடிக்கவில்லை என்று கூறிவிடலாமா?” என்று கேட்டேன்.

அவரோ, “சார்! பாசில் மலையாளத்தில் பெரிய டைரக்டர். தமிழிலும் அவர் பெரிய அளவில் வருவார். நிச்சயம் அவர் வித்தியாசமான கதைக்குத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறார். பேசாமல் `சரி’ என்று சொல்லிவிடுங்கள்” என்றார்.

அப்படி நான் ஒப்புக்கொண்ட படம்தான் “பூவிழி வாசலிலே.”

கேரள உணவு

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது. எந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் எனக்கு சாப்பாட்டுப் பிரச்சினை கிடையாது. அந்தந்த ஊரில் உள்ள உணவுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன். ஆனால் ஆலப்புழையில் மட்டும் எனக்கு கேரள உணவுக்குப் பதிலாக தமிழ்நாட்டு உணவு வகைகளையே தந்தார்கள். இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே தயாரிப்பாளரிடம் “உங்க ஊர் உணவையே எனக்கு கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பிரவுன் கலர் அரிசி சாப்பாடு, புட்டு, மீன் குழம்பு, நேந்திரம் பழம் என்று படப்பிடிப்பு நடந்த நாட்களில் கேரள ஸ்பெஷல் உணவுகளுடனேயே ஐக்கியமாகிவிட்டேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வருவார்கள். செட்டே கலகலப்பாக இருக்கும். இந்தப் படத்தில் சிறுவனாக முக்கிய கேரக்டரில் நடித்த சுஜிதா, பெண் குழந்தை என்று முதலில் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகே தெரியும். குழந்தை என்றாலும் சுஜிதா நடிப்பில் மிரட்டியிருந்தாள். படம் “சூப்பர்ஹிட்” ஆனது.

சமீபத்தில் ஒரு டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசப்போனபோது ஒரு அம்மா என்னிடம் ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். “சார்! இது என் பெண் சுஜிதா. நீங்கள் நடித்த “பூவிழி வாசலிலே” படத்தில் சிறுவனாக நடித்தது இவள்தான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குட்டிப்பெண் வளர்ந்து பெரியவளாக நிற்கும்போதுதான், நமக்கும் வயதாகியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது!

“பூவிழி வாசலிலே” படத்தில் நடித்த பிறகு, மறுபடியும் பாசில் டைரக்ஷனில் “பொம்முகுட்டி அம்மாவுக்கு” படத்திலும் நடித்தேன். இந்தப் படத்தில்தான் சுஹாசினி எனக்கு முதன் முதலாக ஜோடியானார். ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக என்னை நடிக்க வைத்து இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்தார், பாசில்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(821)
சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த “ஜல்லிக்கட்டு”

சிவாஜிகணேசன் நடித்த “ஜல்லிக்கட்டு” படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

சிவாஜியுடன் “ஜல்லிக்கட்டு” படத்தில் நடித்த சத்யராஜ×க்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜ×ம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

சிவாஜியுடன் நடித்த “ஜல்லிக்கட்டு” அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.

தலைவா…!

அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!’ என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா’ பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், “தலைவா! ஷாட் ரெடி” என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. “ஏண்டா! உங்க `தலைவா’ என் வரைக்கும் வந்தாச்சா?” என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்’ ஆகியிருக்கிறார்.

நானும் பிரபுவும் `தலைவரே’ என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது ëஅவரே செட்டில் “தலைவா” என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் “வாங்க தலைவரே!” என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.

நேரத்தை மதிப்பவர்

நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.

ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி’யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.

“ஜல்லிக்கட்டு” படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.

படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். “ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே” என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.

அவசரப்பயணம்

விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். “மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க” என்றார்.

கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்’ நியாயமானதுதான்.

பார்த்ததுமே “வாங்க கவுண்டரே!” என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், “நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.

“ஜல்லிக்கட்டு” படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் “வேதம் புதிது” படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(822)
நடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த “வேதம் புதிது”
6 விருதுகளை வாங்கித்தந்த படம்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான “வேதம் புதிது” படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

“முதல் மரியாதை” படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான “கடலோரக் கவிதைகள்” படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. “கடலோரக் கவிதைகள்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, “மதங்களை கடந்தது மனிதநேயம்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் “வேதம் புதிது” படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

மைல்கல்

“என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்’ கேரக்டர்.

பாரதிராஜாவின் “வேதம் புதிது” கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், “கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

“நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்” என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.

இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.

நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்’ என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.

அருமையான வசனம்

படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்’ என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.

“பராசக்தி”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “மனோகரா” போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. “காக்கி சட்டை” படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு’ வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் “கிடைச்சிட்டானா?” என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, “கிடைச்சிட்டுது” என்பதாக இருக்கும்.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.

ஆளுக்குத்தானே மரியாதை!

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.

ரஜினி புகழாரம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்’ கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.

படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான “ஜீவா”வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்’ படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த “மக்கள் என் பக்கம்” படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

6 விருதுகள்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்’ பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது’ வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்’ பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்’ கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், “உங்க பெயர் என்ன?” என்று கேட்க, “நான் பாலுத்தேவர்” என்பேன். “பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?” என்று அந்த சிறுவன் கேட்பான்.

இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்’ என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

எம்.ஜி.ஆர். பார்த்தார்

படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், “இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!” என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

“வேதம் புதிது” பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு “பெரியார்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 823
சத்யராஜ×க்கு எம்.ஜி.ஆர். அழைப்பு
“எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடியுங்கள்”

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவரை சத்யராஜ் சந்தித்தார். அப்போது, “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடியுங்கள்” என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்தார்.

சினிமாவில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜ×க்கு, கொஞ்சநாள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது.

அமெரிக்கா பயணம்

அவரது சகோதரிகளில் ஒருவரான ரூபா, தனது கணவர் சேனாதிபதியுடன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்தார். இதனால், ஒரு மாதம் நடிப்புக்கு `லீவு’ கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்தார், சத்யராஜ்.

இந்த அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சத்யராஜ் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தது.

அந்த அனுபவம் பற்றி, சத்யராஜ் கூறியதாவது:-

“தங்கை வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போக முடிவு செய்து புறப்பட்ட நாளில் என் நண்பர் டைரக்டர் மணிவண்ணன், “தினத்தந்தி”யில் என்னை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டார். இது, என் மீதான அவரது அதிகபட்ச அன்பு என்றாலும், இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “என் நண்பன் சத்யராஜின் அமெரிக்கப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்ற அந்த ஒருபக்க வாழ்த்துதான் எனக்கும், எம்.ஜி.ஆர். சாருக்குமான நட்புக்கான அடித்தளம் அமைக்கப்போகிறது என்பது, அப்போது எனக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆர். தந்தி

அப்போதுநாங்கள் சென்னை வாலஸ் கார்டனில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.

ஒரு மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கதவைத் திறந்ததுமே கண்ணில் பட்டது ஒரு தந்தி. பிரித்த மாத்திரத்தில் அது என் அமெரிக்க பயணத்தை வாழ்த்தி அனுப்பப்பட்ட தந்தி என்பதும், அதை எனக்கு அனுப்பியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்பதும் தெரிந்தது!

அதிர்ந்து போனேன். தந்தி வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில், அந்த தந்தி எங்கள் வீட்டுக்குள் போடப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அப்படியொரு தந்தி வந்திருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியையும் தாண்டி அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.

பின்னே! என்னை வாழ்த்தி தந்தி அனுப்பியிருப்பது மதிப்பிற்குரிய முதல்வர். ஒரு மாதம் வரை அதற்கு பதில் நன்றிகூட சொல்லாமல் இருததால், தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாரா?

உடனே அவரை சந்தித்து, வாழ்த்துக்கு நன்றி சொல்வதுதான் பண்பாடு. ஆனால் அவர் அழைப்பில்லாமல் எப்படிப் போவது? அப்படிப் போனாலும் அவரை சந்தித்துப் பேசமுடியுமா?

இப்படியான குழப்பம் என்னை ஆட்கொண்டபோது, டைரக்டர் பாரதிராஜாவிடம் யோசனை கேட்டேன். அவரோ, “யாரிடமும் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை. நேராக தோட்டம் (எம்.ஜி.ஆரின் ராமாவரம் இருப்பிடம்) போங்க! போய், வாழ்த்துக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுங்க” என்றார்.

எம்.ஜி.ஆர். வீட்டில்

அவர் சொன்னது நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாளே மனைவியுடன் தோட்டத்துக்கு கிளம்பினேன். காலை 8 மணிக்கு தோட்டத்தை நெருங்கும்போது இன்னொரு சந்தேகம். `ஒருவேளை கேட்டில் நிற்கும் காவலாளி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டால்?’

நான் சராசரி மனிதன் என்றால் பரவாயில்லை. என்னோடு அந்த விஷயம் முடிந்து விடும். நான் இப்போது நடிகன். பார்க்கிற எல்லோருக்குமே என்னைத் தெரியும். ஒருவேளை அப்படி திருப்பி அனுப்பிவிட்டால், “எம்.ஜி.ஆரை பார்க்கப்போன நடிகர் சத்யராஜ் திருப்பி அனுப்பப்பட்டார்” என்றல்லவா செய்தி வரும்!

ஆனால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இருக்கவில்லை. கேட்டில் என் வருகைக்கு வரவேற்புதான் இருந்தது. அங்கிருந்தவர்கள் எங்களை வரவேற்பு அறைக்கு அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள். தோட்டத்தில் நிறைய குழந்தைகளை எம்.ஜி.ஆர். படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடிவந்து `ஆட்டோகிராப்’ வாங்கினார்கள்.

கொஞ்ச நேரத்தில் நாங்கள் வந்திருந்த தகவல் எம்.ஜி.ஆர். சாருக்கு சொல்லப்பட்டு, எங்களை இன்னொரு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் எங்களை நெருங்கி வந்து, “என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டார்.”

நான், “வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்றேன். “இந்த இடத்துக்கு வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றார், அவர்.

எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு போகிறவர்களுக்கு முதலில் வயிறார சாப்பாடு. அதன்பிறகுதான் அவருடன் சந்திப்பு என்பதாக நானும் ஏற்கனவே அறிந்திருந்தேன். என்றாலும் காலை டிபன் முடித்துவிட்டுப் போனபிறகு, உடனே மறுபடி டிபன் சாப்பிட முடியுமா? எனவே `டீ` கொடுங்க போதும்” என்றேன்.

`டீ’ வந்த கொஞ்ச நேரத்தில் ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். சார் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டார். இருவருக்கும் கையோடு கொண்டு போயிருந்த மாலைகளை அணிவித்து ஆசி பெற்றுக்கொண்டோம்.

எங்களைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர். சார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை?” என்பதுதான்! நான் விழிக்க, என் மனைவியை பார்த்த எம்.ஜி.ஆர், “உங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்காது. நீங்கதாம்மா குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்திருக்கணும்” என்றார்.

குழந்தைகளையும் நேசிக்கும் அவர் அன்பு புரிந்தது. பேச வார்த்தை வராமல் நின்றோம். அவரே, “அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சிட்டு வரணும். சரியா?” என்று எங்கள் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்து அவர் கேட்ட கேள்வி இன்னும் பாசப்பிணைப்பானது.

“ஏன் இத்தனை நாளா வரலை?” என்பதே அவர் கேள்வி.

“அண்ணே! எப்படி திடீர்னு வர்றது? ஒருவேளை நான் வந்து கேட்டைத்தாண்டி உள்ளே விடமாட்டேன்னுட்டாங்கன்னா தமிழ்நாடு முழுக்க தெரிஞ்சிடுமே” என்றேன்.

நான் இப்படிச் சொன்னதை எம்.ஜி.ஆர். சார் ரொம்பவே ரசித்தார். என் தோளில் தட்டி சிரித்தார். பிறகு அவரே, “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க” என்றார்.

அமெரிக்கா அனுபவம்

பிறகு என் குடும்பம் பற்றியெல்லாம் ஆர்வமாக விசாரித்தார். வாஷிங்டனில் இருக்கும் தமிழர்கள் எனக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பு பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

“தொடர்ந்து படப்பிடிப்பு படப்பிடிப்புன்னு இருந்ததுக்கு ஒரு மாத ஓய்வு பயனுள்ளதாக இருந்திருக்குமே” என்றார், ஜானகி அம்மாள்.

உடனே எம்.ஜி.ஆர், “எங்கே ஓய்வெடுக்கிறது! அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும்?” என்று என் சார்பில் ஜானகி அம்மாளுக்கு பதில் கூறினார்.

தொடர்ந்து என் படங்களையெல்லாம் பார்த்ததாகவும், சிறப்பாக நடிக்கிறேன் என்றும் சொன்னபோது சந்தோஷத்தில் இறக்கையில்லாமல் பறந்தேன்.

நடிக்க அழைப்பு

திடீரென்று, “சத்யராஜ்! நீங்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறீங்களா?” என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.

“நீங்க இப்படி கேட்டிருக்க கூடாதுண்ணே! உத்தரவே போட்டிருக்கணும். அப்படி உங்க எம்.ஜி.ஆர். பிக்சர்சில் நடிக்கிற வாய்ப்பு அமைந்தால் அது என் பாக்கியம்” என்றேன்.

இப்போது ஜானகி அம்மாள், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலமா நாலைந்து படம் எடுத்திருக்கிறோம்” என்றார்கள்.

நான் உடனே, “3 படம்தான் எடுத்திருக்கீங்க. 1958-ல் “நாடோடி மன்னன்”, 1969-ல் “அடிமைப்பெண்”, 1973-ல் “உலகம் சுற்றும் வாலிபன்” என 3 படம்தான் எடுத்திருக்கீங்க” என்றேன்.

நான் இப்படி புள்ளி விவரங்களுடன் சொன்னது எம்.ஜி.ஆர் சாரை ஆச்சரியப்படுத்தி விட்டது. “சரி! எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே?” என்று கேட்டார்.

“நாளையில் இருந்தே ஷூட்டிங் வைத்தாலும் நான் ரெடி” என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர். சார் என் வார்த்தையை பிடித்துக்கொண்டார். “அப்ப, இப்போது உன்னை வெச்சு படம் எடுக்கிறவங்க கதி? அவங்க படத்தை முடிச்சிட்டு அப்புறமா நடி” என்றார்.

தயாரிப்பாளர்களை `முதலாளி ஸ்தானத்தில்’ வைத்து மரியாதை செய்யும் அவரது வார்த்தைகளில் தயாரிப்பாளர்கள் மீது எத்தனை கரிசனம் என்று எண்ணி வியந்தேன்.

“கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் நீங்களே டைரக்ட் பண்ணணும்” என்றேன்.

பதிலுக்கு அவர், “எனக்கும் விருப்பம்தான். ஆனால் `சி.எம்’ ஆயிட்டேனே!” என்றார். பிறகு அவரே, “படத்துக்கு நல்ல டைரக்டராக போட்டு விடுவோம். நான் எடிட்டிங் சமயத்தில் வந்து விடுகிறேன்” என்றார். சினிமாவை அப்போதும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

முத்தம்

விடைபெறும் நேரம் வந்தபோது கன்னத்தில் முத்தமிட்டு என்னை வாழ்த்தினார். அடுத்த தடவை குழந்தைகளோடுதான் வரணும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு எம்.ஜி.ஆர். சாரின் அந்த அன்பே கண்ணுக்குள் நின்றது. என் மனைவி என்னிடம், எம்.ஜி.ஆர். சார் கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்தி, “10 நாள் நீங்கள் உடம்புக்கு மட்டும்தான் குளிப்பீங்க. முத்தம் கிடைச்ச சந்தோஷத்துல முகம் கழுவப் போறதில்லை” என்று கிண்டல் செய்தார்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 824
சத்யராஜ் தங்கைகள் திருமணம்
“எம்.ஜி.ஆர். நேரில் சென்று வாழ்த்து”

நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது,முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்து சத்யராஜ் கூறிய தாவது:-

தங்கைகள் திருமணம்

“எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. “மலைக் கள்ளன்” “சிவகவி” போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.

இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, “அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்” என்றேன்.

இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். “ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே” என்றார்.

நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!

“எப்படி?”

மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் “எப்படி?” என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.

அவர் “எப்படி?” என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த “எப்படி” வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன “எப்படி”க்கு அர்த்தம், “நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!” என்கிற அர்த்தம்.

நேராக சர்க்ïட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.

எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்’டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், “டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப் போ” என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.

அம்மா எங்கே?

திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், “உங்கம்மா எங்கே?” என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து “வணக்கம்மா” என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.

என்ன வேண்டும்?

சிவாஜி சாருடன் நான் நடித்த “ஜல்லிக்கட்டு” பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், “உனக்கு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார்.

நான், “வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?” என்றேன்.

“நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?” என்று மறுபடியும் கேட்டார்.

இதற்கும் “வேண்டாம்” என்றேன்.

“எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு” என்றார், உறுதியான குரலில்.

அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.

எனவே, “நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்” என்றேன்.

நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

“ஜல்லிக்கட்டு” நூறாவது நாள்

1987 டிசம்பர் 5-ந் தேதி “ஜல்லிக்கட்டு” படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று `வரவில்லை’ என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.

இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். “முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்” என்பதுதான் அந்த தகவல்.

ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, “அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே” என்று சொல்லி விட்டார்கள்.

நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், “இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல!” என்றார்.

நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. “ஆமாண்ணே” என்றேன்.

இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, “நான் வரலைன்னா வருத்தப்படுவியா?” என்று கேட்டார்.

“வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!” என்றேன்.

ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், “உனக்காக வர்றேன்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் “எப்படி?” என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த `எப்படி’ என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.

முத்தம்

இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். “முத்தமா? தர முடியாது. குத்துவேன்” என்றார், ஜாலியாக.

நம்பியாரோ, “அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்” என்றார்.

இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.

டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு `உப்பு’ போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த `உப்பு’ வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்”.

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

————————————————————————————————————–

திரைப்பட வரலாறு :(835)
“பெரியார்” படம் உருவானது எப்படி?
சத்யராஜ் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.

பல்வேறு கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது `பெரியார்’ படம். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

ஞானராஜசேகரன் அழைப்பு

`பாரதி’ டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, “சார்! பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை படமாக எடுக்கலாம். நீங்கள் பெரியாராக நடிக்கிறீர்கள்” என்றார்.

எப்போதோ சொன்னது இப்போது நடந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுணர்வு சொன்னாலும், பெரியார் வேடத்துக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்பது தெரியவில்லையே! எனவே, என் சந்தேகத்தை கேள்வியாக்கி, “நீங்கள் பெரியார் படம் பண்றது நல்ல விஷயம். ஆனால் நான் பெரியார் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தெரியவில்லையே” என்றேன்.

நான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்த்தோ என்னவோ, சட்டென ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார், ஞானராஜசேகரன்.

கம்பீரத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு இளைஞரின் படம் அது. படத்தை பார்த்ததும், “யார் இந்த இளைஞர்? காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே?” என்றேன், ஆச்சரியமாய்!

ஞானராஜசேகரனோ, “சார்! பெரியாரின் 25 வயதில் எடுத்த படம் அது. பெரியாரின் சாயல் உங்களிடமும் இருப்பதால், படத்துக்கு தாடி, மீசை வைத்து கிராபிக்ஸ் செய்து பார்த்தேன். உங்களுக்கு அச்சாகப் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது” என்றார். “எனக்கும் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. அதைத்தான் மேடையிலும் வெளிப்படுத்தினேன். உங்கள் டைரக்ஷனில் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளரை தயார் செய்துவிடுங்கள்” என்றேன்.

தயாரிப்பாளர் யார்?

ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைத்தபாடில்லை. பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரித்தால் `சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று தவறாக எண்ணிக் கொண்டு ஒதுங்கினார்களோ என்னவோ!

இதற்கிடையே நானும் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் ஒருமுறை கி.வீரமணியை சந்தித்தேன். அவரை `ஆசிரியர் ஐயா’ என்றே அழைப்பேன். நான் அவரிடம் “பெரியார்” படம் தொடர்பாக டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்த விவரத்தை சொன்னேன். அதோடு தயாரிப்பாளர் கிடைக்காததால்தான் படம் தொடங்குவதில் தாமதம் என்பதையும் விவரித்தேன்.

“தயாரிப்பாளர் கிடைப்பதுதான் பிரச்சினை என்றால் நாங்களே தயாரிக்கிறோம்” என்று அவர் முன்வந்தார். “பெரியாரின் தொண்டர்கள் தயாரிப்பில் பங்கேற்பார்கள். எனவே பட வேலைகளை தொடங்கச் சொல்லுங்கள்” என்றார்.

ஆசிரியர் வீரமணி பற்றி நான் அவருடன் பழகிய நாட்களில் என் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். எப்போதுமே அவருடனான உரையாடலில் பெரியார் பற்றியும், திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றியுமே அதிகம் இடம் பெறும். அவரது ஒரு மகள் அருள் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகளை பார்க்க அமெரிக்கா போய் வந்த நேரத்தில் அவரை சந்தித்தபோதுகூட, மகள் பற்றியோ மகளின் குடும்பம் பற்றியோ, அமெரிக்கா பற்றியோ அவர் பேசவில்லை. `அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் கூட பெரியாரை பார்க்க முடிகிறது’ என்பதையே பரவசமாய் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் பயணம்

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் நேசத்துக்குரிய தமிழ்த் தலைவராக இருந்தவர் `தமிழ்வேள்’ கோ.சாரங்கபாணி. அவரது 125-வது ஆண்டு விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட நேரத்தில், தந்தை பெரியாரின் நினைவு நாளையும் இணைத்து கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்ள ஆசிரியர் வீரமணி தனது மனைவியுடன் புறப்பட்டார். அப்போது என்னையும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொண்டதால் என் மனைவியுடன் பயணப்பட்டேன்.

சிங்கப்பூருக்கு போன பிறகுதான் அவருக்கு அங்கே கவிதா என்ற மகள் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. கவிதாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கேயும் பெரியார் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியாராக நான் நடிப்பது பற்றி பேச்சு வந்ததும் ஆசிரியர் வீரமணியின் மனைவி என்னிடம், “பெரியார் வேஷத்துக்கு நீங்க பொருத்தமாகவே இருப்பீங்க. ஆனால் பெரியாரைவிட நீங்கள் உயரம் மட்டும் கொஞ்சம் அதிகம்” என்றார். (படத்தில் உயரம் தெரியாதபடி சரிசெய்து கொண்டு விட்டோம்)

படப்பிடிப்பில் பிரச்சினை

“பெரியார்” படத்தின் படப்பிடிப்பு ஒருவாறு தொடங்கியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.

காஞ்சீபுரம் கோவிலில் காலை 7 மணிக்கே பெரியார் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் `பெரியார்’ படத்துக்கான காட்சிகளை கோவிலில் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை இதே நிலை நீடித்ததில் ரொம்பவே வருத்தமாகி விட்டது.

அப்போது படப்பிடிப்புக்கு உதவியாக வந்த பெரியார் தொண்டர்களில் சிலர் என்னிடம் வந்து, “கண்டிப்பாகப் படப்பிடிப்பு நடக்கும் `அன்பு’ பார்த்துக்குவார்” என்றார்கள்.

எட்டு மணி நேரம் முயன்றும் முடியாத ஒரு விஷயத்தை, `அன்பு’ என்பவர் வந்து முடித்து விடுவார் என்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன்.

அதுமாதிரியே அன்பு வந்தார். பேசவேண்டியவர்களிடம் பேசினார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. என் ஆச்சரியம் இப்போது எல்லை தாண்டிவிட்டது. “யார் அந்த அன்பு” என்று விசாரித்தபோது என் ஆச்சரியம் இன்னும் பல மடங்கானது. ஆசிரியர் வீரமணியின் மகன்தான் அந்த அன்பு!

சமீபத்தில் ஆசிரியரின் 75-வது ஆண்டையொட்டி நடந்த விழாவின்போது முதல்-அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு போயிருந்தபோது தான் அவருக்கு அசோக் என்றொரு மகன் இருப்பதும் தெரியவந்தது!

இப்படி தங்களை மறைத்து பெரியாரின் கொள்கைக்காகவே வாழுகிற ஒரு குடும்பம் “பெரியார்” படம் தயாரிக்க முன்வந்தது பொருத்தம்தானே.

5 வருட ஆராய்ச்சி

பெரியாரை டைரக்ட் செய்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். முடித்தவர். `பாரதி’ படத்தின் மூலம் ஒரு `மகாகவி’யின் வாழ்க்கையை கவிதையாக திரைக்குத் தந்தவர் என்ற முறையில் அவர் மீது என் மரியாதை கூடியிருந்தது. இப்போது அவரே பெரியார் படத்தை உருவாக்கவும், தயாராகி இருந்தது வரலாற்றுத் தலைவர்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்தியது. அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் படம் எடுக்கும் ஆர்வத்தில் பெரியார் பற்றி ஐந்தாறு வருடமாக பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. பெரியார் பற்றிய புத்தகம் எங்கே கிடைத்தாலும், அதை வாங்கி பெரியாரின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சேகரித்திருக்கிறார். அதுமாதிரி பெரியாருடன் பழகியவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறார்.

இப்படியெல்லாம் அவர் முழுமையாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெரியாராக நடிக்கும் என் ஆர்வத்தை வெளியிட்டு இருக்கிறேன். இருவரின் ஒருமித்த சிந்தனையும் எங்களை `பெரியாருக்குள்’ இணைத்துவிட்டது.

இந்த நேரத்தில்கூட எனக்கு பெரியாராக நடிப்பதில் ஒரு சின்ன தயக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாருடன் பழகியவர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `பெரியார் நடிப்பில்’ அவர்களை நான் திருப்திபடுத்தியாக வேண்டும். அதோடு பெரியார் வேடத்தில் நடிப்பதை நடிகர் திலகம் தனது லட்சியமாக வைத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்காமலே போய்விட்டது. இப்படி நடிகர் திலகம் விரும்பிய ஒரு கேரக்டரை நான் செய்யும்போது, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் என் நடிப்பு அமையவேண்டும். இப்படி இரு தரப்பிலும் விரும்பும் விதத்தில் `பெரியாரை’ சரியாக நடிப்பில் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

“சந்தோசங்க…”

பெரியார் இளைஞராக இருந்த காலகட்டம் பற்றி யாரும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் முதிய தோற்றத்தில் அவரைப் பார்த்து உணர்ந்தவர்களுக்கு, என் நடிப்பு கொஞ்சம் மாறிப்போனால்கூட ஏமாற்றமாகி விடும். இப்படி நினைத்த நேரத்தில் 75 வயதில் பெரியார் நிகழ்ச்சி அடங்கிய கேசட்டை என்னிடம் தந்தார்கள். அதைப் போட்டுப் பார்த்தபோது பெரியாரின் குரல் நடுக்கம், அவர் உட்கார்ந்து பேசும் விதம் பற்றி கவனித்துக் கொண்டேன்.

அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க!” என்று சொல்வார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற கலைஞரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் பெரியார் உச்சரிக்கும் விதமாகவே இந்த `சந்தோசங்க’ வார்த்தையை சொல்லிக் காட்டினார்.

1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைக்குப் போய் பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெறுகிறார்கள்.

தன்னால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மறக்காமல் தன்னைத் தேடி ஆசி பெற வந்ததை பார்த்தபோது பெரியார் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதே உணர்வில் “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க” என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.

இதை கலைஞர் என்னிடம் நடித்தே காட்டியபோது, பெரியார் அவருக்குள்ளும் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

கலைஞர் சொன்ன இதே சம்பவத்தை முன்பு பெரியார் இருந்த அதே திருச்சி `பெரியார் மாளிகை’யில் படமாக்கியபோது, என்னையும் மீறி ஒரு பரவசம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பெரியாராக நடிப்பது நானல்லவா?”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Posted in Actor, Actors, Biography, Biosketch, Cinema, Dhinathanthi, EVR, Faces, Films, Kalainjar, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Karunanidhi, Life, MGR, Movies, names, people, Periyar, Rajini, Rajni, Sathiaraj, Sathiyaraj, Sathyaraj, Satyaraj, Shivaji, Sivaji, Sivakumar | Leave a Comment »

Actor, Politician ‘Nizhalgal’ Chandrasekar – Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(803)
ஹீரோ, வில்லன், குணசித்ர வேடம்
300 படங்களில் நடித்து சந்திரசேகர் சாதனை

சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் நடிகரானவர் சந்திரசேகர். ஹீரோ, குணசித்ரம், வில்லன் என்று எந்த கேரக்டரிலும் தன்னை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளும் சந்திரசேகர், சினிமாவில் ஏற்று நடிக்காத கேரக்டர்களே இல்லை. 28 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தொடர்ந்து நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சந்திரசேகருக்கு சொந்த ஊர் திண்டுக்கல்லை அடுத்த வாகைக்குளம். திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளியில்தான் ஆரம்பப்படிப்பு. பள்ளியில் ஆறாவது படிக்கும்போது, மற்ற மாணவர்களிடம் இல்லாத ஒரு திறமை இவரிடம் இருந்தது. அதாவது பாடம் நடத்தும் ஆசிரியர்களின் `மேனரிசம்’ என்னவோ, அதை அப்படியே உள்வாங்கி, அந்த ஆசிரியர் பாடம் நடத்தி விட்டுப் போனதும் அதை அப்படியே நடித்துக் காட்டுவார்!

சினிமா ஆசை

இப்படி நடிக்க ஆரம்பித்தவருக்கு, நிறைய சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் வீட்டில் காய்கறி வாங்க கொடுக்கும் காசில் கமிஷன் பார்த்து அதை படம் பார்க்க வைத்துக் கொள்வார். 25 பைசா தேறினால் ஒரு படத்துக்கான கட்டணம் ஆகிவிடும். சைக்கிள் பாசுக்கு 5 பைசா. 30 பைசாவுக்குள் படம் பார்க்கும் கனவு நிறைவேறி விடும். இதனால் எப்போது கையில் 30 பைசா தேறுகிறதோ, அன்றெல்லாம் வகுப்புக்கு `கட்’ அடிக்க ஆரம்பித்தார்.

படம் பார்த்து முடித்த பிறகு படத்தில் நடித்தவர்கள் பற்றி அறிய ஆசை ஏற்பட்டது. திண்டுக்கல் பஜாரில் ஞாயிறு தோறும் பிளாட்பாரத்தில் புத்தக கடை போடப்பட்டிருக்கும். அந்தக் கடையில் “பேசும் படம்”, “பிலிமாலயா” முதலிய சினிமா பத்திரிகைகளும் இருக்கும். தேடிப்பிடித்து அதை படிக்கும் சந்திரசேகர், நடிகராகவேண்டும் என்ற கனவை தனக்குள் விதைத்துக் கொண்டது அப்போதுதான்.

கலைஞரின் “பராசக்தி”, “மனோகரா” வசனங்கள் அவரைக் கவர்ந்தன. அந்த வசனங்கள் அவருக்கு மனப்பாடம்.

1965-ல் தி.மு.கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்போது 6-வது படித்துக் கொண்டிருந்த சந்திரசேகர் தன் சக மாணவர்களுடன் கலந்து கொண்டார்.

11-வது வகுப்பை முடித்த சந்திரசேகரின் அண்ணன் பாண்டியன் ஓவியக் கல்லூரியில் சேர சென்னை புறப்பட்டார். அண்ணனின் சென்னைப் பிரவேசத்தில் சந்திரசேகர்தான் அதிகம் மகிழ்ந்தார். சென்னையில்தான் அவரை கலையால் ஆட்டி வைக்கும் நடிகர் – நடிகைகள் இருக்கிறார்கள்.

அண்ணனின் சென்னை பிரவேசம் தன்னை எப்படி பரவசப்பட வைத்தது என்பதை சந்திரசேகர் கூறுகிறார்:-

“சென்னை வந்த அண்ணன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட்டார். எனக்கு எஸ்.எஸ்.எல்.சி. (அப்போதைய 11-ம் வகுப்பு) முடிந்ததும் சென்னை வந்து நடிப்புக் கல்லூரியில் சேர ஆசை. அண்ணன் ஏற்கனவே சென்னை வந்துவிட்டதால், எனக்கும் வீட்டில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்பாவிடம் என் ஆசையை சொன்னபோது, “முதலில் டிகிரி (பட்டப்படிப்பு) முடி! அப்புறம் பார்த்துக்கலாம். ஒரு டிகிரி இருந்தால் நிச்சயம் உனக்கு சோறு போடும்” என்றார் அப்பா.

அப்பா சொன்னதை தட்ட முடியவில்லை. அதனால் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்ப படிவம் வாங்கப்போனேன். அதற்கும் பெரிய கூட்டம். வரிசையில் நின்றேன். கடைசியாக எனக்கு முன்நின்று கொண்டிருந்த 2 பேர் பணம் கட்டிவிட்டால் அடுத்து நான்தான் கட்ட வேண்டும்.

அப்போது மறுபடியும் என் மனத்திரை சினிமா பக்கமாக ஓடியது. கல்லூரியில் சேர்ந்து விட்டால் 3 ஆண்டுகளுக்கு சினிமாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே “படிப்பா, நடிப்பா?” என எனக்குள் கேட்டுக்கொண்டு தடுமாறி நின்ற நேரத்தில் எனக்கு முன்னதாக நின்றவரும் பணத்தை கட்டிவிட்டார். அடுத்து நான். இப்போது என் சினிமா ஆசை வென்றது. எனக்குப்பின் நின்றவருக்கு வழிவிட்டுவிட்டு, வரிசையை விட்டு வெளியே வந்தேன். விண்ணப்ப படிவத்தை கிழித்துப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். பீஸ் கட்ட அப்பா கொடுத்த பணத்தை திரும்பக் கொடுத்தேன். கொடுக்கும்போதே அழுகை வந்துவிட்டது.

“ஏண்டா என்னாச்சு?” அப்பா கேட்டார்.

நான் அப்பாவிடம், “கல்லூரியில் சேர்ந்து 3 வருஷம் படித்த பிறகும் சினிமாவுக்குத்தான் போகப்போகிறேன். இப்போதே முயற்சி செய்தால் இந்த மூன்று வருஷம் மிச்சமாகுமே” என்றேன். அப்பா என்னையே கூர்ந்து பார்த்தார். முகத்தில் கோபம் இல்லை. “சினிமாவுக்குள் இத்தனை தீவிரமா?” என்கிற மாதிரி பார்வை இருந்தது. “சரிப்பா! இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்! முயற்சி செய்து பார்” என்றார். இது போதாதா? அடுத்த வாரமே சென்னைக்கு புறப்பட்டேன்.

கே.பாலசந்தர்

ஏற்கனவே சினிமா பத்திரிகையில் டைரக்டர்களின் முகவரியை பார்த்து குறித்து வைத்திருந்தேன். சென்னையில் நான் நடிக்க வாய்ப்பு கேட்க முடிவு செய்திருந்த முதல் இயக்குனர் கே.பாலசந்தர். சென்னை வாரன் ரோட்டில் இருந்த அலுவலகத்தில் கே.பாலசந்தர் சாரை போய் பார்த்தேன். அரை டிராயருடன் 11-வது வகுப்பு முடித்த பையனுக்கு எப்படி ஹீரோ வாய்ப்பு கொடுக்க மனம் வரும்? என் நடிப்பு ஆர்வத்தை தெரிந்து கொண்டவர், “படிச்சிட்டு தானே இருக்கே! முதல்ல நல்லா படி. படிப்பை முடிச்சிட்டு வந்து என்னைப்பார்” என்றார்.

நான் சோர்ந்து போனேன். என்றாலும் அடுத்து டைரக்டர் பட்டு, கதாசிரியர் – வசனகர்த்தா பாலமுருகன் ஆகியோரை சந்தித்தேன். அவர்களும் அதே மாதிரி சொல்லிவிட்டார்கள்.

டைரக்டர்களை இனி பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து என் மனக்கண் முன் தோன்றியவர் கலைஞர். பொதுக்கூட்டங்களில் அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். “பராசக்தி” வசனம் எனக்கு தலைகீழ் பாடம். கலைஞரை சந்தித்து, வசனம் பேசிக் காட்டுவோம். அவர் சொன்னால் டைரக்டர்கள் கேட்கத்தானே செய்வார்கள்” என்று என் மனசு கணக்குப்போட, கோபாலபுரம் போனேன்.

கலைஞர் வீட்டு முன் நான் அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ஒருவர் என்னிடம் வந்தார். “யாருப்பா நீ?” என்று கேட்டார். நான் விவரத்தை சொல்லி, “கலைஞர் மட்டும் நான் வசனம் பேசுவதை கேட்டால் நிச்சயம் என்னை நடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வார். அவரை பார்த்துப் போகவே வந்தேன்” என்றேன்.

நான் சொன்னதை கேட்ட அந்த மனிதரோ, “நடிக்க வந்திருக்கிற ஆளைப் பாரேன்! படிக்கிற வயசில என்னடா இதெல்லாம்?” என்று முதுகில் ஒரு போடு போட்டார் (செல்லமாகத்தான்). இப்போதும் கலைஞரிடம் உதவியாளராக இருக்கும் செயல்மணிதான் அன்று என்னை படிக்கச் சொல்லி துரத்தி விட்டவர்!

சினிமா பத்திரிகை

யார் யாரையோ பார்த்தும் எதுவும் நடக்காத நிலையில், சினிமா பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. அப்போது “திரைவானம்” என்ற சினிமா பத்திரிகையை நரசிம்மன் என்பவர் நடத்தி வந்தார். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவர் பெயரிலும் தனித்தனி சினிமா பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. `திரைவானம்’ பொதுவாக எல்லா சினிமா நடிகர்கள் பற்றிய செய்திகளையும் தருவதாக அமைந்திருந்தது.

சினிமா பத்திரிகை என்பதால் ஸ்டூடியோவுக்கு போய் நடிகர் – நடிகைகளை சந்தித்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு அமையும்; அதன் மூலம் நாமும் நடிகராகி விடலாம் என்று எண்ணினேன். சினிமா பத்திரிகை நிருபரை பத்திரிகையாளராக பார்த்தார்களே தவிர, `நாளைய நடிகர்’ என்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை!

லாரி கம்பெனி

இதற்கிடையே சென்னை யானைக்கவுனியில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் மானேஜராக சேர்ந்தேன்.

வரும் லாரிகளுக்கு தேவையான சரக்கை ஏற்றி `டிரிப்ஷிட்’ போட்டு அனுப்புவது என் வேலை. ஆனால் எப்போதும் சினிமா நினைவிலேயே இருந்ததால், வேலையில் கோட்டை விட்டேன்.

லாரி புக்கிங் கம்பெனி உரிமையாளருக்கு வியாபாரிகள் போன் செய்தார்கள். “என்ன அண்ணாச்சி! துவரம் பருப்பு லோடு கேட்டால் அரிசி மூட்டைகள் வந்திருக்கு!” என்றும், “புளி, மிளகாய் லோடுதானே கேட்டேன். துவரம் பருப்பு, பனைவெல்லம் வந்திருக்கு” என்று புகாருக்கு மேல் புகார்!

முதலாளி என்னை அழைத்தார். “முப்பது வருஷத்துக்கு மேல் பிசினசில் கொடிகட்டிப் பறந்த என் செல்வாக்கை ஒரே வாரத்தில் ஆட்டம் காண வைத்த புண்ணியவானே! போயிட்டு வா!” என்று கூறி, என் சீட்டைக் கிழித்து அனுப்பி வைத்தார்.

அப்போது, என் உறவினர் பெரிய கருப்பத்தேவர் நாடக கம்பெனியில் நடிகராக இருந்தார். நாடகத்தில் இருந்துதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், மனோரமா போன்றோர் சினிமாவுக்கு போனதாக சொன்னார். நாடகத்தில் நடித்தால், சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்றும் சொன்னார்.

இது போதாதா! அப்போது பிரபலமாக இருந்த தேவி நாடக சபாவிலும், பிறகு வைரம் நாடக சபாவிலும் சேர்ந்தேன்.

1974-ல் தொடங்கி 1976 வரை நான் நடிப்பில் பட்டை தீட்டப்பட்டது இந்த சபாக்களில்தான். ராஜாதேசிங்கு நாடகம் நடந்தபோது, அதில் ஒரு போர் வீரனாக வேடம் கிடைத்தது. நாடகத்தின் அத்தனை கேரக்டர்களின் வசனங்களையும் மனதில் பதித்துக் கொண்டேன். இரண்டே வருடத்தில் நானே ராஜாதேசிங்கு கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு நடிப்பில் வளர்ந்தேன்.

திரைப்பட வரலாறு 804
நடிகர் சந்திரசேகர்
நாடகங்களில் நடித்த அனுபவம்

சினிமாவில் நடிக்க விரும்பிய சந்திரசேகருக்கு, முதலில் நாடகங்களில் வாய்ப்பு கிடைத்தது.

4 வருடங்களில் படிப்படியாக முன்னேறி நாடக கதாநாயகனாக உயர்ந்தார்.

நாடகத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சந்திரசேகர் கூறியதாவது:-

“முதலில், சாதாரணமாக தலைகாட்டி விட்டுப் போகும் வேடங்கள்தான் கிடைத்தன. அதுவே போதும் என்றிராமல், நாடகத்தின் ஒட்டுமொத்த கேரக்டர்கள் பற்றியும், அந்த கேரக்டர்களுக்கான வசனங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஏற்ற இறக்கங்களோடு பேசிப் பார்த்தேன்.

கதாநாயகன்

ஒரு நாடகத்தில் யாராவது ஒருவர் வராமல் இருந்தால் அவருக்குப் பதிலாக நான் நடிக்கும் அளவுக்கு தேர்ந்திருந்தேன். அதனால்தான் சின்ன வேடத்தில் தோன்றிய அதே நாடகத்தில், கதாநாயகன் வேடம் வரை வர முடிந்தது.

நடிப்பு என்பது எனக்குள் வெறியாகவே மாறிப்போனதால், ஊர் ஊராக நாடகம் போடப்போகிற இடத்தில்கூட, ரசிகர்கள் கிடைத்தார்கள். சீர்காழியை அடுத்த கோவில்பத்து என்ற ஊரில் எங்கள் நாடகக் குழு கேம்ப் போட்டிருந்தபோது வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அதாவது பகல் முழுக்க காய்ச்சலாக இருக்கும். மாலை 6 மணி ஆனதும், காய்ச்சல் விட்டுவிடும்!

பகலில் காய்ச்சல் காரணமாக சாப்பிட முடியாத நிலை. இரவில் நாடகத்தில் நடித்தாக வேண்டும். `பசி’யையும், காய்ச்சலையும் மறந்து ஏற்ற கேரக்டரோடு ஒன்றி விடுவேன். ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சாப்பாடு!

ஒரு மாதம் இப்படி நீடித்த அந்த மர்மக் காய்ச்சலில், உடம்பு பாதியாகிவிட்டது.

சுய மரியாதை

எனக்கு எப்போதுமே சுய மரியாதை உணர்வு அதிகம். நாடக கம்பெனி முதலாளி கொஞ்சம் முரட்டுக் குணம் கொண்டவர். அவரை பார்த்தாலே நாடகக் குழுவில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவார்கள். நான் மட்டும் இதில் விதிவிலக்கு. முதலாளி என்ற மரியாதை உண்டு என்றாலும், `தேவையில்லாமல் ஏன் பயப்பட வேண்டும்’ என்று நினைப்பேன்.

“டீ வாங்கி வா!”

இந்த என் சுய மரியாதைக்கும் ஒரு நாள் சோதனை வந்தது. ஒருநாள் மேக்கப் ரூமில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த முதலாளி என்னை அழைத்தார். “டீ வாங்கிட்டு வாப்பா” என்றார்.

வழக்கமாக வரும் டீக்கடை பையன் அன்று வரவில்லை என்பதால்தான் என்னிடம் `டீ’ வாங்கி வரச்சொன்னார். என்றாலும் அவர் கேட்ட தோரணை என் தன்மானத்தை உசுப்பி விட்டது. உடனே நான் அவரிடம், “உங்களுக்கு டீ வாங்கிட்டு வர்றது என் வேலையில்லை. நடிக்கிறதுதான் என் வேலை” என்று சொல்லிவிட்டேன்.

நான் இப்படிச் சொன்னதும் மேக்கப் ரூமில் இருந்த நடிகர்கள் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிந்தது. அடுத்து முதலாளியின் `ரியாக்ஷன்’ என்ன மாதிரி இருக்குமோ என்பதில் ஏற்பட்ட பயம் அது.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? முதலாளி என் பதிலை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டார். நான் `டீ’ விஷயமாக அவரிடம் பேசியதை காட்டிக் கொள்ளாமல், வேறு சப்ஜெக்ட் பற்றி பேசத் தொடங்கி விட்டார்.

நாடக அறிவிப்பு

நாடகத்தில் நடித்த காலக்கட்டத்தில் என் குரல் சன்னமாக இருக்கும். குரல் கம்பீரமாக இருக்க, தொடர்ந்து பேசி பயிற்சி பெற விரும்பினேன்.

எங்கள் நாடகம் நடக்கும் இடத்தைச் சுற்றி 50 கிராமங்களுக்கு மேல் இருக்கும். காலை நேரத்தில் இந்த கிராமங்களுக்கு வண்டி கட்டி மைக்கில் நாடகம் பற்றி அறிவிப்பார்கள். இப்படி மைக்கில் அறிவிக்கும் பொறுப்பை, நானாகக் கேட்டு பெற்றுக்கொண்டேன்! காலை 10 மணிக்கு இப்படி அன்பார்ந்த பெரியோர்களே! என்று ஆரம்பித்தால், அது முடிய மாலை 6 மணி ஆகிவிடும்.

அதன் பிறகு 61/2 மணிக்கு தொடங்கும் நாடகத்தில் நடிக்கத் தயாராக வேண்டும். இப்படி பகல் முழுக்க `மைக்’கில் கத்திப் பேசிவிட்டு, நாடகத்திலும் உணர்ச்சி மயமான காட்சிகளில் நடிக்கும்போது வாயில் இருந்து ரத்தம் கசியும். ஆனாலும் இப்படியான கடினப் பயிற்சிதான், என் குரலை வளமாக்கியது.

அப்பாவின் ஆசி

மழை சீசனில் நாடகம் நடத்த முடியாது. அதனால் ஊருக்குப்போய் விடுவேன். அப்பாவிடம் என் நாடக அனுபவங்களை சொல்லுவேன். ராஜாதேசிங்கு நாடகத்தில் தேசிங்காக நடித்ததை அப்பாவிடம் சொன்னபோது “தேசிங்காக நடித்துக்காட்டு” என்றார் அப்பா. உடனே வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் தேசிங்குராஜனாகவே மாறி அப்பாவிடம் நடித்துக்காட்டினேன்.

கண் கலங்கிப்போன அப்பா என்னிடம், “நடிக்கணும்னு ஆசைப்பட்டே! அதில் திறமை இருந்தாதான் வரமுடியும். இப்போது உன் திறமையில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நிச்சயம் நீ சினிமாவிலும் ஜெயிப்பாய். நீ சிங்கக் குட்டியடா!” என்று சொன்னபடி என் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

ஆனால், என் சினிமாக் கனவு பலிக்கும் முன்பே அப்பா இறந்து போனார்.

வீட்டில் நான்தான் கடைசிப் பையன். அப்பா இறந்ததற்கு மொட்டை போட்டு, 16-ம் நாள் காரியம் முடியும் வரை வீட்டில் இருந்தேன். அதன் பிறகு திருவெண்காட்டில் நடந்த எங்கள் நாடகத்துக்குப் போனேன்.

எதிர்பாராதது

அந்த நாடகத்தில் எனக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். ஒரு காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வேகத்தில் தொப்பியைக் கழற்றிவிட்டேன். என் மொட்டைத் தலையைப் பார்த்து, ரசிகர்கள் சிரித்து விட்டார்கள். உடனே நான் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஒலிபெருக்கியில் ரசிகர்களிடம் பேசினேன். “பலதரப்பட்ட வேடங்களில் என் நடிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த போலீஸ் கேரக்டரில் என் நடிப்பைத்தாண்டி நீங்கள் சிரிக்கிற காரணம், என் அப்பாவின் மரணத்துக்காக நான் போட்ட மொட்டை. இது தந்தையின் இழப்புக்காக ஒரு மகனின் கடமை. அந்தக் கடமையை முடித்து விட்டுத்தான் உங்கள் முன்பாக மேடையேறியிருக்கிறேன். இதற்குப் பிறகும் என் மொட்டைத் தலைக்காக நீங்கள் சிரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்றேன்.

நான் பேசி முடித்ததும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அசாதாரண அமைதி நிலவியது. சிலருடைய கண்கள் கலங்கியிருந்தன. என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு நடித்து முடித்தேன்.

லாரியில் பயணம்

எனக்கு அப்போது 20 வயதுதான். அந்த ஊரில் இருந்துதான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்டேன். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு மல்லிகைப்பூ ஏற்றி வந்த லாரியில், மல்லிகை வாசனையை முகர்ந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன்.

அது 1975-ம் வருஷம். அப்போதுதான் டெலிவிஷன் மக்களிடையே அறிமுகமாகியிருந்தது. நான் மைலாப்பூர் மாங்கொல்லையில் உள்ள, ஒரு லாட்ஜில் மாதம் 150 ரூபாய் வாடகையில் தங்கியபடி சினிமா வாய்ப்புக்கு முயன்றேன்.

டெலிவிஷன் சீரியல்

அப்போது சென்னை டெலிவிஷனில் பணியாற்றிய கவிஞர் தஞ்சை வாணனின் நட்பு கிடைத்தது. அவரது நாடகங்கள் டெலிவிஷனுக்காக சீரியலாக உருவானபோது, எனக்கும் வாய்ப்பு கொடுத்தார். மாதம் ஒரு டெலிவிஷன் நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடிக்க எனக்கு கிடைத்தது 75 ரூபாய்.

நான் நடித்த முதல் நாடகம் ஒளிபரப்பான நாளில் அதை டிவியில் எப்படியாவது பார்த்துவிட ஆசை. நான் இருந்த லாட்ஜ் ரூமில் டெலிவிஷன் கிடையாது. எனவே அப்போது எனக்கு அறிமுகமாகியிருந்த ஆர்ட் டைரக்டரின் வடபழனி வீட்டுக்கு நானும் அவரும் மைலாப்பூரில் இருந்து பஸ்சில் புறப்பட்டோம்.

பஸ் வடபழனி வந்து சேரவும், நாடகம் ஒளிபரப்பாகும் நேரம் வரவும் சரியாக இருந்தது. அங்கிருந்து ஓட்டமாய் ஓடி, நான் வாசலில் கால் வைத்தபோது தெரிந்தது என் முகம்தான். அப்போதுதான் நான் நடித்த காட்சி டிவி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. என் முகத்தை நானே திரையில் பார்த்தது அதுதான் முதல் தடவை என்பதால், அந்த நேரத்தில் ஏற்பட்ட என் பரவச உணர்வை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. அப்போதே சினிமாவில் நடித்து ஜெயித்து விட்ட மாதிரி அப்படி ஒரு சந்தோஷம்.

நழுவிய வாய்ப்பு

இப்படி டிவி நாடகங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தஞ்சை வாணனிடம் இருந்து நாடகத் துறை இன்னொருவர் கைக்கு மாறிவிட்டது. அவருக்கு ஏனோ என்னை பிடிக்காமல் போயிருக்கிறது. அடுத்த நாடகத்தில் நடிப்பதற்காக அவரை சந்தித்தபோது, “கேரக்டர் இருக்கிறது” என்றார். மற்ற நடிகர் – நடிகைகளுக்கு இன்னின்ன கேரக்டர் என்று சொன்னவர், என்னிடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் எனக்கு கிடைத்தது “இறந்து போன கணவனின் அசரீரி குரல்!”

அதாவது, நாடகத்தில் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும். நான் பேச வேண்டிய வசன பேப்பரை உதவி இயக்குனர் என்னிடம் நீட்டியபோது, எனக்கு வந்ததே கோபம். “இது டிவி நாடகம். ரேடியோ நாடகத்துக்குத்தான் குரல் தேவை” என்று சொன்னபடி, அந்த பேப்பரை வீசி எறிந்தேன்.

இந்த விஷயம் புது டிவி இயக்குனருக்கு போக, என்னை வரச்சொன்னார். போனேன். என்னைப் பார்த்ததும், “எல்லோருடைய முன்னிலையிலும் ஸ்கிரிப்ட் பேப்பரை தூக்கி வீசினாயாமே?” என்று கேட்டார். என்னை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரே இப்படியொரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது.

“நடிப்பாயா? மாட்டாயா?” என்று கேட்டார்.

“முடியாது” என்றேன்.

டிவி நாடகம் கை நழுவியது.

காலம் மாறியது

அன்று என்னை விரட்டி அடித்த அதே டிவி டைரக்டர்,
5 ஆண்டுகள் கழித்து என்னை கை குலுக்கி பாராட்டிய சம்பவமும் நடந்தது.

பாரதிராஜா இயக்கத்தில் நான் நடித்த “நிழல்கள்” படத்தின் பிரத்தியேக காட்சி மைலாப்பூரில் உள்ள “மேனா” தியேட்டரில் நடந்தது. படம் பார்த்த முக்கிய பிரமுகர்கள் டைரக்டர் பாரதிராஜாவுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்கிறார்கள். அப்போது ஒரு கரம் என் பக்கம் நீளுகிறது. பார்த்தால் டிவி இயக்குனர். “வாழ்த்துக்கள்! பிரமாதமா நடிச்சிருக்கீங்க” என்று கை குலுக்கி வாழ்த்தினார்.

—————————————————————————————————————————————————————

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(805)
“புதிய வார்ப்புகள்”
பாரதிராஜா படத்தில் சந்திரசேகர் அறிமுகம்

நாடக நடிகராக இருந்த சந்திரசேகர், பாரதிராஜாவின் “புதிய வார்ப்புகள்” படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நாடக வாய்ப்பு, அதைத் தொடர்ந்து டிவி சீரியல் வாய்ப்பு என்று தொடர்ந்து கொண்டிருந்த சந்திரசேகரின் கலை வாழ்க்கையின் அடுத்த முயற்சி சினிமாவாக இருந்தது.

16 வயதினிலே

இந்த சமயத்தில்தான், பாரதிராஜா இயக்கிய முதல் படமான “16 வயதினிலே” திரைக்கு வந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நம்மை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டிய டைரக்டர் பாரதிராஜாதான் என்ற முடிவுக்கு வந்தார், சந்திரசேகர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

“சினிமாவில் நடிக்கும் முயற்சியில் சில டைரக்டர்களை சந்தித்த வண்ணம் இருந்தேன். இந்த சமயத்தில் மிட்லண்ட் தியேட்டரில் “16 வயதினிலே” படம் ரிலீசாகியிருந்தது.

ரிலீசான அன்றே படம் பார்க்கப்போனேன். தியேட்டரில் அதிக கூட்டம் இல்லை. டைட்டில் பாடலாக “சோளம் விதைக்கையிலே” பாடலைக் கேட்டதுமே, “ஆஹா! நம்ம ஊர் மண் வாசனையுடன் கூடிய படமாக இருக்கும் போலிருக்கிறதே” என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

படம் முடியும்போது, `சீட்’ நுனிக்கே வந்துவிட்டேன். படம் முடிந்ததும் எனக்குள் எழுந்த கேள்வி: `இந்தப் படத்தின் டைரக்டர் பாரதிராஜா எங்கிருக்கிறார்?’

அப்போதே எனக்குத் தெரிந்த கலை நண்பர்களிடம் போனில் டைரக்டர் பாரதிராஜாவின் முகவரியை கேட்டு வாங்கினேன்.

பாரதிராஜா அப்போது தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.

மறுநாள் காலையில் அந்த வீட்டின் கதவைத் தட்டினேன். கொஞ்ச நேரத்தில் தலை நிறைய முடியுடன் தூக்கக் கலக்கத்தில் ஒருவர் வந்தார். அவரிடம், “டைரக்டர் பாரதிராஜாங்கறது…” என்று இழுக்க, அவரோ, “நான்தான் பாரதிராஜா” என்றார்.

அப்போதுதான் முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். இந்த இளைஞருக்குள்ளா அப்படியொரு கலைஞானம் என்ற வியப்பினால் பேச வார்த்தை வராமல், நின்று கொண்டிருந்தேன்.

அவரது ஊர் மதுரை பக்கம் என்பதை தெரிந்து கொண்டதும், நானும் மதுரை பக்கம்தான் என்றேன். “படம் எப்படி இருக்குது?” என்று என்னிடம் பாரதிராஜா கேட்டார். “நன்றாக இருக்கிறது. அதனால், நிச்சயமாக நன்றாக ஓடும். உங்களுக்குப் பெரிய அளவில் பெயர் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு, “நானும் நடிக்கத்தான் ஊரில் இருந்து வந்தேன். நான் நடிக்கிற முதல் படம் நீங்க டைரக்ட் செய்ற படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றேன். “வாய்ப்பு தருகிறேன். எனக்கு வருகிற வாய்ப்புகளை பொறுத்து இது அமையும்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

தினசரி தரிசனம்

அதன் பிறகு தினமும் அவரைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு வணக்கத்தையாவது போட்டுவிட்டுப் போய்விடுவேன்.

இதற்குள் “16 வயதினிலே” படம், மிகப்பெரிய வெற்றிப்படமானது. எங்கு பார்த்தாலும், பாரதிராஜா பேசப்பட்டார். பட உலகம் வியந்து பார்க்கிற ஒரு மாமனிதராகி விட்டார்.

அடுத்தபடி “கிழக்கே போகும் ரெயில்” படத்தை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. விடுவேனா? மறுநாள் காலையில் அவர் வீட்டு முன் போய் நின்றேன்.

என்னைப் பார்த்த பாரதிராஜா, “இந்தப் படத்தில் இரண்டு மூன்று கேரக்டர்தான் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால் உனக்கு கேரக்டர் தர்றதுக்கு வாய்ப்பு இல்லே. நீ என்னிடம் அசிஸ்டெண்ட்டா சேர்ந்துக்க. நடிக்கிற வாய்ப்பு தானாய் அமையும்” என்றார். எனக்கு நடிப்பின் மீது மட்டுமே நோக்கமாக இருந்ததால், `உதவி இயக்குனர்’ வாய்ப்பை தவிர்த்து விட்டேன். “சரி.தினமும் என்னை வந்து பார்த்துப்போ” என்றார் பாரதிராஜா.

“கிழக்கே போகும் ரெயில்” படமும், பாரதிராஜாவின் வித்தியாசமான கைவண்ணத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

பாரதிராஜா இப்போது மேலும் பிஸியாகி விட்டார். அடுத்து “சிவப்பு ரோஜாக்கள்” படத்தை இயக்கி அதுவும் வெற்றி. இப்போது மனோபாலா என்ற புதியவர் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருந்தார். ஏற்கனவே மனோபாலா எனக்கு நண்பர். நாகேஸ்வரராவ் பார்க்கில் என்னை உட்கார வைத்து போட்டோவெல்லாம் எடுத்திருக்கிறார். நடிகனாக வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு பக்கபலமாகவும் இருந்திருக்கிறார்.

இப்போது மனோபாலா, டைரக்டர் பாரதிராஜாவிடம் சேர்ந்து விட்டதால் நான் நடிகனாகும் வாய்ப்பு நெருங்கி விட்டதாகவே உணர்ந்தேன்.

கொட்டும் மழையில்…

“சிவப்பு ரோஜாக்கள்” படத்தை அடுத்து, புதிய படத்தின் கதை மற்றும் `ஷெட்ïல்’ முடிவு செய்யப்பட்டு நடிகர்- நடிகைகளும் முடிவாயினர். நடிகர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை என்பதை மனோபாலா மூலம் தெரிந்து கொண்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

அன்றிரவு 9 மணிக்கு மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடி பாரதிராஜாவின் வீட்டை நோக்கி நடந்தேன். நான் நனைந்து வருவதை தூரத்தில் இருந்தே கவனித்து விட்டார், பாரதிராஜா. என்னைப் பார்த்ததும், “என்னய்யா! மழையில் நனைந்து வர்ற அளவுக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

நான்தான் ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறேனே. அந்த கடுப்பை வேறுவிதமாக அவரிடம் வெளிப்படுத்த எண்ணினேன். “ஒரு மகிழ்ச்சியான செய்தி. எனக்கு படம் `புக்’ ஆகியிருக்கிறது” என்றேன்.

“ரொம்ப சந்தோஷம்யா! யாருடைய படம்?” என்று கேட்டார், பாரதிராஜா.

“உங்க படம்தான்!” என்றேன்.

“யோவ்! என்னய்யா சொல்றே?” என்று திகைப்புடன் கேட்டார், பாரதிராஜா.

“பாலா (மனோபாலா) வந்து ஆர்ட்டிஸ்ட் லிஸ்ட்ல என் பேர் இல்லைங்கிறார். நான் உங்க கூட அவுட்டோர் வரப்போறேன். படத்தில் எனக்கு சின்ன ரோலாவது நீங்க கொடுத்தே தீரணும்” என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர் என் முகத்தை பார்த்தார். பிறகு, “சரி வாய்யா!” என்றார்.

இப்போது எனக்குள் இருந்த பல நாள் சந்தேகத்தை அவரிடம் கேட்டேவிட்டேன். “என் மூஞ்சி அழகாக இல்லேன்னுதான் எனக்கு நடிக்க சான்ஸ் தராம இருந்தீங்களா?” என்று கேட்டேன்.

பாரதிராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. “உன் நடிப்பை ஜனங்க ஏத்துக்கிட்டாங்கன்னா அப்புறம் மூஞ்சி என்னடா மூஞ்சி?” என்றார்.

அப்போதே அவர் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அந்தப் படத்துக்கு `புதிய வார்ப்புகள்’ என்று பெயர் சூட்டிய பாரதிராஜா, தனது உதவியாளர் பாக்யராஜையே படத்தின் கதாநாயகனாக்கினார்.

தேனியில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்பு தொடங்கி 20 நாட்கள் வரை நான் சும்மாவே இருந்தேன். படப்பிடிப்பில் சின்னச்சின்ன வேலைகள் செய்தபடி எனக்கான வாய்ப்பை எதிர் நோக்கியிருந்தேன்.

21-வது நாளில் என்னை அழைத்தார் பாரதிராஜா. “யோவ்! நீ நடிக்கிறே! நாளைக்கு காலைல மேக்கப்போட்டு ரெடியா இரு” என்றார். மறுநாள் காலை 5 மணிக்கே மேக்கப் போட்டு நான் ரெடி. `அல்லி நகரம்’ ராஜேந்திரன்தான் மேக்கப் மேன். அவர் என்னிடம், “பாரதிராஜாவுக்கு சொந்தமா?” என்று கேட்டார்.

“ஆமாம்ணே” என்றேன்.

“ஊரில் இருந்து ஒரு ஆள் சினிமாவுக்கு வந்துடக்கூடாதே! உடனே நடிக்கணும்னு எல்லோரும் புறப்பட்டு வந்துருவீங்களே! வர்றதுதான் வரீங்க! வரும்போது கண்ணாடியில் முகத்தைப் பார்த்துட்டு வந்திருக்கலாமில்லே!” என்றார்.

கல்யாண மாப்பிள்ளை

நான் அதை கண்டுகொள்ளவில்லை. நடிக்கத் தயாரானேன். கதைப்படி படத்தின் கதாநாயகி ரதியை நான் பொண்ணு பார்க்கப்போகிற காட்சி. நான் மாப்பிள்ளைக் கோலத்தில், கொஞ்சம் காலை சாய்த்து நடந்தபடி பெண் வீட்டுக்குப் போகவேண்டும். நான் போகிற வரப்பு வழியில் கொஞ்சம் மாட்டுச் சாணத்தைப் போடச் சொன்னார், பாரதிராஜா. நான் அதில் மிதித்து விட்டு பெண்ணின் தந்தையை பார்த்து, “மாமா! நடந்து வர்றப்ப சாணியை மிதிச்சிட்டேன்” என்று சொல்ல வேண்டும்.

டைரக்டர் சொன்னபடி செய்தேன். முதல் `ஷாட்’டிலேயே காட்சி ஓ.கே.யானது. மகிழ்ச்சியுடன் என்னை அழைத்த டைரக்டர், “நீ நடந்து வரும்போது எதுக்காக சாணியில் மிதிச்சிட்டு வரச்சொன்னேன் தெரியுமா? சாணி என்பது மங்களகரமானது. முதன் முதலா நடிக்க வர்றே. நிறைய படங்களில் நடிச்சு பெயர் வாங்கணும். புகழ் கிடைக்கணும். அப்படி உன் நடிப்பு வாழ்க்கை அமையணும்னுதான் சாணியில் மிதிச்சிட்டு வர்ற மாதிரி முதல் காட்சியை எடுத்தேன்” என்றார்.

என் மேல் எத்தனை அன்பு, எத்தனை அக்கறை! அவரது அந்த அன்பில் நெகிழ்ந்து போனேன்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
————————————————————————————————————————————————-

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(806)
“பாலைவனச்சோலை”க்குப்பின் சந்திரசேகர் ஹீரோ ஆனார்
தொடர்ந்து வெற்றிப்படங்கள்

பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சந்திரசேகர், “பாலைவனச்சோலை”யில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதைத்தொடர்ந்து, பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

கதாநாயகன் அந்தஸ்தை எட்டிய அந்தக் காலக்கட்டம் பற்றி, சந்திரசேகர் கூறியதாவது:-

நிழல்கள்

“புதிய வார்ப்புகள்” படத்தில் பெரிய கேரக்டர் இல்லை என்றாலும், ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

பாரதிராஜா தனது அடுத்த படமான “நிழல்கள்” படத்தில், முன்னேறத் துடிக்கும் இசையமைப்பாளன் கேரக்டரை தந்தார். திறமை இருந்தும் முன்னேற முடியாமல் முட்டுக்கட்டைகளை மட்டுமே சந்திக்கும் இளம் இசையமைப்பாளனின் வாழ்க்கைப் போராட்டம் என் நடிப்புக்கு புதுசு. என்னை அந்த கேரக்டரில் பார்த்த டைரக்டர் பாரதிராஜா, “சேகர்! உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று மட்டும் சொன்னார். டைரக்டர் இப்படிச் சொன்ன பிறகு, அந்தக் கேரக்டர் என்னுடன் ஒன்றிப்போய் விட்டது. இரவும் பகலும் அந்த கேரக்டர் பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன்.

இந்த இசையமைப்பாளன் ஜெயித்தால், வசதியான வாழ்க்கைக்கு வருவான் என்பதைக் காட்ட ஒரு பாடல் காட்சி வைத்திருந்தார், பாரதிராஜா. “மடை திறந்து தாவும் நதியலை” என்ற அந்த பாடலினூடே, “நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்! இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்” என்ற வரிகள் வரும். இந்த வரிக்காக காரின் பின்சீட்டில் கோட்-சூட் போட்டு பணக்கார தோரணையுடன் `555′ சிகரெட்டை நான் ஸ்டைலாக புகைத்துக்கொண்டு போவதாக ஒரு காட்சி எடுத்தார். இந்தக் காட்சியின்போது நான் இருந்த காரை பாரதிராஜாவே ஓட்டினார்.

இந்தக் காட்சி முடிந்ததும் டைரக்டர் பாரதிராஜா என்னிடம், “நடிக்கணும்னு சான்ஸ் கேட்டு என்கிட்ட வந்தே. நானும் கொடுத்தேன். இன்றைக்கு கோடீஸ்வர தோற்றத்தில் உன்னை கார்ல உட்கார வெச்சு நான் கார் ஓட்டறேன். சினிமா ஏற்படுத்திய மாற்றம் பார்த்தாயா?” என்று கேட்டு சிரித்தார்.

“நிழல்கள்” படம் இளம் கலைஞர்களின் கனவை கனவாகவே வைத்து விட்டதால், படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றார்கள். என்றாலும் ஒரு நல்ல இயக்குனரின் நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்கு.

ராம.நாராயணன்

பாரதிராஜாவின் “கல்லுக்குள் ஈரம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான், டைரக்டர் ராம.நாராயணன் என்னை சந்தித்தார். “முழுக்க முழுக்க உங்க மேலேயே போகும் கதை” என்று சொல்லிவிட்டு, அப்போதே படத்தின் கதையையும் கூறினார். படத்துக்கு “சுமை” என்று பெயர் வைத்திருப்பதையும் சொன்னார். `ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன், தம்பி, தங்கைக்காக தன் வாழ்க்கையை, உருகும் மெழுகுவர்த்தியாக்கிக் கொள்கிறான்’ என்ற பின்னணியில் அமைந்த அந்தக் கதையில் மூத்த மகனாக உணர்ந்து நடித்தேன். படம் பெரிய வெற்றி.

“சுமை” படத்தை சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி தியேட்டரில் பார்க்கப் போயிருந்தேன். படத்தின் கடைசியில் நான் இறந்து போகும் காட்சியுடன் படம் முடியும். படம் முடிந்து வெளியே வந்ததும் படம் பார்க்க வந்திருந்த தாய்மார்கள் என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டபடி, “நீ நல்லா இருக்கணும் ராசா!” என்றார்கள். அந்த அன்பில் நானும் உருகிப்போனேன்.

பாலைவனச்சோலை

இந்தப் படத்துக்குப் பிறகு, எனக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் “பாலைவனச்சோலை.” டைரக்டர்கள் ராபர்ட் – ராஜசேகர் இயக்கினார்கள்.

படத்தில் நான், ராஜீவ், தும்பு, ஜனகராஜ், தியாகு என 5 நாயகர்கள். டைரக்டர்களில் ராபர்ட் சீனியர். எங்க பெரியண்ணன் மாதிரி ஆலோசனை சொல்வார். ராஜசேகர் எங்க செட். நண்பர் மாதிரி பழகுவார். 24 மணி நேரமும் படம் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். எப்போதும் அவருடன் இருப்போம்.

இந்தப் படத்தை, கமலிடம் உதவியாளராக இருந்த ஆர்.வடிவேல் தயாரித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும், தயாரிப்பாளர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மணக்க மணக்க சாப்பாடு போடுவார். அடுத்து தலையணை பெட்ஷீட் வரும். ஓய்வு நிலையில் அடுத்த நாள் எடுக்க வேண்டிய காட்சி பற்றி டைரக்டர்கள் விளக்குவார்கள். யாருக்காவது மறுநாள் முக்கிய `சீன்’ என்றால், அதை ஸ்பெஷலாக விளக்கி, அந்தக் காட்சிக்கு ஏற்றபடி நடிகர்களை தயார்படுத்துவார்கள்.

படத்தில் 5 ஆண்களை சுற்றி புதிய கோணத்தில் அமைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை ரசிகர்களை ரொம்பவும் கவர, “பாலைவனச்சோலை” 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

படத்தில் “மேகமே மேகமே”, “ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு”, “பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி” போன்ற பாடல்களும் ஹிட் ஆயின.

சிவப்பு மல்லி

“சுமை” படத்தின்போதே டைரக்டர் ராம.நாராயணன் எனக்கு நண்பராகவும் ஆகிவிட்டார். பாலைவனச்சோலை படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு மாலைப்பொழுதில் என்னை அழைத்து “எர்ர மல்லு” என்ற தெலுங்குப்படத்தை போட்டுக் காண்பித்தார். 2 ஹீரோக்களின் பின்னணியில் அமைந்த கதை. “இந்தப் படத்தை தமிழில் ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. `சிவப்பு மல்லி’ என்று பெயர் வைத்திருக்கிறேன்” என்றார், ராம.நாராயணன்.

தெலுங்கில் சந்திரமோகன் நடித்த கேரக்டரில் என்னை ஒப்பந்தம் செய்தார். இன்னொரு கேரக்டருக்கு நடிகர் சிவகுமாரை `பிக்ஸ்’ பண்ணினார்.

சிவகுமாருக்கு முரட்டு கேரக்டர். படத்தின் விளம்பரம் தொடர்பாக இரண்டு பேரும் வருகிற மாதிரி சில ஸ்டில்கள் எடுக்க டைரக்டர் விரும்பினார். ஆனால் இரண்டு பேருமே பிஸியாக இருந்ததால் தனித்தனியாக `ஸ்டில்’ எடுத்தார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி வரும் கதாநாயகனை எதிரிகள் கத்தியால் குத்திவிட, ரத்தத்தால் மல்லிகைப்பூ சிவப்பு நிறமாகும் என்று `சிவப்பு மல்லி’க்கு விளக்கம் சொன்னார், டைரக்டர். அந்த சீனை சொன்னதும் சிவகுமார், “நான் அந்த கேரக்டரில் நடிக்கிறேனே” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ராம.நாராயணன் “உங்களுக்கான கேரக்டர் வேறு. அந்த கேரக்டர் வேறு. எனவே நீங்கள் முரட்டு கேரக்டரில் நடிப்பதே சரியாக இருக்கும்” என்று சொல்லிவிட, நட்பு ரீதியாகப் பேசி, படத்தில் இருந்து சிவகுமார் விலகிக்கொண்டார்.

மறுநாள் படத்தின் பூஜை. எதிர்பாராத விதமாக சிவகுமார் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறார். ராம.நாராயணன், ஒரு இரவுக்குள் ஒரு ஹீரோவை ஒப்பந்தம் செய்தாக வேண்டிய நிலையில் இருந்தார். இந்தக் கேரக்டருக்கு யார் சரியாக இருப்பார்கள் என்று யோசித்தவர், ராஜபாதர் தெருவில் உள்ள தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகாந்தை எழுப்பி, அப்போதே ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து, ஸ்டில் எடுக்க ஏற்பாடு செய்தார். நானும் விஜயகாந்தும் அரிவாள் – சுத்தி சகிதம் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தோம்.

திட்டமிட்டபடி படம் எடுப்பதில் ராம.நாராயணன் திறமையானவர். 18 நாளில் “சிவப்பு மல்லி” படத்தின் வசனப்பகுதியை எடுத்து முடித்து விட்டார். படத்தில் நானும் விஜயகாந்தும் பாடுவதாக வரும் “எரிமலை எப்படி பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” என்ற பாடல் காட்சியை ஏவி.எம். காலனியில் எடுத்தார்கள். பாடலில் இருந்த நெருப்பு வரிகள் படத்துக்கு பக்கபலமாக அமைந்தது. படம் வெற்றி பெற்றது.

கதைப்படி, இந்தப் படத்தின் ஹீரோ நான்தான். எனவே விஜயகாந்தை விடவும் சம்பளமும் எனக்குத்தான் அதிகம்!

இந்தப்படம் வந்த பிறகு என் மíது கம்ïனிச முத்திரை விழுந்து விட்டது. `தொழிலாளர் தோழன்’ என்கிற மாதிரியான படத்தின் காட்சியமைப்புகள் ரசிகர்கள் என்னை “தோழரே” என்று அழைக்கும் அளவுக்குப் போயிற்று.

வெற்றிப்பயணம்

தொடர்ந்து படங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. “வீட்டுக்காரி”, “பட்டம் பறக்கட்டும்”, “இனிமை இதோ இதோ”, “அர்ச்சனை பூக்கள்”, “பூம்பூம் மாடு” என பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். ஹீரோவா, கேரக்டர் ரோலா கதையின் முக்கியத்துவம் கருதி எந்த வேடத்தையும் ஏற்று நடித்தேன்.

இந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து ஐந்தாறு வருடங்களில் வருஷத்துக்கு 15 படம் நடித்த ஹீரோ நான்தான். அந்த வருஷங்களில் அதிக படங்களில் நடித்த ஹீரோவும் நான்தான்.

கலைஞர் அழைப்பு

ஒருநாள் கலைஞர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. கலைஞரின் செயலாளர் சண்முகநாதன் என்னிடம், “தலைவர் (கலைஞர்) உங்களை பார்க்க விரும்புகிறார்” என்று தெரிவித்தார்.

எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. எந்தத் தலைவரை ஊரில் சிறுவனாக இருந்த காலகட்டங்களில் பார்க்கத் துடித்தேனோ, எந்த தலைவர் பிரசாரத்துக்கு ஊர் வந்தால் அவர் பேச்சைக் கேட்டு மகிழ அவர் கார் போகிற இடமெல்லாம் மூச்சு விடாமல் ஓடித் துரத்தினேனோ அந்த தலைவர் என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னால் எனக்கு எப்படி இருக்கும்?

மறுநாள் காலையில் ஒருவித பரவசத்துடன் கலைஞரின் வீட்டுக்குப் போனேன்.

——————————————————————————————————————————————————————

திரைப்பட வரலாறு 807
கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய
“தூக்கு மேடை”யில் சந்திரசேகர் 20 பக்க வசனத்தை ஒரே மூச்சில் பேசி நடித்தார்

கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய “தூக்குமேடை” படத்தில், சந்திரசேகர் நடித்தார். 20 பக்க வசனத்தை ஒரே “டேக்”கில் பேசி நடித்தார்.

கலைஞரை சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

பாராட்டு

“நான் தலைவரை (கலைஞர்) மிக அருகில் சந்தித்தது அப்போதுதான். பார்த்ததுமே என்னிடம் ரொம்ப நாள் பழகியவர் போல பேசத்தொடங்கி விட்டார். “சுமை”, “சிவப்பு மல்லி”, “பாலைவனச்சோலை” படங்களெல்லாம் பார்த்தேன். ரொம்ப அருமையாக நடிக்கிறாய்” என்று பாராட்டினார். இப்படிப் பாராட்டியதோடு நில்லாமல், “சிவாஜி, எஸ்.எஸ்.ஆருக்குப் பிறகு நல்ல தமிழை உன் மூலம் கேட்க முடிகிறது. நல்ல தமிழ் பேசும் நடிகராகத் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறாய்” என்று கூறினார். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், பரவசத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

கொஞ்சம் இடைவெளியில், என் குடும்பம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்தவர், என்னை அழைத்த நோக்கம் பற்றி பேசினார். “தூக்குமேடை நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என்றிருக்கிறேன். நீ நடித்தால் அதை படமாக எடுக்கலாம்” என்றார்.

“நீங்கள் இப்படி கேட்டதற்கு பதிலாக, `நீ நடிக்க வேண்டும்’ என்று உத்தரவே போட்டிருக்கலாம். அதை என் பாக்கியமாக கருதி நடிப்பேன். நான் இப்படி உரிமையுடன் சொல்லக்காரணம், நானும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவன்” என்றேன்.

கலைஞர் என்னை ஆச்சரியமாக பார்த்தார். “உன் படங்களைப் பார்த்து நீ கம்ïனிஸ்டு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். நம் ஆளா? மகிழ்ச்சி. மகிழ்ச்சி” என்றார்.

“தூக்கு மேடை” படத்தில் நான் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மறுநாளே பத்திரிகையாளர் சந்திப்பில் “தூக்கு மேடை” படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கும் தகவலை சொன்னார் கலைஞர்.

தூக்குமேடை நாடகமாக நடிக்கப்பட்டபோதே அதற்கு பக்கம் பக்கமாக வசனம் உண்டு என்பது எனக்குத் தெரியும். படத்திலும் அதே வசனங்கள்தானே.

படப்பிடிப்பு தொடங்கி, மோகன் ஸ்டூடியோவில் காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன. ஒருநாள் நான் ஒரே டேக்கில் 20 பக்க வசனம் பேசும் காட்சியை எடுக்க இருந்தார்கள். இப்போது மாதிரி முதலில் நடித்து விட்டு பிறகு “டப்பிங்” பேசும் வசதியெல்லாம் அப்போது கிடையாது. நடிக்கும்போதே, வசனத்தை பேசியாக வேண்டும். நான் வசனம் பேசத் தயாராக இருந்தபோது, தலைவர் திடீரென்று வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவரிடம், “தலைவரே! உங்கள் முன்னாடி பேசினால் தடுமாறி விடுவேன்” என்றேன்.

அவரும் புரிந்து கொண்டார். டைரக்டர் அமிர்தத்தை அழைத்து, “நல்லபடியா பண்ணுங்க” என்றவர், சில ஆலோசனைகளை கொடுத்து விட்டு செட்டில் இருந்து கிளம்பிப் போனார்.

எதிர்பாராதது

அடுத்த கணமே 20 பக்க வசனத்தையும் ஏற்ற இறக்கத்தோடு ஒரே டேக்கில் பேசி முடித்து விட்டேன். அந்த சந்தோஷத்தில் ஒரு காபி சாப்பிடலாம் என்று செட்டுக்கு வெளியே வந்தால், `ஹெட்போனை’ தலையில் மாட்டியபடி நான் பேசிய வசனத்தை தலைவர் கேட்டுக்கொண்டிருந்ததை கண்டு எனக்கு ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. தனது படைப்புக்கு உயிர் கொடுக்கும் வசனம் எந்த மாதிரி வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய அவருடைய ஆர்வத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.

இந்தப்படம் வளரும்போது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் கலைஞரின் படத்தில் நான் நடித்ததால், “சந்திரசேகருக்கு எதற்கு கட்சி முத்திரை?” என்ற சலசலப்பும் ஏற்பட்டது. “இந்தப் படத்தில் நடிக்கக்கூடாது” என்று போனில் சிலர் மிரட்டவும் செய்தனர். நான் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. “நான் தி.மு.க. காரன். என் தலைவர் அழைத்து நடிக்கச் சொன்னார்; நடிக்கிறேன். அதற்கு எந்த மாதிரியான எதிர்ப்பு வந்தாலும் சந்திக்க தயார்” என்று பதில் சொன்னேன்.

“முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்துப் பேசுங்கள்” என்று அன்றைய அமைச்சர் ஒருவர் கூட போனில் என்னிடம் கூறினார்.

இப்படி நான் உறுதியாக நின்றதால் கலைஞருக்கு என் மீது ரொம்பவே பிரியமாகி விட்டது. தூக்குமேடை ரிலீசான பிறகு `தலைவர்’ என்பதையும் தாண்டி “அப்பா” என்று அழைக்கும் அளவுக்கு நானும் அந்த அன்பில் ஐக்கியமாகி விட்டேன்.

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு

இப்படி தலைவருடன் நெருக்கம் காட்டிய பிறகு, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் விழாக்களை தவிர்த்தேன். விசு டைரக்ஷனில் பெரும் வெற்றியை எட்டிய ஏவி.எம்.மின் “சம்சாரம் அது மின்சாரம்” படத்தின் விழாவுக்கு கூட நான் போகாததற்கு இதுதான் காரணம்.

இருந்தாலும் ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு போயிருந்தபோது அவரிடம் மாட்டிக்கொண்டேன்! நான் டைரக்டர் ஆர்.சி.சக்தியுடன் மண்டபத்துக்குள் நுழைந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காரில் வந்து இறங்கினார். மண்டப வாயிலில் அவருக்கு முன்னதாக போய்விட்ட நான், மேற்கொண்டு அவர் போவதற்காக ஒதுங்கி நிற்கும்படி ஆயிற்று. அப்போது என் அருகில் நடிகர் சாருஹாசன், டைரக்டர் ஆர்.சி.சக்தி, கதை-வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன் ஆகியோர் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். எங்களை தாண்டிச் சென்றபோது, முதலில் சாருஹாசன் அவருக்கு வணக்கம் செய்ய, பதிலுக்கு எம்.ஜி.ஆரும் வணங்கினார். அடுத்தவர் ஆர்.சி.சக்தி, அவரும் வணங்க, எம்.ஜி.ஆரும் வணங்கினார். மூன்றாவதாக என் முறை! இப்போது அவரைப் பார்த்து கைகுவித்தேன். 5 நொடிகள் என்னையே உற்று நோக்கியவரிடம் வேறு எந்தவித ரியாக்ஷனும் இல்லை. என் அருகில் நின்ற ஏ.எல்.நாராயணனை அழைத்துக்கொண்டு மண்டபத்துக்குள் போய்விட்டார்.

அரசியலில் `எதிரும் புதிரும்’ நிலை சகஜம். கலைஞரும், எம்.ஜி.ஆரும் கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கலைத்துறையில் இருந்தபோது மிகச்சிறந்த நண்பர்களாகவும் இருந்தார்கள். அரசியலுக்கு வந்த பிறகும் நீடித்த நட்பு, ஒரு காலகட்டத்தில் பிரிவில் முடிந்தது. அந்த மாதிரியான காலகட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரின் விருப்பம் ஏற்று நான் அவரது லட்சியப்படைப்பான `தூக்குமேடை’ படத்தில் நடித்ததை முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் யாராவது முரண்பட்ட கண்ணோட்டத்தில் சொல்லியிருக்க கூடும். அதைத்தொடர்ந்து என்னை சந்திக்க விரும்பி விடப்பட்ட அழைப்பையும் தவிர்த்து விட்டதால், இயல்பாக என் மீது அவருக்கு கோபம் இருந்திருக்கலாம். அதனால்தான் அன்றைய திருமண மண்டபத்தில் என்னைப் பார்த்ததும் ஒன்றும் பேசாமல் போயிருக்கலாம். அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்று, எம்.ஜி.ஆரின் அன்றைய மவுனத்தை எடுத்துக்கொண்டேன்.

“தூக்குமேடை” படத்தில் நடித்த பிறகு, தேர்தல் கூட்டங்கள், மாநாடுகள் என்று தி.மு.க. மேடையில் பேசத்தொடங்கினேன். வாரம் ஒரு முறை தலைவரை சந்திப்பேன். கடந்த 25 வருஷமாய் என் ஒவ்வொரு பிறந்த நாளிலும் குடும்பத்துடன் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதையும் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

மணிவண்ணன்

டைரக்டர் கிருபாசங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த மணிவண்ணன் “கல்லுக்குள் ஈரம்” படத்தில் இருந்து பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் தொடர்ந்து நாலைந்து படங்கள் பணியாற்றிய பிறகு “கோபுரங்கள் சாய்வதில்லை” படம் மூலம் இயக்குனரானார். அந்தப் படம் அவருக்குப் பெரிய பெயர் வாங்கித் தந்தது.

மணிவண்ணன் இயக்கிய “இங்கேயும் ஒரு கங்கை” படத்தில் சந்திரசேகருக்கு `பாகப்பிரிவினை’ சிவாஜி மாதிரி அற்புதமான வேடம். இந்தப்படம் சந்திரசேகரின் நடிப்பை புதிய கோணத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்தது. மணிவண்ணனுக்கும் தனக்குமான நட்பு பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

கே.ஆர்.ஜி.

“நானும் மணிவண்ணனும் சென்னையில் சுற்றாத இடமே இல்லை. நடிப்பதற்கு நானும், இயக்குனராவதற்கு அவரும் முயன்ற அந்த காலக்கட்டத்தில் எங்களையும் ஒருவர் வாழ்த்தி பசியும் ஆற்றினார். அவர் பட அதிபர் கே.ஆர்.ஜி. எங்கள் சினிமா தாகத்தைப்பற்றி முழுக்க தெரிந்தவர் அவர். எப்போதாவது ரொம்பவே பண நெருக்கடி ஏற்பட்டால், நடந்தே போய் அவரை பார்ப்போம்.

“வணக்கம் முதலாளி” என்போம். எங்கள் பட விஷயங்களை ஆர்வமாய் கேட்பவர், “நல்ல வருவீங்கடா! தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள்” என்பார். அப்படிச் சொல்வதோடு மட்டும் நின்று விடாமல்
500 ரூபாய் பணத்தை எடுத்து எங்கள் கையில் திணிப்பார்.

1975-ம் வருடவாக்கில் 500 ரூபாயின் மதிப்பு மிக அதிகம்.

சினிமாவில் வளர்ந்த நிலையில் நானும் மணிவண்ணனும் இப்போது சந்தித்துக் கொண்டாலும், எங்கள் எதிர்காலத்தை `வாழ்த்தாக’ முன்கூட்டியே சொன்ன தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. பற்றி மறக்காமல் நினைவு கூர்வதுண்டு. சினிமாவில் நான் சந்தித்த அபூர்வ மனிதர் கே.ஆர்.ஜி.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

ஆபாவாணன்

திரைப்பட கல்லூரியில் பயின்ற இளைய தலைமுறை கலைஞர்களை ஊக்குவித்தவர், சந்திரசேகர். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்து விட்டு இயக்கும் நோக்கத்துடன் படத் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லிக் கொண்டிருந்தார், சின்னச்சாமி என்ற இளைஞர்.

புதியவர்கள், அதுவும் மாணவர்களாக இருந்து சினிமாவில் கற்றவர்கள் என்பதால் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து படம் இயக்க தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். சந்திரசேகர் படப்பிடிப்பில் இருந்த நேரத்தில் நண்பர் ஒருவர், “திரைப்படக் கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கதை வைத்திருக்கிறார். கேளுங்கள்” என்று சொல்லி அந்த மாணவரை அனுப்பி வைத்தார். அன்றைய படப்பிடிப்பு முடிந்து சந்திரசேகரும் கதை கேட்டார். 21/2 மணி நேரமும் கதை சொன்ன திரைப்படக் கல்லூரி மாணவரான சின்னச்சாமி, சந்திரசேகரை ரொம்பவே ஆச்சரியமாய் உணரவைத்தார். இதுபற்றி சந்திரசேகர் கூறுகிறார்:-

“சின்னச்சாமி சொன்னது அதுவரை நான் கேட்டிராத கதை. படத்தில் வருகிற மாதிரி காட்சி காட்சியாக வரிசைப்படுத்தி கதை சொன்னார். கதை கேட்டு முடித்ததும், நான் அவரிடம் “நீங்க சொன்னதுல பாதியை படமா எடுத்தாக்கூட படத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்” என்றேன்.

நான் விஜயகாந்திடம், “இன்ஸ்டிïட் மாணவர் சொன்ன கதை அற்புதம். நீங்கள் கதாநாயகனாக நடித்தால் உங்கள் சினிமா கேரியரில் பெரிய மாற்றம் ஏற்படும்” என்றேன்.

விஜயகாந்த் என் வார்த்தையை நம்பினார். கால்ஷீட் கொடுத்தார். படம் “ஊமை விழிகள்” என்ற பெயரில் தயாராகி திரைக்கு வந்தபோது, பிரமாண்ட வெற்றியை அடைந்தது. சின்னச்சாமி என்ற அந்த இயக்குனர் `ஆபாவாணன்’ என்ற பெயரில் பிரபலமானார். அவரது அடுத்த படமான “செந்தூரப்பூவே” படமும் விஜயகாந்துக்கு பெரிய வெற்றி தேடித்தந்தது. இந்தப் படங்களில் எனக்கும் முக்கிய கேரக்டர் கிடைத்து, பெயரும் கிடைத்தது.

இதன் பிறகு திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து “உழவன் மகன்” என்று சொந்தப்படமே எடுத்தார், விஜயகாந்த். அதுவும் வெற்றி.

இந்த வகையில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க ஒரு வகையில் நான் காரணமாக இருந்ததில் இன்றளவும் எனக்கு பெருமைதான்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

——————————————————————————————————————————————————————

திரைப்பட வரலாறு 808
படங்களில் பிசியாக இருந்தபோது
சந்திரசேகருக்கு திருமணம் நடந்தது
பட்டதாரி பெண்ணை மணந்தார்


நடிகர் சந்திரசேகர் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரியை மணந்தார். இவர் “பி.ஏ” ஆங்கில இலக்கியம் படித்தவர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

“இரவு பகலாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம். எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன.

சிவாஜி சிபாரிசு

நடிகர் திலகம் சிவாஜி சாரின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பெண் வீட்டார் என்னைப்பற்றி அவரது வீட்டில் விசாரித்திருக்கிறார்கள். சிவாஜி சாரும், “நல்ல பையன். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறான். தாராளமா பெண் கொடுக்கலாம்” என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். சிவாஜி சாரின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களும் “சந்துருவுக்கு (சந்திரசேகர் என்பதன் சுருக்கம்) தாராளமாகப் பெண் கொடுக்கலாம்” என்று அப்பாவின் கருத்தை வழிமொழிந்திருக்கிறார்கள்.

1987-ல் குன்றத்தூர் கோவிலில் என் திருமணம் நடந்தேறியது. திருமண நாளில் குன்றத்தூர் மலையைச் சுற்றிலும் இருந்து மக்கள் கூட்டமாக வந்து வாழ்த்தினார்கள். சினிமா நட்சத்திரங்கள் பலரும் வந்திருந்தார்கள்.

திருமண வரவேற்புக்கு டாக்டர் கலைஞர் வந்திருந்து வாழ்த்தினார்.

பட்டதாரி

என் மனைவி ஜெகதீஸ்வரி கல்லூரியில் “பி.ஏ” ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் கல்லூரிப் படிப்பின்போது ஆஸ்டலில் தங்கிப் படித்திருக்கிறார்.

ஆஸ்டல் மாணவிகளுக்கு மாதம் ஒரு சினிமாப்படம் திரையிட்டுக் காட்டுவார்களாம். ஒருமுறை நான் நடித்த “சிவப்பு மல்லி” படம் போட இருந்திருக்கிறார்கள். அந்தப் படம் பார்க்க ஜெகதீஸ்வரியின் தோழி அவரை அழைத்திருக்கிறார். “நம்ம ஊர்க்காரர் நடிச்ச படம்” என்று தோழி சொல்ல, ஜெகதீஸ்வரியோ, “சந்திரசேகர் நடிச்ச படமா? கிராமத்து ஆளை பிடிச்சிட்டு வந்து நடிக்க வெச்ச மாதிரி இருக்கு. ஊர்ல உழுதுக்கிட்டு இருந்தவரை நடிக்க வெச்சிட்டாங்க” என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ஒருநாள் இதை என்னிடம் சொன்ன ஜெகதீஸ்வரி, “உங்களைப் பற்றிய என் கணிப்பு அப்போது இப்படி இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. பகுத்தறிவு சிந்தனை, மனித நேயம் நிறைந்தவர் நீங்கள்” என்று பாராட்டியபோது ஒரு நடிகனாக அல்ல, கணவனாக பெருமைப்பட்டேன்.

இரட்டைக் குழந்தை

1989-ல் எங்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக சிவஹர்ஷன் – சிவரஞ்சனி பிறந்தார்கள்.

மனைவி மதுரை மண்ணுக்கே உரிய வீரத்திலும் சிறந்திருக்கிறார். ஒருமுறை ஈரோட்டில் ஒரு கிராமத்தில் தி.மு.க. மேடையில் பேசிக் கொண்டிருக்கிறேன். பத்து மணி தாண்டிய நிலையில் நான் பேசிக்கொண்டிருந்த மேடையை நெருங்கிய ஒரு போலீஸ் அதிகாரி, “சீக்கிரம் பேச்சை முடியுங்கள்” என்றார்.

ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கு தடையா? பொங்கிவிட்டேன். அப்புறம்தான் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ்காந்தி பலியான சம்பவம் தெரிந்தது. கிராமம் என்பதால் தகவல் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறது.

ஒருவழியாக அவசர அவசரமாக ஈரோட்டில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு விரைந்தேன். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில் ஈரோடு நகரமே தீப்பிடித்து எரியும் காட்சியை கண்டு அதிர்ந்தேன். இதற்குள் என்னைப்பார்த்துவிட்ட ஒரு கும்பல் லாட்ஜ் வரை என்னைத் துரத்தியது. அப்போது எனக்குத் துணையாக இருந்த தி.மு.க. நண்பர் இளஞ்செழியன், அவரது தோட்ட வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் அன்று நேரவிருந்த ஆபத்தில் இருந்து தப்பினேன்.

காலையில் என்னிடம் போனில் தொடர்பு கொண்ட ஜெகதீஸ்வரி, “பத்திரமாய் இருக்கீங்களா?” என்று கேட்டார். “இங்கே நாங்களும் பத்திரம்தான்” என்றார்.

அவர் சொன்னதன் உட்கருத்து அதன் பிறகே புரிந்தது. அதாவது கட்சிக்காரன் என்ற முறையில் என்னைத் தாக்க ஈரோட்டில் முயற்சி நடந்தது போலவே, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள என் வீட்டிலும் தாக்குதல் முயற்சி நடந்திருக்கிறது. 8 அடி உயர காம்பவுண்டு சுவர் கொண்ட வீடு என்பதால், வெளியில் இருந்து வீட்டுக்குள் ஒரு கும்பல் கல்வீசித் தாக்கியிருக்கிறார்கள். ஜன்னலில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியிருக்கின்றன.

இந்தத் தகவலை மனைவி என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, “பிறகு எப்படித்தான் சமாளித்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவங்க வீசின கல்லையே எடுத்து திரும்ப வெளியில் வீசினோம். கொஞ்ச நேரத்தில் வந்தவங்க ஓடிட்டாங்க” என்றார். இக்கட்டான நேரத்தில் சமாளிக்கத் தெரிந்த ஒரு வீரப்பெண்மணியாகவே என் மனைவி ஜெகதீஸ்வரி என் கண்களுக்கு அப்போது தெரிந்தார்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

சம்சாரம் அது மின்சாரம்

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த “சம்சாரம் அது மின்சாரம்” என்ற படத்தை டைரக்டர் விசு இயக்கினார். படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் சந்திரசேகருக்கும் முக்கிய வேடம். படத்தில் நடிக்க அழைக்கப்பட்டது தனி அனுபவம் என்கிறார், சந்திரசேகர்.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

“ஒருநாள் கிஷ்மு (டைரக்டர் விசுவின் தம்பி) என்னைப் பார்க்க வந்தார். ஒரு படம் பண்றோம். விசுதான் டைரக்டர். நீங்க நடிக்கணும்” என்றார்.

விசு அப்போது “குடும்பம் ஒரு கதம்பம்”, “மணல் கயிறு” என்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வளர்ந்திருந்த நேரம். அவருடைய படத்தில் நடிக்க அழைப்பு என்றதுமே திருப்தி. என்றாலும், “படத்தில் என் கேரக்டர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கிஷ்முவிடம் கேட்டேன்.

அவரும் சளைக்காமல், “எங்கள் படத்தில் நீங்கள் நடித்த பிறகு இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள பெயரோடு இன்னமும் அதிக பெயர் தேடிவரும்” என்றார்.

பதிலுக்கு நான், “சாரி சார்! நான் கதை கேட்காமல் நடிக்கிறதில்லை” என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும் கிஷ்மு பதிலுக்கு, “நம்புங்க சார்! உங்களுக்கான கேரக்டர்ல நிச்சயம் நீங்க பிரகாசிப்பீங்க. இதுக்கு மேலும் உங்களுக்கு சந்தேகம்னா மொத்த ஸ்கிரிப்ட்டும் ரெடியா இருக்கு. தரேன். படிச்சுப் பாருங்க” என்றார்.

இந்த வார்த்தை என்னைத் தொட்டது. கதை மேல் வைத்திருந்த அவரது நம்பிக்கை என் கேரக்டர் மீது இருக்கத்தானே செய்யும்! உடனே மறுப்பேதும் இன்றி ஒப்புக்கொண்டேன்.

இந்தப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடல்லாமல், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் (தங்கப்பதக்கம்) பெற்றுத்தந்தது. படத்தில் நடித்த அத்தனை பேரின் அந்தஸ்தும் உயர்ந்தது.

இந்த நட்பு இறுகிப்போனதில் தொடர்ந்து “புயல் கடந்த பூமி”, “அவள் சுமங்கலிதான்” என்று விசு சாரின் பல படங்களில் நடித்தேன்.

ராஜாங்கம்

டைரக்டர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் நான் நடித்த “ராஜாங்கம்” படம் மறக்க முடியாதது. படத்தில் நான் ரவுடி. ஒரு பங்களாவுக்குள் நடக்கிற இந்தக் கதையில் எனது ஜோடியாக விஜயசாந்தி நடித்தார். இதே ஆர்.சி.சக்தியின் “கூட்டுப் புழுக்கள்” படத்திலும் நடித்தேன்.

எனக்கொரு ராசியோ அல்லது என் அணுகுமுறையோ ஒரு டைரக்டரின் படத்தில் நடித்த பிறகு அதே டைரக்டரின் அடுத்தடுத்த படங்களுக்கும் நிச்சயம் அழைப்பு வந்துவிடும். டைரக்டர்கள் விசு, ராம.நாராயணன், ஆர்.சி.சக்தி, மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் படங்களில் எனக்கொரு கேரக்டர் நிச்சயம் என்கிற அளவுக்கு தொடர்ந்து அவர்கள் இயக்கும் படங்களில் வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.

இவ்வாறு கூறினார், சந்திரசேகர்.

சபரிமலை

கலைத்துறையில் நண்பர்களுடன் ஆண்டுக்கொரு முறை சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருவது சந்திரசேகர் வழக்கம். 9 வருடங்களுக்கு முன்பு நடிகர் சந்திரசேகரும், டைரக்டர்கள் ராம.நாராயணன், கோலப்பன், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட நண்பர்களுடன் சபரிமலைக்கு வேனில் புறப்பட்டார். இந்த பயணத்தின்போது விபத்து ஏற்பட்டு அதில் காயமின்றி கலைக்குழுவினர் மீண்டனர். அதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

“முறைப்படி விரதம் இருந்து மலைக்கு புறப்பட்டோம். மஹீந்திரா வேனில் 4 நாட்களுக்கு தேவையான புளியோதரை கட்டிக்கொண்டு பயணித்தோம். வேனில் டிரைவர் சீட் அருகில் ஐயப்பன் படத்தை வைத்து, மாலை அணிவித்து இருந்தோம்.

வேன் சென்னையைத் தாண்டியதும் ஆளுக்கு ஆள் ஒரே ஜோக் மழைதான். அதிலும் எஸ்.எஸ்.சந்திரன் இருந்தால் காமெடிக்கு கேட்கவா வேண்டும்? திருச்சி தாண்டிய பிறகும் இந்த நகைச்சுவை மழை நின்றபாடில்லை. எங்கள் ஜோக்குக்கு டிரைவரும் சிரித்தபடி வாகனத்தை ஓட்டினார்.

விடியற்காலை நேரம் திடீரென ரோட்டின் மையத்தில் இரண்டு மாடுகள் குறுக்கே வர, டிரைவர் அடித்த `சடன் பிரேக்’கில், வண்டி அருகில் இருந்த பெரிய குளத்தருகே குட்டிக்கரணம் அடித்தது.

ஆனாலும் பாருங்கள். ஐயப்பன் படம் உடையவில்லை. போட்டிருந்த மாலை சிதறவில்லை. நாங்கள் சாப்பிட வைத்திருந்த புளியோதரை கூட அப்படியே இருந்தது. ஒரு வழியாக அங்கு வந்தவர்கள் உதவியுடன் வேனை தூக்கி நேராக நிமிர்த்தியபோது, உடனே ஸ்டார்ட்டும் ஆனது! பக்திப்பூர்வமான ஒரு பயணத்தின்போது, எதற்கு கிண்டலும் கேலியுமான விஷயங்கள் என்று அந்த ஐயப்பனே எங்களுக்கு இப்படி ஒரு `ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்தது போல் உணர்ந்தோம். அதன்பிறகு சபரிமலைக்கு போய்விட்டு வரும் போது கூட, அதாவது சென்னையில் வீடு வந்து சேரும் வரையில் ஜாலியாக ஒரு வார்த்தைகூட நாங்கள் பேசாமல் வந்தோம். இந்த பயணத்தின்போது எங்கள் வாயில் இருந்து உதிர்ந்ததெல்லாம் “சாமியே சரணம்” கோஷம் மட்டும்தான்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
——————————————————————————————————————————————————————

Posted in Aabaavaanan, Aabavaanan, Aabavanan, Abavaanan, Abavanan, Actor, AVM, Biography, Biosketch, Chandrasegar, Chandrasekar, Chanthrasekar, Cinema, DMK, Faces, Films, History, Kalainjar, Karunanidhi, KRG, Manivannan, MGR, MK, Movies, MuKa, names, Nizhalgal, Nizhalkal, people, Politician, Politics, Visu | 1 Comment »

KV Narayanasamy – Carnatic music legends: Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

“அரியக்குடி’யின் அரிய “சிஷ்யதிலகம்’

நீலம்

“”தோன்றிற் புகழுடன் தோன்றுக” என்ற பொய்யாமொழிப் புலவரின் அருள்வாக்கிற்கு ஒரு சிறந்த சான்றாக, கர்நாடக சங்கீத வானில் ஜொலித்த அற்புதக்கலைஞர் அமரர் சங்கீத கலாநிதி பேராசிரியர் கே.வி. நாராயண ஸ்வாமி.

பிறப்பாலும், குரு பக்தியுடன் ஆற்றிய அயராத உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கலைத்துறையின் சிகரத்தை எட்டிப்பிடித்த வித்வானாகத் திகழ்ந்த அவரது 84-வது பிறந்தநாள் விழா நவம்பர், 16, 17, 18 தேதிகளில் சென்னையில் கொண்டாடப்பட்டது.

கலைக் குடும்பத்தில் தோன்றிய கே.வி.என். 5-வது வயதிலேயே தமது பாட்டனார், தந்தையாரிடம் அடிப்படைப் பயிற்சி பெற்றார். பாலசிட்சைக்குப் பிறகு மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர், வயலின் வித்தகர் பாப்பா வேங்கடராமய்யா ஆகியவர்களிடமிருந்து மேற்கொண்டு கலைநயங்கள், நுட்பங்களைக் கற்றறிந்தார்.

பாலக்காடு மணி ஐயர் மிருதங்கத்தைப் பாடவைத்த மேதை. அதுமட்டும் அல்ல; அவரே அழகுபடப் பாடும் ஆற்றலையும் படைத்திருந்தார். தாம் கேட்டுச் சுவைத்த உருப்படிகளை நாராயண ஸ்வாமிக்கு கற்பித்து உதவினார். இதில் ஹரி காம்போதி, அடாணா ராகத்தில் அமைந்திருந்த பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

பூர்வாங்கப் பயிற்சிகள் நிறைவுபெற்ற பின், சுயேச்சையாகச் சுவையுடன் கச்சேரிகள் செய்யும் பக்குவம் பெற்றுவிட்ட காலத்தில், கே.வி.என். பாட்டில் மேலும் மெருகும் நளினமும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அக்கறை கொண்டார் மணி ஐயர்.

அவரைச் சங்கீத சக்ரவர்த்தியாக மிளிர்ந்த காயக சிகாமணி “அரியக்குடி’ ராமானுஜ அய்யங்காரிடம் பரிந்துரை செய்து, குருகுல வாசம் செய்ய ஏற்பாடு செய்தார். இதை கே.வி.என். இசை வாழ்க்கையில் கிட்டிய பேரதிருஷ்டம் என்றே கூற வேண்டும்.

முன்னதாக 1940-ம் ஆண்டு திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனையில் சங்கீதாஞ்சலி செய்த அவர், 1947-ல் சென்னை மியூசிக் அகாதெமி கலை விழாவில் இளம் பாடகர்கள் பட்டியலில் இடம்பெற்று “அரியக்குடி’ அவர்களுக்குத் தாமே வாரிசாக வரப்போவதாக முன்கூட்டியே செயல்பட்டுப் பாடினார்.

மற்றும் ஒரு மனோகரமான வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதை அவர் நாடியோ தேடியோ போகவில்லை. வலுவில் அவரைத் தொடர்ந்து வந்தது அந்தச் சந்தர்ப்பம்.

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் மியூசிக் அகாதெமியின் ஆண்டு இசை விழாவில் பெரிய பக்கவாத்தியங்களோடு “”அரியக்குடி” கச்சேரிக்கு வழக்கம்போல் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பங்கேற்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டது.

இந்த இக்கட்டான நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற பிரச்னை அகாதெமி நிர்வாகிகளுக்கு எழுந்து கவலைப்பட்டனர். இதை எதிர்கொள்ள சமயசஞ்சீவியாகப் பாலக்காடு மணி ஐயர் யோசனை கூறினார்.

அது என்ன யோசனை? ஐயங்காரைப்போலவே பாடி, மகிழ்விக்கக்கூடியவாறு உருவாகியிருந்த நாராயண ஸ்வாமியையே பாடச் செய்யலாம் என்றார் அவர். உடனே அகாதெமி நிர்வாகிகள் அதை ஆமோதித்தார்கள்.

இதுகுறித்த அறிவிப்பை அகாதெமி நிர்வாகிகள் ஒலிபெருக்கி வழியாக வெளியிட்டதைக் கேட்ட கே.வி.என். திகைத்தார்; திடுக்கிட்டார். ஒருபுறம் மகிழ்ச்சியும், இன்னொருபக்கம் கவலையும் அவரைப் பற்றிக் கொண்டன.

தமது குருவின் புகழுக்கு ஊறுநேராவண்ணம் எப்படி அவருக்குப் பதிலாக அமர்ந்து பாடிக் கரை சேர்வது என்பதே அவர் முதல் கவலை.

இத்தகைய அவரது மனநிலையை நுட்பமாகக் கண்டறிந்த மணி ஐயர், கே.வி.என். னிடம் போய் “”நீ கவலைப்பட வேண்டாம், தைரியமாக ஐயங்காரைத் தியானித்துக் கொண்டு பாடு!. நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம்!” என்று தைரியமூட்டினார்.

அவரது அறிவுரையை ஏற்று, குருவை மனதில் தியானித்துக் கொண்டு அவர் நிகழ்த்திய அந்தக் கச்சேரி ஓங்கி, சுக உச்சம் எட்டி, “”அரியக்குடி”யின் “”சிஷ்யதிலகம்!” கே.வி. நாராயண ஸ்வாமியே என்பதற்கு அடையாளமாக ரசிகர்கள் ஒருமுகமாகக் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.

எப்படி தமது தமயன் ராமனுக்கு பரதன் பாதுகா பட்டாபிஷேகம் செய்து அரசு நடத்தினாரோ அதேபோல் நாராயண ஸ்வாமியும் தமது குருவுக்குப் பதிலாக அமர்ந்துபாடி, அவருக்கு “”பாட்டாபிஷேகம்!” செய்து தம்மைச் சங்கீத பரதனாக்கிக் கொண்டார்.

அமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் நமது சங்கீதத்தின் சிறப்பைப் பல்வேறு பதவிகள் மூலமும் செயல்பாடுகளின் வாயிலாகவும் அருந்தொண்டு புரிந்த கலைஞர் அவர். இளம்தலைமுறையினருக்கு அவர் முன்மாதிரி.

“அரியக்குடி’ தமது அந்தரங்கத்தில் நாராயண ஸ்வாமியே தமக்குப் பின் பெயர் சொல்லக்கூடிய சீடராக வருவார் என உறுதி கொண்டிருந்தார். இதற்குப் பல சான்றுகள் உண்டு.

ஆனால் இக் கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறியதில்லை. காரணம் அவருடைய சங்கீதத்தைப் போலவே அவரிடம் நிலைகொண்டிருந்த இங்கித இயல்பு. இருப்பினும் ஒருசிலரிடம் மட்டும் தம் கருத்தைத் தெரிவித்ததும் உண்டு.

வயது முதிர்ந்த காலகட்டத்தில் “அரியக்குடி’ தமது சிஷ்யரான நாராயண ஸ்வாமியின் பின்பலத்தில் பூரணமாக நம்பிக்கை கொள்ளலானார். இதற்கும் அனேகம் சான்றுகள் உண்டு. சோதிடத்தில் குருபலம் என்று குறிப்பிடுவதுபோல் “அரியக்குடி’யிடம் உதித்த இந்த விருப்பத்தை “சிஷ்யபலம்’ என்று கூறலாம் அல்லவா?

கே.வி.என். விரிவான பாடாந்தரம் உள்ளவராக ஒளிர்ந்தார். குறிப்பாக கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரப் பாடல்களை அவர்போல் பாடி ரசிகர்களை உருக வைத்தவர்கள் அபூர்வம். அப்பாடல்கள் யாவுமே இன்பமயம்.

குறிப்பாக மாஞ்சி ராகத்தில் “”வருகலாமோ ஐயா!” என்ற பாடலை அவர் வழங்கும்போது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் போவார்கள். பட்டமரமும் பாலாக உருகிப்போகும், மிகை இல்லை.

கே.வி.என். பாடிய இசை சுகந்தத் தென்றலுக்கு இணை. அவரது சங்கீத வழங்கல் ரசிகர்களைச் சுகபாவத்துடன் வருடிக் கொடுத்தது. என் வேண்டுகோளை ஏற்று “அரியக்குடி’ மெட்டுப் போட்டுத் தந்த திருப்பாவை, அருணாசலக் கவியின் பாடல்கள், குலசேகர ஆழ்வார் அருளிய ராமகாவியப் பாசுரங்கள் ஆகிய அனைத்துக்கும் ஸ்வர, தாளங்கள் வரைந்து தமது குருவுக்கு உறுதுணையாக நின்று தமிழிசைக்கும், கலை அன்னைக்கும் நாராயண ஸ்வாமி புரிந்துள்ள சேவை நித்திய சிரஞ்சீவியாக நிலைப்பது உறுதி.

வாழ்க கே.வி.என். புகழ்.

(கட்டுரையாளர்: சுதேசமித்திரன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர்)

Posted in Ariyakkudi, Audio, Biosketch, Carnatic, Faces, Legends, music, names, Naraianasami, Naraianasamy, Naraianaswami, Naraianaswamy, Naranaswami, Naranaswamy, Narayanasami, Narayanasamy, Narayanaswami, Narayanaswamy, Palacad, Palacaud, Palacode, people, Performer, Stage | Leave a Comment »

Kumudham Balyu passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007

காலமானார் பால்யூ

balasubramanian_kumudham_balyu.jpg
சென்னை, நவ. 22: மூத்த தமிழ் பத்திரிகை யாளரான பால்யூ (எ) என். பாலசுப்பிரமணி யன் (83) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியா ழக்கிழமை இறந்தார்.

தபால் துறை ஊழி யராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், பின்னர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு 1950-ல் பத்திரிகை துறைக்கு மாறினார். குமுதம் வார இதழில் தலைமை நிருபராக இவர் பணியாற்றி னார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மனைவி, மூன்று மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.

Posted in Anjali, Balyu, Biosketch, Faces, Journalists, Kumudam, Kumudham, Kumutham, magazine, Media, names, people, Persons, Reporters | 1 Comment »

British novelist Doris Lessing wins Nobel Literature Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

பிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் கூறியுள்ளது.

1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.

தி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் அவரது படைப்புகளில் இருக்கும்.

டோரிஸ் லெஸ்ஸிங்

ஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.

பண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.

சாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.

1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.

“தி கிராஸ் இஸ் சிங்கிங்’

1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.

“தி கோல்டன் நோட்புக்’

1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்

காட்டியது. இந்த நாவல் ஒரு பெண்

எழுத்தாளரின் கதை. பணி, காதல்,

அரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.

“தி ஃபிப்த் சைல்ட்’

1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.

Posted in africa, Award, Bio, Biography, Biosketch, Books, Britain, British, Commonwealth, Doris, England, Female, Feminism, Icon, Label, Lady, laureate, Lessing, Literature, London, manuscript, names, Nobel, Novel, novelist, people, Politics, Prize, Read, Reviews, Rhodesia, She, Synopsis, UK, Woman, Women, Zimbabwe | Leave a Comment »

40 years on, remembering Che Guevara: A symbol of revolution

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

சே-குவராவின் நாற்பதாவது நினைவு தினம்

கியூபாவின் புரட்சிகர கதாநாயகர்களில் ஒருவரும், சமீபத்திய தசாப்தங்களில் தோன்றிய அதிகபட்ச ஆளுமை நிறைந்த குறியீடுமான எர்னெஸ்டோ சே-குவரா அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மரணத்தை தழுவிய நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளை கியூபா இன்று கடைபிடித்தது.

சே என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, எர்னெஸ்டோ குவேரா அவர்கள், பிடெல் கேஸ்ட்ரோ அவர்கள் தலைமையிலான போராளிகளில் ஒருவராக செயல்பட்டார்.

இந்த போராளிக் குழுவினர், கியூபாவின் தலைவராக இருந்த புல்ஜென்ஷியோ பட்டிஸ்டோ அவர்களை 1959 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார்கள்.

சே-குவராவின் குடும்பத்தினர்
சே-குவராவின் குடும்பத்தினர்

அர்ஜெண்டினாவில் பிறந்த சே-குவரா அவர்கள், போலிவியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்கு உதவுவதற்காக அங்கு சென்றபோது, பொலிவிய ராணுவத்தினர் அவரை தொடர்ந்து சென்று, 1967 ஆம் ஆண்டு கொலை செய்தனர்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் கடைசியிலிருந்து, சே-குவராவின் கொள்கைகளும், தோற்றமும், அமைதியற்ற இளம் தலைமுறையினர் பலருக்கு தூண்டுகோலாக, ஆகர்ஷ சக்தியாக இருந்து வருகிறது.

சே-குவராவின் தாடி மண்டிய முகத்தின் படத்தை தாங்கிய டி ஷர்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகின்றன.


பொலிவிய ராணுவத்தை ஆட்டிப்படைத்த சே குவாராவின் 40}வது ஆண்டு நினைவு தினம்

பொலி விய ராணு வத்தை ஆட் டிப்படைத்த கொரில்லாத் தலைவர் சே குவாராவின் 40வது ஆண்டு நி û ன வு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அந் நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.

ஆர்ஜென்டீனாவில் பிறந்து தொழில்ரீதியில் மருத்துவராக இருந்து பின்னர் கொரில்லாத் தலைவராக மாறிய சே குவாரா கடந்த 1967-ம் ஆண்டு அக் டோபர் 8-ம் தேதி பொலிவிய ராணுவத்தால் சுட்டுக் கொல் லப்பட்டார்.

சமூக சிந்தனையாளரான சே குவாரா, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர போராடி வந்தார். இந்நிலையில் பொலிவிய ராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட அவர், 39வது வயதில் கொல்லப்பட்டார். அவர் இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை யிலும் அந்நாட்டு மக்களில் சிலர் அவரை புனிதத் தலைவராகவே கருதிவருகின்றனர்.

ஆனால் ராணுவத்தினர் அவர் மீது கொண்டிருந்த ஆத்திரமும் வெறுப்பும் இன்னும் தணிந்தபா டில்லை. அவரைப் பிடிப்பதற் காக போராடிய ராணுவ வீரர்க ளில் சிலர் இன்னும் உயிருடன் உள்ளனர்.

“சே குவாராவின் நினைவு தினத்தில் பொலிவிய அதிபர் ஈவோ மொராலேஸ் அவருக்கு அஞ்சலி செலுத்துவது நாட்டின் கெüவரத்துக்கும், ராணுவ வீரர் களுக்கும் இழைக்கப்படும் துரோ கமாகும்’ என்று சே குவாரை பிடித்த கமாண்டர் காரி பிராடோ (68) தெரிவித்தார்.

நாட்டை பிடிக்க வந்தவரை கெüரவிப்பதைவிட எங்கள் பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்களை கெüரவப்ப டுத்தலாம் என்றும் அவர் தெரி வித்தார்.

லத்தீன் அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் வேறுபட்டு கிடந்த அடித்தட்டு மக்களுக்கு ஆயுத புரட்சி மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சே குவாரா திட்ட மிட்டார். அதன்படி பொலிவி யாவில் புரட்சிகர படையை ஏற்ப டுத்தி 11 மாதங்கள் ராணுவத்தை எதிர்த்து போராடி வந்தார்.

அதற்காக சே குவாராவின் தலைமையில் செயல்பட்ட போராளிகள், காடுகளில் மறைந்து வாழ்ந்து பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் அவர் களுக்கு உள்ளூர் மக்கள் போதிய ஆதரவும் உதவியும் அளிக்காததால் அந்த வீரர்களில் சிலர் சண்டையிலும், சிலர் பட் டினியாலும், நோய்வாய்ப்பட் டும் இறந்தனர்.

——————————————————————————————————————–

Posted in 40, Argentina, Arms, Army, Batista, Biography, Biosketch, Castro, Che, Che Guevara, CheGuevara, Communism, Communist, Communist parties, Communists, Communities, Cuba, defence, Defense, Ernesto, Faces, Fidel, gerilla, Gorilla, Guerilla, Guevara, Hispanic, Icon, Ideals, Images, Kerilla, Latin, Legacy, Liberation, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Military, names, people, Poverty, Protest, Revolution, Revolutionary, Se, Soldiers, Symbol, War, Weapons, Young, Youth | 2 Comments »

Prime Minister Lal Bahadur Shasthri – R Venkatraman (Biosketch)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2007

எளிமைக்கு இலக்கணம் சாஸ்திரி!

ஆர். வெங்கடராமன்

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டாலும் லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என் மனத்தில் லேசாக வலி ஏற்படுகிறது. ஈடு இணையற்ற எளிமையான மனிதர். பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் ஒரே மாதிரியாக இருந்தார். பதவியைத் தேடி அவர் சென்றதில்லை, மாறாக, பதவிகள்தான் அவரைத் தேடி வந்தன.

1950-ல் அப்போதைய நாடாளுமன்றத்துக்கு நான் சென்றபோது காமராஜரும் சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததைக் கண்டேன். இருவருமே ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டவர்கள். இருவரும் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள், சொந்தமாக சொத்தோ, செல்வாக்குள்ள தொடர்புகளோ இல்லாமல் பொதுவாழ்வுக்கு வந்தவர்கள். நேர்மை, உழைப்பு, தியாகம் ஆகியவற்றின் மூலம் உன்னத நிலைக்கு உயர்ந்தவர்கள். இருவருமே சமூகத்தில் வறிய பிரிவினர் மீது எல்லையற்ற கரிசனம் கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் தலைவிரித்தாடியபோது நடுநிலையுடனும் நியாயமாகவும் சாஸ்திரி அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்ட விதத்தால் மிகவும் வியப்படைந்தேன். ஒரு தரப்பு அல்லது ஒரு கோஷ்டி சொல்வதை மட்டும் கேட்டு எந்த ஒரு முடிவுக்கும் வரமாட்டார்.

காமராஜரிடம் அதே குணம்தான். ஒருதலைப்பட்சமாக யாராவது ஏதாவது கூறினால் அவர், “”பார்க்கலாம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிடுவார். தில்லி அரசியல் வட்டாரங்களில் காமராஜரின் அந்த பதில் ரொம்பப் பிரபலம். இருதரப்பையும் கேட்டு, விருப்புவெறுப்பு இல்லாமல் எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் சாஸ்திரியின் நல்ல குணம், உயர் பதவிகளை அவர் வகிக்கப் பெரிதும் கைகொடுத்தது.

சாஸ்திரியின் அடக்கமும் காங்கிரஸ்காரர்களிடையே மிகவும் பிரசித்தியாக இருந்தது. சாஸ்திரியின் மகன் ஹரி, சென்னை அசோக்லேலண்ட் நிறுவனத்தில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். நீ என்னுடைய மகன் என்று யாருக்கும் தெரிவிக்கக்கூடாது, என் பெயரைச் சொல்லி நீ கூடுதலாக எந்தச் சலுகையையும் யாரிடமும் பெறக்கூடாது என்றே மகனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார் சாஸ்திரி. சாஸ்திரியாரின் மகளும் மாப்பிள்ளையும் சென்னைக்கு வந்தபோது ஆளுநர் இல்லமான ராஜ்பவனில் தங்க மறுத்துவிட்டனர்.

அவர் பிரதமராகப் பதவி வகிக்தபோது இரவு 10 மணிக்கு அவரை அவருடைய அலுவலகத்தில் சென்று பார்த்தேன். அப்போது அவருடைய கையெழுத்துக்கு ஒரு கோப்பு வந்தது. அதைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட மேஜையில் பேனாவைத் தேடினார் அவர். வெளிநாட்டில் வாங்கிய என்னுடைய பால்-பாயிண்ட் பேனாவை நான் உடனே அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி கையெழுத்திட்டுவிட்டு என்னிடம் திருப்பித்தந்த அவர், நன்றாக எழுதுகிறது என்று கூறினார். வெளியே புறப்பட்ட நான், சாஸ்திரியாரின் உதவியாளரை அழைத்து, இந்தப் பேனா அவருக்குப் பிடித்திருக்கிறது, இதை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு வந்தேன். அடுத்த நாள் சாஸ்திரியாரின் உதவியாளர் நான் தங்கியிருந்த இடத்துக்கே வந்து, சாஸ்திரியார் அதைத் திருப்பிக் கொடுத்துவிடச் சொன்னார், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

உத்தரப் பிரதேசத்திலும் மத்திய அரசிலும் தாம் வகித்த பதவிகளில் எல்லாம் தனி முத்திரை பதித்துச் சென்றார் சாஸ்திரி.

ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்களில் அப்போது நிலவிய பல்வேறு வகுப்புகளை அவர் ரத்து செய்தார். மேல் வகுப்பு, சாதாரண வகுப்பு என்ற இரண்டை மட்டும் அனுமதித்தார். சாதாரண வகுப்புப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தினார்.

தொழில், வர்த்தக அமைச்சராக இருந்தபோது, பெரிய தொழில் நிறுவனங்களுடன் கதர், கிராமத் தொழில்களும் வளர்ச்சி பெற உரிய முக்கியத்துவம் தந்தார்.

பிரதமராக இருந்தபோது, தொழில் வளர்ச்சி, ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு பட்டியிலில் இருந்து பலவற்றைப் படிப்படியாக நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தாராளமயத்தை அப்போதே அவர் அனுமதித்தார்.

மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தபோது, தமிழ்நாட்டில் ஹிந்திக்கு எதிராக பெரிய போராட்டம் நடைபெற்றது. 1965 ஜனவரி முதல் தேதி ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கு மாறிவிடுவார்கள் என்று பெரிய போராட்டம் வெடித்தது. தென்னிந்திய மாநில மக்களின் அச்சத்தைப் புரிந்துகொண்ட சாஸ்திரி, ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். 1965 ஜனவரி 1-க்குப் பிறகு ஹிந்தியுடன் ஆங்கிலமும் அரசு நிர்வாக நடைமுறையில் தொடர அவர் அதிகாரபூர்வ மொழி மசோதாவை அறிமுகம் செய்தார். காரியசாத்தியமாக முடிவெடுக்கும் அவருடைய பண்பு மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

தமது துறையில் நடக்கும் தவறுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் அமைச்சர்தான் பொறுப்பு என்ற தார்மிக நெறியை முதலில் ஏற்படுத்தியவரே லால் பகதூர் சாஸ்திரிதான். அப்போதைய சென்னை மாகாணத்தில் நிகழ்ந்த பெரிய ரயில் விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று தன்னுடைய அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். நேருஜி எவ்வளவோ வலியுறுத்தி கேட்டுக்கொண்டும் அவர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

பொதுச்சபை கூட்டத்துக்கும், சபையின் நிர்வாக நடுவர் மன்றக் கூட்டத்துக்கும் இந்தியாவின் பிரதிநிதியாக பல முறை சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அங்கிருப்பவர்கள், “நேருஜிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரத் தகுதியானவர்கள் யார்?’ என்று என்னிடம் அக்கறையுடன் விசாரிப்பார்கள். ஜனநாயகம் தழைத்தோங்கும் எங்கள் நாட்டில், நேரம் வரும்போது உரியவரைத் தேர்ந்தெடுப்போம் என்றே நான் பதில் சொல்லிவந்தேன்.

நேருஜி மறைந்த பிறகு அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு காமராஜரிடம் விடப்பட்டது. அப்போது கருத்தொற்றுமை மூலம் முடிவெடுப்பது என்ற உத்தியை காங்கிரஸ் பின்பற்றி வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி அவருடைய கருத்தை கேட்பது என்ற நடைமுறையை காமராஜர் பின்பற்றினார். மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி என்ற இருவர் இடையே போட்டி இருந்தது. பெரும்பாலானவர்கள் சாஸ்திரியையே விரும்பினர். அதை மொரார்ஜி தேசாயும் ஏற்றுக்கொண்டு, லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக ஏற்கும் தீர்மானத்தை வழிமொழிந்தார்.

1966 ஜனவரி 11-ம் தேதி தாஷ்கெண்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தார் என்ற செய்தியைக் கேட்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. திறமையான ஒரு நிர்வாகியை, சாமானிய மனிதனின் உண்மையான நண்பனை நாடு இழந்துவிட்டது.

ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று அவர் தந்த கோஷம் என்றும் நிலைத்திருக்கும். ஹிந்துஸ்தானம் வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையின் விளைவாக அவருள் உதித்ததே இந்த கோஷம்.

(கட்டுரையாளர்: முன்னாள் குடியரசுத் தலைவர்)

Posted in Agriculture, Assassination, Biography, Biosketch, CCCP, dead, Faces, Farmer, LB Shasthri, LB Shastri, Murder, names, people, PM, President, Prez, Prime Minister, Russia, Shasthri, Shastri, Tashkent, USSR, Venkatraman | Leave a Comment »

Question & Answers with CPI(M) – Rich Party, Support for Govt

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

அரசியல்

கேள்வித் திருவிழா: டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

மத்திய அரசை மிரட்டுகிறோமா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை தொடர்ந்து மிரட்டி வரும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாட்டினை நியாயப்படுத்துகிறீர்களா…?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடதுசாரிகள் எப்போதுமே மிரட்டியது கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலனை உருவாக்குகின்ற சில திட்டங்களை அறிவித்திருக்கின்றன.

அவற்றின் மீது கூடுதலான அழுத்தம் கொடுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம், மக்களுடைய எதிர்காலம் செழிப்பாக இருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை வாழ வைக்க முடியும். எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உள்ள மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் கூறிவருகின்றன.

உதாரணமாக விலைவாசி உயர்வு பிரச்சினை. அதில் முக்கியமானது பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. இதைத் தடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.

அரசு அடிக்கடிப் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையுயர்வைத் தடுக்கலாம். ஏனென்றால் பெட்ரோல், டீஸல் விலை உயர்வு என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களில் இருந்து அத்தனை பொருள்களும் விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

ஆகவேதான் நாங்கள் விலையைக் கட்டுப்படுத்துங்கள் என்கிறோம். இதை மிரட்டல் என்று அருள்கூர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாது.

இந்திய நாடும் -அமெரிக்காவும் செய்யக்கூடிய அணு ஒப்பந்தம் என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அமெரிக்கா, தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தன்னுடைய ஆதரவு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசாராக் கொள்கை. அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. “சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை’ என்று குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கபட்ட பிறகும் அரசு அதிலிருந்து மாறுகிறது.

இதை சுட்டிக்காட்டி மக்களுக்கு விளக்குவதை அரசை நிர்பந்தப்படுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சி.பி.எம். கட்சிக்குத்தான் அதிக அளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது உண்மையா?

எஸ். கணேசன், கடலூர்.

உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் சி.பி.எம். தன்னுடைய கட்சியை நடத்துவதற்கும், மக்களை சந்திப்பதற்கும், கட்சி வளர்ச்சி ஏற்பாடுகளுக்கும் கட்சி இருக்கும் எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், சில கிளைகளிலும் கூட அலுவலகங்கள் வைத்திருக்கிறது.

அந்த அலுவலகத்திற்கான நிலம், கட்டிடம் போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிகச் சொத்து இருக்கக்கூடிய கட்சியினர் என்று கூறக்கூடாது. ஏனென்றால் அது மக்களுடைய சொத்தே தவிர சி.பி.எம். சொத்து அல்ல.

மற்ற கட்சிகளுக்கும், சி.பி.எம். கட்சிக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. மற்ற கட்சி களில் தலைவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஆனால் சி.பி.எம். கட்சியில், கட்சி வளமாக இருக்கிறது. அதில் இருக்கும் தலைவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.

சி.பி.எம். கட்சியில் ஊழியர்களின் சம்பள விகிதம் எப்படி?

பா.சு. மணிவண்ணன், திருப்பூர்.

சி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மாநிலத்துக்கு, மாநிலம் வித்தியாசப்படும். சி.பி.எம். கட்சியில் இருக்கக்கூடிய முழு நேர ஊழியர்களில் சொந்தமாக குடும்ப வருமான வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்கள் கட்சியிலிருந்து எந்தவிதமான ஊதியமும் எதிர்பார்க்காமல் பணியாற்றுகிறார்கள்.

கட்சியை மட்டும் நம்பி வாழ்கிறவர்கள், கட்சி கொடுக்கக்கூடிய சிறு அலவன்ûஸ மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அது கஷ்டமான வாழ்க்கைதான். கட்சியின் ஊழியர்களை எடுத்துக் கொண்டால் 500 ரூபாய் முதல், 4000 ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 4000 ரூபாய் என்பது மாநகரில் மட்டும் அல்ல, வட்டத்திலேயும் உண்டு. இது ஏதோ பதவி அடிப்படையில் என்றெல்லாம் இல்லை.

இரண்டாவது, சி.பி.எம்.மில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தை கட்சிக்காகவே கொடுத்து விடுகிறார்கள். கட்சி ஏற்கெனவே அவர்களுக்கு எவ்வளவு ஊதியத்தை நிர்ணயித்து இருக்கிறதோ அந்த ஊதியத்தை வழங்கும்.

ஆகவே மந்திரி என்று சொன்னாலோ, சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ அவரையும், அப்படியில்லாதவர்களையும் கட்சி வித்தியாசம் பார்க்காது. முதலமைச்சர் உள்பட அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பாணி எங்கள் கட்சியின் பாணி.

இது தவிர, பகுதி நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறவர்கள்தான் பகுதி நேர ஊழியர்கள். சிலர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சி.பி.எம்.மில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் உணர்வு செத்துப் போகவில்லை’ என கி. வீரமணி கூறியுள்ளாரே…!

அ. மாணிக்கம், ராமநாதபுரம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் உறுதியுடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே சி.பி.எம்.மின் நிலை. அங்கு தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், “அது ஒன்றுபட்ட இலங்கையில்தான் நடக்க முடியும்’ என்ற எங்களுடைய கருத்துக்கும், “தனி ஈழம் உருவாக வேண்டும்’ என்கிற கி. வீரமணியின் கருத்துக்கும் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது.

பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநிலம் கஹோத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாபுபாய் கடாரா தனது 3 குழந்தைகளுக்கு 6 பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து…?

வீரராகவன், மன்னார்குடி.

சமீப காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். வேறு பெண்ணை தன்னுடைய மனைவி என்கிற முறையில் வி.ஐ.பி. பாஸ்போர்ட்டுடன் அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவைகளெல்லாம் நம்முடைய அரசியல் கலாசாரச் சீரழிவிற்குக் காரணம். பி.ஜே.பி. ஒரு வித்தியாசமான கட்சி என்பதை அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை குண்டு வெடிப்பில் முன்னாள் சுங்க அதிகாரி சோம்நாத் தாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே…!

என். குமரன், வேளாங்கண்ணி.

நீதிமன்றம் பூரணமாக, வருடக் கணக்காக விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முழுத் தீர்ப்பையும் பார்த்துதான் அதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் ஆபத்தானவர்கள் மீது கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்குமேயானால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.

—————————————————————————————–

டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

* “”முல்லைப் பெரியாறில் கேரள அரசு அணைகட்டுவதற்கு தி.மு.க. அரசும் மறைமுகமாக உதவி செய்கிறது போலிருக்கிறது…” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாரே…!

க. ஜெகன், சிவகங்கை.

நதி நீர் பிரச்சினை என்பது இன்று பல்வேறு மாநிலங்களுக்கிடையே தாவாவை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனும் தாவா உள்ளது. நம்முடைய நியாயத்தை கோரிப் பெற, தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

தி.மு.க. அரசு அண்டை மாநிலங்களுடன் இப்படி மோதலற்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது பாராட்டத் தக்கது.

ஜூலை 26ஆம் தேதியும் டெல்லியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளார். அவரும் இது குறித்து இரண்டு முதல்வர்களையும் அழைத்துப் பேசுவதாக கூறியுள்ளார்.

முன்னாள் பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் போன்ற அறிவு ஜீவிகள், நதி நீர் இணைப்பு குறித்து ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மோதலற்ற போக்கை கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்த அணுகுமுறை நண்பர் பழ. நெடுமாறனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக, விவரங்களைத் தெளிவாகப் புரிந்த அவர், முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிப்பது நமக்கு ஏற்புடையதல்ல.

* ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக நினைக்கிறீர்களா?

என். செல்வம், நாகர்கோவில்.

“காம்ப்ரமைஸ்’ என்பது ஒரு தவறான வார்த்தை அல்ல. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோட்பாடு ரீதியான நிலையை மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்தது. இடது சாரிகள் அனைவருமே இணைந்து அதே நிலையைத்தான் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடியவர், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் அவர் ஓரளவுக்குப் பண்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆகவே மதசார்பற்ற, அரசியல் சட்டத்தைப் புரிந்திருக்கக்கூடிய, இன்றைய இந்திய நாட்டின் தேவையை உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக வருவது இன்றைய காலகட்டத்தில் நல்லது என்பதே எங்கள் கருத்து.

அந்தக் கருத்தை நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிடமும் சொன்னோம். அவர்கள் நிறுத்திய பிரதீபா பட்டீலை நாங்கள் ஆதரித்தோம்.

முதலில் இந்த நிலையை எடுக்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைக் கோரவுமில்லை; அப்படியொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதே போன்று ஏனைய இடதுசாரித் தோழர்களுக்கும் ஜனாதிபதி பதவி மீது கண்ணுமில்லை, விருப்பமுமில்லை.

* உங்களைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் பற்றி…?

க.நெடுஞ்செழியன், அய்யப்பன்தாங்கல்.

என்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்

  • தோழர் ராமமூர்த்தி,
  • தோழர் ஜீவா,
  • தோழர் கல்யாணசுந்தரம்,
  • உமாநாத்,
  • சங்கரைய்யா போன்றவர்கள்.

இந்தத் தலைவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியாக இருந்ததை நான் 64க்கு முன்னால் பார்த்தேன். அதற்குப் பின் கட்சி பிரிந்த பிறகு கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

அதன்பிறகு நான் ஏற்கெனவே சொன்ன சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக மாறிப்போனார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வருத்தமோ, வேதனையோ எனக்குக் கிடையாது.

மற்றபடி கொள்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்திய விஷயத்திலும், சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமையாக நடந்துகொண்ட விஷயத்திலும் மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் வரிசையில் எங்களுடைய அகில இந்தியத் தலைவர்கள்

  • இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,
  • பி.டி.ரனதேவே,
  • சுந்தரைய்யா போன்றவர்களைச் சொல்லலாம்.

இவர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் ஊழியனாகத்தான் நான் இருக்கிறேன்.
பெண் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள்,

  • பாப்பா உமாநாத்,
  • நர்மதா ரனதேவே,
  • விமலாராணி தேவி

ஆகியோர். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கத்திற்காகப் பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் என்று பார்க்கும்போது, மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களைச் சொல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறும், அவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளும் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தவை.

தமிழகத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் என்று காமராஜர் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்களைக் கூறலாம். இவர்களுடைய பணி, செயல்பாடுகள், அதிலிருக்கக்கூடிய பல்வேறு நல்ல அம்சங்கள் ஆகியவை என்னைக் கவர்ந்துள்ளன.

* அரசியல்வாதி என்பவர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர் என்று குற்றம் சாட்டுகிறேன். உங்களது பதில்….? (தயவு செய்து கோவிச்சுக்காதீங்க ஐயா)

பா. ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

எந்தக் கோபமும் இல்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியவர் எந்த அரசியல்வாதி என்று எனக்குத் தெரியாது. உங்களுடைய மனதைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இப்படியொரு அரசியல்வாதி நடந்திருந்தால் உங்கள் கோபம் நியாயமானதுதான்.

* ரஷ்யாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது ஸôர்?

இரா. கண்ணபிரான், சேலம்.

நான் ரஷ்யாவுக்கு சென்றதில்லை.

* “ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவைத் திருப்பியனுப்பியது மிகவும் கடுமையான சோதனையான காலகட்டம்’ என அப்துல் கலாம் தெரிவித்துள்ளாரே…?

தி. நாகேஷ், கோட்டப்பட்டினம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பொறுப்பு ஏதேனும் எடுத்துக் கொள்ளலாமா? அப்படியெனில் அது ஆதாயம் பெறும் பதவி எனக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பதுதான் பிரச்சினை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுந்தது. “எது ஆதாயம் தரும் பதவி?’ என்று அரசியல் சட்டத்தின் 102வது பிரிவு தெளிவாக விளக்கவில்லை. எந்தப் பதவிகளை ஏற்றால் பதவியைப் பறிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு எனத் தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உண்டு.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிறுவனங்களில் பொறுப்பேற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தச் சட்டங்கள் மூலம் நாடாளுமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம். கோரியது; ஆதாயம் தரும் பதவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் விவாதித்து முடிவு எடுக்க ஒரு நாடாளுமன்ற துணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியது.

நாடாளுமன்றமும், இருக்கும் சட்டத்திலிருந்து சில விதி விலக்குகளை அளித்து திருத்தச் சட்டம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அவர் தனக்குரிய உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி சில கேள்விகள் எழுப்பினார்; சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு திருப்பி அனுப்பினார்.

அது மறுபரிசீலனை செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்குரிய விசேஷ அம்சங்களை கணக்கிலெடுக்காமல் அப்பொறுப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுத்ததால் நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது.

பொது மக்கள் சேவையினை கருத்தில் கொண்டு சில அரசு நிறுவனங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்.மின் நிலை. இப்பொழுது உள்ள குழப்ப நிலை நீங்க, தெளிவானதொரு சட்ட விளக்கம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது.

* “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற உ.பி. முதல்வர் மாயாவதியின் யோசனை பற்றி…?

எஸ். உலகநாதன், திருவாரூர்.

“இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும்?’ என்று சொல்வதற்கு முன், அது செயல்படுத்த வேண்டிய அரசியல் பொருளாதார -சமூகப் பின்னணியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் பெரும் பிரிவினர் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையில் எழுந்ததுதான் அரசியல் சட்ட ரீதியான “இட ஒதுக்கீடு’ முடிவுகள்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ஆனால் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தும், வாழ்நிலையும் எப்பொழுது முழுமை பெறும்? அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டப்படுவதன் மூலமாகத்தான் அது முடியும்.

கிராமப் புறங்களில் வாழும் இந்தப் பிரிவினரில் பெரும்பான்மையான மக்கள் நலிந்த பொருளாதாரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைக் கொடுக்கும் செயல் திட்டம்தான் நிலச் சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வல்லது.

இது நாட்டின் இடதுசாரிகள் சொல்கிற கருத்து மட்டுமல்ல…! பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் இதை வலியுறுத்திச் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரள, மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில அரசுகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டே எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (நிலத்தைப் பங்கீடு செய்தது) அந்த மக்களுக்கு ஓரளவு பொருளாதார சக்தியினைக் கொடுத்திருக்கின்றன.

அவர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்திருக்கிறது. அதிகார அமைப்பில் அவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. இதை மண்டல் கமிஷன், மற்றும் திட்ட கமிஷன் கணக்கில் எடுத்துப் பாராட்டியும் உள்ளது.
வேறு ஒரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை (அரசின் கணக்கின்படி) 26 கோடி பேர். வறுமையில் வாடுவோர் அல்லது பொருளாதார பலம் ஏதுமின்றி வாழ்பவர்கள் சாதி, மதம், மொழி என்ற பண்பாட்டு வட்டங்களைத் தாண்டித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

அவர்களின் வாழ்நிலையினை உயர்த்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாயாவதி என்ன நோக்கத்தோடு அந்த யோசனையை முன் வைத்தார் என்று தெரியாது. ஆனால் பிரச்சினையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்லர்! நமது கவலைக்குரிய மனிதர்கள்தான்!

Posted in Alliance, Answers, APJ, Bachan, Badhuri, Baduri, Bathuri, Bhachan, Bhadhuri, Bhaduri, Bhardhan, Bhathuri, BJP, Center, Chat, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, DMK, Eezham, Elections, Faces, Finance, Gorbachev, Govt, Integration, Interview, Jaya, Jeya, Kalam, Karat, Leaders, Lenin, LTTE, Manmogan, Manmohan, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Masood, Masud, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, names, National, NDTV, Neta, Netha, Party, Patil, people, Politburo, Politics, Polls, Poor, Power, Prakash, Prathiba, Prathibha, President, Prez, Principles, Putin, Q&A, Questions, Rasheed, Rashid, Rich, River, Russia, Somnath, Sonia, Soviet, Sri lanka, Srilanka, Stalin, support, UP, US, USA, USSR, UttarPradesh, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Water, Wealthy | Leave a Comment »

Karnataka cities to change their names to be in Kannada

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

கர்நாடகாவில் மேலும் 11 நகரங்களின் பெயர்கள் மாறுகிறது

பெங்களூர், ஜன. 24-

பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ராஸ் சென்னை என்றும், பம்பாய் மும்பை என்றும், கல்கத்தா கொல்கத்தா என்றும், பாண்டிச்சேரி புதுச்சேரி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதே போல கர்நாடக தலைநகர் பெங்களூர் என் பதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்தது. கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பெயர் மாற்றத்திற்காக கடிதம் எழுதி இருந்தது.

மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் பல அமைச்சகம், அமைப்புகளிடம் பெயர் மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இதே போல ரெயில்வே துறை, விமான போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திடமும் கருத்து கேட்கப்பட்டது.

பெங்களூர் பெயர் மாற்றுவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ கழித்துதான் பெயர் மாற்றத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

இதே போல மேலும் 11 நகரங்களின் பெயர்களை மாற்றவும் கர்நாடக அரசு கோரிக்கை வைத்து உள்ளது.

  • மைசூர் என்பதை மைசூரு என்றும்,
  • மங்களூரை மங்களூரு என்றும்,
  • பெல்காம் என்பதை பெல்காவி என்றும்,
  • பெல்லாரி என்பதை பல்லாÖì என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

Posted in Bangalore, Belgaum, Bellary, Bengaluru, Changes, City, Kannada, Karnataka, Mangalore, Mysore, names | Leave a Comment »