Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Learning Tamil as a Foreign Language – South Travancore Hindu College, Nagercoil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!

அ. அருள்தாசன்

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’  பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.

மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,

  1. கர்நாடகம்,
  2. ஹிமாச்சலப்பிரதேசம்,
  3. மணிப்பூர்,
  4. ஒரிசா,
  5. மேற்கு வங்கம்,
  6. அசாம்,
  7. இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.

நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:

இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.

தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):

“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.

நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):

“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”

லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):

“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.

ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):

“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).

அசோதோஸ் மாலிக் (ஒரிசா):

“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.

தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: