Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Unity’ Category

TJS George – Good old Bombay days: India – North vs South in Mumbai

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

அது பம்பாய் காலம்…

டி.ஜே.எஸ். ஜார்ஜ்


சில நாள்களுக்குமுன் காலமான பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. கரஞ்சியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே பம்பாயில் “வட இந்தியர்’களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர் குண்டர்கள். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. ஆனால், சிறப்புமிகு விழுமியங்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருப்பதையும், மறுபுறம் அந்த இடத்தில் தேசபக்தி என்ற போர்வையில் குண்டர்களின் ஆட்சி தலைதூக்கிக் கொண்டிருப்பதையும் அவ்விரு சம்பவங்களும் சித்திரித்தன.

அந்த நாளைய பெருமைக்குரிய பம்பாயின் சின்னமாகத் திகழ்ந்தவர் ருஸ்ஸி கரஞ்சியா. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலான சமயங்களில் காந்திஜி தங்கியிருந்தமையால் ஒரு வகையில் 1940-களில் இந்தியாவின் அரசியல் தலைநகரம் போலவே திகழ்ந்தது பம்பாய். காந்திஜி தங்கியிருந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தார் ஜின்னா.

1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக மட்டுமன்றி, நாட்டியம், நாடகம், இலக்கியம், ஓவியம் ஆகிய கலைகளின் தலைநகரமாகவும் மேட்டுக்குடி வாழ்க்கை நளினங்களின் இருப்பிடமாகவும் அறிவுச்சுடர் பிரகாசிக்கும் நகரமாகவும் திகழ்ந்தது பம்பாய். கொடுக்கவும் எடுக்கவும், பகிரவும் கற்கவும் உலகமே கூடும் இடமாக இருந்தது பம்பாய்.

எடுத்துக்காட்டாக, அன்று கலா கோதா பகுதியில் உள்ள ஓர் அறையில் முற்போக்குக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சமுதாயத்துக்கு அறிமுகமே ஆகியிராத, படைப்பார்வமிக்க கே.எச். ஆரா, வி.எஸ். கெய்தாண்டே, எஸ்.எச். ராஸô, எப்.என். செüஸô, எம்.எப். ஹுசைன், கே.கே. ஹெப்பார் போன்றவர்கள். இன்று அவர்கள் கலை உலக மகுடத்தில் மாணிக்கங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலா கோதாவோ, இன்று உலகின் சிறந்த கலைநகரங்களுக்கு இணையானது என்று கூறும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.

தற்செயலாக நிகழ்ந்ததோ, என்னவோ; ஆனால், அன்றைய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் காக்க வந்த தேவதைகளைப்போல வந்தனர், ஜே.ஜே. கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் வால்டர் லாங்கமர், விளம்பர உலகின் குருவான ரூடி வான் லேடன், பத்திரிகை ஆசிரியரான சி.ஆர். மண்டி ஆகிய திரிமூர்த்திகள். ஒரு முழுத் தலைமுறையின் அழகியல் உணர்வுகளை, சிந்தனைகளை வடிவமைத்து வளர்த்தெடுத்தனர் அவர்கள்.

ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தியர்களா, வட இந்தியர்களா என்று யாரும் அன்று கேட்கவில்லை. அன்றைய பம்பாயின் சிறப்பு அத்தகையது. “”இந்தியாவின் உயிரோடு கலந்தது; அதன் ஓர் அங்கம்” என்ற, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பர்மா ஷெல் நிறுவன விளம்பர வாசகங்களைப்போல, இந்திய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் அவர்கள்.

அன்று பாரீஸ் நகரிலிருந்து இந்தியா திரும்பிய ராஜா ராவ் அளித்த உத்வேகத்தில், “சேத்தனா’ என்ற பெயரில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதுவும் கலா கோதா பகுதியில்தான் அமைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க ழான் பால் சாத்தரின் சிற்றுண்டிச்சாலையாக இருக்கவில்லை. அங்கு வழக்கமாக வருவோரில் முல்க் ராஜ் ஆனந்தும் ஒருவர்.

அங்கிருந்து சில கட்டடங்கள் தள்ளி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார், நாடக உலகுக்குப் புதிய திசைவழியைக் காட்டிய இப்ராகிம் அல்காஜி. அப்போது அங்கிருந்த ஒரே ஆடம்பர ஹோட்டல் தாஜ் மட்டும்தான். அன்றைய வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அம்பாசடர் ஹோட்டல். ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சி ஓஹோவென்றிருந்தது இந்தியா காபி ஹவுஸ்.

முற்றிலும் மாறுபட்ட நாகரிகத்துக்கு மாறத் தயாராக இருந்தவர்களுக்காகவே திறக்கப்பட்டிருந்தது கொலாபாவில் இருந்த லெப்போல்ட் கஃபே. “”சாந்தாராமை”ப் பற்றி எழுதுவதற்கும். “லெப்போல்டை’ உலகம் முழுவதும் பிரபலமாக்குவதற்கும் கிரகோரி டேவிட் ராபர்ட்ஸýக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும்.

மொரார்ஜி தேசாய் ஆட்சி நடந்துகொண்டிருந்ததும், அவரது மதுவிலக்குக் கொள்கையும் அமலில் இருந்ததும் அந்த பம்பாயில்தான். ஒரு சுவர் அலமாரி முழுவதும் உலகின் மிகச் சிறந்த விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் அணிவகுத்து நின்ற, கரஞ்சியாவின் மெரைன் டிரைவ் இல்லம் இருந்ததும் அதே பம்பாயில்தான்.

உண்மையிலேயே உலகப் பண்பாட்டில் ஊறியவர் கரஞ்சியா. மாமனிதர்களுடன் பழகிய அதே நேரத்தில், சாமானியர்களின்பாலும் அக்கறை கொண்டிருந்தவர் அவர்.

தனது அலுவலக உதவியாளருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமானால், ஆசிரியர் குழுக் கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் கரஞ்சியா. தினமும் காலை 11 மணிக்கு நீர் கொண்டு தரும் கடைநிலை ஊழியருக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் தவறாதவர் அவர்.

பழைய உலகின் மாண்புகளையும் நவீன உலகின் நளினங்களையும் சிறந்த கலாசார விழுமியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியவர் ருஸ்ஸி கரஞ்சியா. அன்றைய சிறப்புமிகு பம்பாயைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் அவர்.

ஆனால் இன்றோ, போயேபோய்விட்டன அந்தப் பழைய பெருமைகளெல்லாம்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in 1947, BJP, Bombay, Culture, Divided, Federal, Freedom, George, Heritage, Independence, Karanjia, Mumbai, Nation, National, North, Russy, Russy Karanjia, Sentimental, Sentiments, Separate, Separatists, Shiv Sena, Shivsena, South, State, Thackeray, Tradition, Unity | Leave a Comment »

Learning Tamil as a Foreign Language – South Travancore Hindu College, Nagercoil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!

அ. அருள்தாசன்

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’  பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.

மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,

  1. கர்நாடகம்,
  2. ஹிமாச்சலப்பிரதேசம்,
  3. மணிப்பூர்,
  4. ஒரிசா,
  5. மேற்கு வங்கம்,
  6. அசாம்,
  7. இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.

நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:

இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.

தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):

“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.

நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):

“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”

லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):

“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.

ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):

“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).

அசோதோஸ் மாலிக் (ஒரிசா):

“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.

தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.

Posted in Bengal, Ceylon, Foreign, HR, Instructors, Integration, Language, Learn, Literature, Manipur, Manipuri, Nagercoil, Orissa, Singala, Sinhala, Sinhalase, Srilanka, Students, Tamil, Teachers, Unity, University, WB, World | Leave a Comment »

Unity in Diversity – Regional affinity vs Naturalized out-of-state Indians

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

இவர்களும் இந்தியர்கள்தான்!

பி. சக்திவேல்

சமீபகாலமாக இந்தியாவில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தாக்கப்படுவதும், அவர்களுடைய உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சம்பவங்களால் “பிராந்திய உணர்வுகள்’ முக்கியத்துவம் அடைந்து “தேசிய உணர்வுகள்’ முக்கியத்துவம் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் சமூகக் கட்டமைப்புக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.

“பிராந்திய உணர்வுகளை’ காட்டிலும் “இந்தியா’ என்ற தேச உணர்வுக்கு முன்னுரிமை அளித்துதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. உதாரணமாக, அரசியலமைப்புச் சட்ட விதி 1-ல் இந்தியா என்பது “”மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஐக்கியம்” என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசு மிகவும் வலிமையானதாகவும் அதிக அதிகாரம் படைத்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அந்நாட்டுக் குடிமக்களுக்கு “இரட்டைக் குடியுரிமை’ வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்தியாவில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், இந்தியா என்கிற உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவும் ஒரே ஒரு குடியுரிமையைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

மேலும் அடிப்படை உரிமைகளில் இந்திய குடிமக்களுக்குச் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதற்கும், ஓர் இடத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிப்பதற்கும், விரும்பிய தொழில் செய்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக, பல மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மற்ற மாநிலத்திலிருந்து வந்தவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகப் பாவித்து நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது. மகாராஷ்டிரத்தில் வசித்து வரும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சார்ந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்; அதேபோல், வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மகாராஷ்டிரத்தில் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும்; இது சிவசேனையின் பிரதான கோஷம். இதை வலியுறுத்தித்தான் சமீபத்தில் நடைபெற்ற மும்பை உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது. “வாக்கு வங்கியை’ கவர்வதற்காக இனிவரும் காலத்தில் இந்தக் கோஷம் மேலும் வலுப்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

சென்ற ஆண்டு ரயில்வே பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதச் சென்ற வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அசாமில் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஹிந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்த அனைவரும் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என “உல்பா’ தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். ஹிந்தி பேசும் மக்கள் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அசாம் மாநில அரசும் மத்திய அரசும் உறுதி அளித்தபோதிலும் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஹிந்தி பேசும் மக்கள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு குடும்பத்தோடு அகதிகளாக வெளியேறும் அவலமும் நீடித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள், குடிமக்கள் அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அசாம் மாநில அரசும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் சரிவர செயல்படாதது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையிலும் தேசிய உணர்வுகள் முக்கியத்துவம் இழந்து பிராந்திய உணர்வுகள் மேலோங்கி விட்டன. இதையடுத்து நாள்தோறும் உருவாகிவரும் சச்சரவுகளும் முரண்பாடுகளும் நமது ஜனநாயகத்திற்கு கேடுகளை விளைவித்து வருகின்றன. இந்நிலை நீடிக்குமானால், மக்கள் படிப்படியாக அரசின் மீது நம்பிக்கை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும்.

குஜராத்தில் நடப்பது வேறுவிதமான நிகழ்வுகள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் “கோத்ரா’ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் எவ்வாறு தங்களை தேசிய நீரோட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்?

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு இனம் மற்றும் மொழி பேசக்கூடிய மக்களைப்பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு நாம் அனைவரும் கவனிக்கப்படக்கூடியதாக அமைந்துள்ளது. அதாவது, மற்ற எல்லா நாட்டினரைக்காட்டிலும் இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களிடம் மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு வேற்றுமைகள் குறைந்து காணப்படுகிறது.

தெளிவாகக் கூற வேண்டுமென்றால், மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் ஒற்றுமையோடு, தங்கள் மொழி மற்றும் கலாசார அடையாளத்தை மறந்து, வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒற்றுமையோடு செயல்படும்போது ஏன் இந்தியாவில் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை. இது கண்டிப்பாக நாம் கவனம் செலுத்தப்பட வேண்டிய கேள்வி.

அடிப்படையில் நம்மிடம் “இந்தியா’ மற்றும் “இந்தியன்’ என்கிற உணர்வு உள்ளது. இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதனால்தான் சுனாமி வந்தபோதும், குஜராத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோதும், வடமாநிலங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோதும் கார்கில் போர் நடைபெற்ற தருணத்திலும் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், நம்மால் முடிந்த உதவிகளை அளித்தோம்.

தங்களுடைய அரசியல் செயல்பாட்டிற்காகவும் மற்றும் லாபத்திற்காகவும் பிராந்தியத்தில் செயல்படும் ஒரு சில அமைப்புகள்தான் இந்த வேற்றுமை விதையை விதைத்துத் தங்களுடைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த அமைப்புகளுக்கு நாம் துணைபோகக் கூடாது. உடனடியாக இத்தகைய அமைப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக்களாகிய நாம் தேசிய உணர்வுகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகே மாநில அல்லது பிராந்திய உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பல்வேறு காரணங்களால் மாநிலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதியைப் பாதித்துவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அன்னிய நேரடி முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றடையக்கூடிய நிலையும் ஏற்பட்டுவிடும்.

எனவே அண்டை மாநிலங்களையும் பிற மாநிலங்களையும் சார்ந்தவர்களை சமமாக நடத்தக்கூடிய மனோபாவத்தையும் பண்பையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களும் இந்தியர்கள்தான்!

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

Posted in Affinity, Citizen, Citizenship, Conflicts, Cooperation, Diversity, Duality, Foreign, Hindi, Identity, Independence, India, Language, Nationalism, Naturalization, Region, Regional, Republic, State, Tamil, Unity, Zone | Leave a Comment »

B Kanagaraj: Border dispute between Karnataka & Maharashtra – Belgaum: Analysis, History, Backgrounder

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

சிக்கலாகும் எல்லைப் பிரச்சினை

பி. கனகராஜ்

கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது.

பெல்காம் மட்டுமல்ல; நமது நாட்டின் பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

வரலாற்றிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டம் தலைநகரான பெங்களூரை விட்டு பெல்காமில் கூட்டப்பட்டது. கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெல்காமை கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தை இங்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குப் போட்டியாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் அமைப்பான “மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இவ்வாறு பெல்காம் எல்லைப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிடையே அரசியல் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.

கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணமாக பெல்காம் மாவட்டம் உள்ளது. “மூங்கில் கிராமம்’ என்ற பொருள்படும் சமஸ்கிருதப் பெயரைப் பெற்றிருக்கும் பெல்காம் 1956ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் அதிகம் வாழ்ந்த பம்பாய் மாநிலத்தில்தான் இருந்தது.

பஸல் அலி கமிஷன் பரிந்துரையால் ஏழாவது அரசியல்சாசன திருத்தச் சட்டம் மொழிவாரி மாநில சீரமைப்பை அமல்படுத்தியதால் பெல்காம் மாவட்டம் அண்டை மாநிலமான மைசூருக்கு வழங்கப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை “மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ பெல்காம் மீட்பு போராட்டத்தை மராட்டியர்களுக்காக நடத்தி வருகிறது. மராட்டியர்களின் “சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற நீண்டகால கனவின் முக்கிய துருவமாக பெல்காம் உள்ளது.

“மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளிலும் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. பெல்காம் மாநகராட்சி மன்றம் சென்ற ஆண்டு மகாராஷ்டிரத்துடன் இணைய தீர்மானம் இயற்றியது. எரிச்சலுற்ற கர்நாடக மாநில அரசு மாநகராட்சி மன்றத்தையே கலைத்து விட்டது.

இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே இப் பிரச்சினை வெடிப்பதற்கு மொழி, பொருளாதார, மற்றும் கலாசார காரணங்கள் உள்ளன. மராட்டியர்கள் தற்போது தங்களது கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவதற்கு கர்நாடக மாநில அரசின் மொழிக் கொள்கை முக்கியக் காரணமாகும்.

கர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியில் கட்டாயமாக பாடம் போதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பெல்காமில் பெரும்பான்மையாக உள்ள மராட்டியர்கள் கன்னட மொழித் திணிப்பை எதிர்க்கின்றனர்.

நமது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்துகிறது. கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிரிவை மீறுவதாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் எதிர்க்கின்றனர். மராட்டிய மொழியைப் பாதுகாக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பொருளாதாரக் காரணமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெல்காம் மாவட்டம் இதமான தட்பவெப்ப நிலையில் அமைந்துள்ளது. விவசாய வளத்தைப் பெற்றுள்ள இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவேதான் விவசாய ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்க மராட்டியர்கள் விரும்புகின்றனர்.

இரண்டு மாநிலங்களும் பெல்காமின் மேல் விருப்பம் காட்டுவதற்கு பெல்காமின் கல்வி வளர்ச்சியும் ராணுவ முக்கியத்துவமும் காரணமாக உள்ளன. பெங்களூருக்கு அடுத்தபடியாக கல்வி வளர்ச்சி பெற்ற நகரம் பெல்காமாகும். மேலும் இந்திய ராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. இதனை “தரைப்படையின் தொட்டில்’ என்றே பலர் வர்ணிக்கின்றனர்.

ஆகவே மகாராஷ்டிரம் இம்மாவட்டத்தைப் பெறுவதற்கு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி வருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டம் அமலானபோது உருவான குழுவின் முன் தனது கோரிக்கையை வைத்தது. மேலும் 1966ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாஜன் தலைமையில் நடுவர் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால் மகாஜன் குழு தனது பரிந்துரையில் பெல்காம் மாவட்டம் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டது.

இம்மாவட்டத்தில் மகாராஷ்டிரம் கோரும் 864 கிராமங்களில் 264 கிராமங்களை அதற்கு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகம் கோரும் 516 கிராமங்களில் 247 கிராமங்களை அதற்கு வழங்கவும் இக்கமிஷன் அறிவுறுத்தியது. இக்கமிஷனின் பரிந்துரைகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டாலும் மகாராஷ்டிரம் நிராகரித்து விட்டது.

இல கார்புசர் என்ற கட்டட வல்லுநரால் நிர்மாணிக்கப்பட்ட, சண்டி என்ற கிராம காவல் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் சண்டீகர் ஒரு நீண்ட கால எல்லைப் பிரச்சினை ஆகும். 1966ம் ஆண்டு முதல் ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே, சண்டீகர் யாருக்குச் சொந்தம் என்பதில் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. சீக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரியபோது சண்டீகர் நகரம் அரசியல் சச்சரவின் மையமாக இருந்தது. தற்போது தீவிரவாதம் தணிந்து போனாலும் பஞ்சாபியர்களின் நீண்ட கால ஏக்கமாகவே உள்ளது சண்டீகர் நகரம்.

கர்நாடகத்தில் உள்ள மங்களூரை கேரளம் கோரி வருகிறது. கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியை கர்நாடகம் கோருகிறது.

அண்மையில்கூட அசாம் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களில் இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தைதான் சரியான வழிமுறைகளாகும். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இப்பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும். விடவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மையுடன் மாநிலங்கள் செயல்படக் கூடாது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

“கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற உயரிய கொள்கையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. தேசிய வலிமைக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் அமைதிக்கும் இக் கொள்கை அவசியமானதாகும்.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசியல் அறிவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோவை).

Posted in Analysis, Backgrounder, Belgaum, Bombay, Border, British, Chandigarh, Civic body, Climate, Commerce, Conflict, Coop, Cooperative, Defense, Dispute, Economy, Education, Facts, Goa, Growth, Haryana, History, India, Industry, Issues, Kannada, Karnataka, Kasargode, Kerala, Khalisthan, Language, Mahajan, maharashtra, Mangalore, Marathi, Military, Mumbai, Municipality, Op-Ed, Province, Punjab, Race, Region, Research, Rural, Society, State, Unity, Village | Leave a Comment »